“ஜெயலலிதாக்களும், கருணாநிதிகளும் நாசமாய்ப் போகட்டும்”
நாளை முதல் மின்சாரக்கட்டணம் மிகக் கடுமையாக உயர இருக்கிறது. ‘புதிய தலைமுறை’ டிவி வாசித்த கட்டண உயர்வு செய்திகளைக் கேட்டவர்கள் அதிர்ந்துபோய் இருக்கிறார்கள். வாழ்க்கையையே பெரும் சுமையாகிப் போக வைத்த பெருமை ‘அன்புச் சகோதரி’ ஜெயலலிதாவுக்கே இப்போது சேரும்.
‘தான் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் மின்வெட்டை சரிசெய்வதாகவும், கருணாநிதி ஆட்சியின் அலங்கோலங்களைச் சரி செய்வதாகவும்’ இரட்டை விரல் காட்டி காட்டி ஓட்டு கேட்டார் ஜெயலலிதா. பதவிக்கு வந்தவுடன், கருணாநிதியின் பொறுப்பற்ற ஆட்சியைக் காரணம் காட்டி, பஸ்கட்டணம், பால் கட்டணம் எல்லாவற்றையும் அதிரடியாக அறிவித்தார். இதற்குப் பிறகும் என்னை சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் தோற்கடித்துப் பாருங்கள் என சவால் விட்டார். அமைச்சர் பெருமக்கள் எல்லாம் அங்கே முகாமிட்டு, கொடுக்க வேண்டியதைன் கொடுத்து, பெற வேண்டியதைப் பெற்றதும், மமதையில் கொக்கரித்தார் ஜெயலலிதா. அங்கே தோற்றவர்கள் கருணாநிதியல்ல, வை.கோ அல்ல, விஜய்காந்த்தும் அல்ல. மக்களே. கூடவே இந்த விளங்காத ஜனநாயகமும்தான்.
அந்தக் கொழுப்பில்தான் இப்போது மின்சாரக் கட்டண உயர்வு அறிவிக்கப்படுகிறது. அமலுக்கு வருகிறது. இப்போது ‘கருணாநிதி எவ்வளவோ தேவலை’ என அதே வாக்காளர்கள் பேசுகிறார்கள். இதுதான் ஜெயலலிதா ஆட்சியின் சாதனை! இப்படித்தான் கருணாநிதி தனது ஆட்சியில், ‘ஜெயலலிதா எவ்வளவோ தேவலை’ என்னும் பேரை சம்பாதித்துக் கொடுத்தார். இந்த இருவரும்தான் தங்களுக்கு எதாவது செய்வார்கள் என மக்கள் நம்பிக்கொண்டு இருக்கின்றனர். அந்த நம்பிக்கையை ஒருவர் மாற்றி ஒருவர் ஏற்படுத்துவதும், அழிப்பதும் கருணாநிதியும், ஜெயலலிதாவுமே. அவர்களுக்கு இது அதிகாரப் போட்டி. ஆனால் மக்கள் பணயம் வைத்து இழந்து கொண்டு இருப்பதோ தங்கள் வாழ்க்கையை.
இவ்வளவு சுமைகளுக்குப் பிறகும் மக்கள் தங்கள் இருவர் மீதும் ஒட்டுமொத்தமாக கோபப்பட மாட்டார்கள் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். தங்களில் யாராவது ஒருவர் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகிவிடமுடியும் என்கிற அதீத நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. இருவரும் ஒருவருக்கொருவர் பகைமை கொண்டிருந்தாலும், இருவருமே மக்களின் பகைவர்கள் என ஒருபோதும் அறியப்பட மாட்டோம் என்னும் மமதையை இந்த ஜனநாயகம் அவர்களுக்கு வழங்கி இருக்கிறது. இதுதான் இன்றைய பிரச்சினைகளுக்கு மூலம், வேர் எல்லாம். அந்த இடத்தில் மக்கள் தங்கள் ஆத்திரத்தையும் வெறுப்பையும் வெடியாக வைக்க வேண்டியிருக்கிறது.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக என்னும் இந்த தோற்றம்தான், இந்தியாவைப் பொறுத்த வரையில் காங்கிரஸ், பா.ஜ.க என்னும் தோற்றமாக நீடிக்கிறது. இவர்களில் யார் ஆட்சியில் இருந்தாலும் முதலாளித்துவம் புன்னகைக்கும். ஆட்சியின் பலன்களை அனுபவிக்கும். இவர்கள் அனைவருமே நாசமாய்ப் போகட்டும் என மக்கள் உணர்வதில்தான், மக்களின் காலகாலமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அதற்கு அவர்கள் “ஜெயலலிதாக்களும், கருணாநிதிகளும் நாசமாய்ப் போகட்டும்” என முதலில் பேசத் துவங்க வேண்டும். அது, இந்த நாடு பெருமை பேசும் ஜனநாயகத்திற்கு ஏற்படும் நிலநடுக்கமாக இருக்கும்.
மக்கள் நாசமாய்ப் போவதற்கு காரணமான இவர்கள் நாசமாய்ப் போவதுதானே சரி?
அந்த பொறுக்கி டிஎஸ்பியை மக்கள் செருப்பால் அடிக்கலாமா வேண்டாமா?
ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கொடுப்பதாக அரசு அறிவித்திருக்கிறது. பெறுவதற்கு ஏராளமான பட்டதாரிகள் வந்திருக்கின்றனர். ஆனால் விண்ணப்பங்கள் வரவில்லை. இதனைத் தட்டிக்கேட்ட கணவன் மனைவி இருவரையும் ஒரு டிஎஸ்பி நடு ரோட்டில் வைத்து தாக்கியிருகிறான். இது நேற்றைய செய்தி.
நியாயம் கேட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை இது. நடுரோட்டில் ஒரு டிஎஸ்பி அதை செய்திருக்கிறான். அவனுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தவன் எவன்? யாரை வேண்டுமானாலும் அடிக்கலாம் என்கிற தைரியமும், தெனாவெட்டும் அவனுக்கு எப்படி வந்தது? இப்படிப்பட்ட வெறிநாய்களுக்கு காவல்துறை உடையை யார் வழங்கியது?
இந்த தேசத்தின் பிரஜைகளுக்கு அதிகார வர்க்கமும், அமைப்பும் கொடுக்கிற பதிலாக இதுதான் இருக்குமென்றால், அதைப் பார்த்துக்கொண்டு மௌனம் சாதிக்கிற இந்த அரசுகளை யார் தூக்கில் போடுவது?
படித்தவர்களுக்கே இந்த கதியென்றால், படிக்காத எம் நாட்டின் சாதாரண மனிதர்களை வெறி பிடித்த ஏவல் நாய்கள் என்ன பாடுபடுத்தும்?
இந்தக் கேள்விகளுக்கு பதிலும் ஒரு கேள்விதான். அந்த பொறுக்கி டிஎஸ்பியை மக்கள் செருப்பால் அடிக்கலாமா வேண்டாமா?
அரசு விசாரிப்பது இருக்கட்டும். முதலில் மக்கள் நாம் விசாரிப்போம்.
முதலாளிகள் என்ன, பணத்தை சாப்பிடவா போகிறார்கள்?
பட்ஜெட் என்றால் வருமான வரி வரம்பு, டிவி விலை, கார் விலை என்ற மிக மேலோட்டமான தகவல்களோடு மட்டும்செய்திகள் வெளியிடப்படுகின்றன. அரசின் வர்க்கக் குணம், மக்கள் மீது சுமைகளை ஏற்றும் சாமர்த்தியம் என ஆழமான பல அம்சங்கள் அதனுள் இருக்கின்றன. உண்மையிலேயே நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் வரவு - செலவு அறிக்கையின் அடிப்படையில் தான் ஆண்டு முழுவதும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றனவா? மாநில அரசுகளை மத்திய பட்ஜெட் எந்த அளவுக்கு பாதிக்கும்? பட்ஜெட் பற்றிய மேலோட்டமான தகவல்களுக்கு அப்பால் புரிந்து கொள்ளப்பட வேண்டிய உண்மைகள் என்ன? நிதி மூலதனத்தை ஊக்குவிக்கிற கொள்கைதான் செயல்படுத்தப்படுகிறது என்றாலும், அந்த நிதி மூலதனம் என்பது நேரடியாக இல்லாவிட்டாலும், சுற்றி வளைத்து ஏதோ ஒரு வகையில் பொருள் உற்பத்தி சார்ந்த முதலீடாகத்தானே போய்ச்சேர்கிறது? இப்படி பல கேள்விகள் எழுகின்றன. பொருளாதார ஆய்வாளரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினருமான வெங்கடேஷ் ஆத்ரேயா அவை குறித்து அளித்த விளக்கங்கள் ஆழ்ந்த சிந்தனைகளைக் கிளறுகின்றன.
மத்திய அரசின் பட்ஜெட் ஒன்றும் சூன்யத்தில் இருந்து வருவதல்ல. ஏற்கெனவே நிலவுகிற பொருளாதார நிலைமைகளுக்கு உட்பட்டுதான் பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது. பொருளாதாரத்தில் யார் வலுவானவர்களாக இருக்கிறார்களோ, உற்பத்திக் கருவிகளை யார் தங்கள் பிடியில் வைத்திருக்கிறார்களோ, அவர் களுடைய நலன்களுக்கு எதிராக அரசு ஒருபோதும் செயல்படாது. எல்லோருக்கும் வாக்குரிமை இருக்கிறது. இருந்தாலும் செல்வாக்கு யாருக்கு இருக்கிறதென்றால் பெருமுதலாளிகள், நிலப் பிரபுக்கள், உள்நாட்டு - வெளிநாட்டு கார்ப்பரேட் அதிபர்கள் ஆகியோருக்குத்தான்.
உற்பத்திக்கு உதவாத உலக நிதி
முன்பும் வெளிநாட்டு முதலீடுகள் குறிப்பிட்ட அளவுக்கு வந்தன என்றாலும் கூட, அவை வெறும் பணமாக மட்டும் வர அனுமதிக்கவில்லை. இங்குள்ள தொழில்களுக்கான முதலீடுகளாகவும், உற்பத்தியைப் பெருக்குவதற்கான நிதியாகவுமே வர அனுமதிக்கப்பட்டன. ஆனால், உலகமயக்கொள்கைகள் நடைமுறைக்கு வரத்தொடங்கிய பிறகு, தொழில் உற்பத்திக்கு சம்பந்தமில்லாத பங்குச் சந்தைகளுக்கான முதலீடாக மட்டுமே வெளிநாட்டுப் பணம் வர அனுமதிக்கப்படுகிறது. அவ்வாறு பங்குச் சந்தைக்காக வருகிற நிதி மறைமுகமாக சம்பந்தப்பட்ட தொழில்களின் முதலீடுகளாகத்தானே மாறுகின்றன என்று ஒரு கருத்து இருக்கிறது.
ஆனால், குறிப்பிட்ட நிறுவனத்தின் உற்பத்தி சிறப்பாக இருந்து, அதனுடைய விற்பனை - லாபம் மேலோங்கியிருந்தால் தானே யாரும் விலை கொடுத்து வாங்குவார்கள் என்றும் சிலர் கேட்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் செயற்கையான முறையில் குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகள் திடீரென ஒரு வெளிநாட்டு நிறுவனத்தால் வாங்கப்படுகின்றன. அதைப்பார்த்து இங்கே இருக்கிற பலரும் அதே பங்குகளை வாங்குகிறார்கள். அந்த நிறுவனம் உற்பத்தியில் ஈடுபட்டு அதன் பொருள் விற்பனையாகி லாபம் வரும் வரையில் இவர்கள் காத்திருப்பதில்லை. விலை குறைவாக இருக்கும்போது வாங்கிப் போட்டு பிறகு விலை உயரும்போது கூடுதல் விலை வைத்து விற்கப்படுகிறது. செயற்கையாக பங்குகளின் மதிப்பு அதிகரிக்கப்படுகிறது அல்லது குறைக்கப்படுகிறது. மந்தைப் பொருளாதாரம் என்பார்கள் - அதாவது, குறிப்பிட்ட நிறுவனத்தின் உற்பத்தி, சந்தை பலம் ஆகியவற்றைக் கணக்கிடாமல் அதன் பங்குகளை திடீரென வேறொரு நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்குவது, அதைப்பார்த்து மற்றவர்கள் அதே நிறுவனத்தின் பங்குகளை தாங்களும் வாங்கிப்போடுவது, அவர்கள் கூடுதல் விலை வைத்து விற்கிறபோது மற்றவர்களும் விற்றுத் தள்ளுவது என்பதுதான் நடக்கிறது.
