தமிழ்ச் சினிமாவும் இயக்குனர் மகேந்திரனும்!

சினிமா என்பது தொழில். சினிமா என்பது கோடிக்கணக்கில் பணம் போட்டு எடுக்கக் கூடியது. சினிமா என்பது பொழுது போக்குச் சாதனம். மக்கள் ரசனைக்கேற்ப படம் எடுத்தால்தான் ஓடும். இப்படியான் அபிப்பிராயங்களை வளையமாக அமைத்துக் கொண்டு சினிமா எடுக்கப்படுகிறது. நமது மக்களும் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெரும் கனவுப்பிரதேசமாக சினிமா ஆக்கிரமித்துக் கொள்கிறது, ஒரு மாயக்கம்பளமாகி சினிமா விரிந்து மக்களை வாழ்விலிருந்து நாடு கடத்துகிறது. சினிமாவின் நாயகர்களும், நாயகிகளும் தேவர்களாகவும், தேவதைகளாகவும் பூஜிக்கப்படுகிறார்கள். இந்த மயக்கங்களுக்குள் சினிமா என்னும் கலைச்சாதனம் பலநேரங்களில்  தன் அற்புதங்களை இழந்து, யதார்த்தங்களை பறிகொடுத்து, விடுகின்றன. இப்படியான சினிமாவை நிஜ வாழ்வுக்குள் மீட்டுக்கொண்டு வருகிற முயற்சிகளும் அவ்வபோது உலகம் முழுவதும் வெளிப்படவேச் செய்கின்றன.

ஒருவகையான மேற்கத்திய கலாச்சாரத்திற்கு ஆட்பட்டிருந்த, வெறும் சாகசங்கள் நிறைந்த நாயகத்தன்மைக்கு உதாரணமான எம்.ஜி.ஆரின் பிடியிலிருந்த தமிழ்ச்சினிமா, அவைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட காலமாக எண்பதுகள் இருந்தன. புழுக்கத்தில் கிடந்த காமிராக்கள் புதிய காற்றை சுவாசித்தன. புதிய வெளியை தரிசனம் செய்தன. ‘என் இனிய தமிழ் மக்களே’ என்று கரம் கூப்பாமல் மண்வாசனையோடு பாரதிராஜா காலடி எடுத்து வைத்தார். ருத்திரைய்யா எட்டிப் பார்த்தார். துரை, பாரதி வாசு போன்றவர்களிடம் தாகம் இருந்தது. இவர்களோடு பயணப்பட்டு தமிழ்ச்சினிமாவை நிமிர வைத்தவர்களில் இயக்குனர் மகேந்திரனும் ஒருவர்.

director mahendran ஜெயகாந்தனின்  ‘உன்னைப் போல் ஒருவன்’படத்தில் ”ந்ம்மைப் போல சாதாரண ஜனங்களுக்கு பெரிய சொத்தே இந்த ரோஷம்தான்” என்று ஒரு வசனம். வரும். அதையே ஒரு முழுத் திரைப்படமாக்கி இருப்பார் மகேந்திரன். தனது மேலதிகாரி எஞ்சினியர் கூப்பிடுகிறான் என்றவுடன், சோப்பு நுரை அப்பிய ஷேவ் செய்துகொண்டிருந்த முகத்தோடு அப்படியே வருவான் காளி. “என்ன இது..” என்று அதிர்ச்சியோடும் எரிச்சலோடும் எஞ்சினியர் கேட்பான். “உடனே வரணும்னு சொன்னீங்களாம்” என்று காளி வெறுப்போடு சொல்வான். முள்ளும் மலரும் படத்தின் இந்தக் காட்சியை தமிழ்ச்சினிமா மறக்காது. ஒரு கை போன பிறகும், நாயகன் எழுந்து நிற்பதும், நடப்பதும், கோபப்படுவதும், விட்டுக்கொடுப்பதும் அந்த ரோஷத்தால்தான். சினிமாவை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படிப் படைக்க வேண்டும் என இயக்குனர் மகேந்திரனுக்குத் தெரிந்திருந்தது.

