பொய்யாய்... பழங்கதையாய்..

 

திரும்பத் திரும்ப லெட்டர் போட்ட பிறகு இந்த வருஷம் ராஜவேலு அம்மன் கொடைக்கு வந்திருக்கிறான். பலகாரம், பழங்கள் என்று வீட்டில் அங்கங்கு. சந்திரா நாளைக்கு ஐந்து தடவையாவது முகம் கழுவி அண்ணன் அவளுக்கு வாங்கி வந்த கோகுல் சாண்டல் பவுடரைப் போட்டு கண்ணாடியில் சிரித்துக் கொள்கிறாள். வாய்க்காங்கரைமுத்து அவ்வப்போது அடுப்பங்கரைப் பக்கம் போய் “ராஜவேலு சாப்பிட்டானா”, “ராஜவேலு எத்தன நாள் இருப்பான்” என விசாரித்துக் கொள்கிறார். இருமிக்கொண்டே அச்சு முறுக்கு சுட்டுக்கொண்டிருந்த சொர்ணத்திற்கு தொண்ட அடைக்க, கண்ணில் நீராய்ப் பெருக்கெடுக்கிறது. இரண்டு நாளில் திரும்பவும் மகன்காரன் மெட்ராஸ் போகப் போகிறான்.

 

ராஜவேலு இந்த நாலைஞ்சு நாட்களில் வாய்க்காலின் குளிர்ந்த நீரில் மல்லாக்க கண்கள் கூச வானம் பார்த்து மிதந்தான். பெரியப்பா வீட்டுக்குப் போய் ஆச்சியிடம் ஊர்க்கதைகள் கேட்டான். காற்றில் மிதந்துவரும் பனங்கருப்பட்டி வாசனையில் ஊரையே உள்வாங்கினான். ராத்திரி டியூப்லைட் வரிசையாய்க் கட்டி வெளிச்சம் பரவிய தெருக்களில் நடந்து அழகக்காள் வீட்டுத் திண்ணையில் ஜெகஜோதியாய் உட்கார்ந்திருந்த சின்னத்தங்கத்தை நெஞ்சு படபடக்கப் பார்த்தான்.  தங்கப்பாண்டியோடும், குமாரோடும் பட்டாணிக்காரர் வயலுக்குப் போய் பம்ப்செட் பக்கத்தில் அரைநெல்லி, பப்பாளி, நார்த்தங்காய், மரங்களுக்கு அடியில் குளிர்ந்த நிழலில் உட்கார்ந்து வில்ஸ் குடித்தான். அவர்கள்தான் நிறையப் பேசினார்கள். இவன் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தான். இவனுக்குள் என்னதான் இருக்கிறது என்பதை அறிய முடியாமல் தாங்கள் இவனைவிட சிறியவர்களாகி விட்டதைப் போல உணர்ந்தார்கள்.

 

இரண்டு வருஷத்துக்கு முன்னால் ஊரில் சுற்றித் திரிந்த ராஜவேலு இவன் இல்லை. குழந்தைத்தனமான முகம். குறுகுறுவென்றிருப்பான். சேட்டைகள் தாங்க முடியாது. டீச்சர் சத்தம் போடும்போது லேசாய் பயப்பட்டு... மெதுவாய் முகம் மலர்ந்து... அப்பாவியாய் விழிப்பான். கண்கள் சிரிக்கும். டீச்சருக்கும் சிரிப்பு வந்துவிடும். சின்னத்தங்கத்தின் முடியை நேரம் கிடைக்கும் போதெல்லாம் பின்னாலிருந்து இழுப்பான். ஒருநாள் வலி தாங்காமல் அழ, ஹெட்மாஸ்டர் இவன் காலுக்கு கீழே பிரம்பால் வீசித்தள்ளிவிட்டார். ஒரு பொட்டு கண்ணீர்க்கூட வரவில்லை. அடுத்தநாள் சின்னத்தங்கத்தை பார்க்கும் போது “அழுவணி” என்றான். எல்லாமே விளையாட்டுத்தான் இவனுக்கு. சொர்ணம் ‘வாழ்க்க முழுசும் எம்புள்ள இப்படியே கவல இல்லாம இருக்கணும்’ என்று மனசுக்குள் நினைப்பாள். வாய்க்காங்கரைமுத்து பெருமூச்சு விடுவார்.

