சேகுவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் குறிப்புகளின் பின்னணியில்) - முதல் அத்தியாயம்

ஆனால் சின்சினா சாதாரணப் பெண். சேவின் மீது சாதாரணமான அன்பை வைத்திருந்தாள். திருமணத்திற்குப் பின் சே தன்னோடு இருக்க வேண்டும். தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்தாள். வெனிசுலாக் காடுகளுக்குச் சென்று தொழு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்கிற சேவின் திட்டம் அவளுக்கு உன்னதமானதாகவும், நெஞ்சத்தைத் தொடுவதாகவும் இருந்தது. யதார்த்தத்திற்கு புறம்பான கற்பனையாகவும் பட்டது. உன்னத லட்சியத்திற்கும்- சுகபோக வாழ்க்கைக்கும், கவிதைக்கும்-வாழ்வின் சாதாரண உரைநடைக்கும் இடையே இணக்கம் காணமுடியாத மோதல் வெடித்தது. இதை சமரசம் செய்து தீர்த்துவிட முடியாது. தத்தம் நிலையை விட்டுக் கொடுக்க கிஞ்சிற்றும் முன்வரவில்லை. எனவே இருவரும் சமாதானமாக பிரிந்தனர். அவள் வெற்றிகரமான திருமண வாழ்வை நோக்கியும், அவர் மீண்டும் திரும்பவே முடியாத பாதையிலும் பயணம் துவங்கினர்.

 

(1)

  che lives

  "அவர்கள் நினைத்தது போலில்லாமல் நீ வாழ்ந்து கொண்டு இருக்கிறாய், சே " வாலேகிராண்டேவில் அவர் புதைக்கப்பட்ட இடத்தின் அருகில் ஒரு பொது தொலைபேசி ஆபிஸ் சுவரில் இப்படி எழுதப்பட்டு இருக்கிறது. அந்த செய்தியில் மகத்தான கம்பீரமும், நம்பிக்கையும், வரலாறும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இலட்சியம் மிகுந்த காரியம் ஒன்று எல்லோர் முன்னும் காத்திருப்பதாக உணர முடிகிறது. இந்த அர்த்தங்களைத் தருகிற வாக்கியமாக்கி இருப்பது சே என்னும் ஒற்றை வார்த்தை. உயிர் ஊட்டக்கூடியவராய் சேகுவாரா இருக்கிறார்.

 

இரண்டு வருடங்களுக்கு முன்பு சேகுவாராவின் உடல் தேடப்பட்டதிலிருந்து வாலேகிராண்டே கவரப்பட்டிருந்தது. 1995 நவம்பரில் சேவின் சரிதை எழுதிய அமெரிக்க எழுத்தாளர் ஜான் லீ ஆண்டர்சன் பல இடங்களுக்குச் சென்றார். சேவை அறிந்த மனிதர்களையெல்லாம் சந்தித்தார். கொன்றவர்களையும் சந்தித்தார். அப்படி ஒரு வேளையில் தான் பொலிவிய இராணுவத்திலிருந்து ஒய்வு பெற்ற ஜெனரல் மேரியோ வர்காஸ் சேகுவாராவை புதைத்த இடம் தனக்குத் தெரியும் என்றார்.  வாலே கிராண்டே இராணுவ விமான தளத்திற்கு அருகில் சேவும் அவரது ஏழு தோழர்களும் புதைக்கப்பட்டனர் என்பதை சொன்னார். அவர்களை புதைத்ததில் பங்கெடுத்த புல்டோசரை ஓட்டியவரும் இதனை உறுதி செய்தார்.

 

இறந்து போன கொரில்லாக்களின் குடும்பத்தார் தொடர்ந்து பொலிவிய அரசுக்கு ஏற்கனவே நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்தனர். தவிர்க்க முடியாமல் அரசு கண்டுபிடிக்க உத்தரவிட்டது. அர்ஜெண்டினா, கியூபாவில் இருந்து வந்திருந்த தடவியல் மற்றும் உடற்கூறு நிபுணர்களும், பொலிவிய சிப்பாய்களும் நான்கு எலும்புக்கூடுகளை கண்டுபிடித்தனர். அதில் சேகுவாரா இல்லை.

