அம்மா கேட்டாள்.
“எங்கே! ஒண்ணு ரெண்டு சொல்லு பார்ப்போம்!”
“ஒண்ணு”
மௌனம். அதற்கு மேல் குழந்தையால் சொல்ல முடியவில்லை.
மீண்டும், “சொல்லு” என்றாள் அம்மா.
“ஒண்ணு”
அத்துடன் நின்று விட்டது. அம்மா தரதரவென பையனை இழுத்துக் கொண்டு ஆசிரியரிடம் போனாள்.
“இவனுக்கு ஒண்ணு, ரெண்டு சொல்லிக் கொடுத்திருக்கீங்களா?” என்று கேட்டாள்.
“ஓ, கேட்டுப்பாருங்கள்! நூறு வரைக்கும் சொல்வானே!” என்றார் ஆசிரியர்.
“நீங்களே கேட்டுப்பாருங்க..” அம்மா சலித்தாள்.
:சொல்லுப்பா” என்றார் ஆசிரியர்.
“ஒண்ணு”
“ம்”
“ரெண்டு”
“ம்”
“மூணு”
“ம்...ம்”
“நாலு”
“ம்”
பையன் நூறு வரைக்கும் தயக்கமின்றி, ஆசிரியரின் “ம்’மைத்தொடர்ந்து சொன்னான்.
அம்மாவுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.
'ஒவ்வொரு மனிதனின் முயற்சிக்கும் ஒரு அங்கீகாரம் தேவைப்படுகிறது. இந்த சிறுவனுக்கு ஆசிரியரின் ”ம்”தான் அங்கீகாரம்’ என்று ஆரம்பித்தது மிக நுட்பமான, உளவியல் பார்வையோடு கல்லூரிப் பேராசிரியர் மாடசாமி அவர்கள் எழுதிய புத்தகம்தான் ‘எனக்குரிய இடம் எங்கே?’.தனது கல்விக்கூட சிந்தனைகளை, அனுபவங்களின் மூலம் பகிர்ந்து கொண்டு இருக்கிறார். வகுப்பறையில் ஒரு மாணவனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிற, அல்லது அவன் உட்காருகிற இடம் அவனுடைய இடம் அல்ல, அவனுடைய இடத்தை அவனேத் தேடி அறிய அல்லது அடைய வைப்பதுதான் கல்விக்கூடங்களின் தர்மம் என இந்த புத்தகம் மிக நெருக்கமாக உட்கார்ந்து நம்மோடு உரையாடுகிறது. 2004ல் வந்த புத்தகம், இப்போதுதான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
வகுப்பறை என்பது ஒருவழிப் பாதையல்ல, கூட்டு முயற்சி என்று பேராசிரியர் மாடசாமி இந்த சமூகத்துக்கு வழிமொழிகிறார். விவாதங்கள் மற்றும் உரையாடல்களோடு வகுப்பறையை ஒரு இயக்கமாக அனுபவித்து எழுதியிருக்கிறார்.வெற்றி, தோல்வி, மனஸ்தாபம், நட்பு, எழுச்சி, வீழ்ச்சி எல்லாம் கலந்த ஜீவனுள்ள சந்திப்பே வகுப்பறையாய் இருக்க வேண்டும் என்ற கனவை இந்த புத்தகம் அடைகாத்துக் கொண்டு இருக்கிறது. கற்பவரும், கற்றுத் தருபவரும் ஒரு சேர வளருமிடம்தான் வகுப்பறை என்பது படிக்கும் போது நமக்குப் புரிகிறது.
ஆசிரியப்பணியை வெறும் தொழிலாக மட்டும் பார்க்காமல், அதனை உயிரோட்டமுள்ளதாக்கிட ஒரு ஆசிரியர் ஈடுபடும் முயற்சிகளும், அதன் அனுபவங்களும்தான் இந்த ‘எனக்குரிய இடம் எங்கே’ புத்தகம். ஒவ்வொரு நாளும் வகுப்பறை புதிது புதிதாக மாறுவதையும், சாதாரணமாய் காட்சியளிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவராய் சட்டென்று ஒரு சந்தர்ப்பத்தில் வெளிப்பட்டு ஆச்சரியம் தருவதையும் சுவராசியமாக சொல்கிறது. அப்படி வெளிப்படும் இடம்தான் அவர்களின் இடமாக இருக்கிறது. அடங்காப்பிடாரியாக இருக்கும் ஆதிமூலம் சில வார்த்தைகளில் அன்பானவனாகிறான். எப்போதுமே ஒதுங்கி இருக்கும் வாசுகி ஒருநாள் முன்வந்து நிற்கிறாள். பலரின் கதைகளோடு வகுப்பறை நமக்குள் அற்புதமான வெளியாக நமக்குள் புலர்ந்து கொண்டே இருக்கிறது.தனது சோதனை முயற்சிகள் சொந்த வாழ்வில் தனது மோசமான குணங்களைக் கூட மாற்றிவிடுகிற அதிசயத்தை அந்த ஆசிரியர் காண்கிறார். மாற்றங்களும் ஒருவழிப் பாதையல்ல என்பதை மிக இயல்பாக, போகிற போக்கில் சொல்லிச் செல்கின்றன புத்தகத்தின் பக்கங்கள்.