 

மம்பட்டி சுமந்து பட்டாணிக்காரர் தோட்டத்து வாழைக்கு தண்ணீர் பாய்ச்சும் ராத்திரிகளில் பீடிப்புகை ஊதி ராஜவேலுவைப் பற்றி கனவுகள் நிறைய கண்டிருந்தார் அவர். லோடு ஏற்றிய மாட்டு வண்டியில் உட்கார்ந்து கரடுமுரடான பாதைகளில் இவனை நினைத்து கண்கள் மின்ன வாழ்க்கையைச் சுமந்திருக்கிறார். ராஜவேலு சிரிக்கும் போதெல்லாம் அவருக்குள் மாடுகளின் மணிச்சத்தங்கள்தான் நிறையும். ஊரின் எல்லார் வீட்டுக்குள்ளும் அவன் பாட்டுக்கு போய் வருவான். போன வருசம் இறந்துபோன வேலாச்சிக்கு இவன் கையைப் பிடித்துக்கொண்டு “ராசா..” என குரல் தழைய கூப்பிடுவதில் சந்தோஷமுண்டு. எல்லாம் பொய்யாய்ப் போனது. ப்ளஸ் டூ பரிட்சையில் இங்கிலீஷில் பெயிலானான்.

 

மணிச்சத்தங்கள் தீராத சோகத்தோடு ஒலித்தன அன்று இரவு. ராஜவேலு பக்டோன் அடித்து, வாயில் நுரையோடு... ஒன்றுக்குப் போய்.... வெளியேயும் போய்... சந்தியம்மன் கோயில் திண்ணையில் கிடந்தான். அந்தப்பக்கம் வந்த தாயம்மக்காள் பார்த்து “ஏ... பாவி! இப்படி பண்ணிட்டியே..” என ஈரக்குலை நடுங்க, தொண்டை கிழிய குரல் எழுப்பின போது ஊர் அதிர்ந்தது. அந்த இரவை இப்போது நினைத்தாலும் சொர்ணம் நடுங்கிப் போவாள்.

 

மூன்று நாளாய் மூக்கு, வாய், மூத்திரம் போக என்று உடம்பு பூரா டியூபைச் சொருகி ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரியில் வைத்திருந்தார்கள். சாப்பிடாமல் கொள்ளாமல் பக்கத்தில் சொர்ணம் பைத்தியம் போல உட்கார்ந்திருந்தாள். இவன் கண்விழித்துப் பார்க்கிற சமயத்தில் “கண்ணா! தைரியமா இரும்மா... தைரியமா இரும்மா...” என்று தன்னை தைரியப்படுத்திக் கொண்டாள். கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரியின் குமட்டும் மருந்து நெடி, அழுக்கு மக்கிய படுக்கைகள், அசுத்தங்கள், அங்குமிங்கும் ஓடுகிற பெருச்சாளிகள் எல்லாவற்றையும் அந்த பெரும் சோகத்தால்தான் தாங்க முடிந்தது. மாடுகளையும், வண்டியையும் விற்றுத்தான் இவன் உயிர் மீட்கப்பட்டது. மாடுகளைத் தொடர்ந்து கட்டியதால் வளவுப்பக்கம் பூவரச மரத்தில் சாசுவதமாகிப்போன கயிற்றுத்தடங்கள் மட்டுமே மிச்சம்.

