கவிஞர் வைரமுத்துவும், மிஸ்டர் வைரமுத்துவும்

(1996, பிப்ரவரியில் எழுதிய கட்டுரை இது)

பாம்பன் ஆயில் என்று ஒரு சமையல் எண்ணெய் போலிருக்கிறது. சன் டி.வியில் இதன அறிமுகப்படுத்தி ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். நடிகர்கள், நடிகையர் மேடையில் தோன்றி அந்த எண்ணெய் குறித்து புகழ்ந்து பேசிய போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை. இப்போதெல்லாம் சினிமாக்காரர்கள் கலந்து கொள்வதே விழாக்களின் வெற்றியாக கருதப்படுகிறது. பாலு ஜுவல்லர்ஸின் குடும்பக் கவிஞரும், கவியரசுவுமான வைரமுத்து தமிழை கூடுதலாக அறிந்த காரணத்தால், எல்லோரையும் முந்தி நிற்கிற வசதி உண்டானது. கர்நாடகக் கச்சேரிகளில் ஆலாபனை செய்யும்போது பாகவதர்கள் முகம் காட்டுகிற ஒரு மாதிரியான விறைப்பினை இவர் சாதாரணமாக பேசும்போது கூட முகத்தில் கொண்டு வருவது இயல்பானதாய் இல்லை.

சரி போகட்டும். எண்ணெயின் சிறப்புகளை அடுக்கிக்கொண்டே வந்தவர் ஒரு இடத்தில் இந்த எண்ணெய் முழுக்க முழுக்க மனிதர்களின் கைகள் படாமலே இயந்திரத்தினால் தயாரித்தது என்று சொல்லி அவரே முகபாவம் காட்டி பிரமிக்கவும் செய்தார். அந்த வினாடியில் அவர் எழுதிய கவிதைகள் எல்லாமும் தலைகுனிந்திருக்கும் என்றேத் தோன்றியது.

இந்த உலகத்தின் முகத்தையும், முகவரியையும் மாற்றியதே மனிதக் கைகள்தான். சிறு ஊசியிலிருந்து ஒவ்வொன்றாக நினைத்து நினைத்துப் பார்க்க எல்லாமே அதிசயமாய் இருக்கிறது. மனிதக் கைகள் படாமல் எதுவும் தேவலோகத்தில் இருந்து விழுந்தவை அல்ல. மனிதச் சிந்தனையின் வளர்ச்சியே கைகளின் இயக்கத்திலிருந்து பயணமானதுதான். விஞ்ஞானத்திற்கும், நாகரீகத்திற்கும் புறம்பாக பேசியது மிஸ்டர் வைரமுத்துவுக்கு சட்டென்று உறைத்திருக்கும் போல. தான் பேசியது சுத்தம் சம்பந்தமாக எனக் குறிப்பிட்டார்.

பிரபலமான பிறகு அவரது சொந்த கிராமத்திற்கு ஒருமுறை சென்றிருந்தாராம். ஒரு ஏழை அம்மா பாசத்தோடு வரவேற்றார்களாம். எதாவது சாப்பிட வேண்டும் என வற்புறுத்தினார்களாம். இவர் மோர் கேட்டாராம். கொடுக்கும்போது அந்த அம்மாவின் இரண்டு விரல்கள் மோரில் பட்டிருந்ததாம். நயம் சுத்தமான மிஸ்டர் வைரமுத்துவுக்கு குடிப்பதற்கு மனம் வரவில்லையாம். தொண்டை சரியில்லை என்று குடிக்காமல் வந்து விட்டாராம்.

சிலிக்குயில் என அன்பாக அழைக்கப்படும் கவிஞர் பாப்லோ நெரூடா ஒருமுறை சொன்னதுதான் ஞாபகத்திற்கு இந்த இடத்தில் வருகிறது. அவர் தனது வாழ்நாளில் எண்ணற்ற பரிசுகளை வாங்கியிருந்தார். அவைகளையெல்லாம் அற்பாயுள் படைத்த வண்ணத்துப் பூச்சிகளைப் போன்றவை என்று சொல்லிவிட்டு, தனது தேசத்தின் சுரங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் அன்போடு ஓடிவந்து கரியும், மண்ணும் படிந்த கரங்களால் தழுவிக்கொள்வதைக் காட்டிலும் சிறந்த பரிசு எதுவும் இல்லை என்கிறார்.

