-->

முன்பக்கம் , � என்னைக் கவர்ந்த பதிவர் 2

என்னைக் கவர்ந்த பதிவர் 2

 

“நேற்று என் பழைய கவிதைப் புத்தகத்திலிருந்து
இரண்டு வரிகளை தூசிதட்டி எடுத்து,
இடம் மாற்றி வைத்தேன்

உவமைகளில் சிக்கி, தவித்துக் கொண்டிருந்த
ஒரு கிளியை பறக்கவிட்டேன்
ஏரியை திறந்துவிட்டேன்

மேலும் ஒரு வார்த்தைக்கு வண்ணமடித்து
பொலிவு பெறச்செய்தேன்

இன்னும் ஒரே ஒரு வார்த்தைதான்
தேவை இருக்கிறது

உங்கள் இதயத்தை துளைக்கப்போகும்
அந்த ஒரு வார்த்தையை நன்றாக
கூர்தீட்டிக் கொண்டிருக்கிறேன்”

வாசிக்கிறவனை பதம்பார்க்கும் தன் கவிதைப் புத்தகத்தை திறந்தே வைத்திருக்கிறார் இவர். ஆரம்பத்தில் இவரது பதிவுகளுக்கு பின்னூட்டம் இடவந்த முபாரக் “பால்யவயதில் சுட்டமண்ணால் செய்யப்பட்ட குதிரை ஒன்று வெகுகாலம் வைத்திருந்தேன். உங்கள் புனைப்பெயர் எனக்கு மிகவும் சினேகமானதாக தோன்றுகிறது, பல்வேறு நசிவுகளுக்கிடையில் கடந்து வந்து விட்ட மண்குதிரை நினைவும் மனதை அலைக்கழிக்கிறது” என்று சொல்ல இவரும் “என் பெயருக்கான காரணமும் அதுதான். நான் ஒரு களிமண் குதிரை ஒன்றை வைத்திருந்தேன்.” என்கிறார்.

மண்குதிரை! அந்தக் களிமண்ணிலிருந்து எத்தனை குதிரைகள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டு உயிர்கொண்டு இருக்கின்றன! குளம்படிச் சத்தங்களில்லாமல் பாய்கின்றன சில. முன்னங்கால்களைத் தூக்கிக் கொண்டு திமிருகின்றன சில. அப்படியே சாய்ந்து படுத்து அசைபோடுகின்றன சில. வேட்கையோடு காற்றில் முகம் உரசுகின்றன சில. அடிபட்ட வலியை கண்ணில் தேக்கி அண்ணாந்து உங்கள் முகம் பார்க்கின்றன பல.

வலையுலகில் வருவதற்கு முன்பே தீவீர இலக்கியப் பரிச்சயமும், தொடர்புகளும் இவருக்கு இருந்திருக்க வேண்டும். பகிர்வதற்கு யாருமில்லாமல் எழுதுவதாகக் குறிப்பிட்டாலும், ஏற்கனவே கவிதைகள் எழுதியவராய் இருந்திருக்கிறார். வனம் சிற்றிதழிலில் வந்த கவிதையே அவரது முதல் படைப்பின் பகிர்வாக வலையுலகில் இருக்கிறது. ''Rab ne bana na di jodi '' ஷாருக்கானின் படம் குறித்து விமர்சனம் எழுதியிருக்கிறார். “இந்த படத்திற்கு இசை சலிம் சுலைமான். நான் எஸ்எ ராஜ்குமார் என்று நினைத்தேன்” என சாதாரணமாக எள்ளல் வந்திருக்கிறது. இதைப் படித்து அனுஜன்யா “நீங்க தொடர்ந்து பத்தி எழுதலாமே’ என்று சொன்னாலும், மண்குதிரை அதற்குப் பிறகு இது போன்ற முயற்சிகளில் ஈடுபடவில்லை. கன்னத்தில் முத்தமிட்டால் படம் பார்த்ததை, ‘விடை கொடு தாயே’ பாடலில் பெருமூச்சுவிட்டுக் கேட்டதை பதிவு செய்திருக்கிறார் ஒன்றில். தமிழ்ச்சினிமாவில் பாடல்களை காலங்களில் எடுத்து வந்து அடுக்கிப் பார்த்திருக்கிறார் இன்னொன்றில். அவ்வளவுதான். தன்னுடைய முதல் பதிவில் எதைப்பற்றி எழுதுவது என நம்மிடம் கேட்டிருந்தாலும், எதை எழுதுவது என்பதில் தெளிவாகாவே இருந்திருக்கிறார். கவிதைகளை எழுதி இருக்கிறார். கவிதைகளைப் பற்றி எழுதி இருக்கிறார். கவிஞர்களைப் பற்றி எழுதி இருக்கிறார். நமக்குத் தொழில் கவிதை என தன்னை அடக்கிக் கொண்டு விட்டவர். 

