காற்றின் மொழி ஒலியா, இசையா....!

“தசாவதாரம் படத்துல என்ன இருக்கு. உலகம் சுற்றும் வாலிபனோட உல்டா. அதுல எம்.ஜியார். இதுல கமல். இவரோட பாணியில், பத்து வேடம் போட்டுருக்காரு.அவ்வளவுதான்” மிகச் சாதாரணமாகச் சொன்னார் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி.

 

விருதுநகரைத் தாண்டி நாங்கள் அப்போது போய்க்கொண்டு இருந்தோம். சுமோவின் முன்னிருக்கையில் கவிஞர் லட்சுமிகாந்தனும், நடுவில் நானும் அவரும், பின்னால் கம்மாச்சூரங்குடி பாலுவும் உட்கார்ந்திருந்தோம். எப்போதும் கூட வருகிற அருமைத் தோழன் காமராஜ் இன்று சொந்த வேலைகள் காரணமாய் வரவில்லை. நேற்று மாலை ஆறுமணிக்கு சாத்தூரில் ஆரம்பித்த பயணம் இது.  தேவகோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் விடிய விடிய கலை இலக்கிய இரவு. சாகித்திய அகாதமி விருது பெற்ற அவருக்கு அங்கு பாராட்டும், ‘பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்’ என நான் பேச வேண்டியதும் இருந்தன.

 

அவரது சமீபத்திய  இரண்டு கதைகளில் பாலுறவு குறித்த விஷயங்கள் தூக்கலாக இருப்பதாக லட்சுமிகாந்தன் சொன்னான். அந்தக் கதையின் மாந்தர்கள் அப்படிப்பட்டவர்கள் என்ற மேலாண்மை பொன்னுச்சாமி, தமிழ் இலக்கிய உலகம் இதுவரை சரியாகத் தொட்டிராத ஆட்டிடையர்கள் வாழ்வு அப்படிப்பட்டதாக இருப்பதாகச் சொன்னார். அவர்களது குடும்பங்களில் மிகச் சாதாரணமாக நாம் கேட்கக் கூசும் வார்த்தைகள் சரளமாக புழங்குவதையும், வயசுக்கு வந்த பெண்ணைக்கூட கோபம் வந்தால் வீட்டில் “அங்க என்ன ஊம்பயாப் போன?” என்று பேசுவதையும் இயல்பாக பார்க்க முடியும் என்ற போது நம்ப முடியாமல் இருந்தது. “செக்ஸ் குறித்து வைத்து இருக்கிற உங்கள் இலக்கணங்களும், ஒழுக்கங்களும் அங்கு சர்வசாதாரணமாக மீறப்படுகின்றன” என்று அவர் சொல்லிய கதைகள் சகலத்தையும் புரட்டிப்போடுவதாக இருந்தன.

 

காடுகளில் தன்னந்தனியாக ஆடுகளை மேய்த்துக்கொண்டு அலைகின்ற அந்த மக்களின் வாழ்நிலையும், சூழலுமே இதற்கு காரணமாக இருக்கின்றன என்ற அவர், ஆடுகளை அதட்டி அதட்டி எழும்புகிற அதே சத்தமான குரலில்தான் மனிதர்களோடும் அவர்கள் பேசுகின்றனர் என்றும் சித்தரித்தார். மௌனமாக கேட்டுக்கொண்டு வந்த பாலு அந்த செம்மறியாடுகளிடம் இருந்து நாற்றம் கொண்ட ஒரு வெக்கை எப்போதும் வீசிக்கொண்டு இருக்கும் என்றும், அவர்களின் கனவுகளில் கூட ஆடுகளே வரும் என்றும், ஆடுகளை மேய்க்கின்ற அந்த குரல்கள் இரவிலும் அவர்கள் மீது ஆவிகள் போல அலைந்து கொண்டிருப்பதாகவும் தனது அனுபவங்களைச் சொன்னான். ஒற்றைக்கம்பினை கம்மங்கூட்டில் முட்டுக்கொடுத்து தலையை அப்படியே கைகளில் சாய்த்து மணிக்கணக்காக அவர்களில் வெயிலில் நினறபடி தூங்க முடியும் என்று அவன் மேலும் தீட்டிய சித்திரங்களில் நான் எதையோத் தேடிக்கொண்டு இருந்தேன்.

