உன்னைப் போல் ஒருவனை முன்வைத்து.....

 

நேற்றிரவு செல்வேந்திரனின் பதிவைப் படித்த போதுதான் உன்னைப்போல் ஒருவன் படத்தை முன்வைத்து எதோ சர்ச்சைகள் உருவாகி இருப்பதாகப் பட்டது. காலையில் உண்மைத்தமிழனின் பதிவில் ‘உன்னைப்போல் ஒருவன்’ பட விமர்சனப் பதிவுகளின் பட்டியல் வழியாக ஒவ்வொன்றாக படிக்க நேர்ந்தபோதுதான் பதிவுலகம் சூடாகி இருப்பதை  அறியமுடிந்தது. இன்னும் விவாதங்களுடன் பதிவுகள் வந்துகொண்டு இருக்கின்றன.

A wednesday  மற்றும் உன்னைப்போல் ஒருவன் இரண்டையுமே பார்க்க முடிந்ததால் எனக்கு ஏற்பட்டிருந்த அனுபவங்களை மிகச்சுருக்கமாக மட்டுமே நேற்றைய பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். எனக்கு ஏற்பட்டு இருந்த சில கேள்விகளை லேசாய் கோடிட்டு மட்டும் காண்பித்து இருந்தேன். இப்போது பார்த்தால், நான் பதிவிடுவதற்கு முன்பே ஆரம்பித்து இங்கு ஒரு விஷயம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு இருந்திருக்கிறது.

கமலின் இந்தப்படம் முழுக்க முழுக்க இந்துத்துவா ஆதரவுப்படம் என்றும், அப்படியெல்லாம் இல்லை என்றும் ஆரம்பித்து, நீண்டு, கமல்ஹாசன் என்னும் கலைஞன் மீது அவரவர்கள் தங்கள் பார்வைகளை செலுத்த ஆரம்பித்து இருக்கிறோம். படைப்பு குறித்த விமர்சனத்திலிருந்து, படைப்பாளி நோக்கிய விமர்சனத்திற்கு தாவி இருக்கிறோம். இந்த இடத்தில் நமக்கு இருக்க வேண்டிய பொறுப்பும், அக்கறையும் நாம் கொண்டிருக்கிறோமா என்பதை கொஞ்சம் நிதானித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக உணர்கிறேன்.

அரைநூற்றாண்டுக் காலம் தமிழ்ச்சினிமாவில் முக்கியப் பாத்திரமாக இருந்த ஒருவரை, சினிமா பற்றிய ஞானம் உள்ள சினிமாக் கலைஞரை, மனிதநேயமிக்க எத்தனையோ காட்சிகளை கண்முன் நிறுத்தியவரை, எத்தனையோ அற்புதமான படங்களை தமிழ்த் திரையுலகத்திற்குத் தந்தவரை சட்டென்று  “ஒரு இந்துப் பாசிஸ்டு” என்று முத்திரை குத்துவது சரியல்ல. சில காட்சிகளை முன்னிறுத்தி, ஒரு கலைஞனை ஒட்டுமொத்தமாய் மதிப்பிடுவது நல்லதல்ல. அதிலும் அவரது பிறப்பை முன்னிறுத்தி பேசுவது ஆரோக்கியமானதல்ல.

நான் உட்பட பலரும் சுட்டிக்கட்டியிருக்கிற சிக்கலான கையாளல் இந்தப்படத்தில் இருக்கிறதுதான். தீவீரவாதம் என்றாலே முஸ்லீம்கள் என்னும் தோற்றத்தை இந்தப்படம் தருகிறதுதான். கமல்ஹாசன் அவர்களுக்கு இப்போது என்று இல்லை, ஹேராம் படத்திலும் ‘இந்துத்துவா’ குறித்த அவருக்கு இருக்கும் தெளிவின்மை தெரியும். குருதிப்புனலிலும் தீவீரவாதம் குறித்த கோளாறான பார்வைகள் வெளிப்படும். அதை அவரிடம் உள்ள குழப்பங்களாகவும், ஒரு சிக்கலானப் பிரச்சினையைப் புரிந்து கொள்வதில்/அணுகுவதில் ஏற்படும் மயக்கங்களாகவுமே உணர வேண்டியிருக்கிறது.

