தீராத விளையாட்டுத் தாத்தா

லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு இங்க. போய் வெளையாடுங்க.. இல்லன்னா வீட்டுக்குப் போய்ப் படுங்க.” சத்தம் போட்டார்கள். ஓடுவதுமாய், பிறகு கொஞ்ச நேரம் கழித்து எதாவது சந்து பொந்து வழியாக பொன்னாச்சி வீட்டுத் திண்ணைப் பக்கம் போய் நிற்பதுமாய் இருந்தோம். பத்துப் பனிரெண்டு வயசுதான் இருக்கும் எனக்கு. ஆணுக்கும் பெண்ணுக்குமான விவகாரம் ஒன்றை நடுத்தெருவில் வைத்து அந்த இரவில் கூட்டம் கூட்டமாய் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

”இப்ப என்னவே சொல்றீரு, காந்தியக் கல்யாணம் செஞ்சுக்கிறீரா?” கூட்டத்தில் ஒருவர் அதட்டலாகவும், நக்கலாகவும் கேட்டார். பெண்கள் பக்கமிருந்து கிண்டலும், சிரிப்புச் சத்தங்களும் பொங்கின. யாரையும் பார்க்காமல் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தார் கண்பதி தாத்தா. இன்னொரு பக்கம் காந்தியக்காவும் உடகார்ந்திருந்தார்கள். எப்போதும் சிரித்துக் காட்சியளிக்கும் காந்தியக்காவின் முகம் விறைத்துப் போயிருந்தது. “அவளையும் கேளுங்க” என்றார்கள் யாரோ. “காந்தி, நீ என்ன சொல்ற?” என்றார்கள். அந்த இடம் அமைதியானது. “நா இவரயே கல்யாணம் பண்ணிக்குறேன்” என்றார்கள் அமைதியாக. “ஐயோ!” என்று காந்தியக்காவின் புருஷன் தலையிலடித்துக் கொண்டு எங்கோ ஒடினான். அவனைச் ச்மாதானப்படுத்த் சிலர் ஓடினார்கள்.

“கல்லுக் கணக்குல புருஷன் இருக்கான், போயும் போயும் இந்தக் கெழவனைப் புடிச்சிருக்காப் பாருங்க”, “என்ன நெஞ்சழுத்தம் இவளுக்கு!”, ”அப்படி என்னதான் இவரு செஞ்சாராம்?”, “இந்தக் கெழவன் இருக்குற பவுசுல கொமரில்லா கேக்குது”. அவர்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள். வேல் தாத்தாவுக்கு சரியாக காது கேட்காது. பக்கத்திலிருப்பவர்களிடம், “அவன் என்ன சொல்றா?”, “அவ என்ன சொல்றா” என விசாரித்து முடித்து “ச்சீ செருக்கியுள்ள” என ஒரு பாடு தீட்டித் தீர்த்தார்கள். உள்ளே தலையெட்டி,, பொன்னாச்சியப் பார்த்து “ஏளா, ஒந்தம்பியப் பாத்தியா” என்று வயிற்றெரிச்சலைக் கொட்டினார்கள். பொன்னாச்சி தலையிலடித்துக் கொண்டார்கள்.

அதற்குமேல் கூட்டத்துக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. காந்தியக்காவின் வீட்டிற்குள் கண்பதி தாத்தா செல்வதை சிலர் பார்த்திருக்கிறார்கள். பிடித்துக்கொண்டு வந்து இந்தத் திண்ணையில் உட்காரவைத்து ஆள் ஆளாளுக்குப் பேசி தீர்த்தபடி இருந்தார்கள். வேல் தாத்தா கூட்டத்தாரிடம் “முதலூருக்குப் போயி கண்பதியோட பொண்டாட்டியையும், மவ, மருமவன் எல்லோரையும் கூட்டிட்டு வாங்க. இன்னிக்கு ராத்திரி கல்யணாம் பண்ணி வசிருவோம்” என்றார்கள். காரை அமர்த்தி முதலூருக்குப் புறப்பட்டார்கள். எப்படியும் அவர்கள் திரும்பி வருவதற்கு இரவு இரண்டு மணிக்கு மேல் ஆகும் என்றார்கள். சுவாரசியமான அந்தக் காட்சி எப்படி இருக்கும் என அவரவர்கள் விவரித்துக்கொண்டு இருந்தார்கள்..