 

 

மண்ணில் அவரைத் தேடுகிறார்கள்dig_site

போன வருடத்தின் கடைசியில் திரும்பவும் கியூபர்கள் தங்கள் தேடலைத் தொடர்ந்தனர். 1967ல் வாலேகிராண்டே பெட்டாலியனில் பணியாற்றிய சிப்பாய்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட கிராமத்து மனிதர்களையும் விசாரித்தனர். பத்தாயிரம் சதுர மீட்டர் பரப்பளவிற்கு மண் பரிசோதனைகள் நடத்தி, புல்டோசரால் கிழிக்கப்பட்ட நிலத்தை தேட ஆரம்பித்தார்கள்.

 

இராணுவ விமானம் ஓடுகிற பாதையோரத்தில் இருக்கிற அந்த பொலிவிய கிராமத்தின் அருகே சேகுவாராவின் எலும்புக்கூடுகள் இருக்கின்றதா இல்லையா என்பது விரைவில் தெரிந்து விடும். ஏராளமான சாட்சிகள் விசாரிக்கப்பட்டிருக்கின்றனர். "கிடைத்த தகவல்கள் உண்மையாக இருக்குமானால் நாங்கள் தோண்டக்கூடிய இடம் சரியானதாகவே இருக்கலாம்" என உடற்கூறு நிபுணர் அலேஜாண்டிரோ எச்சாருகே சொல்கிறார். சுரங்கங்களுக்கு பயன்படுத்தக் கூடிய நவீன ரேடார்கள் பயன்படுத்தப்படுகின்றன.

 

எல்லாவற்றையும் கண்காணிக்கிற ஜெனரல் அர்மெண்டோ அல்காசருக்கு இப்படி தோண்டுவது ஒன்றும் பிடித்தமான காரியமாக இல்லை. 28 வருடங்களுக்கு முன்பு இறந்து போன மனிதனின், அதுவும் ஒரு எதிரியின் உடலின் மிச்சங்களை பார்ப்பதற்கு எந்த ஆவலும் இல்லை.

 

ஆனால் வாலேகிராண்டாவில் உள்ள மக்களின் உணர்வுகள் வேறு மாதிரி இருக்கின்றன. ஒரு வயதான அம்மாள், "சேகுவாரா உடல் கண்டுபிடிக்கப்பட்டால் வேறு எங்கும் கொண்டு செல்லக் கூடாது. அவர் இந்த மண்ணுக்கே சொந்தம். இங்கு புரட்சி நடத்தவே அவர் வந்தார்."என்கிறார். இன்னொரு மனிதர் முன்னொருநாள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சேகுவாரா உடலின் போட்டோ ஒன்றை இன்னும் வீட்டில் பாதுகாத்து வருகிறார். அவரும் சேகுவாராவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டால் அங்குதான் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்.

 

ஒசினகாSusanna Ocinaga

துப்பாக்கி குண்டுகளால் துளைத்தெடுக்கப்பட்ட சேகுவாராவின் உடல் கொண்டு வரப்பட்ட அந்த மத்தியானத்தை நெஸ்தாலி ஒசினகாவால் மறக்கமுடியவில்லை. அப்போது அவருக்கு வயது 19. வாலேகிராண்டே ஆஸ்பத்திரியில் ரோஜாச் செடிகளை வெட்டி ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தாள். பதற்றத்தோடு சிப்பாய்கள் ஆஸ்பத்திரியின் முக்கியக் கட்டிடத்திற்கு பின்புறம் உள்ள துணிகள் சலவை செய்யும் பகுதியில் கொண்டு வந்து கிடத்தினார்கள். "அவரது கண்கள் அகலத் திறந்திருந்தன. காயங்கள் இரத்தத்தால் மூடப்பட்டிருந்தன" என்று சொல்லிய ஒசினகாவுக்கு சேகுவாராவைப் பற்றியோ, பொலிவிய மலைகளில் நின்று புரட்சிகர அரசு அமைய போரிட்டதையோ பற்றி அப்போது அதிகமாக தெரிந்திருக்கவில்லை. ஆனால் இராணுவம் பயந்து போயிருந்ததை மட்டும் உணர முடிந்திருக்கிறது. "அன்று இரவு அவர் கொண்டு போகப்பட்டார். எல்லாம் ரகசியமாக நடந்தது" என்று எங்கோ வெறித்து பார்த்தபடி கூறுகிறார்.