அத்வானியின் ரதயாத்திரையொட்டி நாடு முழுவதும் முஸ்லீம்களுக்கு எதிரான பெரும் பிரச்சாரம் செய்யப்பட்டது. ‘முஸ்லீம்கள் இந்த மண்ணுக்குச் சொந்தமானவர்கள் அல்ல, வந்தேறிகள்’ என்றெல்லாம் இந்துத்துவாவின் பஜனைகள் ஆரம்பித்தன. இதுகுறித்து அப்போது வாய்திறந்து பேசிய ஒரே தமிழ்ச் சினிமாக் கலைஞர் கமல்ஹாசன்தான்.  “அப்படியென்றால் கைபர் போலன் வழியாக வந்தவர்கள் யாராம்” என்று
அவர் எதிர்க்கேள்வி கேட்டது அன்று பத்திரிகைகளால் பரவலாக பேசப்பட்டது. தமிழகத்தில் பலர் வாயடைத்துப் போனார்கள். இது வெறும் செய்தி மட்டுமல்ல. சமூகப்பார்வை கொண்ட ஒரு கலைஞனின் குரல். தன்னை இன்றும் நாத்திகராகவும், பகுத்தறிவுச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவராகவும் அவர் வெளிப்படுத்திக் கொள்ளத் தயங்கியதில்லை. அதையெல்லாம் மறந்துவிட்டு, நாம் அவரை இன்று ‘இந்து பாசிஸ்டு’ என்று அவசரப்பட்டு சொல்லிவிடக் கூடாது.

'சங்கம் எனது ஆன்மா' என்னும் கட்டுரையில் முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இப்படி எழுதினார். "மெக்கா முஸ்லீம்களுக்கு புனிதஸ்தலம்தான். ஆனால் இந்தியா அவர்களுக்கு புனிதத்திலும் புனிதமாக இருக்க வேண்டும். மசூதிக்குச் சென்று நமாஸ் செய்யட்டும். நமக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால், மக்காவையும் இந்தியாவையும் முன்னர் வைத்து அவர்கள் யாரைரேனும் தேர்ந்தெடுக்கச் சொன்னால், அவர்கள் இந்தியாவைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்." இந்த வார்த்தைகள் அன்று பெரிதாக பேசப்பட்டன. முஸ்லீம்கள் எல்லாம் தேசவிரோதிகள் என்று சித்திரம் தீட்ட இந்துத்துவா சக்திகளால் எல்லா இடங்களிலும் சங்கு ஊதப்பட்டன. வாஜ்பாயின் இந்த வாதத்தை அப்படியே திருப்பி, “ஒரு இந்துவுக்கு இந்தியா புனிதத்திலும் புனிதமாக இருக்கவேண்டும். ராமர் பிறந்த இடம் இந்துக்களுக்கு புனிதமாக இருக்கலாம். ஆனால் ஒரு இந்துவின் முன்னால் அயோத்தியா இந்தியாவா என்று கேட்டால் அவர்கள் இந்தியாவைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று இந்திய சமூகம் எழுந்து நின்று  சொல்லவில்லையே! சமூகத்தின் பொதுப்புத்தியில் கேள்விகள் அற்றுப் போயிருக்கிறது. மிக எளிதாக பாசிச சக்திகள் மனிதர்களை உண்மை போலும் நம்ப வைக்கின்றன.

