சிங்கிஸ் ஐத்மாத்தவ்



சாத்தூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான நாவல் கருத்தரங்கம் ஒன்று செப்டம்பர் 21ம் தேதி நடைபெற்றது. 'எழுதப்பட்ட நாவல்களும், எழுத நினைத்த நாவல்களும்' என்ற தலைப்பில் எழுத்தாளர்.எஸ்.ராமகிருஷ்ணன், நாவல் குறித்த தனது வாசிப்பு மற்றும் எழுத்து அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். பேச ஆரம்பித்தவுடன், ரஷ்ய எழுத்தாளர்.சிங்கிஸ் ஐத்மாத்தவ் காலமாகிவிட்டார் என்பதைத் தெரிவித்து, அனைவரும் அந்த மகத்தான எழுத்தாளருக்கு அஞ்சலி செலுத்த வேண்டிக் கொண்டார். மௌனமாக எழுந்து நின்ற அந்தக் கணங்களில், 'அன்னை வயல்' நாவலின் வசீகரமானப் பரப்பில், அசைந்தாடியக் கோதுமைக் கதிர்கள் தன்னியல்பாக நிழலாடின.

1980களின் பிற்பகுதியில் எழுத்தாளர்.தனுஷ்கோடி ராமசாமி அவர்களிடமிருந்து 'அன்னை வயல்' நாவலை பெற்றுக் கொண்டு, வைப்பாற்றங்கரையோரம் இருந்த கட்டிடங்கள் ஒன்றின் மாடியிலிருந்த எங்கள் சங்க அலுவலகத்தில் சோவியத் வாசனையை முகர்ந்தபடி அந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். யாருமற்ற அந்த இரவில் நான் மத்திய கிழக்கு ஆசியாவின் நிலப்பகுதியில் சஞ்சரிக்க ஆரம்பித்தேன். அறுவடைக் காலங்களில் அந்த மக்கள் வேலை பார்க்கும் காட்சிகள் நமது சொந்த கிராமங்களாவேத் தெரிந்தன. தாயின் பாசம் பெருக்கெடுக்கும் வெளியாக வயல்கள் தென்பட்டன. இராணுவத்துக்குச் சென்ற மகனுக்காக காத்திருக்கும் வாழ்வு துயரமளித்தது. தாய்க்கும், அந்த வயலுக்கும் நடக்கும் உரையாடல்கள் பெருமூச்சுக்களாக வெளிப்பட்டன. எதோ பிரமை பிடித்தபடி ஆகிப் போயிருந்தேன். நினைவுக்கு வராத என் கடந்த காலத்தின் தருணங்களும் அன்னை வயலோடு கலந்திருப்பது போலவே தோன்றியது. அடுத்த சில நாட்கள் பழகிய எல்லோரிடமும் அந்த நாவலைப் பற்றியே பேசிக் கொண்டு இருந்தேன்.

தொடர்ந்து அவரது ஜமீலா, குல்சாரி, முதல் ஆசிரியன் கதைகளை படித்து முடித்த போது சிங்கிஸ் ஐத்மாத்தவ் மிக நெருக்கமான மனிதராகியிருந்தார். அவரோடு நிறைய பேசியது போல ஒரு உணர்வு ஏற்பட்டிருந்தது. ஜமீலாவின் காதல் கொந்தளிப்பும், அமைதியும் கொண்ட மனநிலைகளோடு எழுதப்பட்ட அற்புதமான பாடல் போல இருக்கும். குல்சாரியை சொல்லவே வேண்டாம். ரொம்ப நாட்கள் என் ஜோல்னாப் பையிலேயே இருந்தது. விடிய விடிய நண்பர்களோடு அந்த நாவலைப் பற்றிய பேசிய நாட்கள் எங்கேயும் காணாமல் போய்விடவில்லை. இடதுசாரிச் சிந்தனைகளோடும், கனவுகளோடும் அலைந்து கொண்டிருந்த
எத்தனையோ இளஞர்கள் அவரது கதைகளுக்குள் வாழ்ந்து கொண்டிருந்தனர்.