 

திருமங்கலம் எப்போது வந்தது, மதுரைக்குள் எப்போது நுழைந்தோம் என்பதறியாத பயணத்தில், ஆடுகளோடு நின்றிருக்கும் மனிதர்களை எப்போதாவது பார்த்த அத்துவானக் காடுகளில் அலைந்துகொண்டு இருந்தேன். சோடியம் விளக்குகளின் மஞ்சள் வெளிச்சத்தில் நனைந்து, பரபரப்பான வாகன நெரிசல்களில் சிக்கி நின்றிருந்த பெரியார் நிலையம் முழுவதும் செம்மறியாடுகளின் ‘ம்மே’க்களாய் நிறைந்து, புழுதியோடு நாசியை அடைத்தன. தனக்கு பழக்கமான ஆட்டிடையன் ஒருவன் எப்போதும் தன்னைத் தேடி வந்து காலி தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு செல்வான் என்று பாலு மேலும் விவரித்தபோது தாகத்தோடு  மனிதர்களின் குரல்வளைகள் துடித்துக்கொண்டு இருந்தன. அவர்கள் குறித்து எதுவும் சிந்திக்காமல் கடந்துபோய்க் கொண்டு இருந்த எனது காலங்களின் மீது அவர்களின் ‘கெட்ட வார்த்தைகள்’ சிந்திக்கொண்டு இருந்தன.

 

கிராமத்து எளிய விவசாயி போல் இருக்கும் மதுரை எம்.எல்.ஏவான தோழர் நன்மாறன் அவர்கள் தமுக்கம் அருகே சுமோவில் ஏறிக்கொண்டபோதுதான், நான் நகரத்திற்குள் மீண்டேன். அவர்தான் தேவகோட்டை கலை இலக்கிய இரவில் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியை பாராட்டப் போகிறவர். பேச்சின் திசைகள் மாறிட பயணம் உரையாடல்கள் மூலம் தொடர்ந்தது. “இண்டர்நெட்டில் எழுதுகிறீர்களாமே, மாதவராஜ்” என்றவர், வலையுலகம், இணையம் குறித்தெலாம் குழந்தையின் ஆர்வத்தோடு நிறைய கேட்டுத் தெரிந்து கொண்டார். சாகித்யம் என்றால் என்னவென கேட்டார். கோடம்பாக்கம் குறித்து சாருநிவேதிதா எழுதியதை படித்திருந்தார் .கல்குவாரிகளை அரசே ஏற்க வேண்டும் என நாம் கோரிக்கை வைக்க வேண்டும் என்றார்.  குழந்தைகளின் இலக்கியம், ஈரானிய சினிமாக்கள் என மேலூரையும் திருப்பத்தூரையும் கடந்தோம். அண்ணாவின் நூற்றாண்டில் இடதுசாரிகள் அவரது இலக்கியம் குறித்து முழுமையாக படித்து ஒரு ஆய்வு நடத்த வேண்டியது அவசியம் என்றார். அவரது எளிமையும், எதையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்னும் ஆவலும் ஏற்கனவே தெரிந்த ஒன்றாக இருந்தாலும், ஆச்சரியமாகவே இருந்தது. ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு இது தேவை என்று இங்கு யார் சொன்னார்கள்?

 

தேவகோட்டையில் இறங்கும்போது இரவு பதினொரு மணி போல இருக்கும். மூவாயிரம் பேருக்கு மேல் மக்கள் கூட்ட்டம் உட்கார்ந்தும், நின்றும் இருந்தார்கள். வெளிச்சத்தில் மேடை மிதந்தபடி இருந்தது. ‘மக்கள் டி.வி’ புகழ் புதுகை பூபாலனின்’ கலை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அரசை விமர்சனம் செய்த நையாண்டிகளை மக்கள் ஆரவாரத்தோடு ரசித்துக்கொண்டு இருந்தனர். தொடர்ந்து தப்பாட்டங்கள், கிராமியக் கலைகள் மேடையேறி மக்களை ரசிக்க வைத்தன. சென்னை எஸ்.ஐ.இ.டி கல்லூரி பேராசிரியை திருமதி. பர்வின் சுல்தானா அவர்கள் ‘வியப்பது வீழ்ச்சி’ என்னும் தலைப்பில் பேசினார்கள். எதையும் கண்டு வியக்காதீர்கள், தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுங்கள் என்னும் அர்த்தத்தில், அற்புதமான மொழியாற்றலும், கவித்துவமிக்க வார்த்தைக் கோர்வைகளும் பார்வையாளர்களை யோசிக்க வைத்தன. இந்தியாவில் பாட்டி வடை சுட்ட கதையும், சீனாவில் பாட்டி வடை சுட்ட கதையும் வேறு வேறாக இருப்பதைச் சொல்லி விவரித்தது முக்கியமான ஒரு பகிர்வு.