கோவில்பட்டியோ, அதன் அருகிலோ இவரது மண் இருக்கிறது என நினைக்கிறேன்.அயல்தேசத்தில் இருந்து வாஞ்சையோடு நம் கரங்களைத் தொடுவதை கவிதைகளின் மூலம் உணர முடிகிறது.  வெள்ளிக்கிழமைக் கவிதையில் இப்படிச் சொல்லி முடிக்கிறார். நம் இதயங்கள் துளைக்கப்படுகின்றன.

அதே வெள்ளிக் கிழமையில்தான்
கதறும் குழந்தையின் அழுகையை
பொருட்படுத்தாது
மூர்க்கமாய் விரையும்
ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில்
நானும் பிரிகிறேன்

ஜ்யோவ்ராம் சுந்தரும், அனுஜன்யாவும் ஆரம்பத்திலிருந்தே இவரது கவிதைகளை வாசித்து, இனம் கண்டு, பின்னூட்டம் இட்டு உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள். வடகரைவேலன் அவர்கள் இவரைப் பற்றி ஒரு பதிவு எழுதியதாக பின்னூட்டங்கள் மூலம் தெரிகிறது. அது தேவை ஒரு படைப்பாளிக்கு. எதோ ஜாலியான பேர்வழி என நினைத்து வந்து, கவிதைகளைப் படித்து ஆச்சரியம் அடைகிறார் கார்க்கி. இப்போது சேரல், யாத்ரா, வெங்கிராஜா, முத்துவேல், நந்தா, அகநாழிகை, நேசமித்ரன், பிரவின்ஸ்கா, பா.ராஜாராம், ராகவன் என பெரும் கவிஞர் மக்களெல்லாம் இவரது தொடர்ந்த வாசகர்களாகி இருப்பதைப் பார்த்து சந்தோஷமாயிருக்கிறது. பிறகு வந்த தமிழ்நதி அவர்கள் “உங்கள் கவிதைகளை இதுநாள்வரை தவறவிட்டுவிட்டேன்’ என்று வருத்தப்பட்டு இருக்கிறார்கள். எனக்கும் அதே கதிதான். அவ்வப்போது ஒன்றிரண்டு படித்திருந்தாலும் தொடர்ந்து படிப்பது சமீப மூன்று மாதங்களாய்த்தான் இருக்கும். இப்போது அவரது அனைத்துப் பதிவுகளையும் படித்து விட்டேன்

சில வார்த்தைகள் சிலரை விடவே விடாது. அவர்களுக்கான அடையாளங்களாகவும், அர்த்தங்களாகவும் படிந்து விடும். மண்குதிரையின் வார்த்தை செல்லம். இந்த வார்த்தை  இவரது கவிதைகளோடு கூடவே வந்து கொண்டு இருக்கிறது. செல்ல மகள் என்று மூன்று முறை சொல்லியிருந்தால் செல்ல நாய்க்குட்டி என்று நான்குமுறை சொல்கிறார். வெயிலையும், மழையையும் மாய்ந்து மாய்ந்து கவிதைகளாக எழுதி ‘வெயிலும் மழையும்’ என்று சேர்ந்தும் எழுதியிருக்கிறார் ஒரு கவிதை. எவ்வளவு அழகாக, எளிமையாக இவரால் பார்க்க முடிகிறது!