இது எந்த வகையிலும் தொழில் வளர்ச்சிக்கோ, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கோ உதவாது. ஆனால், இதைப்பற்றிய எந்த யோசனையுமின்றியே மத்திய அரசு ஊக பேர பங்குச்சந்தையில் உள்நாட்டு - வெளிநாட்டு முதலீடுகளை மேலும் மேலும் ஊக்குவிக் கிறது. இது நாட்டுக்கு பெரிய ஆபத்து. ராஜீவ்காந்தியின் பெயரால் ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. முதலீடுகளுக்கு 50 விழுக்காடு வரிச்சலுகை அளிக்கிற அந்தத் திட்டம், வங்கிகளில் சேமிப்புகளை வளர்ப்பதற்கு மாறாக, ஊக பேரத்தில் முதலீடு செய்ய ஊக்குவிக்கிறது. முன்பு அமெரிக்காவில் குளிரடித்தால் இந்தியாவில் தும்மல் வரும் என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். இப்போதோ அமெரிக்காவில் குளிரடித்தால் இந்தியாவில் காய்ச்சலே வரும் என்ற அளவிற்கு ஏற்றுமதிப் பொருளாதாரம் அதிகரித்திருக்கிறது.
அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளின் சந்தையை சார்ந்திருக்கிற நிலைமையும் அதிகரித்திருக்கிறது. அதற்கேற்ப பட்ஜெட் கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன.
பொதுமக்கள் விவாதிக்க வேண்டும்
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுகிற பொருளாதார ஆய்வறிக்கை, பட்ஜெட் இரண்டுமே திட்டவட்டமானதாக இல்லாமல் ஊகத்தின் அடிப்படையிலான மதிப்பீடுகளாகவே இருக்கின்றன. அடுத்த ஆண்டு அவர் இதேபோல் மதிப்பீடுகளை வைக்கிறபோது, சென்ற ஆண்டு அவர் என்ன மதிப்பீடுகள் வைத்தார் என்பது மக்கள் நினைவுக்கு வருவது இல்லை. முதலாளித்துவ கட்சிகளும் அதை சொல்வதில்லை. ஊடகங்களும் அதை வெளிப்படுத்துவதில்லை.
ஜனநாயகத்தில் மக்களின் வரிப்பணத்தில்தான் அரசு இயங்குகிறது, மக்களின் வரிப்பணம்தான் அரசின் திட்டங்களுக்கு செலவிடப்படுகிறது, மக்களின் வரிப்பணம்தான் பெரும் நிறுவனங்களுக்கு சலுகையாகப் போகிறது. எனவே பட்ஜெட் குறித்து பொதுமக்களும் ஆழமான அக்கறையோடு விவாதிக்கிற சூழல் உருவாக வேண்டும். பட்ஜெட்டில் பல அறிவிப்புகளை நிதியமைச்சர் போகிறபோக்கில் சொல்லியிருக்கிறார். அவையெல்லாம் பட்ஜெட்டில் கிடையாது. உதாரணமாக விவசாயத்திற்கு ஐந்தே முக்கால் லட்சம் கோடி ரூபாய் கடன்கொடுக்க விரும்புகிறோம் என்பது போன்ற விருப்பங்களை அவர் அறிவித்திருக்கிறார். அவையெல்லாம் விருப்பங்கள்தான் - நடவடிக்கைகள் அல்ல! ஆகவே என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். சென்ற ஆண்டுகூட விவசாய மேம்பாட்டிற்காக 4 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்போவதாக அறிவித்தார். அந்த 4 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டதா என்பதைப் பற்றியெல்லாம் அவர் எதுவும் சொல்லவில்லை.
ஓய்வூதிய சட்டத் திருத்தம், காப்பீட்டு சட்டத் திருத்தம் போன்ற கவலைக்குரிய சில அறிவிப்புகளையும் அமைச்சர் வெளியிட்டிருக்கிறார். இவற்றுக்கான சட்ட முன்வரைவுகள் எதையும் அவர் தாக்கல் செய்யவில்லை என்றாலும், அவை கொண்டுவரப்பட உள்ளன என்று அறிவித்திருக்கிறார். உழைப்பாளி மக்களின் பணத்தை சூறையாடக்கூடிய இந்த முன்மொழிவுகள் நாடாளுமன்றத்தில் வருகிறபோது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், நாடாளுமன்றத்திற்கு வெளியே பொதுமக்களும் விழிப்போடு இருந்து தங்கள் எதிர்ப்பை அழுத்தமாக வெளிப்படுத்தி தடுத்து நிறுத்த வேண்டும். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே தொழிலாளர் ஈட்டுறுதி நிதி (இபிஎஃப்) வட்டியை 8.25 விழுக்காடாகக் குறைத்துவிட்டார்கள். ஆக தொடர்ந்து மக்களைத் தாக்குவது என்பதுதான் அறிவிப்புகளுடைய சாராம்சம். அமைச்சர் தனது மதிப்பீடாக, நேர்முக வரிகளில் சலுகை அளிப்பதால் அரசுக்கு சுமார் 5,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக கூறினார். அதே நேரத்தில் உற்பத்தி வரி, விற்பனை வரி போன்ற மறைமுக வரிகள் மூலம் அரசுக்கு 47,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்றும் கூறியிருக்கிறார். இது ஒரு மோசமான ஏற்பாடு.
நேர்மையில்லா நேர்முக வரி
நேர்முக வரி என்பது ஏகபோக முதலாளிகள் உள்பட செல்வந்தர்களின் வருமானத்திற்கு விதிக்கப்படும் வரியாகும். அதிலே 5,000 கோடி ரூபாய்க்கு சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. அதிலேயே கூட ஒரு சமத்துவமற்ற நிலை இருக்கிறது. அனைத்து விதமான வருமானங்களுக்கும் ஒரே விகிதத்தில் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.உதாரணமாக பரம்பரைச் சொத்து உள்ளிட்ட காரணங்களால் எந்த உழைப்பிலும் ஈடுபடாமல் உட்கார்ந்து கொண்டே கோடிகோடியாய் வருமானம் ஈட்டுகிறவருக்கும், கடுமையாக உழைத்து, தொழில் நடத்தி, பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, நேர்முக வரி விதிக்கத் தக்க அளவிற்கு வருமானம் ஈட்டத் தொடங்கியவருக்கும் ஒரே விகிதத்தில் வரி என்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்? வருமானத்தின் தன்மைக்கேற்ப வரிவிகிதமும் மாறுபட்டதாக இருக்கவேண்டும்.
மக்களைத் தாக்கும் மறைமுக வரி
மறைமுக வரி என்பதும்கூட எளிய மக்களைத் தாக்குவதாகவே இருக்கிறது. ஒரு பொருளுக்கான விற்பனை வரி, அந்தப் பொருளின் விலையோடு அடங்கி விடுகிறது. அந்த விலையைக் கொடுத்து தான் பணக்காரர்களும் ஏழைகளும் அந்தப் பொருளை வாங்குகிறார்கள். வரி உயர்த்தப்படும்போது பணக்காரர்களை அது பாதிப்பதில்லை. ஏனென்றால், தங்களது வருமானத்தில் 10 முதல் 15 விழுக்காடு வரை மட்டுமே உணவுக்காக செலவிடுகிற அளவிற்கு பணக்காரர்களுக்கு வருமானம் இருக்கிறது. உணவுப் பொருள் விலை உயர்வது அவர்களை பாதிக்கப்போவதில்லை.ஆனால், தங்கள் வருமானத்தில் 40 முதல் 60 விழுக்காடு வரை உணவிற்கு மட்டுமே செலவிடவேண்டிய நிலை யில் குறைந்த வருமானம் உள்ள மக்கள் தான் நம் நாட்டில் பெரும்பகுதியினராக இருக்கிறார்கள். உணவுப் பொருள் விலையேற்றம், அவர்கள் அதற்காக செலவிட வேண்டிய தொகையை மேலும் அதிகரித்து, அவர்களது வாழ்வை நெருக்கடிக்கு உள்ளாக்கும்.
சொத்து வரி
நேர்முக வரிகளில் செய்யப்படும் மோசடி பற்றி பார்த்தோம். அதில் முக்கியமான ஒன்று சொத்துவரி. இந்தியா முழுவதும் நடப்பு நிதியாண்டில் சொத்துவரியாக பணக்காரர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டது எவ்வளவு என்று பார்த்தால் அது எவ்வளவு அபத்தம் என்பது புரியும். ஒரு முகேஷ் அம்பானி 6,000 கோடி ரூபாயில் தனக்கென ஒரு வீட்டையே கட்டுகிறார். ஆனால், அகில இந்திய அளவிலேயே சொத்துவரியாக வசூலிக்கப் பட்டது வெறும் 500 கோடி ரூபாய் தான். இந்த ஆண்டு அதை 1,030 கோடி ரூபாயாக்கியிருக்கிறார்கள். அவ்வளவுதான்.
மல்லையாக்களுக்காக ஒரு சலுகையா?
வெளிநாடுகளில் கடன் வாங்கி தொழில் முதலீட்டுச் செலவுகளுக்கு பயன்படுத்தலாம் என்று சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. கிங் ஃபிஷர் விமான நிறுவனத்தை நடத் திக்கொண்டிருக்கும் விஜய் மல்லையாவை மனதில் வைத்துக்கொண்டே இந்த சலுகையை அறிவித்திருப்பார்கள் போலிருக்கிறது. அந்நியச் செலாவணி கையிருப்பு போதுமான அளவுக்கு இருக்குமானால் இப்படிப்பட்ட வெளிநாட்டுக் கடன் முதலீடுகளால் பிரச்சனை இல்லை. ஆனால், போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லை என்பதுதான் நமது நிலைமை. பல்வேறு தனியார் நிறுவனங்கள் தங்களது முதலீட்டுச் செலவுக்கென வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இருந்து கடன்பெற்று, அதனை முறையாக திருப்பிச் செலுத்தவில்லை என்றால் அந்த வட்டிச் சுமை சுற்றிவளைத்து நம் மக்களின் தலையில்தான் ஏற்றப்படும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 விழுக்காட்டிற்கும் குறைவாகவே மானியச் செலவு இருக்க வேண்டும் என்பது நமது கொள்கையென நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் கூறியிருக்கிறார். ஏற்கெனவே சொன்னதைப்போல் ஏகபோக, பெரும் நிறுவனங்களுக்கு 46,000 கோடி ரூபாய் வரையிலும் சலுகை அளிப்பதை தேவையற்ற மானியமாக மத்திய அரசு கருதவில்லை. உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், விவசாய இடுபொருள்கள் உட்பட எளிய மக்களுக்காக செய்யப்படும் சமூக செலவுகளைத்தான் வெட்ட வேண்டிய மானியமாக இந்த அரசு கருதுகிறது. உண்மையில் மக்களுக்கு அளிக்கப்படும் மானியங்கள், அவர்கள் வாங்கும் சக்தியை அதிகரித்து, உற்பத்திப் பொருட்களுக்கான தேவைகளையும் அதிகரித்து, பொருளாதார வளர்ச்சிக்குத்தான் உதவும். ஆட்சியாளர்களோ அந்தக் கோணத்தில் சிந்திக்காமல் முதலாளிகளுக்கான நேர்முக வரிகளில் சலுகை அளித்து பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முயல்கிறார்கள். பெரும் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் இப்படிப்பட்ட சலுகைகளின் பலன்கள் ஒருபோதும் மக்களுக்கு வந்தடைவதில்லை என்பதுதான் அனுபவம்.
பொதுத்துறை நிறுவனங்கள் யாருக்குச் சொந்தம்?
பொதுவாக பொதுத்துறை நிறுவனங்களை அரசு தனக்குச் சொந்தமானதாக நினைத்துக் கொள்கிறது. எனவே அதை எப்படி வேண்டுமானாலும் கையாளலாம் என்று நினைக்கிறது. ஆனால் அவை மக்களுக்குச் சொந்தமானவை. அவற்றில் கைவைக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை. வேடிக்கை என்னவென்றால், நிதியமைச்சர் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை மக்கள் வாங்குவதற்கு வழி செய்யப்படும் என்கிறார். இது எப்படி இருக்கிறதென்றால், ஒரு பொருளின் சொந்தக்காரரிடமே அந்தப் பொருளை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்வது போல் இருக்கிறது.மேலும், லாபகரமாக இயங்காத பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள்தான் தனியாருக்கு விற்கப்படுவதாக அரசு சொல்லிக்கொள்கிறது. லாபகரமாக இயங்காத எந்த ஒரு நிறுவனத்தின் பங்குகளை முட்டாள்கள் கூட வாங்க மாட்டார்கள். லாபகரமாக இயங்கும் என்று தெரிந்தால்தான் முதலாளிகள் பங்குகளை வாங்குவார்கள்.
