“இது இலக்கிய சர்ச்சை ஆகாது!”- எழுத்தாளர்.ஜெயகாந்தன்

ஒரு பயணம் போலவே அவரது சிந்தனைகளும், உரையாடல்களும் இருக்கின்றன. வழிகளை ஆராய்கிற தர்க்கங்கள் ஒன்றிலிருந்து ஒன்றாய் வெளிப்படுகின்றன.  தமிழ் இலக்கிய உலகில் ஜெயகாந்தன் அழுத்தமாக தடம் பதித்து, இன்றைக்கும் நிற்பதற்கு இதுவே காரணாமாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஒரு எழுத்தாளராக இலக்கியத்தோடு தன்னை நிறுத்திக் கொள்ளாமல், சமூக நிகழ்வுகளிலும், அரசியல் பார்வையிலும் தன்னியல்பான, ஒரு சுதந்திரமான சிந்தனையை செலுத்துகிற மனிதராக எப்போதும் இருக்கிறார். இலக்கியத்துறையில் ஒரு சகாப்தமாக இருந்திருக்கிறார். இப்போது பேனா மௌனமாய் இருக்கிறது. திரைப்படத்துறையில் ஒரு வெளிச்சம் போல வந்து விட்டு சென்றிருக்கிறார். பிறகு அப்படி வேறு முயற்சிகள் எதுவும் தொடர்ந்து செய்யவில்லை. ஜெயகாந்தனின் ஆளுமையின் தனித்துவம் இப்படியும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நான்கு வருடங்களுக்கு முன்பு ‘புத்தகம் பேசுது’ இதழுக்காக ஒரு மழைநாளில் சென்னையில் அவரது இல்லத்தில் நான் நடத்தியது இந்த சிறு நேர்காணல். சில முக்கிய விஷயங்களில் அவரது கருத்தை அறிவது மட்டுமே இந்த நேர்காணலின் நோக்கம் என்பதை சொல்லிக் கொள்கிறேன்.

இனி எழுத்தாளர் ஜெயகாந்தன்.......

தமிழில் இப்போது நிறைய பதிப்பகங்கள் வந்திருக்கின்றன. நிறைய படைப்புகள், மொழிபெயர்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்ற்ன. தமிழ் இலக்கிய உலகில் இந்த சூழலை எப்படி உணர்கிறீர்கள்?

இது ஒரு வளர்ச்சியின் விளைவே. இதை ஆரோக்கியமானதாக ஆக்கிக் கொள்ள வேண்டியதுதான் எழுதுபவர்களின் கடமை. ஒரு காலத்தில் நல்ல எழுத்தாளர்கள் இருந்தார்கள். அப்போது பதிப்பகங்களும், நூலகங்களும், வாசகர்களும் இந்த அளவுக்கு பெருகி இருந்ததில்லை. இதனை ஈடு செய்கிற அளவுக்கு திறமைமிக்க எழுத்தாளர்கள், படைப்பாளிகள் உருவாதல் வேண்டும். அல்லாத பட்சத்தில் இது ஒரு வர்த்தக வளர்ச்சியாகவே நின்றுவிடும்.

நீங்கள் சொன்னது போல நிறைய எழுத்தாளர்கள் இப்போது இருக்கிறார்கள். ஆனால் சமூகத்தின் மீது ஆளுமையும், தாக்கமும் கொண்ட எழுத்தாளர்களை அடையாளம் காண முடியவில்லையே?

அது அவசியமும் இல்லை. இந்த அடையாளம் காண்பவர்கள் அனேகமாக தப்பாகக் கண்டுவிடுவார்கள். காலம்தான் அவர்களை சரியாக அடையாளம் காட்டும். எனவே எழுதுகிறவர்கள் இந்த அடையாளம் காண்பவர்கள் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும். சொல்லப்போனால் அவர்களை ஒதுக்கிவிட்டு தங்கள் படைப்பாற்றலில் கவனம் செலுத்த வேண்டும்.

பாரதிக்குப் பிறகு மணிக்கொடி காலத்தையடுத்து உங்கள் எழுத்து தமிழ்ச் சமூகத்தில் வீரியத்தோடு ஒரு தனி இயக்கம் போல உருவெடுத்திருந்தது. அதன் நீட்சி தமிழ் இலக்கியத்தில் என்னவாக இருக்கிறது?

