கொஞ்சம் ஆங்கிலம், இரண்டு சிரட்டைகள், ஒரு முட்டை

சின்ன வயதில் எங்கள் பள்ளியில் பெரும்பாலும் எனக்கு பெண் வேடம்தான். ஆண்டுவிழா, சுதந்திரவிழா கொண்டாட்டங்களில் ஆடுவதற்கு ஜெயராமன் வாத்தியார் அழைத்துக் கொள்வார். கூச்சம் இருந்தாலும், அதுகுறித்து ஒரு பெருமையும் உள்ளுக்குள் இருந்தது.  ஆறுமுகனேரி இந்து நடுநிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பிலிருந்து மூன்று ஆண்டுகள் தொடர்ந்து இது நடந்தேறியது. எட்டாம் வகுப்பில் பெண்வேடம் போடக்கூடாது என்று தீர்மானமாக இருந்தேன். நாம் இனிமேல் எல்லாம் பெரிய மனிதன் என்ற எண்ணம் குடியேறியிருந்தது.

அந்த வருடமும் அழைக்கப்பட்டேன். வேண்டாம் எனச் சொல்லிப் பார்த்தேன். ஜெயராமன் வாத்தியார் “சும்மா இருல..” என்றே மிக அலட்சியமாக அதை உதறிவிட்டு, “ஒனக்கு என்ன வேடம் தெரியுமால.. டெஸ்டிமோனா!” என்று அவரே ஆச்சரியப்பட்டு என்னைப் பார்த்தார். யாருக்கும் கிடைக்காத பாக்கியம் எனக்கு கிடைத்த மாதிரி. யார் அந்த டெஸ்டிமோனா என்று தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை. “சார்.. என்னய விட்ருங்க..” என்றேன். “ஏலே..நீதாம் பொம்பளப்பிள்ளை மாதிரி அழகாயிருக்கே.. இங்கிலீஷும் நல்லாப் பேசுற” என்று தோளில் தட்டினார். விழ ஆரம்பித்தேன். “ரத்தத்திலகம் படம் பாத்துருக்கியா... அதுல சிவாஜி ஒத்தல்லாவாக வருவாரே..” என்று சொல்லிக்கொண்டே போனார். தோள் மீது அவர் வைத்திருந்த கைகளைத் தட்டிவிட முடியவில்லை.

ஒரு வாரம் மொட்டை மாடியில் நடந்து நடந்து ஹெட்மாஸ்டர் எழுதிக் கொடுத்திருந்த வசனங்களை சொல்லிக் கொண்டிருந்தேன். பரீட்சைக்குக் கூட அப்படி படித்ததில்லை. மகன் ஆங்கிலம் பேசும் அழகைக் கண்டு அம்மா காப்பியெலாம் மாடிக்குக் கொண்டு வந்து தந்தார்கள். வசனங்கள் எனக்குக் கம்மிதான். விஸ்வநாதனுக்குத்தான் அதிகம். ஒத்தல்லோ அவன். மூலக்கரையிலிருந்து வந்து படித்துக் கொண்டிருந்தான். என்னைவிட குள்ளமாகவும், கருப்பாகவும் இருப்பான். ஆங்கிலம் அழகாய் பேசுவான். ஒத்திகை பார்க்கும் முன்னாலேயே வகுப்பில் “மை லவ்வர், மை லவ்வர்” என்று எல்லோரிடமும் சொல்ல ஆரம்பித்து விட்டான். கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. ஜெயராமன் வாத்தியாரிடம் போய் விஸ்வநாதன் கிண்டல் பண்ணுவதாகச் சொல்லி, நடிக்க மாட்டேன் என்றேன். அவர் அவனை சிரித்துக்கொண்டே அதட்டி, என்னையும் பார்த்து சிரித்து “சரி. விடுல” என்றார். இதற்கிடையில் ஹெட்மாஸ்டர் வசன உச்சரிப்புகளையும் சரி செய்து கொண்டிருந்தார்.