ஆம். இது ஒரு சிக்கலான காலம். வரலாற்றில், அரசியலில் ஒரு தெளிவான வரையறைகளுக்கு வரவிடாதபடிக்கு பொதுமனிதர்களை குழப்பத்தில் நிற்கவைத்திருக்கிற காலம். ‘எல்லை தாண்டிய பயங்கரவாதம்’ என்பது பாசிச சக்திகளால் திரும்ப திரும்ப பேசப்பட்டு, ஊடகங்களால் திரும்பத் திரும்ப ஊதப்பட்டு தோற்ற மயக்கங்களையும், காட்சிப்பிழைகளையும் இந்த நிலப்பரப்பு முழுவதும் நிரப்பி வைத்திருக்கிற காலம். அதிர்ச்சிகளும், பரபரப்புகளும் சூழ, செய்வதறியாது மனிதர்கள் திணறி நிற்கும் காலம். சிந்தனைகளில், செயல்களில் தடுமாற்றங்களை ஏற்படுத்தும் காலம். இதில்தான் பாசிச சக்திகள் மற்றும் ஆதிக்க சக்திகள் ஆதாயம் பெற்றுக்கொண்டு இருக்கின்றன. கமல்ஹாசன் என்னும் கலைஞனும் இந்த சுழலில் அகப்பட்டு நிற்கலாம். அவரை அவருக்கு அடையாளம் காட்டி வெளிக்கொண்டு வருவதுதான் பொறுப்பான செயலாய் இருக்கும். “நீ இப்படித்தான்” என அவரைத் தள்ளிவைப்பது முறையாகுமா?

அரசியலையும், தத்துவங்களையும் விட்டு விட்டு மனிதாபிமானம் மட்டுமே பேசுகிறவர்கள் பிழை செய்யக்கூடும் என்பதற்கு வரலாறு நெடுக பல சாட்சிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் இருக்கும் அற்புத குணங்களை பிறகு காலம் பேசத் தவறியதும் இல்லை. கமல்ஹாசன் என்னும் ஒரு கலைஞனை இந்த இடத்தில் வைத்து யோசிக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். உன்னைப் போல் ஒருவன் படத்தில் இருக்கும் தவறான கற்பிதங்கள், சித்தரிப்புகள் குறித்து அவரிடம் ஆயிரம் கேள்விகள் நாம் கேட்கலாம். கேட்க வேண்டும். எந்த விவாதமும் இன்றி, முன்முடிவுகளுக்கோ அல்லது இறுதி முடிவுகளுக்கோ வரவேண்டாமே. அது யாருக்கு சாதகம் என யோசித்துப் பார்த்தால் எல்லாம் தெளிவாகும். அவரை நம்மவராக பாவித்து, அவர் நம்மோடு சேர்ந்து நிற்பதற்கான இடத்தை எப்போதும் வைத்திருக்க வேண்டும். அவரை எதிரே நிற்கவைத்து இழந்துவிடக் கூடாது. அப்படி ஒரு கலைஞர் அவர்.

சரியோ, தப்போ, ஒரு விவாதம் நடைபெறுவதன் மூலம் சில புரிதல்கள் ஏற்படும். கருத்துக்கள் உருமாற்றம் பெறும், உரமேறும். பேசப்படாத கருத்துக்களும், வெளிப்படுத்தப்படாத சிந்தனைகளும் நல்வினைகளுக்கு தூண்டுபவையாக இருப்பதில்லை. அந்த வகையில் இந்துத்துவா குறித்தும், தீவீரவாதம் குறித்தும் பொதுவெளியில் இப்படியான உரையாடல்களை ஏற்படுத்தியதில் ‘உன்னைப்போல் ஒருவன்’ வெற்றி பெற்றிருக்கிறதே!

*

கருத்துகள்

29 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. //“அப்படியென்றால் கைபர் போலன் வழியாக வந்தவர்கள் யாராம்” //

  காதலா காதலா அப்படின்னு ஒரு படம்.., கமல் பல விஷயங்களைப் புகுத்தி இருப்பார்..,

  பதிலளிநீக்கு
 2. ந‌டுநிலை த‌வ‌றாது எழுதியிருக்கிறீர்க‌ள்.ஏற்று கொள்ள‌ப்ப‌ட‌ வேண்டிய கருத்துகள் !!!