 

தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள், பாடல்களுக்குப் பிறகு இரவு ஒன்றரை மணிக்கு மேல் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமிக்கு பாராட்டு விழா.  விலைவாசி உயர்வையும்,  சாதாரண மக்களுக்கு விரோதமான மத்திய அரசின் போக்குகளையும் அவருக்கே உரிய நகைச்சுவையோடு நன்மாறன் பேசினார். தனக்கு கிடைத்த விருது ஒரு கிராமத்தின் எளிய விவசாயின் வாழ்வனுபவத்திற்கு கிடைத்த அங்கீகாரம் என்பதாய் சொல்லி மேலாண்மை முடித்துக்கொண்டார். காரில் பேசி வந்தவர்களாய் இல்லாமல் இருவருமே வேறு மனிதர்களாய் தெரிந்தார்கள் அப்போது.

 

திரும்பவும் தப்பாட்டம். பாடல்கள். என்னை பேச அழைத்த போது இன்று விடிகாலை மூன்று மணி. கூட்டம் வெகுவாக கலைந்திருந்தது. அங்கங்கு சிலர் துங்கிக் கொண்டு இருந்தார்கள். சத்தியத்திற்கு கட்டுப்பட்டவர்களாய் சிலர் விழித்திருந்தார்கள். அந்த சமயம் பேசுவதற்கு ஒரு மனதைரியம் வேண்டியிருந்தது. நான் ஒன்றும் பெரிய மேடைப் பேச்சாளனுமில்லை. 1942 ஆகஸ்ட் 17ம் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தேவகோட்டையின் சப்கோர்ட் தீவைத்து கொளுத்தப்பட்டதையும், கிழக்கு இராமநாதபுரம் மூன்று மாதங்களுக்கு மக்கள் கைவசமானதையும் விவரிக்க ஆரம்பித்தேன். சுவராசியம் இல்லாமல் உட்கார்ந்திருந்த  மக்களைப் பார்த்து, சில கதைகளைச் சொல்லி வேகமாக பேச்சை முடித்து, அப்பாடா என்று மூச்சு விட்டேன்.

 

நான்கு மணிக்கு தேவகோட்டையிலிருந்து ஊருக்குத் திரும்ப ஆரம்பித்தோம். நிகழ்ச்சி குறித்து கொஞ்சம் நேரம் பேசியவர்கள் பிறகு தூங்க ஆரம்பித்தார்கள். பிசாசு போல் நான் மட்டும் விழித்து உடகார்ந்திருந்தேன். ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு மேலாக அங்கங்கு நடந்து வரும் இதுபோன்ற கலை இலக்கிய இரவுகள் மக்களுக்கு என்ன அனுபவங்களைத் தந்திருக்கிறது, நமக்கு என்ன அனுபவங்களை தந்திருக்கிறது என்று புரியாமலேயே இருக்கிறது. கூட்டம் கூட்டமாய் வந்து ரசிக்கும் மக்கள், எதையாவது கொண்டு செல்கிறர்களா எனத் தெரியவில்லை. நம் படைப்பாளிகளும், கலைஞர்களும்  கண்விழித்து, எங்கெல்லாமோ பயணம் செய்து, சமூக மாற்றங்களுக்கான வெப்பத்தோடு ஓடியாடிய காலங்கள் தேய்ந்து கொண்டு வருவதாகப் பட்டது. எத்தனை இரவுகளை இந்த பாடகர்களோடும், கலைஞர்களோடும் பேசிச் சிரித்து கழித்திருக்கிறேன். பலர் இப்போது எங்கேயென்று தெரியவில்லை. திருப்தியற்ற வெளியில் ஓடிக்கொண்டு இருப்பதாகத் தோன்றுகிறது. திருப்பத்தூரில் நிறுத்தி பழங்கள், டீக்கள் சாப்பிட்டோம். சிக்ரெட் பற்ற வைத்துக்கொண்டேன். நன்மாறன் இறங்காமல் காரில் தூங்கிக்கொண்டு இருந்தார். களைப்பிலும் மலர்ச்சியோடு இருந்த அவரது முகம் சில நம்பிக்கைகளைச் சொன்ன மாதிரி இருந்தது. கொஞ்ச நேரத்தில் தூங்கிப் போனோம்.