ஒத்திகையின் போதுதான் ஒரளவுக்கு என்ன நடக்கப் போகிறது என்பது புலப்பட்டது. நான் படுத்துக்கொண்டிருப்பேன். விஸ்வநாதன் கையில் ரோஜோவோடு உள்ளே நுழைந்து, காதல் வசனங்களைப் பேசி, என்னை முத்தமிடுவான். உதடு அருகே உதடு கொண்டு வருவான். அவ்வளவுதான். அப்புறம் நான் எழுந்து பேச வேண்டும். அவனும் பேசுவான். கடைசியில் கத்தியால் என்னைக் குத்திக் கொன்று விட்டு கதறுவான். எல்லோரும் ஒத்தல்லோவாக விஸ்வநாதன் சிறப்பாக நடிப்பதாகச் சொன்னார்கள். என்னையும் சொன்னார்கள். வீட்டில் என்னை டெஸ்டிமோனா என்று அண்ணன்களும், தங்கையும் அழைக்க ஆரம்பித்தார்கள்.

ஆண்டுவிழா அன்று மதியத்திற்கு மேலேயே என்னை வரச் சொன்னார்கள். திருச்செந்தூரிலிருந்து மேக்கப் போட ஒருவர் வந்திருந்தார். வயதானவர். மூடிய அறைக்குள் அவரும் நானும் மட்டுமே இருந்தோம். பேசிக்கொண்டிருக்கும் போது யார் பையன், பேரன் என எல்லாம் விசாரித்து, “நீ ஜோதி பையனா!” என்று ஆச்சரியமாகக் கேட்டார். ஆமாம் என்றேன். “ம்... ஒங்கம்மாவுக்கு சின்ன வயசுல நான் கிருஷ்ணர் வேடம் போட்டிருக்கேன்” என்று முகத்தில் பவுடரை எதிலோ குழைத்து அள்ளிப் பூசினார். இதற்கு முன்னால் பெண்வேடம் போட்ட போதெல்லாம் இந்த மாதிரியெல்லாம் இல்லை. பாவாடைத் தாவணி கொண்டு போக வேண்டும். சடை, ஒட்டுக்கம்மல் எல்லாம் போட்டு எளிதாக பெண்ணாகி விடுவேன்.

சடை போடாத முடியாகக் கொண்டு வந்து தலையில் வைத்து கிளிப்களை குத்தினார். அப்புறம் அவர் பையிலிருந்து இரண்டு சிரட்டைகளை எடுத்து, அதில் கட்டியிருந்த கயிறுகளைச் சரி செய்தார். என்னச் செய்யப் போகிறார் என்பது புரிந்து, வெட்கத்திலும், கூச்சத்திலும் தத்தளித்தேன். எந்த இடத்தில் வைப்பது என கைகளை என் மார்பருகே கொண்டு வந்து கணக்கு வேறு பார்த்தார். ஐயோ என்றிருந்தது. அப்புறம் வைத்துக் கட்டினார். அதன் மீது ஒரு பிராவையும் அணிய வைத்தார். என் மார்பு என்னவோ போலிருந்தது. சம்பந்தமில்லாமல் துருத்திக்கொண்டிருந்தது. சிரட்டைகள் வேறு தசைகளை அழுத்தின. நாக்கெல்லாம் வறண்டு போனது. என் நிலமை புரிந்திருக்க வேண்டும்.

“இப்படியேவா இருக்கப் போற.. இன்னும் கொஞ்ச நேரந்தான்” என்றார். கண்ணாடியில் என்னைப் பார்க்க வேண்டும் போலவும் இருந்தது. தள்ளி முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று இருந்தாலும், அந்த மனிதர் என்ன நினைப்பாரோ என்று அடக்கிக் கொண்டேன்.

