வாழ்த்துக்கள்...பிரகாஷ்ராஜ் என்னும் கலைஞருக்கு!

தேசீய விருதுக்கான சிறந்த நடிகராக பிரகாஷ்ராஜ் அவர்களும் சிறந்த படமாக காஞ்சிவரமும்,  சிறந்த இயக்குனராக அடூர் கோபாலகிருஷணனும் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

 

சந்தோஷமாயிருக்கிறது. அறிமுகமான டூயட் படத்தின் ஒரு காட்சியில் பிரகாஷ்ராஜின் விரல்கள் குளோசப்பில் நீண்டு, காத்து நிற்கும் ரசிகர்களை அப்படியே சுருட்டி வைத்துக்கொள்வது போல அமைந்திருக்கும். பிரமைகளை உருவாக்கும் இதுபோன்ற காட்சிகள் எப்போதுமே வெறுப்படைய வைக்கும். ஆனால் இப்போது நினைக்கும்போது சந்தோஷமாகவே இருக்கிறது.

 

பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட கமலும், ரஜினியும் வில்லன்களாக அறிமுகமாகி, பிறகு நாயகர்களாக நிலைத்து விட்டார்கள். பிரகாஷ்ராஜ் இன்றைக்கும் வில்லனாகவே இருக்கிறார். ஆனாலும் அவருக்கென்று படம் பார்க்க மனிதர்கள் இருக்கிறார்கள். அது வழிபடும் தன்மையாக இல்லாமல் ரசிகத்தன்மையோடு மட்டும் இருப்பது ஆச்சரியமானது. ஆரோக்கியமானது.

 

பிரகாஷ்ராஜின் நடிப்பு புதிய பரிமாணங்களைக் கொண்டது. சிரத்தையும், அக்கறையும், ஈடுபாடும் கொண்ட அவரது  அசைவுகள் நுட்பமானவையாக இருக்கின்றன. தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்கள் எப்படிப்பட்டவையாக இருந்தாலும் மக்களின் நினைவுகளில் அந்த பிம்பங்களை நடமாட விடுகிற ஆற்றல் அவருக்கு இருக்கிறது.

 

இடையில் அவருக்கும் நாயகனாகும் ஆசையும், ஆட்டங்களும் சண்டைகளும் போடும் கனவுகளும் சொந்தப்படங்களாக  வந்து நிறைவேறாமல் போனது. மக்கள் நல்லவேளை அதை ரசிக்கவில்லை. அதன்பிறகு, தன்னைச் சரிசெய்து கொண்டு சினிமா குறித்த ஒரு தெளிவான பார்வையோடு நல்ல, தரமான படங்களைத் தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார்.

 

சினிமா என்னும் மொழியை ஓரளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிற, தெரிந்து கொள்ள ஆர்வமாயிருக்கிற சினிமாக் கலைஞர்கள் சில பேரில் அவரும் ஒருவர். திரையுலகில் இருந்துகொண்டே, சினிமாவைப் பீடித்திருக்கிற அபத்தங்களைச் சாடுகிற நிஜமானக் கலைஞர்களில் அவரும் ஒருவர். இலக்கியம் குறித்த பரிச்சயமும், புத்தக வாசிப்பும் கொண்ட, விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய சினிமாக்காரர்களில் அவரும் ஒருவர். இந்த ‘ஒருவர்’தான் அவரை நெருக்கமாக உணரவும், சந்தோஷம் கொள்ளவும் வைக்கின்றன. இந்த ‘ஒருவர்’தான் அவருக்கான தனித்தன்மையை உருவாக்கி இருக்கின்றன.

 

விருதுபெற்றிருக்கும் அவர், “மேலும் நல்ல, யதார்த்தமான படங்களைத் தர நிச்சயம் முயற்சி செய்வேன்” என நெகிழ்ந்து சொல்லியிருக்கிறார். அது உண்மையானால், இந்த விருது பாராட்டுக்குரியது மட்டுமல்ல, நன்றிக்கும் உரியதாகும்.

 

வாழ்த்துக்கள்..... பிரகாஷ்ராஜ் என்னும் கலைஞருக்கு!

 

இறுதியாக ஒன்றே ஒன்று. இனி கில்லிகளிடமும், ஜல்லிகளிடமும் நீங்கள் அடிவாங்குவதைப் பார்த்து  எப்படி சகித்துக் கொள்ளப் போகிறோம் என்றுதான் தெரியவில்லை!