“போதும்.வீட்டுக்குள்ள வந்து படு” அம்மா என்னை கண்டிப்பான குரலில் சத்தம் போட்டார்கள். மனமில்லையென்றாலும், அதற்கப்புறம் வேறு வழியில்லை. அம்மா, பொன்னாச்சி, இன்னும் சில பெண்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். கண்பதி தாத்தாவுக்கு ஏற்கனவே பல கல்யாணங்கள் இதுபோல் நடந்திருப்பதும், கரட்டுக்காட்டுவிளை ஆச்சி, தனது புருஷன் கண்பதி தாத்தாவோடு சேர்ந்து வாழ்ந்து பல வருஷங்கள் ஆகிவிட்டன என்பதும் அன்றைக்குத்தான் தெரிய வந்தது. ஐந்து பெண்களுக்கு மத்தியில் தன்னோடு ஒரே ஆணாகப் பிறந்த ஆசைத்தம்பியின் செய்கைகளால் துடித்துப் போயிருந்தார்கள் பொன்னாச்சி. தன் அம்மாவை சமாதானப்படுத்திக் கொண்டு இருந்தார்கள் எங்கள் அம்மா.

காலையில் திண்ணை வெறிச்சென்று இருந்தது. கூட்டமும், சத்தமுமாக இருந்த தெரு அமைதியாக இருந்தது. பெண்கள் குழாயடியில் தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்தார்கள். என்ன நடந்தது என்பதை யாரிடமும் கேட்க முடியவில்லை கரட்டுக்காட்டுவிளை ஆச்சியோடு பேசிக்கொண்டே வெற்றிலையிடித்துக்கொண்டு இருந்தார்கள் பொன்னாச்சி. அங்கங்கு பெரியவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து விஷயம் விளங்கியது. இரவில் கரட்டுக்காட்டுவிளை ஆச்சியும், கண்பதி தாத்தாவின் மகளும் வந்திருந்தார்களாம். மண்ணள்ளிப் போட்டார்களாம். விளக்குமாத்தால் கண்பதி தாத்தாவை அடித்தார்களாம்.. கண்பதி தாத்தாவும், காந்தியக்காவும் தங்கள் பழக்கத்தை விட்டுவிடமென்று சொல்லி கூட்டம் கலைந்து இருக்கிறது.

 

ரட்டுக்காட்டுவிளை ஆச்சி அவ்வளவு அமைதியாகவும், லட்சணமாகவும், சின்ன உருவமாகவும் இருப்பார்கள். “என்னப்பூ எப்படியிருக்கே” என்று எங்களை அருகில் அழைத்து உச்சி முகரும்போது உருகிப் போவோம். பொன்னாச்சியும், கரட்டுக்காட்டுவிளை ஆச்சியும் ஒரே ஊர்தான். வேலைகள் எல்லாம் முடித்து சாப்பிட்ட பிறகு  இருவரும் உள்முற்றத்தில் உட்கார்ந்து பேசும் பால்யகாலக் கதைகளை திகட்டாமல் கேட்டுக்கொண்டே இருக்கலாம். தங்களுக்கு அவர் வேண்டவே வேண்டாம் என்று கரட்டுக்காட்டுவிளை ஆச்சியும் அவரது மகளும்  அன்றைக்கு சாயங்காலம் போய்விட்டார்கள்.

நெல் அவிக்க, வீட்டு வேலைகளில் பொன்னாச்சிக்கு ஒத்தாசைகள் செய்ய காந்தியக்கா வரவில்லை அப்புறம். கணபதி தாத்தா குனிந்த தலை நிமிராமல் பக்கத்தில் உள்ள தாரங்கதாரா கெமிக்கல்ஸில் வேலைக்கு போய்வந்து கொண்டு  பொன்னாச்சியின் வீட்டில்யே இருந்தார். பொதுவாகவே யாரோடும் பேசிக்கொள்ளாத அவர் மேலும் ஒடுங்கிப் போயிருந்தார். அவர் உட்கார்ந்திருக்கும் இடத்தின் அருகில் நாங்கள் சென்று “ஓல்டெல்லாம் கோல்டு” என்று  ‘ஓடி விளையாடு தாத்தா’ படத்தில் வரும் பாட்லை சத்தமாய் பாடுவோம். அவரோ கன்னத்தில் கைவைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டு இருப்பார்.

