-->

முன்பக்கம் , , , � செல்வேந்திரன் திருமணம் : ஈரம் மணக்கும் நினைவுகள்

செல்வேந்திரன் திருமணம் : ஈரம் மணக்கும் நினைவுகள்

04 திவுலகத்திற்கு வந்த புதிதிலேயே செல்வேந்திரனின் வலைப்பக்கத்தை படிக்க ஆரம்பித்திருந்தேன். சின்னச் சின்ன பத்திகளாய் அவர் பகிர்ந்தவைகளில் இருந்த விஷயங்களும்,  சொல்லும் அழகும் கவர்ந்திருந்தன. செம்மலர் மாத இதழில் அவரைப் பற்றியும், அவரது எழுத்துக்களையும் பகிர்ந்திருந்தேன். அதையொட்டி அவரோடு பழக்கம். அவ்வப்போது தொலைபேசியில் உரையாடும் மிகச்சில பதிவர்களில் செல்வேந்திரனும் ஒருவர்.

"மாதவராஜ் அண்ணே,  வர்ற நவம்பர் 18ல் கல்யாணம்ணே. கண்டிப்பா வரணும்” உற்சாகமான குரலில் தொலைபேசியில் செல்வேந்திரன் சென்ற மாதத்தில் ஒருநாள் சொல்லும்போதே அவரது திருமண நிகழ்வுக்கு செல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டேன். அவரது காதல், பதிவுலகம் அறியப்பெற்றது. சாத்தூருக்கு ஒருமுறை அவர் வந்திருந்த போது  திருமணம்,  இரு குடும்பங்களின் சம்மதம் பெற வேண்டியிருப்பது குறித்தெல்லாம் கொஞ்சம் பகிர்ந்து கொண்டு இருந்தார். தொலைபேசியில் உரையாடும்போதெல்லாம் ”கல்யாணம் எப்போ?” என்று தவறாமல் கேட்பேன். “சீக்கிரம் இருக்கும்ணே”  சிரிப்பார். அந்த நாள் வந்திருந்தது.

நமது பா.ரா இரண்டு நாட்களாய்  “மாது மக்கா, எப்போ வர்றீங்க” என்று கேட்டுக்கொண்டே இருந்தார். மணீஜீ முதல் நாள் காலையிலேயே தூத்துக்குடிக்கு வந்து தங்கி,  “மாது எப்போ வர்றீங்க” என்று அழைத்தார். எனக்கான சில பணிகள் இருந்தன. முடித்துக்கொண்டு துத்துக்குடி போய்ச் சேரும்போது கிட்டத்தட்ட இரவு பத்துமணி ஆகியிருந்தது. மழை பெய்த ஈரம் தரையெல்லாம் அடர்ந்தும், தேங்கியும் இருக்க, சூழலே குளிர்ந்திருந்தது.

பட்டர்ஃபிளை சூரியா, மணீஜீ, பா.ரா, வடகரைவேலன், ரமேஷ் வைத்யா எல்லோரும் காலையிலேயே வந்திருந்தனர். பேசிக்கொண்டு இருந்தோம். “நீங்க மாதவராஜ் தானா?”  என அடிக்கடி ரமேஷ் வைத்யா கேட்டுக்கொண்டே இருந்தார்.  “ஆமாம்” என்றதை அவர் ஒப்புக்கொள்ள சிரமப்பட்டார். “நான் ஒரு angry young amithab போல ஒருவரை எதிர்பார்த்தேன். எழுத்துக்களுக்கும் ஆளுக்கும் சம்பந்தமில்ல” எனச் சொல்ல எல்லோரும் சிரித்தார்கள். பதிவுலகப் பிரச்சினைகள் குறித்த உரையாடல்களை யாவருமே தவிர்த்தபடியும், அப்படியே வந்தபோதெல்லாம் அதற்குள் மேற்கொண்டு செல்லாமல் சட்டென்று கவனமாக வேறு விஷயம் பேசிக் கடந்தபடியும் இருந்தோம்.  கருத்து முரண்பாடுகள் மனித உறவுகளைச் சிதைத்துவிடக் கூடாது என்கிற அக்கறையாகவே அதனைப் புரிந்துகொள்ள முடிந்தது. சிறிது நேரத்தில் அப்துல்லா வந்தார். “வாங்க மாதவராஜ் அண்ணே” என்று உற்சாகம் தொனிக்க கரம் பற்றிக்கொண்டார். சாப்பிட்டு வந்தோம். வேலன் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தார். அறையில் மணீஜீயும், பட்டர்பிளை சூரியாவும் பேசிக்கொண்டிருந்தர்கள். சூரியாவின் பேச்சும், தொனியும், பாவங்களும் குழந்தைத்தன்மையோடும், சினேகத்தோடும் இருந்தன. 

