சென்ற பதிவில் கையேடு அவர்கள் சில விவாதங்களை எழுப்பி இருக்கிறார்.
1. பெண்ணுரிமை பற்றி எவ்வளவு பேசப்பட வேண்டியிருக்கிறதோ அதே அளவிற்கிணையாக பெண், ஆணின் மூலமாக எப்படிப்பட்ட வன்முறையை சமூகத்தின் மீது கட்டவிழ்த்துவிடுபவளாகயிருக்கிறாள் என்பதுவும் பேசப்படவேண்டியதே.
2. சகோதரியாக, தாயாக, மனைவியாக எப்படிப்பட்ட கற்பிதங்கள் அடிப்படையிலான நிர்பந்தங்களையும் மதிப்பீடுகளையும் ஒரு ஆணிற்கு நிர்பந்திக்கிறார்கள் என்பதுவும் பேசப்படவேண்டியதே.
3. கடைசியாக ஒரு கேள்வி. இணையைத் தேர்ந்தெடுக்கும் முழு உரிமையை ஆணுக்கு மட்டும் சுதந்திரமாக வழங்கிவிட்டதா என்ன நமது சமூகம்?
முதலிரண்டு விஷயங்களில் கையேடு அவர்கள் என்ன சொல்ல வருகிறார் என்பதை இன்னும் தெளிவுபடுத்தினால், அவைகுறித்து விரிவாகவே பேசிட முடியும். பேசுவோம்.
மூன்றாவது கேள்விக்கு வருவோம். இணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை ஆணுக்கும் சுதந்திரமாக வழங்கிடவில்லை என்பது உண்மைதான். ஆனால் இங்கு ஆணினால் தன் கருத்துக்களைத் தெரிவிக்க முடியும். ஆணின் குரலை குடும்பமும், சமூகமும் கேட்கும். ஆண் தன் சுதந்திரத்தை எடுத்துக்கொள்ளப் போராடி வெற்றி பெற்றால் அதனை சாகசமாகவும் பேசும். பெண்ணுக்கோ ‘ஓடிப்போனவள்’ என்ற பட்டமே கிடைக்கும். எங்காவது ‘ஒடிப்போனவன்’ என்று சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா. ஆணாதிக்க சமூகத்தின் பிரதிபலிப்புகள் இங்கு நம் புழக்கத்திலிருக்கும் வார்த்தைகளிலேயே பொதிந்திருப்பதைப் பார்க்க முடியும். இங்கு பெண்ணுக்குப் ‘பேச்சும்’ கிடையாது. ‘எதிர்ப்பேச்சும்’ கிடையாது.
சென்ற பதிவின் பின்னூட்டத்தில் கயல் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிற மகுடேஸ்வரனின் கவிதை எவ்வளவு வலி கொண்டதாய் இருக்கிறது. இந்தப் பதிவில் பேசப்போவதும் இவைகள் குறித்துத்தான். குடியாவை உங்களுக்குத் தெரியுமா. பேரா.மாடசாமி இப்போது அவளைப்பற்றித்தான் சொல்ல இருக்கிறார். கவனிப்போம்.
சிறிய முண்டாலி கிராமத்தில் நடந்துள்ள வித்தியாசமான நிகழ்வு இது. ஆரீஃப் இந்திய இராணுவ வீரன். அவன் 15 வயது குடியாவைக் கல்யாணம் செய்துகொண்டது 1999ல். திருமணம் ஆன 17வது நாள் கார்கில் போருக்குப் போனவன் பாகிஸ்தான் பிடிக்கப்பட்டு சிறைக்கைதி ஆகிறான். ஆரீஃபைப் பற்றி நான்கு வருடங்களாக எந்தத் தகவலும் இல்லை. எனவே ஆரீஃப் மரணமடைந்திருக்கக் கூடும் என்று முடிவெடுத்து குடியாவுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்கிறார்கள்.
இரண்டாம் கணவன் பெயர் தௌஃபீக். ஒன்றரை ஆண்டுகள் வாழ்ந்து, குழந்தைப்பேற்றுக்குக் குடியா தயாராக இருக்கும் நிலையில், ஆரிஃப், பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு ஒரு கதாநாயகனாக நாடு திரும்புகிறான்.