நிச்சயம் அந்த அம்மாவின் கைகளில் அழுக்கு இல்லை. அழுக்கு எங்கே கெட்டியாய் உறைந்து போயிருக்கிறது என்பது தெரிகிறது. காதலைப்பற்றியும், தாய்ப் பாசம் பற்றியும், உருகி உருகி எழுதிய கவிதைகள் எல்லாம் அங்கிருந்தா வந்தவை! வாழ்க்கையிலிருந்து அவர் அந்நியப்பட்டுப் போய் விட்டதையே அவரது பேச்சு நமக்கு தெரியப்படுத்துகிறது.

ஆரம்ப காலத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதைகளில் இருந்த வெப்பமும், உயிர் கலந்த உண்மையும், கலகக்குரலும் அவர் மீது பித்து கொள்ள வைத்தன. மிகப் பெரும் மரியாதையை உருவாக்கின. நிழல்கள் படத்தில் வரும், ‘இது ஒரு பொன் மாலைப் பொழுது’ எனது இளமைப் பருவத்தினை தனது ஒவ்வொரு வரிகளாலும் தீண்டியிருக்கிறது. தமிழ் இலக்கிய அலமாரிகளில் இந்தக் கவிஞரின் படைப்புகள் கம்பீரமாய் வீற்றிருக்கும் என்ற நம்பிக்கையும், ஆசையும் இருந்தது. இப்போது அவைகளின் மீது தூசி படிகிற மாதிரி மிஸ்டர் வைரமுத்துவின் வார்த்தைச் சரடுகள் வந்து விழுந்து கொண்டு இருக்கின்றன. அகத்தின் அழகு முகத்தின் மட்டுமல்ல, வார்த்தைகளிலும் வெளிப்படுகிறது. அதுதான் ‘டேக் இட் பாலிசி’ என அவரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

மகாகவி பாரதியார் கொஞ்ச காலம் எட்டையபுர மகாராஜாவிடம் அரசவைக் கவிஞராக இருந்ததை எண்ணி வருத்தப்பட்டு இருக்கிறார். பின்னாளில் தந்து சுயசரிதையில் பன்றியைப் போல வாழ்ந்ததாக குறிப்பிடுகிறார். இந்த குற்ற உனர்வும், சுய விமர்சனமும் அவரை உயரத்தில் கொண்டு போய் வைக்கிறது. குற்ற உணர்ச்சி கூட வேண்டாம், குறைந்த பட்சம் கூச்சமாவது இருக்க வேண்டாமா?

இதற்கெல்லாம் இந்த சினிமாக் கவிஞர்கள் எல்லோரும் எப்போதும் சில பதில்களைத் தயாராய் வைத்திருக்கிறார்கள். “பாரதியைப் போல எங்களை சோத்துக்கு திண்டாடச் சொல்கிறீர்களா?” , “அவர் வாழ்ந்த காலம் வேறு, நாங்கள் வாழும் காலம் வேறு”, “நாங்கள் சூழலுக்குக் கவிதை எழுதுகிறோம்” என, அண்மையில் ரபிபெர்னாடோடு நடந்த நேருக்கு நேர் நிகழ்ச்சியில் மிஸ்டர் வைரமுத்துவும் தன்னை அந்த ஜோதியில் ஐக்கியமாக்கிக் கொண்டார்.