சங்க இலக்கியப் பாடல்களை வாசிக்கும் முறையில் ஆசிரியர் கையாளும் விதம் அலாதியாய் இருக்கிறது. கடிதம் எழுதக் கொடுக்கப்படும் வழக்கமான தலைப்புகளை விட்டு விட்டு ‘எதிர்காலம் குறித்து கவலையுற்று தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் நண்பனுக்கு’ கடிதம் எழுதச் சொல்கிறார். ஒரு வீட்டில் அவரவர்க்கு விருப்பமான தொலைகாட்சிச் சேனல்களை மாற்றுவதில் உண்டாகும் சூழலை நாடகக்காட்சியாக்கச் சொல்கிறார். இப்படி வாழ்விலிருந்தே கற்றுக்கொள்ளும் வகுப்பறையாக மாறுகின்றது. ஆச்சரியமாக இருக்கின்றன மாணவர்களின் சிந்தனைகளும், வெளிப்பாடுகளும். ஐம்பது வயதானாலும் சினிமாவில் கதாநாயகனாகவே நீடிப்பது போல பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் இருப்பதா என கேள்வி எழுப்பப்படுகிறது. மாணவர்கள் வகுப்பறையின் நாயகர்களாக உருவெடுப்பதை உணரமுடிகிறது.ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு நட்சத்திரம் இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
புதுமையும், நம்பிக்கையும் புத்தகம் முழுவதும் நிரம்பியிருக்கிறது. பேராசிரியர் மாடசாமி அவர்கள் எழுத்தில் பல வரிகள் நம் மனதில் காலத்தின் குரலாக ஒலிக்கின்றது. நீங்களும் அதை இங்கே கேட்டுப்பாருங்கள்.
“வாய் மூடிக் கிடப்பது அல்லது ஆளாளுக்குப் பேசுவது இரண்டுமே விவாதம் என்ற நாகரீகத்தின் விரோதிகள்.இவற்றைச் சமூகத்திடம் இருந்துதான் மாணவர்கள் கற்கிறார்கள்”
“அனாவசியத் தலையீடு இல்லாவிட்டால் வாழ்க்கை, வகுப்பறை இரண்டுமே அழகாய்த்தான் இருக்கின்றன”
“ஆசிரியருக்கு நூறு முகம் வேண்டும். வகுப்பறைக்கு நூறு கண்கள் வேண்டும். எதற்கு? ஒவ்வொரு மாணவனையும் பார்ப்பதற்கு! கண்டுபிடிப்பதற்கு!”
“ஒரு ஆசிரியர் காயப்படுத்தாமல் இருந்தால் மட்டும் போதுமா? காயங்களைக் கண்டுபிடித்து மருந்து போட வேண்டாமா?”
“பூட்டிய வாய்களும், அவற்றின் உறைந்த மௌனமுமே வகுப்பறையின் இலக்கணமாயுள்ளன. அர்த்தமுள்ள உரையாடலுக்குப் பதிலாக ஆசிரியரின் ஒற்றைக்குரலே வகுப்பறையின் சங்கீதமாக உள்ளது”
“குரல்களை உடைப்பது மொழி வகுப்பின் முதல் கடமை”
“விசேசமான நபர்களின் விசேசமான சொத்தல்ல கற்பனை. உண்மையான முயற்சிகளின் போது அது ஊற்றெடுக்கிறது.”
“வீட்டுக்குள் ஒரு பள்ளிக்கூடம் வேண்டும். பள்ளிக்கூடத்திற்குள் ஒரு வீடு வேண்டும்”
“ஒவ்வொருவரும் வெளிப்படுவதற்கு ஒரு வாய்ப்பு வேண்டும். வெளிப்படும்போது காண்பதற்கு கண்கள் வேண்டும்”
“வாய்ப்பும், அங்கீகாரமும் ஒழுங்கீனத்திற்கு மருந்து”
“வாழ்க்கை வைக்கும் பரீட்சைகள் வித்தியாசமானவை. யாரும் யாரைப் பார்த்தும் காப்பியடிக்க முடியாது.”
புத்தகத்தைப் படித்த பிறகு, இப்படியொரு ஆசிரியராக நாம் இல்லாமல் போய்விட்டோமே என வாய்ப்பிழந்த வலி நமக்கு ஏற்படுகிறது. எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் முன்பக்கத்தில் சொல்லியிருப்பது போல, “தமிழில் இது முதல் முயற்சி, துணிச்சலான முயற்சி.”
