சண்முகவள்ளியக்கா…

ஊரில், அருகே இருந்த வீடுகளிலெல்லாம் பெண்கள்தான். கொலுசுகள், வளையல்களின் சத்தங்கள, ஜன்னலருகே இருந்த கிணற்றில் தண்ணீர் இறைக்கும்போது பேச்சுக்கள் என எங்கும் அவர்கள் நிறைந்திருந்தார்கள்.  சாரதா, பத்மா, ஜெயந்தி ஆகியோர்தான் என் வயதொத்தவர்கள். அப்புறம் புனிதாக்கா, ஜெயாக்கா, வேல்கனிக்கா, சண்முகவள்ளியக்கா, கனியக்கா, கல்யாணிக்கா என எத்தனை அக்காக்கள். மார்கழிக் காலைகளில் கால்ச்சட்டைப் போட்டுக்கொண்டு நானும், தம்பியும் குளித்து பஜனைக் கோயிலுக்குச் செல்லும்போது இவர்கள் அனைவரும் தாவணிகளோடு  வீடுகளின் வாசல்களில் கோலங்கள் போட்டுக்கொண்டு இருப்பார்கள். வீடுகளின் உள்ளிருந்து நாற்பது வாட்ஸ் பல்புகளின் மங்கிய வெளிச்சம் வெளியே லேசாய் தவழ்ந்திருக்க,  குளிர்ந்த இருட்டில் நிழல் உருவங்களாய் குனிந்து அவர்கள் நின்றிருந்த காட்சி ஒரு ஓவியம் போல் இப்போதும் என்னிடம் இருக்கிறது.

 

சென்னையிலிருந்து நாங்கள் வந்திருந்ததால்,  பட்டணத்துக்காரங்க என்று பேரும், மதிப்பும் எங்கள் குடும்பத்துக்கு கொடுத்து இருந்தார்கள். நாங்கள் நான்கு அண்ணன் தம்பிகளுக்கு இருந்த ஒரே தங்கை அம்பிகாவுக்கு அவர்களிடம்  பெரும் செல்லம். எங்களுக்கும்தான். பாசமும், பிரியமும் தெருவில் வற்றாமல் ஓடிக்கொண்டு இருந்தது. அனேக சமயங்களில் அவர்களோடுதான் எனக்கும் தம்பிக்கும் நேரங்கள் கழிந்தன. மாதுப்பூ, குட்டிப்பூ என அவர்கள் குரல்களில் பூக்கள் மலர்ந்து கொண்டேயிருந்தன. பெண்களின் உலகம் எவ்வளவு அற்புதமானது, அழகானது, புதிரானது என்பதையெல்லாம் அவர்கள்தான் காட்டியிருந்தார்கள். ஒரு நாவலுக்கான பெருவெளி கொண்ட காலம்தான் அது.

 

பண்டிகை, விசேஷம் என்றால் வீடு சுற்றி சிரிப்புச் சத்தங்களும், பூக்களின் வாசனையும் இறைந்திருக்கும். பொங்கலுக்கு பெரிய வடம் கட்டி, எந்நேரமும் அந்த பனைமரத்தண்டுகள் அசைந்து கொண்டேயிருக்கும். அந்த வடத்தில் என்னை உட்கார வைத்து கைவலிக்க அந்த அக்காக்கள் எவ்வளவோ ஊஞ்சலாட்டியிருக்கிறார்கள். சிவராத்திரி வந்துவிட்டாலும் அப்படித்தான். அவர்களோடு உட்கார்ந்து ‘குலை குலையா முந்திரிக்கா, நரியே நரியே சுத்தி வா’  விளையாடுவேன். இருட்டியபிறகு, பெண்கள் எல்லாம் ஒன்றுபோல ஒரு வீட்டுக்குள் செல்வார்கள். நானும் அவர்களோடு வருவேன் என்று சொல்ல, “ஜோதியக்கா” என்று அம்மாவை அழைப்பார்கள். அம்மா எதாவது காரணம் சொல்லி,  ”ச்சீ போடா” என்று சிரித்துக்கொண்டே தட்டிக் கழித்துவிட்டு,  அவர்களோடு சென்று விடுவார்கள். எவ்வளவு நெருக்கமாக எல்லோரோடும் இருந்தாலும், பெண்களுக்கென்று தனி இடமும், நேரமும் இருப்பது விசித்திரமாகப் பட்டது.