 

காலை ஆறு மணிக்கு மதுரையில் நன்மாறன் அவர்களை அவரது இல்லம் அருகே இறக்கி விட்டு பயணம் தொடர்ந்தது. தூக்கம் திரும்ப வரவில்லை. காலையின் குளிர்ந்த காற்று சிலிர்ப்பூட்டிக்கொண்டு இருந்தது. நினைவுகள் எல்லாம் இனிமையாகத் திரும்பி வந்தன. நேற்றைய இரவில் காரில் பேசிக்கொண்டு சென்றது இசை போல சுகமாய் இருந்தது. மேடை நிகழ்ச்சிகள் கனவாய் நிழலாடின. தனது நிகழ்ச்சி முடிந்து மேடைவிட்டு இறங்கியதும், “அண்ணா எப்ப வந்தீங்க” என புதுகை பூபாலன் என்னை ஆரத்தழுவிக்கொண்ட கணங்கள் ஞாபகத்தில் பூத்தன. ஒவ்வொரு மேடையின் கீழேயும், தள்ளியும் கலைஞர்களுக்கான வெளிகள் அரிதாரமில்லாமல் உதிர்ந்து கிடக்கின்றன வாடாமல்!

 

திருமங்கலத்திலிருந்து இராஜபாளையம் செல்கிற பாதையில் சுமோ திரும்பியது. மேற்குத் தொடர்ச்சி மலை முகடுகளோடு கூடவே வந்தது. அன்பையும், அழகையும் சொல்லிக்கொண்டு திசைகள் யாவும் நின்றன. மாபெரும் வெளியாய் நிலம் விரிந்து கிடந்தது. ஆட்டு இடையர்களின் குரல்களும் சிதறிக்கிடக்கும் பூமிதான் அது. இன்னும் அவர்கள் வரவில்லை.

 

”எதாவது பாட்டு போடுங்களேன்” என்றேன் டிரைவரிடம். சிறிது நேரத்தில் மெல்லிய அந்த இசை விரிந்தது.  ‘காற்றின் மொழி ஒலியா இசையா’ சட்டென எல்லாம் புரிந்த மாதிரி இருந்தது. பரவசமாயிருந்தது. மலைகள், வானம், வெளி என காட்சி முழுவதும் இசையில் மிதக்க ஆரம்பித்தது. ராஜபாளையம் போய், மேலாண்மறைநாடு சென்று மேலாண்மை பொன்னுச்சாமியை இறக்கிவிட்டு சாத்தூருக்குச் செல்ல இன்னும் மூன்று மணி நேரங்கள் ஆகலாம். அதற்கென்ன....? இப்படி எல்லாம் கரைந்து போகிற மனநிலையில் எவ்வளவு தூரமானாலும் பயணம் செய்யலாம்.

 

அதோ... மலையடிவாரத்தில், தொலைதூரத்தில் குடில் போன்ற வீட்டிற்குள்ளிருந்து வெளிப்பட்ட ஒரு சிறுவன் அந்த பெரும் வெளியில் கைகளை விரித்தபடி ஒரு புள்ளியாய் ஓடிக்கொண்டு இருக்கிறான். ஆஹா...!

 

*

கருத்துகள்

19 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அற்புதம் தோழர்.

    எதை விடுவது எதை ஆமோதிப்பது என குழப்பமாகவிருக்கிறது.

    உங்கள் வார்த்தைகளினூடே அந்த இரவினை நானும் உடனிருந்து கடந்து, இதோ அந்த பாடல் காதில் மெலிதாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.

    நல்ல அனுபவம்.