02 காலையில் சூரியாதான் “இன்று மணீஜீயின் பிறந்த நாள்” என்பதைச் சொன்னார். வாழ்த்துக்கள் சொன்னோம். ”முதன் முதலாக, என் பிறந்த நாளுக்கு இந்த தடவைதான் நான் வீட்டில் இல்லாமல் இருக்கிறேன்” என்றார் மணீஜீ. ஏற்கனவே பா.ரா என்னிடம் “மாது, உங்கள் தங்கை அம்பிகாவை (சொல்லத்தான் நினைக்கிறேன்) பார்க்க வேண்டும். ஆறுமுகனேரி பக்கத்தில்தானே இருக்கிறது?” எனக் கேட்டிருந்தார். அம்பிகாவுக்கு போன் செய்து, திருச்செந்தூரில் திருமணத்திற்கு சென்றுவிட்டு மதியம் அவள் வீட்டிற்கு நானும் நண்பர்களும் வருவதாகச் சொன்னேன். மிகுந்த சந்தோஷப்பட்டு “மீன்குழம்பு வைக்கவா?” என்றாள். சரியென்றேன். “மணீஜீ, இன்று உங்கள் பிறந்தநாளைக் கொண்டாடுவோம். மதியம் அம்பிகா வீட்டில் மீன் குழம்புச் சாப்பாடு.” என்றேன். ஆஹாவென சந்தோஷமடைந்தார்.

03 திருச்செந்தூர் செல்லும் வழியெல்லாம் விட்டு விட்டு மழை பெய்துகொண்டேயிருந்தது. இருபது வருடங்களாக நான் பழகி, வளர்ந்த பாதை அது. ஆதித்தனார் கல்லூரியைக் கடக்கும்போது இளகிப் போனேன். தூறலோடு திருச்செந்தூர் கோவில் வாசலில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். எதிரே பெரும் ஆகிருதியோடு கடல் இரைச்சலோடு ததும்பிக்கிடந்தது. நனைந்திருந்த மனிதக் கூட்டங்களுக்கு ஊடே திருமண மண்டபத்தை விசாரித்து அடைந்தோம். வாசலில் நின்றிருந்த பாஸ்கர் சக்தி எங்களை வரவேற்று, மணமக்கள் கோவிலுக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார். சாப்பிட்டுவிட்டு  அங்கங்கு உட்கார்ந்து மெல்லிய குரல்களில் பேசிக்கொண்டு இருந்தோம்.

07 கொஞ்ச நேரத்தில் கோவிலில் கல்யாணம் முடிந்த கோலத்தோடு செல்வேந்திரனும், திருக்குறளரசியும் வந்தனர். ஈரம் படர்ந்த முகமெல்லாம் சிரிக்க இருவரும் எங்களை “வாங்க, வாங்க” என்றனர். காதலின் உருவங்களாக இருவரும் காட்சியளித்தனர். மேடையில் நின்று வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டு இருந்தனர். நாங்களும் அருகே சென்று நின்றோம். ஒவ்வொருவராக செல்வேந்திரன் அறிமுகம் செய்து வைக்க, திருக்குறளரசிக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது.