*

கருத்துகள்

18 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நல்ல பகிர்வு! நன்றி.

    //இனி கில்லிகளிடமும், ஜல்லிகளிடமும் நீங்கள் அடிவாங்குவதைப் பார்த்து எப்படி சகித்துக் கொள்ளப் போகிறோம் என்றுதான் தெரியவில்லை//

    இதில் மறைமுகமாக அவருக்கு ஒரு கோரிக்கை இருக்கிறதோ?

    பதிலளிநீக்கு
  2. விருதுக்கு பொருத்தமான தேர்வுதான் பிரகாஷ்ராஜ்...

    நீங்கள் கடைசியாக சொன்னது போல்
    இன்னும் எத்தனை நாள் தான், இறுதிக் காட்சியில் நடிக்கத் தெரியாதவன்களிடம் அடிவாங்கி நடிக்கப்போகிறார் என்பது தான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது

    வாழ்த்துகள் பிரகாஷ்ராஜ்

    பதிலளிநீக்கு
  3. உங்களோடு நானும் பிரகாஷ்ராஜை வாழ்த்துகிறேன்.

    ஆனால் என் பார்வையில் பிரகாஸ்ராஜை விட பருத்திவீரன் கார்த்தி மிக சிறப்பான நடிப்பு.
    ஒருவேளை திரைப்படம் வெளிவந்த வருடம் வேறோ தெரிய வில்லை.

    நான் கார்த்திக்கு கிடைக்கும் என எதிர்பார்தேன்.

    பதிலளிநீக்கு
  4. "இறுதியாக ஒன்றே ஒன்று. இனி கில்லிகளிடமும், ஜல்லிகளிடமும் நீங்கள் அடிவாங்குவதைப் பார்த்து எப்படி சகித்துக் கொள்ளப் போகிறோம் என்றுதான் தெரியவில்லை! "

    இந்தக் கோரிக்கை அவருக்கு எட்டவேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. தனித்துவமிக்க கலைஞன்...

    எதிர்பார்ப்புக்களை சமயம் கிடைக்கும் போது மட்டும் சமயோசிதமாக நிறைவேற்றும் கலைஞன்.

    அவனை கொண்டாடி நமக்கான கலையை வெளிக்கொனரும் பொறுப்புனர்ந்த பதிவு இது.

    என்ற வகையில் டமில் சினிமா மீதிருந்த வனமங்களையும் மீறி
    டிஸ்கோ சாந்திகளின் பேட்டிகளையும் மீறி.......

    வந்தனங்கள்....ப்ரகாஷ்ராஜ்.

    பதிலளிநீக்கு
  6. தங்களின் இடுகையின் கருத்தை ஆமோதிக்கிறேன். தனித்துவமான கலைஞர் என்பதில் சந்தேகமே இல்லை!

    //இறுதியாக ஒன்றே ஒன்று. இனி கில்லிகளிடமும், ஜல்லிகளிடமும் நீங்கள் அடிவாங்குவதைப் பார்த்து எப்படி சகித்துக் கொள்ளப் போகிறோம் என்றுதான் தெரியவில்லை! *//

    ஹ்ம்ம்!

    பதிலளிநீக்கு
  7. Taking no credit away from Prakash for this award, i too feel for Karthi that he missed out !! That young lad definitely deserved an award for that masterpiece debut which no else except the legend Shivaji could achieve or even dream about...

    பதிலளிநீக்கு
  8. தீபா!
    ஆமாம். கோரிக்கை நியாயமானதுதானே!

    கதிர்!
    நன்றி.

    ராம்ஜி!
    பருத்திவீரன் கார்த்திக் அடுத்த படங்களில் எப்படி நடிக்கிறார் என்று பார்ப்போம்.

    ஹரிஹரன்!
    நிச்சயம் எட்டும்.


    கும்க்கி!
    மிக எச்சரிக்கையாக, கருத்துக்களை பகிர்ந்திருக்கிறீர்கள். நன்றி.


    சந்தனமுல்லை!
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. தமிழ் சினிமாவின் அபத்தங்களில் ஒன்று ஒரே மாதிரியான கேரக்டர்களை வழங்குவது.பிரகாஷ் ராஜ் அவர்களை இன்னும் எந்த டைரக்டரும் முழுமையாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்றே சொல்லவேண்டும்(பாலச்சந்தர் உற்பட).

    தக்க நேரத்தில் சிறந்த பதிவு சார்.