    எனக்கும் சில கேள்விகள் இருக்கின்றன.ஒரு 10ஆண்டுகள் போல த மு எ ச வில் தோழர்களுடனிருந்து எல்லாவற்றிலும் ஆர்வமுடன் பங்கெடுத்தப்பின் இப்போது ஒரு வெறுமையே மனதில் நிலைக்கிறது.

    பெரும் பன்னாட்டு நிறுவனங்களைப்போல மக்களின் பேர் சொல்லி ஆட்சிக்கு வரும் அரசுகளும் சிந்தனையை சுதந்திரத்தை எல்லாவற்றையும் மழுங்கடித்து ஒரு பண உருவாக்க அடிமை எந்திரங்களாய் எல்லோரையும் உருமாற்றி விடுமோ என பயமாக இருக்கிறது.

    ஆறுகளை இழந்து விட்டோம் அது பற்றிய பிரக்ஞை இல்லாமலே..

    இன்னும் மொழியும் காற்றும் மனித மனங்களும் கொஞ்சம் போல எஞ்சியிருக்கின்றன.
    உங்களைபோன்றவர்களின் மீதான நம்பிக்கையினூடே.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. அப்புறம் தோழர்,
    ஆட்டிடையர்களை பற்றி ஒரு நேர்க்கோடான விஷயங்கள், சின்ன வயசில் காடுகளில் உடன் அலைந்த நினைவலைகளை கிளப்பிவிட்டது.
    ப்ளாஸ்டிக் பாட்டில்கள் தவிர்த்து எல்லாம் ஒன்று போல பொருந்தி வருகிறது.அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  3. மாதுவின் விவரிப்பில் நீண்ட இந்த பயணக்கட்டுரைக்குள் கீதாரிகள் மேலே நிற்பதுவும். ஒளிந்துகிடக்கும் கலை இலக்கிய இரவுகள் குறித்த விவாதம் கும்கியால் தொடங்கிவிடப்பட்டதும் நண்மைக்கே. மக்கள் எதையோ தேடி வருகிறாகள்.
    சில சமரசங்கள் அவர்களின் பார்வயிலிருந்தும் நெடுநாள் ஒளித்து வைக்க முடியாது போகிறது. மீண்டும் அவர்கள் புறப்பட்ட இடத்துக்கு திரும்புகிறார்கள். இந்தப்பயணத்தின் இடையில் சில நல்ல இலக்கியங்களை, சினிமாவை, மனிதர்களை இனங்கண்டு கொள்ளமட்டும் முடிந்திருக்கிறது. சாத்தூரில் முதல் கலை இலக்கிய இரவை நடத்தி முடித்தவுடன் தமிழ்நாடே திரும்பிப்பார்த்தது. அந்த அனுபவத்தையும், பேனரையும் தூக்கிக்கொண்டு போய் எட்டுகலை இலக்கியயை இரவுகள் நடத்திக் கொடுத்தோம். அதில் செலவழிந்த மனிதநாட்கள், இழப்பும் கண்ணுக்குத் தெரியாதவை மீளக்கிடைக்காதவை. எத்தனை ராத்திரிகள் செவிக்குணவாக மாறியது. காய்ச்சலோடு முனகிய கைக்குழந்தையை வைத்துக்கொண்டு மனைவிகள்
    கடத்திய நாட்களையும் அவர்களின் வார்த்தைகலையும் நசுக்கியது விடிகாலை கொடுத்த காய்ந்த முத்தம். உடன் வந்த இளைஞர்களுக்கு இப்போது அது மலரும் நினைவுகளாக மட்டும் இருக்கிறது, ஆனால் இன்னும் இன்னும் அந்த ஒத்தைத்தட்டு வேஷ்டியை உடுத்தியபடி அலைந்து கொண்டிருக்கிறார் நன்மாறன். அவர் மேடையேறிய காலங்களில்
    பிறந்திருக்காத, அதே ஊர் மனிதர்கள் நக்கலாக பாராளுமனரத்துக்குள் நுழைகிறார்கள் ஆயிரம் கார் பவனி வர.

    பதிலளிநீக்கு
  4. கண்முன் கொண்டு வந்த தங்கள் பயண அனுபவத்திற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  5. பதிவு மிக அருமை.

    ஆனால் அந்த முதல் வரிகள் தான் என்னால் ஜீரணிக்க முடிய வில்லை.,

    தசாவதாரம் சினிமாவை உலகம் சுற்றும் வாலிபனோடு கம்பேர் செய்தல். அடுக்குமா.

