மனிதர்களும் மிருகங்களும் அல்லது மிருகங்களும் மனிதர்களும்

monkey_404

சில மாதங்களுக்கு முன்பு பராசக்தி மகளிர் கல்லூரியிலிருந்து சினிமா குறித்துப் பேசுவதற்கு அழைத்திருந்தார்கள். தென்காசியிலிருந்து குற்றாலத்துக்குப் போகிற பசுமை பூத்துக்குலுங்கும் வழியில், மேலகரம் தாண்டி இருந்தது கல்லூரி. வானத்துக்கும் பூமிக்குமாக திரண்டு கிடந்த மலைகள் சூழ்ந்த அழகில் யாரும் சிலிர்த்துத்தான் போவார்கள். அதென்னமோத் தெரியவில்லை. குற்றாலத்தின் அருகில் வந்ததுமே ‘வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சும்’ குற்றாலக் குறவஞ்சி, குழந்தைகளின் சேர்ந்திசை போல தானாக நமக்குள் இசைக்கத் தொடங்குகிறது.

நிழல்களற்ற அடர்பச்சை நிழல்களின் அடியில், கல்லூரியின் கட்டிடங்களிலும் இயற்கை ஊறிக்கிடந்தது. சிறிது நேரம் கல்லூரி முதல்வரோடு பேசியிருந்து விட்டு, கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஹாலுக்குச் சென்றேன். மரங்களாய் பரந்திருந்த எந்த இடத்திலும் பெண்களை பார்க்க முடியவில்லை. ஆச்சரியமாய் இருந்தது. கட்டிடங்களின் அறைகளில் எல்லாமே கதவுகளுக்கு வெளியே இன்னொரு கம்பிக் கதவு அமைக்கப்பட்டு எதோ ஜெயில் போலிருப்பதை அப்போதுதான் கவனித்தேன்.என்னை அழைத்துச் சென்ற பியூனிடம் கேட்டேன்.

“அதுவா.. சார், இங்கே குரங்குகளின் தொல்லை தாங்க முடியாது” என்றார்.

”அதுதான் கதவு இருக்கிறதே...”

“ஐயோ, சார்... கதவு சாத்தியிருந்தாலும், நாதங்கி போட்டிருந்தாலும், மனுசன் மாதிரி அழகா திறந்துரும்”

சொல்லி முடிப்பதற்குள் ஒரு மரத்திலிருந்து ஐந்தாறு குரங்குகள் சடசடவென்று இறங்கி ஒன்றையொன்று விரட்டிக்கொண்டு ஓடின. சுற்றிப் பார்க்க ஆரம்பித்த போதுதான் புரிந்தது. அவ்வளவு குரங்குகள். கட்டிடங்களின் ஜன்னலோரங்களில், மரங்களில் என்று பார்க்குமிடமெல்லாம் வால் நீண்ட அந்த சாம்பல் நிறப் பிராணிகள். ஆராய்ச்சியும், அறிவும் தொனிக்கும் மனிதக் கண்களின் சாயல் அவைகளின் பார்வையில் இருந்தது.

“டிபன் பாக்ஸை எடுத்துட்டுப் போய் திறந்து சாப்பிட்டு விடும்..”

“அப்படியா..”

“பொண்ணுங்களோட புஸ்தகங்களை எடுத்துட்டுப் போய் கிழிச்சுரும்”

அடக்க மாட்டாமல் சிரித்தேன்.

“என்ன சார் சிரிக்கிறீங்க.. இங்க யாரும் தனியா வெளியே வர முடியாது. வரமாட்டாங்க. நிறைய பொண்ணுங்களை பாடாப் படுத்தியிருக்கு”

திரும்பவும் சிரித்தேன்.

“இப்ப எதுக்கு சார் சிரிக்கிறிங்க..”

“இல்ல.. பசங்க இல்லாத குறையை இந்தக் குரங்குகள் போக்கியிருக்கும்”

மீட்டிங் ஹால் வந்துவிட்டது. பியூன் விடைபெற்றுக் கொண்டார். வாசலில் நின்றிருந்த இரண்டு மூன்று ஆசரியைகள் வணக்கம் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டனர். நான் உள்ளே சென்றதும் கவனமாக கதவை உள்ளே பூட்டிக் கொண்டனர். இருநூற்றுக்கும் மேல் மாணவிகள் வரிசையாய் முன்னே உட்கார்ந்திருந்தனர். என்னை வரவேற்றும், சினிமா சம்பந்தமாகவும் ஒருவர் பேச ஆரம்பித்தார். மேடையில் உட்கார்ந்திருந்த நான் தற்செயலாக பக்கவாட்டில் பார்த்தேன். இரண்டு குரங்குகள் ஜன்னல் ஓரங்களில் உட்கார்ந்து உள்ளுக்குள் மிகக் கவனமாக பார்த்துக் கொண்டு இருந்தன. ‘என்னடா இது அறுவை’ என்கிற மாதிரி அதிலொன்று தலையைச் சொறிந்து கொண்டது. உள்ளே மற்றவர்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள் என்று இன்னொரு குரங்கு ஆராய்ந்தது.