  ஆனால் பல‌ இட‌ங்க‌ளில்,பல தருணங்களில் முஸ்லிம்க‌ள் மீது க‌ட்ட‌விழ்க்க‌ப்ப‌டும் க‌ருத்திய‌ல் வ‌ன்முறையாக‌ட்டும்,காழ்ப்புண‌ர்ச்சிக‌ளால் உமிழப்ப‌டும் அவ‌தூறுக‌ளாக‌ட்டும்..அது எங்கே..யாரிட‌மிருந்து..
  எந்த‌ வ‌டிவ‌த்தில் எந்த‌ அள‌வுகோலில் வ‌ந்தாலும் அது ஒரு ச‌ராச‌ரி இந்திய‌ முஸ்லிம் பிர‌ஜையின்
  மனோநிலையை ப‌த‌ம் பார்த்து விடுகிறது.

  ஹேராம் திரைப்ப‌ட‌த்தில் ஷாருக்கானை நோக்கி "நீங்க‌ள்லாம் பாகிஸ்தான் போங்கோ..ஜின்னா கூட‌"
  என்று ஒரு வ‌ச‌ன‌ம் சொல்வார் க‌ம‌ல்.இது எந்த‌ அள‌வுக்கு இந்திய முஸ்லிம்க‌ளை பாதித்திருக்கும் என‌ க‌ற்ப‌னை செய்து பாருங்க‌ள்.

  என‌வே க‌ம‌லஹாச‌ன் போன்ற‌,நாடே கொண்டாடும் க‌லைஞ‌ர்க‌ள்,த‌ங்க‌ள் ப‌டைப்புக‌ளை ம‌க்க‌ள் முன் வைக்கும் போது,கொஞ்ச‌ம் ச‌முதாய‌ தாக்க‌ங்க‌ள் ப‌ற்றியும் யோசிக்க‌ வேண்டும் என்ப‌து தாழ்மையான‌ எண்ண‌ம்.

  ( அடிப்ப‌டையில் நானுமொரு க‌ம‌ல் ர‌சிக‌ன் !!! )

  பதிலளிநீக்கு
 3. கமல் என்றாலே சர்ச்சை என்று இன்னொரு பெயர் உண்டோ!!!!!!!

  பதிலளிநீக்கு
 4. ///ஹேராம் திரைப்ப‌ட‌த்தில் ஷாருக்கானை நோக்கி "நீங்க‌ள்லாம் பாகிஸ்தான் போங்கோ..ஜின்னா கூட‌"
  என்று ஒரு வ‌ச‌ன‌ம் சொல்வார் க‌ம‌ல்.இது எந்த‌ அள‌வுக்கு இந்திய முஸ்லிம்க‌ளை பாதித்திருக்கும் என‌ க‌ற்ப‌னை செய்து பாருங்க‌ள்.///

  அ.மு.செய்யது...
  மேலே நீங்கள் சொல்வது ஆபாசமான ஒருதலைப் பட்சமான குற்றச்சாட்டு.. அந்த வசனம் வருவதுக்கு முன்னராக அமைந்த காட்சிகள், அந்த வசனம் இடம் பெற்ற சந்தர்ப்பம், அந்த வசனம் பேசிய பாத்திரம், அந்த வசனத்தைத் தொடர்ந்து வரும் காட்சிகள்... இவை எல்லாவற்றையும் மறந்துவிட்டு, அந்த வசனத்தை மட்டும் எடுத்துக்கொண்டு விமர்சித்திருப்பது தவறு நண்பரே. ஏன் அந்த வசனத்தை பாத்திரத்தின் மனோ நிலையாகப் பார்க்காமல் கமலின் மனோ நிலையாகப் பார்க்கிறீர்கள்??? செல்வேந்திரன் சொல்லியிருக்கும் ஜெரிமி பெந்தாமின் கோட்பாட்டுக்குள் அப்படியே பொருந்திப் போகிறீர்கள் நண்பரே நீங்கள்

