கொண்டு வந்தவன்

எப்போதும்  சிரித்துக் கொண்டே இருப்பான். எவ்வளவு கேலி செய்தாலும் சிரித்துக் கொண்டே இருப்பான். சிலநேரங்களில் கோபம் கடுமையாக வரும். உர்ரென்று இருப்பான். ஆனால் அதை அவனால் தொடர்ந்து அடைகாக்கவும் முடியாது.  தக்கவைப்பதற்கு படாதபாடு படுவான். கொஞ்சநேரத்தில்  இயல்பாகிவிடுவான். அடக்கமாட்டாமல் பொய்க் கோபம் தெறித்துப் போக லேசாக உடைந்த முன்னத்திப் பல் தெரிய கனமாய் சிரிப்பான்.

நல்ல திடமான உடல்வாகு. கிராமத்து உழைப்பாளியின் வைரம் பாய்ந்த தோற்றம். அவன் அறிமுகமானபோது அவனுக்கும் தொழிற்சங்கத்துக்கும் ரொம்ப தூரம். பொதுமேலாளரின் பிரத்யேக துறையில் கடைநிலை ஊழியராக இருந்தான். உயர் பொறுப்பிலிருப்பவரின் நேரடிப் பார்வையில் இருந்த- அவருக்கு பிரியமான-அவரது இல்லத்துப் பணிகளையும் கூட செய்கிற விசுவாசமான ஊழியன். யூனியன்காரர்களை எதோ பிள்ளைப்பிடிக்க  வருபவர்களைப் போல பார்த்து  காணாமல் போய்விடுவான்.

கிராமவங்கிகளின் வெப்பம் மிகுந்த காலம் அது. சுய மரியாதைக்கும், அடிப்படை வசதிகளுக்கும் கூட  தெருவில் நின்று கோஷங்கள் போட்டு, போட்டு, தொடர்ந்து போராடி போராடி நிமிர்ந்த காலம் அது. வாழ்க்கையின் சூடு வரதராஜப்பெருமாளை தொழிற்சங்கத்தோடு நெருக்கமாக்கியது. கையை உயர்த்தி 'ஜிந்தாபாத்' என்று ஒரு தர்ணாவில் எல்லோருடனும் சேர்ந்து குரல் கொடுக்க வைத்தது. அவன் அவனுக்கு எவ்வளவு உண்மையாய் இருந்திருக்கிறான்.

சாத்தூர் வைப்பாற்றங்கரையில் 42.பி,  எல்.எப். தெருவிலிருந்த சங்க அலுவலகத்தில்,  பதினைந்து வருடங்களுக்கு முன்பு எங்களோடு அவன் வாழ்ந்த காலங்கள் எதோ மேகத்திட்டுக்கள் போல கனவுப் பிரதேசங்களாக இப்போது தெரிகின்றன. காலையில் எழுந்திருப்பான்  சீக்கிரமே குளிப்பான். அவனது துணிகளை ஒழுங்காய் துவைத்துப்போடுவான். நேரத்துக்கு தவறாமல் சாப்பிட்டுவிடுவான். காலாகாலத்தில் தூங்குவான். இந்த வரைமுறைகளோடு தெளிவாக தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டு  அந்த அறையில் எங்களோடு வாழ்ந்திருக்கிறான் என்பது ரொம்ப ஆச்சரியாமான சமாச்சாரம்தான்.