 

வில்லாடோ

villodo

சேகுவாரை புதைத்த மனிதன் அமைதியாக நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கிறான். அவனுக்கு உண்மைகள் எல்லாம் தெரியும். கஸ்ட்டோவோ வில்லோடோ. அமெரிக்காவின் ஒரு மூலையில் ரகசியமான இடத்தில் மாந்தோப்பு பண்ணையில் இருக்கிறான். சேகுவாராவை வேட்டையாட அலைந்தவன் அவன். சி.ஐ.ஏவின் ஏஜண்ட்டான அவனுக்கு சேகுவாராவையும், காஸ்ட்ரோவையும் பழிவாங்க வேண்டும் என்பது அடியாழத்தில் இருந்தது.

 

1959 ஜனவரி 1ம் தேதி கியூபாவில் பாடிஸ்டா அரசு வீழ்த்தப்பட்ட சில நாட்களில் வில்லோடோ கைது செய்யப்பட்டு பத்து நாட்கள் சிறைவைக்கப்படுகிறான். உதிரி பாகங்களை வாங்கி கார்களை உருவாக்குகிற அவனது தந்தையின் கம்பெனியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஒருவரின் முறையீட்டினால் அரசு இதனை செய்தது. அடுத்து கொஞ்ச நாட்களில் முந்தைய பாடிஸ்டா அரசிடமிருந்து முறையற்ற சலுகைகள் பெற்றிருப்பதாக கூறி அங்கிருந்த 360 கார்களோடு கம்பெனியையும் அரசே எடுத்துக் கொள்வதாக சேகுவாரா அறிவிக்கிறார்.

 

பிப்ரவர் 16ம் தேதி வில்லோடோவின் தந்தை ஏராளமான தூக்க மாத்திரை சாப்பிட்டு இறந்து போகிறார். காஸ்ட்ரோவையும், சேகுவாரவையும் பற்றி குற்றச்சாட்டுகள் சுமத்தி நிறைய எழுதிவைத்திருந்தார். 29 நாட்கள் கழித்து வில்லோடோ கியூபாவை விட்டு வெளியேறுகிறான். கம்யூனிசத்திற்கு எதிராக மியாமியில் இருந்த அகதிகளோடு சேர்ந்து கொள்கிறான். அமெரிக்க தூண்டுதலால் காஸ்ட்ரோ அரசை எதிர்த்து கியூபாவின் மீதான பிக் வளைகுடா தாக்குதலில் பங்குபெற்று, அபாயகரமான சூழலில் உயிர்பிழைத்து நிகாரகுவாவுக்கு செல்கிறான். அமெரிக்க இராணுவத்தில் சேர்ந்து கொரில்லாக்கள் மற்றும் அதனை எதிர்கொள்வது பற்றியுமான பயிற்சிகள் பெறுகிறான். 1964ல் சி.ஐ.ஏவில் சேர்ந்தான்.1959லிருந்து 1970க்குள் நாற்பது தடவைக்கு மேல் கியூபாவுக்குள் ரகசியமாக நுழைந்து சி.ஐ.ஏவின் பணிகளைச் செய்திருப்பதாக கூறுகிறான். என் தந்தையை அழித்த அமைப்பை நான் முற்றிலும் எதிர்க்கிறேன் என்கிறான்.

 

1965ல் காஸ்ட்ரோவின் புரட்சியை இதர நாடுகளுக்கும் பரவச்செய்ய வேண்டும் என்று சே நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாக தகவல் வந்ததும், சி.ஐ.ஏ வில்லோடாவையும், இதர கியூப அமெரிக்கர்களையும் களத்தில் இறக்கியது.

 

டொமினிக் குடியரசில் சே இருப்பதாக தகவல் கிடைத்ததும் வில்லோடோ அங்கு ரகசியமாக சென்றான். அங்கு அவர் இல்லை என்பது தெளிவாகியது. பிறகு அதே வருடத்தின் கடைசியில் வில்லோடோ காங்கோ சென்றான். அங்கு கலகக்காரர்களை அரசு முறியடித்ததும் சே தப்பி விட்டதாக அறிந்தான். சி.ஐ.ஏ அவனுக்கு இட்ட பணி சே எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே. சேவை உயிரோடோ அல்லது உயிரற்றோ பிடிக்க வேண்டும் என்பதே வில்லோடாவுக்கு நினைப்பாயிருந்தது.

