வெயிலும், வேலிக்கருவேல மரங்களுமான இராமநாதபுரத்தின் கிராமங்களுக்குள் இரண்டுநாளாய் பயணம் செய்து கொண்டு இருக்கிறோம். புயல் என்ற பேரில் நான்கைந்து நாட்களுக்கு முன் பெய்த மழையில், அங்கங்கு கட்டிக்கிடந்த நீரிலிருந்து வெதுவெதுவென காற்று முகத்திலடிக்கிறது. ஆனாலும் வேக்காடு இருக்கிறது. தாண்டிச்சென்ற, அருப்புக்கோட்டையிலிருந்து சாயல்குடிக்குச் செல்லும் பஸ் ஒன்றின் மேலேயும் மக்கள் இருந்தார்கள். நொறுங்கிக் கிடந்த சாலை எங்கள் சுமோவின் டிரைவருக்கு கடுப்பாக இருந்திருக்க வேண்டும். முகம் இறுக்கமாக இருந்தது. சின்னச்சின்ன ஊர்களில் வீட்டு வாசல்களில் மானாவரியில் விளைந்த மிளகாய் வத்தல்கள் ஒன்றுபோல காயப் போட்டு சிவப்புக் கம்பளங்கள் போலிருந்தன. ஒட்டுக் கூரையின் மீது டிஷ் அண்டெனா காளான்கள் போல முளைத்திருந்தன. மரங்களின் கீழே பெருசுகள் உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருந்தார்கள். இந்தியக் கிராமங்களில் பயணம் செய்த சாய்நாத்தின் 'everybody loves good drought' (stories from india's poorest districts) கட்டுரைத் தொகுப்பின் காட்சிகள் விரிகின்றன.
இருபத்தைந்து வருட கால தொழிற்சங்க வரலாற்றில் ஏராளமான அனுபவங்களும், இப்படிப்பட்ட பயணங்களும் கூடவே வந்து கொண்டிருக்கின்றன. பாண்டியன் கிராம வங்கியின் கிளைகள் தோறும் சென்று உறுப்பினர்களை சந்திப்பது இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நிகழும். இந்த தடவை ஒரு சிறப்பும் உண்டு. பார்த்த முகங்களைத் தாண்டி புதிதாய் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிற இளைஞர்களை பார்க்க முடிந்தது. இருபது வருடங்களுக்குப் பிறகு இந்த வங்கியில் நூற்றுப் பத்துக்கும் மேலே புதியவர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது, நாங்கள் இந்த வங்கியில் 1980களின் ஆரம்பத்தில் பணிக்குச் சேந்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. ஆனால் இவர்கள் இன்னொரு காலத்தின் மனிதர்களாயிருந்தனர்.
கிராம வங்கிகளில் அந்தந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்களே பணியிலமர்த்தப்பட வேண்டும் என்னும் விதி அப்போது இருந்தது. அப்போது ஒன்றாயிருந்த இராமநாதபுரம், திருநெல்வேலி (இப்போது திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை) மாவட்டத்திலிருந்து மட்டுமே பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தோம். பலர் தங்களுடைய குடும்பத்தில் அரசு வேலைக்குச் செல்லும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். இப்போது வங்கியின் கிளைகள் மதுரை, திருச்சி, பெரம்பலூர், கன்னியாகுமரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி, தஞ்சாவூர், நாகை போன்ற மாவட்டங்களிலும் திறக்கப்பட்ட பிறகு மாநிலம் முழுவதும் இருந்து பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட அழைப்பு விடுக்கப்பட்டது. பெரும்பாலும் எஞ்சினீயரிங், தொழில்நுட்ப முதுகலைப்பட்டப் படிப்பு பெற்று, நகரங்களில் இருந்து வேலைக்குச் சேர்ந்திருந்தார்கள். சேர்ந்த சில மாதங்களிலே, முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் இந்த வேலையை ராஜினாமா செய்து, வேறு வேலைக்குச் சென்றுவிட்டனர். மற்றவர்களும் அப்படியொரு வாய்ப்புக்கு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