அப்படி, லாபகரமாக இயங்கக்கூடிய நிறுவனங்களின் குறைபாடுகளைக் களைந்து தொடர்ந்து வெற்றிகரமாக செயல் படவைத்து மக்களின் சொத்தை பாதுகாப்பதுதான் பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமையாக இருக்க முடியும். ஆனால், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படுவதன் பின்னணியிலுள்ள இந்த மோசடிகளை பல பொருளாதார அறிஞர்களும் சொல்வதில்லை, ஊடகங்களும் வெளிப்படுத்துவதில்லை. ஆகவேதான், தங்களுடைய சொத்து களவாடப் படுகிறது என்ற உண்மை தெரியாதவர்களாக, அதற்கு மக்களுடைய எதிர்ப்பு வராமல் இருக்கிறது. ‘டிஸ் இன்வெஸ்ட்மென்ட்’ எனப்படும் இந்த பொதுத்துறை நிறுவனங்கள் சீரழிப்புக்கு எதிரான குரல் பல மடங்கு வலுவாக ஒலித்தாக வேண்டும். மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் இடது முன்னணி செய்த ஒரு முக்கியமான சாதனை, நஷ்டத்தில் இயங்குவதாக சொல்லப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்தி லாபகரமாக இயங்க வைத்ததுதான். திட்டமிட்டே ஊடகங்கள் அந்த தகவல்கள் மக்களுக்கு வராமல் தடுத்தன.
அரசு கடன் வாங்குவது அவமானமா?
அரசு தனது செலவினங்களுக்காக கடன்பெறுவது என்பது ஏதோ செய்யக்கூடாத தவறு என்பதைப் போல சித்தரிக்கப்படுகிறது. தொழில் நிறுவனங்கள் வங்கிகளிடமிருந்து - அதுவும், பொதுத்துறை வங்கிகளிட மிருந்துதான் - கடன் பெற்றுத்தான் முதலீடு செய்கின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, சொந்த லாபத்திற்காக மட்டுமே இயங்குகிற தனியார் நிறுவனங்கள் வங்கிகளிட மிருந்து கடன் பெறுவது நியாயம் தான் என்றால், ஒரு அரசு தனது மக்களுக்குச் செய்ய வேண்டிய பணிகளுக்காக கடன் பெறுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆகவே, அரசு கடன் பெற்று, முதலீடு செய்து, உபரியை ஈட்டி கடன்களை அடைக்க முடியும்.
இன்னொரு கோணத்தில் சொல்வதானால், அரசாங்கம் கடன் வாங்கித்தான் செயல்பட வேண்டும் என்று நாம் சொல்லவில்லை. ஏற்கெனவே சொன்னதுபோல செல்வந்தர்களுக்கான நேர்முக வரியை முறையாக நிர்ணயித்து அதை வசூல் செய்தாலே அரசு கடன் வாங்க வேண்டிய அவசியம் வராது. அதற்கு மேலாக, மக்கள் நலத் திட்டங்களை செயல் படுத்துவதற்கு நிதி தேவைப்படும் போது அதனை கடனாகப் பெறுவதிலும் தவறில்லை. அரசு கடன் பெறக் கூடாது என்று சொல்வதன்மூலம், மக்களுக்கான திட்டங்கள்தான் மீண்டும் அரிக்கப்படுகின்றன. அதை நாம் தடுத்தாக வேண்டும்.
பற்றாக்குறையாகும் பகுத்தறிவு
ஆண்டுதோறும் பற்றாக்குறை இலக்கு என ஒன்றை பட்ஜெட்டில் அறிவிப்பார்கள். ஒரு தடவைகூட அந்த அளவிற்கு பற்றாக்குறையை குறைக்க முடிந்ததில்லை. ஒரு வாதத்திற்காக, 5 விழுக்காடு பற்றாக்குறை இலக்கு என அறிவிக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம். அதை இரண்டு வழிகளில் அடைய முடியும். ஒன்று, செலவுகளைக் குறைப்பது, இன்னொன்று வரவை அதிகரிப்பது. செலவைக் குறைப்பது என்றால், அது மக்களுக்கான செலவைக் குறைப்பது என்றுதான் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
பெரும்முதலாளி களுக்கு வழங்கப்படும் மானியங்களையும், பெரும் நிலவுடைமையாளர்களுக்கான வரிச்சலுகைகளையும் குறைப்பது என்ற கோணத்தில் அரசு யோசிப்பது இல்லை.அதேபோல் வரவை அதிகரிப்பது என்றால், அது கடன் அல்லாத வரவாக இருக்க வேண்டும். நேர்முக வரிவிகிதங்களை அதிகரிப்பதன் மூலமாகவும், பொதுத்துறை நிறுவனங்களை சிறப்பாகச் செயல்படுத்துவதன் மூலமாகவும் கிடைக்கிற வரவாக இருக்க வேண்டும்.
மர்மமான மவுனம் எதற்காக?
ஆனால், இப்படிப்பட்ட வழிகளில் அரசாங்கத்தின் வரவை அதிகரிப்பது பற்றி ஆட்சியாளர்களும் பொருளாதார வல்லுநர்கள் எனப்படுவோரும் ஊடகங்களும் பேசுவதே இல்லை. அதற்கு அவர்கள் சொல்கிற வாதம் - அப்படியெல்லாம் செய்தால் முதலீட்டாளர்கள் ஊக்கமிழந்துவிடுவார்கள் என்பதுதான். முதலீடு செய்து லாபம் எடுப்பவர்கள் திரும்பத் திரும்ப அதைச் செய்து கொண்டுதான் இருப்பார்களேயல்லாமல் தொழிலை நிறுத்திவிட மாட்டார்கள். சம்பாதித்த பணத்தை வெளிநாடுகளுக்கு எடுத்துப் போகக் கூடாது என்று தடைவிதித்தால், அவர்கள் என்ன செய்வார்கள்? பணத்தைச் சாப்பிடவா போகிறார்கள்? 30 விழுக்காடு லாபம் ஈட்டிய வியாபாரத்தில் வரிகளின் காரணமாக 25 விழுக்காடு லாபம்தான் கிடைக்கும் என்றால் அதை முதலாளிகள் வேண்டாம் என்று சொல்லி நிறுவனத்தை மூடிவிடுவார்களா என்ன?டாடாவிடமிருந்து ஒரு ரூபாயை எடுத்து சோற்றுக்கு வழியில்லாதவர்களுக்குக் கொடுத்தால் டாடா உற்சாகம் இழந்துவிடுவார் என்பது போன்ற அபத்தமானவாதம் தான் இது. இங்கேதான் அரசியல் உறுதி வேண்டும் என்பது.
இதுதான் சட்டம், இதற்கு உட்பட்டு நீ தொழில் நடத்து, லாபம் ஈட்டு என்று சொல்கிற அரசியல் உறுதி ஏன் ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பதே கேள்வி.
வாரிக்கொடுக்கும்‘வரிச் செலவு’!
பட்ஜெட் முழு விவரங்களை இணையத்தில் வெளியிட்டிருக் கிறார்கள். அதில், யாரும் கண்டு கொள்ளாத ஒரு பகுதி - ‘டாக்ஸ் எக்ஸ்பெண்டிச்சர்’ என்ற தலைப்பில் இருக்கிறது. வரிச் சலுகைகளால் ஏற்படும் இழப்புக்குத்தான் இப்படி ‘வரிச் செலவு’ என்ற அர்த்தம் தருகிற தலைப்பை வைத்திருக்கிறார்கள். 2011-12ம் ஆண்டில் வசூலான வரியை விட மிகக் கூடுதலான வரி இழப்பு ஏற்பட்டிருப்பதாக அந்தத் தகவல் கூறுகிறது. எடுத்துக்காட்டாக, ஆயத் தீர்வையாக (உற்பத்தி வரி) வசூலிக்கப்பட்ட தொகை 1 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய், வரி இழப்பு 2 லட்சத்து 12 ஆயிரத்து 167 கோடி ரூபாய்! இது வரி வசூல் துறையின் செயலின்மையால் ஏற்பட்ட இழப்பு அல்ல, அரசு அளித்த வரிச் சலுகைகளால் ஏற்பட்ட இழப்பு! சுங்கவரி மூலம் வசூலானது 1 லட்சத்து 53 ஆயி ரம் கோடி ரூபாய், சலுகைகளாக விட்டுக்கொடுக்கப்பட்டது 2 லட் சத்து 23 ஆயிரத்து 653 கோடி ரூபாய்! தனி நபர்களுக்கும் நிறுவனங்களுக்கு மான வருமான வரியில் சுமார் 1 லட் சம் கோடி ரூபாய் சலுகையாகத் தரப்பட்டிருக்கிறது... இப்படியாக ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் வரிச் சலுகை தரப்பட்டிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் இவ்வாறு தாரை வார்க்கப்பட்ட தொகை 20 லட்சம் கோடி ரூபாய் செல்வந்தர்களுக்கு வாரி வழங்கப்பட்டிருக்கிறது!உணவுப் பாதுகாப்பைச் செயல்படுத்துவதற்குத் தேவைப்படும் தொகை 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்.
அதற்குப் பணம் இல்லை என்று கையை விரிக்கிற அரசு, கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் மற்ற செல்வந்தர்களுக்கும் இப்படி சலுகைகளாக 20 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்திருக்கிறது! இது அநியாயம் இல்லையா? மாநில அரசுகளுக்குக் கடும் சிக்கல்களை ஏற்படுத்துகிற பட் ஜெட்டாகவும் இது இருக்கிறது. எரிபொருள் விலையேற்றத்திற்கு வழிசெய்யப்பட்டிருப்பதும் ஏழைகளைத்தான் மேலும் நெருக்கடியான வாழ்க்கைக்குத் தள்ளும். விவசாயம், கல்வி, சுகாதாரம் போன்ற மக்கள் சார்ந்த ஒதுக்கீடுகள் இந்த பட்ஜெட்டில் மிகக் குறைவு, மொத்தத்தில் பண வீக்கம், வேலையின்மை, விவசாய நெருக்கடி ஆகிய மூன்று மையமான பிரச்சனைகளையும் எதிர்கொள்ள உதவாத பட்ஜெட்டைத்தான் மன்மோகன் சிங் அரசு தாக்கல் செய்திருக்கிறது. அது மட்டுமல்லாமல், நம்பகமில்லாத மதிப்பீடுகளுடனான இப்படிப்பட்ட வரவு- செலவு அறிக்கையைத் தாக்கல் செய்தாலும், இடைக்காலத்தில் அவ்வப்போது பெட்ரோல் விலை உயர்வு போன்ற பட்ஜெட்டிற்கு உட்படாத நடவடிக் கைகளையும் அரசு எடுக்கும் என்பது நமக்குத் தெரிந்ததுதான். மக்கள் இதை எதிர்த்துப் போராட வேண்டுமானால், மறைக்கப்படுகிற இந்த உண்மைகளை அவர்களிடம் கொண்டு சேர்க்கிற பெரிய கடமை இடதுசாரி - ஜனநாயக இயக்கங்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும், மக்கள் அமைப்புகளுக்கும் இருக்கிறது.
சந்திப்பு : அ.குமரேசன்
நன்றி: தீக்கதிர்
கூடன்குளம்: பிரகடனமாக ஒரு கவிதை
கூடன்குளம் அணு உலைக்கு எதிராகவும், ஆதரவாகவும் குரல்கள் கேட்டுக்கொண்டு இருக்கின்றன. நிலைபாடுகள், கொள்கைகள், கோட்பாடுகள் எல்லாவற்றையும் மீறி, மனசாட்சியைப் பற்றி உலுப்பியபடி, கவிஞர் சமயவேல் எப்போதோ எழுதிய ‘பிரகடனம்’ எனும் இந்தக் கவிதை ஒலித்துக்கொண்டு இருப்பதாகப் படுகிறது.
சலிப்படையவே மாட்டேன்
மீண்டும் மீண்டும்
நான் நானாகவே இருப்பேன்!
வாழ்வின் ஒவ்வொரு கிளையிலும்
உன்னதம் தேடுவதை
ஒருபோதும் நிறுத்தேன்.
உண்மையை
மேலும் மேலும்
காதலிப்பேன்.