 

எதிர்கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒரு நாணையத்தை சுண்டிப்போட்டு அதிர்ஷ்டத்தை நம்புவதைப் போல அபாயத்தை எதிர்கொள்கிறான். ஒரு கொரில்லாப் போராளிக்கு, ஒரு மோதலைத் தொடர்ந்து அவன் உயிரோடு இருக்கிறானா, இல்லையா என்பது முக்கியமில்லாமல் போய்விடுகிறது.-சே

காங்கோவுக்கு பிறகு சே மாதக்கணக்கில் மறைவாகவே இருந்தார். எங்கிருந்தார் என யாருக்கும் தெரியாமல் இருந்தது. முதல் எட்டு மாதங்களும் கொரில்லாத் தாக்குதலுக்கான தயாரிப்பிலும் திட்டம் தீட்டுவதிலுமாக இருந்தார். நான்கு மாதங்கள் அமெரிக்க இராணுவத்தால் பயிற்சியளிக்கப்பட்ட பொலிவிய இராணுவத்திடம் கிடைக்காமல் இருந்தார். வில்லோடோ, ரொட்ரிப்கியுஸ், ஜூலியா கார்சியா ஆகிய மூன்று கியூப அமெரிக்கர்களை  பொலிவியாவிற்கு சேவை கண்டுபிடிக்க சி.ஐ.ஏ அனுப்பியது.

 

வில்லோடோ பொலிவிய இராணுவ உடைகளையே அணிந்திருந்தான். பொலிவிய இராணுவ அதிகாரிகளுக்கே அவன் ஒரு சி.ஐஏ வின் ஆள் என்பது தெரியாமல் இருந்தது.  பொலிவிய காடுகளில் சேகுவாராவோடு இருந்த பிரெஞ்சு சோசலிஸ்ட் தீப்ரேவை இராணுவம் பிடித்தது. அவரை வில்லோடோதான் விசாரணை செய்திருக்கிறான்.

 

சேவின் உடல் வாலேகிராண்டுக்கு கொண்டு வரப்பட்டு இரண்டு மணி நேரத்தில் வில்லோடோ அங்கே சென்றிருக்கிறான். நூற்றுக்கனக்கில் பத்திரிக்கையாளர்களும், அந்த நகரத்தின் மனிதர்களும் அங்கே குழுமி இருந்தனர். "நான் சேவை உயிரோடு பார்க்கவில்லை. அவருடன் பேச வேண்டும் என்று அக்கறையுமில்லை" என்கிறான் வில்லோடோ. மேலும்," அவர் என் தந்தையின் மரணத்திற்கு காரணமானவர் என்ற போதிலும் எனக்கு அது ஒரு பணி. அவ்வளவே" என்கிறான்.

 

அக்டோபர் 10ம் தேதி வாலேகிராண்டேவில் உள்ள ஒரே விடுதியான இரண்டு மாடிக் கட்டிடமான டெரசிட்டாவில் பொலிவிய இராணுவ உயர் அதிகாரிகளும், சி.ஐ.ஏ அதிகாரிகளும் சேவின் உடலை என்ன செய்வது என்று திட்டமிட்டனர். சேவின் உறவினர்கள் சேவின் உடலை பெற வாலேகிராண்டேவுக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல் வந்திருந்தது. வில்லோடா உடலை காணமல் போகச் செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறான். "காஸ்ட்ரோவுக்கு சேவின் எலும்புகள் கிடைக்கக் கூடாது என்பதில் கவனமாயிருந்தோம். அதை வைத்து பெரிய நினைவிடம் எழுப்பி சித்தாந்த வஞ்சனை செய்யக்கூடாது என நினைத்தோம்" என்கிறான் வில்லோடோ.

 

யாரோ ஒருவர் எரித்து விடலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கு வில்லோடோ "அப்படி எரித்தாலும் நாம் வெளிப்படையாகச் செய்ய முடியாது. ரகசியமாக எரிப்பது என்பது காலம் காலமாக பொலிவிய இராணுவத்தை இழிவாக பேசுவதில்தான் முடியும்". என்று சொல்லி இருக்கிறான். ஜெனரல் ஒவாண்டா யாருக்கும் தெரியாமல் சேகுவாராவை புதைக்கும் பொறுப்பை வில்லோடாவிடம் ஒப்படைத்திருக்கிறான். மருத்துவ பரிசோதனை செய்த போது டாக்டர்களின் தோள்களுக்கு பின்னால் நின்று எட்டி பார்த்தபடி இருந்தான். பத்திரிக்கையாளர்கள் சென்ற பிறகு சேகுவாராவின் கைகள் அடையாளத்திற்காக வெட்டப்பட்டன. வில்லோடோ சேகுவாராவின் முடிகளை கொஞ்சம் வெட்டி வைத்துக்கொண்டானாம். இப்போதும் யாருக்கும் தெரியாமல் வைத்திருக்கிறானாம்.

