ஈழப்பிரச்சினையில் தேவையில்லாமல் புத்தரை நான் இழுத்தேனா?

 

சில நாட்களுக்கு முன் ‘பக்‌ஷே சரணம் கச்சாமி’ என்று ஒரு சொற்சித்திரத்தை இங்கே எழுதியிருந்தேன். தோழர்.கவின்மலர் அதுகுறித்து சில விமர்சனங்களை பின்னூட்டமாக நேற்று எழுதியிருக்கிறார். ஈழப்போரில் திட்டமிட்டு புத்தரையும், பௌத்தத்தையும் இழுக்கப்படுவதாகவும், அறிந்தோ அறியாமலோ நானும் அந்த வலையில் விழுந்துவிட்டதாகவும் வருத்தப்பட்டு இருக்கிறார்.

தொடர்ந்து அவர் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:

இந்துமதத்திற்கு மாற்றாக அம்பேதகர் முன்வைத்த பௌத்தத்தின் பிம்பத்தை சிதைப்பதன் மூலம் மறைமுகமாக இந்துத்வத்திற்கு துணை போவதை ஒத்துக்கொள்ள முடியாது. புத்தர் கண்ணில் ரத்தம் வடிவது போல ஓவியம் வரைவது, இன்னபிற விஷயங்கள் ஈழம் தொடர்பான விமர்சனங்களில் வைக்கப்படுகின்றன. ஜார்ஜ் புஷ் மனிதப் படுகொலை செய்தபோது இயேசுவை இழுக்காதவர்கள், நரேந்திரமோடி குஜராத்தில் படுகொலை செயதபோது இந்துமதக் கடவுள்களை இழுக்க துணிவற்றவர்கள் எப்படி ராஜபக்‌ஷேவைத் திட்டுவதற்கு பதில் புத்தன் பெயரை இழுக்கிறார்கள்? புத்தனை போருக்குள் இழுப்பதன் மூலம் ராஜப்க்‌ஷே மீதிருக்கும் கோபத்தையும் ஆத்திரத்தையும் நீர்த்துப் போகச்செய்து, திசைதிருப்பும் முயற்சி நடக்கிறது. புத்தனை விட்டுவிடுங்கள்! ராஜ ப்க்‌ஷே முகத்தில் அறையுங்கள். அதுதான் சரி.

நான் எழுதிய சொற்சித்திரத்தை முழுமையாக படித்து, உள்வாங்கி தோழர்.கவின்மலர் அவர்கள் எழுதினாரா என்று தெரியவில்லை. ஏற்கனவே வல்லினம் இணையப் பத்திரிகையில் வந்த புத்தரின் கையெறி குண்டு கவிதைக்கு வந்த எதிர்வினைகளைப் படித்து அதன் பாதிப்பில் இங்கு எழுதினாரா என்றும் தெரியவில்லை.

அந்தக் கவிதை வேறு. நான் எழுதிய சொற்சித்திரம் வேறு. புத்தரை ஒரு மதத்திற்குள் அடக்கியோ, அடையாளப்படுத்தியோ நான் எழுதவில்லை. அது அன்பையும், அஹிம்சையையும் போதித்த வாழ்வு நெறி என்பதை முன்னிறுத்தித்தான் எழுதியிருக்கிறேன். ஒரு ஓவியன் ஏசுநாதரை வரைய முயன்ற ஒரு முக்கியக் கவிதை ஒன்று உண்டு.  குழந்தை ஏசுவும், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸும் ஒரே மனிதனாய் இருப்பான். அதன் பாதிப்பில், வேறு அர்த்தத்தில் எழுதப்பட்ட சொற்சித்திரமே நான் எழுதியது.

மிகப்பெரும் இனப்படுகொலையும், மனித உயிர்வதையும் நிகழ்ந்த இந்த தருணத்தில் புத்தரை வரைய முடியாமல் போவதாக சொல்லியிருக்கிறேன். ஒரு காலக்கட்டத்தின், ஒரு மனநிலையின் தோற்றமாகவோ, காட்சியாகவோ இதனை நான் பார்க்கிறேன். மாபெரும் சிதைவின் வேதனையை சொல்ல முயன்றிருக்கிறேன். பௌத்தத்தை குறை ஒன்றும் சொல்லவில்லை. அதன் அற்புதமான வாழ்க்கைநெறி கண்முன்னால் தொலைந்து போகக் கூடாதே என்ற ஆதங்கம்தான் இந்த சொற்சித்திரம் முழுவதும் இருப்பதாக படுகிறது.

இதில் அம்பேத்கார், ஜார்ஜ் புஷ், நரேந்திர மோடி ஆகியோரை ஒட்டி வெளிவந்திருக்கும் கருத்துக்கள் இந்தப் பதிவுக்கு சம்பந்தமில்லாதவை என்பதையும், இந்துத்துவாவுக்கு துணை போவது போன்றவை இந்த இடத்தில் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகள் என்பதையும் தோழர் கவின்மலருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயம் என்னை நோக்கிச் சொன்ன வார்த்தைகளாய் இருக்காது எனவே நம்புகிறேன்.

‘காந்தி பிறந்த மண்ணில்தான் கோட்சேவா?” என்று தோழர் கவின்மலர் பேசாமலா இருந்திருப்பார்கள்! அது காந்தியை இழிவு படுத்துவதா?

