சண்டை

”டேய்” என பெருஞ்சத்தம் போட்டவாறு ஜீன்சும், டீ ஷர்ட்டும் அணிந்த இளைஞன் ஒருவன்  ஓடிவந்து அந்த பெட்டிக்கடையில் இருந்த சோடா பாட்டில்களை எடுத்து பிளாட்பாரத்தில் சளேர் என அடித்தான் .வாகனங்களும், மனிதர்களும்  எதிரும் புதிருமாய் அடித்துப் புரண்டோடிய நகரத்தின் முக்கியவீதி நிமிடத்தில் நிலைகுலைந்தது.

உடைந்த சிதறல்களில் கூர்மையான பகுதியை எடுத்துக்கொண்டு “வாடா, டேய் வாடா” என்று கத்தினான். நடந்து சென்றுகொண்டிருந்தவர்களும், அருகில் நின்று கொண்டிருந்தவர்களும் விலகி ஓடினார்கள். கொஞ்சம் தள்ளி நின்று, எதோ சண்டையென பதற்றத்தோடு பார்த்தார்கள்.

”பேசிக்கிட்டே இருக்கும்போது சட்டையைப் புடிச்சு கிழிக்கிற, இப்ப வாடா ஒன்னய கிழிக்கிறேன், வாடா..” என நெஞ்சுக்குழியும் அடிவயிறும் ஒட்டிப்போக தொண்டை அடைக்கக் கத்தினான், அவனுடைய டீ ஷர்ட் கிழிந்திருந்தது.. இளைஞன் கத்திய திசையில் அவனை விரட்டி வந்தது யாரெனத் தெரியவில்லை.

“வாடா, தேவடியா மவனே, எங்கடா ஒடி ஒளிஞ்சிட்டே. ஒரு அப்பனுக்கும் ஒரு அம்மைக்கும் பொறந்தவன்னா இப்ப வாடா“ எனக் கத்திக்கொண்டே அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் அலைந்தான். இப்படியே கொஞ்ச நேரம் கழிந்தது. பிறகு ஒரே இடத்தில் நின்று கொண்டான். கூட்டம் சுவ்சாரசியமற்று மெல்ல கலைய ஆரம்பித்தது.

”ஒங்க தகராறுல ஏம்பா சோடா பாட்டிலகள உடைக்கிற. யார் மீதாவது பட்டுச்சுன்னா...” என்றார் மெல்ல ஒருவர். சட்டென அவரை முறைத்து “இப்ப என்னாங்குற... அவன் என்னை அடிக்க வந்தானே, அப்ப நீ எங்க போன? வேலையப் பாரு” என்று சீறினான் இளைஞன். அந்த மனிதர் தலையிலடித்துக் கொண்டு போய்விட்டார்.

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த பெட்டிக்கடைக்காரன் அவனருகில் வந்தான். “பெருசா ரவுசு பண்ணாத. உடைஞ்ச ரெண்டு சோடா பாட்டில்களுக்கும் துட்டை எடுத்து வை” என் அதட்டினான்.

“எவ்வளவு” என்றான் மறுபேச்சு இல்லாமல்.

“இருநூறு” என்றான் முறைத்துக்கொண்டே பெட்டிக்கடைக்காரன்.

இளைஞன் அமைதியாய் பெட்டிக்கடைக்காரனைப் பார்த்தான். பேண்ட்டின் பின்பக்க பாக்கெட்டில் கைவிட்டு மணிபர்சை எடுத்து பணத்தைக் கொடுத்தான். “இது அதிகம்” என்றான்.

“எதுன்னு சொல்லுப்பா, எது அதிகம்னு சொல்லுப்பா” என்றான் பெட்டிக்கடைக்காரன். இளைஞன் எதுவும் பேசவில்லை.

“எவனோ சட்டையக் கிழிச்சிட்டான்னு, இந்தப் புறம்போக்கு தன்னோட கைய்க் கிழிச்சிருக்கு” என்ற பெட்டிக்கடைக்காரனின் கையில் இரத்தக் கறை படிந்த ருபாய் நோட்டுக்கள் இருந்தன. கடைக்கு முன்னால் சிதறிக்கிடந்த கண்ணாடித் துண்டுகளை பொறுக்கி சுத்தம் செய்ய ஆரம்பித்தான் அவன்.

அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல், வந்த திசையிலேயே தயஙகித் தயங்கி அங்குமிங்கும் பார்த்தவாறே நடந்து சென்றான். இளைஞன். உடைந்த சோடாவின் கூர்மையான பகுதி அவன் கையிலேயே இருந்தது.

கருத்துகள்

6 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. ஒரு தாதா உருவாகும் கதை யா.

  தமிழ் சினிமா வின் தாக்கம் மற்றும் பயன் இது தானோ.

  உண்மையிலியே அந்த இளைஞன் சோடா பாட்டிலால் அடிக்க வேண்டிய நபர்கள்- ஹோட்டலில் ரூம் போட்டு (அல்லது தெலுங்கு படத்தை அப்படியே நகல் எடுக்கும்)திரைக்கதை விவாதம் செய்யும் இயக்குனர் குழுமத்தை தான்.

  பதிலளிநீக்கு
 2. இந்த கதைக்கும் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கும், ஏதேனும் சம்மந்தம் உண்டோ??
  (கையை வெட்டிக்கொண்டவர் நம் முதல்வரோ?)

  பதிலளிநீக்கு
 3. தெருக்களில் இது போன்ற பொருக்கிகள்
  யாரைக் கடித்து குதறலாம் என்று
  சொறி நாய்களை போல அலைந்து
  கொண்டு இருக்கிறார்க்ள்...

  நாம்தான் கவனமாக ஒதுங்கி
  போகவேண்டும்,மாதவராஜ்.

  பதிலளிநீக்கு
 4. புனைவுக்கும் சொற்சித்திரத்துக்கும் என்ன சார் வித்தியாசம்?

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!