குடியாவுக்குத் திருமணம் ஆன செய்தியை ஆரிஃப் அறிகிறான். முதலில் குடியாவை விவாகரத்து செய்ய எண்ணுகிறான். பிறகு எதோ ஆர்வத்தில் குடியாவை சந்திக்கிறான். குடியாவை மீண்டும் தன் மனைவியாக்குவது என்று முடிவெடுக்கிறான்.
ஊர்ப்பஞ்சாயத்து கூடுகிறது. ஆரீஃபுக்கும் குடியாவுக்கும் முறையான விவாகரத்து நடக்கவில்லை என்று காரணம் சொல்லி, ஷரியத் சட்டப்படி இரண்டாம் திருமணத்தைச் செல்லாததாக்கி, குடியாவை மீண்டும் ஆரீஃபுக்குச் சொந்தம் ஆக்குகிறார்கள். குடியாவின் தகப்பனே இந்த முடிவுக்கு ஆதரவாக நிற்கிறார்.
இது ஒரு பரபரப்பான விஷயம் என்பதால் ‘யாருடைய குடியா’ என ஜீ டிவி ஒரு பஞ்சாயத்தை நடத்தி, நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அங்கேயும் ஓரளவுக்கு ஆரீஃபுக்குச் சாதகமான தீர்ப்பு.
இப்போதும் ஆரீஃபும் குடியாவும் சேர்ந்து வாழ்கிறார்கள். குடியாவின் வயிற்றில் இருக்கும் குழந்தையை யார் ஏற்பது? யார் வளர்ப்பது? என்பதெல்லாம் குறித்து திடமான முடிவு எட்டப்படவில்லை.
இரண்டாம் கணவன் தௌஃபீக் கோர்ட்டுக்குச் சென்று குடியாவை மீண்டும் அடையப் போவதாகச் சொல்லி வருகிறான்.
இந்தப் பிரச்சினையில் எழும் கேள்விகளுக்கு அவசரப்பட்டு விடை சொல்ல முடியாது. சொந்த விஷயங்களில் எடுக்கப்படும் முடிவுகளில் மறைக்கப்பட்ட பகுதிகள் எப்போதும் இருக்கின்றன. எல்லாப் பத்திரிகைகளிலும் ஒரு பொதுஜன அபிப்பிராயம் மேலோங்கி இருக்கிறது. குடியாவின் வீட்டுக்கு வெளியே நின்று அவள் யாருடன் வாழவேண்டும் என்று விவாதம் நடத்த நமக்கு உரிமை இருக்கிறதாவெனத் தெரியவில்லை.
ஆனால், இந்தப் பிரச்சினையில் குடியாவின் நிலை என்ன என்பதை அறிய முயற்சிக்கவேயில்லை என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும். ‘குடியா’ என்ற சொல்லுக்குப் பொம்மை என்ற பொருளும் இருப்பதால், அந்த அர்த்தத்துக்கு மிகுந்த அழுத்தம் தந்து பத்திரிகைகள் எல்லாம் குடியாவை ஒரு பொம்மையாகவே உருவகித்துவிட்டன. இந்த அபத்தங்களின் வழி குடியாவின் உள் மன உணர்வுகளையும், மனவோட்டங்களையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. நான்கு ஆண்டுகளாகத் திரும்பாத ஆரீஃபை மறந்து தௌஃபீக்கைத் திருமணம் செய்ய உடன்படும்போதும், ஆரீஃப் திரும்பிவிட்டான் என்ற செய்தி கிடைத்ததும், ‘ஆரீஃப் மீது எனக்குக் காதல் இல்லை. தௌஃபீக்குடன் வாழ்வைத் தொடரவே விரும்புகிறேன்’ என்று குடியா ஒரு பத்திரிகை பேட்டியில் தெரிவித்திருந்ததை யாரும் மதித்ததாகத் தெரியவில்லை.