எல்லா மதிப்புகளும் பூமியில்
இறந்துவிட்டன என்னும்
நவீனவாதம் பொய்யாக்குவேன்.
ப்ரியம் விதைத்த காட்டில்
நெருப்பு முளைத்தாலும்
பிடுங்கி எறிந்துவிட்டு
மீண்டும் உழுது வைப்பேன்.
தத்துவங்கள் வீழட்டும்
தேசங்கள் நொறுங்கட்டும்
உலகம் எதையும் பிதற்றட்டும்
பசித்தவர்கள் பக்கமே என்றும்
நான் இருப்பேன்.
பாரதி கிருஷ்ணகுமாருக்கு எனது வருத்தமும், வாழ்த்துக்களும்!
இன்று காலையில் பவா செல்லத்துரை எனக்கு போன் செய்து, வம்சி புத்தக வெளியீடு பற்றிய என் பதிவில் ஒரு விமர்சனத்தை முன்வைத்தார். “வேலராமமூர்த்தி கதைகளைப் பற்றி பி.கே (பாரதி கிருஷ்ணகுமார்) பேசும்போது, கதைகளைப் பற்றி பேசாவிட்டாலும், வேல ராமமூர்த்தியின் கதைகள் ஜாதீயத்தை மறுப்பவை என்றும், பிற்படுத்தப்பட்ட மக்களும் தலித் மக்களும் இணைந்து நடத்த வேண்டிய அரசியலை பேசுபவை என்றும் குறிப்பிட்டார். மேலும் கறிச்சோற்றை அந்த மக்களின் வாழ்வியலின் குறியீடாகத்தான் சொன்னார். தங்கள் பதிவில் அந்தத் தொனி வரவில்லை.” என்றார். என் பதிவைப் படித்தபோது என் பக்கமே தவறு இருப்பதை உணர்கிறேன். பி.கேவின் பேச்சை ஆரம்பத்தில் கேட்டேன். “நான் வேலாவின் கதைகளைப் பற்றி பேசப்போவதில்லை. கறிச்சோற்றைப் பற்றி பேச வேண்டியிருக்கிறது.” என்று ஆரம்பித்து சுவையாக பேசிக்கொண்டு இருந்தார். ஆனால் முழுமையாக அவரது பேச்சைக் கேட்கவில்லை. அருகிலிருந்த எழுத்தாளர் ஷாஜஹான் எதோ சொல்ல , அவரிடம் பேசினேன். ஒரு போன் வந்ததும் எழுந்து வெளியே சென்று திரும்ப வந்தேன். அடுத்த நிகழ்வு பரிசளிப்பு என்பது குறித்த சிந்தனைகளும் ஓடிக்கொண்டு இருந்தன. எப்படியானாலும் முழு உண்மை தெரியாமல் எழுதியது தவறு. வருந்துகிறேன், பி.கே!
தொடர்ந்து பவாதான் இன்னொரு விஷயத்தையும் சொன்னார். ‘கோடி’ என்னும் சிறுகதை எழுதியதற்காக பி.கேவுக்கு இலக்கியச் சிந்தனை விருது கிடைத்திருக்கிறது என்று.
‘எழுத வேண்டும்’ என்ற தாகம் எப்போதும் இருந்த போதிலும், தொடர்ந்த வாசிப்பும் தேர்ந்த இலக்கியப் பார்வையும் கொண்டிருந்தாலும் அவர் எழுத ஆரம்பித்தது சமீப ஆண்டுகளில்தாம். பத்துப் பதினைந்து ஆண்டுகள் பாண்டியன் கிராம வங்கியில் தொழிற்சங்கத்தைக் கட்டுவதிலும், நிர்வாகத்துக்கு எதிரான ஊழியர்களின் கோபத்தை கூர்மைப்படுத்தியதிலும் மிக முக்கியமான பாத்திரம் வகித்தார். பிறகு, வங்கி வேலையை விட்டு விட்டு, இயக்குனர் பாரதிராஜாவிடம் இணை இயக்குனராக பணிபுரிந்து சினிமாவை அனுபவரீதியாகவும் தெரிந்து கொண்டார். ‘ராமையாவின் குடிசை’, ‘என்று தணியும்’ எனும் ஆவணப்படங்கள் எடுத்து கவனம் பெற்றார். இப்போது எழுதவும் ஆரம்பித்திருக்கிறார். ஆனால் இந்த எல்லாக் காலங்களிலும் தமிழகத்தின் ஆற்றல் மிகுந்த பேச்சாளர்களில் ஒருவர் அவர்.
மிக நெருக்கமாகப் பழகியதால் வருகிற விளைவு போலும். அவரோடு முரண்பட்டு சிலநேரம் பேசாமல் இருந்திருக்கிறேன். அவர் மீது எனக்கு ஏற்பட்ட விமர்சனங்களால் விலகிப் போயிருக்கிறேன். ஆனால் தொடர்ந்து அதே நிலையில் என்னால் இருக்க முடிந்ததில்லை. அவர்தான் என் கைபிடித்து எனக்கான வழியைக் காட்டியவர் என்கிற எண்ணம் எப்போதும் இருக்கிறது. ‘என்னைத் தூக்கிச் சென்ற ராட்சசக் கழுகு’ என்றுதான் அம்மா அவரைப் பற்றிய அபிப்பிராயம் வைத்திருந்தார்கள். அது உண்மைதான். தறிகெட்ட என் இளமைக் காலத்தில் மிகச் சரியான நேரத்தில் அவரை சந்தித்தேன். தன் தோளில் என்னைத் தூக்கி வைத்து அவர்தான் தொழிற்சங்கம், அரசியல், இலக்கியம் என எல்லாவற்றின் அர்த்தங்களையும் எனக்குச் சொல்லித் தந்தவர். அவர் தந்த எத்தனை புத்தகங்கள் படித்திருக்கிறேன். அவரோடு எத்தனை இடங்கள் அலைந்து திரிந்திருக்கிறேன்.
நான் முதல் சிறுகதை ‘மண்குடம்’ எழுதியபோது, ‘இவன் என் வளர்ப்பு’ என நெஞ்சுதட்டி பெருமைப் பட்டார். அந்தக் கணம் எனக்கு இந்நேரத்தில் வந்து பனிக்கச் செய்கிறது. அந்த ஈரம் சொட்ட உங்கள் கைபிடித்து பாராட்டுகிறேன். “நீங்கள் என்னை ஆளாக்கியவர்” என பெருமிதம் கொள்கிறேன்.
எழுதுங்கள் பி.கே, நிறைய எழுதுங்கள். உங்களிடம் சொல்வதற்கு நிறைய கதைகளும், சொல்லும் நேர்த்தியும் இருக்கின்றன.
“தப்பா நெனைச்சுக்காதீங்க, சார்”
“இவர்தான் குருசாமி. உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” என்று பாலு சார்தான் அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். கிளாஸும், தண்ணீர் பாட்டிலும் கொண்டு வந்த அந்த மனிதர் ஒப்புக்கு இல்லாமல் கொஞ்சம் கூச்சத்துடனும் சந்தோஷத்துடனும் பார்த்து சிரித்தார். லேசாய் புன்னகைத்தேன். “குருசாமி, தலைவருக்கு ஒரு சேர் கொண்டு வரணுமே” என்றார். அவர் “இதோ” என வேகமாய் எடுத்துவரச் சென்றார். ஒட்டலின் பின்பகுதியில் பாலுசாருக்கு ஓட்டல் ஓனர் அப்படி ஒரு இடத்தை அனுமதித்து இருந்தார். வாழையிலை, காய்கறிகள் ஒரு பக்கம் அடுக்கு வைக்கப்பட்டு இருந்தன. மாவு அரைக்க, பாத்திரம் கழுவ என தனித்தனியாய் அந்தப் பகுதி விசாலமாக இருந்தது. பக்கத்தில் இரண்டு பெரிய அடுப்புகள். அதைத்தாண்டி, ஒட்டலில் பணிபுரிவர்கள் தங்குவதற்கென்று கூரை வேய்ந்திருந்தது. நாற்பது வாட்ஸ் பல்பாய் இருக்க வேண்டும். வெளிச்சம் மங்கலாய் இருந்தது.
சேர் கொண்டு வரவும், “குருசாமி, தலைவர் தெரிமா?” என்றார். “சாரை நல்லாத் தெரியும்.” என்றார். அறிந்துகொள்ள வேண்டும் போலிருந்தது. சொல்வார் எனவும் தெரிந்தது. “நாலைஞ்சு வருசத்துக்கு முந்தி கே.வி.எஸ்.காம்பவுண்டுல கலை இலக்கிய இரவு நடந்துச்சுல. அப்ப நீங்க பேசுனீங்க. சுடுகாடு பத்தி ஒரு கதை கூடச் சொன்னீங்க..” என்றார். ஒருமாதிரி இருந்தது. சகஜமிழந்தேன்.
பாலு சாருக்கு அது பற்றியெல்லாம் எந்தக் கவலையுமில்லை. “தலைவா, கழுத்து சொல்வமா, விங்ஸ் சொல்வமா?” என்றார். “எதாவது” என்றேன். “ம்.... கழுத்து, நல்லா துண்டு துண்டா வெட்டி, எண்ண அவ்வளவா இல்லாம..... பக்கோடா மாரி இருக்கணும்.” என்றார். தலையாட்டி போய்க்கொண்டு இருந்த குருசாமியைப் பார்த்தேன். வயது நாற்பத்தைந்து மேலிருக்கும் எனத் தோன்றியது. சராசரி உயரம். தாடியுடன் அக்கறையற்ற முகம். கிண்ணென்ற உடம்பில் உழைப்பு வற்றாமல் இருந்தது. அன்றைக்கு இடையிடையே இரண்டு மூன்று தடவை குருசாமி வந்து போனார். நாங்கள் வேறு விஷயங்கள் பேசிக்கொண்டு இருந்தோம். கிளம்பும்போது, பாலு சார் இருபது ருபாயை குருசாமிக்குக் கொடுத்ததைப் பார்த்தேன். வெளியே ஒட்டல் வெளிச்சமாகவும், ஜனசந்தடியாகவும், பரபரப்பாகவும் இருந்தது.
அதற்குப் பிறகு சில வாரங்கள் கழித்துத்தான் அங்கு போனேன். பாலுசார் தினசரி கஸ்டமர். அவரோடு வேறு ஒரு நண்பரும் அன்று வந்திருந்தார். “தலைவா! உங்கள குருசாமி அடிக்கடி கேப்பார்” என்றார் பாலுசார். “என்ன குருசாமி... அப்படியா” என்றேன். “இல்ல சார்....” என்றாலும் முகம் சிரித்துக் கொண்டு இருந்தது. பாலு சார் தேவையானவைகளை குருசாமியிடம் அடுக்கிக்கொண்டு இருந்தார். பெரிய அடுப்பில் தணல் தெரிந்தது. சால்னா வாசம் அடித்தது. பாலுசார், “வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னருகில் வந்தாள்” என பாட்டு பாடிக்கொண்டு இருந்தார்.
அன்று கொஞ்சம் அதிகமாகவே குருசாமி எங்களோடு இருந்தார். “என்ன வெளியே கூட்டமில்லையா?” என்று பாலுசார், குருசாமிக்கும் ஒரு ரவுண்டு கொடுத்தார். இருட்டுக்குள் தள்ளிப் போனவர், சிறிது நேரத்தில் வாயைத் துடைத்துக்கொண்டு வந்தார். “என்ன குருசாமி, தலைவரைப் பாத்து வெக்கமா?” என்று சிரித்தார் பாலுசார். நாங்கள் பேசிக்கொண்டு இருந்ததை குருசாமி ஆர்வத்துடன் கவனித்து ரசித்துக்கொண்டதையும் கவனித்தேன். கிளம்பும்போது, “சார், தப்பா நெனச்சுக்காதீங்க.... நீங்க எழுதுன புஸ்த்தகம் இருந்தா தரலாமா?” என்றார். அவரது கையைப் பிடித்துக்கொண்டு, “கண்டிப்பா..” என்றேன். திரும்பவும், “சார், தப்பா, நெனச்சுக்காதீங்க” என்றார். “அய்யோ, இதுல என்ன தப்பா இருக்கு.... தர்றேன் குருசாமி” என்றேன்.