06 விடைபெற்றுக்கொண்டு இறங்கியபோதுதான் கவனித்தோம் எழுத்தாளர் ஜெயமோகன் வந்து இருப்பதை. அவரிடம் சென்று பேசிக்கொண்டு இருந்தார்கள். இப்போதுதான் நேரில் பார்க்கிறேன். கை கொடுத்து “மாதவராஜ்” என்றேன். சட்டென்று “மாதவராஜா..!” என்று பார்த்தவர் “aggressive blogger" என்றார்.  “உங்க எழுத்துக்கும் தோற்றத்திற்கும்  வித்தியாசம் இருக்கிறது” என்று சிரித்தார். அவருடைய எழுத்துக்களில்  விமர்சனங்கள் இருந்தபோதும், அவருடைய எழுத்து நடையில் ஈர்ப்பு உண்டு.  நேரில் பார்க்கும் போது அது மட்டுமேத் தெரிந்தது. அப்துல்லா உடனடியாக புறப்பட வேண்டி இருந்ததால் அவரோடு கூடக் கொஞ்ச நேரம் பேசியிருக்க முடியாமல் போனது. மண்டபத்தை விட்டு வெளியேறும்போது மேடையைப் பார்த்தேன். செல்வேந்திரனும், திருக்குறளரசியும் சிரித்தபடி நின்றிருந்தனர். கடற்கரையோரமாய் மீண்டும் நடந்தோம். மேலும் சில மணமக்கள் அங்கங்கு தென்பட்டார்கள். செல்வேந்திரன் - திருக்குறளரசியே நினைவுக்கு வந்தனர். காரில் ஏறும்போது பாதமெல்லாம் மணற்துகள்கள் குறுகுறுத்தன.

அப்துல்லா, பட்டர்பிளை சூரியா, ரமேஷ் வைத்யா மூவரும் தூத்துக்குடி செல்ல, பா.ரா, மணீஜீ, வேலன், நான் ஆறுமுகனேரியில் இறங்கி அம்பிகா வீட்டிற்குச் சென்றோம். முன்னறையில் இருந்த அப்பா “வாங்க” எனச் சிரித்துக் கொண்டே வரவேற்றார்கள். உள்ளிருந்து அம்பிகாவும், மோகனும் (அம்பிகாவின் கணவர்)  வரவும் எல்லோரையும் அறிமுகம் செய்து வைத்தேன். பா.ராவின் வலைப்பக்கத்தை அதிகமாக அம்பிகா படித்து இருந்தாலும் எல்லோரையும் தெரிந்து வைத்திருந்தாள். மோகனும் வலைப்பக்கங்களை ஓரளவுக்கு படிப்பவன்தான். இருவரும் அருகில் ஒரு திருமண வீட்டிற்குச் சென்று வருவதாகச் சொல்லவும், நாங்கள் மாடியறையில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தோம்.

01 அருமையாக எழுதும் சிலரின் வலைப்பதிவுகள் போதிய கவனமும், அதிக வாசிப்புமின்றி போவது குறித்த ஆதங்கத்தில் ஆரம்பித்து ராகவனின் ‘திருப்பதி ஆசாரியின் குடை’ சிறுகதையில் வந்து நின்றோம். அவருடைய வலைப்பக்க முகவரியைக் கேட்டு வடகரைவேலன் மொபைலில் வாசிக்க ஆரம்பித்தார். அடுத்து சுஜாதாவின் சிறுகதைகள் பற்றி பேச்சுத்  திரும்பியது. இடையிடையே தொலைபேசியில் மணிஜீயிடம்  பதிவர்கள் பத்மா, செ.சரவணக்குமார், ராகவன், வினோ, விதூஷ் ஆகியோர் செல்வேந்திரன் திருமணம் குறித்து விசாரித்துப் பேசினார்கள். தாங்களும் அங்கு இல்லாமல் இருக்கிறோமே என்ற ஏக்கங்களை வெளிப்படுத்தினர். அம்பிகாவும், மோகனும் வந்துவிட கீழே சென்றோம்.