*

கருத்துகள்

22 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. புத்தர் மண்ணில் இருப்பவர்களைக் கேளுங்கள் இலங்கையில் புத்தருக்கு என்ன மரியாதை இருக்கின்றது என. மிகவும் கீழ்த்தரமான மதமாக பெளத்தமதத்தை சிங்களவர்கள் உருவாக்கிவிட்டார்கள். இல்லையென்றால் யுத்த வெற்றீக்காக விகாரைகள் கட்டுவார்களா? கவின்மலர் போன்றவர்கள் நிஜம் தெரியாமல் பேசுகின்றார்கள் உங்களின் கட்டுரையில் எந்த தவறும் இல்லை.

    பதிலளிநீக்கு
  2. இலங்கையில் உள்ள புத்தசமயம் அதன் இரு பரிவுகளில் இந்துசமயத்தால் விழுங்கப்பட்ட பட்டுக்கொண்டிருக்கும் நெறி. அங்கு தமிழ் மக்களை கொல்லவே இது பயன்படுகிறது. அங்கு அது இந்துமதம் போலவே மக்களை ஏமாற்றி தமிழர்களை அழிக்கவே பயன்படுகிறது. இவர்களின் கதையை விடுங்கள். ஒன்றும் தெரியாமல் பேசவந்துவிட்டார்கள்

    பதிலளிநீக்கு
  3. புத்தர் வாழ்ந்து செத்த ஒரு மனுசன்!

    அவரை ஏன் கடவுள் ரேஞ்சுக்கு தூக்கி வைத்து பேசணும்!?
    புத்தர் பிறந்த பகுதியில் இருந்து இலங்கையில் குடியேறியவர்கள் தான் சிங்களவர்கள் என்று சில வரலாறு கூறுகிறது உண்மையா!?

    பதிலளிநீக்கு
  4. புத்தமதம் அன்பையும் அஹிம்சையும் போதிக்கும் மதம் ,மதம் என்பதைவிட அதை ஒரு வாழ்வு நெறி என்றுதான் சொல்ல வேண்டும் ,அந்த மதம் அருமையானது ,மனிதனை நேசிக்கத் சொல்லும் ,மனிதப் பண்புகளை போதிக்கும் மதம் அது .
    அதனைப் பின்பற்றுவதாக இலங்கையில் கூறுபவர்கள் மனிதநேயத்தையும் அன்பையும் இரக்கத்தையும் வெளிக்காட்டினார்களா ?புத்தமதத்தின் பெயரால் நடந்த கொடுமைகளை நாங்கள் அனுபவித்திருக்கிறோம் ,சிங்கள அரசியல்வாதிகள் புத்தரின் பெயரைச் சொல்லித்தான் பாமார ,சாமானிய சிங்கள மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு கடந்த அறுபது வருடங்களாக வாக்கு வேட்டையாடி அரசியல் நடத்துகிறார்கள் இலங்கையின் அறுபது வருட இன முரண்பாட்டுக்கும் முப்பது வருட இரத்தகளரிக்கும் அடிப்படையே சிங்கள அரசியல் வாதிகள் விதைத்து விட்ட சிங்கள பௌத்த மேலாண்மை கருத்தியல்தான்
    ஐம்பது வருடங்களுக்கு முன்பு தமிழ்த் தலைவர் செல்வாவோடு ஒப்பந்தம் செய்ததற்காக சிங்களத்தலைவர் பண்டாரநாயக்காவை சுட்டுக்கொன்றவர் ஒரு புத்த பிக்குத்தான் ,இப்போதும் அங்கு சிங்கள இனவாத நஞ்சை புத்த பிக்குகளின் கட்சியான ஜாதிக ஹெல உறுமய தான் தூண்டிக்கொண்டு இருக்கிறது .

    பிரபாகரன் முன்பு சொன்னார் ,ஜெயவர்த்தன உண்மையான புத்தனாக இருந்தால் தமிழர்கள் ஏன் தனிநாடு கேட்கபோகிறார்கள் என்று .

    அவர்கள் புத்தமதத்தின் போதனையை மதித்து நடந்திருந்தால் ஈழத்தமிழர்கள் தனி ஈழம் கேட்கவே மாட்டார்களே!

    ---வானதி .

    பதிலளிநீக்கு
  5. ஒவ்வொருமுறை சுமூகமான சூழல் ஏற்படும்போது அதை கெடுத்தவர்கள் புத்தபிட்சுகள்தானே? கிருத்துவ மதத்தில் பிறந்தவர்கள் கூட புத்தமதத்திற்கு மாறித்தானே சனாதிபதி ஆனார்கள் அங்கே! புத்தரின் பேரைச்சொல்லிச்சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள்தானே ரத்த வெறி பிடித்து அலைகிறார்கள்.