  பதிலளிநீக்கு
 5. சிக்கலான ஒரு விஷயத்தை கையாள்வதில் உள்ள குழப்பம், கமல்ஹாசன் என்ற மாபெரும் கலைஞனுக்கும் அடி சறுக்கியிருக்கலாம்.அதற்காக அவர் மீது ஒரு குறிப்பிட்ட இன, சமூக முத்திரை குத்துவது தவறு.`உன்னால் முடியும் தம்பி, வறுமையின் நிறம் சிவப்பு போன்ற படங்களில் ஒரு பகுத்தறிவு வாதியாக பல நல்ல விஷயங்களை சொல்லியிருப்பார்.கைபர் போலன்.... இந்த கேள்வியைக் கேட்கவும் ஒரு துணிச்சல் வேண்டும் ( வேற சமுகத்தை சேர்ந்த வேற யாராவது இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தா அதுக்கு வேற முத்திரை குத்தியிருப்பாங்க,ங்கறது வேற விஷயம்.)

  பதிலளிநீக்கு
 6. குமார‌சாமி ஐயா...

  நான் சொன்ன‌து ஒரு சிறு உதார‌ண‌ம் தான்.மேலும் க‌ம‌லை ஒரு இந்து பாசிஸ்டு என்று ஒரேய‌டியாக நான் முத்திரை குத்த‌வும் இல்லை.

  நான் மேலே எழுதிய‌ சில‌ வ‌ரிக‌ளை உங்க‌ளுக்கு மீண்டும் நினைவு கூற‌ விரும்புகிறேன்.

  //க‌ம‌லஹாச‌ன் போன்ற‌,நாடே கொண்டாடும் க‌லைஞ‌ர்க‌ள்,த‌ங்க‌ள் ப‌டைப்புக‌ளை ம‌க்க‌ள் முன் வைக்கும் போது,கொஞ்ச‌ம் ச‌முதாய‌ தாக்க‌ங்க‌ள் ப‌ற்றியும் யோசிக்க‌ வேண்டும் என்ப‌து தாழ்மையான‌ எண்ண‌ம்.
  //

  மேலும் செல்வேந்திர‌னின் ப‌திவு பெரும் வ‌ருத்த‌ம‌ளிக்க‌க்கூடிய‌து.கொஞ்ச‌ம் காட்ட‌மாக‌ சொல்ல‌ வேண்டுமென்றால், வ‌லையுல‌கில் சில‌ இட‌ங்க‌ளில் அன்றாட‌ம் கொட்ட‌ப்ப‌டும் க‌ருத்துக் குப்பைக‌ளில் அதுவும் ஒன்று.

  மாத‌வ‌ராஜ் அவ‌ர்க‌ள் ஜெமோவைப் ப‌ற்றி எழுதிய‌து போல‌ செல்வேந்திர‌ன் குறித்து நான் சொல்ல‌ வேண்டிய‌து "எழுதி எழுதி கீழே செல்கிற‌து கை"

  பதிலளிநீக்கு
 7. மிக நேர்த்தியான பதிவு.

  "நான் ஒரு பதிவர்" என்கிற நமக்கு இருக்கும் பொறுப்பையும் நினைவில் கொள்ள வேண்டும். தனி மனித சாடல்கள் நமக்கு பழக்கப்பட்ட ஒன்றானாலும் பதிவுலகிலும் அது தேவையா என்பதை சிந்திக்க வேண்டும்.

  படைப்பாளியை விமர்சிப்பது தவறான முன்னுதாரணத்தையே வகுக்கும்.
  நன்றி!!

  பதிலளிநீக்கு
 8. அன்பு அண்ணன் மாதவராஜ்..