இந்த மைக்கின் முன்னால் நின்று மனிதர் பேசுவது இந்தக் குரங்குகளுக்கு எப்படி தெரியும் என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போதே என்னை பேச அழைத்தார்கள். நான் zoo படத்தைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன். அந்தப் படத்தில் காமிரா கம்பிகளின் உட்பக்கம் இருந்து இயங்கி இருக்கும். மிருகங்களின் கண்களில் இருந்து படம் பிடிக்கப்பட்டு இருக்கும். மிருகங்களிடம் இருக்கும் பல அங்க சேஷ்டைகள் மனிதர்களிடம் இருப்பதை உணர வைத்திருப்பார்கள். கம்பிகளுக்கு வெளியே மனிதர்கள் நடமாடுவது மிருகங்களுக்கு zoo  போலத் தானே தெரியும் என்பதுதான் அந்தப் படத்தின் குரல்.

“இப்போது நாம் உள்ளே இருக்கிறோம். இந்த குரங்குகள் வெளியே இருந்து நம்மைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றன”என்று நான் சொன்ன போது, மாணவிகள் ரசித்துச் சிரித்தனர். ஜன்னலில் காச் மூச்சென்று அதுகளும் சத்தம் போட்டன. திரும்பிப் பார்த்தேன். மேலும் இரண்டு குரங்குகள் வந்து பார்த்துக்கொண்டு இருந்தன.

கருத்துகள்

15 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. வாவ்.. ரொம்ப சுவாரஸ்யம்.
    சொன்ன விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் விளையாட்டாகச் சொல்லி இருந்தாலும் உண்மை நிலை இதுதான் நண்பரே.. இன்று மனிதனுக்கும் இருக்கும் மிருகம்தான் பிரதானமாக உலா வருகிறது.. அடுத்தவரை கஷ்டப்படுத்தி சுகம் காணும் குணம் பெருகி வருவது வருத்தத்தை தருகிறது..

    பதிலளிநீக்கு
  3. //குரங்குகள் வெளியே இருந்து நம்மைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றன//

    நம்முள் உறங்கும் குரங்கை தேடுகின்றனவோ

    பதிலளிநீக்கு
  4. //கம்பிகளுக்கு வெளியே மனிதர்கள் நடமாடுவது மிருகங்களுக்கு zoo போலத் தானே தெரியும் என்பதுதான் அந்தப் படத்தின் குரல்.//

    இதுவும் உண்மைதான! ஹா...ஹா..!

    எளிய சொற்களில் அனுபவத்தோடு
    மிக அழகாக எழுதியிருக்கீங்க
    ரசித்துப் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  5. /
    ‘என்னடா இது அறுவை’ என்கிற மாதிரி அதிலொன்று தலையைச் சொறிந்து கொண்டது.
    /

    :))))
    ROTFL

    பதிலளிநீக்கு
  6. நல்லதொரு நகைச்சுவையான பதிவு!

    பதிலளிநீக்கு
  7. கும்க்கி!
    நன்றி.

    முத்துலட்சுமி-கயல்விழி!
    நன்றி.

    சந்தனமுல்லை!
    நன்றி.

    கார்த்திகைப் பாண்டியன்!
    பகிர்வுக்கு நன்றி.

    திப்பெட்டி!
    //நம்முள் உறங்கும் குரங்கை தேடுகின்றனவோ//
    தங்களைத்தான் தேடுகின்றன.

    ஆ.முத்துராமலிங்கம்!
    வருகைக்கும், ரசனைக்கும் நன்றி.

    வினோத்!
    நன்றி.

    தீபா!
    நன்றி.

    மங்களூர் சிவா!
    ரசிப்புக்கு நன்றி.

    ச.தமிழ்ச்செல்வன்!
    தப்பாக ஏதும் சொல்ல்விட்டேனோ!!!

    டாக்டர் ருத்ரன்!
    நன்றி சார்.

    தமிழ் வெங்கட்!
    வருகைக்கும், புரிதலுக்கும் நன்றி.

    ஜோ!
    புரிதலுக்க் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. இந்த அனுபவம் மிகவும் ரசிக்கும் படியாயிருக்கிறது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!