    பதிலளிநீக்கு
  10. முதலில் அந்த அருமையான கலைஞன் பிரகாஷ் ராஜுக்கு வாழ்த்துக்கள்..

    மாதவராஜ், மிக நுண்ணியமாக பிரகாஷ்ராஜ் பற்றி ஆராய்ந்துள்ளீர்கள்.. எனினும் தயா படம் கூட தன்னை கதாநாயகனாக முன்னிலைப் படுத்தாமல் கதையின் நாயகனாகவே காட்டி எடுத்த படம்.

    ஹீரோவின் துணையாக அவர் நடித்த மொழியில் கூட தன உடல் மொழியால் ரசிக்க வைத்தார்.

    நீங்கள் குறிப்பிட்ட பல விஷயங்களே எனது எதிர்பார்ப்பும் கூட..
    //வழிபடும் தன்மையாக இல்லாமல் ரசிகத்தன்மையோடு மட்டும் இருப்பது ஆச்சரியமானது. ஆரோக்கியமானது.
    //
    //சினிமா குறித்த ஒரு தெளிவான பார்வையோடு நல்ல, தரமான படங்களைத் தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார்.
    //
    //கில்லிகளிடமும், ஜல்லிகளிடமும் நீங்கள் அடிவாங்குவதைப் பார்த்து எப்படி சகித்துக் கொள்ளப் போகிறோம் என்றுதான் தெரியவில்லை!
    //
    பாத்திரத் தேர்வு என்ற சிறைக்குள் பிரகாஷ்ராஜ் அகப்பட செய்துவிட்டது தேசிய விருது.. :)

    LOSHAN
    http://arvloshan.com/

    பதிலளிநீக்கு
  11. ஹய்யா...

    குட்பிளாக் இடுகை

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  12. //இறுதியாக ஒன்றே ஒன்று. இனி கில்லிகளிடமும், ஜல்லிகளிடமும் நீங்கள் அடிவாங்குவதைப் பார்த்து எப்படி சகித்துக் கொள்ளப் போகிறோம் என்றுதான் தெரியவில்லை! //

    நச் வரிகள்...பிரகாஷ்ராஜிம் உணர்திருப்பார் என்று நம்புகிறேன்...

    அவரிடம் இன்னும் நிறைய அழகான படைப்புகளை எதிர்பார்ப்போம்...

    குட்பிளாக்கில் இந்த பதிவு வந்தமைக்கு எனது வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  13. இளவட்டம்!
    மிக்க நன்றி.


    லோஷன்!
    //பாத்திரத் தேர்வு என்ற சிறைக்குள் பிரகாஷ்ராஜ் அகப்பட செய்துவிட்டது தேசிய விருது.....//

    சரியாகச் சொன்னீர்கள். ஒரு கலைஞராயிருக்க வேண்டுமென்றால் முதலில் சுதந்திரமான மனிதானியிருக்க வேண்டும் என்பது விதி.

    பதிலளிநீக்கு
  14. கதிர்!
    பாலாஜி!
    குட்பிளாகில் வந்ததை தெரிவித்தமைக்கு நன்றி.


    techguru!
    அப்படிங்களா..!

    பதிலளிநீக்கு
  15. The Govt never ever awarded to Sivaji Ganesan and there is no value for this award. All these awards are plitically connected. The same Prakashraj made a statement about Sivaji and Our taste as follows " How did these tamilains tolearate Sivaji's acting?. Hence my view differs.

    பதிலளிநீக்கு
  16. பல மொழிகளில் உள்ள கில்லியிடமும் பல்லியிடமும் பலமுறை அடி வாங்கி நன்றாக சம்பாதித்து பின்புதான் இப்படியெல்லாம் சம்பளம் வாங்காமலே நடிக்க முடியும் .அவர் ஒன்றும் பொது சேவை செய்ய படத்தில் நடிக்கவில்லை .சினிமா உலகில் உள்ள அசிங்கங்களில் அவரும் ஒருவர்.கட்டிய பெண்டாட்டியை கண்கலங்க விட்டு எவளிடமோ மயங்கிகிடக்கும் ஒரு மட்டமான மனிதன் .நயனதாராவுக்கு மாமா வேலை பார்ப்பதாகவும் அவர் பெயர் அடிபடுகிறது .நீங்கள் சொல்வது மாதிரி மட்டும் நடித்தால் எப்படி இப்படியெல்லாம் கூத்தடிக்க முடியும்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!