வெளியிடு:
எனக்குரிய இடம் எங்கே?
(கல்விக்கூட சிந்தனைகள்)
Aruvi publications
19, Santhanam Nagar
Near Kovalan Nagar
Madurai -625003
email: aruvi_ml@yahoo.co.in
பக்கங்கள் : 120
விலை: ரூ.40/-
*
அருமை தோழா
பதிலளிநீக்குஇப்புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல இதுபோன்ற ஆசிரியருக்கும், புத்தகங்களுக்கும் பல "ம்" கொட்டுவோம்.
பதிலளிநீக்குஅருமையான அறிமுகம்.
பதிலளிநீக்கு//கற்பவரும், கற்றுத் தருபவரும் ஒரு சேர வளருமிடம்தான் வகுப்பறை என்பது படிக்கும் போது நமக்குப் புரிகிறது.//
அப்போதுதானே பல புதிய சிந்தனைகள் பிறக்கும்.
அனைவரும் உணர வேண்டிய ஒரு விடயம்.
நல்ல அறிமுகம் அண்ணா
பதிலளிநீக்குபுத்தகம் பற்றிய நல்ல முன்னுரையை "ம்" ஆல் கொடுத்துவிட்டீர்கள்!!! ரொம்ப அருமையான புத்தக விமர்சனம்!!
பதிலளிநீக்குநல்லதொரு அறிமுகத்தைச் செய்திருக்கிறீர்கள், பதிவு முழுவதுமே பேராசிரியர் அவர்களின் சிந்தனைத் தெறிப்புகள்,,,,
பதிலளிநீக்குஇப்படியொரு ஆசிரியர் நமக்கு கிடைத்திருக்கலாமே என்ற ஏக்கத்தை உருவாக்கியது.
அருமையான ஒரு புத்தகத்துக்கு மிகச் சிறப்பான அறிமுகம் கொடுத்துள்ளீர்கள். எனக்கு உடனே வாங்கிப் படிக்க வேண்டும் போலிருக்கிறது.
பதிலளிநீக்கு//இப்படியொரு ஆசிரியராக நாம் இல்லாமல் போய்விட்டோமே என வாய்ப்பிழந்த வலி நமக்கு ஏற்படுகிறது.// டோட்டோசான் படித்த போது நானும் இவ்வாறு உணர்ந்தேன்.
அருமையான புத்தகம். படிக்கும் ஆவலைத் தூண்டியது உங்கள் பதிவு.
பதிலளிநீக்குநூலைப் படிக்கும் ஆர்வத்தினை தந்தது உங்கள் பதிவு. நன்றி
பதிலளிநீக்குdear mathavaraj!
பதிலளிநீக்குarumaiyaana puthagam patri azhagaha arimuham.
kootai udaithu manam veesum ROJA vaaha velippada,
Vaaipum, Angeeharamum avasiyam yenbadai,
thelivana oru nool arimuhathaal theriya vaika ungalin muyarchi!
Nandri thozharey!
Ippadi innum pala nalla nalla puthahangalai
arimuhapaduthungall.
இதுவரை வாசித்திராத, நம் கல்வியியல் சமுதயதிர்க்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் தேவையான புத்தகத்தை தங்களுக்கே உள்ள முறையில் அறிமுகம் செய்துள்ளீர்கள்...
பதிலளிநீக்குமக்களுக்கான குறும் படங்களை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்வதும் நன்றாக இருந்தது. தங்களின் நேற்றைய அருப்புகோட்டை நிகழ்ச்சியில் பங்கு கொண்டேன்
நா.நாராயணன்
நல்ல அறிமுகம். பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குகாமராஜ்!
பதிலளிநீக்குகையேடு!
மணிநேரன்!
புன்னகை!
ஆதவா!
யாத்ரா!
தீபா!
வடகரைவேலன்!
தீப்பெடி!
அனானி!
அமுதா!
அனைவரின் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.
நல்ல புத்தகங்களுக்கு வரவேற்பும், ஆதரவும் எப்போதும் இருக்கத்தான் செய்கின்றன என்பது சந்தோஷமளிக்கிறது.
கல்வி குறித்து நாம் இன்னும் கவனமற்ற பார்வைதான் கொண்டு இருக்கிறோம்.
அதி வித்தியாசமான சிந்தனைகளும், முயற்சிகளும் மலரும்போது, ஆச்சரியத்தோடு பார்க்கிறோம்.
இந்த பதிவு எனக்கு மிக நிறைவான பதிவுகளில் ஒன்று.
/
பதிலளிநீக்குபையன் நூறு வரைக்கும் தயக்கமின்றி, ஆசிரியரின் “ம்’மைத்தொடர்ந்து சொன்னான்.
அம்மாவுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.
/
wow
அருமை!
நல்ல அறிமுகம்.