-->

முன்பக்கம் , , , , , , � அடுத்த பிரதமர் யார்?

அடுத்த பிரதமர் யார்?பாராளுமன்றத் தேர்தல் என்றவுடன், ‘அடுத்த பிரதமர் யார்?’ என்பதுதான் முதல் கேள்வியாகவும், ஒரு சுவாரசியம் நிறைந்த புதிராகவும் முன்வைக்கப்படுகிறது. தேர்தல் களம் பற்றி உரையாடுகிற அனைத்து ஊடகங்களிலும் ’அடுத்த பிரதமர் யார்’ குரல் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கிறது. கருத்துக்கணிப்பு ஆய்வுகளும்  ‘அடுத்த பிரதமர் யார்’ என்பதைக் குறிவைத்தே நடத்தப்படுகின்றன. அங்கிங்கெனாதபடி எங்கும் ஒலிக்கிற இந்தக் கேள்வி, அந்தப் பிரதமரை ஒரு மகத்தான நாயகனாகவும், வானத்திலிருந்து தரையிறங்கி நம் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கப் போகிறவராகவும் ஒரு சித்திரத்தை ஏற்படுத்த முயல்கின்றன. அதுகுறித்த மறுபேச்சோ, சிந்தனைகளோ, ஆராய்ச்சிகளோ எதுவும் அற்று எளிய மக்கள்  அந்த ‘அவர்’ யாராக இருப்பார் என்று அறிந்துகொள்ள துடிக்கின்றனர். ஒரு‘தேவனின் வருகையை’ எதிர்பார்க்கின்றனர்.

அந்த நாயகனை ‘நீங்கள்தாம் தேர்ந்து எடுக்கப் போகிறீர்கள்’ என இரண்டு அல்லது மூன்று முகங்களை நீட்டுகிறார்கள். ‘அவர் அப்படிப்பட்டவர்’,  ‘இவர் இப்படிப்பட்டவர்’ என பின்னணியில் குரல்கள் கேட்கின்றன. ஏற்பாடு செய்யப்பட்ட சிலர் வேகமாக அந்த  முகங்களை நோக்கி கை நீட்டுகிறார்கள். மக்களும்  தங்களை அறியாமல் அந்த முகங்களை நோக்கி கைகளை நீட்ட ஆரம்பிக்கிறார்கள்.  அந்த முகங்கள் பெரிது பெரிதாய் ஆகின்றன. ஒன்று மிகப் பெரிதாகிறது. அவரே ‘அடுத்த பிரதமர்’ ஆகிறார். ஒரு மாபெரும் தேசத்தின் மக்கள் தங்கள் மகத்தான ஜனநாயக் கடமையை ஆற்றிவிட்டதாக பெருமை பேசப்படுகிறது.

ஐந்து வருடத்திற்கு ஒருமுறை இப்படி ‘அடுத்த பிரதமர்’கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஐந்து வருடங்களில் அந்த பிரதமர்கள் தங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, தங்களை வாட்டி வதைத்து விட்டார் என்று மக்கள் தெரிந்துகொள்கிறார்கள். இங்கு தவறு செய்தது மக்கள் அல்ல. அப்பாவி மக்களை ஏமாற்றிய அந்த பிரதமர்தான். ஆனால் மக்களோ தாங்களும் தவறு செய்துவிட்டதாக உணர ஆரம்பிக்கிறார்கள்.  மக்களின் சம்மதத்தின் பேரிலேயே அனைத்தும் நடப்பதாக ஒரு மாபெரும் கண்கட்டி வித்தை இது. இந்த அமைப்பின் விந்தை இது.

’அடுத்த பிரதமர் யார்?’ என திரும்பவும் அறிவிக்கப்படுகிறது. குரல்கள் மீண்டும் எழுகின்றன. சென்ற தடவை ஏமாற்றியவரின் முகமும், புதிதாக ஏமாற்றப் போகிறவரின் முகமும் முன்வைக்கப்படுகின்றன. சென்ற தடவை ஏமாற்றியவரை நோக்கி அதிகமாக மக்கள் கைகளை நீட்டவில்லை. புதிய முகம் பெரிதாகிறது. சென்ற தடவை ஏமாற்றியவரை தண்டித்து விட்டதாக மக்கள் நிம்மதி கொள்கின்றனர். அடுத்த பிரதமரும் மக்களை  ஏமாற்ற ஆரம்பிக்கிறார். நம்பிக்கைகள் தகர்ந்து போகின்றன.

மக்களை மீண்டும் மீண்டும் முட்டாள்களாக்கும் மோசடிதான் இந்த ‘அடுத்த பிரதமர் யார்?’ என்னும் குரல். கடந்த இருபது இருபத்தைந்து ஆண்டுகளில் இப்படி ‘அடுத்த பிரதமராக’ முன்வைக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்களை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் எல்லாம் தெளிவாகும்.