பிறகு முட்டை ஒன்றை மிக கவனமாக எடுத்தார். அதுவும் எதற்கு என்று புரிந்தது. ஜெயராமன் வாத்தியார் சொல்லியிருந்தார். முட்டையில் சிறு துவாரம் போடப்பட்டு உள்ளிருந்து மஞ்சள் கரு, வெள்ளைக்கரு உறிஞ்செடுத்துவிட்டு, அதற்குள் சிவப்புச் சாயத்தை நிரப்பியிருந்தார்கள். வயிற்றின் ஓரத்தில் மெல்லிய துணியை உடம்போடு கட்டப்பட்டது. ஒத்தல்லோ கத்தியால் குத்தியதும், முட்டையில் கை வைத்து அழுத்தி உடைத்து ரத்தத்தை வரவழைக்க வேண்டும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலே மிக லாவகமாக அந்த பஞ்சு போன்ற கவுன் அணிந்தேன். ஜன்னலில் இருந்து நான்கைந்து பையன்களின் சிரிப்புச் சத்தம். திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். என் வகுப்பு மாணவர்கள். சாதாரண காலங்களிலேயே என்னை கிண்டல் செய்யும் எங்கள் தெரு துஷ்டன் முத்துராமனும் இருந்தான். அவமானமாய் இருந்தது. மேக்கப் போட்டுக் கொண்டிருந்தவர் “ச்சீ பசங்களா” என்று விரட்டினார். ஜன்னலை மூடினார்.

“ஏலேச் சிரட்டை” என்று கத்திக் கொண்டே ஓடினார்கள். செத்தேன். உடம்பில் எந்த ஜீவனும் இல்லாதது போலாகி விட்டேன். வெளியே ஸ்பீக்கர் சத்தம் கேட்க ஆரம்பித்தது. நாடகம் ஆரம்பிக்க இன்னும் மூன்று மணி நேரத்துக்கும் மேலாகும் என்றார்கள். தலைகாட்டவே இல்லை. அம்மா தேடி வந்து காபி தந்து, என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். அழுகை வரும் போலிருந்தது. இடையில் ஜெயராமன் வாத்தியார், ஹெட்மாஸ்டர் எல்லோரும் வந்து வந்து பார்த்து விட்டுப் போனார்கள். அப்புறம் விஸ்வநாதனும் வந்து பார்த்தான். மேக்கப் போட்டு ஜாக்‌ஷன் துரை போலிருந்தான். “ஹலோ மை லவ்வர்” என்றான். ச்சீ என்றேன். “ஏன் கோபம் மை டியர்” என்றான். நான் பேசாமல் முறைத்தேன். பக்கத்தில் வந்தான். “இதென்ன மாது” என்று கையை நீட்டினான். “ச்சீ” என்று திரும்பிக் கொண்டேன். போய்விட்டான்.

அவன் பாட்டுக்கு வெளியே நடமாடிக் கொண்டிருந்தான். என் மார்பை நான் பார்த்துக் கொண்டு அமைதியாய் அங்கேயே இருந்தேன்.

“அடுத்து நம்ம நாடகம். ரெடியாகு” என்று ஜெயராமன் வாத்தியார் அழைத்தார். அதுவரை இருந்த களைப்பு போய் பயம் வந்தது. எழுந்து கவுனை சரி செய்தேன்.சிரட்டைகள் கொஞ்சம் கீழே இறங்கிய மாதிரி உணர்ந்தேன். கலங்கினேன். தூக்கி வைத்து, கவுனை கீழே இறக்கி இறுக்கமாக்கிக் கொண்டேன். முட்டையையும் பதமாக தொட்டுப் பார்த்துக் கொண்டேன். “கொஞ்சம் இரு” என்று மேக்கப் போட்டவர் அருகில் வந்து உதட்டில் லிப்ஸ்டிக் பூசினார். எதோ பூச்சி உதட்டில் ஒட்டிக்கொண்டது போல விறுவிறுவென  வந்தது. கையை உதட்டருகே கொண்டு போய் தொட்டுப் பார்த்தேன். “ம்.. எதுக்குத் தொடுறலே” என்று சத்தம் போட்டார்.

