ஆணாதிக்கம், பெண்ணொழுக்கம் மற்றும் விவாதங்கள் - 1

women10 “ஆணாதிக்க சமூகத்தின் மனோபாவங்கள் குறித்து கூட்டங்களில் விவாதிக்கிற போது, பலரும் கண்டுபிடித்து முதலில் நிறுத்துவது - பெண்ணின் ஒழுக்கம் குறித்த ஓயாத கவலை.” என்றுதான் காமாட்சியின் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார் பேராசிரியர் மாடசாமி. ‘பூமரப்பெண்’ என்னும் அவரது புத்தகத்தில் முன்வைத்த ஒரு விவாதத்தையும், சில கதைகளையும் இங்கு பகிர்ந்துகொள்ளத் தோன்றுகிறது.

வாழ்வதற்கான விருப்பம்தான் விருப்பங்களில் எல்லாம் தலையானது. அடிப்படையானது. எந்தப் பிரச்சினையின் போதும் மனித மனம் வாழ்வை நோக்கித்தான் நெகிழ்வு கொள்கிறது. பெண்களை மட்டும் இந்த வாழ்க்கைப் போக்குக்கு விதிவிலக்காக நிறுத்த சம்பிரதாயங்களும், மதிப்புகளும் தவிக்கின்றன.

பாதிக்கப்படும் நேரங்களில்தான் முடிவெடுப்பது முக்கிய வேலை ஆகிறது. பாதிக்கப்படுபவர்கள் பெண்களாயிருந்தால், அவர்கள் எடுக்கும் முடிவில் நெகிழ்வு தோன்றிவிட்டால், ஆண் சமூகம் நெஞ்சு படபடக்கிறது. இந்தப் படப்படப்பை புராணக் கதைகளிலிருந்து, சீரியல்கள் வரை பார்க்கிறோம்.

புராண இதிகாசக் கதைகளுக்கு, நம் உலகத்தைக் காட்டுவதைவிட, நம்மீது வேறோர் உலகத்தைச் சுமத்துவதும் - நம் நெகிழ்ந்த உலகத்துக்குள் இறுகிய நியாய ஒழுக்கங்களைத் திணிப்பதும்தான் நோக்கமாக இருக்கிறது. அதற்கு எதிராக வைக்கப்பட வேண்டிய கன்னட நாட்டுப்புறக்கதை ஒன்று இருக்கிறது. இக்கதையை கிரிஷ் கர்னாட் ‘நாக மண்டலா’ என்ற நாடகமாக்கியுள்ளார். தமிழில் ஏ.கே.ராமானுஜன் ‘காமாட்சி’ என எழுதியுள்ளார்.

காமாட்சி ஒரு இளம்பெண். கல்யாணம் ஆகிறது. கணவன் நல்லவன் இல்லை. காமாட்சியை அவன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவனுக்கு வேறு ஒருத்தி மீது இச்சை. இரவெல்லாம் அங்கேயே கிடப்பான். காமாட்சியைத் தொட்டதும் கிடையாது. இப்படியே காலம் நகர்ந்தது. பக்கத்து வீட்டில் ஒரு பாட்டி இருந்தாள். அவள் ஒரு மூலிகையைத் தந்தாள். “இதை அரைத்துச் சாப்பாட்டில் க்லந்து அவனுக்குக் கொடு, பிறகு பார்! அவன் உன் காலடியில் கிடப்பான்” என்றாள்.

பாட்டி சொன்னதைப் போல காமாட்சி செய்தாள். மூலிகையைக் கலந்ததும் சாப்பாடு சிவப்பு நிறமானது. காமாட்சி பயந்து போனாள். ‘ஒருவேளை சாப்பாடு விஷம் ஆகிவிட்டதோ’ என்று நினைத்தாள். மூலிகைக் கலந்த உணவை கனவனுக்குக் கொடுக்கவில்லை. அதைக் கொண்டு போய் வீட்டருகே இருந்த பாம்புப் புற்றில் கொட்டி விட்டாள்.