 

வில்லோடாவுக்கு ஒரு மெய்காப்பாளனும், கொரில்லாக்களின் உடல்களை எடுத்துச் செல்ல ஒரு டிரக்கர் டிரைவரும், மண்ணைத் தோண்டி மூட ஒரு புல்டோசர் டிரைவரும் உதவியாக அனுப்பிவைக்கப்பட்டனர். விடிகாலை 1.30 மணிக்கு வில்லோடோ புறப்பட்டான். அவர்கள் இராணுவ விமானப் பாதை வழியாக சென்றனர். ஒரு இடத்திற்கு வந்ததும் நிறுத்தச் சொல்லி புல்டோசரால் மண்ணைத் தோண்டச் செய்தான். பின் டிரக்கர் வண்டியை அந்த குழியின் முனை வரைக் கொண்டு நிறுத்தி சடலங்களை உள்ளே போட வைத்திருக்கிறான். புல்டோசர் டிரைவரிடம் அந்த குழியை மூடிவிடச் சொல்லி இருக்கிறான்.

 

சேகுவாராவும் அவரது தோழர்களும் எந்த மண்ணின் விடுதலைக்காக வந்தார்களோ அந்த மண்ணிலேயே தங்களை முழுவதுமாக கரைத்துக் கொண்டு விட்டனர். அன்றைக்கு புல்டோசர் ஒட்டிய டிரைவரிடம் விசாரித்திருக்கிறார்கள். சேகுவாராவையும், அவரது தோழர்களையும் புதைத்து மூடவும் மழை பெய்யத் துவங்கியதாகச் சொல்கிறார்.

 

உலகையே நேசித்த அன்பு உருவம்
skell 

முப்பது வருடங்களுக்குப் பிறகு இப்போது எல்லாம் வெளிச்சத்துக்கு வருகிறது. ஜூன் 28ம் தேதி அந்த எலும்புக்கூடுகளை நிலத்திலிருந்து பிரித்து வெளியே எடுத்தார்கள். உடற்கூறு நிபுணர்கள் அந்த எலும்புக்கூடுகளின் மீது படிந்திருக்கும் புழுதியைத் துடைக்கின்றனர். இரண்டாம் நம்பர் என்று அடையாளமிட்டு வைக்கப்படுகிற அந்த எலும்புக்கூட்டைப் பார்த்ததும் ஒசினகாவுக்கு சிலிர்க்கிறது. 1967 அக்டோபரில் அந்த கருப்புத்தோல் பெல்ட்டை அணிந்திருந்த கொரில்லாத் தலைவர் அவர்தான். "அந்த கணத்திலேயே எனக்குத் தெரிந்து விட்டது. அது சேகுவாராதான்" என்கிறார். இரண்டு வருடத் தேடலுக்குப் பிறகு கொரில்லாக்களின் எலும்புக்கூடுகளை கண்டு பிடித்ததில் ஒசினகாவுக்கும், அருகில் இருப்பவர்களுக்கும் கொண்டாட்டமாக இருக்கிறது. கடந்த 30 வருடங்களாக ஒரு மூலையில் இருந்த அந்த மலைப்பிரதேச கிராமத்திற்கு சேகுவாரா ஒரு புதிர் மிகுந்த வடிவமாகியிருந்தார். அவர் புதைக்கப்பட்ட இடம் சுற்றிலும் ஏராளமான கதைகள் சொல்லப்பட்டு மேன்மைக்குரியவராயிருந்தார். "அவர் ஒரு மகத்தான மனிதர். கடவுள்." என்கிறார் ஒசினகா இப்போது.

 

அப்போது சேகுவாரா இது போலத் தெரியவில்லை. 1967 மார்ச்சுக்கும் அக்டோபருக்கும் இடையில் உள்ளூர் மக்கள் கொரில்லா யுத்தத்தின் காரணம் அறியாமல் அவருக்கு உணவு கொடுக்கக் கூட மறுத்தார்கள். பயத்தில் அவர்களிடமிருந்து விலகி அவரது அசைவுகளை இராணுவத்திடம் சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால் லாஹிகுவாரவிலிருந்து உடல் ஹெலிகாப்டரில் கொண்டு போகப்பட்ட தினத்திலிருந்து சேகுவாரா அவர்கள் மத்தியில் வளர ஆரம்பித்தார்.