 

அருகிலிருந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்துவிட்டு,  டிபன் பாக்ஸோடு சைக்கிளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கச் சென்ற பிறகு அண்ணன்களின் லுங்கியை நானும் ஒருநாள் எடுத்துக் கட்டிக்கொண்டேன். அன்றைக்கு அந்த அக்காக்கள் அனைவருமே ஒருவருக்கொருவர் என்னைக் காட்டிச் சிரித்தார்கள். “மாது பெரிய மனுஷனாய்ட்டான்” என்று சொல்லி கூச்சப்பட வைத்தார்கள். நண்பர்கள், வட்டங்கள் எல்லாம் மாற, அக்காக்களோடு இருந்த நெருக்கம் எல்லாம் மெல்ல இழந்தேன். சண்முகவள்ளியக்கா மட்டும் எப்போதும் போல இருந்தார்கள். அவர்களில் குரலில் “மாதுப்பூ”  அப்படியே வாடாமல் இருந்தது. நாளாக நாளாக அக்காக்களும்  திருமணம் ஆகி வேறு வேறு ஊர்களுக்குச் சென்று கொண்டிருந்தார்கள்.

 

சண்முகவள்ளியக்காவோடு கோலம் போட்டுக்கொண்டு இருந்தவர்கள் ஒவ்வொருவராய் குறைந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அப்பா கிடையாது.  எப்போதும் நீலச்சேலை உடுத்திருக்கும் அம்மா நாலைந்து கிலோ மீட்டர் தள்ளி நாகன்னியாபுரம்  சென்று தினமும் நெல்மூடை சுமந்து வருவார்கள். நெல் அவித்து, தெருவில் காயப்போட்டு அக்கா அதன் அருகில் உட்கார்ந்து,  ஆடு, காகம், கோழிகளை விரட்டிக்கொண்டு இருப்பார்கள். நேரம் கிடைக்கும்போது நானும் அருகில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்பேன். கருப்பாகவும், கொஞ்சம் அம்மைத்தழும்புகளோடும் அக்காவின் முகம் அழகாக இருக்கும். ரொம்ப நாள் கழித்து அவர்களுக்கும் திருமணம் ஆகி சென்னைக்குச் சென்றார்கள். அவர்களது கணவர் அங்கு ஒரு மளிகைக்கடையில் இருப்பதாகச் சொன்னார்கள். ஊரைவிட்டு நானும் வெளியேறிவிட்ட பிறகு அக்கா பற்றிய செய்திகள் எதுவும் தெரியவில்லை. ஊரிலேயே இருக்கும் என் தங்கை அம்பிகா எதாவது செய்திகளை எப்போதாவது சொல்வாள். காலங்கள் கனவு போல வந்து மறையும்.

 

சண்முகவள்ளியக்காவை திரும்ப நான் பார்த்தது என் தம்பியின் திருமணத்தின் போதுதான். குழந்தைகளோடு வந்திருந்தார்கள். என்னைப் பார்த்ததும் கண்கள், முகமெல்லாம் சிரிக்க “மாது” என அருகில் வந்து நின்றார்கள். அதில் பூ ஒளிந்திருந்தது. அம்முவைப் பார்த்து “இது ஒம் பெஞ்சாதியா” என்று ஆசையாய்ப் பார்த்தார்கள். “அக்கா ரொம்ப கஷ்டப்படுறாங்க... அவங்க வீட்டுக்காரருக்கு சென்னையில் முடியலயாம். ஊருக்கு வந்துட்டாங்க..” என்று பிறகு அம்பிகா சொன்னாள். சங்கடமாயிருந்தது.

