-->

முன்பக்கம் , , , � உயிர்த்தெழும் நேரம்

உயிர்த்தெழும் நேரம்

Jude_Griebel_The_lonely_painting_23784_360

 

பல நகரங்களில் வாழ்ந்துவிட்டு முப்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவன் தன் ஊருக்கு  ஒரு பகலில் குடும்பத்தோடு வந்திறங்கினான். பெரிய பெரிய ஜவுளிக்கடைகளுக்கும், அடுக்குமாடி ஆஸ்பத்திரிகளுக்கும், வண்ண மயமான டிஜிட்டல் சென்டர்களுக்கும்,  பழங்களில் லேபிள் ஒட்டி வைக்கப்பட்டு இருந்த பழமுதிர்ச்சோலைகளுக்கும் இடையே  சாலை போய்க்கொண்டு இருந்தது. வேப்ப மரங்களும், புங்கை மரங்களும் சூழ நடராஜா தியேட்டர் இருந்த இடத்தில்  சூப்பர் மார்க்கெட்  ஒன்று கண்ணாடிக் கட்டிடமாய் பளபளத்தது. திருட்டு தம் அடிக்க நண்பர்களோடு மறைந்த பூங்காவில் நான்கைந்து இரும்பு டவர்கள் செங்குத்தாய் முளைத்திருந்தன. தனது மகனுக்கு  ‘இங்குதான் அப்பா....’ என்று காட்ட எதுவுமில்லை. எல்லாம் காணாமல் போயிருந்தன. ஒரு குழந்தையைப் போல கிறுக்கி கிறுக்கிப் பார்த்துக் கொண்டு இருந்தான் நினைவுகளில்.

 

இரவில், வெளியே சென்றபோது யாவும் சோடியம் வெளிச்சத்தில் மின்னிக்கொண்டு இருந்தன.   பெரும்போதையில் தள்ளாடியது போலிருந்தது ஊரே. “அப்பா, இதைத்தான் நான் வாங்க விரும்புகிறேன்” என ஷோரூம் ஒன்றிலிருந்த பைக்கை காண்பித்தான் மகன்.  அவனுக்கு இது இன்னொரு நகரம். அவ்வளவுதான். 

 

வெளிச்சம் பரவாத அதிகாலையில் வாக்கிங் செல்ல வெளியே வந்தபோது  அதிசயம் போலிருந்தது. அவனது இடங்கள் யாவும் பனிமூட்டம் போல ஊரின் மீது மிதந்துகொண்டு இருந்தன. மரங்களுக்குள், வீடுகளின் உச்சியில், தூரத்து ரயில் பாலங்களின் மீது, மின்சாரக் கம்பிகள் அடைந்த தெருக்களின் ஊடே, கோவில் மணியோசை வழியே  அவை ஒவ்வொன்றாய் அவனுக்குத் துலங்கின.  பெருமூச்சுவிட்டு மௌனமாய் அவனோடு பேசின. வெளிச்சம் வர வர மெல்லக் கலைய ஆரம்பித்தன. ஹாரன் அடித்து  வேகமாய்க் கடந்த மினரல் வாட்டர் வண்டி  சட்டென எல்லாவற்றையும் அழித்துச் சென்றது  ஒரு டஸ்டரைப்போல.

Related Posts with Thumbnails

7 comments:

 1. Nice -- அதே நினைவலைகளுடன் வாழும் ஒருவன்.

  ReplyDelete
 2. மாதவ் ஜி ! இது வளர்ச்சியா? முன்னேற்றமா? ( Is it growth? or developement?)---கஸ்யபன்

  ReplyDelete
 3. அவனுடைய நகரை நவீனத்துவ வளர்ச்சி அழித்துவிட்டது. என்னுடைய ஊரை போர் அழித்துவிட்டது. அது தான் வித்தியாசம். மற்றப்படி எனக்கும் அவனைப் போலவே என் சந்ததியினருக்கு எங்கள் ஊரில் காட்டுவதற்கு எந்த அடையாளமும் இல்லாமல் போய்விட்டது. :(:(

  ReplyDelete
 4. கவிதையாய் முடித்திருக்கிறீர்கள் அருமை

  ReplyDelete