தொங்கும் குழந்தைகள்

 

இளநீலச் சட்டையும், கருநீல கால்ச்சட்டையோ அல்லது பாவாடையோ அணிந்த குழந்தைகளைக் கூட்டி வந்து பள்ளியில் விடும் பெற்றவர்கள் ஒரு கணம் நின்று அவர்கள் உள்ளே போவதை பார்த்துச் சென்றார்கள்.
சிரிப்பதும், அழுவதும், சமாதானமாவதும், பயப்படுவதும், புரியாமல் விழிப்பதும், துரத்துவதும், ஓடுவதுமாக குழந்தைகள் அங்கே வாழ்ந்தனர்.
பகலெல்லாம் குருத்துக் குரல்களின் அலையடித்துக் கிடந்தது பிள்ளையார் கோவில் தெரு.
சாயங்காலங்களுக்கு சிறகு முளைத்திருந்தன.
ஆளரவமற்ற இரவிலும் பள்ளியருகே குழந்தைகளின் கதகதப்பும், மூச்சுக்காற்றும் மிதந்தபடி இருந்தன.
கடப்பாறைகளோடும், சம்மட்டிகளோடும் பள்ளி ஒருநாள் இடிக்கப்பட்டது. தெரு முழுக்க புழுதி.
“மெயின்ரோடு பக்கமாய் இருப்பதால் இங்கே ஜவுளிக்கடை வருகிறதாம்”
“அவர்தான் இடத்தை வாங்கியிருக்கிறாராம்”
“ஊர் கோடியில் ஆற்றங்கரையருகே பள்ளி சென்று விட்டதாம்”
பிள்ளையார் கோவில் தெரு களையிழந்து போனது.
இடிக்கப்படாமல் இருந்த பள்ளியின் ஒரு சுவற்றில் ‘அம்மா’, ‘அப்பா’ என்னும் எழுத்துக்கள் மட்டும் சிலநாட்கள் இருந்து பார்த்தன.
ஒரே வருடத்தில் அங்கு ஜவுளிக்கடல் உருவானது.
வாசலுக்கு வெளியே குழந்தைகளின் ஆடைகள் வரிசையாய் தொங்கின.
அவை குழந்தைகள் போலவே இருந்தன.

*

கருத்துகள்

12 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நல்ல பதிவு நண்பரே..நான் படித்தப் பள்ளியும் இடிக்கப் பட்டு அங்கு shopping complex ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
  2. காலமாற்றத்தில் எல்லாவற்றையும் சகிக்க,
    நிர்பந்திக்கப் பட்டோம்

    பதிலளிநீக்கு
  3. சிறு மாற்றங்கள் இதயங்களையும், பெரும் மாற்றங்கள் மனிதர்களையும் கொன்று விட்டு போகிறது.எனினும் மாற்றம் ஒன்றே மாறாததாகவும் இர்க்கிறது.

    பதிலளிநீக்கு
  4. அன்பு மாதவராஜ்,

    அருமையான பதிவு. மாற்றங்களை கவனிக்கிற எவருக்குமே இது போன்ற கண்ணில் பட்டு மனசை கீறும் விஷயங்கள் நிதர்சன உண்மை. மாற்று பள்ளிக்கூடங்கள் கிடைப்பதென்னவோ உண்மை, ஆனால் பள்ளி என்ற அடையாளம் தொலைந்த அந்த தெருவின் அவஸ்தை மிகக் கொடூரமானது. நானும் ஒருமுறை பரவையில் இருந்து மதுரை செல்லும் வழியில் இது போல் இடிக்கப்பட்ட அல்லது இடிந்த பள்ளிக்கூட கரும்பலகையை திருக்குறளுடன் பார்த்ததுண்டு, அந்த திருக்குறள் இப்போது எனக்கு ஞாபகம் இல்லை, ஆனால் ஒற்றையாய் நின்ற அந்த கரும்பலகை சுவர் என்னமோ செய்தது.
    பழைய பள்ளிக்கூடத்தை இடித்து விட்டதால், பள்ளிக்கு செல்ல முடியாத குழந்தைகளும் இருக்கலாம். “ஆளரவமற்ற இரவிலும் பள்ளியருகே குழந்தைகளின் கதகதப்பும், மூச்சுக்காற்றும் மிதந்தபடி இருந்தன”