பாரதி, மறுமலர்ச்சி எழுத்தாளர்கள், அதன் தொடர்ச்சியாக நான் என்பது ஒரு அத்தியாயம். அதனைத் தொடர்ந்து மறு அத்தியாயம் பல படைப்பாளர்களால், பற்பல பார்வைகளால் உருவாக்கப்படுவது வரவேற்கத்தக்கது. மூன்றாவது அத்தியாயம் முளைக்கிறபோதுதான் இரண்டாவது அத்தியாயத்தின் முழுமை தெரிய வரும்.

உங்கள் எழுத்துக்கள் மூலம் சமூகத்தில் ஒரு உரையாடலை நடத்தியிருக்கிறீர்கள். மனிதர்களுக்குள்ளேயே புதிய உரையாடல்களை ஆரம்பித்தும் இருக்கிறீர்கள். இந்த தர்க்கங்கள் தங்கள் எழுத்துக்களின் சிறப்பம்சமாக அறியப்படுகிறது. அந்த உரையாடல்கள் இப்போது சமூகத்தில் நடந்து கொண்டிருப்பதாக கருதுகிறீர்களா?

அந்த ஆராய்ச்சியில் நான் ஈடுபட்டதில்லை. நடக்கவும் நடக்கலாம். நடக்காமல் இருந்தாலும் இருக்கலாம். இதை மற்றவர்கள் சொல்வதுதான் சிறப்பு.

சுதந்திரத்துக்குப் பின்பு இருந்த சூழலில் உங்கள் எழுத்துக்கள் சமூகம் கவனிக்கத் தவறிய விஷயங்களை பரிவோடு பார்க்க வைத்தன. அந்த காலத்துக்கு மிக தேவையானதாகவும் அது இருந்தது. சுதந்திரமடைந்து ஐம்பத்தாறு, ஐம்பத்தேழு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்று நமக்கு தேவையானது எது என்று நினைக்கிறீர்கள்?

எது தேவையென்பதை எழுதுபவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். எல்லாப் பகுதிகளிலும், எல்லா மட்டத்திலும், கவனிக்கப்படாதவர்களும், கவனிக்கப்பட வேண்டியவர்களும் இருக்கிறார்கள். அப்படி பல நோக்கு பார்வையோடு மக்களை அணுகினால், சுதந்திரத்திற்குப் பிறகு அத்தகைய சூழ்நிலை, வாய்ப்பு அதிகரித்திருக்கிறது என்றே கருதுகிறேன். தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் எதோ தலீத்துகள் மட்டுமே கவனிக்கப்பட வேண்டியவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என்பவர்கள் எதோ ஒரு மாவட்டத்தில்தான் இருக்கிறார்கள், ஒரு இனத்தில்தான் இருக்கிறார்கள் என்கிற குறுகிய பார்வை படைப்பாளிகளுக்கு வந்தால் சில தேக்கங்கள் வரும். எல்லாப் பகுதிகளிலும் மனிதாபிமானத்தைக் கொண்டு பார்த்தால் இது பரவலாகவும், விரிவாகவும் அமையும்.

உங்கள் சமகால எழுத்தாளர்களோடு உங்கள் உறவுகள் எப்படி இருந்தன?

மிகுந்த நட்புணர்வோடு அமைந்திருந்தது. அந்த தோழமையை வளர்த்துக் கொள்கிற பண்பினை ஒரு இயக்கத்தின் மூலம் பெற்றதே என்னுடைய சிறப்புக்கு காரணம்.

கருத்துக்களில் முரண்பாடு உடையவர்கள் பகைமை பாராட்டிக் கொண்டு இருப்பது அறிவுலகத்துக்கு பொருந்தாது. இசைவு என்பது இன்னொருவரின் எல்லா முயற்சிகளுக்கும் இணங்கி விடுவது அல்ல. முரண்பட்டவர்களிடையேதான் இசைவு மிகவும் தேவைப்படுகிறது.

அப்போதும்  இலக்கிய சர்ச்சைகள் நடந்து கொண்டு இருந்திருக்கும். பொதுவாக என்ன இருந்தது?