எங்கெங்கோ அலைந்துவிட்டு நடுச்சாமத்தைத் தாண்டி கதவைத்தட்டும்போது திறந்துவிட்டு "சாப்பிட்டீங்களா" என்று கேள்வி கேட்டுவிட்டு படுத்துக்கொள்வான். அவன் அனுப்பி வைத்த டீக்களோடுதான் பலநாள் காலைகள்  சுள்ளென்று கண்ணில் பட்டிருக்கின்றன. சர்க்குலர் எழுதும்போது, டைப் அடிக்கும்போது, ரோனியோ சுத்தும்போது பக்கத்திலேயே காத்திருப்பான். அவைகளைத் தபாலில் அனுப்பும்போது அதற்காகவே அவன் பிறந்திருக்கிறமாதிரி அப்படி மெனக்கெடுவான். சில நாட்களில் சங்க வேலைகளில் நாங்கள் நான்கைந்து பேர் மூழ்கிக் கிடக்க வெறும் டீக்கள் மட்டுமே ஆகாரமாயிருக்கும். சாப்பிட பணம் இருக்காது. வரதராஜப் பெருமாள் ஊருக்குள் யாரிடமாவது நூறு ருபாய் கடன்வாங்கி வந்துவிடுவான். வெளியே வெறும் மணல்திட்டுக்களாய் இருந்தாலும், தோண்டத் தோண்ட தண்ணீர் ஊற்றெடுக்கும் ஈரமான வைப்பாற்று நினைவுகள் அவை.

அவனுக்கு எங்களோடு அப்படி ஒரு பந்தம் எப்படி வந்தது என்று இப்போதும் தெரியவில்லை. தொழிற்சங்கத்தின் நோக்கம் என்ன? அப்போது அவனுக்கு தெரியாது.  இலக்கியம்? அமைதியாய் பார்த்துக் கொண்டு இருப்பான். அல்லது வெளியே பால்கனியில் நின்று தெருவை பார்த்துக் கொண்டிருப்பான். மார்க்சீயம் என்பது புரியாத பாஷையாகவே இருந்திருக்கலாம்.

அவன் ஒன்றைத்தான் தெரிந்து வைத்திருந்தான். "எல்லோரும் நல்லாயிருக்கணும்". அவ்வளவுதான். அந்த எளிய மனிதன் புரிந்து கொண்டு இருந்த 'அரிய தத்துவத்தின்' எளிய வார்த்தைகள் இவை. இதுதான் அவனை அந்த சங்க அலுவலகத்தில் கட்டிப் போட்டு இருந்திருக்க வேண்டும். அங்கு வருகிறவர்கள் அனைவரையும் தெரிந்து வைத்திருப்பான். அவர்களோடு எதாவது பேசிக்கொள்வான். எல்லோரையும் தோழர் என்றே அழைத்தான். சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக வேண்டும் என்று கேட்டபோது அவன் மறுக்கவில்லை. சங்கத் தலைமைக்குள் நிகழ்ந்த குழப்பங்கள், பிளவுகள், முரண்பாடுகள் முற்றிய நேரம். வரதராஜப்பெருமாள்  எல்லாவற்றையும் மிக இயல்பாக புரிந்து கொண்டதோடு அல்லாமல், சரியெனப் படுவதில் ஆச்சரியமான உறுதியோடு இருந்தான். நிர்வாகத்தோடு சமரசம் தேவையில்லை என்பதை சாமானியர்களே எப்போதும் சரியாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

வங்கியில் 44 நாட்கள் வீரஞ்செறிந்த வேலைநிறுத்தம் முடிவுற்றபோது விரக்தியும், வேதனையுமே மிஞ்சியிருந்தன. சில தலைவர்களின் தடுமாற்றம்,  நிர்வாகத்தின் பிடிவாதம் , கோரிக்கைகள் நிறைவேறாமல் போன ஏமாற்றம் ஒரு வெற்றிடத்தை கொண்டு வந்திருந்தன. சங்கமே பிளவுபட்டது. இனி தொழிற்சங்க இயக்கமே பாண்டியன் கிராம வங்கியில் இருக்காது என்று பேசப்பட்டது. தினம்தோறும் பதினைந்து தபால்களுக்கு மேல் வரும் சங்க அலுவலகத்திற்கு அந்த சமயங்களில் ஒன்றோ இரண்டோதான் வரும்.