 

வானம் பார்த்தவர்dead and tied

கிழிந்து போன ஆடைகளோடும், இரத்தக் கறைகளோடு  இருந்த அவரது தோற்றம் சிலுவையில் அறையப்பட்ட ஏசுவைப் போலிருந்ததாக கிராமத்து மனிதர்கள் சொல்கின்றனர். 'சாண்டோ எர்னஸ்டோ' என்று வழிபடவும் செய்கின்றனர். அவரிடம் மழை வரவும், பயிர்கள் நன்றாக விளச்சலை தரவும், நோய்களைத் தீர்க்கவும் வேண்டுகிறார்கள். தொடர்ந்து இருந்த வலதுசாரி அரசுகளால் பொது இடங்களில் சேகுவாராவை கொண்டாட தடைசெய்யப்பட்டிருந்தாலும் அங்குள்ளவர்கள் ரகசியமாக சேகுவாராவுக்கு வழிபாடு நடத்தவும், சேகுவாராவின் நினைவாக மெழுகுவர்த்திகள் ஏற்றவும் செய்தார்கள்.

 

இளைஞர்கள் அவரது எழுத்துக்களை கூட்டமாக உட்கார்ந்து படிக்கவும், பொலிவியாவில் அவர் காட்டிய வீரத்தை போற்றவும் செய்தனர்.லாஹிகுவாரா இன்னும் அப்படியே இருக்கிறது. பன்றிகளும், எருமைகளும், கோவேறு கழுதைகளுமாய் அலைகின்றன. மின்சாரம் இல்லாத வீடுகள் காணப்படுகின்றன. மலேரியாவும், தோல் வியாதிகளும் அந்த மக்களிடம் குடிகொண்டிருக்கின்றன.

 

வாலேகிராண்டேவிலிருந்து 250 கி.மீ தள்ளி இருக்கும் சாந்தா குரூஸில் ஜப்பானியர்களால் நடத்தப்பட்டு வரும் ஆஸ்பத்திரியில் எலும்புக்கூடுகள் துடைக்கப்பட்டு உலோகத் தட்டுக்களில் வைக்கப்பட்டு இருக்கின்றன. கிழிந்து நைந்து போன ஆடைகள், பெல்ட்டுகள், ஷூக்கள் எல்லாம் சுத்தம் செய்யப்பட்டு அந்தந்த எலும்புக்கூடுகளின் காலடியில் வைக்கப்பட்டிருந்தன.

 

ஒரு உடற்கூறு வல்லுனர் கம்யூட்டர் திரையில் கொல்லப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரில்லாக்களின் போட்டோக்களை பெரிதாக்கி, எலும்புக்கூடுகளோடு ஆராய்ந்து கொண்டிருந்தார். மற்றவர்கள் துப்பாக்கிகளால் சிதைந்த எலும்புகளின் எக்ஸ்ரேக்களை பரிசோதித்து 1967ல் பொலிவிய இராணுவத்தால் தயாரிக்கப்பட்ட காயங்கள் பற்றிய அறிக்கையோடும் ஒப்பிட்டனர்.

 

இரண்டாம் எண்ணிடப்பட்ட எலும்புக்கூட்டிற்கு இரண்டு கைகள் இல்லாமலிருந்தது. முக்கியமான தடயம். பற்களின் பரிசோதனை எல்லாம் முற்றிலும் பொருத்தமாயிருக்க சேகுவாரா அடையாளம் காணப்பட்டார். வாலேகிராண்டே புனித பூமியாகியிருந்தது. சேகுவாராவை கியூபாவுக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

0

"அவர்கள் நினைத்தது போலில்லாமல் நீ வாழ்ந்து கொண்டு இருக்கிறாய், சே" இந்த வரியில் நிறைய கேள்விகள் புதைந்திருக்கின்றன. யார் அந்த அவர்கள்? என்ன நினைத்தார்கள் அந்த அவர்கள்? அவர் எப்படி கொல்லப்பட்டார்? சே எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்? இதை தெரிந்து கொள்வதில் வரலாற்றின் புதிர் ஒன்றை அவிழ்க்கிற சுவராஸ்யம் இருக்கிறது. உண்மைகளை அறியும் மனிதத் துடிப்பு இருக்கிறது. அதுதான் வாலேகிராண்டேவில் புதைக்கப்பட்ட சேவின் உடலை மண்ணிலிருந்து மீண்டும் வெளியே கொண்டு வந்திருக்கிறது.