அதற்குப் பிறகு சந்தித்த இரண்டு மூன்று தடவைகளுமே புத்தகம் கொண்டு போகவில்லை. குருசாமியைப் பார்த்ததும்தான் ஞாபகம் வரும். “மறந்துட்டேன். குருசாமி....”, “அடுத்த தடவக் கொண்டு வந்துர்றேன்..” என்று சொல்லத்தான் முடிந்தது. அப்புறம் ஒருநாள் காலையில் ஞாபகம் வரவும், ‘குருவிகள் பறந்துவிட்டன’ சொற்சித்திரத் தொகுப்பை குருசாமியிடம் சேர்க்கச் சொல்லி பாலுசாரிடம் கொடுத்தேன்.
பிறகு அவரைப் பார்த்தபோது, குருசாமி அந்த புத்தகம் பற்றியே பேசிக்கொண்டு இருந்தார். ரசித்தவைகளைச் சொல்லிச் சொல்லி மாய்ந்தார். “தலைவா நா சொன்னேன்ல..” என்றார் பாலுசார். குருசாமி ரொம்ப நெருக்கமாய்த் தெரிந்தார். ஒட்டலில் கூட்டம் அதிகமாய் இருந்திருக்க வேண்டும். “சார் இருங்க, வந்துர்றேன்” என்று சொல்லி ஒடுவார். திரும்ப வருவார். புத்தகத்தைப் பற்றிப் பேச ஆரம்பிப்பார். “என்ன படிச்சிருக்கீங்க.. குருசாமி?” எனக் கேட்டேன். “மெக்கானிக்கலில் டிப்ளமா....” என்றவர் அமைதியானார். போய்விட்டார். நாங்கள் விடைபெறும்போது “பாடம் படிக்கிறதுக்கும், புத்தகம் படிக்கிறதுக்கும் சம்பந்தம் இருக்கா?” என்றார். எதிர்பார்க்கவில்லை இதை. “என்ன கேட்டீங்க...?” என்றேன். காதில் விழுந்தாலும், சட்டென்று பதில் சொல்ல முடியாவிட்டால் இப்படித் திரும்பவும் அதைக் கேட்பது போல யோசிக்க வேண்டியதாகிவிடுகிறது. “சார் பரவாயில்ல... கேட்டதுக்கு தப்பா நெனச்சுக்காதீங்க..” என்று நிறுத்துவது போல கையைக் காட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார் குருசாமி. அவரை எப்படி புரிந்துகொள்வது எனத் தெரியவில்லை. “விடுங்க தலைவா.... அவர் அப்படித்தான்” என்றார் பாலுசார். வெளியேறி முன்பகுதிக்கு வந்தபோது, யாருக்கோ தோசைகளை எடுத்துக்கொண்டு குருசாமி ஓடிக்கொண்டு இருந்தார். ஓட்டலின் முன்பகுதி ஒரு பெரும் நாடகத்தின் மேடை போலத் தெரிந்தது.
அடுத்த தடவை பார்க்கும்போது “தப்பா நெனச்சுக்காதீங்க சார். அன்னைக்கு அப்படிக் கேட்டுட்டேன்..” என்றுதான் பேசவே ஆரம்பித்தார். அவரைப் பற்றி கேட்பதை நிறுத்திக்கொண்டேன். அவராகவும் எதையும் சொல்ல மாட்டார். ஆனாலும் என்னைப் பார்த்ததும் அவருக்கு ஒரு சந்தோஷமும், உற்சாகமும் வருவதை அறிந்துகொண்டேன். ஓட்டலில் வேலை செய்யும் மற்றவர்களும் “குருசாமி உள்ளே இருக்கார்”, “வெளியே போயிருக்கார். இப்ப வந்திருவார்” எனவும் சினேகத்துடன் சொல்ல ஆரம்பித்தார்கள். இந்த சமயத்தில்தான் பாலுசார் இறந்துபோனார்.
ரொம்பநாள் கழித்துத்தான் ஒருநாள் நானும் இன்னொரு நண்பரும் ஒட்டலுக்குச் சென்றோம். எங்களைப் பார்த்ததும், “எப்படிப்பட்ட மனுஷன்....” என ஒட்டல் ஓனரும் துக்கம் விசாரித்தார். பின்பகுதிக்குச் சென்றோம். இருட்டாயிருந்தது. குருசாமி வந்து லைட் போட்டுவிட்டு, “இனும நீங்க வர மாட்டீங்கன்னு நெனைச்சேன்” என்றார். “என்ன..” என்று அவரைப் பார்த்தேன். “தப்பா நெனைச்சுக்காதீங்க சார்” என்று சொல்லி “என்ன வேணும்?’ எனக் கேட்க ஆரம்பித்தார். நாங்கள் பாலு சார் பற்றியே பேசிக்கொண்டு இருந்தோம். “நீங்க எப்பவாதுதான் வருவீங்க. நான் அவர தெனமும் பாப்பேனா...” என சொல்லும்போதே குருசாமி கண்கள் கலங்கின. குரல் எதோ ஓலம் போலக் கேட்டது. “தப்பா நெனைச்சுக்காதீங்க, சார்..” என அங்கிருந்து போய்விட்டார்.
ஒருமுறை போயிருந்தபோது குருசாமி இல்லை. “எங்கே?” என்றோம். “பின்னாலத்தான் கெடக்கான். இப்போல்லாம் ஓவர் தண்ணி. வீட்டுக்குக் காசு குடுக்குறது இல்ல. போன வாரம் அவம் பொண்டாட்டி வந்து ஒரே அழுகை...” என்று சொல்லி வேறு ஒரு பையனை சப்ளை செய்ய அனுப்பினார் ஓனர். எங்கள் அருகேதான் பாயில் சுயநினைவற்றுக் கிடந்தார் குருசாமி. எப்போதும் இதுபற்றி பேசக் கூடாது என்று மட்டும் நினைத்துக்கொண்டேன்.
சில மாதங்களுக்கு முன்பு அங்கு நானும் இன்னும் சில நண்பர்களும் பேசிக்கொண்டு இருந்தபோது இடையிடையே வந்து நிற்பதும் போவதுமாக இருந்தார். ஒரு அவஸ்தை தெரிந்தது. “என்ன குருசாமி... “ என்றேன். “இல்ல சார்.... இன்னொருநாள் பேசுவோம்” என்றார். “சும்மாச் சொல்லுங்க” என்றேன். “தப்பா நெனச்சுக்காதீங்க.... ஒரு நோட்டுல கொஞ்சம் கிறுக்கி வச்சிருக்கேன். நீங்க பாக்கணும்” என்றார். “கொண்டு வாங்க” என்றேன். நாற்பது பக்க நோட்டு ஒன்றில் அடித்து அடித்து எழுதி வைத்திருந்தார். மனதில் பதியவில்லை. நாங்களும் ஒரு முக்கியமான ஒரு விஷயம் குறித்து பேசிக்கொண்டு இருந்தோம். அந்த அவசரத்தில் கவிதை என்றால் என்ன, எப்படி இருக்க வேண்டும் என சில விஷயங்களை பொதுவாகச் சொல்லிவிட்டு, “தொடர்ந்து எழுதுங்க..” என்று நோட்டைத் திருப்பிக் கொடுத்தேன்.
நேற்று அது போல ஒரு நோட்டைக் கொண்டு வந்தார். இந்த தடவை அடித்தல், திருத்தல் அவ்வளவாக இல்லை. நிறைய எழுதியிருந்தார். அங்கங்கு சில வரிகள் கவிதைகளாக இருந்தன. அழுத்தமும், வலியும் அதில் இருந்தன.
*
மரத்தின் கீழ் நிற்கையில்
உன் நிழல்கூட
மண்ணில் விழுவதில்லை
*
சீழ்க்கட்டிய புண்ணைச்
சுற்றி சொறிவது போல
புணர்ச்சியும்
சுகமாயிருக்கிறது
*
மண்ணில் காலூன்ற
விதைகள்
தொங்கிக்கொண்டு இருக்கின்றன
*
வாந்தி துடைத்த
கைக்குட்டையாய்
என் கவிதைகள்
*
குறிவைத்த பழமும்
எறிந்த கல்லும்
தரைக்கே வருகின்றன
*
இன்னொருவர் இமை மூட
நான் கண் திறந்திருக்கிறேன்
*
பள்ளத்தில்
விழுந்தவன் குரல்
விளிம்பு மட்டுமே
*
ஆணி சொல்கிறது:
“சிலுவையில்
நாங்களும்தான்
அடி வாங்கினோம்”
*
“அடேயப்பா...” என்று அவரது கைகளைப் பற்றினேன். “இந்த செக்கண்ட் போதும் சார்” என்று தழுதழுத்தார். வெளியே ஓட்டல் ஓனர், “குருசாமி” என கத்தியது கேட்கவும் ஒடினார். கொஞ்ச நேரம் கழித்து வேகமாய் வந்தார். “எல்லாம் வேஸ்ட்” என என் கையில் இருந்த நோட்டை வாங்கி தூக்கி எறிந்தார். திரும்பிப் பார்க்காமல் வேகமாய் சென்றவர் நின்றார். “தப்பா நெனச்சுக்காதீங்க சார்..” என வெளியேறினார். அருகில் இருந்த நண்பர் “என்ன ஆச்சு இவனுக்கு. ரொம்பத் தண்ணியாயிருக்கும்” என்று முணுமுணுத்தார். மண்ணில் கிடந்த கவிதைகளை எடுத்து வைத்துக்கொண்டு திரும்பவும் வாசிக்க ஆரம்பித்தேன்.
ஜெருசலேம் நோக்கி ஒரு பயணம்…
விஜய் தொலைக்காட்சி நடத்திய நீயா நானாவில் பங்கேற்று, அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை அவர் தோலுரித்துக் காட்டிய போது, ஆச்சரியமாக இருந்தது. ‘ஆஹா, நம்ம முத்துக்கிருஷ்ணன்’ என பெருமையாகவும் இருந்தது. அத்தனை தெளிவும், தகவல்களும் அவரது பேச்சில் இருந்தன. சேகுவேரா குறித்த ஆவணப்படத்தை அவர் தயாரித்ததிலிருந்து எனக்குத் தெரியும். எப்போதாவது, எதாவது எழுத்தாளர் சங்க நிகழ்ச்சிகளில் பார்ப்பது, உரையாடிக்கொள்வது என்றிருந்த நட்பும் தோழமையுடன் கடந்த காலங்களில் பத்தி எழுத்தாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், கட்டுரையாளராகவும் தன்னை வளர்த்துக்கொண்டு, முழுநேரமும் எழுத்தைச் சார்ந்த மனிதனாக தன்னை உயர்த்தியும் கொண்டு இருந்தார். தொடர்ந்து இயங்கிக்கொண்டு மனிதர்கள், தங்களது உற்சாகத்தை சகமனிதர்களுக்கும் கொடுத்து விடுகிறார்கள்.
சென்ற வருடம் முத்துக்கிருஷ்ணன் புதுதில்லியிலிருந்து தரைவழியாக 10 ஆயிரம் கி.மீ பயணமாக பாலஸ்தீனம் சென்றிருக்கிறார். அங்கிருக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கச் சென்ற சர்வதேச அமைதிக்கு குழுவில் இடம் பெற்ற ஒரே தமிழர் இவர்தான். ஹிந்து, வல்லினம் பத்திரிகைகளிலும் காணொளியிலும் அதுகுறித்த பதிவுகளைக் காணலாம்.
இந்த ஆண்டும் அதே குழுவினருடன் அவர் ஜெருசேலம் நோக்கி ஒரு நெடிய பயணம் மேற்கொள்ள இருக்கிறார். மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் துவங்கி, 8 நாடுகளின் வழியாக ஜோர்டன் தலைநகரம் அம்மான் சென்று அங்கிருந்து மார்ச் 30 ஆம் தேதி ஜெருசுலத்திற்கு செல்லவிருக்கிறார். எழுத்தை மட்டும் அவர் நம்பவில்லை. நம்மைப் போன்றவர்களையும் தான்.
இந்தப் பயணத்திற்கு உதவி செய்ய விரும்புகிறவர்கள், A.MUTHUKRISHNAN +919443477353 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். A.MUTHUKRISHNAN State Bank of India SB A/C no 30322814376 வங்கி கணக்கில் செலுத்தலாம். Branch - Madurai Kamaraj University Branch, IIFSC Code - SBIN0002235.
அவரது பயணம் சிறக்கவும், நல்ல அனுபவமாகவும் வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்!
பேச்சும், எழுத்தும் வேறு வேறாய்....