கலகலப்பாய் இருந்த சூழல் மொத்தமாய் சிதறடிக்கப்பட்ட ஒரு மௌனம் உறைந்த அறைக்குள் அவன் எப்படி இருந்திருப்பான் . அந்த அறை இருண்டு கிடக்காமல், தூசி பிடித்து போகாமல் ஒரு பூதம் போல பாதுகாத்திருந்தான். ஊதி அணைக்கப்பட்ட  சுடரை மீண்டும் ஏற்றி அதை அனைவருக்கும் முதலில் கொண்டு வந்தவன் அவன். பிறகு அவனுக்கு திருமணமாகி சொந்த ஊர்ப்பக்கம் சென்றுவிட்டான். எல்லோர் வாழ்க்கையிலும் மாற்றங்கள். கமிட்டிக் கூட்டங்களில், மாநாடுகளில், போராட்ட காலங்களில் அவனைப் பார்க்கமுடியும். எல்லோருக்கும் தண்ணீர் கொடுத்துக் கொண்டிருப்பான். அதே மாதிரி சிரிப்பான். தொழிற்சங்க ஞானமும், நடவடிக்கைகளும், திருமணம்...குழந்தைகள் என்னும் வாழ்வின் பந்தங்கள் அவனது  இயல்பை கொஞ்சம்கூட மாற்றியிருக்கவில்லை.

என்ன காரணம் என்னவென்று தெரியவில்லை. ஒரு பொதுக்குழுவுக்கு அவன் வரமுடியவில்லை. அந்த கமிட்டியிலும் அவன் இல்லை. சில வருடங்களுக்கு முன்பு கோவில்பட்டியில் ஒரு பஸ்ஸில் பார்த்தேன். இறங்கி டீ வாங்கிக் கொடுத்தான்.  கொஞ்ச நேரம் பேசிவிட்டு பிரிந்தோம். அதற்குப் பிறகு அடிக்கடி காலையில் போன் செய்வான். சங்க சம்பந்தப்பட்ட முக்கிய விஷயங்களை கேட்டுக் கொள்வான். "அப்பா..இன்னும் ஊர் சுத்துராறாம்மா"என் மகளோடு பேசுவான். பக்கத்தில் இருக்கும்போதுதான் ஒருவரைப் பற்றிய பிரக்ஞை நமக்கு இருக்கிறது. வாழ்க்கையின் ஓட்டத்தில் வரதராஜப்பெருமாள் தொலைதூரத்தில் போயிருந்தான். ஒருநாள் காலையில், "ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருக்கேன். செலவு நிறைய ஆகுது. மெடிக்கல் அட்வான்ஸ் வாங்கித்தரலாமா?" என்று வரதராஜப்பெருமாளின் குரல் சன்னமாய் கேட்டபோது  அதிர்ந்து போனேன். அப்புறம்தான் தெரிந்தது,  அவனை ஹெபிடிட்டஸ்-பி தாக்கியிருப்பதும், மஞ்சள் காமாலையில் அவதிப்படுவதும் போய் பார்த்தபோது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. கனத்த உடம்பு மெலிந்து உருக்குலைந்து இருந்தது.

கொஞ்சம் தேறிவந்த பிறகு அருகில் உள்ள கிளைக்கு மாறுதல் கேட்டிருந்தான். சங்கத்திலிருந்து முயற்சிகள் எடுத்து வாங்கிக் கொடுக்கப்பட்டது.  இடையில் நடந்த சங்க மாநாட்டிற்கு,  கூட்டங்களுக்கு வந்துவிடுவான். அந்த சிரிப்பு அரைகுறை ஜீவனோடு இருந்தது. இரண்டு வருடம் நோயோடு போராடி கடைசியில் தோற்றுப் போனான்.அவன் இறந்ததைக் கூட வங்கிக்கு தெரிவிக்காமல் ஊரில் அடக்கம் செய்துவிட்டனர்.  ஒருமுறை அவன் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை. ம்.கடைசியாக அவனை சந்தித்ததும் ஒரு தர்ணாவிலோ...கோவில்பட்டி வட்டாரக் கூட்டத்திலோதான். எல்லோருக்கும் பிஸ்கெட் பரிமாறியதாய் ஞாபகம் இருக்கிறது. அதுதான் அவனது சித்திரமாகவும்  நிறைந்திருக்கிறது. தோழமையை கையோடு கொண்டுவந்து எல்லோருக்கும் கொடுத்தவன் அவன்.

