ஆணாதிக்கம், பெண்ணொழுக்கம் மற்றும் விவாதங்கள் - 2

 women2 இப்பதிவின் முதல் பகுதியை இந்த நிமிடம் வரை 738 பேர் வாசித்திருப்பதாகச் சொல்கிறது கூகிள் புள்ளி விபரம். ஆனால் பெரிதாய் விவாதங்கள் இல்லாமல் மௌனம் நிலவுகிறது. எதிர்பார்த்ததுதான். ஒரு பெண், கணவன் அல்லாத உறவில் குழந்தை பெற்றுக்கொண்டு கணவனோடு சேர்ந்து வாழ்வதையும், உண்மையை மறைப்பதையும் நியாயப்படுத்துகிற கதையாக காமாட்சியின் கதை முன்வைக்கப்பட்டு இருந்தது. உள்ளுக்குள் நியாயங்கள் புரிந்தாலும் பொதுவெளியில் பகிரங்கமாக சரியென்பதா என்கிற தயக்கங்கள் வந்திருக்கக் கூடும். அதையும் மீறி, உரையாடியிருக்கிற தியாவின் பேனா, பீர், தர்ஷன், நிக்கிஜான், சிங்கம், கயல் ஆகியோருக்கு நன்றி. பீர் அவர்களும், கயல் அவர்களும் இது சரியே என சொல்லியிருப்பது நம்பிக்கையளிக்கிறது.

காமாட்சியின் கதையில் அவளது கணவன் இன்னொருத்தியோடு உறவு வைத்திருக்கும்போது மௌனமாயிருக்கிற ஊர், காமாட்சியின் ஒழுக்கம் குறித்து சந்தேகம் எழுந்தவுடன், உடனடியாக கூடி விசாரிக்க ஆரம்பிக்கிறது. இதுதான் ஆணாதிக்க சமூகத்தின் அடையாளங்களும், லட்சணங்களும். பெண்ணொழுக்கத்தின் மீது கெட்டிப்படுத்தி வைத்திருக்கிற இறுக்கங்களும். அதனை உடைத்து உண்மையைக் காட்டும்போது சமூகம் தாங்கிக்கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் மறுத்து முகம் திருப்புகிறது. இவைகள் தீர்வுகள் என்பதைக் காட்டிலும், எழுகின்ற கேள்விகளாக பார்ப்பது அவசியமாகிறது. பதில்களை ஆராயவேண்டியதும் பொறுப்பாகிறது.

அடுத்த ஒரு கேள்வியோடு வருகிறார் பேரா.மாடசாமி. “பாரதியின் குயில்பாட்டின் உள் உலகம் பலரும் அறியாதது. வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்கலாம் என பாரதி சொன்னதைத் தமிழறிஞர்கள் சிரம் மேல் ஏற்று அநியாயத்துக்கு விரித்து ஒளி மங்கிய புதிர் உலகத்துக்கு இட்டுச் சென்றனர்” எனச்சொல்லும் பேரா.மாடசாமி குயில்பாட்டிற்குள் இருக்கும் பெண் மனதை இப்போது சொல்லத் தொடங்குகிறார்.

முற்பிறப்பில் வீரமுருகன் என்னும் வேடன் மகனாகக் குயில் பிறந்து வளர்ந்தது. ‘சின்னக் குயிலி’ என்பது அதன் பேர். குயிலிக்கு மாமன் மகன் ஒருவன் இருந்தான். அவன் பேர் மாடன். தினசரி பூவும், தேனும் கொண்டு வந்து அவன் குயிலிக்குத் தருவான். தன்னை மணந்து கொள்ளச் சொல்லிக் கெஞ்சுவான். குயிலியும் அவனுக்கு மாலையிட வாக்களித்தாள். காதல் கொண்டு வாக்களிக்கவில்லை. தினசரி தன் பொருட்டு அவன் வருத்தப்படுவதைக் காண சகிக்காமல் வாக்களித்ததாய் பாரதி கூறுகிறார்.