எஸ்.ராமகிருஷ்ணன் அவரைப் பற்றிச் சொல்லும் போது, பெரிஸ்த்ரொய்க்காவின் பிரச்சாகராய் இருந்தார் என்றும், கோர்பச்சேவுக்கு மிக நெருக்கமானவராய் இருந்தார் என்றும் சில தகவல்களைச் சொன்னார். சோவியத் சிதைந்தபிறகு அவர் குர்கிஸ்தான் நாட்டின் அம்பாசிடராக இருந்தார் என்று இணையதளத்தில் இப்போது படிக்க நேர்ந்தது. இருக்கட்டும். எனது இளமைப் பருவம் சிங்கிஸ் ஐத்மாத்தாவின் எழுத்துக்களோடும் கடந்திருக்கிறது என்பது உண்மை. சோவியத் மீது அளப்பரிய அன்பும், கனவும் உருவாவதற்கு அவரும் காரணமாயிருந்திருக்கிறார் என்பது உண்மை. இழப்பின் வேதனையை கண்கள் குளமாக வாசிக்க வைத்தவர் அவர் என்பது உண்மை. அவரது எழுத்துக்கள், கடந்தகாலத்தை அழைத்துக்கொண்டு வரும் இளமையானவை. மகன் பாடும் போது தாய் அதைப் பற்றி நினைக்கிற இந்த வரிகள் அவருடையது....

"பாடு மகனே, இளைஞனாயிருக்கும் வரை பாடு. பாட்டு மனிதனைத் தூய்மைப்படுத்துகிறது. மக்களை நண்பர்களாக்குகிறது. அப்புறம் எப்போதாவது இந்தப் பாட்டை கேட்பாய், இந்தக் கோடைக்கால மாலையில் உன்னோடு சேர்ந்து பாடியவர்களை நினைவு படுத்திக் கொள்வாய்". இப்படித்தான் சிங்கிஸ் ஐத்மாத்தாவையும் நினைவுபடுத்திக் கொள்கிறேன்.

ஏன், இந்த மரணச் செய்திக்கு முன்பு வரை அவர் இருக்கிறாரா, இல்லையா என்ற பிரக்ஞையே வராமலிருந்தது? சிதைந்து போனது சோவியத் மட்டும்தானா?


முன் பக்கம்

கருத்துகள்

8 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. dear mathav

    really Mathav, I also never thought whether Singiz Aithmothov would be alive. His death news is carried to me by your moving essay. I used to carry Gulsari and Muthal Aasiriyan for long days like you did. Even last week, I read Muthal Aasiriyan once more. Again, you are proving different.....

    Go ahead in your blog....

    s v venugopalan

    பதிலளிநீக்கு
  2. Uncle,
    sorry for typing in English. Murasu posing problems.
    Jamila used to be my favorite heroine until I read Annai Vayal. Then Thalkonai took her place. The scene in which Thalkonai and her daughter-in-law run behind the train just to catch a glimpse of her son brought tears to my eyes. What rich and noble characterization. I read and re-read it. Do suggest me any other novels of Chingiz please.

    பதிலளிநீக்கு
  3. dear madhu
    today only i opened ur blog. i am terribly happy to read all the pages.Jameela is my all time close to heart novel written by Singis aithmathov.
    what to do to upload in tamil.e kalappai uthavuma?
    anputan
    sa.thamizhselvan,pattamadai

    பதிலளிநீக்கு
  4. ஆஹா!
    எழுத்தாளர் தமிழ்ச்செல்வனின் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. Dear Madhav,

    I'm totally new to reading such wonderful thoughts.

    Your writings are excellent.

    Please let me know how i can get access to "annai vayal". I'm in US now.

    Thanks,
    Deepathen

    பதிலளிநீக்கு
  6. தீபலட்சுமிக்கு!

    வணக்கம்.

    தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் ரொம்ப நன்றி.

    அன்னைவயல், இப்போது த‌மிழ்நாட்டிலேயே நிறைய பேரிடம் இருக்குமா என்பது சந்தேகம்தான்.
    யாராவது ஒரு புதிதாக பதிப்பு போடுவார்கள் என்று நம்புகிறேன்.
    யு.எஸ்ஸில் சாத்தியம் ரொம்பக் குறைவுதான்.
    ஆங்கிலத்தில் படிக்க முடியுமென்றால், இணையதளத்தில் தேடிப் பார்க்கலாம்.
    அதுவும் கிடைக்குமா என்று தெரிய‌வில்லை.
    எதாவ‌து வ‌ழி இருக்குமா என்று யோசிப்போம்.

    த‌மிழில் இன்று மிக‌ எளிதான‌ க‌ருவிக‌ளும், வ‌ழிக‌ளும் இருக்கின்ற‌ன‌.
    முய‌ற்சிக்க‌லாமே!

    பதிலளிநீக்கு
  7. தீபலட்சுமி!

    தமிழில் எழுத முயற்சிக்கலாமே என்றேன்.

    பதிலளிநீக்கு
  8. ...please where can I buy a unicorn?

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!