    கமலின் நடிப்பு எங்கே. பூவராகவன் பாத்திரத்தில் அப்படியே நம் கண் முன்னால் நாகர்கோயில், களியக்காவிளை, வில்லுக்குறி செல்வின் பறையரை அல்லவா கொண்டு வந்தார்.

    படத்தின் வசனங்கள் ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காத சுவை உடையவை.

    முகுந்தா பாடலில் சிதம்பரம் ஊருக்கு என்னை கூடி செல்ல வில்லை, அப்படியே ஒரு அய்யங்கார் ஆத்து நவராத்ரி அல்லவா என்னை உணர வைத்தார்.

    பாலத்திலிருந்து லாரியில் ஏறி குதித்து தப்பி ஓடும் பொது ஸ்ரீ ராம ஜெயம் என்பதாக இருக்கட்டும்., விமான நிலையத்தில் சண்டிகர் காவலாளி அந்த பாடகரும் என் சொந்த ஊரை சேர்ந்தவர் என்று பெருமிதம் கொள்வதாக இருக்கட்டும்.

    எதை விட எதை எழுத.

    என்னால் இன்னும் அந்த comparisanai நினைத்து கூட பார்க்க முடிய வில்லை.

    பதிலளிநீக்கு
  6. Sathuril eppo tholar kalai iravu...

    kalai irvai tholaiththathu tha.mu.ye.sa than....

    tamil naattin kalachara vadivamaga antha iravugalai matri irukka vendum.... mudiyum...

    makkal athe veppathodum nambikkai kalodum kaththu nirkiraarkal...

    tha.mu.ye.sa....!!!???

    பதிலளிநீக்கு
  7. அற்புதமான இடுகை

    இடையர்களின் வாழ்வு குறித்து மனதில் கிளறிய போது, சோளகர் தொட்டியில் வந்த சோளகர்கள் ஒரு கணம் வந்து போனார்கள்.

    நன்மாறன் ஒரு அதிசய தோன்றலாகாவே தெரிகிறது. இயல்பாய் இருப்பதுதான் அதிசயமோ?

    //மக்கள் டிவி//
    மக்கள் தொலைக்காட்சி

    விடிய விடிய கூட்டம் என்பது எனக்கு அனுபவம் இல்லாதது, ஆனால் விடிய விடிய கூத்துப் பார்த்த அனுபவம் உண்டு

    //களைப்பிலும் மலர்ச்சியோடு இருந்த அவரது முகம் சில நம்பிக்கைகளைச் சொன்ன மாதிரி இருந்தது//

    இதுதான் பல நேரங்களில் அயர்ச்சியிலிருந்து நம்மை மீட்டெடுத்து செல்கிறது..

    நல்லதோரு இடுகை
    நன்றி

    பதிலளிநீக்கு
  8. அழைப்பிதல்

    நிகழ்ச்சி : மூன்றாம்பிறை
    நாள் : உங்கள் நாள்
    நேரம்: உங்களின் நேரம்

    வரவேற்பு : கவிதைகள்

    அன்புடன்,
    சந்தான சங்கர்.

    (மொய் எழுதவேண்டாம்
    மெய் எழுதிவிட்டு செல்லுங்கள்.)

    பதிலளிநீக்கு
  9. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களின் "பாட்டையா" சிறுகதையின் பாதிப்பு இன்னும் மனதை விட்டு
    அகலவேயில்லை.அவருக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்த செய்தியை அறிந்து மனதுக்குள் பெரிதும்
    மகிழ்ந்த வாசகன் நான்.

    மாதவராஜின் மொழி நடையில் மீண்டும் அவரைப் பற்றி வாசிப்பதில் மகிழ்ச்சியும் நெகிழ்வும் !!

    //இலக்கிய உலகம் இதுவரை சரியாகத் தொட்டிராத ஆட்டிடையர்கள்
    வாழ்வு அப்படிப்பட்டதாக இருப்பதாகச் சொன்னார் //

    வலையுலகில் "ஆடுமாடு" என்று ஒருவர் எழுதுகிறார்.நேரம் கிடைக்கும் போது வாசித்து பார்க்கவும்.

    http://aadumaadu.blogspot.com/

    பதிலளிநீக்கு
  10. உங்களின் பயணக்கட்டுரைகள் எப்போதுமே உங்களுடன் பயணித்த அனுபவத்தை தந்துவிடுகிறது.