பொதுவாக கலை கலைக்காகவா, கலை மக்களுக்காகவா என்கிற பரந்துபட்ட இலக்கிய சர்ச்சை இருந்தது. புரியும்படியாக சொல்ல வேண்டுமென்றால் இலக்கியம் பொழுது போக்கிற்கா அல்லது இலட்சியத்திற்கா என்கிற விவாதம் இருந்தது. இன்றைக்கு இங்கு நடக்கிற விவாதங்கள் முழுவதும் தமிழ் இலக்கியம் குறித்து அல்ல. ஆங்கில இலக்கிய விமர்சனங்களை படித்துவிட்டு அந்த terminologyஐ தமிழாக்கம் செய்து கொண்டு இங்கே அம்மானை ஆடுகிறார்கள் விமர்சகர்கள். இது இலக்கிய சர்ச்சை ஆகாது. சொல்லப்போனால் இது தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு புறம்பானதும் ஆபத்தானதும் ஆகும். எதார்த்த இலக்கியமே இன்னும் முழுமை பெறாத தமிழ் மொழியில் இவர்கள் அதன் காலம் முடிந்துவிட்டது என்று சொல்லுகிறார்கள். எல்லாக் கால இலக்கியங்களும் எதார்த்தவாதத்துக்கு உட்பட்டதுதான். எதார்த்தம் என்பது வேறு. எதார்த்தவாதம் என்பது வேறு. The real is not realsitic.

வெகுஜனப் பத்திரிக்கைகளில் எழுதுவதற்கு எழுத்தாளர்கள் தயக்கங்களும், நெருடல்களும் கொண்டிருந்த காலத்தில் உங்களால் அதை உடைக்கிற மனோபாவம் எப்படி வந்தது?

முதலாளித்துவ ஜனநாயக அரசியலில் கம்யூனிஸ்டுகள் ஈடுபடலாமா என்ற கேள்விக்கு அரசியல் ரீதியாக நான் பதிலளித்துக் கொண்டிருந்த சமயம் நடைமுறையில் இதற்கும் விடை கண்டேன். எல்லாச் சமூகங்களிலும் நமக்கென்று ஒரு பாத்திரம் இருக்கிறதல்லவா? அந்த பாத்திரத்தை நாம் சரியாகவும், நிறைவாகவும் வகித்தல் வேண்டும். சமூக மாற்றங்கள் தம்மால் பிறகு நிகழும்.

திரைப்படத்துறையில் குறிப்பிடும்படியான முக்கிய சில பதிவுகளை ஏற்படுத்திவிட்டு அதிலிருந்து பிறகு உங்களால் எப்படி விலகிவிட முடிந்தது?

முக்கிய பதிவுகளை ஏற்படுத்தியவர்களெல்லாம் அவர்கள் வேலை முடிந்தவுடன் ஒதுங்கிக் கொள்வதுதான் விதி.

சோவியத்தோடு மிக நெருக்கமாக அறியப்பட்டவர்கள் நீங்கள். அங்கு சோஷலிச அரசு வீழ்ந்த போது, லெனின் சிலை அகற்றப்பட்ட போது உங்கள் உணர்வுகள் எப்படி இருந்தன?

சாதாரண மனிதன் தானே. முதலில் ரொம்ப வருத்தமும் சோர்வும் ஏற்பட்டது. ஆனால் எல்லாக் காரியங்களும் ஏற்கனவே நாம் செய்த காரியங்களின் விளைவு என்று அறிவு பூர்வமாக அறியவும் உணரவும் நேர்கிறபோது இது ஒரு தோல்வி அல்ல, பின்னடைவு அல்ல, இதுவே நமது சித்தாந்தம் நமது கட்டுக்களை உடைத்துக் கொண்டு உலக சமுதாயத்தில் ஊடுருவி வளர்கிற வளர்ச்சியின் விளைவு என்று நான் புரிந்து கொண்டேன்.

லெனின் என்பது ஒரு சிலை அல்ல என்று புரிந்தவர்களுக்கு அந்த சிலை தகர்த்தல் ஒன்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடாது. அவர், அந்த மாபெரும் லெனின் அவரது புத்தகங்களில் வாழ்கிறார். அவரது மூர்த்தம் அவரது பிரேதத்திலும், அவரது சிலையிலும் கட்டுண்டு போய்விடாது.

உங்கள் மீது மரியாதையும், நேசமும் வைத்திருக்கக்கூடிய இடதுசாரி அமைப்புகள், உங்கள் மீது விமர்சனங்களையும், சில நேரங்களில் ஆதங்கங்களையும் வெளிப்படுத்தும் போது அவைகளை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?