இந்த நேரத்தில் வசதி படைத்த மொட்டைப் புலியன் தன் மகன் நெட்டைக் குரங்கனுக்குக் குயிலியைப் பெண்கேட்டு வந்தான். குயிலியின் தந்தையும் உடன்பட்டான். நிச்சயதார்த்தம் முடிந்தது. இன்னும் 12 நாட்களில் திருமணம்.

மாடன் மனம் புகைந்து குயிலியிடம் நியாயம் கேட்டான். அதற்கு, “தந்தையின் ஏற்பாட்டின்படி நெட்டைக் குரங்கனுக்கு மனைவியாகப் போனாலும் மூன்று மாதத்திற்குள் ஏதாவது சூழ்ச்சி செய்து, சண்டை போட்டு, தாலியை அவர்களிடமே கழற்றிக் கொடுத்துவிட்டு இங்கே வந்துவிடுவேன்” என குயிலி மாடனுக்கு மறுபடி ஒரு வாக்களித்தாள்.

இந்த நிலையில் காட்டில் விளையாடிக்கொண்டு இருக்கும்போது வேட்டைக்கு வந்த சேரமைந்தனைக் கண்டாள். கண்டதும் மாடனையும், குரங்கனையும் மறந்தாள். மன்னவன் மீது ‘மாமோகம்’ கொண்டு விட்டாள். ‘மன்னவன்தன் திண்தோளை’ச் சேர்ந்து விட்டாள். விடுவார்களா மாடனும், குரங்கனும்.

வெறிகொண்ட குரங்கனும் மாடனும் குயிலியின் மனங்கவர்ந்த வேந்தனைக் கொல்ல, வேந்தன் குரங்கனையும் மாடனையும் கொன்று விடுகிறான். பிறவிகள் தொடர்கின்றன. குயிலி குயில் ஆகிறாள். மன்னவனைக் கவிஞனாகச் சந்திக்கிறாள். காதல் தொடர்கிறது. மாடனும் குரங்கும் பேய்களாகி விடாது துரத்துகிறார்கள் குயிலி கொடுத்த வாக்குறுதியையும், நடந்து முடிந்த நிச்சய தாம்பூலத்தையும் தூக்கிச் சுமந்து கொண்டு.

குயில்பாட்டில் பாரதி உண்டாக்கிய கலாச்சார அதிர்வு இது. பெண்ணுக்குத் திருமணம் பூதாகரமாக்கப்பட்ட விஷயம். மனதுக்குப் பிடித்த துணையும் அபூர்வமான வாய்ப்புதான். இச்சூழலில் மனதுக்குப் பிடித்த துணை வாய்க்கும்போது, முன்னர் கொடுத்த வார்த்தை தவறுவதும், முன்னர் செய்த ஒப்பந்தத்தை மீறுவதும்தான் சரியான நியாயங்கள். கொடுத்த வாக்குக்காக மாடனுக்கு மாலையிடுவதோ, மண ஒப்பந்தத்தை மதிப்பதற்காக குரங்கனுக்குப் பெண்டாட்டி ஆவதோ ஒரு விதத்தில் வாழ்க்கையை இழப்பதுதான். இழப்பு தீர்வு அல்ல. இறுக்கமும் தீர்வல்ல. நெகிழ்வுதான் தீர்வு.

இப்படித்தான் குயில்பாட்டை பேரா.மாடசாமி அவர்கள் பார்க்கிறார். நிறைய தமிழ்ச்சினிமாக்கள் இந்த நேரத்தில் ஞாபகம் வந்தாலும், கே.பாக்கியராஜ் அவர்களின் ‘அந்த 7 நாட்கள்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. ‘தாலியை அறுத்து எறி’ என்று சொன்னவுடன், கடல் அலைகள் மோதுவதும், காற்று நிற்பதும், உலகமே தலைகீழாய் சுற்றுவதுமான அபத்தங்களின் நடுவே பாரதி எப்பேர்ப்பட்ட சுடராக காட்சியளிக்கிறார். காதல் மற்றும் திருமணங்களில் பெண்களின் சம்மதம், பெண்களின் விருப்பம் குறித்து கவலைப்படாத சமூகத்தில் பாரதி சொல்வது அருவருப்பானதாய்க் கூடத் தோன்றலாம். அது ஆணாதிக்க சமூகத்தின் வெளிப்பாடாகவும், இயல்பாகவும் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. 