 

சேகுவாராவை பற்றி படிக்கிற போது, மற்றவர்கள் சொல்லி கேட்கிற போது, நட்சத்திரம் அணிந்த தொப்பியோடு பார்க்கிற போது சிலிர்ப்பு ஏற்படுகிறது. மனவெளியின் ஒரு அலைவரிசையில் அவரது அசாத்தியமான கனவுகள் பூத்துக் கொண்டே இருக்கின்றன. போராடுகிறவர்களுக்கும், நம்பிக்கை மிக்கவர்களுக்கும் சேகுவாரா ஆதர்சனமாக இருக்கிறார். அவருடைய எதோவொன்று மனிதர்களின் இதயத்துக்குள்ளும், மூளைக்குள்ளும் கலந்து விட்டிருக்கிறது. அது தைரியத்தையும், சக்தியையும் மீட்டிக்கொண்டே இருக்கிறது.

 

சேகுவாரா புரட்சிகளை உருவாக்கக்  கூடியவராயிருந்தார். ஒன்று, இரண்டு, மூன்று என வியட்நாம்களை உருவாக்குவோம் என அறைகூவல் விடுத்தார். வியட்நாமில் நடக்கும் போர் நமது போர் என உணர்வுபூர்வமாக மக்களை சிந்திக்க வைத்தார். 1960களில் சேகுவாராவின் இந்தக்குரல் உலகமெங்கும் உள்ள இளைஞர்களை வசீகரித்தது. திரும்பிப் பார்த்தார்கள். சேகுவாரா ஒரு சர்வதேச புரட்சியாளராக காட்சியளிக்கிறார். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான  எல்லைகளற்ற போராட்டங்களுக்கு அறைகூவல் விடுத்தார். கொரில்லாப் போரை மக்களின் போராட்டமாகவே பார்த்தார். மக்களின் பேராதரவோடும், ஆனால் குறைவான ஆயுதங்களோடும் நடத்தும் போராட்டம் இப்படித்தான் இருக்க முடியும் என்றார்.

 

நடைமுறைப் போராளிகளாகிய நாங்கள் எங்கள் பாதைகளில் அடியெடுத்து வைத்தபோது மார்க்ஸ் என்கிற அறிஞரின் பார்வையோடு நடந்திருக்கிறோம்.-  சே

வெறும் சாகசங்கள் நிறைந்ததல்ல அவரது வாழ்க்கை. தேடல். பயணம். இலட்சியம். கனவுகள். தீவீரம். உறுதி. எல்லாம் நிறைந்தது. சேகுவாரா என்றால் விடுதலை. சேகுவாரா என்றால் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கோபம். சேகுவாரா என்றால் நசுக்கப்பட்ட மனிதர்களின் இதயம்.அந்த இதயத்தைத்தான் அவர்கள் சுட்டுக் கொன்றார்கள். காட்டு இலைகளின் பச்சை வாசனையும், பூச்சிகளின் ரீங்காரங்களும் படிந்து போன சேவின் பொலிவியன் நாட்குறிப்புகள் ஒருநாள் திடுமென நின்று போகிறது. சேகுவாராவோடு அவரது மரணத்தை பற்றிய உண்மைகளையும் அவர்கள் புதைத்து மறைத்தார்கள்.

 

சேகுவாரா புரட்சியின் அடையாளமாகிவிடக் கூடாது என்கிற பயம் ஏகாதிபத்தியத்திற்கும் அதன் அடிவருடிகளுக்கும் இருந்தது. ஆனால் எல்லாவற்றையும் மீறி அவர் மக்களின் மனதில் எழுந்துகொண்டே இருந்தார்.