மீன்குழம்பும், உணவும் அனைவருக்கும் பிடித்திருந்தது. அதைவிட அம்பிகா, மோகன், அப்பா ஆகியோரின் அன்பான உபசரிப்பும் பிடித்திருந்ததது. அப்பாவிடம் உட்கார்ந்து மணீஜியும், பா.ராவும் பேசிக்கொண்டு இருந்தார்கள். “கொழம்பு இருந்தா ஒரு டிபன் பாக்ஸ்ல தாங்க. வீட்டுக்கு கொண்டு போறேன்” என்றார் மணீஜீ. விடைபெற்றுக் கிளம்பித் தெருவில் நடக்கும்போது, “மாது மக்கா, இன்னொருத்தர் வீட்டுல இருந்த மாரியேத் தெரியல” என்றார் பா.ரா. எங்கெங்கோ இருக்கிற மக்களை இப்படி ஆறுமுகனேரியில் இருக்கும் என் தங்கையின் வீட்டுக்கு எது அழைத்து வந்தது என நினைத்துக் கொண்டேன். வலையுலகம் எவ்வளவு விரிந்ததும், நெருக்கமானதுமாய் இருக்கிறது!

தூத்துக்குடித் திரும்பி, லாட்ஜில் சிறிது ஓய்வெடுத்த பின், அவரவர் கூடுகளுக்குத் திரும்பத் தயாரானோம். முதலில் பா.ராவும், வேலனும் கிளம்பினர். அடுத்து ரமேஷ் வைத்யாவும், மணீஜீயும் புறப்பட்டனர். பட்டர்பிளை சூர்யா தனக்கு இரண்டு நாட்கள் இங்கு அலுவல்கள் இருப்பதாய்த் தங்கிக் கொண்டார். நானும் சாத்தூருக்குத் திரும்பினேன்.
எல்லோரும் கடல் அலைகளைப் போல எனக்குள் வீசிக்கொண்டு இருந்தனர்.

காலையில் எழுந்த போது எல்லாம் கனவுகள் போல இருந்தது. தொலைபேசியில் செல்வேந்திரனிடம் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்திருந்தது. “மாது அண்ணா நலமாக ஊர் போய்ச் சேர்ந்தீர்களா?”. அனுப்பப்பட்ட நேரத்தைப் பார்த்தேன். இன்று காலை 7.31. புன்னகை வந்தது. கதவைத் திறந்து வெளியே வந்து நின்றேன். ஈரத்தரையில் நந்தியாவட்டைப் பூக்கள் சிரித்துக் கொண்டிருந்தன.

(புகைப்படங்கள் : மணீஜீ) Related Posts with Thumbnails

36 comments:

 1. நீங்க போயிட்டு வந்ததுல ரொம்ப சந்தோஷம் அண்ணே.. மணமக்களுக்கு உளங்கனிந்த நல்வாழ்த்துகள்..:-))

  ReplyDelete
 2. அன்பு மாதவராஜ்,

  நானும் இன்னுமொரு முறை செய்துக்கலாமா என்று யோசிக்கிறேன் மாது... எப்படியாவது எல்லோரையும் பார்க்கலாம்... என் கல்யாணத்திற்கு வருவீங்க தானே... அதே பொண்ணு தான் மாது... இது போது எனக்கு யதேஷ்டம்... நான் அங்கே இல்லேன்னு நிறைய வருத்தப்பட்டேன்...

  அன்புடன்
  ராகவன்

  ReplyDelete
 3. இப்பதான் மணிஜியிடம் பேசிக்கொண்டு இருந்தேன்..திருமண நிகழ்வு குறித்து விசாரித்தேன்..
  உங்களோடு நானும் பயணித்தது போல இருந்தது இந்த கட்டுரை..