கருத்துகள்

9 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நல்லாயிருக்கனும்கறதுக்காக ஆரம்பிக்கபட்டது தானே தொழிற்சங்கங்கள் அவருக்கு என்ன முடியுமோ அதுபோல வாழ்ந்திருக்கார்
    (இல்ல இப்படி தான் வாழனும் நினைச்சிருந்தார்னா) இன்னைக்கு நம்ம எத்தனை பேர் நமக்கு பிடிச்ச வாழ்க்கை
    வாழ்ந்துகிட்டு இருக்கோம்

    பதிலளிநீக்கு
  2. // சர்க்குலர் எழுதும்போது, டைப் அடிக்கும்போது, ரோனியோ சுத்தும்போது பக்கத்திலேயே காத்திருபருபான். அவைகளைத் தபாலில் அனுப்பும்போது அதற்காகவே அவன் பிறந்திருக்கிறமாதிரி அப்படி மெனக்கெடுவான்//

    ஒவ்வொரு பேச்சாற்றல் மிகுந்த தலைவருக்குப் பின்னால், செயலாற்றல் மிகுந்த தோழர்கள் இருப்பதை ஒளிவுமறைவில்லாமல் எழுதியதற்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா10 மே, 2009 அன்று AM 10:51

    nice one...seen many people like dis in real life.
    -siva

    பதிலளிநீக்கு
  4. பொங்கி வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டே படிக்க வேண்டி இருந்தது.

    இப்படியும் மனிதர்கள்...

    பதிலளிநீக்கு
  5. ஒரு எளிய மனிதனைப் பற்றி மனதையும், அறிவையும் தொடும் வண்ணம் நேர்த்தியாக அறிமுகம் செய்துள்ளீர்கள். இது போன்ற மனிதர்களே சமூகத்தின் அனைத்துச் செயல்களுக்கும், செயல்பாடுகளுக்கும் அடிப்படையாகத் திகழ்கிறார்கள்.இது போன்ற எவ்வித ஈகோகளும் இல்லாதவர்கள் மட்டுமே தொழிற்சங்கத்தைக் கூட காப்பாற்ற முடியும்.

    பதிலளிநீக்கு
  6. எப்போது படித்தாலும் கண்கள் பனிக்கிற
    நினைவுகள். வரதன், தொழிற்சங்கம், நட்பு.
    நிழலாடுகிறது.

    பதிலளிநீக்கு
  7. ஜே!
    ரொம்ப அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் பகிர்வு இன்னும் இந்தப் பதிவுக்கு அர்த்தம் சேர்க்கிறது.

    அப்பாவி முரு!
    //ஒவ்வொரு பேச்சாற்றல் மிகுந்த தலைவருக்குப் பின்னால், செயலாற்றல் மிகுந்த தோழர்கள் இருப்பதை ஒளிவுமறைவில்லாமல் எழுதியதற்கு பாராட்டுக்கள்//
    நன்றி.

    அனானி!
    நன்றி.

    தீபா!
    இப்படித்தான் நிரைய பேர் இயக்கத்தில் இருக்கிறார்கள்.

    மங்களூர் சிவா!
    நன்றி.

    சுபா!
    //இது போன்ற மனிதர்களே சமூகத்தின் அனைத்துச் செயல்களுக்கும், செயல்பாடுகளுக்கும் அடிப்படையாகத் திகழ்கிறார்கள்.//
    உண்மை.

    காமராஜ்!
    தோழா! உண்மை!

    பதிலளிநீக்கு
  8. அன்பின் மாதவராஜ்

    தொழிற்சங்கங்களில் தலைமைப் பொறுப்பினில் இருப்பவர்கள் அடிமட்டத் தொண்டனையும் நினைவில் நிறுத்தி ஒரு அஞ்சல் இடுகை போடுவது ஒரு அரிய செயல். இதற்கு வரதராஜப் பெருமாளின் அரிய நட்பே காரணமாக இருக்க முடியும். சங்க உறுப்பினன் என்பதனை விட நல்ல மனிதன் மற்றும் நல்ல நண்பன் என்ற தகுதியே இவ்வரிய இடுகை அஞ்சலிக்கு வழி வகுத்திருக்கிறது.

    நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!