என் செல்ல மகள்
நடை பயில்வதைப் போல்
தத்தி தத்தி வருகின்றது
மழைக்காலத்தின் முதல் மழை

கையில் எடுத்து கொஞ்சிக்கொண்டிருக்கிறேன்

சின்னதாக முகம் மாற்றும்
என் மூத்த மகள் போல்
வந்து தொற்றிக்கொள்கிறது
இந்த வெயிலும்.

என்று எழுதும் இவர் மேல்மாந்தை என்னும் கரிசல் காட்டு கிராமம் என்னும் கவிதையில்,

அம்புட்டு வெயிலையும் ம‌ழையையும் முட்டுக் கொடுத்துட்டிருக்கிற‌
எங்க‌ க‌ரிச‌க்காட்டு ஒட‌ ம‌ர‌மா
நிக்கிறா
எங்க‌ ஆச்சி

என்று சொல்வதில் எத்தகைய வாழ்வு இருக்கிறது இவருக்குள். எங்கிருந்தாலும் பிடுங்கிவிட முடியாத வேர் கொண்டு ஊரின் நினைவுகள் நிற்கின்றன. வாழ்வென்னும் பெருவெளியில் இந்தக் கவிஞன் எங்கிருந்து எங்கு அலைந்து கொண்டு இருக்கிறான்!

அதுதானோ என்னவோ? சாலையைக் கடப்பது என்னும் பதமும், பிரயோகமும் இவரது பல கவிதைகளில் வருகிறது. விபத்துக்கள் வருகின்றன. ரயில் பயணங்கள் வருகின்றன. மெல்லிய காதல் வருகிறது. கரிசல் மண்ணின் மணம் குழைந்த சொற்களில் ஊறித் திளைத்த மனம் நகரத்தின் காட்சிகளை இமைகொட்டாமல் பார்க்கிறது. வீட்டிலிருக்கும் சித்திரத்திலிருந்து ஒவ்வொன்றாக காட்சிகள் பிறக்கின்றன. வான்கோ ஓவியத்திலிருந்து விரியும் அகிரா குரோசேவாவின் படம் என் நினைவுக்கு வந்தது. வாட்டும் தனிமையை பரிபூரணமாக இரவின் விருந்தாளியில் பார்க்க முடிகிறது. சிதைவுகளையும், அதிலிருக்கும் வேதனைகளையும் சொல்லாமல் முடிவதில்லை இவருக்கு. கடற்கரைச்சாலை, வேலை தேடுபவனின் நாட்குறிப்புகள், நதியில் நனைதல், ஒரு பசுங்காடு என பல கவிதைகள் அப்படிப்பட்டவை.

இருந்தாலும், தன்னைக் கடந்து நகரும் உலகில் பார்வையாளராகவே இருக்கிறார் மண்குதிரை. கேள்விகளைத் கேட்கவும் பிடிக்கவில்லை. கேள்விகளை எதிர்கொள்ளவும் பிடிக்கவில்ல. தப்பித்துக்கொள்ள அல்லது விடுபட சிறு குருவியோ, குழந்தையோ, ஒருதுளி மழையோ போதும் என்கிறவராக இருக்கிறார். அது அவரது சுபாவம் அல்லது தத்துவம். பைத்தியக்காரன் என்றழைக்கப்படுபவனின் கவிதையில் இப்படிச் சொல்கிறார்.