சில மாதங்களில் ஆச்சி வீட்டிற்கு அவரது வரத்து குறைந்து போனது. இடையில் சில நாட்கள் வராமல் “ஒவர் டைம்’ என்றவர், பிறகு வாரக் கணக்கில் வராமல் இருந்தார். என்ன ஏது என்று விசாரித்ததில் ஆத்தூர் அருகே யாரோ ஒரு பெண்ணுடன் வீடு பிடித்து வாழ்ந்து வருவதாக தெரிய வந்திருக்கிறது. எக்கேடும் கெட்டுப் போகட்டும் என விட்டுவிடார்கள். கூடி கூடிப் பேசிக் கிடந்த ஊரும், தெருவும் மறந்து போனது.

 

ருடங்கள் கழித்து, ஆறேழு வயதில் ராஜேஸ்வரி என்னும் ஒரு பெண் குழந்தை, ஐந்து வயதில் நடராஜன் என்னும் ஒரு ஆண் குழந்தையுடன் பொன்னாச்சி வீட்டிற்கு கண்பதி தாத்தா  வந்தார். அப்போது நான் ஹைஸ்கூலில் படித்துக்கொண்டு இருந்தேன். “எவ்வளவு வளந்துட்டான்” என என் கையைப் பிடித்தார். மெல்ல விலக்கிக்கொண்டு நின்றேன். கண்பதி தாத்தா வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாராம். அவருடன் வாழ்ந்த பெண், இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு வேறொருவனுடன் சென்றுவிட்டாளாம். ஆத்திரமும், அழுகையுமாய் இருந்தார்கள் ஆச்சி. ‘அவன வெளியே போகச் சொல்லு’ என  வேல் தாத்தா கத்தினார்கள். கணப்தி தாத்தா தலைகுனிந்து உட்கார்ந்திருந்தார்கள். இரண்டு குழந்தைகளும் அவர் அருகிலேயே நின்றன.

வீட்டு வேலைகளை செய்துகொண்டு, முக்காணியில் இருந்த ரைஸ்மில்லை மேற்பார்வை செய்துகொண்டு ஆச்சி வீட்டிற்கு விசுவாசமானார் கண்பதி தாத்தா. அருகில் உளள் பள்ளியில் குழந்தைகள் படித்தன. ஜிப்பா, வேட்டியெல்லாம் எங்காவது வெளியில் போனால்தான். பண்டிகை, விசேஷங்களின் போது சொந்த பந்தம் என வீடு முழுவதும் நிறைந்திருக்க, கண்பதி தாத்தா வளவுக்குள் போய் மாடுகளுடன் இருப்பார். எங்காவது ஒரு சுவரில் சாய்ந்து முதுகைச் சொறிந்து கொண்டு இருப்பார். கூப்பிட்டால் வந்து நிற்பார். கரட்டுக்காட்டுவிளை ஆச்சி அவரை ஏறெடுத்துக்கூட பார்க்க மாட்டார்கள்.

வேல் தாத்தா இறந்த பிறகு நடந்த ஒரு கோவில் விசேஷத்தின் போது பொன்னாச்சியின் வீட்டில் கூடமாட வேலை செய்யும் இளம்பெண் ஒருத்தி தென்பட்டாள். கல்லூரியில் அடியெடுத்து வைத்திருந்த எனக்கு அந்தப் பெண் அப்படியொரு வனப்பும், இளமையுமாய் தெரிந்தாள். ரைஸ்மில்லில் வேலை பார்க்கிறவளென்றும், இரண்டு மூன்று நாட்கள் வீட்டில் இருப்பாளென்றும் சொன்னார்கள். அவளை அங்கங்கு நின்று பார்ப்பதும், ரசிப்பதுமாய் ஒரு கிறக்கத்தில் அந்த கோயில் விசேஷம் கழிந்தது. அவளது சிரிப்பும் பார்வையும் என்னிடம் தங்கியிருந்தன.