  மணமக்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. பகிர்வுக்கு நன்றி. மணமக்களுக்கு என் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. நான் நேரில் வரமுடியாததன் வருத்தம் உங்கள் எழுத்தைப் படிக்கப் படிக்க அதிகமாகிறது.

  மணமக்களுக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
 6. என் பொருட்டு நீங்களெல்லாம் ஜெ.மோவோடு அதிகம் உரையாட முடியாமல் போனதில் எனக்கு மிக வருத்தம்.பிறிதொரு சந்தர்ப்பம் நம் அனைவருக்கும் அமையும் என்று நம்புகின்றேன்.

  ReplyDelete
 7. உங்களுக்கு சிரிப்பு சக்ரவர்த்தி என்று பட்டம் தரப் போகிறேன் .aggressive writer என அறியப்பட்டாலும் பேசும்போது அனைவரிடமும் பெருகும் வாஞ்சை தனி .
  செல்வாவிற்கு வாழ்த்துக்கள் .படிக்க மகிழ்ச்சியாய் உள்ளது .

  ReplyDelete
 8. மிக்க மகிழ்ச்சி !

  சந்தோஷத்தை கடத்த முடிகிறது இந்த எழுத்தால், நீருள் தெரியாத மீனின் வால் தரையில் தெரிவதாய் பிறகான நிமிடங்களின் களிப்பையும் பாரத்தையும்

  ReplyDelete
 9. பல்லிடுக்கில் இன்னும் அந்த மீன் முள் இருக்கிறது..மாது...

  ReplyDelete
 10. அருமையான விவரிப்பு. நன்றி.

  மீசையை கொஞ்சம் முறுக்கி வையுங்க. கோவக்கார பிளாக்கர் எப்பிடி இருக்கார்னு பார்ப்போம்.

  ReplyDelete
 11. மணமக்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. மணமக்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. \\ராகவன் said...
  அன்பு மாதவராஜ்,

  நானும் இன்னுமொரு முறை செய்துக்கலாமா என்று யோசிக்கிறேன் மாது\\
  தாராளமா செய்துகொள்ளுங்க, ராகவன். ஆனா, திருச்செந்தூர்ல வச்சுதான் செஞ்சுக்கணும், சரியா.

  ReplyDelete
 14. அம்பிகாவின் பதிவிற்குப் போட்ட பின்னூட்டம் இது.

  மாதவராஜ் சாரின் பதிவில் காணும் ஊர்மணமும், உங்கள் பதிவில் காணப்படும் உங்கள் சமையலின் நறுமணமும் என் மூக்கைத் தொலைக்கின்றன நூற்றுக் கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தபோதிலும்.

  இந்தச் செய்தி தமிழ்மணம் வரை எட்டி விட்டதாகக் கேள்விப்படுகிறேன். அவர்கள் தமிழ்மணம், திரைமணம் ஆகிய பிரிவுகளுக்கு அடுத்து ஊர்மணம், கைமணம் என்று புதுப் பிரிவுகளை ஓட்டுப பட்டையில் இணைக்கப் போவதாகக் கேள்வி.

  எல்லா வளமும் பெற்று வாழ்க மணமக்கள். இது பதிவு போலவே படவில்லை. ஏதோ ஒரு நெருங்கிய உறவினர் எனக்கு எழுதிய கடிதம் போலவே படுகிறது.

  அன்புடன்

  கோபி ராமமூர்த்தி

  ReplyDelete
 15. அண்ணா...
  உங்கள் பகிர்வை வாசித்தபோது நாமும் உங்களுடன் திருச்செந்தூர் கடற்கரையில் நடந்து வந்தது போல் உணர்ந்தேன்.... சற்றுமுன் தான் அம்பிகா அக்காவின் பதிவை படித்தேன். ஊரில் இருப்பதால் நீங்களெல்லாம் சந்திக்கும் தருணங்கள் வாய்க்கின்றன. எங்களுக்கு அந்த கொடுப்பினை இல்லை.. எழுத்தின் மூலம் தான் உங்களை எல்லாம் சந்திக்கிறோம்.