உங்களுடைய சொற்கள்
காற்றில் நீந்திக்கொண்டிருக்கின்றன
என்னுடைய சொற்கள்
சருகாக மிதக்கின்றன

கவிதைகளைத் தாண்டி கவிஞர்கள் நாட்டுப்பூக்கள் சுயம்புலிங்கம், உதயசங்கர், கலாப்பிரியா, என்.டி.ராஜ்குமார் பற்றி எழுதி இருக்கிறார். சுகந்தி சுப்பிரமணியத்துக்கும் அஞ்சலி செலுத்துகிறார். அப்போது. அவரை அம்மாவென்றே சொல்ல முடியும் என்கிறார். நெகிழ்ச்சி மிக்க தருணங்களில் அம்மாவின் நினைவு வருவதை மண்குதிரையிடம் பார்க்க முடிகிறது.

ஒருசிலவற்றைத் தவிர, கவிதைகள்  நேரடியாகவும், எளிமையாகவும் இருக்கின்றன. பெரும்பாலும் அனுபவம் சார்ந்தவைகளாக இருப்பதால் எளிதில் புரிகின்றன. ஆனால், நம்மை அழைத்துக்கொண்டு வேறு வெளிகளுக்கும் செல்கின்றன. நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இந்தப் பதிவு போதாது. நீங்களும் படித்துப் பாருங்கள்.

வேலை தேடுபவனின் நாட்குறிப்புகள், மொரீசியசின் புயல் அபாய எச்சரிக்கை, கடற்கரைச்சாலை, சினிமாப்படப் பிசாசு, மனிதர்கள் கூடுகிறார்கள், உதிரும் மலர்கள், சென்னை நகரில் ஒரு இரவுப் பொழுதில், ஓவியம், இமையுடைய வானம் பார்த்துக்கொண்டு இருக்கிறது, டேபிள் ரோஜாப்பூக்கள், பெத்தனாச்சி, மேல்மாந்தை என்னும் கரிசக் காட்டு கிராமம், தரிசனங்கள், மண்மணக்கும்  அவியும் நெல் மணந்த அற்புதப் பொழுதுவடக்கே கனமழை பெய்கிறது, நதியில் நனைதல், அகத்திணை, தலைப்பிடாக் கவிதை, ஒரு பசுங்காடு, ரயில் பயணம், குறியீட்டு விலங்கு, பழைய புத்தகத்திலிருந்து ஒரு கவிதை, ஒரு இரவு விருந்தாளி

இவைகள் என்னைக் கவர்ந்த பதிவுகள் (விடுபட்டும் இருக்கலாம்). இவை உங்களுக்கு பிடிக்கலாம். பிடிக்காமலும் போகலாம். இது தவிர அவரது வேறு கவிதைகள் உங்களுக்கு, பிடிக்கவும் செய்யலாம். எது எப்படி இருந்தாலும் அவரையும், அவரது கவிதைகளையும் நீங்கள் தொடர்ந்து முழுமையாக படிப்பது அவசியமென்பேன். நமக்குள் எங்கோ இருந்து, எதாவது சில கணங்களில் வெளிப்பட்டுக் கொண்டு இருப்பவர்தான் மண்குதிரை.

மண்குதிரைக்கு உங்கள் அனைவரின் சார்பில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். இப்போது  அவரது இந்த ஒரு கவிதையோடு-

என்னால் எதுவும் இயலாது
என்று அவர்கள் கூறுவதனால்தான்

கைமாறிப்போன சொந்த நிலத்தை
மீட்க முடியதனால்தான்

இரண்டுவருடமாக அடைகாத்த காதல்
ஒரு நொடியில் உடைந்து போனதால்தான்

எல்லா இடங்களிலும் தொடர்ந்து
நிராகரிக்கப்பட்டு கொண்டேயிருப்பதனால்தான்

நானும்
இந்தக் கவிதையை எழுதுகிறேன்

Related Posts with Thumbnails

37 comments:

 1. Dear Madhav,

  I am striking again, this time too i guessed it right!! your believe it or not!

  Hearty Congratulations to Mr.Mankuthirai!!

  Sorry for using English, i had a problem in transliteration. i will do it again in Tamil.

  anbudan
  Ragavan

  ReplyDelete
 2. சமீபமாக எழுதும் சிறந்த கவிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர் மண்குதிரை.
  நானும் அவரை ரசித்து வாசிக்கிறேன்.