    பள்ளிக்கூடத்தின் உயிர் இன்னும் அங்கேயே சுற்றிக்கொண்டு இருப்பதாகப்படும், சம்பிரதாயக் கல்வி காற்றில் கலந்து சம்பிரதாயமற்ற வாழ்க்கை பாடங்கள் கற்றுக் கொடுக்க, கற்றுக்கொள்ள மனிதர்கள் பழகிக்கொள்வார்கள்.
    குழந்தைகளின் ஆடைகள் குழந்தைகள் போல தொங்குவது உங்களின் மனக்கசிவைத் தெளிவாக்குகிறது.

    அன்புடன்
    ராகவன்

    பதிலளிநீக்கு
  5. அட! இங்கேயும் பிள்ளையார் கோவில் தெருவா?

    சொல்ல வந்த விசயத்தை, வார்த்தைகளுக்குள் லாவகமாக சுருக்கி அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. பதிவும் அருமை, வேல்ஜியின் பின்னூட்டமும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  7. சிந்தித்தறியவேண்டிய ஒரு பகிர்வு...இதேபோல் இப்போது சில அரசுப் பள்ளிக்கூடங்கள் வெறும் கூடங்களாக மட்டும் கிடக்கின்றன.

    பதிலளிநீக்கு
  8. வாசலுக்கு வெளியே குழந்தைகளின் ஆடைகள் வரிசையாய் தொங்கின.
    அவை குழந்தைகள் போலவே இருந்தன

    :)

    பதிலளிநீக்கு
  9. அந்த பள்ளி இன்னும் பெரிய கட்டிடத்தில் தொடர்ந்து செயல்படுகிறது என நம்புவோமாக.

    பதிலளிநீக்கு
  10. நிதர்சனமான உண்மை !

    ஆனால், வேறு வழி..?

    பதிலளிநீக்கு
  11. நல்லாருக்கு...!

    எங்கள் பள்ளிக்கு அருகில் அத்தனை கடைகள் முளைத்திருக்கின்றன்..நல்லவேலை பள்ளி அப்படியேத்தான் இருக்கிறது!!

    /வாசலுக்கு வெளியே குழந்தைகளின் ஆடைகள் வரிசையாய் தொங்கின.
    அவை குழந்தைகள் போலவே இருந்தன./

    உண்மைதான்...அவை ஒருபோதும் குழந்தைகளாகா!!

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் வணக்கமும், நன்றிகளும்.

    புலவன் புலிகேசி, ராகவன் அவர்கள் சொன்னது போல இதுபோன்ற அனுபவங்கள் பலருக்கும் வாய்த்திருக்கலாம். கதி சொல்வது போல இந்த மாற்றங்களை சகித்துக்கொள்ள நிப்பந்திக்கப்பட்டாலும் சரி, வேல்ஜி சொல்வது போல் மாற்றம் ஒன்றே மாறாததாய் இருந்தாலும் சரி, சில நினைவுகள் நம்மைத் தொந்தரவு செய்துகொண்டே இருக்கின்றன.சந்தனமுல்லை சொல்வது போல, அவை குழந்தைகள் ஆகாதுதான். அழகாகவும், வசீகரமாகவும் நம்மிடம் இருந்தது காணாமல் போவது ஒரு துயரம்தானே. மனித வாழ்வு இதைக் கடந்து போகும்தான் என்றாலும், அந்த நினைவுகளோடுதான் கடந்து போக முடியும் என்பது உண்மையல்லவா.
    அதைத்தான் சொல்ல முற்பட்டு இருந்தேன். இன்னொன்று ஊர் கோடிக்கு பள்ளிகள் விரட்டப்படுவது என்பது பள்ளி, கல்வி குறித்து இந்த அளிக்கப்படும் முக்கியத்துவத்தைச் சொல்வதாகவும் இருக்கிறது. சகலமும், வியாபார மையமாகும் உலகத்திற்கு இந்தப் பள்ளியும், ஒரு சாட்சியாகத் தோன்றுகிறது. ராகவன் சொன்னதுபோல இது மனக்கசிவுதான். ஈரமான நினைவுகளின் கசிவுதான்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!