வங்கியின் பேரிலிருக்கும் ‘கிராம’ என்னும் வார்த்தை அவர்களை நெளிய வைக்கிறது. நகரங்களற்ற சாதாரண ஊர்களில் இருக்கும் கிளைகள் அவர்களின் கனவுப் பிரதேசமாக இருக்கவில்லை. எங்களைப் போல கிராமங்களிலிருந்து வந்தவர்களுக்கும், இந்த இளைஞர்களுக்கும் உள்ள மாறுபட்ட மனநிலைகளில் இது முக்கியமானது. எங்கள் காலத்திலும் இப்படிப்பட்ட உணர்வுகள் இருக்கத்தான் செய்தன. “அதென்ன கிராம வங்கி” என்று சிலருக்கு பெண்கொடுக்க மறுத்த பிரபல கதைகளும் இந்த வங்கியின் வரலாற்றோடு சேர்த்துத்தான் எழுதப்பட வேண்டும். எங்காவது ஒரு முக்கு ரோட்டில் இறங்கி ஐந்தாறு கி.மீ சைக்கிளில் செல்ல வேண்டிய நிலைமைகள் அப்போது இருந்தன. கிராமங்களின் கிடைத்த வீடுகளில் வங்கியைத் திறந்ததால், கழிப்பிட வசதிகள் கூட இல்லாமல் இருந்த கிளைகள் ஏராளமாய் இருந்தன. கழிப்பட வசதிகள் இருக்கும் வீடுகளில் ஆண்கள் வெளியே சென்ற பிறகு, வங்கியில் வேலை பார்க்கும் பெண்கள் அந்த வீட்டிற்கு செல்ல வேண்டிய பரிதாபமான நிலைமை இருந்தது. அடிப்படை வசதிகள் வேண்டும் எனபதுதான் எங்கள் சங்கத்தின் முதல் குரலாகவும், பெரிய போராட்டமாகவும் ஆரம்ப நாட்களில் இருந்தன. 1984ல் இதற்காக ஒன்பது நாட்கள் வேலைநிறுத்தம் செய்திருக்கிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
புதிய இளைஞர்களிடம் இதையெல்லாம் இந்தப் பயணத்தின் போது நாங்கள் பேசினோம். இன்று கம்ப்யூட்டர்களோடு ஓரளவுக்கு வசதியான கட்டிடங்களில் கிளைகள் இருப்பதை உணர்த்தி, நல்ல எதிர்காலம் இருக்கிறது என நம்பிக்கையளித்தோம். மற்ற வங்கிகள் கூட nationalised தான். அதாவது தனியார் வசமிருந்து தேசீய மயமாக்கப்பட்டவை . கிராம வங்கிகள் பிறக்கும்போதே தேசீய வங்கி என்பதுதான் உண்மை. 1969ல் வங்கிகள் தேசீய உடமையாக்கப்பட்ட பிறகு, கிராமங்களிலும் வேகமாக வங்கிகள் அடியெடுத்து வைத்தன. நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட 1977ல், அமைக்கப்பட்ட நரசிம்மம் கமிட்டிதான் இந்த ‘கிராமப் புற வங்கி’ என்னும் ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தியது. வங்கிகளில் இருக்கும் அதே வேலைகள், ஆனால் சம்பளம் மட்டும் குறைவாக. எங்கள் வங்கி போல இந்தியா முழுவதும் இருந்த 196 கிராம வங்கிகளில், 14000 கிளைகளில் பணிபுரிந்த 80000 ஊழியர்கள் இந்த அநீதிக்கு எதிராக பதினைந்து வருடங்களாக போராடி, இன்று வணிக வங்கி ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு இருக்கிறோம். இந்த வரலாற்றினை அவர்களுக்குச் சொல்ல வேண்டியிருந்தது.
நேற்று சாயங்காலம் பாம்பன் கிளையில் பணிக்குச் சேர்ந்திருக்கும் இரண்டு இளைஞர்கள் தங்கியிருக்கும் அறைக்குச் சென்றிருந்தோம். பேசிக்கொண்டு இருக்கும்போது கவனித்தேன். அவர்கள் அறையில் கம்ப்யூட்டர் இருந்தது. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் எங்கோ ஒரு கிராமத்து வீடுகளில் நாங்கள் தங்கியிருந்த போது சாயங்காலங்களில் எந்த பொழுதுபோக்கும் இருக்காது. தினமும் டூரிங் டாக்கிஸில் படம் பார்த்துக் கொண்டும், ‘தண்ணி’ அடித்துக் கொண்டும், சிலோன் பாட்டுக்கள் கேட்டுக் கொண்டும், காதல் செய்துகொண்டும் இருந்த எங்கள் தலைமுறை வேறு. இவர்கள் வேறு. காலையில் வேலிக்கருவேல மரங்களுக்கு ஊடே நடந்து போய், ‘வெளியே’ செல்ல உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில் ஒருவர் எந்த கூச்ச நாச்சமுமில்லாமல் அப்படியே அருகில் வந்து உட்கார்ந்து, “சார், இன்னைக்கு நகைக்கடன் உண்டா” என்று கேட்கிற தர்மசங்கடங்களும், திடுக்கிடல்களும் இந்த தலைமுறைக்கு நேராது. ஊரின் வீடுகளில் எந்த விசேஷம் என்றாலும், வந்து அழைத்து மரியாதையும், அன்பும் செலுத்துகிற அந்த எளிய மனிதர்களின் நெருக்கங்களும் இந்தத் தலைமுறைக்கு புரியாது.