ஒரு நல்ல பாம்பு அந்தப் புற்றுக்குள் வசித்தது. காமாட்சி கொட்டிச் சென்றதை உணடது. அந்தப் பாம்புக்குக் காமாட்சி மீது காதல் உண்டானது.

இரவானதும் பாம்பு, காமாட்சியின் கணவனுடைய வடிவத்தை எடுத்து, காமாட்சியைத் தேடி வந்தது. காமாட்சியிடம் பிரியமாக நடந்து கொண்டது. இதமான வார்த்தை பேசியது. காமாட்சி இதுவரை அறியாத தாம்பத்திய மகிழ்ச்சியைத் தந்தது. காமாட்சிக்கு இது வேறொரு ஆள் என்றேத் தெரியாது. கணவன் ராத்திரியில் மட்டும் நல்லவனாக மாறிவிடுகிறான் என்று நினைத்தாள்.

தினசரி இது தொடர்ந்தது. காமாட்சி கர்ப்பம் அடைந்தாள். இனியும் உண்மையை மறைப்பது தப்பு என்று நாகம் நினைத்தது. “நான் உன் கணவன் இல்லை, கணவன் ரூபத்தில் வந்த நாகராஜா” என்று காமாட்சியிடம் சொன்னது. காமாட்சி நடுக்கம் கொண்டாள். நாகம் அவளைத் தேற்றியது. “பயப்படாதே காமாட்சி. எந்த அவமதிப்பும் உனக்கு வராது. நான் பார்த்துக்கொள்வேன். உன் புருஷனோடு உன்னைச் சேர்த்து வைப்பேன்” என்றது. பிறகு மறைந்து விட்டது.

காமாட்சி கர்ப்பம் ஆனதை அவள் கணவன் அறிகிறான். அறிந்ததும் குதிக்கிறான். கொதிக்கிறான். ஊரைக் கூட்டுகிறான்.

ஊர்ப்பெரியவர்களின் கேள்விகளுக்குக் காமாட்சியின் ஒரே பதில் இதுதான். “நான் தப்பு செய்யவில்லை. சிவன் கோவில் புற்றில் வசிக்கும் நாகப்பாம்பைக் கையில் பிடித்து இதைச் சத்தியம் செய்வேன்.”

காமாட்சியின் வார்த்தைகளால் ஊர் புல்லரித்தது. சத்தியப் பரிசோதனைகளிலேயே இது மிகவும் ஆபத்தானது. சொன்ன வார்த்தை பொய்யென்றால் நாகம் உடனே கொத்தி விடும். அடுத்த நொடி மரணம்.

சொன்னது போலவே நாகப்பாம்பைக் கையில் பிடித்து “தான் தப்பு செய்யாதவள்” என்று சத்தியம் செய்கிறாள் காமாட்சி. “தன் கணவனையும், இதோ இப்போது கையிலிருக்கும் பாம்பையும் தவிர வேறு யாரையும் தொட்டதில்லை” என்கிறாள். சாமர்த்தியான பதில். நாகம் அவளைக் கொத்தவில்லை. மாறாக, காமாட்சியின் கழுத்தில் மாலையாகக் கிடந்து தலைமீது குடை போல படம் விரித்துக் காட்சியளித்தது.

ஊரார் காமாட்சியின் காலில் விழுந்து வணங்கினார்கள். பதிவிரதையாக அவளைக் கும்பிட்டார்கள். கணவனோ நடுநடுங்கிப் போனான். அவளோடு ஒழுங்கு மரியாதையாகச் சேர்ந்து வாழ்ந்தான்.

இதுதான் காமாட்சி கதையின் சாராம்சம். காமாட்சியைக் கணவனோடு சேர்த்து வைத்த நாகம், பிறகு அவர்கள் சந்தோஷமாக வாழ்வதைக் கண்டு பொறாமையும், துயரமும் கொண்டு காமாட்சி படுத்திருக்கும்போது கட்டிலுக்குக் கீழே தொங்கிய அவளது கூந்தலில் தூக்குப் போட்டுச் செத்துவிடுகிறது என்று கதை மேலும் நீள்கிறது.