  ReplyDelete
 16. மீன் குழம்பு வாசம் பதிவுலகம் முழுக்க மணக்குது. ஆசையக் கிளப்பிவிட்டுட்டு
  நந்தியா வட்ட்ப்பூக்களப் பார்த்து சிரிச்சிக்கிட்டு இருக்கீங்களே..

  சாத்தூருக்கு மூட்டையக் கட்டிடறோம். மீன் குழம்பு ரெடி பண்ணச் சொல்லுங்க...

  ReplyDelete
 17. மாது,

  மணமக்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள்.

  நீங்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள். இந்த 14 வருட வெளிநாட்டு வாழ்க்கையில் என்னால் போக முடியாத உறவினர்களின் திருமணங்கள் நிறைய. இருந்தாலும் அப்போது எல்லாம் அதிகம் வருத்தப்படாத மனம் இப்போது வருத்தப்படுகிறது.

  என்ன செய்ய? இதற்காகவேணும் சீக்கிரம் இந்தியாவிற்கு வந்து விட வேண்டும்.

  பரிசல்,
  நீங்கள் திருமணத்திற்கு போகவில்லையா?

  ReplyDelete
 18. உடன் பயணித்த உணர்வு

  மணமக்களுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 19. மணமக்களுக்கு வாழ்த்துக்கள்...

  உங்கள் பதிவை படித்ததும் நாங்களும் திருமணத்திற்கு வந்தது போல் இருந்தது...

  ReplyDelete
 20. மணமக்களுக்கு வாழ்த்துக்கள். இதையே சாக்காகவைத்து திருவிழாக்காணும் பதிவர் சந்திப்புக்கள். இறுகும் இன்னொரு பந்தம். மணிஜீ,பாரா....

  ReplyDelete
 21. அருமை.. மணமக்களுக்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
 22. உங்களுடனே பயணப்பட்டு திரும்பி வந்து நந்தியாவட்டை பூக்களை பார்ப்பது போன்ற பதிவு..

  ReplyDelete
 23. இனிமையான பயணம் எழுத்தினூடே. பகிர்வுக்கு நன்றிகளும், மணமக்களுக்கு வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 24. மணமக்களுக்கு உளங்கனிந்த நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 25. அருமையா சொல்லிட்டிங்க, போயிட்டு வந்தமாதிரியே இருக்கு. நன்றி.

  காலையில் போன் செய்தபோது அனைவரிடமும் பேசினேனே, நீங்கள் அங்கிருப்பது தெரியவில்லை.

  :-)

  ReplyDelete
 26. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 27. அடப் பாவமே...இப்படி ஒரு வார்த்தை சொல்லாமே தூத்துக்குடி போயிட்டு வந்துட்டீங்களே...எங்க அம்மா தம்பியெல்லாம் அங்கேதானே இருக்காங்க!!!மணமக்களுக்கு உளங்கனிந்த நல்வாழ்த்துகள் பூங்கொத்தோடு!!!

  ReplyDelete
 28. வரி, வரியாய் படிக்கப் படிக்க,
  நேரில் காண்பதான ஓர் உணர்வு.
  அந்தளவு என் காதுக்குள் சொல்வதுபோல்
  நேர்முக வர்ணனை! அருமை!!

  மணமக்களுக்கு எனது மனம்கனிந்த
  நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 29. மணமக்களுக்கு வாழ்த்துகள்.

  உணர்வுகளை அப்படியே எழுத்தில் கொண்டுவரும் நேர்த்தியை உங்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும் மாது அண்ணா.