ஜீ டிவி, ஊர்ப்பஞ்சாயத்து, பத்திரிகைகளில் மற்றவர்களே நிறையப் பேசியிருக்கிறார்கள். அவள் பேச்சு கொஞ்சமே. பேச்சு அதிகாரத்தின் அடையாளம். பேச்சை விட முக்கியமானது ‘எதிர்ப்பேச்சு’. எதிர்ப்பேச்சு என்பது வெறுங்கூச்சல் அல்ல. கூச்சலிட்டுப்பின் சரணடைவதும் அல்ல. தன்முன் ஒழுங்கற்று நிற்கும் பிறர் பேச்சையும், வினையையும் முறையாக எதிர்கொள்வதுதான் எதிர்ப்பேச்சு. முடிவெடுத்தலின் முக்கியப் பேச்சு எதிர்ப்பேச்சு. இந்த எதிர்ப்பேச்சும் குடியாவிடம் நிகழவில்லை.
ஊர்ப் பஞ்சாயத்து, ஜீடிவி ஒளிபரப்பு எல்லாம் ஆண்கள் நிறைந்த சபைகளாக விளங்குகின்றன. முதல் பஞ்சாயத்தில் ஒரு பெண் கூட இல்லை. இரண்டாவது பஞ்சாயத்தில் பெண்கள் மிகச் சொற்பம். இந்த பஞ்சாயத்துக்கள் எப்போதும் விவாத மேடைகளாக இருந்ததில்லை. நிர்ப்பந்தங்களின் பிறப்பிடங்களாகவே உள்ளன.
நிப்பந்தம் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணம் ஆரீஃபுக்கு கிடைத்த ‘ஹீரோ இமேஜ்’. நாட்டுக்காக துன்பம் அனுபவித்த வீரன். அந்தத் தியாகம் குடியாவுக்குச் சுமையாக மாறாமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். ஆரீஃபுக்காக பேசியவர்கள் எல்லாம் அவனது தியாகத்தை முன்வைத்தேப் பேசினார்கள்.
சிறிது காலத்தில் (2006 இறுதியில்) குடியா மரணமடைந்த செய்தி பத்திரிகைகளில் வந்தது. குடியா என்ன நினைத்தாள், என்ன விரும்பினாள் என்பது தெரியாமலே போயிற்று. ஆரீஃபுடன் நிர்ப்பந்தமாக இணைக்கப்படாமல், தௌஃபீக்குடன் தொடர்ந்து வாழ அனுமதிக்கப்பட்டிருந்தால் குடியா இன்றைக்கும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடும்.
காமாட்சி, குயிலி, குடியா எல்லோரின் பிரச்சினைகளும் பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் மேம்போக்காகத் தெரிகிறது. ஆனால் எண்ணற்ற வித்தியாசங்களுடனும், பின்னணிகளுடனும் ஒவ்வொன்றும் மூடிக்கிடக்கின்றன. பார்த்தால் ஒன்று. பகிர்ந்துகொண்டால் அனேகம்.
இவ்வாறு பேரா.மாடசாமி முடிக்கிறார். இதிகாச காலத்திலிருந்து இன்றைய நவீன காலம் தொட்டுப் பேசி, பெண்ணொழுக்கம் குறித்த விதிகளையும், நியதிகளையும் இந்த ஆணாதிக்க சமூகமே உருவாக்கி வைத்திருக்கிறது என்று தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.
ஆண்களாகிய நாம் இது குறித்து பிரக்ஞையில்லாமல், ஆண் என்கிற பெருமிதத்துடனும், கர்வத்துடனும் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். நம்முடைய சொற்களில், செயல்களில் அதனை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறோம்.
சமீபமாக, வலையுலகில் வந்த சில பிரச்சினைகளையொட்டி, ‘ஆணாதிக்கம்’ என்ற சொல்லாடலைக் கிண்டலும், கேலியும் செய்து வார்த்தை வார்த்தைகளாய் கொட்டப்பட்டன. மாறி, மாறி கும்மியடித்து, கொச்சை செய்யப்பட்டது. இங்கு ‘ஆணாதிக்கம்’ குறித்து மேலும் பேசுவதற்கு தயக்கங்களையும், கூச்சத்தையும் கூடவே ஒருவித பயத்தையும் விதைப்பதுதான் அதன் நோக்கம் என்றே புரிய நேரிடுகிறது. காலம்காலமாய் ஆணாதிக்கம் செய்து வருகிற ‘அசிங்கப்படுத்தும் அல்லது களங்கப்படுத்தும்’ காரியமே இது. அநீதி இழைக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு வந்த பெண்கள் உலகத்தின் கதவுகள் சென்ற நூற்றாண்டிலிருந்து உடைபட ஆரம்பித்திருக்கின்றன. அதன் மீது நம் ஆணிகளை அடித்து பூட்டிட முயற்சிக்க வேண்டாம்.
