பிடிபட்ட சித்திரமும், பிடிபடாத போட்டோவும்!

வாசல் கதவை விலக்கி, வெளியின் வெளிச்சத்திற்கு ஊடே மெல்ல அந்த நீண்ட வீட்டிற்குள் நுழையும்  கூன் விழுந்த அந்த வயதான அம்மா ஒவ்வொரு அறையாக அசைந்து, அசைந்து பின்வளவுக்கு வருகிறார். நல்ல கரிய நிறம். வதங்கி, சுருக்கங்களுடன் மிருதுவாக இருக்கும் தசையில் காலம் தளும்பிக்கொண்டு இருக்கிறது. சுத்தமாய் நரைத்துப் போன முடியில் கதைகள் முடித்து வைக்கப்பட்டு  இருக்கின்றன. ”ஏ என்னயப் பெத்த அம்மா’ என சமையலறை ஒட்டிய திண்ணையில், சுவருக்கு ஒரு தினுசாக அணை கொடுத்து உட்காருகிறார்.

முப்பது வருடங்களுக்கு முந்திய அந்தக் காட்சி இன்னமும் நிலைத்திருக்கிறது. கல்லூரி நாட்களில் பல சமயங்களில் எங்கள் அம்மாவைப் பெற்ற அம்மாவின் வீட்டிலேயே இருப்பேன். தாத்தா இறந்த பிறகு அங்கு தனியாக  இருந்தார்கள் ஆச்சி. பழக்கம் விட, கூடமாட இருக்க பலர் அங்கு வந்து போவார்கள். அப்படியானவர்களில் ஒருவர்தான் சுவரில் சாய்ந்து கிடக்கும் அந்த முதுபெரும் பாட்டி.

தண்டபத்து பாட்டி என்றுதான் அவரை எல்லோரும் கூப்பிடுவார்கள். சொந்தம் என்று தெரியும். எப்படி என்று தெரியாது. யார் அவரது பிள்ளைகள், பேரன், பேத்திகள் என்னும் விபரங்களும் பெரிதாய் தெரியாது. கொழுந்து என்னும் அவரது கொள்ளுப்பேரன் ஒருவர் பஜாரில் லாட்டரிச் சீட்டுகள் விற்றுக் கொண்டு இருந்தது நினைவிலிருக்கிறது. காணியாளர் தெருவின் கோடியில் சின்னக் குடிசையில் தனியாய் வாசம். காலையில் தெருக்களிலும், சாலைகளிலும் குனிந்தவாறே நடந்து, நடந்து சாணி பொறுக்கி, வறட்டி தட்டி அதில் வரும் வருமானத்தில் வாழ்க்கை. பிறகு இப்படித் தெரிந்தவர்கள் வீட்டில் போய் ஒத்தாசையாய் எதாவது வேலைகள் செய்து சோறும், தண்ணீரும்.

தண்டபத்து பாட்டிக்கு நுற்றுக்கும் மேலே வயதிருக்கும் என பெரியவர்கள் சிலர் ஒருநாள் சொல்லக் கேட்ட போது அதிசயமாக இருந்தது எனக்கு. அந்த வயதிலும், அப்படியொரு உடல் நிலையிலும் பார்க்க, பேச, நடமாட முடிவது என்பது சாதாரணமானதா? அதற்குப் பிறகு தண்டபத்து பாட்டியெனும் அந்த அமானுஷ்யப் பிறவியின் அசைவுகளும், வார்த்தைகளும் வசீகரம் கொண்டவைகளாயின. வாய்க்கு வந்த மாதிரி பாட்டெல்லாம் கூட சில நேரங்களில் படிப்பார்கள். குனிந்து, துழாவி, பாண்டி விளையாடுவார்கள். ஆச்சியும், தண்டபத்து பாட்டியும் அவர்கள் காலத்துக் கதைகளைப் பேச ஆரம்பித்தால், பொன்னியின் செல்வன் நாவலை கீழே வைத்துவிட்டு கேட்க ஆரம்பிப்பேன். ஒவ்வொரு செடி, மரம் பற்றியும் எதாவது குறிப்புகள் அவர்களிடம் இருந்துகொண்டே இருக்கும். சளி, காய்ச்சல், வயிற்றுவலி எல்லாவற்றுக்கும் கைவைத்தியம் சொல்வார்கள். அசந்து தூங்கும்போது அந்தப் பொக்கை வாய் புஃப் புஃபென குமிழ் குமிழாய் காற்றை ஊதி வெடித்துத் தள்ளிக்கொண்டே இருக்கும்.

