-->

முன்பக்கம் , , � வானில் பறந்த சுண்டெலி!

வானில் பறந்த சுண்டெலி!

bird and rat

ரு சிறிய கடற்பறவை நகரைச் சுற்றிப் பார்க்க விரும்பி ப்றந்து சென்றது. அப்போது ஒரு சுண்டெலியைப் பார்த்தது. அருகில் சென்று “உன்னுடைய சிறகுகள் எங்கே? அவற்றுக்கு என்னவாயிற்று?”  என்று கேட்டது.

சுண்டெலி கடற்பறவையை வியப்போடு பார்த்தது. அது பேசிய மொழி சுண்டெலிக்குப் புரியவில்லை. கடற்பறவையின் சிறகுகளைப் பார்த்து ‘இது என்னவாக இருக்கும்’ என்று எண்ணியது.

கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்காததால், கடற்பறவை சுண்டெலியின் சிறகுகளை யாரோ ஒரு அசுரன் பிய்த்துப் போட்டிருக்கலாம் அல்லது எதாவது ஒரு மிருகம் பிடுங்கிக்கொண்டு போயிருக்கலாம் என நினைத்து பரிதாபப்பட்டது.

சுண்டெலிக்கு எதாவது உதவி செய்ய வேண்டுமென எண்ணியது கடற்பறவை. அப்படியே சுண்டெலியை தன் அலகுகளில் கவ்விக்கொண்டு வானில் பறக்க ஆரம்பித்தது.

வானத்திலிருந்து பூமியைப் பார்த்த சுண்டெலிக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. இப்படியொரு அழகான காட்சியைக் காணாத சுண்டெலி வானத்திலிருந்து கீழே வருவதற்கு விரும்பவில்லை. இருந்தாலும் என்ன செய்வது...?

சிறிது நேரம் நகரைச் சுற்றிய கடற்பறவை சுண்டெலியை அதே இடத்தில் இறக்கிவிட்டு சென்று விட்டது. தான் வானத்தில் பறந்த சுகமான அனுபவத்தையும், பூமியின் அழகையும் எண்ணியெண்ணி மகிழ்ச்சி அடைந்தது சுண்டெலி.

நாட்கள் செல்லச் செல்ல சுண்டெலிக்கு மனதினுள் சந்தேகம் வரத் தொடங்கியது. அற்புதமான அந்த அனுபவம் தன்னுடைய கனவுதான் என நினைத்துக் கொண்டது.

 

பி.கு: நேற்று செம்மலரில் இந்த சிறுவர் கதையைப் படித்தேன். யார் எழுதியது எனக் குறிப்பிடப்படவில்லை. இந்தக் கதையே ஒரு அற்புதமான வாசிப்பு அனுபவமாக இருந்தது. கதை பற்றிச் சொல்வதற்கு நிறையத் தோன்றுகிறது. முதலில் நீங்கள் சொல்லுங்களேன்.

 

Related Posts with Thumbnails

12 comments:

 1. பாத்திரங்கள் தான் சிறுவர்களுக்கு...கதை என்னவோ பெரியவர்களுக்கு....

  ReplyDelete
 2. சுண்டெலிக்கு மனச்சிதைவு நோயா இருக்கும்! இதே நோய் ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும்(மடிப்பு அம்சா மாதிரி ஒரு பேரு) இருந்தது, அவரது கற்பனையில் பார்த்ததே காலி உருவம்!

  குழந்தைகளுக்கு உளவியல் சொல்லி தர முனைந்துள்ளார்கள், பல விசயங்கள் கற்பனையாக கூட இருக்கலாம், இல்லுயூசனை நம்பாதீர்கள் என்று!

  குழந்தைகளுக்கு மட்டுமல்ல தல, சில நேரங்களில் பெரிவர்களும் கண்மூடிதனமாக எதையாவது நம்பி கொண்டு தான் இருக்கிறோம்!

  ReplyDelete
 3. அன்புள்ள மாதவராஜ், வணக்கம். உங்களின் இந்த உடனடிச் செயல்பாடு என்னை வியக்கவைக்கிறது. மகிழ்ச்சி. வானில் பறந்த சுண்டெலி என்ற இந்த சிறுவர் கதையை எழுதியவர் கலா மணியன். இவர் ராஜபாளையத்தைச்சேர்ந்தவர். புதிய எழுத்தாளர். நல்ல நண்பர். பத்திரிகையாளர். தற்போது தீக்கதிரில் பணியாற்றுகிறார். அவர் பெயர் எப்படியோ விடுபட்டுவிட்டது. அவருக்கும், இந்தக்கதைக்கும் பெயர் வைத்ததே நான்தான்.
  - உங்கள்,
  சோழ. நாகராஜன்.