பாரதியும் சூழலுக்குத்தான் கவிதை எழுதியிருக்கிறார். நாடு வெள்ளையரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது உள்ளம் கொதித்து எழுதிய கவிதைகள்தான் அவரை இன்றும் பேச வைத்துக்கொண்டு இருக்கின்றன. சிந்து நதியின் மிசை நிலவினிலே என்று இங்கிலாந்தில் இருந்து கொண்டா எழுதினார். வாழ்க்கையையும், இலக்கியத்தையும் வேறு வேறாக அவர் எப்போதும் பார்த்ததில்லை. மிஸ்டர் வைரமுத்துவோ தனது இலக்கியத்திலேயே வேறு வேறான விஷயங்களைப் பார்க்கிறார். வெள்ளைத் தாளில் எழுதும் கவிதை வேறாம், வெள்ளித் திரையில் எழுதும் கவிதை வேறாம். இந்த எதுகை மோனையை ரசிக்க முடியவில்லை.

என்னவென்று சொல்ல...? மாபெரும் கலாச்சாரச் சீரழிவு நோக்கி வியாபார உலகம் மனிதர்களை நகர்த்திக் கொண்டு இருக்கிறது. அதில் தானும் அகப்பட்டுக் கொள்வதா ஒரு கலைஞனின், கவிஞனின் வாழ்வாக இருக்க முடியும்? மிஸ்டர் வைரமுத்துவுக்கு இந்த பிரக்ஞை சுத்தமாக அற்றுப் போய்விட்டது என்பதையே, அந்த வய்தான அம்மாளின் அன்பு பாராட்டும் மோரை புறக்கணிக்கச் செய்திருக்கிறது.

மாட மாளிகையிலும், கூட கோபுரங்களிலும் இலக்கியம் இருக்கவில்லை. எங்கள் மக்களின் புழுதி படிந்த கால்களில் இருக்கிறது. மிஸ்டர் வைரமுத்துவுக்கு இது மறந்து போயிருக்கலாம். ‘கவிராஜன் கதை’யையும், ‘திருத்தி எழுத்திய தீர்ப்பு’களையும் எழுதியதற்காக கவிஞர் வைரமுத்துவை மக்களும் மறந்து விடாமல் இருக்கலாம். ஆனால்... காலம்?

*

கருத்துகள்

24 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. வணக்கம் மாதவராஜ் அவர்களே, ஆளும் வர்கத்தின் கலை துறை எடுபிடிக்கு (வைரமுத்து), இயங்கியல் பார்வையில் அடித்தது சிறப்பு. தொடருட்டும் பார்வை ....

    பதிலளிநீக்கு
  2. Exactly right words.

    Thanks
    Nathan

    பதிலளிநீக்கு
  3. வைரமுத்து என்ற மனிதரை பற்றிய தெரியாத பல விஷயங்கள்
    :((((

    பதிலளிநீக்கு
  4. //வணக்கம் மாதவராஜ் அவர்களே, ஆளும் வர்கத்தின் கலை துறை எடுபிடிக்கு (வைரமுத்து), இயங்கியல் பார்வையில் அடித்தது சிறப்பு. தொடருட்டும் பார்வை ....//
    :(
    Ditto

    பதிலளிநீக்கு
  5. அண்ணே..

    அப்பவே எழுதிட்டீங்களாண்ணே..

    ரெண்டே வருஷத்துல இழுத்து மூடிட்டாங்கண்ணே..

    அத்தோட பாலுவும் போய்ச் சேர்ந்துட்டாரு..

    விழாவுக்கு வந்ததுக்காக பாரதிராஜாவுக்கும், வைரமுத்துவுக்கும் காண்டஸா கிளாஸிக் கார் வாங்கிக் கொடுத்தாருண்ணே பாலு ஸார்..

    எத்தனை டாம்பீகமான செலவு.. அத்தனையும் வீணாப் போச்சு..!

    பதிலளிநீக்கு
  6. அட்டகாசம்,
    சாட்டையடி!
    :-)

    பதிலளிநீக்கு
  7. // அழுக்கு எங்கே கெட்டியாய் உறைந்து போயிருக்கிறது என்பது தெரிகிறது //

    சம்பந்த பட்டவரின் முகத்தில் அறைந்திருக்கிறீர்கள்.

    அதிரடி கருத்துகள்.