இப்படி எழுதுவதன் மூலம் உடனே ‘இவர்தான் பெண்ணுரிமைக் காவலர்’ என்று கேலியும், கிண்டலும் செய்வதற்கு ஒரு கூட்டம் இருக்கவே செய்யும். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்றுதான். நான் ஒன்றும் பெண்ணுரிமைக் காவலன் இல்லை. ஆணாதிக்கச் சமூகத்தின் அசிங்கத்தையும், அருவருப்பையும், அதிகாரத்தையும் கொஞ்சமேனும் அறிந்த, கொஞ்சமேனும் குற்றவுணர்ச்சி கொண்ட ஒரு ஆண். அவ்வளவே.
ஆரோக்கியமான விவாதங்களைத் தொடர்வோம்.....
லட்சி என்ற பெண்ணுக்கு திருமனமாகிறது.திருமணத்தன்று அவள் கணவன் கிஷன்லால் தூரதேசம் பொக வேண்டியதாகிறதுஅவன் புறப்படுகிறான்.தனியாக பாதையில் செல்லும் அவனை ஒரு பேய் பார்க்கிறது.கிஷன்லால் போன்று உருமாறி லட்சியோடு வாழத்தலைப்ப்டுகிறது.லட்சிக்கு குழந்தை பிறக்கிறது.ஒராண்டு கழித்து கணவன் வ்ருகிறான்.பேய் தான் தான் கிஷான்லால் என்கிறது.கண்வன் தான்தான் என்கிறான்.பஞ்சாயத்து நடக்கிறது.ஆடுமேய்ப்பவன் ஒருவன் தந்திரமாக பேயை அடயாளம் காட்டுகிறான்.கிஷன்லால் மனைவியோடு வாழ்ந்தாலும் லட்சியின் உட்ல் பசியை பேயும் அவ்வப்போது தீர்த்துவைக்கிறது.ரஜஸ்தான் மாநிலத்து கிராமீயக்கதையான இதனை மணி கௌல் என்ற இயக்குனர் "துவிதா" என்ற படமாக 1973ம் ஆண்டு எடுத்தார். இதே கதை 2005ம் ஆன்டு "புதிர்" (பஹேலி) என்று இந்தியில் எடுக்கப்பட்டு சர்வதெச அளவில் பாராட்டப்பட்டது. கிரீஷ் கர்நாடின் 'ஹயவதனா" என்று பல படப்புகள் பெண்களின் (ஆத்ம!)வேதனையை சித்தரிதுள்ளன.இரண்டாம் உலகப்போரின் போது பிரிந்த குழ்ந்தை சகோதரனும் சகோதர்யும் பின்னாளில் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தார்கள்.எனக்குத் தெரிந்து அக்களின் மகனும்,தங்கையின் மகளும் காதலித்து திருமணம் செய்து குழந்தைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அந்தத் தம்பதியரின் பெற்றோர்கள் ஏற்காததால் அமெரிக்காவில் வசிக்கிறார்கள்.
பதிலளிநீக்குமாதவ்ஜி! புராணகாலத்திலிருந்து பெண் இன்று வரை அடக்கப்பட்டவளாகவே இருக்கிறாள்.அவளுடய உடற்கூறின் காரணமாக அவளைப்பயமுறுத்தி பணியச்செய்கிறோம்.ஆணின் திசுக்களிலிருந்து ஆணாதிக்க மனப்பான்மையை எடுக்க என்ன செய்யலாம்? விவாதிப்போம்---கஸ்யபன்.
யாருடன் வாழ்வது என்ற முடிவை குடியா தான் எடுத்திருக்க வேண்டுமே ஒழிய ஜீ டிவியோ மற்றவர்களோ அல்ல.
பதிலளிநீக்குதிருமணத்திற்கு முன்பு தான் பெண்களைக் கேட்பதில்லை. அட் லீஸ்ட் திருமணத்திற்கு பின்பாவது கேட்டிருக்கலாம்.