ரைஸ்மில்லிலேயே பெரும்பாலும் தங்கியிருக்க நேர்ந்த கண்பதி தாத்தா அந்தப் பெண்னையும் பிறகு கல்யாணம் பண்ணிக் கொண்டாரென்று யாரோ சொன்னார்கள். ஆச்சரியத்தோடு எரிச்சலும் வந்தது.. “இங்க வேல செய்ய வந்துருக்கும்போதே பாத்தேன். அவ நிக்கிறதும், பாக்குறதும் சரியில்லாமாத்தான் இருந்தது “ என்று ஆச்சி சொன்னார்கள். “ஆமா, ஒங்க தம்பி ஒரு மன்மதக்குஞ்சு, அவதான் மயக்கிட்டா. போங்கம்மா.” என அம்மா சத்தம் போட்டார்கள். அந்த விஷயத்தை யாருமே பெரிதாக  எடுத்துக் கொள்ளவில்லை. அந்தப் பெண்ணுக்கும் குழந்தை பிறந்திருக்கிறது என்பதைக் கேள்விப்பட்டு ஆச்சி  “ ஏளா, ராஜேஸ்வரி ஒனக்கு இன்னொரு தம்பி பொறந்திருக்கனாம்ல” என்று கேலி செய்து கொண்டிருந்தார்கள்.  படிப்பதை நிறுத்தி, வீட்டு வேலைகள் செய்து கொண்டிருந்த பத்துப் பனிரெண்டு வய்தில் ராஜேஸ்வரி, புரிந்தும் புரியாமல் நின்றாள். கைக்குழந்தையோடு ரைஸ்மில் பெண்ணும் கணபதித் தாத்தாவை விட்டு இன்னொருவனுடன் போய்விடத்தான் செய்தாள்.

 

ரைஸ்மில் விற்கப்பட்டது.  ராஜேஸ்வரிக்கு திருமணமாகி  வேறொரு ஊருக்குச் சென்று விட்டாள். நடாஜன் வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டான். நான், அண்ணன் தம்பி வெவ்வேறு ஊர்கள் என்றானோம். என் தங்கை அம்பிகாவுக்கும், அவள் காதலித்த  மாமன் மகன் மோகனுக்கும்  திருமண்மாகி பொன்னாச்சி வீட்டிலேயே வசித்து  வந்தார்கள்.  ஆச்சிக்கு உடம்பு சரியில்லாமல் போனது. காலங்கள் ஒடிக்கொண்டு இருந்தன.

ஆச்சியின் கடைசி நேரங்களில், “அக்கா, அக்கா” என கண்பதி தாத்தா பரிதவித்துக் கொண்டிருந்தார். அவரது குரலில் இளகியிருந்த பாசம் வேதனை நிறைந்ததாயிருந்தது. கரட்டுக்காட்டுவிளையாச்சியும், அவரது மகளும் அதற்கப்புறம் கூட கண்பதி தாத்தாவை ஊருக்கு அழைத்துச் செல்லவில்லை. ‘என் அக்கா வாழ்ந்த வீட்டிலேயே நானும் இருந்து செத்துப் போகிறேன்” என்று கண்பதி தாத்தா அங்கேயே இருந்துகொண்டார். அம்பிகாவிடம் சோறு சாப்பிட்டுக்கொண்டு, முடிந்த வீட்டு வேலைகள் செய்துகொண்டு, வீட்டின் எதாவது ஒரு மூலையில் தன்னை சாத்திக்கொண்டு இருப்பார். ஆட்களும், பேர்களும் புழங்கி அடங்கியிருந்த வீட்டில், யாரோ பேசுவதைக் கேட்பது போல சுவரில் காதை வைத்து கிடப்பார்.  எப்போதாவது தனது மகள் ராஜேஸ்வ்ரியைச் சென்று பார்த்து ஒன்றிரண்டு நாட்களில் திரும்பி வந்துவிடுவார்.