  நல்ல விஷயம் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி

  பதிவுலகில் மிக நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு திரைப்படம் குறித்து தீவிரமான சர்ச்சை எழுந்திருக்கிறது. கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட பதிவர்கள் விமர்சித்திருக்கிறார்கள். பதிவர்கள் இத்திரைப்படம் குறித்த ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யலாம்.

  பதிலளிநீக்கு
 9. // படைப்பு குறித்த விமர்சனத்திலிருந்து, படைப்பாளி நோக்கிய விமர்சனத்திற்கு தாவி இருக்கிறோம். இந்த இடத்தில் நமக்கு இருக்க வேண்டிய பொறுப்பும், அக்கறையும் நாம் கொண்டிருக்கிறோமா என்பதை கொஞ்சம் நிதானித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக உணர்கிறேன்//
  ஆழமான, நிதானமான பதிவு! இனி விவாதங்கள் தொடர்வதாயிருந்தால் உங்கள் பதிவையே முன்வைக்கலாம்!

  பதிலளிநீக்கு
 10. அட போய், பொழப்பை பருங்கப்பா. ஒருத்தனும் யோக்கியன் கிடையாது, எல்லாம் காசு,புகழ்,பேரு,செல்வம், மது,மாது என எதாது ஒன்னுக்கு அடிமையாகி அதுக்குகாக வேசம் கட்டற மக்கள். இதுல நம்ம யாரையும் நம்பாம நம்ம நட்பு,குடும்பம்,நாடுனு வாழ்க்கை நடத்தறதுதான் சிறந்தது. உன்னை போல் ஒருவன் இந்துவா சொன்னா அல்லது முஸ்ஸிலிம்கள் ஆதரவுனு சொன்னா என்ன கமல் லாபத்துல பங்கா தரப்போறார்.

  பதிலளிநீக்கு
 11. நல்ல அலசல்...

  விமர்சனப்பதிவுகளுக்கு பட்டியலா!! :-)சுட்டிக்கு நன்றி!!

  பதிலளிநீக்கு
 12. /அந்த வகையில் இந்துத்துவா குறித்தும், தீவீரவாதம் குறித்தும் பொதுவெளியில் இப்படியான உரையாடல்களை ஏற்படுத்தியதில் ‘உன்னைப்போல் ஒருவன்’ வெற்றி பெற்றிருக்கிறதே!//

  நச்!

  பதிலளிநீக்கு
 13. கிரேட் சார்...

  இபடிக்கு ஒரு கரப்பான்(பார்ப்பான் இல்லை)

  பதிலளிநீக்கு
 14. So we can expect soon a function feliciating Kamal for UPO, organized by Murpokkul Ezuthalar Sangam. If Kamal makes a pro-Hindutva and anti-muslim film you will support him and argue that he is confused.He may be a great artist to you.Does it mean that you will defend him when he makes an anti-muslim film. What a shame?.
  Why cant you think beyond individuals.Kamal is not a leftist.
  He is a business man in film industry who wants xxx films to be
  permitted and screened in India.

  பதிலளிநீக்கு
 15. நல்ல அலசல்...படம் பார்த்தபொழுது எனக்கு தீவிரவாதப் பிரச்ச்னை தவிர எதுவும் தெரியவில்லை. விமர்சனங்களைப் படிக்கும் பொழுதுதான் இப்படியும் யோசிக்கலாம் என்று புரிகிறது.

  பதிலளிநீக்கு
 16. கமலஹாசனுக்கு நீங்கள் தேவையில்லை. தேவைப்படும்போது
  உங்களில் சிலரைப் பயன்படுத்திக் கொள்வார். ஆனால் நீங்களோ அவர் எதோ குழப்பத்தில் இருப்பதாக அனுமானிக்கிறீர்கள். உங்களை பார்த்து பரிதாபம்தான் ஏற்படுகிறது.

  தேர்தல் அரசியலில்தான் இடதுகளின்
  முட்டாள்த்தனம் பெயர் போனது என்றால் இதிலுமா?.