சரி விஷயத்திற்கு வருவோம். புராண இதிகாசங்களில் நடத்தப்படும் பத்தினிப் பரிசோதனைகளை- சீதை தீக்குளித்தது போன்றவற்றை - காமாட்சியின் கதை பரிகாசம் செய்கிறது.

அகிலிகை கதையில் இந்திரன், அகலிகை இருவரும் சபிக்கப்படுகிறார்கள். காமாட்சி கதையில் ‘கள்ள நாகராஜன்’ பிடிபடவும் இல்லை. தண்டிக்கப்படவும் இல்லை. காமாட்சியோ பத்தினி அந்தஸ்து பெறுகிறாள்.

பாதிக்கப்பட்டவர்கள் - குறிப்பாக பெண்கள் நெகிழ்ந்த முடிவுகளின் பக்கமே நிற்கிறார்கள். நாட்டுப்புறப் பண்பாட்டில் பெண்களின் குரலும் கேட்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. நவீனத்துவம், முதல் இலைவிட்டு துளிர்த்தபோதே நெகிழ்வுதான் ரத்த ஓட்டம் எனப்தைப் புரிந்து கொண்டிருந்தது. ‘நெகிழ்வுதான் இயல்பு’ என்ற கருத்தைச் சொல்லி, தமிழ் வாசிப்பு உலகில் விவாதங்களுக்கான மேடையமைத்த புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகியோரது கதைகளை அறிவோம்.

மகாகவி பாரதியும் ஒரு புகழ்வாய்ந்த கதை சொல்லியிருக்கிறார். அந்தக் கதையோடு விவாதத்தை பேரா.மாடசாமி மேலும் தொடர்கிறார்.

(தொடர்ச்சி நாளை)

கருத்துகள்

6 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ஆணாதிக்கத்திற்கு எதிரில் பெண்ணின் ஒழுக்கத்தை வைத்து விவாதிக்கும் போது காமாட்சியும் ஒழுக்கமானவளே.

    பதிலளிநீக்கு
  2. மேற்படி கதையை கிரீஸ் கர்னார்ட் கன்னடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்க படமாகவும் எடுத்திருக்கிறார் என நினைக்கிறேன். ஷாருக்கானின் "பஹேலி" இதைத் தழுவியதுதானே? தலைப்பைப் பார்த்ததும் ஏதும் வம்பாக இருக்கும் என நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  3. இதே கதைதான் பஹேலி( paheli ) என்ற பெயரில் ஹிந்தியில் ஷாரூக் , ராணி முகர்ஜி நடித்து வெளியானது.

    பதிலளிநீக்கு
  4. மிகவும் அருமை மாதவ்ஜி!

    ஒரு பெண்ணை தாழ்த்த அவளின் ஒழுக்கம் குறித்த அவதூறே முன் வைக்கப்படுகிறது. தன் மீதான குற்றங்களை,குறைகளை மறைக்க அல்லது தனது சமூக அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு ஆண் சம்பந்தப்பட்ட பெண்ணை வேசியாக திரிப்பதே வழக்கமாயிருக்கிறது.

    கதையில் வரும் நாகம் செய்தது தவறா? இல்லை அந்நேரத்தில் வீட்டில் இல்லாத கணவனின் தவறா எனகிற போக்கில் இக்கதை வாசிக்கப்பட்டால் அதே பெண்ணினத்தின் வெற்றி!

    தனிப்பட்ட ஆண்/பெண் இருவருக்குள்ளும் நடந்தேறிய பிரச்சனைக்கான கருவை சமூகம் “நெருப்பில்லாமல் புகையுமா” என்கிற பாணியிலே அணுகத் தொடங்குவது சாபக்கேடு.

    மனவளமிக்க சமூகத்திற்கு இது போலும் சில மேற்கோள்கள் அவசியம்.

    அருமை! நெகிழச் செய்ததோடல்லாமல் சில வரிகள் கிறுக்கவும் வித்திட்டது. நன்றி

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!