    சகோதரி வானதி சொன்னதை வரிக்குவரி வழிமொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. // நான் எழுதிய சொற்சித்திரத்தை முழுமையாக படித்து, உள்வாங்கி தோழர்.கவின்மலர் அவர்கள் எழுதினாரா என்று தெரியவில்லை. .ஏற்கனவே வல்லினம் இணையப் பத்திரிகையில் வந்த புத்தரின் கையெறி குண்டு கவிதைக்கு வந்தஎதிர்வினைகளைப் படித்து அதன் பாதிப்பில் இங்கு எழுதினாரா என்றும் தெரியவில்லை.//
    உங்கள் சொற்சித்திரத்தை முழுமையாகப் படித்து உள்வாங்கிக்கொண்டேதான் எழுதினேன்.
    ”புத்தரின் கையெறிகுண்டு” கவிதை செப்டம்பர் மாத வல்லினத்தில் வந்தது. இது குறித்த விமர்சனத்தை நான் ஒரு மாதத்திற்கு முன்பே இணையத்தில் ”எனக்கு நிறைய கண்கள்” என்ற தலைப்பில் எழுதிவிட்டேன்
    http://www.shobasakthi.com/shobasakthi/?p=522
    அக்டோபர் மாத வல்லினத்தில் அந்த விமர்சனம் வெளியிடப்பட்டிருக்கிறது. (http://www.vallinam.com.my/issue10/paarvai.html)
    அந்த விமர்சனம் மொத்த இதழ் குறித்தது என்பதால் மிகச்சுருக்கமாக அக்கவிதை குறித்த கருத்தைச் சொல்லியிருந்தேன். இப்போதய அக்டோபர் இதழில் தர்மினி எழுதியுள்ள எதிர்வினையில்கூட என் விமர்சனம் சுட்டிக்காட்டி எழுதப்பட்டுள்ளது என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. // இதில் அம்பேத்கார், ஜார்ஜ் புஷ், நரேந்திர மோடி ஆகியோரை ஒட்டி வெளிவந்திருக்கும் கருத்துக்கள் இந்தப் பதிவுக்கு சம்பந்தமில்லாதவை என்பதையும், இந்துத்துவாவுக்கு துணை போவது போன்றவை இந்த இடத்தில் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகள் என்பதையும் தோழர் கவின்மலருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயம் என்னை நோக்கிச் சொன்ன வார்த்தைகளாய் இருக்காது எனவே நம்புகிறேன்..//
    உங்கள் நம்பிக்கை சரிதான் தோழர்! அது உங்களை நோக்கிய வார்த்தைகள் அல்ல. நீங்கள் திட்டமிட்டு இப்ப்டி செய்கிறீர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் மக்களின் பொதுபுத்தியில் இப்படி ஒரு பிம்பத்தை ஏற்றி வைத்துவிட்டார்கள். அதற்கு நீங்களும் ஆட்பட்டுவிட்டீர்கள் என்றே நான் சொல்லவந்தேன். உங்களுக்கு, மாதவராஜ் என்ற மனிதருக்கு உள்நோக்கமிருப்பதாகவோ, இந்துத்வாவிற்கு நீங்கள் துணை போவதாகவோ நான் குற்றம்சாட்டவில்லை. ஆனால் அப்படி ஒரு உள்நோக்கத்தோடு செயல்படுவர்கள் இங்கே இருக்கிறபோது நீங்கள் அது போன்ற ஒரு சொற்சித்திரத்தை வரைவது மறைமுகமாக, ஒருவேளை நீங்களே அறியாமல்கூட இந்து மதத்திற்கு ஆதரவாகப்போய்தான் என்று எச்சரிக்க முயல்கிறேன். அவ்வளவே!
    நீங்கள் புத்தமதம் குறித்த சரியான பார்வையையும் புரிதலையும் கொண்டிருக்கலாம். ஆனால் உங்கள் பதிவை வாசிப்பவர்கள் எல்லோரும் அத்தகைய புரிதலோடு இருப்பார்களா என்ன?
    ஆனால் அம்பேதகர், மோடி, புஷ் போன்றவர்களைப்பற்றி இங்கே குறிப்பிட்டிருப்பது பொருத்தமற்றது என்று நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள்?
    //‘காந்தி பிறந்த மண்ணில்தான் கோட்சேவா?” என்று தோழர் கவின்மலர் பேசாமலா இருந்திருப்பார்கள்! அது காந்தியை இழிவு படுத்துவதா?//
    ஆனால் துரதிஷ்டவசமாக உங்கள் பதிவு அப்படி ஒரு தொனியில் இல்லையே தோழர்! பௌத்தத்தின் இடத்தில் ராஜபக்‌ஷேவை அல்லவா நிறுத்துகிறீர்கள்? “புத்தம் சரணம் கச்சாமி!” க்கு பதில் “பக்‌ஷே சரணம் கச்சாமி” என்றல்லவா சொல்கிறீர்கள்?
    //நேற்று அவர்கள் வந்தார்கள். அவன் கையிலிருந்த புத்தரை தூக்கியெறியச் சொன்னார்கள். அவர்கள் கையில் ஒரு சித்திரம் இருந்தது. அதுதான் புத்தர் என்று தந்தார்கள். ஆசையோடு பார்த்தான். புத்தராய் இருந்தது ராஜபக்‌ஷே. கண்கள் இருந்தன. உதடுகளில் சிரிப்பும் இருந்தது.//
    ‘புத்தராய் இருந்தது ராஜபக்‌ஷே.’ என்கிறீர்கள்!
    உங்கள் நோக்கம் நல்லதாகவே இருக்கலாம் தோழர்! ஆனால் அது எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்.

    பதிலளிநீக்கு
  8. தோழர் கவின்மலர்!
    கவிதையைத் தாங்கள் உள்வாங்கவில்லை என்பதை, உங்கள் விளக்கத்தின் மூலம் தெளிவு படுத்தியுள்ளீர்கள். புத்தராக ராஜபக்‌ஷே இருக்கிறார் என்று யார் சொல்கிறார்கள். அதிலுள்ள நையாண்டி கலந்த வேதனையை உங்களால் உணர முடியவில்லையா. ஸாரி.