தள்ளி நின்று அவரிடம் நான் போனில் பேசினால் கூட “ஷாஜஹான் கிட்டத்தான பேசுனீங்க..?” என்று அம்மு கண்டுபிடித்துவிடுவாள். சிரித்துக் கொண்டேதான் இருக்க வேண்டும். அப்படியொரு இயல்பான நக்கலும், நையாண்டியும் அவரது வார்த்தைகள் முழுக்க குதித்து கும்மாளமிடும். இதற்கு நேர்மாறாய் அவரது எழுத்துக்கள் இருக்கின்றன. அவரது கதைகளும், கவிதைகளும் பெரும்பாலும் இழப்பின் வேதனையையும், வலியையும் சுமந்து நம்மை வதைக்கும் அல்லது மௌனங்களில் ஆழ்த்தும். மிகுந்த அகவயப்பட்ட மனிதர்களாலும், அனுபவங்களாலும் ஆனவை. எப்போதோ எழுதிய அவரது கவிதைகள் சில இங்கே.....
(1)
ஒருவரை ஒருவர்
கண்டுகொள்ள நேரமற்ற
பரபரப்பான நகர வீதியில்
நாற்சந்தியில் நிற்கும்
கண் தெரியா கலைஞனுக்கு
வாய்த்திருக்கிறது
சகலரின் துக்கத்தைப் பார்க்கவும்
புல்லாங்குழலில் அதை வாசிக்கவும்
(2)
சுகமாய் ஏதும்
நினைவிலில்லை
நினைவில் இருப்பது
சுகமாயில்லை
பவர்ணமி இரவில்
தென்றல் சுகமும்
பழைய பாட்டில்
அவளது முகமும்
நினைவில் நின்றிடினும்
சுகமாய் இல்லை
சுகமாய் ஏதும்
நினைவிலில்லை
(3)
எந்தக் கடலின் கரிப்பாலும்
நிறம் மாற்றிட இயலா
முத்தின் வெண்மையில்
தெரிவதெல்லாம்
சத்தியத்தின் பிடிவாதம்
(4)
தேகம் நாடி
நீளும் விரல்கள் பற்றி
நகக்கண்களில்
ஊசிகள் பாய்ச்சு
அடிவயிற்றில்
ஆழச் செருக
புத்தம் புதுக் கத்திகள்
உறை நீக்கி வை
பிஞ்சுக் கன்னங்கள்
பக்கம் நெருங்கி
முத்தமிடுகிறாற்போல்
கடித்துத் துப்பு
கண்டு கொள்வது
கடினமாகும்
முகமற்ற முகங்களின்
முகமிட்டு நிரப்பும் வரை
ஏற்கனவே ஷாஜஹான் பற்றி தீராதப்பக்கங்களில் பேசியிருந்தாலும் இப்போது இவையெல்லாம் எதற்கு தெரியுமா? விரைவில் எழுத்தாளர் ஷாஜஹான் வலைப்பக்கம் ஆரம்பிக்க இருக்கிறார். சினிமாவுக்குத்தான் டிரைலர் போடுவதா. வலைப்பக்கங்களுக்கும் போடுவோம்ல.
வம்சி புத்தக வெளியீடுகளும், பரிசளிப்பு விழாவும்

எழுத்தாளர்கள் உதயசங்கர், மம்முது, மின்னல், வேல ராமமூர்த்தி ஆகியோரது புத்தகங்களுடன் வம்சி சிறுகதைப் போட்டியில் பங்கு பெற்று தேர்வு பெற்ற சிறுகதைகள் அடங்கிய ‘காக்கைகள் கொத்தும் தலைக்குரியவன்’ தொகுப்பு வெளியிட்டு விழாவும், அதை எழுதிய படைப்பாளிகளுக்கான பரிசளிப்பு விழாவும் சென்ற சனிக்கிழமை (3.3.2012) மாலையில், மதுரையில் நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியை மதுரையில் ஏற்பாடு செய்வதிலும், ஒருங்கிணைப்பதிலும் முக்கிய பங்காற்றியவர் எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன்.
வம்சி சார்பில் ஷைலஜா அனைவரையும் வரவேற்கிறார்
தமிழ் கலை இலக்கிய ஆளுமைகளில் பலரும் அங்கிருந்தனர். மேலாண்மை பொன்னுச்சாமி, வேல ராமமூர்த்தி, எஸ்.ஏ.பெருமாள், கோணங்கி, கலாப்பிரியா, எம்.எஸ்.சண்முகம், முருகபூபதி, பாரதி கிருஷ்ணகுமார், பவா.செல்லத்துரை, மம்முது, உதயசங்கர், ஷைலஜா, ஷாஜஹான், கிருஷி, நாறும்பூநாதன், என பலரும் பங்கு பெற்றனர்.வலைப் பதிவர்கள் சீனு சார், தருமி, போகன், கார்த்திகைப் பாண்டியன், அசோக்குமார், செ.சரவணக்குமார், க.பாலாசி, மதுரை சரவணன், மதுரை வாசகன், நேசமித்ரன், சரவணன், ஆத்மார்த்தி அகியோர் கலந்துகொண்டனர். இவர்களோடு இலக்கிய ஆர்வலர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகை தர, ஹோட்டல் சுப்ரீமின் அரங்கு கொள்ளவில்லை.
ஒவ்வொரு நூலுக்கும் குறைந்தது மூன்று பேர் பேச வேண்டியதிருக்க, விழாவினை வேகமாகவே நடத்த வேண்டியிருந்தது. ஓரளவுக்கு அதைப் புரிந்துகொண்டவர்களாகவே அனைவரும் பேசினர். எழுத்தாளர்கள் ஒருவரையொருவர் பற்றிய சுவையான நினைவோட்டங்களாகவே பெரும்பாலும் பேச்சுக்கள் அமைந்திருந்தன. இலக்கிய உலகின் பக்கம் தன்னைக் கொண்டு வந்து நிறுத்தியவர்களில் ஒருவரான உதயசங்கரின் எழுத்துக்கள் தொடர்ந்து தங்கள் வம்சி பதிப்பகத்திலிருந்து வருவது பெருமையாயிருக்கிறது என பவா குறிப்பிட்டார். தான் முதலில் கொண்டு வந்த சிறுகதைத் தொகுப்புக்கு 1988ல் ஒரு பதிப்பகம் கிடைக்காமல் சிரமப்பட்டதையும், இப்போது அந்த சிரமமில்லையென்பதையும் உற்சாகமாகச் சொன்னார் உதயசங்கர். மைக் முன்பு கலாப்ரியா பேச வரவும், அவரை செல் அழைக்க, எண்ணைப் பார்த்துவிட்டு “வண்ணதாசன் அழைக்கிறார். பேசாமல் இருக்க முடியுமா?” என மொத்தக் கூட்டமும் ரசிக்க போனில் பேசிவிட்டு, அப்புறம் நிகழ்வில் தனது பேச்சை ஆரம்பித்தார்.
எழுத்தாளர் உதயசங்கர் பேசுகிறார். முருகபூபதி, மணிமாறன், நாறும்பூநாதன்,கிருஷி உட்கார்ந்திருக்கின்றனர்.
கலாப்ரியா பேசுகிறார். முதுபெரும் தோழர் ஐ.மாயாண்டி பாரதி மேடையில் இருக்கிறார்
சிறுகதைத் தொகுப்பையும், பரிசளிப்பு விழாவையும் சீக்கிரமாகவே நடத்திவிடலாம் என வம்சி சார்பில் பவாவும், ஷைலஜாவும் விரும்பினர். பரிசளிக்கப்படும்போது அரங்கு நிறைந்திருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். ஆனால் ‘காக்கைகள் கொத்தும் தலைக்குரியவன்’ தொகுப்பு குறித்த பேச வேண்டிய எழுத்தாளர் ஷாஜஹான் வேறு ஒரு நிகழ்ச்சிக்கு திருப்பூர் சென்று, அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு மேல்தான் வந்து சேர்ந்தார். அந்த சமயம் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி புத்தக வெளியீடு துவங்கியிருந்தது.
முன்னால் இருப்பவர் வேல ராமமூர்த்தி, பின்னால் இருப்பவர் கிருஷி
“எஸ்.ராமகிருஷணன், கோணங்கி, கந்தர்வன், பாரதி கிருஷ்ணகுமார் உட்பட பலருக்கும் ஆசான் இவர்” என எஸ்.ஏ.பெருமாள் அவர்களை, வேல ராமமூர்த்தி கதைகளை வெளியிட அழைத்தார் பவா. எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வன், கோணங்கி, நாடகக்கலைஞர் முருகபூபதி ஆகியோரின் தந்தையும் நாவலாசிரியருமான எம்.எஸ்.சண்முகம் அவர்கள் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார். வேல ராமமூர்த்தி கதைகளைப் பற்றி பேசாமல், அவரோடு இருந்த நட்பையும், கறிச்சோற்றின் ருசி குறித்தும் பாரதி கிருஷ்ணகுமார் அவருக்கே உண்டான ஆளுமையோடு பேசினார்.
கூட்டத்தில் பாரதி கிருஷ்ணகுமார்…
அதற்குப் பிறகு, நாங்கள் மேடையேறினோம். அரங்கத்தில் ஆங்காங்கே காலி இருக்கைகள் தென்பட்டன. எழுத்தாளர் வேல ராமமூர்த்தி புத்தகம் வெளியிட, நமது பதிவர் செ.சரவணக்குமார் பெற்றுக்கொண்டார். மொத்தம் வெற்றி பெற்ற 17 பதிவர்களில் போகன், அசோக்குமார், க.பாலாசி, கார்த்திகைப் பாண்டியன் ஆகிய நான்கு பேரே நேரில் வந்திருந்தனர். நிலாரசிகனுக்குப் பதிலாக ஆத்மார்த்தி பரிசை பெற்றுக்கொண்டார்.
கூட்டம் குறைந்திருந்த அந்த வேளை எனக்கு சிறு வருத்தத்தையே ஏற்படுத்தியது. நமது அருமையான பதிவர்கள் குறித்தும், இணையத்தில் வரும் அற்புதமான எழுத்துக்களையும் இதர எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் சொல்ல வேண்டிய தருணம் அப்படி வாய்த்திருக்கக் கூடாது. ஒரு ஐந்து நிமிடத்தில், என் உணர்வுகளை வெளிப்படுத்தினேன். “இங்கு இருக்கும் பல எழுத்தாளர்கள் தமிழ் இலக்கிய உலகுக்கும், அச்சு உலகுக்கும் நன்கு அறிமுகமானவர்கள். ஆனால் இந்த இணைய எழுத்தாளர்கள் அப்படியில்லை. அவர்களை நாம் அறிந்திருக்கும் வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. ஆனால் அங்கு அற்புதங்களும், புதுமைகளும் கொட்டிக் கிடக்கின்றன. அவர்களும் ஒருநாள் தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர்களாக அடையாளம் காணப்படுவார்கள்.” இதைத்தான் நான் சொல்ல நினைத்தேன். சரியாகச் சொன்னேனா என்று தெரியாது.
பதிவர்கள் அசோக்குமார், மாதவராஜ், க.பாலாசி, போகன், செ.சரவணக்குமார், கார்த்திகைப் பாண்டியன்
விழா மிகுந்த சினேகமாகவும், நெருக்கமாகவும் இருந்தது. ஆற அமர உட்கார்ந்து உரையாட முடியாவிட்டாலும் சந்தோஷமான முகங்களோடு சிரிக்கும், கையசைக்கும் சில கணங்கள் உயிர்ப்பானவையாக இருக்கின்றன. இனிய நினைவுகள் நிழலாடும் ஒரு நிகழ்வு.
பி.கு:
முதலிரண்டு பரிசு பெற்ற ரிஷான் ஷெரிப், கிரிதரன், அப்பாதுரை ஆகியோர் வரவில்லை. அப்பாதுரையும், ராகவனும் தங்கள் பரிசுத்தொகையை அவர்கள் விரும்புகிற அமைப்புக்கு வழங்கிவிடச் சொல்லியிருக்கிறார்கள். மற்ற பதிவர்கள் வம்சியை (email: kvshylajatvm@gmail.com, cell: 91 9444867023) தொடர்பு கொண்டு, தங்கள் பரிசுத்தொகையை எந்த முகவரிக்கு, எப்படி அனுப்ப வேண்டும் என உடனடியாக தெரிவிக்க வேண்டுகிறோம்.
அரவான் சொதப்பியது எப்படி?