நாளை என்னும் கவலையற்று வாழ்க்கை மிக எளிதாக இருந்தது தண்டபத்து பாட்டிக்கு. ‘எனக்கென்ன காடு வா வாங்குது, வீடு போ போங்குது’ என்பதைத் தாண்டி பெரிய தத்துவம் எதுவும் அவர்களிடம் இல்லை. சொந்தம் என்று அவர்களைச் சூழ்ந்து கொண்டு யாரும் கொண்டாடியதாகத் தெரியவில்லை. கல்யாணம், கோயில் விசேஷ தினங்களில் எல்லோரையும் பேரைச் சொல்லி அழைத்துக் கொண்டு பேசிக்கொள்வார்கள் . சிறியவர்களை ஆசையாய் “நீ அவன் பேரனா, இவள் மகளா” என்று விசாரித்து உற்று பார்ப்பார்கள். சாணி வாசம் எப்போதும் கூடவே இருந்தது.

அவர்களுக்கென்று என்ன தேவைகள், கனவுகள் இருக்கும் என்று தெரியவில்லை. நான், என் அண்ணன்கள் எல்லாம் அவர்களைக் கேலி பேசும்போது ஒருநாள் விளையாட்டாக, “பாட்டி, ஒங்கள போட்டோ பிடிச்சு, நூத்தி எட்டு வயசுப் பாட்டின்னு பேப்பர்ல போடப் போறோம்” என்றோம். “போடுங்கய்யா, மவராசனாப் போடுங்க” என்று பொக்கைச் சிரிப்போடு சொன்னார்கள். நாங்கள் அதை மறந்தும் போனோம். தண்டபத்து பாட்டியோ எங்களை பார்க்கும் போதெல்லாம் “அய்யா, போட்டோ எப்ப பிடிப்பீங்க” என கேட்க ஆரம்பித்தார்கள். “சீக்கிரம் பிடிச்சிருவோம்” எனச் சொல்வோம். அந்த சீக்கிரம் வரவேயில்லை.

படிப்பு, வேலை என ஆளுக்கொரு திசையாய் போன பிறகு, கொஞ்சநாள் கூடவே வந்த ஊரில் தண்டபத்து பாட்டியும் இருந்தார்கள். லௌகீக வாழ்க்கை ஊரை ரொம்பவே பின்னுக்குத் தள்ளிவிட, சாணி வாசம் நாசியைத் தொடவேயில்லை. இரண்டு நாளைக்கு முன்பு எதோ ஞாபகங்களின் தொடர்ச்சியில், வெளியின் வெளிச்சத்திற்கு ஊடே கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே கூன் சரிந்து அந்த உருவம் வந்தது. தண்டபத்து பாட்டி எப்போது இறந்தார்கள், ஊர் அவர்களை எப்படிக் கடந்தது என்ற விபரங்கள் அறியாமலேயே இத்தனை நாளும் இருந்திருக்கிறேன். “அய்யா, போட்டோ எடுக்குறியா” என்றார்கள். சரியென்றேன். நினைவில் இருக்கும் சித்திரத்தை எப்படி போட்டோ பிடிப்பது? ஆனாலும் அந்த சித்திரத்தை உங்களுக்கு மங்கலாகவேனும்  காட்டி விட்டேன் என்றே நினைக்கிறேன்.

கருத்துகள்

20 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ஒரு பாட்டி, பல நாவல்களுக்கு சமம் என்பார் எங்கள் பேராசிரியர்.

    நீங்கள் மங்கலாக காட்டிய சித்திரம், கண்களாக நிற்கிறது. அந்த கண்களில்
    அடைபட்டு கொள்கிறது உள்ளுறங்கும் நினைவுகளும்,
    அலை அலையாய் எழும் என் ஆச்சியின் ஞாபகங்களும்.

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. \\நினைவில் இருக்கும் சித்திரத்தை எப்படி போட்டோ பிடிப்பது?//

    அருமையான வார்த்தைகள்.

    பழைய நினைவுகளை கிளறும் பதிவு.

    பதிலளிநீக்கு
  3. அருமை. என் கிராமத்திலும் இது போன்ற பாட்டிகளை கவலையுடன் கடந்து வந்திருக்கிறேன். மீள் நினைவு கொள்ள செய்த பதிவு.

    மீனாட்சி நாச்சியார்
    itsmeena.wordpress.com

    பதிலளிநீக்கு
  4. மங்கலாகத் தெரிவதற்குக் காரணம்.. பழைய நினைவுகளில் கண் கலங்கியதுதான்..