ஆனால் முதல் கணவன் போரில் இறந்துவிட்டான் என்று நினைத்து அவளுக்கு மறுமணம் செய்து வைக்க முன் வந்தவர்களையும் இங்கு பாராட்டியே ஆக வேண்டும்.
நீண்ட பின்னூட்டம் ஒன்றை இட்டேன், ப்ளாக்கர் சொதப்பிவிட்டது என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஎன்னுடைய முதல் கேள்வி பெண் தனித்திருப்பதை ஏன் மறுக்கிறீர்கள் என்பது?
மற்றபடி எனது கருத்தை சுருக்கமாக சொல்லிவிடுகிறேன்.
சில பெண்ணியவாதிகள் தன்னை ஒரு பெண் என்று அடையாளப்படுத்துவதையே மறுத்திருக்கிறார்கள்.
என்னுடைய தனிப்பட்ட கருத்தும் அதுதான், உயிரியல் சார்ந்த வேறுபாடு தவிர்த்து பெண் என்ற தனித்த அடையாளம் தேவையற்றது. அல்லது அதைநோக்கி மனதளவில் நாம் பயணப்படவேண்டும்.
பெண்களைப் பொருத்த வரை முடிவெடுக்கும் அதிகாரம் பெரும்பாலும் பிறர் கையில்தான் இருக்கிறது. பிறர் என்பது ஆண்களை மட்டுமே குறிக்கும் என்பது இல்லை. திருமணத்தைப் பொருத்த வரை படித்த பெண்களுக்கு ஓரளவு சுதந்திரம் உள்ளது என்றாலும் ஒரு விஷயத்தை நாம் யோசிக்க வேண்டும். பெண்களுக்கான கட்டுப்பாடு என்பது அவளைச் சுற்றி உள்ள ஒரு சிலரால் மட்டும் ஏற்படுவது அன்று. சமூகமே அவளுக்கான நிர்ணயிக்கும் காரணியாக எல்லா விதங்களிலும் உள்ளது. உணவு, உடை, நண்பர்கள், பேசுவதற்கான விஷயம் என எல்லாமே சமூகத்திற்கு பயந்தே பெண் தீர்மானிக்க வேண்டி உள்ளது. சத்தமாக சிரித்தால் கூட 'எப்பிடி வளர்த்து இருக்காங்க பாரு?' என்று பெற்றோர் வரை பேசப்பட்டு விடுமோ என்றவரை யோசிக்க வேண்டி உள்ளது.
பதிலளிநீக்கு'அப்படி எல்லாம் இல்லை...பெண்கள் சுதந்திரம் நன்றாகத்தான் உள்ளது...' என வருபவர்கள் கவனிக்க வேண்டும். திருமணத்திற்கு முன் இந்த சமூகம் பற்றிக் கவலைப்படாமல் வாழ்பவர்கள் கூட திருமணத்திற்குப் பின் சர்வ நிச்சயம் பயந்துதான் வாழ்கின்றனர். பொதுவெளிக்கு வரும் பெண்களை மட்டும் வைத்து நாம் எதையும் மதிப்பிட முடியாது. அவர்கள் வெறும் 2% தான். எப்படி இருந்தாலும், கருத்திலோ, செயல்களிலோ சற்றே தன்னிச்சையாக முடிவெடுக்கும் பெண்கள் முன் வைக்கப் படும் ஒரே பெரிய ஆயுதம் 'ஒழுக்கத்தை சந்தேகித்தல்' தான்.
மொத்தத்தில் பெண்களுக்கு இந்த இரண்டில் ஒன்றுதான் தேர்ந்து எடுக்க முன் வைக்கப் படுகிறது. சுதந்திரம் அல்லது நிம்மதியான(அடங்கிப்போகும்) வாழ்க்கை.
யாருடன் வாழ வேண்டும் என்பது குடியாவின் முடிவாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர மீடியாக்களும் பக்கத்து வீட்டு ஆட்களும் அல்ல...