  - பொன்.வாசுதேவன்

  ReplyDelete
 3. :)

  மற்றுமொரு சிறந்த பதிவர், சிறப்பான பதிவு... வாழ்த்துக்கள் மண்குதிரை!

  ReplyDelete
 4. மிகவும் அருமையான பதிவு தோழர்.மண்குதிரையின் கவிதைகளின் ரசிகன் நான்

  ReplyDelete
 5. நல்லதொரு அறிமுகம்.நன்றாக எழுதி இருக்கிறீர்கள். மண்குதிரை மிகச்சிறந்த கவிஞர் என்பதில் சந்தேகமே இல்லை :)

  ReplyDelete
 6. எனக்குப் பிடித்த, ஆப்த நண்பன் பற்றி மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள் மாதவ்.

  //அடிபட்ட வலியை கண்ணில் தேக்கி அண்ணாந்து உங்கள் முகம் பார்க்கின்றன பல. //

  //நமக்குள் எங்கோ இருந்து, எதாவது சில கணங்களில் வெளிப்பட்டுக் கொண்டு இருப்பவர்தான் மண்குதிரை. //

  இதைவிட அவரைப்பற்றி நான் எழுத முடியுமா என்று தெரியவில்லை. எனக்குச் சமயங்களில் யாத்ராவா, மண்குதிரையா என்று சந்தேகம் வரும் அளவுக்கு இருவரின் கவிதைகளில் மனதை என்னவோ செய்யும் ஒன்று இருக்கும். இந்த இருவர்களை விட மென்மனம் கொண்ட கவிஞர்களை இன்னும் நான் கண்டுகொள்ளவில்லை.

  உங்களுக்கு மிக்க நன்றி மாதவ்.

  அனுஜன்யா

  ReplyDelete
 7. அருமையான பகிர்வு. மண்குதிரைக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. மண்குதிரை அறிமுகத்திற்கு மிக்க நன்றி.

  உங்கள் பதிவுகளில் சாத்தூரை சுற்றி நடந்த,நீங்கள் பங்குபெற்ற சம்பவங்களை சொல்லும்போது இருக்கும் ஒரு டச் இதிலும் இருக்கிறது.பூக்களில் இருந்து புத்தகப்பணியிலும் ஈடுபாடு!

  சார்..தொடர்ந்து செய்யுங்கள்.

  ReplyDelete
 9. பகிர்விற்கு நன்றி. வாரக்கடைசியில் எப்படியாவது படித்துவிடும் பதிவர்களில் இவர் நிச்சயமுண்டு. சர்ச்சைகள், கும்மிகள் என்ற அலைக்கழிப்புகள் இல்லாத நீரோடை போன்ற இவரது கவிதைகள் கொஞ்சம் மென்மையானவை. தாயுள்ளம் என்று மிகச்சரியாக அடிக்கோடிட்டு சொல்லியிருக்கிறீர்கள். இனிய நண்பர் தொடர்ந்து எழுத வாழ்த்துகள். பதிவில் என் பெயரையும் பார்த்தேன்.. என்னை பெரும் படைப்பாளி என்று சித்தரித்திருப்பது, அதுவும் மண்குதிரை அண்ணனின் பதிவில்.. ஹிஹி.. வினோதமாகவே இருக்கிறது.

  ReplyDelete
 10. நல்ல அறிமுகம்.

  வாழ்த்துக்கள் மண்குதிரை.

  ReplyDelete
 11. மண்குதிரை, நான் தொடர்ந்து வாசிக்கும் கவிஞர் - அவர் கவிதைகளின் சிறுகதைத் தன்மையும் அதில் வழியும் அழகியலும் எனக்கு எப்போதுமே மிகப் பிடித்தமானவை.

  ReplyDelete
 12. மண்குதிரையின் கவிதைகளை உங்கள் எழுத்துக்களில் அபாரமாக அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.

  வாசித்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது இந்தப் பதிவை!