  ReplyDelete
 4. நல்ல கதை. தன்னை போல பிறரை நினை -கருத்தா?

  ReplyDelete
 5. இக்கதை, எனக்கு ஓர் அற்புதமான கவிதை அனுபவத்தைத் தருகிறது. குழந்தை இலக்கியம், தமிழில் அவ்வளவாக கருத்தில் கொள்ளப்படாத ஓரிடமாக இருக்கிறது. என் சிறு வயதில் நான் படித்த எந்தக் கதையும் இது மாதிரியான கற்பனை சுதந்திரத்தை வழங்கும் வண்ணம் இருந்ததில்லை. காட்சிப்படுத்தும் தன்மை அழகுடன் அமைந்திருக்கிறது.

  தத்துவார்த்தமான கருவைக் கொண்டிருக்கிறது இக்கதை. எலியின் உலகமும், ஒரு கடற்பறவையின் உலகமும் ஒன்றென இருப்பதற்கு எந்த சாத்தியமுமில்லை. ஆனால், தன்னுடையதைத் தவிர்த்த இன்னொரு உலகத்தின் இருப்பை அவை ஏற்றுக்கொள்ளத் தயாராகவும் இல்லை. பெரும்பாலான மனிதர்களின் போக்கும் இதுதான் இல்லையா?

  -ப்ரியமுடன்
  சேரல்

  ReplyDelete
 6. யோசித்து பார்தேன்,என் மனதில் தோன்றியவற்றை எழுதுகிறேன்...

  பள்ளிப் பருவத்திலிருந்து கல்லூரி பருவம் வரை, அதையும் தாண்டி,அந்த காலகட்டங்களில் நடைப்பெற்ற சில முக்கிய நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தால், அன்று வானத்தில் பறந்தது போல் இருந்தது, ஆனால் இன்று அது கனவுப் போல் தெரிகிறது.

  அருமையான கதை.

  ReplyDelete
 7. இன்னொரு கருத்தையும் சொல்லலாம்!

  எதிரி நமக்கு உதவி செய்வதால் தெரிவது நிச்சயம் கனவு தான், அது நிலைக்காது, என்றாவது இரையாகக்கூடும் என்பது அது!

  கடற்பறவைக்கு எலி உணவாகமல் பார்த்து கொள்ளுங்கள் தல!

  ReplyDelete
 8. என்றைக்கோ பார்த்த கட்சிகள் மீண்டும் காண கிடைக்காத போது, நாளடைவில் கனவு போலத்தான் தோன்றுகிறது.குறிப்பாக என்னுடைய பால்யகால நினைவுகள்.சில நேரங்களில் கனவுகள் கூட சுகமாதானிருக்கிறது,

  அருமையான கதை நன்றி !!

  ReplyDelete
 9. தன்னைப்போல் பிறரையென்னும் நற்குணம் அந்த கடற்பறவைக்கு இருப்பதாக எண்ணுகிறேன்...

  ReplyDelete
 10. \\பள்ளிப் பருவத்திலிருந்து கல்லூரி பருவம் வரை, அதையும் தாண்டி,அந்த காலகட்டங்களில் நடைப்பெற்ற சில முக்கிய நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தால், அன்று வானத்தில் பறந்தது போல் இருந்தது, ஆனால் இன்று அது கனவுப் போல் தெரிகிறது.\\
  பொன்ராஜ் கூறுவது போல,
  நனவாக, சந்தோஷமாக தெரிந்த பல விஷயங்கள் காலப் போக்கில், கனவாக, ஏக்கங்களாக மாறிவிடுகின்றன. ஆனால் இது நிச்சயம் சிறுவர்களுக்கான கதை மாத்திரமல்ல.
  நல்ல பகிர்வு.

  ReplyDelete
 11. இயற்கையை அழித்து இயந்திரமயமாகி போன பூமியில்,இனியவை எல்லாமே கனவாகத்தான் போய் விடுகின்றது.நான் சிறுவயதில் பார்த்து ரசித்து வளர்ந்த பட்டாம்பூச்சிகளும் தும்பிகளும் என் குழந்தைக்கு இன்று காணக்கிடைக்காத ஒரு அபூர்வ விஷயம்.ஆனால் கதை குழந்தைகளுக்கானது என்பதால் அது சொல்லும் பாடம் இதுவாக இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.சுண்டெலி வானத்தில் பறந்தது என்பதே அவர்களுக்கு குதூகலத்தையும்,எண்ணற்ற கற்பனைகளையும் கொடுக்கும் ஒன்றாக இருக்கலாம்.

  ReplyDelete
 12. நல்ல பகிர்வு நண்பரே..

  எனக்கு ஜென் கதையொன்று நினைவுக்கு வந்தது..

  http://gunathamizh.blogspot.com/2009/04/blog-post_1037.html

  ReplyDelete