    பதிலளிநீக்கு
  5. பாட்டி வாசனை நாசி நிரடுகிறது

    பதிலளிநீக்கு
  6. தோழர் மாதவராஜ், போபால் தயாரிப்பு ஊழியர்கள் ஒழுங்காக முறையில் ( யூனியன் இருந்ததா? ) வேலை செய்திருந்தால் இவ்வளவு சேதம் இருந்திருக்காது அல்லவா?

    இதை படியுங்கள்... http://thoughtsintamil.blogspot.com/2010/06/blog-post_9029.html

    குதிக்கபோவது கிணறு என்று தெரிந்திருந்தும் - முடியாது என்று யூனியன் சொல்லியிருக்கலாம் அல்லவா?

    திருப்பூர் சாயப்பட்டறைகளில் வேலை செய்வோர், யூனியன் ஆட்கள் தான், நொய்யலில் சாயக்கழிவு தண்ணீர் விட வைக்க மாட்டோம் என்று சொல்லியிருந்தால் - 725 கம்பெனிகளில் ( என் மாமா கம்பெனியும் ஒன்று ) வேலை நடந்து ஐந்தாயிரம் குடும்பங்கள் சந்தோசமாக இருந்திருப்பார்கள்....

    யூனியன் அணுகுமுறை எப்படி இருக்கவேண்டும்?

    பதிலளிநீக்கு
  7. மாதண்ணா,
    அந்த பாட்டியை எனக்கும் நினைவிருக்கிறது. நம் தாத்தா வீட்டு உழவன், சுப்பையாவால் பிளக்க முடியாத ஒரு பெரிய விறகு கட்டையை, அந்த பாட்டி கோடாலியால் பிளந்து போட்டதும், எல்லோரும் ஆச்சரியப் பட்டதும் நினைவுக்கு வருகிறது. அப்போது பாட்டிக்கு நூறு வயதுக்கு மேலிருக்கும்.

    பதிலளிநீக்கு
  8. பழுப்பேறிய புகைப்படமானாலும் பாட்டி தெளிவாய் இருக்கிறார். :)

    பதிலளிநீக்கு
  9. எத்தனை விதவிதமான மனிதர்கள்...சுவாரசியம்...

    பதிலளிநீக்கு
  10. அற்புத‌மான‌ சித்திர‌மாக‌த் தீட்டிவிட்டீர்க‌ள். மிக‌வும் எதிர்பார்க்கிறேன் இது போன்ற‌ உங்க‌ள் எழுத்துக‌ளை.

    பதிலளிநீக்கு
  11. உங்கள் நினைவில் இருக்கும் சித்திரத்தை எங்களுக்குள்ளும் frame போட்ட போட்டோ வாக மாட்டி விட்டிர்கள் . நினைவு படுத்தி எழுத தோன்றியதே அதை பாராட்டலாம் .

    பதிலளிநீக்கு
  12. பாட்டியை நிழ‌ற் ப‌ட‌ம் பிடிப்ப‌த‌ற்குப் ப‌தில்
    நினைவுப் ப‌ட‌ம் செதுக்கி விட்டீர்க‌ள்.
    ப‌டித்‌த‌வ‌ர் ம‌ன‌திலெல்லாம் பாட்டி
    இப்போது திரைப் ப‌ட‌மாய், குனிந்து
    சாணி பெருக்கி, வ‌லைய‌ வ‌லைய‌ வ‌ருகிறார்.

    பதிலளிநீக்கு
  13. வாசித்தே மனதில் வரைந்துகொண்டேன் பாட்டியின் ஓவியத்தை...என்னசொல்வது கடைசியில் சிற்பமாகவும் ஆகிவிட்டார்...

    பதிலளிநீக்கு
  14. அருமயான எழுத்து நடை.பாட்டியை படிப்பவர் மனதில் சித்திரமாக தீட்டடிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  15. பாட்டி, அம்மாச்சி, ஆச்சி, கிழவி போன்ற உருவங்கள் அவர்களின் வாழ்க்கையின் தாக்கம் இப்போது குழந்தைகளுக்கு கதை சொல்ல மட்டும் உதவுகிறது. நீங்கள் சொன்னதைப் போலவே உருவம் மனதில் அவ்வப்போது அருவமாய் வந்து நிற்கிறது.

    பதிலளிநீக்கு
  16. வார்த்தைகளால் பாட்டிக்குக் கொடுத்த உருவம் நல்லாயிருக்கு!

    பதிலளிநீக்கு
  17. பாட்டியைப் பற்றிய நினைவு எனக்குள் என் பாட்டியைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டது புகைப்படம் இல்லையென்றால் என்ன, உங்கள் பாட்டியின் இடத்தில் என் பாட்டியை வைத்து
    நிரப்பிக் கொண்டேன்.
    ஹமீத்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!