  வாழ்த்துக்கள் மண்குதிரை

  ReplyDelete
 13. அழகான பகிர்வு!
  மண்குதிரைக்கு வாழ்த்துகள்!! :-)

  ReplyDelete
 14. சமீபத்திய வரவுகளில் மிக முக்கியமானவன் மண்குதிரை. அனேகமாக எல்லாமே நேரடிக் கவிதைகள். அவருக்கு உங்கள் மூலமாக என்னுடைய வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. அன்பு மாதவராஜ்,

  எனக்குத் தெரிந்து விட்டது மாதவராஜ், அடுத்து கேட்கப்போவது மண்குதிரையின் குளம்பொலி தான் என்று. என்னால் நம்ப முடியவில்லை, இரண்டாவது முறையும் என் வரிசை மாறாமல், குதிரைச் சவாரி செய்திருக்கிறீர்கள். சமீபமாகத் தான் நான் மண்குதிரையின் வாசனை நுகர்ந்தேன், பிடரி வழியும் வியர்வையும், பிரி பிரியாய் வழியும் மண்ணும் மண்குதிரையின் கால்களை மேலும் வலுவூட்டி உரம் சேர்க்கும் ஓட்டத்தையும், ஓசை நயத்துடன் ஒய்யார நடையையும் ரசித்தேன். கடிவாளங்கள் இல்லை, கண்பட்டைகள் இல்லை, பரந்த உலகை அதன் எல்லா கோனத்திலும் பார்க்க வாய்க்கும் ஒரு ஒளிப்பார்வை.

  யாராவது தூக்கி ஏற்ற வேண்டிய உயரத்தில் மண்குதிரை இருந்தாலும் பயணம் சுவைக்கிறது, சுவாரசியமாய் இருக்கிறது. உருட்டும் விழிகளில், முன்கட்டை பற்களைக்காட்டி சினேகமாய் சிரிக்கும் கவிதைகள் மண்குதிரையினுடையது சில சமயம் எனக்கு.

  அருமையான தெரிவு மண்குதிரை!

  மனம் நிறைய வாழ்த்துக்கள் மண்குதிரை!

  அன்புடன்

  ராகவன்

  ReplyDelete
 16. நெகிழ்ச்சியாக உணர்கிறேன். மிக்க நன்றி.

  நண்பர்கள்
  ராகவன், வாசுதேவன், சென்ஷி, மணிஜி, நிலாரசிகன்
  வாழ்த்துக்களுக்கும் நன்றியும், அன்பும்

  ReplyDelete
 17. மிக நல்ல அறிமுகம்

  இனி வாசிக்கிறேன்

  நன்றி

  ReplyDelete
 18. அறிமுகத்திற்கு நன்றி. கவிதைகள் அருமை.

  ReplyDelete
 19. அறிமுகத்திற்கு நன்றி!!

  ReplyDelete
 20. அருமையான தேர்வு மாதவன்.யார் குறித்து அலசினாலும் படைப்பிற்குள் இருக்கும் படைப்பாளியை இலகுவாய் உருவி வெளியில் எடுத்து காட்சியாக்குகிறீர்கள்.மண்குதிரையை உங்கள் கைகளில் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறார்!என்னையும் கவர்ந்த படைப்பாளி மண்குதிரை நீங்கள்!

  வாழ்த்துக்கள் மண்குதிரை!

  அன்பு நிறைய மாதவன்.

  ReplyDelete
 21. தோழர்!மண்குதிரைக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள். உங்களை கவர்ந்த பதிவர்களை அறிமுகம் செய்ய,செய்ய எனக்கு குற்ற உணர்சி மேலிடுகிறது போங்கள்!!! வாழ்த்துக்கள்

  ReplyDelete
 22. நல்ல தேடல்
  நல்ல விமர்சனம்
  நல்ல அறிமுகம்
  நல்ல ஊக்கம்

  வாழ்த்துகள் மண்குதிரை

  ReplyDelete
 23. சிறந்த பதிவர், சிறந்த வரிகள்.வாழ்த்துக்கள் மண்குதிரை!

