பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் - 2

பசியின் நிறம்
 

 

யாவருக்குள்ளும் கதைகள் உறைந்து கிடக்கின்றன. உலகின் மகத்தான நாவல்கள் எழுத்தாளனின் பால்யகால ஞாபகக் கிடங்கிலிருந்து ஊறித்திளைத்த காட்சிகளால் வடிவமைக்கப்பட்டவைதான். பகிர்ந்து கொள்வதற்கான பெரும் கதைகளோடுதான் உலகமே நம்முன் சுழன்று கொண்டிருக்கிறது. தேனி சீருடையானின் ஞாபகப்பரப்பிலிருந்து விரிவு கொண்ட பெரும் கதையே ‘நிறங்களின் உலகம்’. ‘கடை’ என்கிற தன்னுடைய முதல் நாவலில் காட்சிப்படுத்தப்பட்ட யதார்த்த வாழ்விற்காக வாசக கவனம் பெற்றிருந்த சீருடையானின் பேனாவிலிருந்து பசியெனும் மைநிரப்பி எழுதப்பட்டிருக்கும் பாண்டியின் வாழ்க்கைப்பாடே நிறங்களின் உலகம்! வாழ்வின் நிஜத்தையும் அதன் நிறத்தையும் மர்ம முடிச்சுகளையும், அது நிகழ்த்திப்பார்க்கும் வன்மத்தையும் யதார்த்தமான தனித்த மொழியில் பதிவுறுத்துகிற மிகச்சிறந்த நாவல் `நிறங்களின் உலகம்’.

விழியிழந்தோர்க்கு கட்புலனாகாத புறத்தோற்றத்தை நிறங்களின் வழியாக மட்டுமே உணரமுடிகிறது. திறந்தே கிடக்கும் விழிக்கோளங்களுக்குள் கரும் இருட்டே காட்சியாகும் கண்தெரியாதவர்க்கு என்கிற எளிய புரிதலோடு இருப்பவர்கள் கொஞ்சம் அதிர்ச்சியடைவர். இந்த நாவலை வாசித்துக் கடக்கும் கணங்களில். கண்சுருக்கி அவர்கள் காணும் காட்சிகள் யாவும் அவர்களுக்கு தனித்தனி நிறங்களாகவே தோன்றுகின்றன. கருமையின் ருசி, இளஞ்சிவப்பின் வாசம், பச்சையின் மணம் எதுவென அறிந்தபடியே கடக்கிறார்கள் தினந்தோறும், நாவலை நான் வாசித்திருந்த நாளின் இரவில் நிறவெளிகளை தன் கைத்தடிகளால் தட்டிக்கடக்கும் விழியிழந்தோர் பெரும்படை என்னை விழித்திருக்கச் செய்துகொண்டிருந்ததை இப்போதும் என்னால் உணரமுடிகிறது. பொருளிற்கும், அதன் குணத்திற்கும் தனித்தனியே நிறங்களை தன் அக மனதிற்குள் உருவாக்கிக் கடக்கிறார்கள் வாழ்வினை.

நிறங்களின் உலகின் பாண்டி 6 வயது வரை தீர்க்கமான பார்வையுடன் வாழ்ந்தவன். அவனிலிருந்து காணும் திறன் நழுவிச் செல்கிறது. நாவலில் மிக நுட்பமாக தன்னிலிருந்து பார்வை நழுவிடும் கணங்கள் பதிவுறுத்தப்பட்டுள்ளன. பரம்பரையாக இப்படி நிகழ்வதற்கான தொன்மக் கதையொன்றும் பழக்கத்தில் உள்ளது. அறிவியல் நிஜத்தை உணர்த்த பார்வையற்றோர் பள்ளி மாணவன் ஆகிறான் பாண்டி. அங்கு பாண்டிக்குள் நிகழும் அரசியல், சமூக விஷயங்களும், சூழலைக் கடந்திட துடித்தலும் மனித மனதின் துயருமே நாவலாகியுள்ளது.