அவர்கள் அப்படி செய்யாமல் இருக்க முடியாது என்றுதான். நான்கூட அங்கே இருந்திருந்தால் அதையேதான் செய்திருப்பேன். இந்த புரிதல் இருப்பதனால் அது என்னை பாதிப்பதில்லை. ஆனால் அவர்களை நான் பாதித்துக்கொண்டே இருப்பேன்.அதுவே எங்கள் உறவின் ரகசியம். அப்புறம் கவனித்தீர்களா? அவர்கள் எல்லோரும் மாறிக்கொண்டே வருவதை. என் விஷயத்தில் கூட.

கம்யூனிசத்தோடு ஆன்மீகத்தையும் இணைத்துப் பேசக்கூடிய எழுத்தாளராக உங்கள் மீது ஒரு பார்வை இருந்துகொண்டே இருக்கிறது. அது சம்பந்தமாக உங்கள் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றனவே?

மார்க்ஸை படித்தவர்கள் கூட அப்படித்தான் நினைக்கிறார்கள். இலக்கியத்தில் கார்க்கியைப் படித்தவர்கள் கூட அப்படித்தான் சொல்கிறார்கள். கம்யூனிசம் ஆன்மீகத்திற்கு புறம்பானது என்று யார் சொன்னது? ஆன்மாவை இழந்து தவிக்கும் சமூகத்திற்கு ஆன்மா என்று அதைச் சொல்லலாம். ஏனெனில், மதங்களைப் பற்றி மார்க்சீயம் சொல்கிறது, இதயமற்ற சமூகத்தின் இதயம் என்று. மார்க்சீய லெனிசத்தின் அடிப்படைகள் என்ற நூலின் கடைசி பாரா சொல்கிறது, மானுட சமூகத்திற்கு உலகம் இதுவரை நல்காத ஒரு ஆன்மீகச் சூழலை கம்யூனிசம் உருவாக்கித் தரும் என்று.

இன்று இளைஞர்கள் நிறைய எழுத வருகிறார்கள். பல்வேறு சித்தாந்தங்கள் இலக்கியத்தில் முன் நிற்கின்றன. இதில் அந்த இளஞர்களுக்கான இடம் என்னவாக இருக்கும்?

இளைஞர்கள் முதலில் எழுத வேண்டும். சித்தாந்தத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படவேக்  கூடாது. சித்தாந்தத்தைப் படித்துவிட்டு அதற்கேற்ப எழுதுவதில்லை. நீங்கள் நல்ல மனிதனாயிருந்து நல்ல இதயத்தோடு இந்த வாழ்க்கையை பார்க்கவேண்டும். அதிலிருந்து பிறப்பதுதான் நமது சித்தாந்தம். சித்தாந்தங்களைப் பயின்றுவிட்டு எழுதுகிறவர்கள் அந்த நிறுவனங்களில் வேலைக்குப் போவதுதான் சரி. அனேகமாய் அதுதான் நடக்கிறது. படைப்பு இலக்கியம் என்பது வேறு. சித்தாந்த சிக்கலில் இளைஞர்கள் முதலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்றெல்லாம் இளைஞனாய் இருக்கும் போது நான் யோசித்திருக்கிறேன். எல்லாச் சித்தாந்தங்களுடனும் பரிச்சயம் இருப்பது நல்லதே. ஒன்றும் தெரியாமல் இருக்க வேண்டும் என்று சொல்ல மாட்டேன். ஆனால் எதிலும் போய் நாம் மாட்டிக் கொள்ளக் கூடாது. அப்போதுதான் விஞ்ஞானபூர்வமான ஒரு சித்தாந்தத்திற்கு நாம் இடம் கொடுக்கிறோம் என்று அர்த்தம்.

*

கருத்துகள்

20 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. தோழர் நலம்தானே,
  சற்றே இடைவெளிக்குப் பிறகு ஒரு அருமையான ஆத்ம திருப்தியான பதிவை வாசிக்கும் அனுபவத்தை அளித்ததற்கு நன்றி.

  எழுதினாலும் எழுதாவிட்டாலும், ஜெயகாந்தன் என்ற ஆளுமை தீவிர வாசக மனதில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார் என்பதே உண்மை.

  கருத்துக்களால் கட்டமைக்கப்பட்ட அவரது உள்ளம் தெளிவானது மட்டுமின்றி
  தனக்கு நேர்மையாகப் பட்டதை துணிச்சலுடன் வெளிப்படுத்தும் யோக்கியதை உடையவர். நான் உள்பட எத்தனை பேருக்கு நினைத்ததை வெளிப்படையாக நேரில் கூறிவிடும் திராணி இருக்கிறது.