uthiri pookkal அதற்கு முன்பு எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட நடிகர்களின் படங்களுக்கெல்லாம் வசனகர்த்தாவாக இருந்தவருக்குள், சினிமாவின் மொழி என்பது முற்றிலும் வேறாக இருந்திருப்பது விசித்திரம்தான். சத்யஜித் ரேவை தன் வாசலுக்கு மேலே வைத்து பார்த்துக்கொண்டு இருந்த அந்த மனிதர், முள்ளும் மலரும் படத்திற்கு முன்பு எத்தனை வலியோடு தன் நாட்களை சினிமா உலகில் கடந்திருப்பார், எதையெல்லாம் சகித்துக் கொண்டிருப்பார் என்பது புரிகிறது.. அந்த மனிதருக்குள்தான் ‘உதிரிப் பூக்கள்’படமும்  இருந்திருக்கிறது என்பதை பார்த்த பிறகு, மகேந்திரனின் கனவுகளை புரிய முடிந்தது.  மனித மனதின் ஆழங்களை அந்தப் படம் மிக எளிமையாக சித்தரிக்கும். ஏக்கங்களையும், வக்கிரங்களையும் மிக இயல்பாக காட்டும். அவைகளையொட்டித்தான் தமிழ்ச்சினிமாவுக்கு ‘அழகிய கண்ணே’ என ரீங்காரமிட்டபடி, தன் உயரத்தை அளந்து பார்க்கும் தெம்பு வந்தது.

பிறகு வந்த அவருடைய படங்களில் முக்கியமானவை என்றால் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘பூட்டாத பூட்டுக்கள்’, ‘மெட்டி’, ‘நண்டு’, இவைகளைச் சொல்லலாம். தனது முதலிரண்டு படங்களின் உயரத்தை அவரால் தொட முடியாமலே போய்விட்டது உண்மை.  எட்டி எட்டிப் பார்த்து,  ‘கை கொடுக்கும் கை’, ‘ஊர்ப்பஞ்சாயத்து’ என சமரசங்களும் செய்துபார்த்து, ஒரு கட்டத்தில் அமைதியாக உட்கார்ந்துவிட்டார் மகேந்திரன். ரொம்பநாள் கழித்து என்.எப்.டி.சி மூலம் வந்த ‘சாசனம்’ வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. இயக்குனராக மகேந்திரனின் வருகையும், அவர் தந்த படங்களும், அவருடைய தோல்விகளும் சில முக்கியச் செய்திகளை தமிழ்ச்சினிமா குறித்து சொல்வதாகவே தெரிகின்றன.

அவருடைய முக்கியமான படங்களைப் பற்றி எவ்வளவோ பேச இருக்கின்றன. அவ்வளவு மெனக்கெட்டு, கரைந்து, ஈடுபாட்டுடன் காட்சிகளை கவிதைகளாக தந்திருப்பார். ‘ஜானி’ திரைப்படம் மகேந்திரனைத் தவிர வேறு யார் எடுத்திருந்தாலும், அதன் சித்தரிப்பு யோசிக்க முடியாத் அளவுக்கு மாறிப் போயிருக்கும். உணவு பரிமாறும் போது கணவனின் இலையில் வைக்கும் சோற்றுப் பருக்கைகளும், விருந்துக்கு வந்தவனின் இலையில் அவளது தலையிலிருந்து சிந்தும் மல்லிகைப் பூக்களும் ‘பூட்டாத பூட்டுக்கள்’ படத்தின் கனத்தைச் சொல்லும். பெண்மனதின் புதிர்களை சொல்லாமல் சொல்லும் அழ்கு ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’யில் இருக்கும். ’மை சன், மை சன்’ என வரும் தந்தையை தெருவில் போட்டு அடிக்கும் ஒரு ம்கனை முதல்முறையாக தமிழ்ச்சினிமாவில் காட்டியது ‘மெட்டி’யில்தான்.

அவர் படத்தில் வரும் மரணக் காட்சிகள் எல்லாமே சினிமாவின் அர்த்தத்தையும் இலக்கணத்தையும் சொல்வதாக இருக்கும். மெட்டி படத்தில் ஒரு காட்சி வரும். அம்மா இறந்து போவாள். மயானத்திற்கு தூக்கிச் சென்ற பிறகு, தரையில் கிடத்தியிருந்த இடத்தில் சுற்றிலும் பூக்கள் இறைந்து கிடக்க், வெற்றிடத்தில் அம்மாவின் உருவம் தெரியும். ராதிகா அப்படியே அதில் விழுந்து அழுவார். உதிரிப் பூக்கள் படத்தில் அஸ்வினியின் மரணமும், விஜயனின் மரணமும் துயரங்களை அதன் முழுச் சுமையோடு பார்வையாளருக்குள் செலுத்தக் கூடியதாக இருக்கும்.