எங்கள் தோள்களில் இந்தப் புதியவர்களை ஏற்றி வைத்து அந்த தொலைதூரத்துக் காட்சிகளை காட்ட வேண்டும் போலிருக்கிறது. இன்னும் ஏழெட்டு வருடங்களில் இந்த வங்கியின் பழைய தலைமுறை வெளியேறி விடும். அப்புறம் இவர்கள்தான். கிராம வங்கிகள் என்னும் மகத்தான் அத்தியாயத்தின் அடுத்த கண்ணிகள்.
அவர்கள் எல்லோரிடமும் நான் ஒரு கேள்வியை தவறாமல் கேட்டேன். “இந்த வேலை பிடித்திருக்கிறதா?”. சின்ன சிரிப்போடும், மௌனமான தலையாட்டுதல்களுமே பதில்களாயிருந்தன. “வேறு எங்கும் கிடைக்காத திருப்தி இங்கு உங்களுக்கு கிடைக்கும். இந்த கிராமத்துச் சனங்களில் பணம் கட்டுகிற ரசீது கூட எழுதத் தெரியாது. அதை அவர்களுக்கு எழுதிக் கொடுப்பதிலும், எழுதச் சொல்லித் தருவதிலும் இருக்கிற நிறைவை நீங்கள் எந்த அலுவலகத்திலும் பெற முடியாது. எப்போதும் மக்களை நேரடியாய் பார்க்கிற, பேசுகிற, பழகுகிற வாய்ப்பு வேறு எங்கும் உங்களுக்கு கிடைக்காது” என்பதை தவறாமல் சொல்லி வந்தேன்.
தொழிற்சங்க உறுப்பினர் சேர்ப்பு, கோரிக்கைகள் எல்லாவற்றையும் தாண்டி இந்த நேரத்தில் வேறு முக்கியப் பணிகள் இருப்பதாக இந்த பயணம் சொல்லிக் கொண்டு இருக்கிறது. எதிரே வெள்ளை, நீல உடுப்பில் சிறுவர்களும், சிறுமிகளும் எங்கோ இருக்கிற பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
*
மாது
பதிலளிநீக்குஒரு முக்கியமான பதிவு இது. தொலைத்தொடர்புத்துறையிலும் கூட 1984 முதல் ஆள் எடுப்பது என்பது இல்லை. இப்போது அந்தத்துறை கம்பெனியாக மாற்றப்பட்டுவிட்டது (1.10.2000 முதல்) எல்லா வேலைகளும் காண்ட்ராக்ட் தான். சமீப காலமாக இள நிலைப்பொறியாளர்கள் போன்ற சிலபதவிகளுக்கு ஆளெடுப்பு நடக்கிறது. புதிதாக வந்தவர்கள் வேற்றுக்கிரகவாசிகள் போலத்தான் இருக்கிறார்கள். தலைமுறை இடைவெளி இருக்கிறது நமக்கும் அவர்களுக்கும். சக மனிதர்களை விடவும் லேப் டாப்பு களை விரும்புகிறார்கள்.
அருமையான பதிவு!!!
பதிலளிநீக்குகிராம தபால் அலுவலகத்தில்
பதிலளிநீக்குவிடுமுறை மாற்று ஆளாக பணிபுரிந்த
அனுபவம் உண்டு
நீங்கள் சொல்லும் வெள்ளந்தி மனிதர்களின் பழக்கவழக்கங்களும் தங்கள் குடும்பங்களின் ஒருவனாக நினைக்கும் மனப்பக்குவமும்
மறக்கமுடியாத தருணங்கள்
ஒருவகையில் மற்றவர்களின் மனம்அறிந்து நடக்க கற்றுக்கொடுத்த காலம் அது
நல்ல நடை. மிகவும் அனுபவித்து வாசித்தேன்,
பதிலளிநீக்கு//வேலிக்கருவேல மரங்களுக்கு ஊடே நடந்து போய், ‘வெளியே’ செல்ல உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில் ஒருவர் எந்த கூச்ச நாச்சமுமில்லாமல் அப்படியே அருகில் வந்து உட்கார்ந்து, “சார், இன்னைக்கு நகைக்கடன் உண்டா” என்று கேட்கிற தர்மசங்கடங்களும், திடுக்கிடல்களும் இந்த தலைமுறைக்கு நேராது. ஊரின் வீடுகளில் எந்த விசேஷம் என்றாலும், வந்து அழைத்து மரியாதையும், அன்பும் செலுத்துகிற அந்த எளிய மனிதர்களின் நெருக்கங்களும் இந்தத் தலைமுறைக்கு புரியாது//
பதிலளிநீக்குமுரண்பாடுகளின் மொத்த உருவம் தான் மனிதன்.