    பதிலளிநீக்கு
  9. தோழர்,

    ‘மீண்டும் தோழர் தமிழ்செல்வனு’க்கு என்று துவங்கும் கட்டுரை ஒன்றை என்னுடைய வலைப்பூவில் பதிவு செய்திருக்கிறேன்.

    நேரமிருக்கும் போது வாசித்துப் பாருங்கள்
    எனது வலைப் பூ

    http://yogarajbabu.blogspot.com/

    மிக்க அன்புடன்
    யோகராஜ்பாபு

    பதிலளிநீக்கு
  10. பெரிய பெரிய விகாரைகள் கட்டி வெள்ளைக்காரன் பார்வைக்கும் சுற்றுலா வியாபாரத்துக்குமாக வைத்திருக்கிறார்களே தவிர நாங்கள் தமிழர்கள் ,கடவுள் என்று புத்தரை நினைத்து பயப்படும் அளவிற்கு அங்கு சிங்களவர்கள் இல்லை.
    புத்தனின் போதனை வழி எந்த பிக்குவும் இல்லை.ஆசையைத் துறந்தவர் புத்தன்.ஆசைக்குள் (அரசியல்,பெண்)புதைந்து நாட்டைக் கெடுப்பவர்களே இந்த பிக்குகள்தான்.

    பதிலளிநீக்கு
  11. தோழர்!

    உங்கள் பக்கத்தில் தவறில்லை என்றால் அதை விளக்கவேண்டும். தவறென்றால் ஒத்துக்கொள்ளவேண்டும். அதுதான் ஆரோக்கியமான விவாதத்துக்கு வழிவகுக்கும். அதைவிட்டுவிட்டு உனக்குப் புரியவில்லை, உள்வாங்கவில்லை என்று குற்றம்சாட்டி ஒரு பெரிய விஷயத்தைச் சுலபமாகக் கடந்துபோகும் உங்களுக்கு நான் சொல்வது புரிகிறதா அல்லது புரிந்தும் ஒத்துக்கொள்ள மனமின்றி இருக்கிறீர்களா என்பது உங்கள் மனசாட்சிக்குத் தெரியும்.. உங்கள் சொற்சித்திரத்தை மேலோட்டமாக மொன்னையாக உள்வாங்கும் யாருக்கும் அது கடத்தும் நுணணரசியல் புரியாது. எழுதிய உங்களுக்கே புரியவில்லையே?

    மன்னிக்கவும்! ஒரு தோழமையுணர்வுடன் உங்கள் கருத்துகள் குறித்து விவாதிக்க நினைத்தது எவ்வளவு பெரிய தவறென்று இப்போது புரிகிறது.

    ஒரு படைப்பு தரக்கூடிய தவறான புரிதல்களை சுட்டிக் காட்டினால் அதைப் பற்றிப் பேசுவதற்கு பதில் ‘நீ அதை உள்வாங்கவில்லை’ என்று தீர்ப்பெழுதிவிட்டுப் போகும் ஆதிக்க ம்னோபாவம் உங்களுக்குமிருப்பது துரதிஷடம்தான் தோழர்!

    பதிலளிநீக்கு
  12. தோழர் கவின்மலர்!
    ஏனிந்த ஆத்திரம்?
    நீங்கள்தான் இப்படி பின்னூட்டமிட்டு இருந்தீர்கள்:
    //தோழர்! பௌத்தத்தின் இடத்தில் ராஜபக்‌ஷேவை அல்லவா நிறுத்துகிறீர்கள்? “புத்தம் சரணம் கச்சாமி!” க்கு பதில் “பக்‌ஷே சரணம் கச்சாமி” என்றல்லவா சொல்கிறீர்கள்?
    //நேற்று அவர்கள் வந்தார்கள். அவன் கையிலிருந்த புத்தரை தூக்கியெறியச் சொன்னார்கள். அவர்கள் கையில் ஒரு சித்திரம் இருந்தது. அதுதான் புத்தர் என்று தந்தார்கள். ஆசையோடு பார்த்தான். புத்தராய் இருந்தது ராஜபக்‌ஷே. கண்கள் இருந்தன. உதடுகளில் சிரிப்பும் இருந்தது.//
    ‘புத்தராய் இருந்தது ராஜபக்‌ஷே.’ என்கிறீர்கள்! //

    புத்தருக்குப் பதிலாய் நான் ராஜபக்‌ஷேவை வைத்ததாய்ச் சொல்கிறீர்கள்.
    ’பக்‌ஷே சரணம் கச்சாமி என்று நான் சொல்வதாய் சொல்கிறீர்கள். நான் அப்படிச் சொல்லவில்லையே! கவிதை எழுதியதால் அது நான் சொல்வதாகுமா? அன்பும் அமைதியும் உலவ வேண்டிய நிலப்பரப்பில் ஆணவமும், அதிகாரமும் வந்து நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது என்பதுதானே இந்த வரிகளின் பொருள். புத்தரின் காலம் கடந்துவிட்டதாக வரலாற்றில் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் பாசிஸ்டுகள்! வரலாற்றில் அந்தக் குரல்களை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கேட்கலாம்.
    எனவேதான் கவிதையில் யார் சொல்கிறார்கள் என்று நான் கேட்டு இருந்தேன். அதைத்தான் தாங்கள் சரியாக உள்வாங்கவில்லை எனக் குறிப்பிட்டு இருந்தேன்.