இன்னும் இருக்கிறது. பேரா.மாடசாமி அடுத்து ஒரு உண்மைச் சம்பவத்தோடு தொடர்கிறார்.

(இறுதிப் பகுதி நாளை)

கருத்துகள்

16 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. //காதல் மற்றும் திருமணங்களில் பெண்களின் சம்மதம், பெண்களின் விருப்பம் குறித்து கவலைப்படாத சமூகத்தில் பாரதி சொல்வது அருவருப்பானதாய்க் கூடத் தோன்றலாம். அது ஆணாதிக்க சமூகத்தின் வெளிப்பாடாகவும், இயல்பாகவும் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.//

    Yes... ithuthan unmaiyum kooda anna...
    nalla pakirvu.

    பதிலளிநீக்கு
  2. தொடர்ந்து உரையாடுதல் என்பது சாத்தியமில்லாமல் இருக்கிறது அதனால், கலவையான பின்னூட்டத்தை இவ்விடுகையிலேயே இட்டுவிடுகிறேன்.

    பெண்ணுக்குத் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பற்றி உங்களது கருத்தைப் புரிந்து கொள்ளமுடிகிறது.

    ஆனால், பெண் தனித்திருத்தல் என்பதுவும் அவர்களது உரிமைதானே அதனை ஏன் உங்களது முந்தைய இடுகையில் மறுத்தீர்கள் என்பது புரியாமல் இருக்கிறது. உங்களுக்க்கு தெரியாததில்லை அமைப்பை புறக்கணிப்பதும் போராட்ட வகைகளுள் ஒன்றுதானே?


    பெண்ணுரிமை பற்றி எவ்வளவு பேசப்பட வேண்டியிருக்கிறதோ அதே அளவிற்கிணையாக பெண், ஆணின் மூலமாக எப்படிப்பட்ட வன்முறையை சமூகத்தின் மீது கட்டவிழ்த்துவிடுபவளாகயிருக்கிறாள் என்பதுவும் பேசப்படவேண்டியதே.

    சகோதரியாக, தாயாக, மனைவியாக எப்படிப்பட்ட கற்பிதங்கள் அடிப்படையிலான நிர்பந்தங்களையும் மதிப்பீடுகளையும் ஒரு ஆணிற்கு நிர்பந்திக்கிறார்கள் என்பதுவும் பேசப்படவேண்டியதே.

    கடைசியாக ஒரு கேள்வி இணையைத் தேர்ந்தெடுக்கும் முழு உரிமையை ஆணுக்கு மட்டும் சுதந்திரமாக வழங்கிவிட்டதா என்ன நமது சமூகம்?

    ஏற்கனவே சொன்னதுபோல இது கலவையான பின்னூட்டம், உங்களது குறிப்பிட்ட இந்த இடுகையின் மையப்பொருளோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு.

    பதிலளிநீக்கு
  3. வினோத்!

    தங்கள் பின்னூட்டத்தை வெளியிடவில்லை. மன்னியுங்கள்.

    இந்த விவாதத்தை, தனிப்பட்ட நபர்களுக்குள்/விஷயங்களுக்குள் பொருத்தி, அதன் எல்லைகளைக் குறுக்கிட வேண்டாமே.