உயிர்பலி பற்றிய கதையென்பதால் படத்திற்கு அரவான் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதுபோன்று எத்தனையோ பேர் வரலாறு முழுவதும் தலை வெட்டப்பட்டு வீழ்ந்திருந்தலும், இந்தப் பெயர் படம் எடுத்தவர்களுக்குப் பிடித்துப் போயிருக்க வேண்டும். அல்லது இதுதான் மக்களுக்குப் பரிச்சயமான பேராக இருக்கும் என நினைத்திருக்க வேண்டும். மற்றபடி தலைப்புக்கும், கதைக்கும் சம்பந்தமில்லை. கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நடக்கும் பதினெட்டு நாள் சண்டைக்காக பலியாக்கப்படுகிறான் அரவான் என்பது மகாபாரதக் கதை. சின்னிவீரன்பட்டிக்கும் மாத்தூருக்கும் இடையே சண்டை வரக்கூடாது என்று பலியாக்கப்படுகிறான் சின்னான். இப்படி எதாவது சொல்லிக்கொள்ளலாம்.
படத்தின் முடிவில் ‘மரணதண்டனையை ஒழிப்போம்’ என்கிற மாதிரி ஒரு கார்டு போடுகிறார்கள். அது எதற்கு என்று இந்த நிமிடம் வரை தெரியவில்லை. இயக்குனர் வசந்தபாலனுக்கு படத்தின் ஆரம்பம் முதல் கடைசிவரை இருந்த குழப்பங்களையும் சங்கடங்களையும் சொல்லும் துப்பு அதிலிருந்து கிடைக்கிறது.
தனது படுதாவை பெரிதாகவெல்லாம் விரிக்கவில்லை வசந்தபாலன். ஒரே ஒரு பாளையத்தை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு இருக்கிறார். அதில் மலைகளுக்கு அடியில் ஒதுங்கிய குழுக்களாக வாழ்ந்த கள்ளர்களின், ஒரு காலத்து வாழ்வை கோடிட்டுக் காட்டுவதைத் தாண்டி வேறு எதையும் செய்யத் துணியவில்லை. களவு செய்வது, அதன் மூலம் கிடைத்த அரிசி மூடைகளை வண்டிகளில் கொண்டு வந்து ஊரே பகிர்ந்துகொள்வது என ஆரம்ப காட்சிகள் மூலம் வேம்பூரின் வாழ்க்கையை பார்வையாளர்களுக்கு உணர்த்திவிட்டு, சின்னானைக் கொண்டு வந்து நிறுத்தும்போது, ஒரு வடிவம் கிடைக்கிறது. அன்பு, நட்பு, சந்தேகம், துரோகம், பழி, காதல், காமம் என ஊறிக்கிடக்கும் மனிதசமூகத்தின் முகங்களை காட்டக் காட்ட ஒரு அனுபவம் கிடைக்கிறது. சரிதான். எதைச் சொல்வது எனத் தெரிந்த வசந்தபாலன் எப்படிச் சொல்வது என ரொம்பவே சிரமப்பட்டு இருக்கிறார்.
காவல் கோட்டம் நாவலில் புதிராக இருக்கும் சின்னான் பற்றிய சிறுபகுதியை முடிச்சவிழ்த்துப் பார்க்கிறார்கள். ஊருக்கு வெளியே இருந்த வரும் சின்னானையும், ஊருக்குள் இருக்கும் மாயாண்டியையும் சேர்த்து வைத்து, நாவலில் துண்டு துண்டாக இருக்கும் ஜல்லிக்கட்டு, களவுக்குப் போகிறவனை ஒடவிட்டு துரத்திப் பிடிக்கும் போட்டி, பாதிக்கிணறு தாண்டி விழுந்து மாட்டிக்கொள்வது, நகைத் திருட்டு போன்ற தனித்தனி கதைகளையெல்லாம் ஒட்டவைத்து, பாளையக்காரர் செய்யும் கொலையாக ஒன்றை உல்டா பண்ணி கதை போலாக்கியிருக்கிறார்கள். அதிலிருந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரான நிலத்தையும், மனிதர்களையும் கொஞ்சமாய் கண்முன் கொண்டு வர பெரும் முயற்சி செய்திருக்கிறார்கள். காவல்கோட்டம் நாவலைப் படித்தவர்களுக்கு, தாதனூரை வேம்பூராக மட்டும் மாற்றவில்லையென்பது புரியும்.
இந்த மாற்றங்களால் கதை ஒரு சினிமாவுக்குரிய சுவாரசியம் கொண்டதாகியிருக்கிறது. வழமையான சினிமா உத்திகளுக்குள்ளும், விதிகளுக்குள்ளும் படத்தைக் கொண்டு போய் அடைத்தும் விடுகிறது. நாவலில், பலியிடப்படும் நாள் நெருங்கவும், பொறுக்காமல் தானாகவே ஊரைவிட்டு ஓடிப் போகிறான் சின்னான். சினிமாவிலோ உண்மையான கொலையாளியைத் தேடிக்கண்டுபிடித்து கொண்டு வர முயற்சிப்பதாகவும், அப்போது அருவிக்குள் விழுந்து பாறையில் கால் மாட்டிக்கொள்வதால், பலியிடப்படும் நேரத்தில் வர முடியாமல் போவதாகவும் காட்டப்படுகிறது. அதுபோல அவனுக்காக பலியிடப்பட்டவனின் மகன் அவன் கழுத்தை வெட்டுவதாக வருகிற காட்சிக்குப் பதிலாக, சிறுவனிடமிருந்து அரிவாளை வாங்கித் தானே தலையைத் துண்டித்துக் கொள்வதாக சித்தரிக்கப்படுகிறது. நாயகன் மீது ஏற்றி வைக்கும் பிம்பங்களை விட்டொழிக்க முடியாமல் சமரசம் செய்துகொண்ட இடங்கள் இப்படி அங்கங்கே வந்து விழி பிதுங்கி நிற்கின்றன. காவல்கோட்டம் நாவலில் சு.வெங்கடேசன் எழுத்தில் மிக உக்கிரமாக வெளிப்பட்டு இருக்கும் இடங்களில் ஒன்று சின்னான் பலியிடப்படும் இந்தக் காட்சி. அதை அப்படியே படம் எடுக்கத் துணிந்திருந்தால் பார்வையாளர்கள் கதிகலங்கி போயிருப்பார்கள். அந்த வீரியத்தையும் படத்தில் பலிகொடுத்துவிட்டார்கள்.
அந்த மக்களின் தோற்றத்தோடும் கூட்டத்தோடும் கதாநாயகனாக வரும் ஆதியும், அவரது காதலியாக வரும் நடிகையும் ஒட்டவேயில்லை. அடிக்கடி பருத்திவீரன் பாணியில் பேசுகிற வசனங்களும், உச்சரிப்புகளும் அபத்தமாக இருக்கின்றன. நிலாவை தட்டிவிடுவது, எருமை மாடுகள் கூட்டத்தோடு வருவது போன்ற கிராபிக்ஸை ரசிக்கக் கூட முடியவில்லை. படத்திற்கென்று தனியே ஒரு வண்ணத்தை காமிராவால் தீட்டமுடியவில்லை. வெயில் மற்றும் அங்காடித்தெருவில் கதையோடு இணைந்து வந்த இசை தொலைந்து போயிருக்கிறது. அவ்வப்போது இடி போன்று டிஜிட்டல் ஓசையெழுப்புவதன் மூலம் படத்திற்கு பிரம்மாண்டத்தைக் கொண்டு வந்துவிடலாம் என்று நினைத்து விட்டார்கள் போலும். ஒரு குறிப்பிட்ட காலத்தை அப்படியே பிரதிபலிக்கும் படங்களுக்குத் தேவையான கடுமையான பணியில் அரவான் படக்குழுவினர் பெரிதாக மெனக்கெடவில்லையா அல்லது காலத்தை நிலப்பரப்போடு கற்பனை செய்வதில் வந்த பஞ்சமா என்று தெரியவில்லை. அதனால் படத்தின் சில காட்சிகளை ரசிக்கிற, சில காட்சிகளில் ஒன்றிப்போகிற பார்வையாளர்கள் அனேக நேரங்களில் கடுமையாக கிண்டலும் கேலியும் செய்துகொண்டு இருக்கிறார்கள் தியேட்டரில்.
‘ரியலி இட்ஸ் டிஃபரண்ட் மூவி’ என ஏழாம் அறிவு வரை பீற்றிக்கொண்டு, புளிக்க புளிக்க கதையாட்டிக்கொண்டு இருந்தவர்களுக்கு மத்தியில், வசந்தபாலன் உண்மையாகவே ஒரு மாறுபட்ட புதிய கதைவெளியை தேர்ந்தெடுத்திருக்கிறார்தான். இருளுக்குள் மங்கலாகத் துலங்கும் மனிதர்களின் அடர்த்தியான வாழ்க்கை அது. சரியாக படமாக்கியிருந்தால் அரவானின் தரமும், தளமும் நிச்சயம் வேறு. அற்புதமான நடிகையான அஞ்சலிக்கு இந்த படத்தில் நேர்ந்த கதியே, இந்தப்படத்துக்கும் கடைசியில் நேர்ந்திருக்கிறது.
படத்தில் இரண்டு பெண் முகங்களை மறக்கவே முடியவில்லை. அந்த பாளையக்கார ராஜாவின் ராணியாக வரும் பெண் பார்வையாளனை பொறி கலங்க வைக்கிறாள். நாக்கை நீட்டிச் சுழற்றுவதில் இருக்கும் பாவனையில் காமமா வெளிப்படுகிறது. வன்மமும், பழிவாங்கும் உணர்வும் அப்படி கொப்பளிக்கிறது. “வெட்டி மட்டுமா கொல்லலாம், விதைச்சும் கொல்லலாம்” எனும் அந்த வார்த்தைகள் கதைக்கு வேறு பரிமாணத்தையும் கொடுக்கிறது. சொல்லப்போனால், இந்த அரவானின் கதை துவங்குற இடம் அவளிடமிருந்துதான். இன்னொரு பெண் கதையை முடித்து வைப்பவளாய் இருக்கிறாள். படத்தில் பல காட்சிகளுக்கு பின்னணியாக மலையும் பாறைகளும் கூடவே வந்துகொண்டு இருந்தாலும், குலத்தின் வேரான ‘கருப்பன்’ சாமி கல்லாக நின்று எல்லாவற்றுக்கும் சாட்சி போல இருந்தாலும், கடைசியில் தன் தலையை தானே அறுத்து சின்னானும் கல்லாகிப் போனாலும், நம்மை உறைய வைப்பது சின்னான் பலியிடப்படுவதைப் பார்த்துக்கொண்டு இருக்கும் கல் போல சலனமற்ற அந்தப் பெண்ணின் முகம். இழப்பின் உச்சத்தில் மனிதர்கள் என்னவாகிப் போகிறார்கள் என்று அந்த முகம் எல்லா அர்த்தங்களையும் சொல்கிறது. இந்த இரண்டு பெண் முகங்களும் காட்டப்படுவது மொத்தமே நான்கைந்து நிமிடங்களுக்குள்தான் இருக்கும். படம் முழுக்க வருகிற நாயகி அப்படி நம் நினைவில் வாழ்பவளாக இல்லை. அரவானின் வரமும், சாபமும் இதுதான்.
அம்மாவும் அப்பாவும் பார்க்கிறார்கள்!
இன்று ஞாயிற்றுக்கிழமை. காவ்யாவை அவள் வீட்டிற்கு சென்று அழைத்து வந்தேன். எங்கள் வீட்டிற்கு எதிரே இருக்கும் வேப்ப மரத்தடியில்தான் விளையாடுவோம்.
போன ஞாயிற்றுக்கிழமை மரத்தையொட்டி இரண்டு செங்கல்களை நிற்க வைத்து, அதன் மேல் இன்னொரு செங்கல்லை படுக்க வைத்தோம். அதுதான் வீடாக இருந்தது. மேலே உள்ள செங்கல்லைக் காணோம். எங்கே போனது என்று தெரியவில்லை.
“சித்து, பிரஷ்ஷையெல்லாம் என்ன செஞ்சே?” காவ்யா கேட்டாள்.
“அதுவா...” என எங்கள் வீட்டுக்கு ஒடினேன். படுக்கையறை ஜன்னலின் வெளிப்பக்கம் இரண்டு பிரஷ்கள் அப்படியே இருந்தன. எடுத்துக்கொண்டு உற்சாகமாய் “இதோ இருக்கு” என கத்தியபடி காவ்யாவிடம் காட்டினேன்.
போன ஞாயிற்றுக்கிழமை அந்த செங்கல் வீட்டிற்குள் இந்த இரண்டு பிரஷ்களை வைத்திருந்தோம். புளு கலர்தான் காவ்யா. ரெட் கலர்தான் நான். பார்த்து பார்த்து சிரித்துக்கொண்டோம். அந்த பிரஷ்களை குளிப்பாட்டினோம். பிரஷ்களுக்கு பசிக்கும் என சாப்பாடு செய்தோம். தூங்க வைத்தோம்.