 

அதற்குப் பிறகு சண்முகவள்ளியக்காவைப் பார்த்தது மூன்று வருடங்களுக்கு முன்புதான். அம்மாவை மாதமொருமுறை திருநெல்வேலியில் உள்ள கிட்னி செண்டருக்கு அழைத்துச் செல்வேன். அப்படியொரு நாளில், அக்காவும் தனது  பையனோடு டாக்டருக்காக காத்து உட்கார்ந்திருந்தார்கள். அவனுக்கு பதினைந்து, பதினாறு வயதிருக்கும். அக்கா இளைத்துப் போய், வயதாகி வாடியிருந்தார்கள். “என்னக்கா...” என்று அருகில் செறேன். “தம்பிக்கு சிறுநீரகக் கோளாறு” என்றார்கள். எனக்கு எதுவும் பேச முடியவில்லை. அம்மாவின் கைகளைப் பிடித்தபடி பேசிக்கொண்டு இருந்தார்கள். வாழ்க்கை இந்த அக்காவை எவ்வளவு அலைக்கழிக்கிறது என்று கனத்துப் போனேன். அம்முவை, குழந்தைகளை எல்லாம் முகம் மலர்ந்து விசாரித்துக் கொண்டு இருந்தார்கள். “அக்கா, ஒங்களுக்கு இப்படி இருக்க எப்படி முடிகிறது?”  என்று வெறித்தபடி நின்றிருந்தேன். மதியம் பிடிவாதமாய் அவர்கள் மறுக்க, மறுக்க அருகிலொரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்றேன். அவர்களுக்கு இன்னும் இரண்டு மகள்கள் இருப்பதும், அதில் ஒருத்திக்கு பெயர் பாரதி என்றதும் ஆச்சரியமாக இருந்தது.

 

ஆஸ்பத்திரியிலிருந்து விடைபெறும்போது,  “ஊருக்கு வந்தா வீட்டுக்கு வா... மாது” என்றார்கள். சரியக்கா என்று கிளம்பும்போது என்ன தோன்றியது எனத் தெரியவில்லை. சட்டெனக் குழந்தையைக் கையால் தொட்டு முத்தம் கொடுப்பது போல அக்காவின் கன்னத்தை செல்லமாய் தொட்டு ”வர்றேன்” என்றேன். எதிர்பார்க்கவில்லையென்றாலும்,  கண்கள் கலங்க அக்கா நின்றார்கள். முகம் தெரியாத இவ்வளவு பெரிய ஆள் தன் அம்மாவை கொஞ்சுகிறானே என்பது போல அக்காவின் மகன் என்னைப் பார்த்தது தெரிந்தது. உறுத்தியது.

 

அவனுக்கு என்ன தெரியும். அவன் அம்மாவின் அழகான, கனவுகள் பூத்த,  கொலுசுச்சத்தங்களோடு நிறைந்த உலகத்தை அவன் பார்த்திருக்கிறானா?  நான் பார்த்திருக்கிறேன். குலை குலையாய் முந்திரிக்கா காய்த்திருந்தது அவனுக்குத் தெரியுமா?  எனக்குத் தெரியும்.   நான் சொல்ல நினைத்தை சண்முகவள்ளியக்காவிடம் சொல்லிவிட்டது போல இருந்தது எனக்கு.

 

*

கருத்துகள்

28 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. மாதவமே, படித்தேன், நெகிழ்ந்தேன்.

  பதிலளிநீக்கு
 2. நெகிழ்ச்சியான பதிவு. ஒரு சந்தேகம்.. இந்த அக்கா வின் மகள் பாரதிக்குத் தானே நீங்கள் உங்கள் வங்கியில் வேலை வாங்கிக் கொடுத்தீர்கள்?