    பதிலளிநீக்கு
  8. அண்ணே அவரு எழுதுனதே ரெண்டு நாவல். ஒண்ணு இதிகாசம், ரெண்டு காவியம்.

    என்ன கொடுமை இது?

    காதலித்துக் கைபிடித்துக் காதலைப் பற்றி எழுதிய அவர ஒரு காதலுக்குக் குழி தோண்டிய கதை எனக்குத் தெரியும். பொதுவில் வேண்டாம் நேரில் சந்திக்கும் போது சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. ஆரம்ப காலத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதைகளில் இருந்த வெப்பமும், உயிர் கலந்த உண்மையும், கலகக்குரலும் அவர் மீது பித்து கொள்ள வைத்தன

    நாள்பட நாள்பட அவரைப் பற்றி அறிந்த மிச்ச சொச்ச விஷயங்கள் அவர் மீதான் மரியாதையை உயர்த்த எந்த வகையிலும் வழிசெய்யவில்லை.

    பதிலளிநீக்கு
  10. //வெள்ளைத் தாளில் எழுதும் கவிதை வேறாம், வெள்ளித் திரையில் எழுதும் கவிதை வேறாம். //

    இப்படி வைரமுத்து பேசியது செய்தித்தாளில் வந்தபோதே நண்பர்களுடன் விவாதம் செய்தது நினைவுக்கு வருகிறது. தமிழை வைத்து காசு பார்ப்பவர்களிடம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் அவரின் கவித்திறமையும் பாராட்டாமல் இருக்கவும் முடியாது.

    பதிலளிநீக்கு
  11. அன்பு மாதவ்

    நீண்ட நாளைக்கு முந்தையதான அழகான இந்தப் பதிவை இப்போது அகழ்ந்தெடுத்ததன் காரணம் என்னவோ? வைரமுத்து முதலில் கேள்விப்படும்போது வசீகரித்த ஒவ்வொருவரையும் பின்னர் அருகே நெருங்கிப் பார்க்க அழைத்து அருவருப்படைய வைக்கிறவராகவே இருக்கிறார் போலும்.

    ஆ இரா வேங்கடாசலபதியின் "அந்தக் காலத்தில் காப்பி இல்லை முதலான கட்டுரைகள்" என்ற தொகுப்பில் காக்காவை நரி ஏமாற்றி வடை திருடிய கதையை கவியரசு எப்படி எழுதுவார் என்று பகடி செய்து ஒரு மாணவர் எழுதிய படைப்பு வந்திருந்தது: அந்தக இரவில் ஒரு கந்தக நரி என்ற தலைப்பிலானது. ஏ காக்கையே நீ பாடினால் எருதுக்கும் கூட விருது கிடைக்குமே, சர்ப்பம் கூட கர்ப்பம் தரிக்குமே .... என்று நரி வருணிப்பதை வைரமுத்து வாசித்து என்ன ஆகியிருப்பாரோ தெரியாது. புகழின் விலை இந்தக் கொடுமை எல்லாம். முதலாளித்துவ சமூகம் படைப்புகளை மட்டுமல்ல படைப்பாளிகளையும் அல்லவா விலை பேசி வாங்கிப் போடுகிறது. 'ஏண்டாப்பா சண்முகசுந்தரம் என்ன படுத்திட்ட, எழுந்திரு எழுந்திரு மகாராஜா உறங்கப் போகணுமாம், கொஞ்சம் வாசி' என்று வைத்தி பாத்திரம் தில்லானா மோகனாம்பாளில் பேசுகிற விஷயம் நிலபிரபுத்துவ உலகத்து வசனம். சந்தையின் ஆதிக்கத்தில் உள்ள உலகமய காலம் அதை விட கண்றாவியாகிக் கொண்டிருக்கிறது.