ஒரு மத்தியானம் கடைக்கு எதோ சாமான் வாங்கப் போனவர் பின்னால் ஓடிவந்த மாடு அவரது இடுப்புப் பகுதியில் முட்டித் தள்ளியிருக்கிறது.  எலும்பு முறிந்து ஆஸ்பத்திரியில் இருநது வந்தவரால் எழுந்து நடக்க முடியவில்லை. வயதும் எண்பது கிட்ட இருக்கும். க்ரட்டுக்காட்டுவிளை ஆச்சி அப்போதும் வந்து பார்க்கவில்லை. அம்பிகாதான் கவனித்துக் கொண்டிருக்கிறாள்.. வளவில் ஒரு கயிற்றுக் கட்டிலிலேயே வாழ்க்கை அவருக்கு சுருங்கியிருந்தது.  மல்லாந்து படுத்துக் கிடந்தவர் முகத்தில் கண்ணீர் வழிந்துகொண்டு இருந்திருக்கிறது... சில மாதங்கள் அப்படியே இருந்தவர் ஒருநாள் இறந்து போயிருக்கிறார்.  உடல் அவரது சொந்த ஊருக்குச் சென்றிருக்கிறது.

அவர் எப்போது இறந்தார் என்பது எனக்குத் தெரியாது.. அம்பிகாதான் பிறகு ஒருநாள் எல்லாவற்றையும், அவள் வீட்டிற்கு சென்றிருந்தபோது,  குரல் தழுதழுக்க சொல்லிக்கொண்டு இருந்தாள். “ராஜேஸ்வரி மகளுக்கு ஒரு பொம்மை வாங்கி வைத்திருந்திருக்கிறார், அவர் பெட்டியிலிருந்தது”  என்று சொல்லும்போது வாய்விட்டு அழுதாள்.

 

நாற்ப்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கண்பதி என்கிற ஒரு மனிதரைப் பற்றிய எனது நினைவுகளின் தொகுப்பு. இது. கரட்டுக்காட்டுவிளையாச்சிக்கு மாறாமல் தெரிந்த அவர் எனக்கு ஒவ்வொரு  காலத்திலும் வேறு வேறு மனிதராகவே தெரிந்திருக்கிறார் என்பது எழுதும்போது புரிகிறது.. கிண்டல், கேலி, கோபம், வெறுப்பு படிந்த ஒரு மனிதர் இத்தனை காலத்துக்குப் பிற்கு ஒரு புதிராகத் தெரிகிறார்.

பெண்களைச் சீண்டுவது, தொந்தரவு செய்வது என்றெல்லாம் யாரும் சொல்லி அவரைப்பற்றி கேள்விப்பட்டதில்லை. மதம் மாறி, ஒரு முஸ்லீம் பெண்ணை மணந்து கொண்டது உட்பட இருயதுக்கும் மேலான திருமணங்கள் செய்து வாழ்ந்திருக்கிறார். அந்தப் பெண்களும் இவரைவிட்டு இன்னொருவருடன் வாழச் சென்றிருக்கிறார்கள். பிறகு என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. ஆண்கள் யாருடனும் இயல்பாக பேசாத  மனிதர் அந்தப் பெண்களோடு என்ன பேசியிருப்பார்! கலகலப்பாக சிரித்தே பார்த்தறியாத ஒரு மனிதரிடம் அந்த பெண்கள் எப்படி பழகியிருப்பார்கள்!  பொன்னாச்சி,  கரட்டுக்காட்டுவிளையாச்சியும் அவ்வளவு பால்யகாலச் சினேகிதிகளாயிருந்தும் கண்பதி தாத்தா மீது இருவரும் கொண்டிருந்த பார்வைகள் முற்றிலும் மாறிப் போனதற்கு நம் குடும்ப அமைப்புகள் மட்டும்தானா காரணம்?  காந்தியக்காவின் புருஷன் பிறகு என்ன ஆகியிருபபான்?