  பதிலளிநீக்கு
 3. நண்பரே,
  வீடியோ பதிவுகள் கருத்துக்களை எளிய வகையில் வெளிப்படுத்த உதவுகிறன. நேரமும் குறைவாகவே தேவைப்படும். கருவிகள் கீழ் காணும் முகவரியில் உள்ளன. http://www.tamilscience.co.cc/2009/09/blog-post.html

  நேரமும் விருப்பமும் உங்களுக்கு இருப்பின் உங்களுடைய வீடியோ இடுகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  பதிலளிநீக்கு
 4. ஜெரி ஈசானந்தா!
  மிக்க நன்றி.

  தீபா!
  ஆமாம். தற்காலிக ஊழியராக ஆறுமுகனேரிக் கிளையில் பணிபுரிய பரிந்துரைத்தேன்.

  சுரேஷ்!
  நன்றி.


  மண்குதிரை!
  நன்றி.


  சபாரத்தினம்!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 5. அண்ணா, அக்கா இன்னும் அப்படியே தான் இருக்கிறார்கள். அதே சிரிப்பு, பாசம் எதுவும் மாற வில்லை

  பதிலளிநீக்கு
 6. அனானியாக வந்திருக்கும் என் அன்புத்தங்கை அம்பிகா!

  மிக்க நன்றி. சந்தோஷம். அக்காவுக்கு இந்தப் பதிவை முடிந்தால் காண்பி.அடுத்து ஒரு வலைப்பக்கம் ஆரம்ப்த்து நீயும் எழுது. உன் போல் வாசிப்பும், அனுபவமும் உள்ளவர்கள் எழுத ஆரம்பித்தால் நான் பெரும் மகிழ்ச்சியடைவேன்.

  பதிலளிநீக்கு
 7. பலமுறை வாய்மொழியாகக் கேட்டாலும்
  இந்த நெகிழ்வான நிகழ்வு,
  பதிவில் மிக ஆழமாகப்பதிகிறது. சம்மூள்ளிக்கா.
  எல்லோர் வாழ்விலும் அதோ ஒரு பெயரில்.

  பதிலளிநீக்கு
 8. அண்ணா, அக்கா இன்னும் மாறவே இல்லை.அதே சிரிப்பு. பாசம்.இன்னும் மார்கழி மாத விடியற்காலை கோலம், சிவராத்திரி விரதம் எல்லாம் இருக்கிற்து. ஆனால் இள்ம்பருவதின் வெகுளீத்தனமான விளையாட்டும்,கலகலப்பும் இல்லை.சிவராத்திரியன்று இரவு அக்கா கோயிலில், நான் தனியாக டிவிஅல்லது கம்ப்யுட்டர் முன்னால்..... அக்காவை அழைத்த்து வன்து பதிவை படிக்க சொல்லவேண்டும்-அம்பிகா

  பதிலளிநீக்கு
 9. பிரதீப!
  நன்றி.


  காமராஜ்!
  நன்றி தோழா!


  அம்பிகா!
  ம்.... நன்றி.  துபாய் ராஜா!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 10. நல்ல அனுபவ பதிவு. உங்களோடு நாங்களும் வாசல் கோலங்களையும், மார்கழி காலையையும் கடந்தோம். நன்றி.

  பதிலளிநீக்கு
 11. anna! iam really moved.i have tears coz u have turned my memories too.really superb...

  பதிலளிநீக்கு
 12. நண்பரே,

  பெண்களின் உலகம் தனித்துவமானது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

  எனது மூத்த சகோதரிகளிடமும், அவர்களின் நண்பிகளிடமும் நல்ல செல்லம் எனக்கு இருந்தது.

  இவ்வாறு நல்ல அனுபவங்களை பெற்றவர்கள் பெண்களின் மேல் பிற் காலங்களில் உயரிய அபிப்ராயம் பெறுவார்கள். ஆனால் நம் பிள்ளகளுக்கு இவ்வாறு நல்ல சூழல் கிடைக்குமா என தெரியவில்லை :(

  நன்றி,
  சபரிநாதன்.