காட்சி, காட்சியாக இன்னும் நினைவில் எல்லாம் அசைந்து கொண்டு இருக்கின்றன உயிரோடு!

அப்பேர்ப்பட்ட கலைஞர் எப்படி தமிழ்ச்சினிமாவில் தொடர்ந்து நிலைத்திருக்க முடியாமல் போனார்? அவருடைய படங்களிலேயே,  கொஞ்சம் கொஞ்சமாக ’மகேந்திரன்’ எப்படி இல்லாமல் நீர்த்துப் போனார்? சினிமா குறித்து பெரும் கனவுகள் கொண்ட அந்த மனிதரின் பாதையை எது வழிமறித்து நின்றது? இப்போது தனிமையில் இருக்கும் அவருடைய நினைவுகளும், பார்வைகளும் எதைச் சுற்றி இருக்கும்? இப்படியான கேள்விகள் தொடர்ந்து எழுந்து கொண்டே இருந்தன. அவரிடம் உட்கார்ந்து பேச வேண்டும் போலத் தோன்றும். இப்போது சாத்தியமாகி இருக்கிறது. இயக்குனர் மகேந்திரன் குறித்த ஒரு ஆவணப்படம் எடுக்கத் திட்டமிட்ட்டு இருக்கிறோம். அவரும் சம்மதித்து உள்ளார். விரைவில் எங்கள் ஆவணப்படக்குழு சில நாட்கள் அவரோடு கூடவே இருக்கப் போகிறது!

அதுபற்றி தொடர்ந்து இங்கு பேசுவோம்!!

கருத்துகள்

21 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. அருமையான பதிவு
  தன தங்கை விருப்பம் ஊரார் விருப்பம் அத்தனையும் அறிந்து தான் செய்வது பிழை எனத் தெரிந்தும் தன ரோஷத்தை விட்டு கொடுக்காது வீம்புடன் இருந்து பின் தன் தங்கை தன்னையே வந்தடைந்ததும் கண்களில் பெருமிதம் கொப்பளிக்க ரோஷம் குறையாது தங்கையை தரை வார்க்கும் காளியின் வீம்பு வெல்லும் போது ஒரு நிறைவும் உதிரிப்பூக்களில் விஜயன் ஊரார் முன் அனைவரும் வேடிக்கைப் பார்த்திருக்க ஆற்றில் இறங்கியப் பின் ஒரு வெறுமையும் நமக்குள்ளும் தோன்றும்.

  பதிலளிநீக்கு
 2. மகேந்திரனைப் பற்றிய பதிவு மிக அருமை. அவருடைய உச்சம் ‘உதிரிப்பூக்கள்’தான். அந்தப்படத்தில் வரும் சில நுணுக்கமான சித்திரிப்புகள் (நினைவிலிருந்து சொல்கிறேன். பார்த்து பல காலம் ஆகிவிட்டது)- செம்மன் ரோட்டில் கார் வரும்போது சைக்கிளை தூக்கிக் கொண்டு பக்கத்து வீட்டு காம்பவுண்டிற்குள் ஓடி ஒளிவது... செண்ட் வியாபாரியின் ‘கள்ள’ நோக்கத்தை உணர்ந்து பார்வையில்லாத கணவன் சிரிப்பது... இம்மாதிரி ‘அட’ போட வைத்த தருணங்கள். இறுதி காட்சியில் விஜயன் பாத்திரம் பேசும் வசனம்... யப்பா...!

  நீங்கள் சொல்லியிருக்கும் சில காட்சிகளில்...

  //விருந்துக்கு வந்தவனின் இலையில் அவளது தலையிலிருந்து சிந்தும் மல்லிகைப் பூக்களும் ‘பூட்டாத பூட்டுக்கள்’ படத்தின்//

  அவன் விருந்திற்கு வந்தவன் இல்லை. கிராமத்தில் தங்கும் வெளியூர்காரன் அங்கிருக்கும் வீட்டில் சாப்பாட்டிற்கு ஒப்பந்தம் செய்துகொள்வது போல.