ராஜீவ் காந்தி
நரசிம்மராவ்
வாஜ்பாய்
சோனியா காந்தி
அத்வானி
மன்மோகன் சிங்

‘இந்தியாவை 21ம் நூற்றாண்டுக்குள் அழைத்துச் செல்கிறேன்’ என்றார் ஒரு ‘அடுத்த பிரதமர்’  ’இந்தியா ஓளிருகிறது’ என்றார் இன்னொரு ‘அடுத்த பிரதமர்’. ‘நவீனப் பொருளாதார மேதை’ என்றழைக்கப்பட்டார் மற்றொரு ‘அடுத்த பிரதமர்’. எல்லோருடைய காலங்களிலும் மக்களே வஞ்சிக்கப்பட்டனர். இந்தியா ‘ஏழைகளின் இந்தியா’,  ‘பணக்காரர்களின் இந்தியா’ என்று இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த  ‘அடுத்த பிரதமர்’கள் எல்லோரும் ஏழைகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு பணக்காரர்களுக்கு சேவகம் செய்கிறவர்களாகவே இருந்தார்கள்.

இந்த வழியில்தான் இப்போது நரேந்திர மோடியும் ‘அடுத்த பிரதமராக’ முன்வைக்கப்பட்டு இருக்கிறார். ‘இந்தியாவின் வளர்ச்சி’ என்று எங்கும் முழக்கமிடப்படுகிறது.

திரும்பவும் ஏமாறக் கூடாது அல்லது  ஏமாற்ற அனுமதிக்கக் கூடாது. நரேந்திர மோடி, ராகுல் காந்தி முகங்களை ஒதுக்கி விட்டு, எது இந்தியாவின் வளர்ச்சி  என பேச வேண்டும். ஆயிரத்தெட்டு புள்ளி விபரங்களை அவர்கள் சொல்வார்கள். குழப்புவார்கள். மிக எளிமையாக இந்தியாவின் வளர்ச்சியை நாம் முன்வைப்போம்.

“இந்த தேசத்தில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் அவரவர்களுக்கென்று ஒரு வீடு. அதற்கு மின்சாரம் மற்றும் குடிநீர். மூன்று வேளை அனைவருக்கும் உணவு. அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை.” இதுதான் இந்தியாவின் உண்மையான வளர்ச்சியாய் இருக்க முடியும்.

இதனை சொல்வதற்கு யாருக்குத் துணிவு இருக்கிறது என முதலில் பார்ப்போம்.  இதனை அமல் செய்ய யாருக்கு உறுதி இருக்கிறது என அறிவோம். அவர்களிலிருந்து ஒருவரை ‘அடுத்த பிரதமராக’ தேர்ந்தெடுப்போம்.

Related Posts with Thumbnails

7 comments:

 1. "நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், நம் வாக்கு முறையையே மாற்ற வேண்டும். பிரதமரையும், முதல்வரையும் மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறை கொண்டுவரப்பட வேண்டும். போதிய அரசியல் ஞானம் இல்லாதவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை தடைசெய்ய வேண்டும்.
  சாலையில் ஓடும் வண்டிகளுக்கு, ஓட்டுநர் உரிமம் கொடுக்கிறார்கள். அதுபோல், போதிய அரசியல் ஞானம், விழிப்புணர்வு கொண்டவர்களுக்கே வாக்களிக்கும் உரிமம் வழங்கப்பட வேண்டும்..
  அப்போதுதான் காசுக்காகவும், பிரியாணி, போதைக்காகவும் வாக்குகள் விலைபோகாது.
  மேலும், தேர்தல் நடைமுறை விதிகளின்படி, அனைத்து, ஒயின்ஷாப்புகளையும் மூட வேண்டும்.
  அப்போதுதான் ஓரளவு நிலைமையை சீர்செய்ய முடியும்.

  ReplyDelete
  Replies
  1. 1)yes it is a true but all setup cant change in a hole day since we are unfortunately living in a such a difference setup so called jananayagam

   Delete
 2. அருமையான கட்டுரை அண்ணா...
  முகங்களை ஒதுக்கி வைத்து ஓட்டும் போடும் மனநிலையிலா நாம் இருக்கிறோம்...
  பணம் படுத்தும் பாட்டை மட்டும்தானே பார்க்கிறோம்..

  ReplyDelete
 3. தங்களின் சிறந்த பகிர்வை வரவேற்கிறேன்.

  ReplyDelete
 4. வரவேற்கிறேன்.

  ReplyDelete
 5. வரவேற்கிறேன்.

  ReplyDelete
 6. தெலுங்கானாவில் இடதுசாரி இயக்கங்களில் ஒன்றான எமெர்ஜென்சி புகழ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துள்ளது,இதை எப்படி தோழர் சப்பை கட்டுவார்.

  ReplyDelete