எவருக்கும் நாவலை வாசித்த பிறகான நாட்களில் மனதில் அலைவுறும் காட்சிகள் விசித்திரமானவை. ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணியை வாசித்திருந்த நாட்களில் ஜப்பானும், கப்பலும், போரும், பாண்டியன் எனும் சாகஸக்காரனும் எனக்குள் நீண்ட நாட்கள் தங்கியிருந்தார்கள். இப்படித் தான் தி.ஜானகிராமனின் மோக முள்ளை வாசித்து லயித்த நாட்களில் யமுனாவும், தஞ்சை நிலவெளியும், இசைச்சுரங்களும் யாவருக்குள்ளும் நீடித்திருந்திருக்கும். இது எல்லா நாவல்களுக்கும் நிகழுமா எனத் தெரியவில்லை. நிச்சயமாக மிகச்சிறந்த நாவல்களை வாசிக்கும் கணம் தோறும் அது நம் உள்மனதினுள் உருவாக்கிடும் உணர்வலைகள் விதவிதமாகத்தான் ரூபம் கொள்கின்றன. நிறங்களின் உலகத்தை வாசிக்கிற எவரும் நாவலுக்குள் பசியெனும் மாயம் நிகழ்த்திப்பார்க்கும் குரூர விளையாட்டை கண்டுணர்வதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை. பசி யால் கண் பூஞ்சையடைந்து வாசகன் தடுமாறித்தான் போவான். இவ்வளவு அழுத்தமாக பசியின் குரூரம் நிறங்களின் உலகத்தைத் தவிர வேறு எந்த தமிழ்நாவலிலும் பதிவாகவில்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

பாண்டியின் பொழுதுகள் பசியால்தான் நிறைந்திருக்கிறது. தங்கமணியின் அரிசிச்சாப்பாடு எனும் சொற்பதம் வெறும் வார்த்தைக்கூட்டமல்ல. அடிப்பிடித்த சோற்றையும், சனம்புக் கீரையையும் தின்று பசியெனும் அரக்கனை தன்னில் இருந்து வெளியேற்றத் துடிக்கும் குடும்பத்தின் கதை யிது. தென்னங்குருத்திற்கு பசியாற்றும் வல்லமை உண்டு என்பதை நிறங்களின் உலகிற்கு முன் நான் அறிந்திருக்கவில்லை.

பச்சைக்கும்மாச்சி மலைகள், வயல்பட்டி எனும் பெயரால் ஆன வயல்கள், சலசலத்து ஒடும் நீரோடைகள். இவைகளுக்கு நடுவில்தான் பெரும்பசி கொண்ட மக்கள்திரள் வாழ்வைக் கடத்தியிருக்கிறது என்பது அதிர்ச்சி யளிக்கத்தான் செய்கிறது. பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் நம்பிக்கைகளை சிதைக்கும் வல்லமை கொண்டவை நாவல் இலக்கியம் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிசெய்து கொண்ட இடங்கள் இவை.

வாழ்க்கையில் பல தற்செயல் நிகழ்வுகளும், விசித்திரங்களும் மனித மனங்களால்தான் வடிவம் பெறுகிறது. பசியால் வாடிக்கிடக்கும் மொத்தக் குடும்பத்தையும் சாராயம் குடித்து விட்டு வந்து அடித்துத் துவைத்து துவம்சம் செய்யும் கணவனுடன் இரவில் கூடிக்கிடப்பது சாத்தியமா? உடலும், மனமும் உள்நிறைத்து வைத்திருக்கும் மர்மங்களை அறிந்திட இயலுமோ தெரியவில்லை. எல்லோரும்தான் உடனிருக்கிறார்கள். பாண்டிக்கு பத்மநாபனுடன் மட்டும் மனநெருக்கம் கூடுகிறது. எது இவர்களை ஒன்றாக்கியது. ஊர்ப்பாசமா? இருக்கலாம். எல்லோருக்குள்ளும் இயங்கிக்கொண்டிருக்கும் குருவாகத் துடிக்கும் மன நிலையா? யார் அறிவார்கள்? ஒரு வேளை பாண்டியும், பத்மநாபனும் கூட அறிந்திருப்பார்களா தெரியவில்லை. தற்செயல் நிகழ்வுகளே யாவரின் வாழ்வையும் வடிவமைக்கிறது.