  அந்தப் படத்தின் கிளைமேக்ஸ் எனக்கு பிடித்திருந்தது. ஏனோ முன்பாதி கொஞ்சம் அழுத்தமில்லாமல் போய்விட்டது. இந்தக் கதையை இன்று புதியதாக எடுத்தால் நிறைய செய்யலாம்.

  //’மை சன், மை சன்’ என வரும் தந்தையை தெருவில் போட்டு அடிக்கும் ஒரு ம்கனை//

  ம்... கிளைமேக்ஸில் அதே அப்பாவை வேறு மனிதர்கள் அடிப்பதை பார்த்துவிட்டு பைக்கை திருப்பும்போது லாரியில் மோதி சரத்பாபு பாத்திரம் இறந்துவிடும். நல்ல காட்சியமைப்பு அது.

  முள்ளும் மலரும் - பாதி கிரெடிட் கதாசிரியர் உமா சந்திரனுக்கு போய்விடும். ஆனாலும் கதையை சிதைக்காத திரைவடிவத்திற்கு மகேந்திரனுக்கு ஸ்பெஷல் நன்றிகள்.

  சாசனம் முழுமையாக பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

  மகேந்திரனின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக அவருடைய போதை மருந்து பழக்கம் என்று சொல்வார்கள்.

  அவருடைய உதிரிபூக்களை இன்னோர் முறை பார்க்க தூண்டிவிட்டது உங்கள் பதிவு. நன்றி!

  பதிலளிநீக்கு
 3. திரைப்படக்கல்லூரியில் படித்தவர்கள்,பாலு மஹேந்திராவும்,அசோக்குமாரும்."முள்ளும் மலரும்" படத்திற்கு பாலுவும்,"நெஞ்சத்தைக் கிள்ளாதே"படத்திற்கு அசோக்குமாரும் புகைப்பட இயக்குனர்களாக பணியாற்றினார்கள்.அவர்கள் தான் உண்மையில் இயக்கினார்கள் என்று வேண்டாதவர்கள் வதந்தியை கிளப்பியது உண்டு.இதனை உங்கள் ஆவணப்படம் மருதளிக்க வேண்டும்.....காஸ்யபன்.

  பதிலளிநீக்கு
 4. தமிழ்ச் சினிமாவின் அசலான கலைஞன் மகேந்திரன்.அவரது வீழ்ச்சிக்கு நிறைய காரணங்கள் இருந்தாலும்,அவரது எழுச்சிக்கு உதிரிப்பூக்கள் ஒன்று போதும்.அவரைப்பற்றிய ஆவணப்படத்தை உங்களைப்போன்ற அசலான கலைஞன் எடுப்பதுதான் நியாயம்.தூக்குங்க..காமிராவை..

  பதிலளிநீக்கு
 5. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் என்னுடைய வாழ்த்துகளும். அவருடைய 'பூட்டாத பூட்டுகள்' எனக்கு பிடிக்கவில்லை. 'சாசனம்' இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். ஆனால் உதிரிபூக்கள் தொட்ட உயரத்தை வேறு தமிழ் திரைப்படம் தொடமுடியவில்லை என்று தான் சொல்வேன் என்னை பொறுத்தவரை.

  பதிலளிநீக்கு
 6. அதிலும் உதிரிப் பூக்கள் மிகவும் நான் ரதித்த நிறைய முறை பார்த்த படம் சார், கிளைமாக்ஸ் காட்சியில் விஜயன் ஆற்றில் இறங்கியவுடன் சுழித்து உள் வாங்கி ஆறு மீண்டும் அமைதியாக எப்போதும் போல் சீற்றத்துடன் ஓடுவது போல காட்சியமைப்பு அந்த காட்சி இன்னமும் என் கண் முன்னே நிற்கிறது
  மகுடேஸ்வரனின் கவிதை வரி போல
  ஊர்தோறும் சுடுகாடு
  ஒருபோதும் குறையலியே
  வாழ்க்கைப் பற்று
  அதிலும் அந்த காட்சியில் விஜயனின் உதட்டு துடிப்பு, மற்றும் கண்களில் தெரியும் பயம் மிகவும் அருமையான காட்சியமைப்பாக இருக்கும் , என்ன செய்ய நல்ல இயக்குநரை நமக்கு ஆராதிக்க தெரியவில்லை என்ற மனக்குறை எனக்கு எப்போதும் உண்டு