பதிலளிநீக்குஇன்றைய கால கட்டத்தில் எல்லா விசயங்களிலும் பெண்கள் தனித்து முடிவெடுக்கும் நிலையில்தான் இருக்கிறார்கள். குடியா போன்ற படிப்பறிவில்லாத பெண்கள் வேண்டுமானால் இன்னும் பேசா மடந்தையாக இருக்கலாம். அதற்காக ஆணாதிக்கம் இல்லையென்று சொல்லவில்லை. நமது பாட்டன் காலத்தில் இருந்த பெண்ணடிமைத் தனங்கள் எல்லாம் குறைந்து விட்டன என்பதே நிதர்சனம்.
பகுதிகளாக வெளியிட்டுப் பார்க்கிறேன்.
பதிலளிநீக்குI.
எனது முதல் கேள்வி பெண் தனித்திருக்கும் உரிமையை ஏன் மறுக்கிறீர்கள் என்பது?
அதைப்பற்றி விரிவாகப் பின்னர் பேசுவீர்கள் என்று நம்புகிறேன்.
//இணையைத் தேர்ந்தெடுக்கும் முழு உரிமையை ஆணுக்கு மட்டும் சுதந்திரமாக வழங்கிவிட்டதா என்ன நமது சமூகம்?//
எனது நான்காவது கேள்வி பெண்ணுக்கான அந்த உரிமையை மறுத்தோ அல்லது அதற்கு எதிராகவோ எழுப்பப்பட்டது அல்ல. ஒரு பொதுவான சமூக நோக்கிலேயே
எழுப்பப்பட்டது. ஆணுக்கும்தான் இல்லை பெண்ணுக்கு தேவையில்லை என்கிற ரீதியில் எழுப்பப்பட்ட கேள்வியல்ல.
பெண்ணுக்கு அந்த உரிமை வழங்கப்படுவதில்லை என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது.
II -
பதிலளிநீக்கு// கையேடு அவர்கள் என்ன சொல்ல வருகிறார் என்பதை இன்னும் தெளிவுபடுத்தினால்//
தெளிவாக எழுத்தில் கொண்டு வந்துவிடமுடியுமான்னு தெரியலை. இருந்தாலும் முயற்சிக்கிறேன்.
" final solutions" ஆவணப்படம்குறித்து உங்களது படைப்பு ஒன்றில் வாகன ஓட்டியுடன் பேசும் ஒரு ஹிந்துத்வா பெண்ணைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். அதே பெண்ணை இப்போது நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
நம்பிக்கைகள், மற்றும் கற்பிதங்கள் அடிப்படையில் குரூரத்தையும் வன்மத்தையும், மனதில் புதைத்துக்கொள்வதிலும், அதை சக மனிதர்களிடத்தில் வெளிப்படுத்துவதிலும் ஆணுக்கு நிகராக செயல்படுகிறவர்கள்தான் பெண்கள். அதை சகப் பெண்களிடத்திலேயே காட்டுவதிலும் வல்லவர்களாகவே இருக்கிறார்கள்.
இந்த இடத்தில் சாதியம் பெண்களுடைய தளத்தில் எப்படி இயங்குகிறது என்பதும் நுட்பமாக அறிந்துணரவேண்டியதாக இருக்கிறது. அலுவலகம், நட்புக்குழு, கல்லூரி, ஆசிரியர்கள் இவர்களிடம் சுயசாதி அபிமானமுள்ள பெண்கள் எப்படி நுட்பமானதொரு வன்முறையை நிகழ்த்துகிறார்கள் என்பது பெரிதளவில் பேசப்படவில்லை என்று கருதுகிறேன்.
இப்படியான உதாரணங்களை சொல்வது களையப்படவேண்டியவையும் பேசப்படவேண்டியவையும் பெண்களிடமும் அதிகம் உள்ளன என்பதைக் குறிப்பிடவேயன்றி அவர்களுக்கு சமூக அமைப்பில் உரிமையளிக்கக் கூடாது என்ற பொருளில் அல்ல.
மேலே சொன்னவை சமூகத்தின் பெரும்பான்மை சார்ந்த அல்லது புறவயமான உதாரணமாக இருக்கலாம். மேலும் இங்கே பேசப்படும், பெண்ணுரிமையோடு நேரடித்தொடர்பில்லாமல் இருபாலருக்குமான பொதுத்தன்மையோடு இருக்கும்.
இதனால்தான் சென்ற இடுகையின் பின்னூட்டத்தில் அது ஒரு கலவையான பின்னூட்டம் என்று குறிப்பிட்டேன்.