    பெயர்களைக் குறிப்பிடாமல், பொதுமைப்படுத்தி எழுதிட வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. //அதே அளவிற்கிணையாக பெண், ஆணின் மூலமாக எப்படிப்பட்ட வன்முறையை சமூகத்தின் மீது கட்டவிழ்த்துவிடுபவளாகயிருக்கிறாள் என்பதுவும் பேசப்படவேண்டியதே.//

    //
    கடைசியாக ஒரு கேள்வி இணையைத் தேர்ந்தெடுக்கும் முழு உரிமையை ஆணுக்கு மட்டும் சுதந்திரமாக வழங்கிவிட்டதா என்ன நமது சமூகம்?//

    பெண்ணை அடிமைப்படுத்துவது எங்கு தனது ஆன்மாவை வைத்துக் கொண்டுள்ளது?

    குடும்பம், கற்பு, குழந்தை வளர்ப்பு, சாதி, தனிச் சொத்து இதில்தான் பெண் மீதான ஆதிக்கம் ஊற்றெடுத்து பெருகிறது.

    ஆணுக்கு மறுக்கப்படும் சுதந்திரம் என்றும், பெண் கட்டவிழ்த்து விடும் வன்முறை என்றும் கையேடு குறிப்பிடுபவையெல்லாம் மேற்குறிப்பிட்ட ஆணாதிக்க அடிப்படைகளை பாதுகாக்கவே ஆகும். இந்த அடிப்படைகளுக்கு ஆபத்தில்லையென்பதால்தான் பத்து பெண்டுகளை ஆளும் உரிமையும், தேர்ந்தெடுக்கும் உரிமையும், வெட்கமின்றி பெண் உடல் குறித்த வக்கிரங்களையும் ஆணால் எழுதும் உரிமையும் உள்ளது.

    பதிலளிநீக்கு
  5. சொல்ல மறந்துட்டன் பதிவும் சூப்பர்

    பதிலளிநீக்கு
  6. //ஆணுக்கு மறுக்கப்படும் சுதந்திரம் என்றும், பெண் கட்டவிழ்த்து விடும் வன்முறை என்றும் கையேடு குறிப்பிடுபவையெல்லாம் மேற்குறிப்பிட்ட ஆணாதிக்க அடிப்படைகளை பாதுகாக்கவே ஆகும்//

    இல்லங்க வினோத் நீங்க பின்னூட்டத்தை சரியாப் புரிஞ்சிகலை.

    பதிலளிநீக்கு
  7. காதல் மற்றும் திருமணங்களில் பெண்களின் சம்மதம், பெண்களின் விருப்பம் குறித்து கவலைப்படாத சமூகத்தில் பாரதி சொல்வது அருவருப்பானதாய்க் கூடத் தோன்றலாம்.

    -------------
    நிஜம்தானே?.


    இங்கே சில நிஜத்தை பாருங்கள்..

    http://punnagaithesam.blogspot.com/2010/09/blog-post_28.html

    பதிலளிநீக்கு
  8. அண்ணா! இந்தப் பதிவிற்கு நீங்கள் போட்டிருக்கும் பெண்ணின் படம் என்னென்னவோ சொல்கிறது.இதை வைத்து ஒரு பதிவே போடலாம்.அவசியமான பகிர்வு....அற்புதமான படம்...