  பதிலளிநீக்கு
 17. அடிப்படையில், இது a wednesday படத்தை தழுவி எடுக்கப் பட்டது அல்லவா ? அப்புறம், திடீரென கமலஹாசனை இந்து பாசிஸ்ட் என்று எப்படிச் சொல்ல முடியும். தாங்கள் சொன்னது போல், கமலை நம்முடன், வைத்துப் பார்க்க வேண்டும். அவர் எதிர் அணியில் இருக்க வேண்டியவர் அல்ல.

  பதிலளிநீக்கு
 18. அன்பு நன்பர்கள் அனைவருக்கும் நன்றி..

  ஏனென்றால் இப்படி ஒரு விவாதம் இருக்காத என்று நான் எதிர்ப்பார்த்திகொண்டிருந்தேன்...

  (அம்பிகா:சிக்கலான ஒரு விஷயத்தை கையாள்வதில் உள்ள குழப்பம், கமல்ஹாசன் என்ற மாபெரும் கலைஞனுக்கும் அடி சறுக்கியிருக்கலாம்.)

  எந்த இடத்திலும் அவர் குழப்பிப் போக வில்லை என்கிறேன் நான் .ஒவ்வொரு விசயத்தையும் அவர் ஆராய்ந்தால் ஒரு திரைப்படம் எடுப்பதே கடினம் ;

  (/.மு.செய்யது:/க‌ம‌லஹாச‌ன் போன்ற‌,நாடே கொண்டாடும் க‌லைஞ‌ர்க‌ள்,த‌ங்க‌ள் ப‌டைப்புக‌ளை ம‌க்க‌ள் முன் வைக்கும் போது,கொஞ்ச‌ம் ச‌முதாய‌ தாக்க‌ங்க‌ள் ப‌ற்றியும் யோசிக்க‌ வேண்டும் என்ப‌து தாழ்மையான‌ எண்ண‌ம்.)

  செய்யுது நன்பரே யோசிப்பது நல்லதுதான் ; சமுதாய தாக்கங்கள் பற்றி யோசித்து அந்த வசனங்களை தள்ளிவிட்டால் எதிர்மறை கருத்துக்கள் எப்படி வெளியே வரும் ; கூறுங்கள் நன்பரே...

  இந்த மாதிரி விமர்சனங்களையும் இந்த மாதிரி விவாதத்துக்கு உண்டான கருத்துக்களையும் கமல் கட்டாயமாக் யோசித்திருப்பார்;
  இருப்பினும் ஏன் இப்படி ஒரு படம் எடுக்கிறாரர்ன அதுதான் கமல் என்ற‌ கலைஞனுக்கு அழகு என்று நினைக்கிறேன்

  பதிலளிநீக்கு
 19. மிகச்சிறப்பாக.
  மிக மிக நேர்மையாக எழுதியிருக்கிறீர்கள்.
  உங்கள் உயரம்போலவே பதிவும் மிளிர்கிறது!

  பதிலளிநீக்கு
 20. சுரேஷ்!
  சொல்லுங்கெலேன். தெரிந்து கொள்கிறேன்.

  அ.மு.செய்யது!
  உங்கள் உணர்வுகளை நான் புரிந்து கொள்கிறேன். மற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.அப்புறம் செல்வேந்திரனின் பதிவு குறித்து எனக்கும் விமர்சனங்கள் உண்டு. அதை குப்பை என ஒதுக்காமல், சுட்டிக்காட்ட வேண்டியதும் நாம் தானே தோழரே!


  தியாவின் பேனா!
  சர்ச்சை சில புரிதல்களையும், தெளிவையும் கொண்டு வந்தால் சரி.

  வால்பையன்!
  நன்றி.