    அதற்குள் ஆதிக்க மனோபாவம். மேலோட்டம், மொண்ணை, நுண்னரசியல்....
    நன்றி தோழர்.
    விவாதத்தை நிறுத்திக்கொள்ளுங்கள்!!!!

    பதிலளிநீக்கு
  13. திரு கவின் மலர்...

    தோழர் மாதவராஜ் எந்த நுண்ணரசியலும் வைத்து இந்தப் பதிவை எழுதியிருப்பதாக எனக்குப் படவில்லை.

    ஈழத்து தமிழ் மக்களின் குருதி இலங்கை பௌத்தர்கள் போற்றிப் பாராட்டும் ராஜபக்சே என்ற அரக்கனின் வாயில் வடிந்து கொண்டிருக்கும் அவலத்தையும், அந்த மக்களின் வேதனையையும், படிப்பவர்களுக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே இலக்கில் இந்தப் பதிவை கொடுத்திருப்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

    //நேற்று அவர்கள் வந்தார்கள். அவன் கையிலிருந்த புத்தரை தூக்கியெறியச் சொன்னார்கள். அவர்கள் கையில் ஒரு சித்திரம் இருந்தது. அதுதான் புத்தர் என்று தந்தார்கள். ஆசையோடு பார்த்தான். புத்தராய் இருந்தது ராஜபக்‌ஷே. கண்கள் இருந்தன. உதடுகளில் சிரிப்பும் இருந்தது.
    வீட்டில் செடி, கொடி, மரங்கள் யாவும் பகலிலேயே தூங்குவது போல சுருங்க ஆரம்பித்தன.//

    பஞ்சமா பாதகம் செய்த பக்ஷேவை அன்பும் அக்கறையும் கொண்ட ஆட்சியாளனாய் ஏற்க வைக்கும் முயற்சி (நவீன புத்தராய் உருவகப்படுத்தும் முயற்சி) நடப்பதையே தோழர் குறிப்பிட்டிருக்கிறார். இன்று இங்கிருக்கும் சிலரே அதற்கு துணை போவது உங்களைப் போன்றவர்கள் அறியாததா?

    அண்ணல் அம்பேத்கர் முன்வைத்த அன்பு மதத்தை கொச்சைப்படுத்தும் முயற்சி அதில் எங்கே இருக்கிறது தோழர்...?

    எங்கோ அபூர்வமாகத்தான் ஆதரவுக் குரல்கள் ஒலிக்கின்றன.. அதிலும் சுருதிபேதம் பார்க்கலாமா...!

    -சிவா

    பதிலளிநீக்கு
  14. நிஜத்தை தேடி.... சிவா சொல்வது போல் மாதவராஜ்ஜின் ‘பக்‌ஷே சரணம் கச்சாமி’ பதிவில் மதம் பற்றிய நுண்ணரசியல் இருப்பதாக எனக்கும் தெரியவில்லை.

    இலங்கையில் மகாவம்சம் என்ற பெளத்த சமயசரித்திர நூலாக கருத்தப்படும் ஓர் நூலை வைத்துத்தான் பெளத்த குருமார்களும் ராஜபக்க்ஷேக்கள் போன்ற அரசியல்வாதிகளுடன் சேர்ந்து எங்களின் அடிப்படை உரிமைகள் மீது கூட அரசியல் நடத்துகிறார்கள். மாதவராஜ் சொல்வது.... புத்தரின் பெயரால் தான் இலங்கையில் போர் நடக்கிறது என்று சொல்லும் பெளத்தபிக்குகள் மற்றும் ராஜபக்க்ஷேக்களின் கொடூரத்தை விளக்குவதாகவே எனக்கு தெரிகிறது. எங்களின் அவலங்களுக்கு புத்தர் அல்ல புத்தரின் பெயரால் அரசியல் நடத்துபவர்கள் தான் காரணம் என்பது அந்த பதிவின் உட்பொருளாய் என் சிற்றறிவுக்கு தோன்றுகிறது.பெளத்த சிங்களர் மட்டுமே இலங்கையை ஆளவேண்டும், மற்றவர்களுக்கு எந்த உரிமையும் கொடுக்க கூடாது என்று புத்தர் சொன்னாரா?

    கவின்மலர் அவர்களுக்கு,

    ஆனாலும், என் பொதுப்புத்திக்கு ஓர் சந்தேகம். சீனாவிலும் சரி இலங்கையிலும் சரி பெளத்தமதம் தான் கடைப்பிடிக்கப்படுகிறது. இரண்டு நாடுகளிலுமே மனித உரிமைகள் மதிக்கப்படுவதில்லை, ஏன்? இப்படி கேள்வி கேட்டால் நான் புத்தரை மதிக்கவில்லை, புத்தர் தான் எல்லாத்துக்கும் காரணம் என்று நான் செல்வதாக அர்த்தம் கொள்வீர்களா கவின்மலர்?