விசில் சத்தம் கேட்டது. திரை இறக்கி விட்டார்கள். மேடைக்குச் சென்றேன். உள்ளே நான் படுத்திருப்பதற்கு இரண்டு பெஞ்சை சேர்த்துப் போட்டு போர்வை விரித்தார்கள். தலையணை வைத்தார்கள். விஸ்வநாதன் ஒரு மூலையில் நின்று வசனத்தைச் சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்தான். இடையிடையே என் மார்பை வேறு பார்த்து சிரித்துக் கொண்டான். எப்போது இந்த நாடகம் முடிந்து எல்லாவற்றையும் கழற்றி எறிவோம் என்றிருந்தது. ஜெயராமன் வாத்தியார், வசனம் எழுதப்பட்ட காகிதங்களோடு மேடையின் பக்கவாட்டில் போய் நின்று கொண்டு “மாது ம்..படு” என்றார். சிரட்டைகள் சரியாக இருக்கின்றனவா என்று ஒருதரம் தொட்டுப் பார்த்துக்கொண்டு அலுங்காமல், குலுங்காமல் படுத்துக் கொண்டேன்.

விசில் ஊதப்பட்டது. திரை விலக்கப்படவும் கணகளை மூடிக்கொண்டேன். ”ஷேக்ஸ்பியரின் அற்புதமான நாடகம் இது...” என்று ஜெயராமன் வாத்தியார் நாட்கம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். வெளியே கூட்டத்தின் கசகச கேட்டது. “இதோ ஒத்தல்லோ டெஸ்டிமோனாவைப் பார்க்க கடைசி முறையாக வருகிறான்” என்று முடிக்கவும், ஆரவாரமானது. விஸ்வநாதன் மேடைக்குள் ரோஜாவோடு நுழைந்து விட்டான் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. வசனங்களை உருக்கமாக பேச ஆரம்பித்தான். மெல்ல மெல்ல அவனது குரல் என்ன நோக்கி வர ஆரம்பித்தது. “ஏய்... சிரட்டை..” என்று முத்துராமன் குரல் கேட்டது. பெரும் சிரிப்பு எழுந்தது. ‘ஐயோ, மேடைக்கு முன்னாலேயே வந்து உட்கார்ந்திருக்கிறானே’ என்று படபடப்பாய் இருந்தது. என்னவெல்லாம் செய்யப் போகிறானோ என்று நினைத்ததும்,  இப்படியே எழுந்து ஓடிவிடலாமா என்றும் தோன்றியது.

விஸ்வநாதன் குரல் அருகில் கேட்டது. முத்தம் கொடுக்கப் போகிறான் என்று தெரிந்து கொள்வதற்குள், அவனது மூச்சுக்காற்று என் முகத்தில் விழுந்தது. உதடுகளில் ஈரமான கனத்தை உணர்ந்தேன். ‘அடப்பாவி... முத்தமே கொடுத்துவிட்டான்’. கிழே ஒரே சிரிப்புச் சத்தம். உதடுகளைத் துடைத்துக் கொள்ளவேண்டும் என பரபரத்தது. அடக்கிக்கொண்டேன். விஸ்வநாதன் மீது எரிச்சலும் கோபமும் கடுமையாய் வந்தது. ரொம்ப நேரம் போகாததால், இயற்கையின் முதல் அழைப்பு அடிவயிற்றில் கனத்துக்கொண்டு தொந்தரவு செய்தது.

எழுந்து உட்கார்ந்து எனக்குரிய வசனங்களை சொன்னேன். விஸ்வநாதன் முகத்தில் புன்னகையும், தீவீரமும் மாறி மாறி வர பேசி, சுற்றி, சுற்றி நடந்து கொண்டே இருந்தான். ”ஏலே மைக்குக்கிட்ட போயிப் பேசிலே” என்று ஜெயராமன் வாத்தியார் சத்தம் போட்டுக்கொண்டு இருந்தார். இருளில் மொதுமொதுவென தலைகளாய் வெளியே  தெரிந்தன. சிரட்டைகள் கிழே நழுவுவது போல வேறு தோன்றியது. தொட்டுப் பார்த்தேன். பக்கவாட்டில் இருந்து ஜெயராமன் வாத்தியார் “எலே கையை அங்கனயிருந்து எடுல”என்று மெல்லிய சத்தம் போட்டார். முட்டை இருந்த இடத்தையும் லேசாய் தொட்டுப் பார்த்தேன். “பாத்து, பாத்து” என்று கீழேயிருந்து முத்துராமன் கத்தினான். காய்ச்சலில் மயக்கம் வரும் நிலையில் இருந்தேன். எப்போது விஸ்வநாதன் கத்தியால் குத்துவான், விசில் சத்தம் கேட்கும் என்று துடித்தேன்.