    அற்புதம்

    பதிலளிநீக்கு
  11. தங்களின் எழுத்தால் கவரப்பட்டவர்களில் யானும் ஒருவன். நல்லதோர் பதிவு.
    விலங்கினம் போல் அசைபோட வைத்துள்ளன தங்களது எழுத்து வழி உள்வாங்கப்பட்ட எண்ணங்கள்.
    இயங்கியல் வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டமாகவே இந்த ஆட்டிடையர்களது வாழ்வைக் காணலாம்.
    1. முன்னொரு காலத்தில் மாடு மேய்க்கும் தொழிலைச் செய்த ஆபிரிக்கச் சமூகம் தங்களது மேல் வாய்ப் பற்களைப் பிடுங்கும் நாகரீகத்துடன் இருந்திருக்கிறார்கள்.
    2. இன்னுமொரு முந்தைய ஆபிரிக்கச் சமூகம் இரும்புக் கனிம வளத்துடன் இருந்ததால் இரும்பிலான ஆபரணங்களை அணிவதான நாகரீகத்துடன் வாழந்ததாக முன்பு வாசித்தவை ஞாபகத்தில்....
    நன்றி!
    முகிலன்
    தோரணம்

    பதிலளிநீக்கு
  12. இம்மாதிரியான நிகழ்சிகளுக்கு முன் கூட்டியே தெரிவித்தால் ஓடோடி வருவோமே!

    பதிலளிநீக்கு
  13. நன்மாறன் அவரை பற்றி படித்தபோது அவர் போல வாழ்ந்து மறைந்த திரு ஹேமசந்திரன்மற்றும் திரு மணி அவர்கள் நினைவில் வந்து போனார்கள்.

    உங்களின் பயணக்கட்டுரைகள் உங்களுடன் பயணித்த அனுபவத்தை தந்தது. அற்புதம் தோழர்

    பதிலளிநீக்கு
  14. இயல்பான பதிவு, எதையும் தவறவிடாமல் பதிவு செய்த பாங்கு, உடன் பயனிக்கவில்லையே என்ற ஏக்கத்தை கொடுக்கிறது.

    இதுபோன்ற கலை இரவுகள், அல்லது கூட்டங்கள் நடைபெறும் தகவல்களை முன்கூட்டியே உங்கள் வலைப்பூவில் இட்டால், பயனாக இருக்கும் என நம்புகிறேன்.

    நண்பர் கதிர் சொன்னதுபோல
    சோளகர் தொட்டி யை நினைவூட்டுகிறது. அதற்கான இணைப்பை இத்துடன் இட்டுள்ளேன்.

    http://tamilamutham.net/site/index.php?view=article&id=385&option=com_content&Itemid=35

    நன்றி
    அன்புடன்
    ஆரூரன்

    பதிலளிநீக்கு
  15. அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
    உங்கள் அனுபவத்தை அனுபவித்துப் படித்த போது உண்மையில் கொஞ்சம் பொறாமையாக இருந்தது அங்கிள்!
    :-))

    பதிலளிநீக்கு
  16. தோழரே,

    உங்களுடனே கலை இரவில் பங்கேற்ற உணர்வு ஏற்பட்டது. நன்றி. உங்கள் ஆதங்கம் உண்மையே.. மனது சில சமயம் வெறுமையை உணர்கிறது.

    ஒவ்வொரு மேடையின் கீழேயும், தள்ளியும் கலைஞர்களுக்கான வெளிகள் அரிதாரமில்லாமல் உதிர்ந்து கிடக்கின்றன வாடாமல்!
    சிறிது நேரத்தில் மெல்லிய அந்த இசை விரிந்தது. ‘காற்றின் மொழி ஒலியா இசையா’ சட்டென எல்லாம் புரிந்த மாதிரி இருந்தது. பரவசமாயிருந்தது. மலைகள், வானம், வெளி என காட்சி முழுவதும் இசையில் மிதக்க ஆரம்பித்தது. ராஜபாளையம் போய், மேலாண்மறைநாடு சென்று மேலாண்மை பொன்னுச்சாமியை இறக்கிவிட்டு சாத்தூருக்குச் செல்ல இன்னும் மூன்று மணி நேரங்கள் ஆகலாம். அதற்கென்ன....? இப்படி எல்லாம் கரைந்து போகிற மனநிலையில் எவ்வளவு தூரமானாலும் பயணம் செய்யலாம்.