 

ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்தவனுக்கு, வாசலைத் தாண்டி கால் வைக்கவே ஒருமாதிரியிருந்தது. சகலமும் கூசியது. ஏன் சாகாமல் பிழைத்தோம் என்றிருந்தது. சாமி கும்பிட்டு ஏதோ முணுமுணுத்தபடி அம்மா இவன் நெற்றியில் இட்ட விபூதியில் உயிர் கரைந்த பாசமிருந்தது. திரும்பவும் இவன் பிள்ளையாய் நடமாடுவதில் சொர்ணத்திற்கு பெரும் நிம்மதி. வற்றிப்போன வாய்க்காலின் கோடை வெறுமை இவனிடமிருந்தது. கரையோரத்து மாமரங்கள் உயிரற்றச் சலனங்களாக இலைகளை உதிர்த்துக்கொண்டிருந்தன.

 

தங்கப்பாண்டியும், குமாருமே கொஞ்சம் ஆறுதல். தினமும் சாயங்காலம் வீட்டுக்கு வருவார்கள். காலேஜ் சம்பந்தமாய் அவர்கள் பேசும்போது சுருக்கென்றிருக்கும். ஒருநாள் ‘நைட்ஷோ’ போவமா என்றார்கள். வாய்க்காங்கரைமுத்துவும் ஒன்றும் சொல்லவில்லை. கனவுகள் நீர்த்த மௌனம் அவருக்கும் மகனுக்கும் இடையில் உருவாகியிருந்தது.  தியேட்டரில் தங்கப்பாண்டி, “இங்கிலீஷ் எழுதி பாஸ் பண்ணு” என்றான். தலையாட்டினான். நிலா வெளிச்சத்தில், பனைமரங்களின் சலசலப்புக்கு நடுவே தார் ரோட்டில் சைக்கிளில் வரும்போது அமைதியாய் இருந்தான். ஊர் நெருங்கும் சமயத்தில் “சின்னத்தங்கம் எப்படியிருக்கா” என்றான். “காலேஜ்க்குப் போறா..” என்றார்கள்.

 

அடுத்தநாள் அவர்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் மெட்ராஸ் புறப்பட்டு விட்டான். சாயங்காலம் நண்பர்கள் அவன் வீட்டுக்குப் போனபோது வாய்க்காங்கரைமுத்து “தாம்பரத்துல ஒரு கடைக்குப் போயிட்டான்... பொறுப்பு வரட்டும்” என்றார்.

 

முழுசாய் இரண்டு வருஷம் கழித்து இப்போதுதான் வந்திருக்கிறான். மீசை அடர்த்தியாகி, கொஞ்சம் தடித்து, கடினமானவனாய் தெரிந்தான். கூடவே இருந்தாலும் எதிலும் ஒட்டாமல் அப்படி ராஜவேலு இருந்தது குமாருக்கு பிடிக்கவில்லை. எத்தனை அம்மங்கொடைகள் இவனோடு ஜாலியாய் கழிந்திருக்கிறது என குமார் நினைத்துக்கொண்டான். சாமி மஞ்சள் குளித்ததிலிருந்து ஆத்துக்குப் போய், திரும்பி வந்து ஊருக்குள் வீடுவீடாய் சாமியாடிகளோடு போனது.... பேப்பர்க்காரர் வீட்டுக்கு முன்னால் பச்சா விளையாடியது... குசுகுசுவென பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் கொலுசுச்சத்தங்களோடு குமரிகள் தாண்டிப்போன பிறகும் கம்மென்ற நிறையும் பூவாசம்.... ஒதுங்கிப் போய் எங்கே  இருட்டுக்குள்ளிருந்து சிகரெட் பிடித்தாலும் கேட்டுக்கொண்டேயிருக்கிற வில்லடிச்சத்தம்.... துக்கமில்லாமல் விடிய விடிய கிடப்பதற்கு எவ்வளவோ அப்போது இருந்தது.

 

கடைசிக்கு முந்தின நாள் கும்ப விளையாட்டின் போது ராஜவேலுவுக்கு சின்னத்தங்கத்தை கூட்டத்தில் நிறையப் பார்க்க முடிந்தது. பட்டுச்சேலை கட்டி பெரியவளாய்த் தெரிந்தாள். பார்த்துக்கொண்டே இருந்தான். அவளும் இவனைச் சிலநேரம் பார்த்தாள். விடியாத மார்கழிக் காலைகளில் பஜனைக்கோயிலில் ஈரம் சொட்டும் கூந்தலோடு வந்து நின்று “ஹரஹர நமப் பார்வதிப் பதயே...” இழுத்து குளிருக்கு அழகு சேர்த்த சிறுமி ஞாபகத்துக்கு வந்தாள்.