    இருக்கட்டும், பொன் மாலைப் பொழுது கேட்டு கிறங்கிப் போகாதவர் யார்....அந்த நாளில் அத்தனை இனிமையான பாடல் ஏன் இரண்டு சரணங்களோடு முடிய வேண்டும் என்று கருதி கல்லூரி நாட்களில் பின்வரும் மூன்றாவது சரணத்தை நான் எழுதி ரசித்துக் கொண்டிருந்தேன். இப்போதும் முணுமுணுக்கத் தவறாத அந்த வரிகள்:

    காலை உதயத்தின் பூத்திரைகள்
    ஆனந்தப் பாடலின் காற்றலைகள்
    வாழ்வின் வசந்தத்து யாத்திரைகள்
    மாலை கவிகிற ராத்திரிகள்

    பூ விரல்கள்
    ஓவியங்கள்
    தீ.......ட்...........டா.......தோ (இது ஒரு பொன் மாலைப் பொழுது)


    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
  12. அண்ணை,

    எல்லோரைப்போலவும் தான் ஈழத்தமிழர் நாமும் அவரை நினைத்துப் பெருமை கொண்டோம். அதனாலேயே ரொரொண்டோ அழைத்து தங்கப் பதக்கம் வழங்கினோம். அவரும் அப்பதக்கத்தை மேடையிலேயே திருப்பிக் கொடுத்து ‘இதை உருக்கி போராட்டத்துக்கு குண்டுகள் வாங்கி கொடுங்கள்’ என ‘செம்மொழியாம் தமிழில்’ விளையாடி எங்களை உசுப்பேற்றினார்! இத்தனைக்கும் கனடாவில் தமிழர் புலிகளுக்கு கொடுக்காமல் இவருக்கு பதக்கம் கொடுக்கவில்லை என்பது யாவரும் அறிந்தது. ஆனால் அவருக்குத்தெரியும் எங்கே ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிப்பதென்று. ஒன்று பதக்கத்தை எடுத்துச் சென்று ‘அம்மா’ வின் ‘அராஜக’ ஆட்சியின் கையில் மாட்டாமல் தப்பிக்கலாம் மற்றது ’ தங்கத்தையே தமிழுக்காக தாரை வார்த்தவன்’ என ரஜனி படத்துக்கு பாடல் எழுதி இதை ஈழத்தமிழனையும் மனதில் வைத்து எழுதினேன் என கதை விடலாம்.

    பின்னர் ஒருமுறை (இரண்டு வருடங்களின் முன்) அமெரிக்காவில் நடந்த பெட்னா நிகழ்வில் பின்வரிசையில் இருந்து கைதட்டிய ஈழத்தமிழர்களை நோக்கி ‘எல்லோரும் வெளிச்சத்தில் இருக்கிறார்கள் ஈழத்தமிழர்கள் ஏன் இன்ன்னும் இருளில் இருக்கிறார்கள்’ என கதைவிட்டு இந்த வருடம் நடந்த படுகொலைகளின் போது தானே இருளில் ஒழித்து இருந்தார்!!!
    பின்னர் இம்மாதம் நடந்த பெட்னாவில் அவரின் நடத்தையை பழமைபேசி எழுதியிருக்கிறார் படித்துப்பாருங்கள்!
    http://maniyinpakkam.blogspot.com/2009/07/blog-post_06.html

    பதிலளிநீக்கு
  13. மாதவராஜ் மிகச் சரியாக குறிப்பிட்டு உள்ளீர்கள். 1996-ல் அந்த விழாவிற்க்கு நான் வந்திருந்தேன், ஜூலை 4 2009-ல் பெஃட்னா 2009 விழாவில் கவிஞரின் பேச்சுக்கு அருகில் இருந்து வரவேற்ப்பு கவிதை வாசிக்க இருந்தேன், நேரமில்லை எனக்கு வரவேற்ப்பு தேவையில்லை என்று சொல்லிவிட்டார் கவிஞர். நிறையவே மாறி விட்டார்... வேறு என்ன சொல்ல.

    பதிலளிநீக்கு
  14. அண்ணே அவர மாதிரியே "பழைய பனை ஓலைகளை" பரணில் இருந்து எடுக்கிறீங்க போலருக்கு...!

    "சினிமாவை சின்ன தீக்குச்சிக்கு உண்ணக் கொடுப்போம்னு..." கொந்தளிச்சவரும் நம்ம 'டையமண்ட்' ஐயாதானே?!