  பதிலளிநீக்கு
 7. அன்புத்தோழர் மாதவராஜ்,
  விவசாயி பாத்திரத்தில் கூட மடிப்பு கலையாத புத்தம் புதிய வேட்டி; மடித்த துண்டாலான தலைப்பாகை என்று வலம் வந்து கொண்டிருந்தார்கள் நம்ம எம்ஜியாரும் சிவாஜியும் அந்த நேரத்தில், அசல் மனிதர்களை நாயகர்களாக மாற்றி திரையுலகில் தவழ விட்டவர்கள் என்றால் அது அப்போது கை கூப்பாதிருந்த பாரதி ராஜாவும், வசனங்களைச்சுருக்கி "விஷுவலாக" தமிழ் சினிமாவைப்பதிவு செய்த மகேந்திரனும்தான். மகேந்திரனைப்பற்றிய தங்களது பதிவு ஜெயகாந்தன், சா கந்தசாமி அவர்களின் பதிவு போலப்பூக்கட்டும்.
  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. முதலில் வாழ்த்துக்கள் சார்.

  என்னளவில், இயக்குனர் மகேந்திரன் படங்களைப் பார்த்தபொழுது நாம் ஏன் அக்கால கட்டத்தில் பிறந்து தொலைத்திருக்கவில்லையெனக் கூட தோன்றியிருக்கிறது. முள்ளும் மலரும் பார்த்த பிறகுதான், யாரய்யா இந்த படத்தோட டைரக்டர் என்று தேட ஆரம்பித்தேன். அத்தனை நெருக்கம், அத்தனை உணர்வு, நீங்கள் சொன்னது போல, நடிகர் ரஜினிகாந்துக்கு இதுவரை எடுத்த படங்களிலேயே மிகவும் அருமையான, சிறப்பான படம் எத்வென்றால் அது முள்ளும் மலருமாகத்தான் இருக்கும்.

  உதிரிப்பூக்களைப் பார்த்துவிட்டு தொண்டை அடைந்தது...... அதற்குப் பிறகு நீண்ட நாட்களாயிற்று அம்மாதிரி படம் பார்த்து!!

  ஆகச்சிறந்த படைப்பாளிகள் வாழும்பொழுது கவுரவிக்கப்படுவதில்லை!! உங்களது குறும்படம் அதை நிறைவேற்றட்டும்.

  பதிலளிநீக்கு
 9. ஆஹா!

  நல்ல அலசல். அற்புதமான கலைஞன், மகேந்திரன்.

  மிக அற்புதமான காரியம் மக்கா!

  எதிர்பார்ப்புகளோடு..

  பதிலளிநீக்கு
 10. உங்களின் இப்படி ஒரு சிந்தனைக்கு முதலில் வாழ்த்துகள் .இந்த நல்ல முயற்சி பலரின் தாகத்தை தணிக்கும்

  பதிலளிநீக்கு
 11. சிலரின் இடங்கள் நிரப்பப் படாமலேயே
  இருக்கும். இது மாதிரிதான்
  மகேந்திரனின் இடமும்.
  உதிர்ப்பூக்கள் ஒன்றே போதும்.

  பதிலளிநீக்கு
 12. வாழ்த்துக்கள் தோழர்
  உங்கள் பணி சிறக்கட்டும்

  பதிலளிநீக்கு
 13. நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் அந்த பையனின் (பன்னீர் புஷ்பங்களிலும் இவர் நடித்திருப்பார்) மரணமும் நெஞ்சை தொடுவதாக அமைந்திருக்கும்.

  அது தவிர, அவருடைய படத்தில் அங்கீகாரம் இல்லாத உறவு ஒன்றும் இருக்கும்.

  முள்ளும் மலரும் படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி ஒரு பெண்ணை வைத்திருப்பார்

  ஜானி படத்தில் காஞ்சனாவை(ரஜினியின் தாயாராக நடித்திருப்பார்) திருமணமாகாமலே வைத்திருந்ததாக ஊர் தவறாக பேசியது என்று ரஜினி கேரக்டர் சொல்வது போல் இருக்கும்

  மெட்டி படத்திலும் செந்தாமரை விஜயகுமாரி உறவும் அப்படிப் பட்டது தான்

  நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் சரத்பாபுவிற்கு இன்னொரு பெண்ணோடு நட்பு இருக்கும்.