 

சட்டென்று வீட்டுக்குப் புறப்பட்டான். “என்னடா” என்ற குமாருக்கு “இதோ வர்றேன்” என்று சொல்லி நகர்ந்தான். வீட்டுக்குள் நுழைந்த போது தெருவில் சந்திரா மற்றச் சிறுமிகளோடு நொண்டி விளையாடிக் கொண்டிருந்தாள். இவனைப் பார்த்ததும் “என்ன அண்ணா வந்துட்ட. கும்பம் நல்லாயில்லயா?” என்றாள்.

 

“இல்ல... தூக்கம் வந்துட்டு” வீட்டுக்குள் போய் படுத்துக் கொண்டான். சொர்ணம் எழுந்து வந்து “எய்யா.. பழம் எதாவது சப்டுறியாம்மா” என்றாள். “வேணாம்மா.” சுவர்ப்பக்கம் திரும்பிக் கொண்டான். நாளைக்கு இன்னேரம் பஸ் திருச்சியை நெருங்கியிருக்கும் என்று நினைத்துக் கொண்டான். தூக்கம் வரவில்லை.

 

அடுத்த நாள் பஸ் ஏறும்போது சொர்ணம் அழுதாள். சந்திரா பாவமாய் நின்றிருந்தாள். வாய்க்காங்கரைமுத்து அவனருகில் போய் “சொகத்துக்கு கடிதம் போடுப்பா..” என்றார். ராஜவேலு அமைதியாய் தலையாட்டினான். ஒரு தடவையாவது இவன் சிரிக்க, அதைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.

 

 

ராஜவேலு அவரைப் பார்த்ததும் சிரித்தான்.

 

“வா... வா... ராஜவேலு, ஒரு வாரமா நீயில்லாம ஒரே கஷ்டமாப் போச்சு...”

 

சிரித்தான்.

 

“ஊர்ல அப்பா... அம்மா எல்லோரும் நல்ல சொகந்தான?”

 

“ஆமா”

 

“மழ கிழ உண்டா..”

 

“ம்..”

 

“சாப்ட்டியா. இல்லேல்ல. வீட்ல போய்க் குளிச்சிட்டு சாப்பிட்டுட்டு வா... நாலு மூட சிமெண்ட்ட நம்ம டிரை சைக்கிள்ள வச்சு ஒரு பார்ட்டிக்கு கொண்டு போக வேண்டியிருக்கு..”

 

சரியாய் ஒருமணி நேரத்தில், கார் பஸ் இரைச்சல்களுக்கு நடுவே, அங்குமிங்கும் ஆளுக்கொரு குறிக்கோளோடு ஒடிக்கொண்டிருந்த மனுஷங்களுக்கு மத்தியில் ராஜவேலு வேகமாய் டிரை சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தான். பார்வை எதிரே கவனமாயிருக்க, சட்டையெல்லாம் வேர்வையில் தொப்பென்று நனைந்து போயிருந்தது.

 

இனி, படுக்கும்போதுதான் இவனுக்கு ஊர், அம்மா, அப்பா, வாய்க்கால், குமார், சின்னத்தங்கம் எல்லோரும் ஞாபகத்துக்கு வரமுடியும். அதற்குள் உடல் அசதியால் தூக்கமும் வந்துவிடும்.

 

(1991ல் எழுதிய கதை இது. குமுதத்தில் வந்தது.)

கருத்துகள்

11 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. :-) இந்தக் கதையை முதலில் நான் படித்த போது அச்சிறு வயதில் அவ்வளவாகப் பாதிக்கவில்லை. சில ஆண்டுகள் கழித்து மீண்டும் படித்த போது...அடேயப்பா! பிரமிக்க வைத்தது.

  இப்போதும்.