    பதிலளிநீக்கு
  15. எங்கடை ஊர் பெடியளுக்கு கவிஞர் என்றாலல் வைரமுத்துவைத்தான் தெரிந்திருந்தது, நானும் இவரில் இருந்துதான் ஆரம்பித்தேன் இல்லை என்பதற்கல்ல,சிகரங்களை நோக்கி என்பதுதான் முதல் படித்த புத்தகம் என்பதாக நினைவு...

    ஆரம்ப கால வைரமுத்து பின்னர் இல்லை என்பது உண்மை...

    பதிலளிநீக்கு
  16. மாதவ்ராஜ் சார்,

    விரல்கள் அழுக்காய் இருந்ததால், வெறுத்துவிட்டேன் மோரை என்று வைரமுத்து சொல்லவில்லை...விரல்கள் மோரில் விளையாடியதாலேயே வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்...இதில் என்ன தவறு என்று எனக்கு புரியவில்லை...உங்களுக்கு கொடுக்கும் காஃபியில் யாராவது விரல் விட்டு விளையாடிவிட்டு பின்னர் கொடுத்தால் நீங்கள் குடிப்பீர்களா? ஆம் என்றால் நீங்கள் கோடியில் ஒருவர்!

    அதே போல தான் கைபடாத எண்ணையும்...கைபடாத எண்ணெய் என்பது சுகாதாரத்திற்கான ஒரு முயற்சி...இப்படி சொல்வதாலேயே கையால் செய்யப்படும் எல்லா வேலைகளையும் இழிவுபடுத்துவதாக அர்த்தமில்லை...

    இதனாலெல்லாம் வைரமுத்துவின் இலக்கியம் கேள்விக்குறியாகிவிடாது...படைப்பு வேறு...படைப்பாளி வேறு...

    பதிலளிநீக்கு
  17. வணக்கம்

    //மாதவராஜ் மிகச் சரியாக குறிப்பிட்டு உள்ளீர்கள். 1996-ல் அந்த விழாவிற்க்கு நான் வந்திருந்தேன், ஜூலை 4 2009-ல் பெஃட்னா 2009 விழாவில் கவிஞரின் பேச்சுக்கு அருகில் இருந்து வரவேற்ப்பு கவிதை வாசிக்க இருந்தேன், நேரமில்லை எனக்கு வரவேற்ப்பு தேவையில்லை என்று சொல்லிவிட்டார் கவிஞர். நிறையவே மாறி விட்டார்... வேறு என்ன சொல்ல.//


    இவர் ஒரு முறை கனடா வந்த போது கவிஞர் சக்கரவர்த்தி கவிதை வடிவில் கேட சில கேள்விகள் தாங்கமுடியாமல் அதனால் அடுத்தநாள் இடம்பெற இருந்த கவியரங்க நிகழ்வும் கைவிடப்பட்டது

    பதிலளிநீக்கு
  18. உங்கள் கருத்துக்களில் எனக்கு நிறைய உடன்பாடில்லை. கவிஞர் மாறிவிட்டார் என்று சொல்வதை என்னால் ஓரளவுக்கு ஒத்துக்கொள்ள முடியும். ஆனால் அவரது படைப்பையும் தனி மனித வாழ்வையும் கோர்த்து பார்ப்பதென்பது பிழை என்றே நான் கருதுகிறேன். பார்ப்போம் இதை பற்றி நிறைய எழுத வேண்டி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  19. ஆள்வோரை துதிப்பதில் அரசவை கவிஞரை மிஞ்சிவிடுவார் கவியரசு...

    பதிலளிநீக்கு
  20. வெண்மணி!
    நாதன்!
    தீப்பெட்டி!
    மங்களூர் சிவா!
    வெங்கிராஜா!
    தீபா!
    அ.மு.செய்யது!
    அமிர்தவர்ஷிணி அம்மா!
    அனானி!
    அரசூரான்!
    தமிழன் கறுப்பி!
    அருண்மொழிவர்மன்!
    ஹரிஹரன்!