  என்னைப் பொறுத்தவரையில் அவரின் ஆளுமை அளித்த காதல் வாழ்வின் இறுதிவரை தீராதது.

  பகிர்விற்கு மறுபடியும் நன்றி.

  ‘அகநாழிகை‘
  பொன்.வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 2. தறபோதைய கால சூழ்நிலைக்கு இந்த பதிவு அவசியமானதாக கருதுகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி தோழரே.

  பதிலளிநீக்கு
 3. என்னளவில் ஜெயகாந்தன் ஒரு பெயர் மட்டுமல்ல - அது ஒரு ஆளுமையின் குறியீடு.

  இந்த நேர்காணலைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. நேர்காணலைப் பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 5. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 6. / குடந்தை அன்புமணி said...

  தறபோதைய கால சூழ்நிலைக்கு இந்த பதிவு அவசியமானதாக கருதுகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி தோழரே./

  REPEAT.

  குறிப்பாக கடைசி கேள்வி பதில் மிக ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 7. நேர்காணலை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.இந்த இடத்தில் மீண்டும் என் அன்பு முத்தங்கள் என் ஆதர்ச ஜெயகாந்தன் அவர்களுக்கு.

  பதிலளிநீக்கு
 8. கவிஞர் சிற்பி மாமனுடன் பேசும்போது உங்கள் வலைப்பதிவைப் பற்றிச் சொன்னேன். உங்கள் போன் எண்ணை அனுப்புங்கள்.

  அருமையான பதிவு!

  அன்புடன்,
  நா. கணேசன்
  நாசா ஜான்சன் விண்மையம்

  பதிலளிநீக்கு
 9. அன்புள்ள மாதவராஜ்,

  பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள். ஜெ.கே.வைப் படிப்பது எல்லாக் காலங்களிலும் அறத்தைப் படிப்பதாகவே இருப்பதாக உணர்கிறேன்.

  // இளைஞர்கள் முதலில் எழுத வேண்டும். சித்தாந்தத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படவேக் கூடாது. சித்தாந்தத்தைப் படித்துவிட்டு அதற்கேற்ப எழுதுவதில்லை. நீங்கள் நல்ல மனிதனாயிருந்து நல்ல இதயத்தோடு இந்த வாழ்க்கையை பார்க்கவேண்டும். அதிலிருந்து பிறப்பதுதான் நமது சித்தாந்தம். சித்தாந்தங்களைப் பயின்றுவிட்டு எழுதுகிறவர்கள் அந்த நிறுவனங்களில் வேலைக்குப் போவதுதான் சரி. அனேகமாய் அதுதான் நடக்கிறது. படைப்பு இலக்கியம் என்பது வேறு. சித்தாந்த சிக்கலில் இளைஞர்கள் முதலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்றெல்லாம் இளைஞனாய் இருக்கும் போது நான் யோசித்திருக்கிறேன். எல்லாச் சித்தாந்தங்களுடனும் பரிச்சயம் இருப்பது நல்லதே. ஒன்றும் தெரியாமல் இருக்க வேண்டும் என்று சொல்ல மாட்டேன். ஆனால் எதிலும் போய் நாம் மாட்டிக் கொள்ளக் கூடாது. அப்போதுதான் விஞ்ஞானபூர்வமான ஒரு சித்தாந்தத்திற்கு நாம் இடம் கொடுக்கிறோம் என்று அர்த்தம். //

  சித்தாந்தங்களில் சிக்குண்டுத் தவிப்பவர்களுக்கு ஜெயகாந்தன் சொன்ன இந்த வரிகளின் அர்த்தம் புரியுமா என்றுதான் தெரியவில்லை. புரிந்தால் சிக்கிக் கொண்டு தவிக்க மாட்டார்களே :-)

  அன்புடன், பி.கே. சிவகுமார்

  பதிலளிநீக்கு
 10. தோழர்,
  காலையில் உங்கள் பதிவை வாசித்து நெகிழ்ந்து பின்னூட்டமிட்டு மதிய உணவிற்கு வீடு சென்றால், இன்று வந்திருந்த உயிர்மை ஜுன் மாத இதழில் எஸ்.ராமகிருஷ்ணன் ‘தன்னை அறிந்த கர்வம்‘ என்ற தலைப்பில் ஜெயகாந்தனைப் பற்றி அருமையாக எழுதியிருக்கிறார். முடிந்தால் வாசியுங்கள்.

