Type Here to Get Search Results !

ஏ பிச்சுக்கா...குப்பாச்சி எங்கே இருக்கே?'ஏ குருவி, சிட்டுக் குருவி...எங்க விட்டத்துல வந்து கூடு கட்டு....'என்று போகிற (அண்மையில் மறைந்துவிட்ட அற்புதப் பாடகர் மலேசியா வாசுதேவன் குரலில்..) முதல் மரியாதை திரைப்படப் பாடலை யார்தான் கேட்டு ரசித்திருக்க மாட்டோம்?  இளமைப் பருவங்களில் இயற்கையின் தோழர்களாகத் தொடங்கும் மனிதர்களின் வாழ்வில் பறவைகள் முக்கியமானவை.  கண்ணுக்கும், கைக்கும் அடக்கமான செல்லப் பிஞ்சுக் குட்டியாகக் காட்சியளிக்கும் குருவிகள் வசீகரமானவை.

உலகின் தேர்ந்த சிற்பி செதுக்கிய கழுத்தும், மகத்தான ஓவியரின் தூரிகை தேர்ந்தெடுத்த வண்ணங்களும் ஒயிலான சிறகு மடிப்பும், ஓர் இராணுவ அதிகாரி கற்றுக் கொடுத்தது மாதிரியான மிடுக்கான கம்பீரமும், அதிலிருந்து ஒளிச் சிதறலான பார்வையும், திருவிழாக் கடைத்தெருவில் இதை வாங்கிக் கொடு, அதை வாங்கிக் கொடு என்று ஓயாமல் சிணுங்கிக் கவனத்தை ஈர்த்துவிடுகிற குழந்தை மாதிரியான கீச்சொலியுமாய் எப்படி மறக்க இயலும் குருவிகளின் உலகத்தை....

பறவை மனிதர் என்று பார் அறியப் புகழ் வாழ்வு வாழ்ந்து மறைந்த டாக்டர் சலீம் அலி அவர்களது இளைமைக் காலத்தில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி, பறவைகளின் தோழனாய் அவரை வடிவமைத்த பெருமை, அவரது விளையாட்டு துப்பாக்கியின் கல் தோட்டாவிற்கு பலியான குருவியைத் தான் சாரும்.  டபிள்யூ எஸ் வில்லார்ட் என்ற பறவை நிபுணரிடம் பின்னர் அவர் கேட்டறிந்த அந்தப் பறவையின் பெயர் மஞ்சள் கழுத்துக் குருவி. அவரிடம் பறவைகள் குறித்த ஞானத்தின் பால படத்தைக் கற்ற சலீம் அலி, இந்தியா நெடுக பறவைகள் சரணாலயம் அமையவும், மனிதர்கள் இயற்கையைக் கொண்டாட வேண்டிய அருமையைப் புரிந்து கொள்ளவும் தமது வாழ்வை அர்ப்பணித்தவர்.

இப்படியான பறவைகளைத் தான் நமது நவீன வாழ்வுச் சூழல் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது.  இன்ன காரணம் என்று வரையறுக்க முடியவில்லை என்றாலும், நமது உணவு முறை, குருவிகளுக்கு ஒரு கூடு கட்டிக் கொள்ள இடம் தராத நவீன அடுக்ககங்களின் வடிவமைப்பு, குருவி போன்ற பறவைகளின் முக்கிய உணவான பூச்சி, புழுக்களின் எண்ணிக்கை மிக வேகமாகக் குறைந்துவருவது., கான்கிரீட் உலகம் வெளியேற்றிக் கொண்டிருக்கும் புல் தரைகள், பூந்தோட்டங்கள், தலையில் தட்டிக் குறுக்கி வளர்க்கப்படும் தாவரங்களால் விடைபெற்றுப் போகும் நீண்ட நெடிய மரங்கள்....என பறவைகளுக்கு ஒவ்வாத புறவுலகில் தான் நாம் நம்மைக் குடியமர்த்திக் கொண்டு வருகிறோம்.