  கிருத்திகன் குமாரசாமி!
  நாம் பெரும்பாலும் வார்த்தைகளை மட்டுமே பார்க்கிறோம். அடிபட்டவர்களும்மும், அவமானப்பட்டவர்களுக்கும் அது வேறு அர்த்தங்களைத் தரும். அதைத்தான் செய்யது சொல்கிறார். அப்புறம், செல்வேந்திரனின் ஜெரிமி கோட்பாடு, அதன் உள்ளார்ந்த புரிதலில் பாசிச சிந்தனை கொண்டது. ஜனநாயகத்தன்மையற்றது. நான் பெரும்பானமைக்கு உகந்ததாக இருக்கும் ஜனநாயகமும் பாசிச சிந்தனை கொண்டதாகவே இருக்கும் எனச் சொல்கிறேன்.

  பதிலளிநீக்கு
 21. அம்பிகா!
  இங்கு அதுதான் நடக்கிறது!


  செந்தில்வேலன!
  நன்றி.


  சரவணக்குமார்!
  நல்ல விஷயத்தை முன்மொழிந்திருக்கிறீர்கள்.


  வேல்ஜி!
  மிக்க நன்றி.


  பித்தன்!
  எல்லாம் கடந்தவர் தான் தாங்கள்.


  யாத்ரீகன்!
  நன்றி.  சந்தனமுல்லை!
  நன்றி.


  ஜோ!
  நன்றி.


  தண்டோரா!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 22. ரவிக்குமார்!
  ஏன் தோழர். வருத்தம். சொல்லுங்களேன்.

  அமுதா!
  ப்லர் எப்படியெல்லாமோ யோசித்ததால்தான் நான் இப்படி யோசிக்கிறேன்.


  ஒப்பாரி!
  wednesday படத்தை ஏன் கமல் தேர்வு செய்தார், அதி எப்படியான மாற்ரங்கலை செய்திருக்கிரார் என்பதிலிருந்து விவாதங்கள் வந்து கொண்டிருக்கின்றன.


  ராம் கோபி!
  ஏன் இப்படியான படங்கள் எடுக்கிறார் என்பதில்தான் சிக்கலே.


  சுரேகா!
  நன்றி.


  அனானிகளே!
  தயவு செய்து உங்கள் சொந்தப் பெயரிலேயே வாருங்கள். ஒரு பாதகமுமில்லை. இதிலும் முகமூடி எதற்கு.

  கமல் இடதுசாரியா, கலைஞரா, தொழில் செய்பவரா என்பது இருக்கட்டும். எல்லாருக்கும் ஒரு தர்மம் இருக்கிறது. அது குறித்துத்தான் விவாதம்.

  தேவையில்லாமல் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை இழுக்க வேண்டாம்.

  கமல் நம்மைப் பயன் படுத்திக்கொண்டால் அவருக்கு மட்டுமே சாதகம். நாம் அவரை பயன்படுத்திக்கொண்டால் சமூகத்துக்கே சாதகம்.

  பதிலளிநீக்கு
 23. கமல் நம்மைப் பயன் படுத்திக்கொண்டால் அவருக்கு மட்டுமே சாதகம். நாம் அவரை பயன்படுத்திக்கொண்டால் சமூகத்துக்கே சாதகம்.


  :)

  பதிலளிநீக்கு
 24. அன்பு மாதவ் நான் இரண்டு படங்களையும் பார்த்தேன் கமல் ஹிந்திப்படத்தை தழுவிதான் எடுத்திருக்கிறார் ஆனால் ஹிந்தி படத்தில் இருக்கும் விறுவிறுப்பு இதில் கொஞ்சம் குறைவு தான்.
  மற்றப்படி இதை அரசியலாக்குவது தவறு என்றே படுகிறது.

  பதிலளிநீக்கு
 25. i criticize periyar!

  :-))))


  மஞ்சூர் ராஜா!
  அரசியலாக்குவது சரியல்ல எனச் சொல்ல மாட்டேன். ஆனால் அது சரியான திசையில், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 26. A clear and superb review.
  Your words are have a special clarity.

  thanks.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!