நாவலின் சிலபக்கங்களில் மட்டும் காட்சிப்படுகிற ஜேம்ஸ்தெரு கன்னியம்மா மிகவும் முக்கியமானவள். தெலுங்குப் பிரதேசத்தில் இருந்து வந்து வாழ்வின் முடிச்சிற்குள் சிக்கி தன்னையே பணயமாக வைத்த சக்குபாயின் மகள் கன்னியம்மா. தாத்தா அழைத்து வந்த முதல்நாளில் வெற்று நிலமாக இருந்த ஜேம்ஸ்தெரு கன்னியம்மாவுடன் மனம் நெருக்கமான பிறகு பாண்டிக்கு ஞானபூமியாகத் தெரிகிறது. அவள்தான் அவனுக்குள் இலக்கியக் கதவினை தன்குரல் வழியே திறந்தாள். பாண்டிக்கு இலக்கியம் யாவும் புரசைவாக்கத்தின் ஜேம்ஸ்தெரு சாக்கடைக் கொசுக்களின் ரீங்காரத்தோடு சேர்ந்தே தான் அறியப்பட்டிருந்தது.

பெருமழை நாள் ஒன்றில் சுவர் இடிந்து விழுந்திட தாயும், மகளும் மரித்துப் போனார்கள் எனும் குரல் கேட்ட நொடியில் பாண்டியுடன் நாமும் தான் விக்கித்துப் போகிறோம். அதன் பின் நாவலின் எழுதப்படாத பக்கங்கள் வாசக மனதிற்குள் கடந்து செல்கிறது. நாவல் கச்சிதமான வடிவமா? வாசகன் தனக்குள் பயணப்பட இடமேற்படுத்தி தரும் நாவல்களே வெற்றி பெற்றிருக்கின்றன. அப்படியான முக்கியமான இடமிது. இனி வாசகர்கள் பாண்டி, கன்னியம்மா, சக்குபாய், ஜேம்ஸ் தெரு, பார்வையற்றோர் பள்ளி இவற்றின் ஊடாக வேறு ஒன்றான கதைகளுக்குள் பயணப்பட சாத்தியம் உண்டு. வாசகனுக்கான திறப்புகளையும், நுட்பமான இடைவெளிகளையும் நாவலின் பக்கங்களை வாசித்தறியும் போது உணர்கிறோம். இதுவே நிறங் களின் உலகத்தை தமிழின் மிக முக்கியமான நாவலாக்குகிறது.

நாவலின் பின்பகுதி நிகழும் காலம் தமிழகத்தின் கல்விப்புலத்தில் கொந்தளிப்பான அரசியல் சூழல் நிகழ்த்திய வரலாற்றால் ஆனது. பார்வையற்றோர் பள்ளி மாணவர்களும் பேருந்தின் மீது கல்வீசி தாக்கி தங்களின் இந்தி திணிப்பின் மீதான எதிரியை உலகறியச் செய்கிறார்கள். பள்ளிவிடுதியில் தங்கிப் பணிசெய்யும் பாண்டு அக்காலத்தின் குறியீடு. அண்ணாதுரை, கருணாநிதி, சிற்றரசு, நெடுஞ்செழியன் போன்ற திராவிட முன்னேற்றக் கழகத்தாரின் உணர்ச்சி மிகு சொல்லாடல்களால் ஈர்க்கப்பட்ட இளைஞர்படை தமிழின் மீதான ஈர்ப்புடன் இயங்கியது. பாண்டுவிற்கும், பாண்டியான சீருடையானுக்கும் நடக்கும் தர்க்கமும், விவாதமும் எழுத் தாளரின் இப்போதைய மனநிலையே. 70, 80களில் இப்படி விவாதிப்பதற்கான மனநிலை இருக்கச் சாத்தியம் குறைவுதான்.

இங்குதான் எழுத்தாளன் தன்னை எழுதிப்பார்த்திடும் தன்மை வெளிப்படுகிறது. நாவல் என்றாலே தர்க்கித்து தொடர்வது தானே. வெற்று நம்பிக்கை களாலும், ஆரவார உணர்ச்சிகளா லும் கட்டி வைக்கப்பட்டிருந்த காலத்தின் மீது எழுதப்பட்டிருக்கும் பிரதியை தன் புதிய எழுத்தால் கலைத்துப் பார்ப்பதும், எழுதபடாதவற்றின் மீது வாசக கவனத்தை ஈர்ப்பதுமே கலைஞனின் பணியாகும். சீருடையான் கலைஞன் என்பதால் அவர் எழுதியே இருக்காத காட்சிகள் நாவலை வாசிக்கும் தருணங்களில் நமக்குள் கடக்கிறது.