யோசித்துக் கொண்டே இருக்கிறேன்.. தன் அண்னனின் மனைவி ஜமீலா, அந்த நாடோடி தானியாரின் பாடலில் கரைந்து, அவனோடு கலந்து ஸ்டெப்பி புல்வெளி தாண்டி ஓடிய சித்திரத்தை  சிறுவனாக மனதில் இருத்தி, பிறகு சிங்கிஸ் ஐத்மத்தாவ் எழுதிய நாவல் வாழ்க்கையை எவ்வளவு அழகாக்குகிறது. இப்போது என்னிடம் சில சித்திரங்கள் இருக்கின்றன.

கருத்துகள்

20 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. கணபதி தாத்தாவின் மனைவி, கரட்டுகாட்டுவிளை ஆச்சி, தாத்தா இப்படி அலைந்ததற்கும், அவர்கள் வீட்டுக்கு வராததற்கும், பொன்னாச்சியும் காரணம் என்று குறை கூறுவார்கள். தான்(மனைவி) சண்டை போட்டு விரட்டும் போது அக்கா அடைக்கலம் கொடுத்திராவிட்டால் அவர் தன்னிடம் வந்திருப்பாரென்று கூறுவார்கள்..
    எனக்கும் அது சரியெனவே தோன்றும்.

    பதிலளிநீக்கு
  2. அந்த கால வெள்ளந்தி மனிதர்களை பற்றி நினைக்கையிலேயே மனது ஜில்லென்று உணர்கிறது

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப நாளைக்கப்புறம் நல்ல கதை ஒன்று படித்த நிறைவு.வாழ்க்கைதான் கதைகளை விடவும் சுவையும் மர்மங்களும் நிறைந்தது என்பது எவ்வளவு உண்மை.

    பதிலளிநீக்கு
  4. கணபதி தாத்தா நல்லவரா?கெட்டவரா?என்றால்
    கெட்டவர் என்றுதான் சொல்லத் தோன்றும்.
    ஆனால் அபூர்வமான படைப்பு.
    வித்தியாசமான மனிதர்.

    நினைவுகளை கிளறும் பதிவு.

    பதிலளிநீக்கு
  5. தமிழ்ச்செல்வன்!

    உங்கள் பின்னூட்டம் எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது. ரொம்ப நாளாக இதை எழுத யோசித்துக் கொண்டு இருந்தேன். எனக்குத் தெரிந்து, ஆண், பெண் உறவுகள் குறித்து தமிழில் அக்கறையோடு எழுதுகிற, சிந்திக்கிற மிகச்சிலரில் நீங்களும் ஒருவர். உங்களிடமிருந்து கிடைத்த இந்த வார்த்தைகள், இதன் நீட்சியை விரைவில் எழுத வைக்கும். நன்றி.

    பதிலளிநீக்கு
  6. கணபதி தாத்தா மனதில் நிற்கிறார்.

    ச.த சொன்னதுபோல வாழ்க்கை கதைகளை விடவும் சுவையும், மர்மங்களும் நிறைந்ததுதான் இல்லையா அண்ணா.

    பதிலளிநீக்கு
  7. கதையை நான் முழுவதுமாக படிக்க வில்லை. ஆனால் எனக்கு பிடித்த ஊர்களான ஆத்தூர், கொளுவைனல்லூர், வரண்டியவேல், முதலூர், கரடு காடு விளை எல்லாம் கண் முன்னே வந்து விட்டது.

    முதலூர் ஜெபமணி பஸ் , ராம் பாப்புலர் எல்லாம் கண் முன்னே வந்து சென்றது.

    மிகுந்த நன்றிகள்

    பதிலளிநீக்கு
  8. இப்படியும் மனிதரா என நம்பமுடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை

    பதிலளிநீக்கு
  9. சொந்த பந்தங்களின் வாழ்கையை நிறை குறை இருப்பினும், அதை பொது இடங்களில் பகிரங்கப் படுத்தும் போது முன் பின் யோசிப்பது நல்லது. அவரது வாரிசுகள் பிற்காலத்தில் இதை படிக்கும் போது வருத்தப்பட நேரிடலாம்.