அலைபேசி தொடர்புக்காக அமைக்கப்படும் கோபுரங்கள் கூட, அவற்றின் அலைவீச்சு கூட குருவிகளின் இனப்பெருக்கத்திற்கு எதிராக இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.  நகர வாழ்விலும், நமது வேளாண்மையிலும் மிகையாகிக் கொண்டு வரும் வேதியல் பொருள்களும் ஒரு காரணம்.  இந்த காரணங்களைச் சொல்லும் ஹிந்து நாளேட்டின் சிறுவர்களுக்கான யங் வேர்ல்ட் இணைப்பில் அண்மையில் வந்திருக்கும் கட்டுரையில், ஈயம் பிரிக்கப்பட்ட பெட்ரோல் பயன்பாட்டினால் வெளிவரும் புகையில் இருக்கும் மீதில் நைட்ரைட் கூட குருவிகளின் உணவான புழுக்களை ஒழித்துக் கட்டிவிடுகின்றன என்று சொல்கிறது.  குருவிகள் இனத்தைக் காக்க வேண்டியது இப்போது விரிவான விவாதப் பொருளாகி வருகிறது.

உலகு முழுக்க இயற்கை நேயர்கள், மார்ச் இருபதாம் தேதியை, குருவிகள் தினமாக அனுசரிக்கக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழில் நாம் குருவி என்று வாய் நிறைய விளித்து மகிழும் இந்தச் செல்லச் சிட்டுக்கு, தெலுங்கில் என்ன பெயர் தெரியுமா, பிச்சுக்கா!கன்னடத்தில்? குப்பாச்சி.  இந்தி மொழியில் கொரையா.   குஜாராத்தி மக்கள் சாக்லி என்று அழைத்தால், மகாராஷ்டிர மாநிலத்தில் இதன் பெயர் சிமானி.  மேற்கு வங்கத்தில் சராய் பகி, உருது மொழியில் சிரியா, சிந்தியில் ஜிர்க்கி.  நமக்கு, குழந்தையின் உதடுகளைக் குவித்து ஒயிலாகச் சொல்லும் குருவி...

வீட்டுச் சமையலுக்கே காணாத தானியங்களை எடுத்து, காக்கை குருவி எங்கள் சாதி..என்று மகாகவி, பறவைகளுக்காக இறைத்து வைப்பாராம். எளிய தோட்டம், சிறிய நீர்த்தொட்டி, சிந்திக் கிடக்கும் தானிய மணிகள், குறைத்துக் கொள்ளப்படும் வேதியல் பயன்பாடு...என நாமும் பறவைகளின் காதலர்களாக  எத்தனையோ சாத்தியங்களைக் கண்டுபிடிக்க முடியும்.

குஞ்சுகளைக் காப்பதில் தாய்க் குருவியும், தகப்பன் குருவியும் ஒன்று போல் ஆசையாயிருக்குமாம்.  குருவிகளைக் காப்பதில் மனித சமூகம் மட்டும் அலட்சியம் காட்டினால் எப்படி? பறவைகளுக்கு அந்நியமாகிவிட்ட மண்ணில், மனித இனம் மட்டும் தழைத்துவிட முடியுமா என்ன!  மார்ச் இருபது, மானுட தினம் என்றே கொள்ள வேண்டும்.  சலீம் அலி இதைப் புரிந்து வைத்திருந்தார் என்றே தோன்றுகிறது.
- எஸ்.வி.வேணுகோபாலன்

இன்று உலகக் குருவிகள் தினம்!

இதையும் படியுங்கள்: எங்க போச்சு?