    பதிலளிநீக்கு
  15. புத்தன் மனிதனாக இருந்தவரை சிக்கல் இல்லை. கடவுளாக மாறியதும் எவ்வளவு பிரச்சினை பாருங்கள்! எது எப்படியோ, மனிதனைக்காப்பவன் கடவுள் என்றால், மனிதன் செய்யும் தவறுகளுக்கு அந்தக் கடவுளும் பொறுப்புத்தானே! அதைச் சொல்வதில் என்ன தவறு உள்ளது? அவனவன் இன்னும் சில ஆண்டுகளில் நேரப்போகும் விண்பாறைகளின் தாக்குதலுக்கு பூமியை எப்படி தப்புவிப்பது என்று திட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறான், இங்கே புத்தன் செகரேடரி மாதிரி, இல்லாத ஆளுக்கு தோழர்கள் வக்காலத்து வாங்குவது ஏன்? டாடர். அம்பேத்கார் எல்லோரும் பெளத்த மதத்துக்கு போங்க என்று சொன்னது, சாமியே இல்லாமல் வாழ முடியாது என்பவருக்கும் , ஜாதி பேதம் ஒழியவேண்டும் என்பதற்கும் மாற்றாக சொன்னது. அதையே பெரிய இதுவாக நினைத்துக்கொண்டு, மீண்டும் ஒரு பண்டார கும்பலை உருவாக்குவது அவரின் கொள்கைக்கு எதிரானது ஆகும். ஆமாம்! ஒரு மனிதன் தவறு செய்தால் அவன் வணங்கும் கடவுள் முகத்திலேயும் சேறு பூசப்படும். அது வேண்டாம் என்றால் தவறு செய்யாதே. கடவுளாவது பிழைத்துப் போகட்டும்.எல்லா சாமிகளுக்கும் இதேக்கதித்தான்! நண்பர் மாதவராஜ், நீங்கள் இன்னும் கடுமையாகக்கூட எழுதலாம். ஒன்றும் தப்பில்லை!

    பதிலளிநீக்கு
  16. புலிகள் முஸ்லிம்களை ......
    புலிகள் சிறுவர் போராளிகளை...
    புலிகள் மக்களை ....
    என்று 1000 குற்றச்சாட்டுக்கள். இவையனைத்தும் சோபாசக்தியின் தளத்தில் இருக்கும் ஒட்டுன்னி தளங்களில் (I mean linked there) ஒரு வரி பிழைக்காமல் இருக்கும். என்னுங்கோ அதன்னே மக்களைப்பற்றி கதைத்தால் புலி ஆதரவு என்றால் உங்கள் அரசியல் நிலையை உங்கள் பதிவு வரும் தளத்தில் இருந்து அறிந்து கொள்ளாலாம். உங்கள் கருத்தை நியாயபடுத்த நீங்கள் ஏன் புலிஎதிர்பான தளத்தில் இயங்கவேணும்? இந்த சோபாசக்தி இந்தியபடையின் அநியாயத்தை எழுதினாரா? து.. வாங்கும் பணத்திற்கு வாலையும் ஆட்டி வடிவாய் குலைக்கும் நாய்கள்..
    ஏதோ புத்தசமயம் சிறந்த சமயம். ஏன் சீனாவிலும் புத்தசமயம் தானே? புலிகளோடுதான் ஆகாது சீனாக்காரனனோடு கூத்தடிக்கவேண்டியது தானே. இந்து மதவெறிபோலதான் பெளத்தமும். பெளத்தரும் நல்லவர் சிவனும் நல்லவர் தான். ஏ9 திறக்க எத்தனை புத்தர் சிலை இருக்கு என்று பாருங்கள். கடந்த 4 வருடததில் வெள்ளவத்தையில் மட்டும் எத்தனை புத்தர் சிலை..ஏன்? ஆதிக்கத்தை நிலைநாட்டும் வெறி. 54ம் ஆண்டிலிருந்து பொளத்தவெறிதான். பெளத்தம் திறம் என்றால் உலகில் உள்ள ஒரு பெளத்த அரசாங்கம் சொல்லுங்கள் மக்கள் புரட்சியை மென்மையாக கையான்டதாக?(மென்மையாக...அகிம்சை என்று நான் சொல்லவில்லை. உங்கள் கூட்டம் முழுவதும் 2 கரைகளிலும்(in both extreme)இருந்து பேசத்தான் தெரியும். மதம் மதம் தான். பெளத்தர் ஒன்றும் திறமில்லை. வாழப்பயந்து ஓடி உருவான நெறிதான். இலங்கை அரசு கோடி கோடியாக கொட்டும் பணத்தில் தான் தமிழ் நாட்டு பெளத்த வளர்ச்சியும் இயங்குகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஒரு சிங்களவன் தமிழர்களை பெளத்தராக மாற்றினால் இனப்பிரச்சனை தீர்ந்துவிடும் என்கிறான். சும்மா தமிழ் நாட்டில் இருந்து கொண்டு பெளத்தம் பற்றி பேசவேண்டாம். இலங்கையிலோ சீனாவிலோ போய் பாருங்கள் மதவெறியை.. தமிழ் நாட்டில் பெளத்தத்திற்கு வால் பிடிக்கும் உங்களைப்போன்றவர்களை படம் பிடித்து சிங்களவனும் தமிழர்களிலும் பெளத்தர்கள் இருக்கிறார்கள் என்று ஒலிபரப்புகிறான். பொளத்தத்தின் இருபெரும் கூறுகளில் இலங்கையில் உள்ளது என்ன.. என்ன கொள்கைகள்.. என்று இனியாவது இனையத்தில் படியுங்கள். அங்குள்ள பெளத்தத்தை இந்து சமயம் எப்படி விழுங்கும் என்பதை பற்றிய பதிவு விரைவில் பதிவிடுகிறேன். நீங்கள் உண்மையானவர் என்றால் பொதுவாக நின்று சிங்கள அரசை எதிர்த்து குரல் கொடுத்திருக்கலாம். சோபாசக்தியின் பின்னால் நின்று கத்தினதா உங்கள் உண்மையான முகம் தெரிந்துவிட்டது. பாவம் நீங்கள்.