நேரம் ஆக ஆக, முட்டையை எப்போது அமுக்குவது என்பதில் கவனமாய் இருந்தேன். வெளியிலிருப்பவர்களுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு நான் நிற்க வேண்டும். விஸ்வநாதன் கத்தியால் என்னைக் குத்த வேண்டும். முட்டையை அழுத்தியவாறு நான் கூட்டத்தைப் பார்த்து திரும்பி இரத்தத்தோடு துடித்துக் கீழே விழ வேண்டும். இதுதான் சொல்லித்தரப்பட்டிருந்தது. எல்லாம் சரியாகச் செய்து, விசில் சத்தம் கேட்கவும் “அப்பாடா” என்று எனக்கு உயிர் வந்தது.

திரை விழுந்ததும் எழுந்து உள்ளே அறைக்கு ஓடி கவுனைக் கழற்றினேன். பிராவைக் கழற்ற முடியவில்லை. விஸ்வநாதன் பின்னாலிருந்து கழற்ற உதவி செய்தான்.  “எதுக்குல்லே, முத்தம் கொடுத்தே” என்றேன். “பொம்பளை மாதிரியே இருந்தே” என்றான். ”ச்சீ” என்று உதட்டை துடைத்தேன். கையெல்லாம் லிப்ஸ்டிக். சிரட்டைகளை கழற்றினேன். உள்ளே வந்த மேக்கப் போட்ட பெரியவர், டெஸ்டிமோனாவின் மார்புகளை எடுத்து பையில் பத்திரமாக வைத்துக் கொண்டார். கிளிப்புகளை அகற்றி முடியை எடுத்தார். “நல்லா நடிச்சே தம்பி” என்றார். சின்ன சந்தோஷம் வந்தது. மேல்ச்சட்டை, கால்ச்சட்டை எல்லாம் போட்டுக் கொண்டு வெளியே வந்தேன்.

தெரிந்தவர்களெல்லாம் “மாது!, அப்படியே வெள்ளக்கார பொம்பள மாதிரியே இருந்தே” என்று ஆச்சரியப்பட்டு கைகொடுத்தார்கள். சிலர் கட்டிப் பிடித்துக் கொண்டார்கள். பக்கத்து வீட்டு அக்காக்கள் புன்னகையை ஒளித்து வைத்தபடி சிரித்ததில் நிறைய அர்த்தங்கள் இருந்தன.  ஒதுங்கி இயறகையின் அழைப்பை நிறைவேற்றும் போது அருகில் வந்து முத்துராமன் “என்னலே, சிரட்டை..!” என்றான். போடா மயிரு!” என்று கத்தினேன். ஒரு கல்லை எடுத்து எறியப் போனேன். ஓடிவிட்டான்.

தனியே ஒரு இடத்தில் உட்கார்ந்த போது நிம்மதியாய் இருந்தது. கூடவே எதையோ இழந்தது போலவும் இருந்தது.

(எழுத்தாளர் வண்ணதாசன் அவர்கள் இந்தப் பதிவை மிகவும் ரசித்ததாய்ச் சொல்லியிருந்தார். இங்கு மீள்பதிவாக…)

 

கருத்துகள்

18 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. பதிவிற்கு மிகுந்த நன்றிகள்.

  ஆறுமுகநேரி, நல்லூர், சாகுபுரம், குரும்பூர், மூலக்கரை எல்லாம் கண் முன்னே வந்தது.

  ஆறுமுகநேரி பள்ளியில் ஷேக்ஷ்பியர் நாடகம். ஆசிரியருக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 2. இன்னும் ரசிச்சு சிரிச்சிக்கிட்டேயிருக்கேன் :-))))

  பதிலளிநீக்கு
 3. என்னை மறந்து ரசித்துப் படித்தேன்!
  அப்படியே காட்சிகள் கண்முன் விரிந்தன.