    பதிலளிநீக்கு
  9. பாரதி எத்தனை சீர்திருத்தவாதி அன்றைய காலகட்டத்தில் இது போலும் நாயகியை சித்தரித்திருக்கிறான் எனும் போது மகாகவி இன்னும் உயர்கிறார் எனக்குள்.
    கட்டாயப்ப்டுத்தியோ,ஆதிக்கப்படுத்தியோ ஒரு மனதை வெல்லவே முடியாது.காதல் தானாய் கனிவதே சுவை.இது பொது நியதி ஆணோ பெண்ணோ விதிவிலக்கல்ல. ஆயினும் இந்த குயில்பாட்டில் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தை மீறல் என்பது சமூகத்தில் ஒரு ஆணுக்கு இருக்கும் சுதந்திரம் ஒரு பெண்ணுக்கு இல்லை என்பதே வருத்தமான விசயம். ஒரு பெண்ணால் தான் வருத்தப்பட்டதாவும் வாழ்விழந்ததாகவும் கதறும் ஆண்கள் ஆயிரம் உண்டு.பிரச்சனையை தைரியமாக வெளிக்கொணரும் பெண்களின் சதவீதம் எத்தனை?அப்படியே சொன்னாலும் அவளின் நடத்தை குறித்து கல்லெறியாதோர் எத்தனை பேர்? பதில் கவலைக்குரியது.மனைவியை உதறி விட்டு பிற மகளீரோடு ஒரு ஆண் வாழ்வதும்,அது அந்த அந்நிய பெண்ணின் சம்மத்தோடும் சமூக அங்கீகாரத்துடனும் மிகச்சாதாரணமாக நடக்கும் எண்ணற்ற நடப்புகள் நானறிவேன். சமூகத்தை ஆழப் பார்க்கும் அனுபவம் கிடைக்கப் பெற்ற நடுத்தர வர்க்கத்தினள் என்கிற வகையில் இது போன்ற கணவன் வாய்க்கப்பெற்ற எல்லாப் பெண்ணும் ஏதோவொரு அழுத்ததுடன் தான் வாழ்கிறாள்.சமூகம் இவளை மட்டும் எப்படி சீதையாகவே இருக்கவேண்டுமெனப் பணிக்கிறது? எங்கோ எப்போதோ ஒரு சில புதுமைகள் நிகழ்வதுண்டு. மணமாவதற்கு முன் வீரவசனம் பேசும் எத்தனையோ புரட்சிப் பெண்கள் காலப்போக்கில் காணாமல் போன கதைகள் இங்குண்டு ‘அந்த 7 நாட்கள்’ கதாநாயகி போல.நண்பர் ஒருவரால் சமீபத்தில் பகிரப்பட்ட மகுடேசுவரனின் கவிதை இது.

    என்னெய அடீங்கொ
    கொல்லுங்கொ
    காவலுக்கு ஆள் போடுங்கொ
    நீங்கொ பாத்து வெச்சிருக்கிறெ
    மாப்புள்ளைக்கெ என்னெக் கட்டி வெய்யுங்கொ
    கட்டிக்கெறென்
    அவனுக்கு புள்ளெ பெத்துத் தரச்சொல்லுங்கொ
    பெத்துக்கெறென்
    ஆனா
    என்னிக்காவது ஒரு நா
    எங்கெய்யாவது ஒரு வாட்டி
    அவரு வந்து ‘வா போயர்லாம்’னு
    கூப்புட்டுப்போட்டார்னு வெய்ங்கொ
    என்றெ அப்பன் மேல சத்தியமாச் சொல்றென்
    போட்டெதும் போட்டபெடி கெடக்கெ
    அப்பிடியெ அவருகூடப்போயிர்ருவென்....
    ஆமா....

    படித்து முடிக்கையில் அவள் மனம் விருப்பியபடி வாழ விடுங்களேன் பாவம் என்கிற கதறல் எல்லோருக்குள்ளும் எழும்.அவளுக்கு வேறொருவனுடன் திருமணமானபின் கவிதையில் சொன்னது சாத்தியமா?
    இதுவும் தாங்களின் விவாத பார்வைக்கு.கைமை தவம் புரியும் ஏராளமான சகோதரிகள் இங்குண்டு. அவர்களை கேளுங்கள் எத்தனை வக்கிரங்களை தினமும் கடக்கிறார்கள் என்று. இருக்கும் சாத்தியங்களில் எதை தேர்வது எனக் குழம்பும் பெண்களை விட, விவாதம் ஒரு துணையின் அவசியம் வேண்டும் பெண்ணின் மீதான அத்துமீறல் என்கிற போக்கில் இருந்தால் நலம் என்பது என் தாழ்மையான கருத்து.பெண்களுக்கு ஆதரவான எழுத்துரீதியான சட்டங்கள் நடைமுறையில் கடைபிடிக்கும் போது வரும் சிக்கல்கள் குறித்தும் விவாதம் நிகழ்ந்தால் இன்னும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  10. //