    பதிலளிநீக்கு
  17. கவின் மலர்...முந்தய பின்னுட்டம் உங்களுக்கானது. அதில் ஏதாவது ஒன்றுக்கு உங்களால் பதிலக்க முடியாவிட்டாலும் இந்த ஒரு கேள்வி:
    சிறிலங்காவில் பெளத்தர்கள் அனைவரும்: நல்லநேரம் பார்கிறார்கள். பில்லி சுனியம் இருக்கு. முட்டாள் தனமான நம்பிக்கைள் இருக்கு. ஆவி பேய் இருக்கு. இதை விட பத்தினி தெய்யோ(அம்மன்) ஸ்கந்ததேய்யோ(ஸ்கந்தன் அல்லது கந்தன் அதவது முருகன்) விஷ்ணு தெய்யோ.(தெய்யோ=தெய்வம்) என்றல்லாம் இருக்கு. இங்கு வந்து பெளத்தம் போதிக்கும் சிறிலங்கா தூதரக ஆட்களிடம் அல்லது உங்கள் கூட்டத்திடம் கேட்டுசொல்லுங்கள். தயவு செய்து..

    அணைவருக்கும் பொதுவாக.. வெளியில் இருந்து பார்த்தால் பெளத்தம் புத்தகத்தில் வாசிப்பது போலத்தான் நல்லா இருக்கும். வாழ்ந்து பார்க்வேண்டும்.

    பதிலளிநீக்கு
  18. ////ஆனால் அப்படி ஒரு உள்நோக்கத்தோடு செயல்படுவர்கள் இங்கே இருக்கிறபோது நீங்கள் அது போன்ற ஒரு சொற்சித்திரத்தை வரைவது மறைமுகமாக, ஒருவேளை நீங்களே அறியாமல்கூட இந்து மதத்திற்கு ஆதரவாகப்போய்தான் என்று எச்சரிக்க முயல்கிறேன். அவ்வளவே!////
    30000 தமிழர்களை கொன்று(இந்துக்கள் மட்டுமல்ல கிருஸ்தவர்களளும் அதிகம்) 35000 மக்களை பட்டினி போட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி சித்திரவதை படுத்தும் சிங்களவனை, மதத்தின் பெயரால் அவன் செய்யும் அநியாயத்தை காட்டும்போது இந்து மதத்திற்கு ஆதரவாய் போய்விடும் என்று சுட்டிக்காட்டும் உங்களுக்கு இவள்ளவு அநியாயம் செய்தவனை நீங்கள் ஆதரிக்கிறீர்களே என்றுதான் நானும் சுட்டிக்காட்டமுயல்கிறேன். அவ்வளவே..
    புலியெதிர்பே தொழிலாக கொண்ட தளத்தோடு நீங்கள் இயங்கிகொண்டு உள்ளங்கை நெல்லிக்கனியாக பாவம் புரிந்தவனை அவன் தன் கவசமாக பாவிக்கும் பொளத்தம் கொண்டு தாக்கினால் அது உங்களுக்கு வலித்தால் நீங்கள் யார்? நிச்சயமாக மனிதன் இல்லை. என்னதான் அநியாயம் நடத்தாலும் இந்து மதத்திற்கு ஆதரவாக வந்துவிடக்கூடாது. அது சரி. அதை சொல்ல நீங்கள் நியாயமாக நடக்றீர்களா என்று பார்க்க வேண்டும்.
    உங்கள் சோபாசக்தியின் தளத்திலோ உங்களாளோ பெளத்தத்தின் பெயரால் நடந்த படுகொலைகளுக்கு ஏன் ஒரு வருத்தம் தெரிவிக்கவில்லை. ஏன்.? அப்படி தெரிவித்தால் அது இந்துசமயத்திற்கு ஆதரவாக போய்விடுமா? என்னையா நாடகம் ஆடுகிறீர்கள். ராஜபக்சவை குறைகூறினால் அது புலிகளுக்கு சாதகம். அது உங்களுக்கு ஆகாது. அதற்காக இந்து சமயத்தை இழுத்து ஆடுகிறீர்கள் ஆட்டம். பார்வை புரிதல் என்று எழுத்துநடையில் எழுதினால் இலக்கிய உலக மேதை ஆகிவிடாது. நரி நனைந்தால் ஆடுதான்.