  ReplyDelete
 24. நண்பர்கள் அனைவரின் அன்புக்கும் என் நன்றி.

  ReplyDelete
 25. மிக அருமையாக பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள் மண்குதிரை!

  ReplyDelete
 26. எனக்கு பிடித்த கவிஞர்களில் மண்குதிரைக்கு தனி இடம் உண்டு.
  மண்குதிரையின் ரசிகன் நான்.

  ReplyDelete
 27. மாதவராஜ் அவர்களே,

  கொஞ்ச நாளைக்கு உங்கள் குப்பைகளை வைத்து தமிழ்மணத்தை நாறடிக்காமல் இருக்க வேண்டுகிறேன்.

  ReplyDelete
 28. உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன் மண் குதிரையை.

  ReplyDelete
 29. அன்பு மாது...
  இது நல்ல அனுபவம். நல்ல மனிதர்களை. அவர்களின் படைப்புகளை பதிவுகள் மூலம் பகிர்வதும் சிலாகிக்கிறதும் நல்ல முயற்சி. மண்குதிரை அதற்கு 200 சதம் பொருத்தமானவர். அவருக்கு அப்படியே என் அன்பும் வாழ்த்தும்.
  சிரிக்கிற சத்தமும், வாழ்த்துகிற சத்தமும், அதிலிருந்து அலை அலையாய்க்கிளம்பும் சந்தோசமும் கூட்டாக ஒலிக்கட்டும்.
  அது இப்போது அதிக தேவையாய் இருக்கிறது. அதை இந்த அனானி உறுதிப்படுத்துகிறார்.

  ReplyDelete
 30. நண்பன் மண்குதிரையைப் பற்றி நீங்கள் எழுதியிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் அழகான எழுத்துக்களில் மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 31. அண்ணா!நல்ல தேர்வு.நல்ல வளமான சிந்தனைகளுக்கு சொந்தகாரர் நம் மண்குதிரை...!

  வாழ்த்துக்கள் மண்குதிரை!

  ReplyDelete
 32. தோழரே

  அருமையான பதிவு. உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையிலும் நேர்மை மிளிர்கிறது. முழுமனதோடு சொல்கிற பாராட்டு எண்ணற்ற மலர்களின் நறுமணத்தை கமழ்ந்தபடி இருக்கும்..அத்தகைய உணர்வு இந்தப் பதிவைப் படிக்கும் போது இருந்தது

  ReplyDelete
 33. இங்கு வந்தவர்களுக்கு, வாசித்தவர்களுக்கும், மண்குதிரை அவர்களை வாழ்த்தியவர்களுக்கும் என் நன்றிகள்.

  பாவம், ஒரு அனானி மட்டும் வயிறெரிந்திருக்கிறார். அவருக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.

  சரி.... எல்லா இடங்களிலும் இப்படி ஒன்றிரண்டு பேர் இருக்கத்தானே செவார்கள்?

  மண்குதிரைக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 34. ம‌ண்குதிரை க‌விதைக‌ள் மிக‌ அருமையான‌வை. ப‌கிர்வுக்கு ந‌ன்றிங்க‌ மாத‌வ‌ராஜ் சார்.

  ReplyDelete
 35. உங்களில் நானும் ஒருவன். மண்குதிரைக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 36. நான் இதுவரை மண்குதிரையின் எழுத்துக்களை படித்ததில்லை. உங்களின் பதிவின் மூலம் அவர் பக்கத்திலும் ஏராளமான எழுத்துக்கள் எழும்பியிருக்கின்றன என்பதை உணர்கிறேன்.

  பகிர்வுக்கு நன்றி அன்பரே....

  ReplyDelete
 37. எனக்கும் அவரது கவிதைகள் மிகப் பிடிக்கும். அருமையாக்க் கூறியுள்ளீர்கள்.

  ReplyDelete