மாதவ்,
பதிலளிநீக்குபாண்டியன் கிராம வங்கியின் வடகரை கிளைக்குச் செல்லும்போதெல்லாம் அந்த அலுவலர்களிடம் வாடிக்கையாளர்கள் எடுத்துக் கொள்ளும் உரிமையைக் கவனித்திருக்கிறேன். வேறெந்த வங்கியில் இது சாத்தியமென்றாலும் கூட, தொடர்ந்து சாத்தியமாவெனில் இல்லை. அந்த வகையில் உங்கள் வங்கி பாராட்டப்பட வேண்டியது.
அதே போல எந்த வங்கியாக இருந்தாலும் அலுவலர்களின் மன நிலையைப் பொறுத்துதான் வாடிக்கையாளர்களுக்குச் சேவை என ஆகிவிட்டது.
உதாரணத்திற்கு என் வங்கிக் கிளையின் உயர் அதிகாரி (மேலாளர் அல்ல) நல்ல மூடில் இருந்தால் உடனே காரியமாகும்.
இல்லையெனில் நாலு பேர் முன்பாக, ”சார் மினிமம் பேலன்ஸ் மெயிண்டெய்ன் பண்ணுனாத்தான் செக் புக் தருவேன் எனச் சத்தமாகச் சொல்லுவார்” இத்தனைக்கும் டெபாசிட், சி சி (7 லட்சம்), மேலும் வீட்டு வசதிக் கடன் என எல்லா வகையிலும் நான் வாடிக்கையாளன்; 10 வருடங்களாக.
ஆனால் அதே வங்கியின் பிற ஊழியர்களும் அலுவலர்களும் மிக அனுசரனையாகவும் கனிவாகவும் நடந்து கொள்வர்.
இதை எதற்குச் சொல்கிறேனென்றால் தலைமுறை மாறினாலும் சிலர் மாறுவதில்லை; அதே போல் இளைய தலைமுறையினரும் அந்நியப்பட்டு இல்லை என்பதற்காகத்தான்.
//காலையில் வேலிக்கருவேல மரங்களுக்கு ஊடே நடந்து போய், ‘வெளியே’ செல்ல உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில் ஒருவர் எந்த கூச்ச நாச்சமுமில்லாமல் அப்படியே அருகில் வந்து உட்கார்ந்து, “சார், இன்னைக்கு நகைக்கடன் உண்டா” என்று கேட்கிற தர்மசங்கடங்களும், திடுக்கிடல்களும் இந்த தலைமுறைக்கு நேராது. //நெளிய வைக்கும் ஆனால் முகத்தில் அறையும் உண்மை...
பதிலளிநீக்கு//ஊரின் வீடுகளில் எந்த விசேஷம் என்றாலும், வந்து அழைத்து மரியாதையும், அன்பும் செலுத்துகிற அந்த எளிய மனிதர்களின் நெருக்கங்களும் இந்தத் தலைமுறைக்கு புரியாது.//ஆனால், இது இப்பொழுதும் பெரும்பாலான இடங்களில் தொடாரத்தானே செய்கின்றது?
உங்களால் இதை செய முடியாது http://tinyurl.com/ctnoky
பதிலளிநீக்குமாதவராஜ் சார் மிகவும் அருமையான கட்டுர்ரை. ரொம்ப லயித்து படித்தேன்
பதிலளிநீக்குஉணர்வுடன் இருந்தது. இதை நிரைய பேர் படிக்க வேண்டும்.
//உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில் ஒருவர் எந்த கூச்ச நாச்சமுமில்லாமல் அப்படியே அருகில் வந்து உட்கார்ந்து, “சார், இன்னைக்கு நகைக்கடன் உண்டா” என்று கேட்கிற தர்மசங்கடங்களும், திடுக்கிடல்களும் ......//
பதிலளிநீக்கு:-)))))
கூட்டாம்பீ ...