    பதிலளிநீக்கு
  19. புத்தன் என்ன சொன்னான், என்ன சொல்லவில்லை என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு.
    பௌத்தம் என்ற மதத்தின் பெயரால் சிங்களவர்கள் ஒன்றுபட்டு இருப்பதைத்தான் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். ஜப்பான் ஏன் சிங்களவர்களை ஆதரிக்கிறது? மற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் எல்லாம் ஏன் சிங்களவர்களை ஆதரிக்கின்றன? சீன அரசு சிங்களவர்களை ஆதரிக்கிறதே? அதற்கு பௌத்த மதந்தானே ஆரம்ப நிலையில் காரணமாக அமைந்தது. இவ்வளவு பெரிய படுகொலை நடந்து இருக்கிறதே.......அதற்கு மேலும் 3,00,000 நம்முடைய தமிழ் மக்கள் வதை முகாம் அடைத்து வைக்கப்பட்டுள்ளனரே... சமாதான நோபல் பரிசு வாங்கியன்……தலாய்லாமா ஏன் கண்டிக்கவில்லை? ஒப்புக்குக்கூட வாயைத் திறக்கவில்லையே ஏன்?
    இங்கே உள்ள பௌத்தர்கள் எத்தனை பேர் வாயைத் திறந்தார்கள? 'புத்தனைக் குறை சொல்லிவிட்டார்கள்' என்றதுமே 'அய்யோ.....நாங்கள் அப்படி எல்லாம் ஒன்றும் சொல்லவில்லையே.....தாங்கள் கோபித்துக் கொள்ளாதீர்கள்' என நாம் ஏன் அலரி அடித்துக் கொண்டு மன்னிப்பு கேட்காத குறையாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். நம்முடைய இந்த பாமரத்தனம் என்றைக்குத்தான் நம்மை விட்டு ஒழியும்.
    நம்முடைய சகோதர இனம் என்று திராவிட இயக்கங்கள் பிதற்றிக் கொள்ளும் அண்டை மாநிலத்தவர்கள் ஏன் நம்முடைய அழிவை மௌனமாகக் கொண்டாடி வருகிறார்கள்? திராவிட 'பெரியார்' - ஆல் பெரிதும் பயன் பெற்ற லல்லு, முலயாம், மாயாவதி போன்றவர்கள் என்ன செய்தார்கள்?
    தமிழர்கள் எல்லா நாடுகளிலும் உள்ளனர்; ஆனால் அவர்களுடையது என ஒரு நாடு அமைய இல்லை. தமிழர்கள் எல்லா மதங்களிலும் உள்ளனர்; ஆனால் அவர்களுடையது என ஒரு மதம் அமைய இல்லை. தமிழர்களாகிய நமக்கு இப்போது இருப்பது மொழி மட்டுமே; அதையாவது காப்பாற்றிக் கொள்ள இயலுமா ?

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் நண்பர்களே!
    நான் புத்த நெறிகளை குறை சொல்ல வந்த பதிவல்ல அது. அப்படி புரிந்துகொண்ட நண்பர்களுக்கு என் மறுப்பை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கவின்மலர் அவர்களின் கருத்துக்களில் பலவற்றில் எனக்கு முரண்பாடு இருந்தது. அதன் ஆரம்பத்திலேயே ஏற்பட்ட புரிதல் கோளாறுகள் விவாதங்களை ஒரிடத்திலேயே நிறுத்திவிட்டது.

    அம்பேத்கார் ஏற்றுக்கொண்டதாலேயே புத்தமதம் புனிதம் எனச் சொல்வதையும், இந்துத்துவாவுக்கு அதுதான் தீர்வு என அவர்கள் சொன்னதிலும் பெரும் கோளாறுகள் இருப்பதாக நினைக்கிறேன். புத்தர் ஒரு கடவுள் மறுப்பாளர். அவரையே கடவுளாக்கும்போது, மதத்திற்கான சகல குணக்கேடுகளும், பிரத்யேக குறைபாடுகளும் வந்து சூழத்தான் செய்யும்.

    லெனினையே கடவுளாக்க முயற்சி செய்த மார்க்ஸிம் கார்க்கிக்கும், லெனினுக்கும் நடந்த உரையாடல்களை சம்பந்தப்பட்டவர்கள் படித்து தெளிதல் நல்லது.

    பலரும் சொல்லியிருக்கிற- புத்த நெறிகள் மக்கத்தானவை, அவற்றை கடைப்பிடிப்பதாய்ச் சொல்கிறவர்களிடம் பெரும் குறைகள் இருப்பதை ஒப்புக்கொள்கிறேன்.

    சொற்சித்திரம் எந்தத் தவறான அர்த்தங்களோடும் எழுதப்படவில்லையென்பதை சொல்லி முடிக்கிறேன்.

    கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  21. //வால்பையன் said... 3 புத்தர் வாழ்ந்து செத்த ஒரு மனுசன்!

    அவரை ஏன் கடவுள் ரேஞ்சுக்கு தூக்கி வைத்து பேசணும்!?

    //

    கடவுள் நம்பிக்கையற்ற வால் பையன்
    'கடவுள்' ரேஞ்சுக்கு ஏன் பேசனும் ! வால்பையன் பாசையில் இல்லாத ஒண்ணுக்கு என்ன ரேஞ்ச் இருக்கும் ?
    :)

    பதிலளிநீக்கு
  22. //இதில் அம்பேத்கார், ஜார்ஜ் புஷ், நரேந்திர மோடி ஆகியோரை ஒட்டி வெளிவந்திருக்கும் கருத்துக்கள் இந்தப் பதிவுக்கு சம்பந்தமில்லாதவை என்பதையும், இந்துத்துவாவுக்கு துணை போவது போன்றவை இந்த இடத்தில் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகள் என்பதையும் தோழர் கவின்மலருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயம் என்னை நோக்கிச் சொன்ன வார்த்தைகளாய் இருக்காது எனவே நம்புகிறேன்//

    abcd...efgh

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!