III -
பதிலளிநீக்குமேலே சொன்னவை சமூகத்தின் பெரும்பான்மை சார்ந்த அல்லது புறவயமான உதாரணமாக இருக்கலாம். மேலும் இங்கே பேசப்படும், பெண்ணுரிமையோடு நேரடித்தொடர்பில்லாமல் இருபாலருக்குமான பொதுத்தன்மையோடு இருக்கும்.
இதனால்தான் சென்ற இடுகையின் பின்னூட்டத்தில் அது ஒரு கலவையான பின்னூட்டம் என்று குறிப்பிட்டேன்.
ஆனால், புறவயமான சமூகக் காரணிகளைத் தவிர்த்து அகவயமான காரணங்களை சமூகத்திலிருந்து குறுக்கினால், குடும்பம் எனும் அடிப்படைக்குள் இட்டுச் செல்லும்.
குடும்பம் எனும் அமைப்பினுள் பெண்ணைச் சுற்றியிருக்கும் கற்பிதங்களும் பெண்ணை சுற்றிப் புணையப்பட்டவையும் களையப்படவேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கும் அதே வேளையில், மற்ற ஆண்/பெண் உறுப்பினர்களுக்கு அவ்வமைப்பு முன்வைத்திருக்கும் கற்பிதங்களை ஒரு பெண் துறந்திருக்கிறாரா என்கிற கேள்வியையும் இணைத்து எழுப்ப வேண்டும்? அல்லது அதற்கான தேவையிருக்கிறது. இந்தக் கேள்வியும் குடும்பத்தினுள் பெண்ணின் உரிமைக்கான எதிர்கேள்வி கிடையாது.
அதே குடும்ப அமைப்பினுள் பெண் எப்படி சமூகக் கற்பிதங்கள் மூலம் தனது சிந்தனைகளை எதிர்காலச் சந்ததியினருக்கு கடத்துகிறாள் என்பதும் அலசப்படவேண்டியதே.
இதையெல்லாம் ஆண்கள் செய்வதே கிடையாதா என்றால், நிச்சயம் செய்கிறார்கள், ஆனால் அவை இயங்கும் விதம் வேறாக இருக்கிறது. பெண் அகவயமான ஒரு சூழலுக்குள் இருந்து புறவயமான சூழலுக்குள் அதனைப் பாய்ச்சும் தன்மையும் வல்லமையும் கொண்டவளாக இருக்கிறாள். இதனாலேயே அது விரிவாகப் பேசப்படவேண்டும் என்று குறிப்பிடுகிறேன்.
அதே சமயம் சமூகக் கற்பிதங்களைத்துறக்கும் ஒரு பெண்ணினை இவ்வமைப்பு எப்படி எதிர்கொள்கிறது என்கிற காரணிகளை ஆராயமுற்பட்டால் அதற்கான விடையை உங்களது இந்த இடுகையிலேயே சொல்லிவிட்டீர்கள். இச்சமூகம் ஆண்மையச்சிந்தனை கொண்டது. பெண் இச்சமூகத்தின் சிந்தனை ஓட்டத்தை தலைமுறை தலைமுறையாகக் கடத்தும் ஒரு கருவியாகப் பயன்பட்டிருக்கிறாள் என்பது புரியவரும். இதனாலேயே, எனது முதல் கேள்வியான குடும்பத்தைப் புறக்கணித்தல் எனும் உரிமைபற்றி குறிப்பிட்டேன். அது ஒட்டுமொத்தமாக அமைப்பின் ஆணிவேரை அசைக்கும் தன்மைகொண்டது. அதன்பின் இந்த அமைப்பு பெண்ணின் பின்னால் ஓட வேண்டியிருக்கும் தனக்கான உயிர்பிச்சை வேண்டி.
ப்ளாகர் சொதப்புகிறது.. பிற பகுதிகளை வெளியிட முடியவில்லை.
பதிலளிநீக்குமன்னிக்கனும்.
விவாதங்கள் அருமை. கையேடு மிகச் கடினமாக கேள்விகளோடு களத்திலிருக்கிறார் எனத்தெரிகிறது. வளரட்டும் ஆரோக்கியமான சமூக பார்வை.
பதிலளிநீக்கு