    முதலில் படித்து விட்டு பின்னுட்டம் விடுவது சரியல்ல என்று நினைத்தேன். நேரடி பெயர் மற்றும் உறவை தவிர்த்திருக்கலாம் என்று நினைக்கிறேன். தவறாக நினைக்காதீர்கள்

    பதிலளிநீக்கு
  10. மாது,

    பதிவுலகம் வந்த பிறகு,

    "நீ யாரையாவது பார்த்து பொறாமப் பட்டுருக்கியாடா?" என்று யாராவது கேட்டால், ஆம் என்பேன் மாது.

    ஒன்று நீர். இன்னொன்று காமு.

    பதிலளிநீக்கு
  11. அம்பிகா!
    நன்றி.

    விநாயக முருகன்!
    மிக்க நன்றி.

    விஜயராஜ்!
    நன்றி.

    ஈரோடு கதிர்!
    நம்புங்கள்.. :-)))))

    சே.குமார்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  12. ராம்ஜி யாஹூ!
    படியுங்கள் அய்யா.

    செ.சரவணக்குமார்!
    அன்புத்தம்பி, நன்றி.

    சேது!
    உங்கள் எச்சரிக்கைக்கு மிக்க நன்றி.

    பா.ரா!
    என்ன மக்கா இது. நாங்கள் உங்கள் எழுத்துக்களில் லயித்துக் கிடக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  13. Hello Mr mathavaraj
    You have nicely written about village culture and daytoday life. I think this is partly happened incidents and partly imaginary. But this is nice. Always in some villages in our districts Sp Nellai dist very old people are playing these types of playboy activities. Young boys are away from their natives they think rationally and morally. In my early life though i was chased by more number of girls i was traditionally and i didnt opt for any love marriage because i always think about my parents and only sister.You often think about ur sister and give names for some characters. Nice
    K.Subramanian

    பதிலளிநீக்கு
  14. மிகச்சிறந்த சிறுகதை, அவ்வப்போது துணுக்குத் துணுக்காய் கேள்விப்பட்ட தாத்தாவை மொத்தமாய் வரைந்து தந்திருக்கிறாய் தோழனே.இன்னும் அந்த செங்குறுமணல் 'தேரி' என்று சொல்லுவாயே அது அடர்த்தியாய் நெருங்கி வருகிறது.மீண்டும் மிண்டும் அல்லரின் சத்தம்,பதினியின் வாசம்,தெக்காட்டு மொழி நினைவுகளைச் சுற்றிக்கொண்டு வருகிறது தோழா.தவிர்க்கமுடியாத கண்ணீரோடு அம்மாவின் நினைவுகளும்.

    பதிலளிநீக்கு
  15. இந்த உண்மை சம்பவத்தில், உங்கள் மாமாவைப் பற்றி (பட்டுராஜன்))ஒன்றும் சொல்லவில்லை?? ஏன்? மறந்து விட்டீர்களா?

    அருமையான பதிவு!!!

    பதிலளிநீக்கு
  16. //ஈரோடு கதிர் said...
    இப்படியும் மனிதரா என நம்பமுடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை
    //எனக்கும் தான்!

    //அவளது சிரிப்பும் பார்வையும் என்னிடம் தங்கியிருந்தன. ரைஸ்மில்லிலேயே பெரும்பாலும் தங்கியிருக்க நேர்ந்த கண்பதி தாத்தா அந்தப் பெண்னையும் பிறகு கல்யாணம் பண்ணிக் கொண்டாரென்று யாரோ சொன்னார்கள். ஆச்சரியத்தோடு எரிச்சலும் வந்தது.. //
    அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது.

    பதிலளிநீக்கு
  17. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ... என்ற உங்கள் குறுக்கீடு மட்டும் இல்லையென்றால் இது ஒரு அருமையான படைப்பு ... அல்லது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ... என்பதை படைப்பினூடே புகுந்து சொல்லியிருக்கலாம் ... எனினும் எனக்கு இது பிடித்தது ...

    பதிலளிநீக்கு
  18. கே.எஸ்.ம்ணியன்!
    மிக்க நன்றி.


    காமராஜ்!
    நன்றி, தோழனே!

    பொன்ராஜ்!
    :-))))


    வேலு!
    நன்றி.


    தீபா!
    :-)))))


    நந்தா!
    நீங்கள் சொல்வது சரிதான். ஒரு படைப்பாக திட்டமிட்டும் எழுதவில்லை.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!