    அனைவரின் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.


    உண்மைத்தமிழன்!
    தொடர் தகவல்களுக்கு நன்றி.


    வட்கரைவேலன்!
    நேரில் சந்திக்கும்போது விரிவாகப் பேசுவோம்.


    குடந்தை அன்புமணி!
    ‘கவித் திறமை’யை பாராட்டலாமே!
    நானும் அவரது சில பாடல்களை ரசிக்கிறவனே!


    வேணுகோபால்!
    செல்வேந்திரன்!
    பழைய விஷயம்தான் என்றாலும், அவரைப் பற்றி வலைப்பக்கத்தில் சொல்லத் தோன்றியது.


    அதுசரி!
    உங்கள் உணர்வை புரிந்து கொள்கிறேன். படைப்பாளி வேறு, படைப்பும் வேறு என்பது எல்லா அர்த்தங்களிலும் பொருந்தாது. வைரமுத்துவின் ஆரம்ப கால கவிதைகளுக்கும், இப்போது உள்ள கவிதைகளுக்கும் உள்ள முரண்பாடுகளை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா....? அன்பையும், உழைப்பையும் சுத்தத்தின் பெயரில் அலட்சியப்படுத்தியவது சரியா?

    விசா!
    தனிமனித வாழ்வுக்குரிய விஷயங்களை நான் முன்வைக்கவில்லை நண்பரே! ஒரு கவி மனதின் ஏற்ற இறக்கங்களைத்தான் பேசுகிறேன்.

    பதிலளிநீக்கு
  21. கோப்பையில் விரல்களை விட்டது தவறென்றே வைத்துக் கொண்டாலும், பெற்ற தாய் என்பதால் நேரடியாகவே சொல்லியிருக்கலாம்.

    "என் புள்ள, எவ்வளவு சுத்த பத்தமா இருக்கான் பாத்தியளா"-ன்னு அக்கம் பக்கம் பெருமையா சொல்லிருப்பார் அந்த தாய்.

    நகர வாழ்க்கை மனித மனங்களை மரத்துப் போக செய்து விடுகிறது. மற்றவர்களுக்கு எல்லா அறிவுரைகளையும் வழங்கும், வைரமுத்துவும் இதற்குப் பலியானதுதான் பரிதாபம்.

    பதிலளிநீக்கு
  22. வாலி + வைரமுத்து =ஆபாசம்

    பதிலளிநீக்கு
  23. தில்லானா மோகனாம்பாள் சண்முக சுந்தரத்தையும், எட்டையபுர மகாராஜா அரண்மனை பாரதியையும், மிஸ்டர் வைரமுத்துவையும் அழகாக கோர்த்துள்ளீர்கள்.
    கட்டுரையை எழுதியுள்ளவருக்கும், பின்னூட்டங்களால் மேலும் அர்த்தமுள்ளதாக்கியிருக்கும் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  24. Mr. MadhavaRaj Avarkale..!
    Vairamuthu Ennum Manitharai Tamil Makkal Oru Kavingnaka parkkirarkale thavira avarai oru gandhiyaka, kamarajaka parkkavillai. Avar Oru Kavingan Mattumthan. Eyesu Kitaiyadhu. Oru Kavingan Ippatithan Irukka Ventum Entru Rules Ethuvum Illai.
    Viyapara Ulagil Kavithaikalai, Karpanaikalai Virpanai Seyvathu Etharthamaana Ontru. Athai Vairamuthuvum Seykirar. Avvalavuthan.Atharkkaaka Avar Mosamaana Pervazhi Entru Solvathu Nam Muttalthanam.
    Sila Nabarkal Irukkirarkal. Pukazh Petra Manitharai Vimarsanam Seythaal Namathu Peyar Publicity Aakum - Entrellam Ninaithu Ethavathu Ezhutha Thotanki Vituvarkal. Antha Varisaiyilthan Neengal Irukkrirkal Entru Ninaikkiren...!

    Mudhalil KaviPerarasuvai Kavinganaka Mattum Parungal....!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!