பாண்டுவின் வழியே திமுகவினரின் மொழிக் கொள்கையெனும் விசித்திரத்தை நாம் புரிகிறோம். நிகழ்காலத்தில் தன்பேரனுக்கு இந்திதெரியும் என்பதே அவர் மத்தியமந்திரியாக அவருக்கு இருக்கும் ஒரே தகுதி என்று கூறிய மூத்த தமிழறிஞரின் குரூர முகமும், அவரின் சக்கையான வசனங்களால் ஈர்க்கப்பட்டு தன் உடலெங்கும் தீபரவச் செய்திட்ட மாணவர்களின் துயருற்ற முகங்களும் நம்மைக் கடக்கிறது. வெற்று உணர்ச்சிகளால் உந்தப்பட்டு தன்னை மாய்த்துக் கொண்ட மதிப்பிடமுடியாத மனித உயிர்களின் தற்கொலைகள் குறித்த பதிவுகள் தமிழில் இனிமேல்தான் எழுதப்படவேண்டும்.

பார்வையற்றோர் பள்ளியில் கற்றுக் கொள்வதற்காக பதட்டமான மன நிலையுடன் ரயில் ஏறிய பாண்டியின் ஞாபகங்களில் திரண்டு வந்த ஊரும், பசியும், வறுமையும், துயருறு மன நிலையும், பின் அந்த பள்ளியின் சூழலும் கற்றுத் தந்த வாழ்க்கைப்பாடுகளையும் நாவல் நமக்குள் உக்கிரமாக கடத்திச் செல்கிறது. போன காரியம் முடிந்துவிட்டது, இனி புறப்படவேண்டியதுதான் என்கிற மனநிலையை அடையும் போதெல்லாம் நாம் தடுமாறிப் போவதைப் போல பாண்டியும் தடுமாறித்தான் போகிறான். படிப்பு முடிந்து விட்டது, இனி ஊருக்கு கிளம்ப வேண்டியதுதான் என்கிற பாண்டியின் மனத்தவிப்போடு நிறைவடைகிறது நாவல்.

நாவலை வாசித்து முடித்தபிறகும் பல நாட்கள் எனக்குள் நல்ல சாப்பாட்டை பிசைந்தபடியே பசியோடு வாடித் துயருறும் தன்குடும்பத்தை நினைத்துக் கண்ணீர் விடும் பாண்டியின் காட்சிச் சித்திரம் கடக்க மறுத்துக் கொண்டிருந்தது. வண்ணமயமானது மட்டுமில்லை வாழ்க்கை.

-ம.மணிமாறன்

(இன்னும் கேட்போம்)

கருத்துகள்

2 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. தமிழ்நாடு முற்போக்கு, எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரான சீருடையான் ஐந்து வயதில் கண்பார்வை இழந்தவர். பார்வையற்றோர் பள்ளியில் "பிரெய்லி" முறையில் தமிழ் கற்றவர். பதிணேழுவயதில் அறுவை சிகிச்சை மூலம் பார்வை பெற்று எழுத ஆரம்பித்தவர்.அறுவை முடிந்து,பார்வை வரும்போது ஒளியின் தீவிரம் இத்தனை காலம் இருட்டன கண்களுக்குள் "சுரீர்" என்று பாயும் வேதனையை சிறுகதையாக வடித்தவர்.
    இந்த நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயற்கப் படவெண்டும்.மொழிபெயர்பாளரோ தயார். ஏனோ சீருடயான் தயங்குகிறார். அதே போன்று இது "பிரேய்லி" முறையிலும் வரவெண்டும்.மணிமாறன் போன்றவர்கள் தலையிட்டு சீருடையானைச் சம்மதிக்கச் செய்ய வெண்டும் அன்புடன்---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  2. நாவல் அறிமுகம் நன்றாக உள்ளது. நேற்று பதிவு கூட அருமையாக இருந்தது. வாய்ப்பு கிடைக்கும் போது படிக்கணும். நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!