கூட்டமாத்தான் போவோம் நாங்களும் சிறுவயதில். வட்டமாய் ஒக்காந்து அருகருகே மொத்தமாய் போன சிறுவயதுக் காலங்கள்.
சுகாதாரமற்றது என்றாலும் அவைகளை அப்போது செய்தது உண்மைதான்.
பெண்கள் வெளிக்காட்டுக்கு போவது ஏதோ சினிமாவிற்கு போவது போல அக்கா நீ வர்றியா என்று வீட்டு வீட்டுக்கு கேட்பார்கள். துணையுடன் போவது முக்கியம் என்பதால் தனியாக போகமாட்டார்கள்.
anna superb!
பதிலளிநீக்குdear mathav
பதிலளிநீக்குI read with keen interest and identified myself in the whole text, substituting Pandyan Grama Bank with Indian Bank. My experiences were similar, encounters identical and job satisfaction in serving the poorer sections in the remote rural area was parallel to your satisfaction.
I can write at least 40 short stories reflecting such a rich experience I had in Vanganur, 19 km away from Tiruttani en route Sholinghur.
It was 1981 for me and almost the same period for you.....
On the day of leaving the village on transfer, I was forced to take food in as many as 5 houses "simultaneously"....
It is 28 years now, just 20 days ago, a team of Office-bearers led by Com K Krishnan, our President visited the same Vanganur branch. On return, the driver of our Union Jeep informed me that a very aged man came rushing near the jeep asking, "whether Venu sir has come?"
I do not know who it was and I may never know also....
Is there any honour equalling such an experience?
your wonderful essay deserves to be taken across the young workforce in public sector organisations. Superb piece, indeed! You could have added some more emotional elements from your past experiences....
s v venugopalan
dear mathavraj,
பதிலளிநீக்குmanidham thulaitha indha chennai vazhkkaiyil idu pondra ninaivalaigal,
mmm ena mann vasanaiyai manam muzhuka niraikiradu.. karuvelngattu anubavangal, andha marathin pookkalai udhirthu,kaaigalai parithu vilaiyaadiya tharunangal,
idh pondra anubavangalai tholaithu
kaalaium,maalaiyum coaching class galil tholaikkum indha ilaiya thalaimuraigal!
திலிப் நாராயணன்!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும், விளக்கத்திற்கும் மிக்க நன்றி. இந்த இடைவெளியை அகற்றுவதில் தொழிற்சங்கங்களுக்குத்தான் முக்கிய பொறுப்பு இருப்பதாக நினைக்கிறேன்.
ஜான் பொன்ராஜ்!
வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.
புன்னகை!
ஆம். நம் இளமைக்காலத்தின் நீங்கா நினைவுகள் மட்டுமல்ல, நம்மை உருவாக்கியதிலும் அந்த உறவுகளுக்கு பங்கு இருக்கிறது.
மண்குதிரை!
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.
அப்பாவி முரு!
என்ன முரண்பாடு?
வேலன்!
நான் இளையதலைமுரையினரின் சேவையையோ, பணியையோ குறைத்து எழுதவில்லை. ஆனால் வாடிக்கையாளர்களோடு, சொந்தம் போல பழகிய காலம் ஒன்று இருந்தது. அது அசலானது.
பதி!
தொடர்கிறது என்றால் மிக்க சந்தோஷம். தொடரவேண்டும் என்பதும் இந்தப் பதிவின் நோக்கம்.
ஆ.முத்துராமலிங்கம்!
ரொம்ப நன்றி.
கல்வெட்டு!
ஆம். இவைகளை கிராமங்களில் பார்க்க முடியும்.
அண்டோ!
நன்றி.
வேணுகோபால்!
நன்றி. எழுதுங்களேன்.
அனானி!
கவிமனத்தோடு பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள். நன்றி.
மிக அழகாக கால மாற்றங்களையும் அது ஏற்படுத்திய தலைமுறை இடைவெளியையும் சொல்லியிருக்கிறீர்கள்! சுவாரசியமாக இருந்தது..உண்மையில், அரசாங்க வேலையை விட தனியார் வேலைக்கு செல்வதையே பலரும் விரும்புகிறார்கள்..நகரத்தை நோக்கியே நகர விரும்புகிறார்கள்! நானும் இதற்கு விதிவிலக்கல்ல..;-)
பதிலளிநீக்கு