கருத்துரையிடுக

5 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
 1. ///பறவைகளுக்கு அந்நியமாகிவிட்ட மண்ணில், மனித இனம் மட்டும் தழைத்துவிட முடியுமா என்ன! மார்ச் இருபது, மானுட தினம் என்றே கொள்ள வேண்டும்./// - வெகு உண்மை நம்மை சுறறியுள்ள உயிரினங்களின் வாழ்வும் நம் வாழ்வும் பிரிக்க முடியாதவையே ... ...
  நம் அலுவலகத்தின் செம்பருத்தி செடியிலும், அடிக்கடி திறக்கப்படாத ஜன்னல்களிலும் உள்ள கூடுகள் இன்னும் இந்த குருவிகள் இருக்கின்றன் என்பதை உணர்த்திக்கொண்டே இருக்கின்றன.
  நாளை வரும் போது காண்பிக்கின்றேன் அந்த குருவி கூட்டினை...

  பதிலளிநீக்கு
 2. uNmaithaan anna...
  engal veettugul vanthu vilaiyadum sittukkuruvigalai ippothellam urukku pogum pothu parkka mudivathillai... eppavum 4,5 kuruvigal thiriyum... ippa appadi ondru kooda varuvathillai...

  பதிலளிநீக்கு
 3. தோழர் மாது!
  எங்கள் வீட்டின் லஜ்ஜைகெட்டை கீரைச்செடியின் இரு இலைகளை இருப்பிடமாக்கி இரண்டு குஞ்சுகளை ஈன்றெடுத்திருக்கிறது ஒரு சிட்டுக்குருவி. அலைபேசியின் வருகையால் அழிந்து வரும் இனத்தைப்பார்த்ததும் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது எனக்கு, எனது துணைவியாருக்கு, குழந்தைகள் இருவருக்கும். இந்தக்காலத்தின் கொடுப்பினை தான் எங்களுக்கு இது.

  பதிலளிநீக்கு
 4. குருவிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து போனதற்கு செல்போன் டவர்களும் ஒரு காரணம் என்கிறார்கள் (இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஏர்செல் செல்போனில் போன் செய்தால் முதலில் இரண்டு நிமிடங்களுக்கு புலியைக் காப்பாற்று, புலியைக் காப்பாற்று என்று அலறிவிட்டுத்தான் நீங்கள் கேட்ட இணைப்பைக் கொடுக்கும். அப்படி புலியைக் காப்பாற்றினார்கள் அவர்கள்!). புலிகளைக் காப்பாற்றுவதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்யும் அரசாங்கம் இது போன்ற சிறு (!) உயிர்களைப் பற்றி அதிகமாக அலட்டிக் கொள்வதில்லை. குருவி வீட்டில் கூடு கட்டினால் குடும்பத்துக்கு ந்ல்லது என்பது தமிழர் ந்ம்பிக்கை.

  பதிலளிநீக்கு
 5. அன்பு மாதவ்

  குருவியை அன்போடு தரிசித்தவர்களுக்கும்,
  வாஞ்சையோடு உரையாடியவர்களுக்கும்,
  எதுவும் பேசாவிட்டாலும் பெருமூச்சோடு கடந்து போனவர்களுக்கும்
  எனது உளமார்ந்த நன்றி.

  பிச்சுக்கா, குப்பாச்சி என்ற சொற்களில் ஏதோ நம் செல்லக் குழந்தையைக் கொஞ்சுவது போல் ரீங்காரமிடும் எண்ணங்கள் குருவியைச் சுற்றியே சிறகடிக்கின்றன -
  சிறகடிக்க வேண்டியது அவற்றின் வேலை என்றாலும்..

  அழகியலும்,
  இயற்கையின் மேல் பெருங்காதலும், வன்னப் பறவைகளைக் கண்டு மனத்தில் மகிழ்ச்சி கொள்ளும் வரமும் பெற்றிருக்கும் மாதவ்,
  உங்களுக்கு
  எப்போதும் போல் சிறப்பு நன்றி..

  எஸ் வி வேணுகோபாலன்

  பதிலளிநீக்கு