  இப்படியாக சமுதாய அங்கீகாரம் இல்லாத உறவுகளை முள்ளும் மலரும் தவிர மற்ற படங்களில் ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளும்படியாகவே அமைத்திருப்பார்

  பதிலளிநீக்கு
 14. நல்ல அலசல்.

  அற்புதமான கலைஞன் மகேந்திரன்.

  மகேந்திரனைப் பற்றிய பதிவு மிக அருமை.

  பதிலளிநீக்கு
 15. Dear sir,

  First of all salute to u for this operation.

  This effort also became every green effort for every green master.

  If u need financial support we will help u little bit

  பதிலளிநீக்கு
 16. அவசரமில்லாமல் நிதானமாக படத்தை எடுக்க வேண்டுகிறேன்

  பதிலளிநீக்கு
 17. 1) நெகிழ செய்துவிட்டீர்கள். நீங்கள் சொல்வது உண்மைதான். நானே கூட ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன்.../'பாவம் சினிமா, விட்டுவிடுவோம்..என்று பரிதாபப் பட்டு எம்.ஜி.ஆர். அரசியலை சீரழிக்க சென்றுவிட்ட காலம்...தமிழ் சினிமாவின் திரைகள் இத்தனை காலம் தங்கள் மேல் அப்பிக்கிடந்த டோப்பா மயிர்கள், ஜிகினாக்களை உதிர்த்துவிட்டு நிம்மதியாக குளித்த காலம்...
  /என்று. குறைந்த பட்ச யதார்த்த சினிமாக்களின் தொடக்க காலம் எனினும் அன்றைய நிலையில் அதுவே பெரிய மலையான விசயம்தான். மகேந்திரன் அவர்களே ஒரு காவியம்தான், அவர் குறித்த ஆவணப்படம்...நல்லது, வாழ்த்துக்கள். ஒரு குறிப்பு: முள்ளும் மலரும் கதை ஆசிரியர் திரு. உமாசந்திரன், அவர் மரியாதைக்குரிய பூரணம் விசுவநாதன் அவர்களின் மூத்தசகோதரர்.
  2) இந்த நேரத்தில் 'பாதை தெரியுது பார்' படத்தின் நினைவுகளும் வராமல் இல்லை. அந்தப்படமும் அதில் பங்கேற்ற கலைஞர்களுமே கூட ஒரு வரலாறுதான்...
  இக்பால்

  பதிலளிநீக்கு
 18. மகேந்திரன் தோற்று போனது - மொத்த தமிழ் சினிமாவுக்கும் பேரிழப்பு. அதை விட கொடுமை, மகேந்திரனை நாம் மறந்து, யார் யாரையோ சிறந்த இயக்குனர்களாக தூக்கி வைத்து ஆடுவது.

  பதிலளிநீக்கு
 19. திரு.மகேந்திரன் அவர்களைப் பற்றிய பதிவு மிக அருமை.

  உங்கள் ஆவணப்படத்திற்கு என் வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 20. திரு மகேந்திரன் அவர்களுக்கு ஆவணப்படம் எடுக்கும் உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

  திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் அந்த கால கட்டத்தில் அவர் வாழ்க்கை பாதையை மாற்றி அமைத்தது ஜானி படம் தான். ஜானி படம் மட்டும் வராமல் இருந்திருந்தால் இன்று ஒரு "சூப்பர் ஸ்டார்" உங்களிடத்தில் இல்லை. காரணம் திரு ரஜினி அவர்கள் காதலால் மனதளவில் பாதிக்கப்பட்டு ஒதின்கியுருந்த காலம். கிட்டதட்ட ஒரு மன நோயாளி போல் இருந்த காலகட்டத்தில் அவரை உணரவைத்து, அவருக்கென்று புதிய பரிமாணத்தை கொடுத்தது இந்த படம். அதுமட்டும்மல்ல அந்த படத்தில் திரு ரஜினி - ஸ்ரீதேவி காட்சிகள் அனைத்தும் நடிப்பையும் தாண்டி ஒருவித உண்மையான காதல் அதில் தெரியும். திரு மகேந்திரனின் தற்போதைய படங்கள் வேண்டுமானால் தோல்வி கண்டிருக்கலாம் ஆனால் அவர் என்றோ எல்லார் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

  உங்களுடைய குறும்படம் திரு மகேந்திரன் பற்றிய இன்னும் பல நல்ல விசயங்களை எடுத்து சொல்லட்டும்.
  Saminathan.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!