  பதிலளிநீக்கு
 13. அண்ணா, அருமையாய் இருக்கிறது

  பதிலளிநீக்கு
 14. அந்த நாள்..... ஞாபகம்.... நெஞ்சிலே...... வந்ததே....
  நண்பனே...நண்பனே....

  இந்த நாள்.... அன்று போல்.... இன்பமாய்.....இல்லையே.....அது ஏன்.....ஏன்.....நண்பனே....

  என்ற வரிகள் நினைவிற்கு வருகின்றன.


  "பல்வேறு மனிதர்களோடு பழகினோம். பலவற்றைப் பேசினோம். இன்பமாய், இயல்பாய், இருந்தோம்".

  வாழ்வின் அற்புத நிமிடங்களை அசை போட்டு, பார்ப்பது ஒரு இனிமையான அனுபவம். அது கொடுக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை.

  இயந்திர வாழ்க்கையில், இறுகிப்போயிருக்கும், நமக்கெல்லாம்
  இவைதான் புத்துணர்வு மருந்துகள்

  வாழ்த்துக்கள்

  அன்புடன்
  ஆரூரன்.

  பதிலளிநீக்கு
 15. அருமையான பதிவு.பழசை எல்லாம் ஞாபக படுத்துகிற பதிவு.

  பதிலளிநீக்கு
 16. கடைசி பத்தி மனதை பிழிந்து விட்டது நண்பரே !!!!

  இரண்டு மூன்று முறை படித்து விட்டேன்.

  பதிலளிநீக்கு
 17. மிகவும் நெகிழ்வான இடுகை! இப்படி மனிதர்கள் மேல் பாசமாக இருக்கிறவர்கள் ஊரில்தான் இருக்கிறார்கள்! அந்த அக்காவிற்கு அன்பும் வாழ்த்துகளும்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 18. திருமலை!
  அண்டோ!
  சபரிநாதன்!
  அருண்!
  அமங்களூர் சிவா!
  ஆரூரன் விசுவநாதன்!
  பானு!
  செய்யது!
  சந்தனமுல்லை!

  அனைவருக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 19. இது போன்ற மனிதர்களைப் பற்றி பற்றி பேச பேச கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

  படித்து முடிக்க மனசே வரவில்லை.

  நெகிழ்வான இடுகை.

  பதிலளிநீக்கு
 20. மனசின் சகல அறைகளிலும் நிரம்பி இருக்கிறீர்கள் மாதவன்.வேறு என்ன சொல்வது..

  பதிலளிநீக்கு
 21. pengal manathai purindhu konda ungalin indha gunam.......... vazhga nanbarae

  பதிலளிநீக்கு
 22. அன்பு மாதவராஜ்,

  இதுபோல் அக்காக்கள் நிறைய பேருக்கு வாய்த்திருக்கிறது. பெயர் தான் மாறியிருக்கும், சில சமயம் அதே பெயரில் கூட. பொதுவாகவே தென்மாவட்டங்களில் உள்ள அக்காக்களுக்கு பெயர்களும் ஒரே மாதிரி தான் இருக்கும், சந்திராக்கா, சரோஜாக்கா, சாந்திஅக்கா, பிரேமாக்கா, ரேனுகாக்கா என்று. ரொம்ப இயல்பா, அழகா வந்திருந்தது, உங்கள் எழுத்து. மனசெல்லாம் குளிர்ந்து ஒரு மழைக்கால காரை வீடு மாதிரி குளுந்து போச்சு. வண்ணதாசன், வண்ணநிலவன் அவர்களின் சிறுகதைகளில் கூட இது போல அக்காக்கள் வருவது உண்டு. நானும் வண்ணநிலவன் படித்த பிறகு எனக்கு பிடித்த அக்காவை பற்றி எழுதியிருந்தேன், இதை படித்தபோது மறு அகழ்வாய் இருந்தது எனக்கு.

  நன்றி,
  ராகவன்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!