  பதிலளிநீக்கு
 2. கருப்பொருள் மிகவும் அருமை!

  ரொம்பக் கவர்ந்தது...!

  பதிலளிநீக்கு
 3. கடைசிலதான் பார்த்தேன் 1991 இல எழுதியது என்று. நானும் அது தான் முழித்து கொண்டு இருந்தேன்.

  இன்றைக்கு சாத்தூரில் இருந்து விருதுநகர் போய் வருவது போல, சென்னை அருகாமை ஆகி விட்டது. பத்து வருடம் முன்பு சென்னை செல்வது என்றால் தெருவிலேயே பெரிய செய்தி ஆக இருக்கும்.

  இருந்தும் கதை அருமை. நீங்கள் சொலும் கதை துபாயில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு இன்றும் பொருந்தும்.

  பதிலளிநீக்கு
 4. அன்பு நண்பரே

  உண்மை. நம் போன்று கிராம புற மக்கள் நகர் புற வாழ்கையில் சிக்கி நம்மை நாமே இழந்து விடுவது மறுக்க இயலாதது நாம் ஏங்கும் சில தருணங்களை மீது கொடுப்பது நாம் திரும்ப ஊருக்கு செல்லும் சில பயணங்களில்தான் உண்மை கசக்கத்தான் செய்கிறது

  ராதாகிருஷ்ணன்

  பதிலளிநீக்கு
 5. படிக்க படிக்க மனது குழைகிறது

  அந்த ஹாஸ்பிடல் வர்ணனை, குறிப்பாய்
  //எல்லாவற்றையும் அந்த பெரும் சோகத்தால்தான் தாங்க முடிந்தது//
  என்ற வரி அப்படியே கண் முன் விரிகிறது

  பதிலளிநீக்கு
 6. நீங்கள் இந்த கதை எழுதிய போது எனக்கு ஆறு வயது இருக்கும்.

  இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இக்கதையை வாசிக்க எனக்கு வாய்த்திருப்பதை எண்ணி மகிழ்கிறேன்.
  மூன்று மாதத்திற்கொருமுறை விடுமுறையில் நான் வீட்டிற்கு செல்லும் போதும் இதே உணர்வுகள் எனக்கும்
  ஏற்படும்.அப்படியே என்னையும் நான் இந்த கதையோடு பொருத்தி பார்த்து கொண்டேன்.

  வெகுவாக பாதித்து விட்டது !!!

  நாஞ்சில் நாடனின் "ஐந்தில் நான்கு" சிறுகதையும் இதே பாதிப்பை ஏற்படுத்தியது.

  பதிலளிநீக்கு
 7. தீபா!
  நன்றி.

  நேசமித்ரன்!
  நன்றி.

  ராம்ஜி!
  // நீங்கள் சொலும் கதை துபாயில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு இன்றும் பொருந்தும்//
  ஆமாம். சொந்த ஊரைவிட்டு வெளிஊரில் வசிக்கும் அனைவருக்கும் பொருந்தும்தான்.


  ராமசாமி!
  உண்மை கசக்கும் என்ராலும், நினைவுகள் சுகமானவைதான் நண்பரே!


  கதிர்!
  நுட்பமாய் பார்த்திருக்கிறீர்கள். சந்தோஷமாய் இருக்கிறது.


  செய்யது!
  அவ்வளவு சின்னப் பையனா நீங்கள்....!
  நன்றி தம்பி....

  பதிலளிநீக்கு
 8. வேலை இடர்பாடுகளுக்கு நடுவே இதை வாசிக்க முடிந்தது.முடித்ததும் அழ நேர்ந்தது மாதவன்-யாரும் அறியாது!இந்த அழுகை பிடித்திருந்தது.உங்களை பிடித்திருப்பது போலவே,

  பதிலளிநீக்கு
 9. கூட்டைப் பிரிந்த குஞ்சுப்பறவைகள் போல் வீட்டை விட்டு பிரிந்த எம்மவர் நெஞ்சிலும் எப்போதும் ஒரு சோகம்தான்.... :((

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!