இருவரும் செங்கல்லைத் தேட ஆரம்பித்தோம். அப்போது, “சித்து இரு வர்றேன்” என காவ்யா அவள் வீட்டிற்கு ஒடினாள். எதையோ எடுத்து, முதுக்குக்குப் பின்னால் ஒளித்து வைத்துக்கொண்டு வந்தாள்.
“அது என்னது. காட்டு” என்றேன்.
அவள் காட்ட மறுத்தாள். பின்பக்கம் சென்றேன். முன்பக்கமாக திரும்பிக்கொண்டாள். அருகில் போய் கைகளை இழுத்தேன். சிரித்துக்கொண்டே காட்டினாள். ஒரு குட்டி பிரஷ் அது. இரண்டு பேரும் சிரித்தோம்.
அப்போதுதான் கவனித்தேன். அப்பா வராண்டா வாசலில் நின்று எங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தார். சங்கடமாயிருந்தது. “காவ்யா! எங்க அப்பா...” என மெல்ல முணுமுணுத்தேன்.
அவளும் திரும்பிப் பார்த்தாள். “சித்து, உங்க அம்மாவும் பாக்கிறாங்க” என்றாள்.
பார்த்தேன். ஆமாம். அம்மாவின் முகம் படுக்கையறை ஜன்னலில் தெரிந்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை. செங்கல்லைத் தேடுவது போல அங்குமிங்கும் அலைந்துகொண்டு இருந்தோம். வேறெங்காவது போய்விடலாமா எனத் தோன்றியது. கொஞ்ச நேரம் கழித்து திரும்பவும் வீட்டைப் பார்த்தேன்.
அம்மாவும் அப்பாவும் அவரவர் இடத்தில் அப்படியே நின்றிருந்தார்கள். எங்களைத்தான் பார்த்துக்கொண்டு இருப்பது போலத் தெரிந்தது. ஆனால் வகுப்பில் பாடம் நடத்தும்போது டீச்சரையேப் பார்த்துக்கொண்டு, பாடத்தில் கவனமில்லாமல் வேறெதையோ நினைத்துக்கொண்டு இருப்பது போலிருந்தார்கள் அவர்கள்.
சினிமா: காதலில் சொதப்புவது எப்படி?
- எஸ்.வி.வேணுகோபாலன்
காதல் உயிர்களின் அடிப்படை உணர்வு. ஆனால் அது தமிழ் ஆசிரியர்களிடமிருந்து வேதியல் ஆசிரியர் வரையில் வெவ்வேறான அளவுகோல்களை வைத்து விவாதிக்கப் படுவது.
இளமை எழுதும் ஆத்திச் சூடி காதல். கால காலமாக அது கவிஞர்களை பிறக்க வைத்து, துடிக்க வைத்து, பரவ வைத்து, பரவசப் பட வைத்து, பிறகு ஓட வைத்து, விலக வைத்து, வெறுக்க வைத்து...என படிக்கட்டுகளை வடிவமைக்கிறது. ஆனாலும் காதல் சன்னதியில் அடுத்தடுத்த பக்தர்கள் வந்து நம்பி நின்று ஒரு கும்பிடு போட்டுப் போவது யாராலும் தடுக்க முடியாத இயற்கை விதியாகிவிட்டது. காதல் மனிதர்களின் முகத்திற்கு ஒரு புது மெருகு போடுகிறது. அவர்களது மொழியை போதையில் ஊறவைத்து எடுத்துக் கொடுக்கிறது. தெளியாமல் அலைகிறவரை அந்தக் காதல் தெளிவாக இருக்கிறது. தெளிந்த பிறகு காதல் குழம்பத் தொடங்குகிறது. மரத்தை மறைத்த மாமத யானை, பிறகு யானையை மறைத்து மரமாக உணர்ச்சியற்றுக் கிடக்கிறது. காதலை சமூகம் உற்பத்தி செய்கிறது. சமூகமே சிதைக்கவும் செய்கிறது.
காதலில் இருவர் மட்டுமே சம்பந்தப் பட்டிருப்பதாக அந்த இருவர் மட்டுமே நம்புகின்றனர். ஆனால் சுற்றி நிறைய மனிதர்கள் அதனால் நிலை குலைகின்றனர். அதனால் தான் அவ்வை, காதல் இருவர் கருத்து ஒருமித்து என்பதோடு நிறுத்தாமல் ஆதரவு பட்டதே இன்பம் என்கிறார். ஆதரவை விட பட்டதே அதிகம் இதில் எங்கே இன்பம் என்பது நாம் இதுவரை பார்த்த பல காதல் கதைகள். "காதலில் சொதப்புவது எப்படி" திரைப் படம் காதல் பிரச்சனைகளின் வேர்களை மிகுந்த காதல் ததும்பும்படி கவிதையாக அணுகி இருக்கிறது. பாலாஜி மோகன் முதல் படத்திலேயே கிளர்ச்சியுற வைக்கிறார்.
கல்லூரிக் காதல் படர்வதன் அவஸ்தைகளை நகைச்சுவையோடு பேசுகிறது படம். காதல் என்ற பிறகு அபத்தங்கள் இல்லாது போனால் எப்படி, அசடு வழிய அடி வாங்கும் காதல் திலகங்களையும் கூடவே இழுத்துச் செல்கிறது திரைக்கதை. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட இருவர், தாங்கள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் விரும்பாத சில பண்புகளை திரும்பத் திரும்பக் கீறிப் பார்ப்பதில் விலகிக் கொள்வதும், அதன் வலி தாளாது பரஸ்பரம் விரும்பும் குணங்களின் மேடையில் திரும்பத் தழுவிக் கொள்வதுமாக நடக்கும் கண்ணா மூச்சி தான் கதை. இதில் ஆண் மனம் பற்றியும், பெண் மனம் பற்றியும் தத்துவ முத்துக்கள். தத்துவ ஆசானே தத்து பித்தென்று பேசி மீண்டும் மீண்டும் மாட்டிக் கொள்வதுதான் படம் பார்க்க வருவோரைச் சிக்க வைக்கும் தூண்டில். சித்தார்த், அமலா பால் ஜோடி டாக்டரேட் வாங்கும் அளவு ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள் தாங்கள் எப்படி பிரிந்து போய்த் திண்டாடலாம் அல்லது சேர்ந்து கொண்டு நொந்து கொள்ளலாம் என்று. துளியும் விரசம் தொடாது சில்லென்று ஒரு கிளு கிளுக்கும் காதல் பொருளை அழகாகப் படைத்திருக்கிறார் பாலாஜி மோகன்.
தனது மகனின் உணர்வுகளை மதிக்கும் கதாநாயகனின் பெற்றோர் (ரவி ராகவேந்திரா-ஸ்ரீ ரஞ்சனி), தனது மகள் என்கிற ஒரு கதாபாத்திரம் இருப்பதையே பெரிதாக நினையாமல் விவாகரத்து செய்துவிடும் முடிவை எடுக்கும் கதாநாயகியின் பெற்றோர் (சுரேஷ்-சுரேகா வாணி ) என்ற இரண்டு எதிரெதிர் முனைகளில் படைக்கப்படும் முரண் சமூகத்தின் இரு கூறுகளை அப்படியே பிரதிபலிக்கிறது. இந்த இளம் வாலிப உள்ளங்களின் காதலை அவர்களே அவ்வப்பொழுது சீரான இடைவெளிகளில் எப்படி சொதப்பிக் கொள்கின்றனர் என்பதை மட்டுமல்ல, கணவன் - மனைவி திருமண வாழ்வை சொதப்பிக் கொள்ளாமால் இருப்பது எப்படி என்பதையும் பேசுகிறது படம்.
மனம் திறந்த உரையாடல்கள் இல்லாது போவது ஊகங்களின் ஊசியால் குத்திக் கிழிக்கிறது நம்பிக்கைகளை. அதன் கண்ணீர் வலுவாகப் பிரிக்கவும் செய்கிறது. பிரிவை எண்ணிக் கதறவும் செய்கிறது. அன்பின் மடை திறப்பு ஒருவித உடைமை உணர்வுக்கும் நிறைய தீனி போட்டுவிடுகிறது. அந்த நேரம் காதல் அதிகார தளத்தில் போய் நின்று கொண்டுவிடுகிறது. அப்போது காதல் இயல்பாகவே மறைந்துவிடுகிறது. ஆதிக்கப் பார்வையைத் தள்ளி வைத்துவிட்டு மீண்டும் அன்பின் இதமான காற்றை வீசச் செய்யும்போது காதல் அறைக்குள் திரைச்சீலை தாளத்துடன் அசைய தொடங்கிவிடுகிறது. இளம் பருவத்துக் காதல் அதன் நேர்மையான உள்ளடக்கத்தோடு கெட்டிப் படும்போது வயது கடந்து பயணம் செய்து வயது மூத்த தம்பதியினரின் இதய விரிசல்களுக்குக் கூட சிகிச்சை அளித்து ஒன்று சேர்த்து வைக்க முடிகிறது. இப்போது காதல் மதிப்பு மிக்கதாக ஆகிவிடுகிறது.
சித்து மிக அசாத்தியமான தேர்வு...அமலா பால் நடிப்பும் அப்படித்தான். படம் முழுக்க கதை சொல்லியாக சித்துவின் குரல் கூடவே ஒலிக்கிறது. அமலா பால் கண்களால் அந்த வேலையைச் செய்துவிடுகிறார். உடன் வரும் வகுப்புத் தோழர்கள் பாத்திரம் வளமான நகைச்சுவை தெறிக்கும் வேலைச் செய்கின்றனர். அதிலும் கொஞ்சம் குண்டான-பேசும் விழிகளோடு வரும் சிவா பாத்திரம் (அர்ஜுன்) சளைக்காமல் ஒவ்வொரு பெண்ணிடமும் அடி வாங்குகிறார். அப்பாவி விக்னேஷ் (உண்மைப் பெயரும் அது தான்) என்ன பாந்தமாக வந்து போகிறார். மனம் விட்டுச் சிரிக்க நமக்கு இடைவிடாத வாய்ப்புகள் வரிசையாக வந்து கொண்டே இருக்கின்றன. பாடல்களும், படமாக்கப்பட்ட விதங்களும் ரசிப்புக்குரியவை என்றாலும், இரண்டாவது முறை கேட்காமல் அவற்றின் அழகைத் துய்க்க முடிவதில்லை. படத் தொகுப்பும் (டி எஸ் சுரேஷ்), இசையமைப்பும் (தமன்), ஒளிப்பதிவும் (நிரவ் ஷா) மிகுந்த பாராட்டுக்குரியவை.
முப்பதாண்டுகளுக்கு முன்பு இளஞ்ஜோடிகள் படத்தைப் பார்த்தவர்கள் இதில் அப்பா பாத்திரத்தில் வரும் சுரேஷைப் பார்த்தால் அதிர்ந்து போவார்கள். காலம் கருணையற்றது. இரண்டு பெற்றோர் பாத்திரங்களும் சம காலத்தில் ஆரோக்கியமான குடும்ப உறவுகள் குறித்த இலேசான செய்தியையும் அதிகம் ஆர்ப்பரிக்காமல் பேசுகின்றன.
தேவையற்ற அகந்தைத் தனம் (ஈகோ) கணவன் மனைவிக்கிடையில் எப்படி அபத்தமான சண்டைகளை ஓய்வில்லாமல் மூட்டிக் கொண்டே இருக்கிறது என்பதை "ஒரு உலகம் ஒரு வீடு" சிறுகதையில் அழகாகப் பின்னிக் கொடுத்திருப்பார் ஜா மாதவராஜ். ஆனால் புரிதல் நிரம்பி வழியும் இரண்டு உள்ளங்களுக்கிடையிலும் கூட அபத்தமான சண்டைகளே மேலும் காதல் பூக்களைச் சொரிய வைக்கின்றன என்பதை இந்தப் படமும் எடுத்துச் சொல்கிறது. எல்லைக் கோடுகளின் சூத்திரம் மட்டும் அவர்கள் இருவரது வசம் இருக்க வேண்டும் என்பது தான் அதன் அடிநாதம். அதை இன்னொருமுறை சரி பார்க்க விரும்பும் காதலர்கள் யாவரும் போய்ப் பார்க்க வேண்டிய படம் காதலில் சொதப்புவது எப்படி, வயது முக்கியமில்லை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. வயதை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு காதல் புரியப் போவதுமில்லை.