    உங்கள் உணர்வுகள் படிக்கும் அனைவரையும் தோற்றி கொள்கிறது . உங்கள் மொழி வளம் வியக்க வைக்கிறது..

    பாராட்டுக்கள்.

    பவித்ரா.

    பதிலளிநீக்கு
  17. கும்க்கி!
    கலை இலக்கிய இரவுகளில் பணியாற்றியவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும் உள்ளே படர்ந்து கொண்டிருக்கும் உணர்வுகள்தான் இவை. விளைவுகள் குறித்து யோசிக்கிற போதோ, ஸ்டிரியோ டைப்பான நிகழ்ச்சிகளும், பாடல்களும் இப்படித்தான் சிந்திக்கவிடுமோ என்னவோ. நம்மைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது.


    காமராஜ்!
    உண்மைதான் தோழனே!


    சந்தனமுல்லை!
    நன்றி.

    ராம்ஜி யாஹூ!
    நன்றி. எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமிக்கு அப்படி தென்பட்டிருக்கிறது. அதைத்தான் தெரியப்படுத்தி இருந்தேன். இதனோடு கொஞ்சம் உடன்பாடு எனக்கும் உண்டு. சீரியசான ஒரு படத்தை கிரேஸி மோகன் கலாட்டாக்கள் போல ஆக்கியது எரிச்சலையே உண்டாக்கியது.


    இலக்கியா!
    கும்க்கிக்கு சொன்னதுதான் உங்களுக்கும் தோழரே!


    கதிர்!
    பகிர்வுக்கு நன்றி.


    சந்தான சங்கர்!
    வருகைக்கும் அழைப்புக்கும் நன்றி. அவசியம் படிக்கிறேன்.


    ராம்!
    நன்றி.


    செய்யது!
    மிக்க நன்றி. ஆடுமாடு வலைப்பக்கத்தை சமீபமாக படித்து வருகிறேன். அவருடைய எல்லாப் பதிவுகளையும் ஒருநாள் மொத்தமாய் படிக்க வேண்டும்.


    அமிர்தவர்ஷிணி அம்மாள்!
    நன்றி.


    முகிலன்!
    உங்கள் பாராட்டுக்கள் உற்சாகமளிக்கின்றன. தகவல்களுக்கு நன்றி.


    வால்பையன்!
    இனி கண்டிப்பாகச் சொல்கிறேன். சரி, சாத்தூரில் ஒரு பதிவர் சந்திப்பு நடத்தலாமா?

    நாஞ்சில்நாதம்!
    நன்றி.


    ஆரூரன் விசுவநாதன்!
    நன்றி. நேற்று கதிரோடு பேசினேன். உங்களைப் பற்றி சொன்னார். சந்திப்போம்.நீங்கள் குறிப்பிட்ட சுட்டியை படித்து விடுகிறேன்.


    தமிழர்ஸ்!
    நன்றி.

    தீபா!
    பொறாமையாகவா இருக்கு.....! இது எனக்கு ஆச்சரியமா இருக்கு.


    பவித்ரா!
    மிக்க நன்றி தோழரே! நாம் நம்மைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதுதான் என் ஆதங்கம். உங்கள் பாராட்டுக்கள் உற்சாகமளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  18. //வால்பையன்!
    இனி கண்டிப்பாகச் சொல்கிறேன். சரி, சாத்தூரில் ஒரு பதிவர் சந்திப்பு நடத்தலாமா?//


    மதுரையில் இருக்கும் நண்பர்களையும் சேர்த்து கொள்ளலாம்!
    சனி,ஞாயிறு வருவது போல் நீங்களே ஒரு நாள் தேர்ந்தெடுத்து சொல்லுங்கள்!

    பதிலளிநீக்கு
  19. நன்றி வால்பையன்!
    சட்டென்று அதிரடியாக இறங்கி விட்டீர்கள்...!
    நன்றி. யோசித்து இரண்டொருநாட்களில் தங்களுக்கு மெயில் அனுப்புகிறேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!