  (ஃபோட்டோ ஏதாச்சும் இருக்கா அங்கிள்?)
  :)

  பதிலளிநீக்கு
 4. சிரிக்கிறதா அழறதான்னு தெரியல.. ஆனாலும் படிக்கப்படிக்க எவ்வளவு சுவாரசியம்... உங்களோடவே மேடையிலும் அதற்கு முன்னும் பின்னும் பயணித்ததுபோன்ற உணர்வு.

  //எல்லாம் சரியாகச் செய்து, விசில் சத்தம் கேட்கவும் “அப்பாடா” என்று எனக்கு உயிர் வந்தது. //

  இதுவரைக்கும் மனசுக்குள்ள என்ன அசம்பாவிதம் நடக்கப்போகுதோன்னு இருந்தது. பிறகுதான் சகஜ நிலைக்கே திரும்பினேன். வண்ணதாசம் மட்டுமல்ல எவரும் ரசிக்கக்கூடிய பதிவு..

  பதிலளிநீக்கு
 5. This post made me to remember all my school days dramas Madhu anna nice one

  பதிலளிநீக்கு
 6. அற்புதமான எழுத்து மாதவ் அண்ணா.

  மிக ரசித்தேன். நாடகத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஏதாவது இருந்தால் பதிவேற்றலாமே? டெஸ்டிமோனாவை நாங்களும் பார்ப்போமில்லையா?

  பதிலளிநீக்கு
 7. மலரும் நினைவுகள்....இனிக்கின்றன...

  பதிலளிநீக்கு
 8. மலரும் நினைவுகள்....இனிக்கின்றன...

  பதிலளிநீக்கு
 9. பகிர்வுக்கு நன்றி. ரசித்து சிரித்துக்கொண்டே இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 10. வண்ணதாசன் என்ன கண்ணதாசனே இதை படித்தால் ரசித்து சிரிப்பார். அன்று இருந்த கூச்சம் இன்றும் இதை எழுதும்போது இருந்திருக்க வேண்டும். அதனால் தான் நாடகத்தின் முடிவு இன்னும் சரியாக விவரிக்கப்படாமல் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 11. தங்களின் எழுத்துநடை அற்புதமாக இருக்கிறது. தங்களுக்கு அவர்கள் முதல் பரிசு கொடுத்திருக்கணும்.
  நானும் கூட எட்டாம் வகுப்பில் பெண் வேடம் போட்டேன் [ஒரே ஒரு முறைதான்], அதுக்கப்புறம் ரொம்ப நாள் அதைச் சொல்லி சொல்லி என்னை கிண்டல் பண்ணித் தள்ளித் தீர்த்தார்கள், என் ஊர்க்காரர்கள். ரொம்ப கூச்சப் பட்டேன், ஏண்டா ஒப்புக் கொண்டேன் என்று நினைக்கும். அதுக்கப்புறம் திரைப்பட நடிகர்கள் பலர் [சோ, ஒய்.ஜி.மகேந்திரா, விக்ரம், சரத் குமார் என பட்டியல் நீள்கிறது!] அந்த வேடத்தை விரும்பி செய்வதைப் பார்த்து சமாதானம் ஆனது. சென்னையில் படித்த பொது கடலூர் மாணவன் ஒருத்தன் சொன்னான், அவங்க ஊர் நாடகத்தில் பெண் வேடம் போட்டு நடிக்கும் ஒருத்தனுக்கு அவ்வூர் பெண்கள் மத்தியில் ஏகப்பட்ட மதிப்பு வந்து விடுமாம். [ஒரு ஆண் மகனால் சீரழிக்கப்படும் படியும் அப்போது பயந்து நடுங்குமாறும் ஒரு காட்சி இருக்க வேண்டுமாம்]. அப்புறம் ஹி....ஹி.... ஹி.... ஹி....

  பதிலளிநீக்கு
 12. அருமையான மலரும் நனைவுகள்!!!

  பதிலளிநீக்கு
 13. மிகவும் ரசித்தேன் மாத்வ்ஜி!
  நன்றி மிக நேர்த்தியான பதிவு.

  பதிலளிநீக்கு
 14. sirappaga irunthathu migavum rasiththen

  பதிலளிநீக்கு
 15. படிக்கும்போது மிகவும் விறுவிறுப்பாக போனது மனதும் மகிழ்வானது அருமையான பதிவு

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!