  பதிவு நெகிழ்ச்சியாகவும், உங்களுடன் இணைந்து நானும் திருச்செந்தூரின் மழைச்சாலையில் நடந்திடாத வருத்தத்தையும் ஒருங்கே தருகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 30. அப்புறம் அந்த aggressive blogger..
  ரொம்ப ரசிச்சேன்.

  ReplyDelete
 31. எனது ஊரிலிருந்து முன்று மைல் தூரத்தில் இருந்ததால் நானும் நேரில் சென்று வாழ்த்த முடிந்ததில் பெரிய மகிழ்ச்சி. ஜெயமோஹனை பார்த்து பேச முடிந்தது. bloggers யாரையும் பார்க்க முடியாமற்போனதில் மிகவும் வருத்தம்.

  ReplyDelete
 32. my second attempt to meet you failed again. ( first was in book fair chennai,) paa. raa. thambiyai paarkkamal vanthathu periya varuththam

  ReplyDelete
 33. அந்த காற்றும், மழையும், காரின் பின் இருக்கையில் அமர்ந்தபடி தலையில் அடித்துக் கொண்டே வந்த ரமேஷ்வைத்யாவும், முன் இருக்கையில் அமர்ந்தபடி "பூக்கள் பூக்கும் தருணம்" பாட்டில்(ரெண்டு வரிகளேயானாலும்) தத்ரூபமாக வெளிப்பட்ட அப்துல்லாவும், ரமேஷ்வைத்யாவை, பேச்சுக்கு பேச்சு மடக்கிக் கொண்டே வந்த வேலனும், தொட்டதுக்கெல்லாம் அப்படி ஒரு சிரிப்பு சிரித்த சூர்யாவும், பேன்ட்டை தூக்கிப் பிடித்தபடி நடந்த திருச்செந்தூர் கோயிலின் வெளிப் பிரகாரமும், ஈரமும், ததும்பும் சிரிப்புமாக, வந்த செல்வேந்திரன்-திருக்குறள் அரசியும், அம்பிகா வீட்டு வாசல் நிலையில் கைவைத்தபடி, செருப்பு கழட்டிக் கொண்டே, "அப்பாஆஆ" என கூவியழைத்த என் மாதுவும், மீசையை நீவியபடி சிரித்த அப்பாவும், ஆன்மாவில் இருந்து கசிந்த அம்பிகாவின் "பாராண்ணா" விளிப்பும், லீவு போட்டு காத்திருந்த மோகன் அத்தானின் வாஞ்சையும், மடக்கு 'திரவத்திற்கு' பிறகு மொட்டைமாடியில் பரவிய முருங்கைப் பூ வாசனையும், மின்சாரம் தாக்கியது போலான அம்பிகாவின் சுரீர் மீன்குழம்பும், பிறந்த நாள் ஆசியை அப்பாவிடம் வாங்கி பத்திரப் படுத்திக் கொண்ட மணிஜியும், வெத்தலை முறுக்கிக் கொண்டே புகைத்த கொல்லைப் புறமும், ஹிருதயத்தின் அத்தனை மூலைகளிலும் நிரம்பி இருக்கிறது மாது...

  நிரம்பியே இருக்கும் மாது...

  நாட்காட்டி தாளை கிழிப்பது போலவா நாட்களை கிழித்துவிட முடியும்?

  ReplyDelete
 34. மஹிக்கா,

  ஊர்லயா இருக்கீங்க? இந்த பின்னூட்டம் பார்க்க நேர்ந்தால் தொடர்பு கொள்ளுங்கள் அக்கா. அழை எண் : 8973248015.

  ReplyDelete
 35. மாதவ்ஜி, இதை விட சந்தோஷம் வேறென்ன வேண்டும்..?

  அடுத்த கல்யாணம் யாருக்கு..? எப்போ..?? வெயிட்டிங்...

  ReplyDelete
 36. நெகிழ்ச்சியும், அன்பும் மிக்க தருணங்களை உணர்ந்தவர்களை இங்கே பார்க்கிறேன். மிக்க சந்தோஷம்.

  ReplyDelete