 

பொலிவியக்காடுகளில் கொரில்லப்போரில் சேகுவாராவோடு இருந்த இண்டி பெரிடோ எழுதுகிறார்."மிகக் கனமான சாக்கு ஒன்றை சுமந்துகொண்டு சே சென்று கொண்டிருந்தார். வழியில் வழுக்கி விழுந்தார். உடனடியாக சமாளித்து திரும்பவும் பயணத்தை தொடர்ந்தார்" இதுதான் சேகுவாரா. தொடர்ந்து செல்கிற வெப்பம் அவரிடம் இருந்து கொண்டிருந்தது. எதுவும் அவரை தடுத்து நிறுத்திடவில்லை. "நமது ஒவ்வொரு நடவடிக்கையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர்க்குரலாக, மனித சமூகத்தின் விரோதியான அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்களை ஒன்றுபடுத்தும் அறைகூவலாக இருக்கட்டும்' என்று அவர் முன்னேறிக் கொண்டிருந்தார்.

 

இத்துடன் நின்று போகவில்லை. ஆராய்ச்சிகள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சேகுவாராவின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களும், புரட்சிகர சிந்தனை உள்ளவர்களும், மனிதாபிமானிகளும் நிறைய எழுதிக்கொண்டு இருக்கின்றனர். அவரைத் தூற்றுபவர்களும் எழுதித் தள்ளுகிறார்கள். ஆனால் அவரது மரணத்தை எழுதியவர்களின் குறிப்புகள் நிறைய சொல்கின்றன. அவை சேவின் மரணம் பற்றி மட்டும் பேசவில்லை. வரலாற்றின் மரணத்தையும் யோசிப்பது தெரிகிறது.

 

சேவின் மரணம் நடந்த இடத்தை அறிகிறபோது, வரலாற்றில் எந்த இடத்தில் அந்த மரணம் நிகழ்ந்திருக்கிறது என்பதும் புரிய வருகிறது. கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்திருந்தால், ஏகாதிபத்தியத்தின் மரணத்தை இந்த மனிதர் எழுதியிருப்பாரோ என்று ஆச்சரியப்படவும் வைக்கிறது. அவர்களால் தனிப்பட்ட முறையிலும் கூட  தூற்றவே முடியாத அவரது வாழ்க்கை தூய்மையான மழைwalkயின் துளியைப் போல நம்மீது சொட்டிக் கொண்டு இருக்கிறது.

 

சி.ஐ.ஏ வின் குறிப்புகளையும், சேவின் மரணம் குறித்த அவர்களது தகவல்களையும் படிக்கிறபோது ஏகாதிபத்தியத்தின் பயம் நம்முன்னே நிழலாடுகிறது. அவரை வட்டமிட்டுப் பறந்த கழுகின் கண்களிலிருந்து சேவைப் பார்க்க முடிகிறது. அவரைச் சுட்ட துப்பாக்கி முனையிலிருந்து இதயத் துடிப்புகளைக் துடிப்புகளைக் கேட்க முடிகிறது. சே இறந்துபோகாமல் இருக்கிறார். அத்தனை கம்பீரமானவர் அவர்.

ராட்சச மிருகமான ஏகாதிபத்தியத்தை கதி கலங்க வைத்த ஒரு மனிதர் நம் முன்னே அந்த வரிகளிலிருந்து உயிர்த்தெழுகிறார். ரகசியமாய் பாதுகாக்கப்பட்டிருந்த அந்த ஆவணங்களிலிருந்து அதிர்வுகளை ஏற்படுத்தியபடி வெளிவருகிறார் சேகுவாரா.

கருத்துகள்

8 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. உங்கள் பதிவுக்கு நன்றி. இதன் அடுத்தடுத்த அத்தியாயங்களையும் தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. சந்துரு!

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
    இந்த புத்தகம் எழுதப்பட்டு இரண்டு வருடங்களுக்கும் மேலாகி விட்டன.
    இணைய நண்பர்கள் சிலர் கேட்டுக் கொண்டதால் இங்கே பதிவிட்டிருக்கிறேன்.
    புத்தகம் கிடைக்குமிடம்

    பாரதி புத்தகாலயம்
    7, இளங்கே சாலை
    தேனாம்பேட்டை
    சென்னை -18

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு .தோழர் சே'வின் மரணம், அவருடைய உடல் பற்றிய முடிச்சுகள் ஒருவாறு அவிழ்ந்து விட்டன. எது ஒன்று அடையாள மிச்சமாக இருக்க ஏகாதிபத்யம் தடுத்ததோ அதுவே அழியாத அடையாள சின்னமாக ஆகி விட்டது.

    பதிலளிநீக்கு
  4. விடுதலை!

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. நாடோடி!

    தங்கள் வருகைக்கு நன்றி.
    தாங்கள் குறிப்பிட்டது உண்மைதான்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!