    இப்படித்தான் குயில்பாட்டை பேரா.மாடசாமி அவர்கள் பார்க்கிறார். நிறைய தமிழ்ச்சினிமாக்கள் இந்த நேரத்தில் ஞாபகம் வந்தாலும், கே.பாக்கியராஜ் அவர்களின் ‘அந்த 7 நாட்கள்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. ‘தாலியை அறுத்து எறி’ என்று சொன்னவுடன், கடல் அலைகள் மோதுவதும், காற்று நிற்பதும், உலகமே தலைகீழாய் சுற்றுவதுமான அபத்தங்களின் நடுவே பாரதி எப்பேர்ப்பட்ட சுடராக காட்சியளிக்கிறார்.
    //

    அது மிக மிக அபத்தமான க்ளைமாக்ஸ். சந்தேகமே இல்லை.

    ஆனால், அது மிக அபத்தமாக இருப்பதாலயே, எதிர்பாராத விளைவை உண்டாக்கியிருக்கிறது. அதாவது, அப்படி செய்வது எத்தனை அபத்தம் என்று.

    பதிலளிநீக்கு
  11. மற்றபடி, நான் குயில் பாட்டு படித்ததில்லை. ஆனால், "மனைவியின் காதல்" என்ற தலைப்பில் ஒரு கதை எழுதியிருக்கிறேன். விளம்பரம் என்று நீங்கள் நினைக்க கூடும் என்பதால், நீங்கள் கேட்டால் சுட்டி தருகிறேன். நேரமிருந்தால் படித்து பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  12. பதிவின் கிளைமாக்ஸ் பகுதியைஆவலோடு எதிர் பார்க்கிறோம்

    பதிலளிநீக்கு
  13. அந்த ஏழுநாட்கள் படத்தின் கிளைமக்ஸை, பாலச்சந்தர், பாரதிராஜா இருவரிடமும் விவாதித்த பின்னரே எடுத்தாராம் பாக்யராஜ். அந்த காலக் கட்டத்தில் தாலியை கழுட்டுவது போல் முடிவு இருந்தால் ஏற்றூ கொள்ளமாட்டார்கள். ஆனால் இப்போது மிக ஈஸியாக அதை செய்து விடுகிறார்கள். (உ.ம்) காதல் படம்.
    காமாட்சியின் கதை, அவள் தெரியாமல் தவறு செய்கிறாள்,அகலிகை போன்று.
    ஆண் தவறு செய்தால் சம்பவம், பெண்ணென்றால் அது சரித்திரம் என்றுதானே பொது புத்தியில் புகட்டப் பட்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  14. \\கயல் said...
    என்னிக்காவது ஒரு நா
    எங்கெய்யாவது ஒரு வாட்டி
    அவரு வந்து ‘வா போயர்லாம்’னு
    கூப்புட்டுப்போட்டார்னு வெய்ங்கொ
    என்றெ அப்பன் மேல சத்தியமாச் சொல்றென்
    போட்டெதும் போட்டபெடி கெடக்கெ
    அப்பிடியெ அவருகூடப்போயிர்ருவென்....
    ஆமா....

    படித்து முடிக்கையில் அவள் மனம் விருப்பியபடி வாழ விடுங்களேன் பாவம் என்கிற கதறல் எல்லோருக்குள்ளும் எழும்.அவளுக்கு வேறொருவனுடன் திருமணமானபின் கவிதையில் சொன்னது சாத்தியமா?\\
    யதார்த்தமான கேள்வி.

    பதிலளிநீக்கு
  15. இன்று மிக மிக அவசியமான விசயத்தை விவாததிற்கு இழுத்திருக்கிறீர்கள் மாதவராஜ், கேள்விகளின் நியாயங்களை புரிந்துகொள்ள பொதுபுத்தியே தடையாய் இருக்கிறது, ஆதலால் அந்த பொதுபுத்திகளின் மீதான சமர் தொடர்ந்து நிகழ்த்த படவேண்டும்...
    கயலின் பின்னோட்டம் மிக அருமை மற்றும் எதார்த்தம்!!!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!