  ‘அகநாழிகை‘
  பொன்.வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 11. அறிவு ஜீவிகளுக்காக அவ்ர்களுக்கு புரியும் நடையில் பேசுகிறார். இவர்யொட்டி பலரும் இன்னடையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். கொட்டாவிதான் வரும். ஏன் எளிய தமிழ்சொற்களைத் தேர்ந்தெடுக்கக்கூடாது. எடுத்தால், பாமரன் என நினைப்பரோ?

  சிந்தாந்தாங்களுக்கு இளைஞர்கள் அடிமையாகி விடக்கூடாது.

  ஒரள்வுக்கு ஏற்ற்கொள்ளலாம். ஆயினும், அப்படி ஒரே சித்தாந்தத்தை பிடித்துக்கொண்டே இலக்கியம் நன்கு படைக்க முடியும்.

  பெண் எழுத்தாளர்களை இங்கு சுட்ட முடியும். ஒரே கலாச்சாரம் என்பது ஒரு சித்தாந்தம்.

  பல சிந்தாந்தன்களைத் தெரிந்து கொண்டு பரந்த மனப்பான்மை வளர்க்கலாம். ஆயினும், வனத்தில் மேய்ந்து இனத்தில் அடை என்பதைப் போல் இறுதியில் நும் சித்தாந்தத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லாவிட்டால், எல்லாமே போலி. நும் எழுத்தும் போலியாகி விடும்.

  பதிலளிநீக்கு
 12. //கருத்துக்களில் முரண்பாடு உடையவர்கள் பகைமை பாராட்டிக் கொண்டு இருப்பது அறிவுலகத்துக்கு பொருந்தாது. இசைவு என்பது இன்னொருவரின் எல்லா முயற்சிகளுக்கும் இணங்கி விடுவது அல்ல. முரண்பட்டவர்களிடையேதான் இசைவு மிகவும் தேவைப்படுகிறது.//


  மிக அற்புதமான வரிகள். யோசிக்க வைப்பதும் கூட.

  பதிலளிநீக்கு
 13. அருமையான நேர்காணல், பகிர்வுக்கு நன்றி.

  //
  இளைஞர்கள் முதலில் எழுத வேண்டும். சித்தாந்தத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படவேக் கூடாது.
  //
  இணையம் நிறைய பேருக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. ஆனாலும் வாசிப்பனுபவமே இல்லாமல் நிறைய பேர் எழுதுவது, பரந்த சிந்தனையில்லாத படைப்புகளையே உருவாக்குகிறது.

  ஒரு வேளை, நாளடைவில் பண்படலாம்.

  பதிலளிநீக்கு
 14. அகநாழிகை!
  //எழுதினாலும் எழுதாவிட்டாலும், ஜெயகாந்தன் என்ற ஆளுமை தீவிர வாசக மனதில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார் என்பதே உண்மை.//
  ஆமாங்க...

  குடந்தை அன்புமணி!
  உண்மைதான். இந்தப் பதிவிற்கு அப்படியொரு நோக்கமும் இருந்தது.


  குப்பன் யாஹூ!
  நன்றி.


  ஜ்யோவ்ராம் சுந்தர்!
  எனக்கும் அதே புரிதல்தான். நன்றிங்க.


  சந்தனமுல்லை!
  நன்றி.


  சுரேஷ்!
  நன்றி.


  முத்துவேல்!
  ஆமாம்.


  யாத்ரா!
  நன்றி.


  நா.கணேசன்!
  தங்கள் இ-மெயில் முகவரி தாருங்கள். தொலைபேசி எண்ணைத் தருகிறேன்.

  பதிலளிநீக்கு
 15. தீப்பெட்டி!
  நன்றி.

  pks!
  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

  அகநாழிகை!
  மீள்வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.
  நீங்கள் குறிப்பிட்டதை நானும் படித்தேன்.


  கொற்கை!
  சித்தாந்தத் தெளிவு வந்தால், நீங்கள் ஒரு சித்தாந்தத்தை தேர்ந்தெடுத்தே தீரவேண்டி இருக்கும்.


  ஆ.முத்துராமலிங்கம்!
  நன்றி.


  நர்சிம்!
  புரிதலுக்கு நன்றி.


  அமிர்தவர்ஷிணி அம்மாள்!
  நன்றி.


  ஜோ!
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!