மக்களின் ரத்தத்தால் எழுதப்பட்ட மறக்க முடியாத அத்தியாயங்கள்

வெளிநாடுகளில் படிப்பதற்கும், பஞ்சம் பிழைக்கவும் சென்ற இளைஞர்கள் அங்கிருந்து குழுக்களாகச் சேர்ந்து இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு தங்கள் பங்கை வெகுவாக ஆற்றினர். மேடம் காமா பாரிஸிலிருந்து

நமது எதிரிகள் வன்முறையைத் தூண்டும்போது நாம் மட்டும் எப்படிச் சும்மா இருக்க முடியும். நாம் வன்முறையை உபயோகிக்கிறோம் என்றால் அந்த எல்லைக்கு விரட்டப்பட்டு இருக்கிறோம் என்றுதான் அர்த்தம்” - இந்திய மக்களுக்கு ஒரு செய்தி என வந்தே மாதரம் பத்திரிகையில் மேடம் காமா

வந்தே மாதரம்’ எனும் பத்திரிகை நடத்தினார். ‘இண்டியன் சோஷியாலிஜிஸ்ட்’ என்னும் பத்திரிகை கிருஷ்ண வர்மாவால் லண்டனில் இந்தியா ஹவுஸில் இருந்து கொண்டு வரப்பட்டது.


 

மக்களின் கோபத்தை மட்டுப்படுத்த காங்கிரஸை அமைத்தபோதும் நாடெங்கும் தீவீரவாதம் தலைதூக்கியது. பிரிட்டிஷ் அரசாங்கம் அதனை நீர்த்துப் போகச் செய்வதற்கான உபாயங்களை கண்டுபிடிக்கலாயிற்று. அதனுடைய விளைவுதான் மிண்டோ-மார்லி சீர்திருத்தங்கள். அதன்படி, குறைந்த அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும், நிலப்பிரபுக்களும், பிரிட்டிஷ் வியாபாரிகளும் கொண்ட மாகாண சட்டசபைகளைக் கொண்டு வந்தார்கள். தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிற உரிமை கிடைப்பதனால் - மக்களின் பிரதிநிதிகளைத் தேர்தெடுக்கிற உரிமை கிடைப்பதனால்- மக்களின் ஆத்திரம் இப்படியாவது உதிர்ந்து போகும் என்று ஆங்கிலேயர் கணக்கு போட்டனர். இதில் மிக மோசமான அம்சம் மதரீதியில் பிரதிநிதித்துவம் கொடுப்பதற்கும் வழிசெய்யப்பட்டதுதான். முஸ்லீம் லீக் ஆரம்பிக்கப்படுவதற்கு இதுவே அடிகோலியது.

 

 

1911ல் பிரிட்டிஷ் அரசரும், அரசியும் இந்தியா வந்தனர். அப்போதுதான் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது. அதனையொட்டி 1912ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி வைசிராய் யானையின் மேல் உட்கார்ந்து டெல்லிக்குள் கோலாகலமாய் நுழைந்தான். அவனுக்கு அருகே வெடிகுண்டு வீசப்பட்டது. வைசிராய் பலமாய் காயமடைந்தான். அமீர்சந்த், ஆபோத் பெஹாரி, பால் முகுந்த், பஸந்தா பிஸ்வாஸ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.

 


1914ல் ஐரோப்பிய நாடுகளுக்கிடையே நடந்த சந்தைக்கான போட்டியில் முதல் உலகப் போர் மூண்டது. ஆங்கிலேயர் இந்த நேரத்தில் இந்தியாவை இன்னும் கடுமையாகச் சுரண்டினர். போர்ச்செலவுகளை இந்திய மக்களின் மீது திணித்தார்கள். இந்திய வீரர்கள் கட்டாயமாகத் தேர்வு செய்யப்பட்டு ஐரோப்பிய போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டனர். பலர் அங்கு அடையாளம் இன்றி இறந்து போனார்கள்.

 

 

G2

இந்த நேரத்தில் சுயராஜ்ஜியம் கோரி ‘ஹோம் ரூல்’ இயக்கம் துவக்கப்பட்டது. அன்னிபெசண்ட் அம்மையாரும், திலகரும் இதனை மக்களிடம் எடுத்துக்கொண்டு போனார்கள். காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து 1915 ஜனவரியில் ஒரு தலைவராகவே இந்தியா வந்திருந்தார். அவர் இந்த ஹோம் ரூல் இயக்கத்தில் கலந்துகொள்ளாமல், பார்வையாளராக இந்தியா முழுவதும் பிரயாணம் செய்து இந்திய விவசாயிகள், தொழிலாளர்களின் வாழ்க்கையை உணர்ந்து கொண்டிருந்தார். சம்ப்ரான், கேரா, அகமதாபாத் ஆகிய பகுதிப் போராட்டங்களை வழிநடத்தினார். காங்கிரஸிலிருந்து வெளியேறிய தீவீரவாதக்குழுவினர் மீண்டும் அதில் சேர்ந்து இருந்தனர். காங்கிரஸும் முஸ்லீம் லீகும் நெருக்கமாயிருந்தன. திலகர், பஞ்சாபிற்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. அன்னிபெசண்ட், அபுல்கலாம் ஆசாத் போன்றோரும் வீட்டுச்சிறை வைக்கப்பட்டனர். உலகப்போருக்குப் பின்னரே இந்தத் தடைகள் நீக்கப்பட்டன. வங்காளத்தில் மட்டும் 3000 பேருக்கு மேல் சிறைகளில் அடைக்கப்பட்டனர். கொடும் சித்திரவதை தாங்காமல் நாகேந்திரா தத்தா, பிரதோப் சிங் போன்றோர் இறந்தும் போனார்கள்.

 

 

1913 நவம்பர் 1ம் தேதி சான்பிரான்சிஸ்கோவிலிருந்து கத்தர்- அதாவது புரட்சி (ghadar) - என்னும் பத்திரிகை வெளியிடப்பட்டது. அங்கிருந்த நிறைய இந்திய புரட்சியாளர்கள் சேர்ந்து இதனை வழிநடத்தினர். பெருமளவில் இதில் சீக்கியர்கள் இருந்தனர். தொடர்ந்து கத்தர் கட்சியும் ஆரம்பிக்கப்பட்டது. பாபா சோகன்சிங் பக்னா மற்றும் லாலா ஹர்தயாள் ஆகியோர் இந்த இயக்கத்தை வழிநடத்தினார்கள். 1914ல் முதல் உலகப்போர் மூண்டது. கனடாவிலிருந்த இந்தியர்களை நாடு திரும்பி கிளர்ச்சி நடத்துமாறு கத்தர் இயக்கம் அறைகூவல் விடுத்தது. அதன்படி இங்கு வந்து அவர்கள் புரட்சிகர இயக்கங்களில் ஈடுபட்டனர். பலர் கைதாயினர். தூக்கிலிடப்ப்பட்டனர். பிரிட்டிஷாரின்

நான் என்னைக் காப்பாற்றிக் கொண்டு அன்னியரின் ஆதிக்கத்திற்கு எதிரான எனது நடவடிக்கைகளை ஒரு போதும் நிறுத்த மாட்டேன்.” கத்தர் இயக்கத்தைச் சேர்ந்த 18வயது கர்த்தார்சிங் நீதிமன்றத்தில் முழங்கினார். இந்திய இளைஞர்களின் மனதில் இந்த வார்த்தைகள் தீ வளர்த்தன. அப்படி ஈர்க்கப்பட்டவர்களில் ஒருவர் பகத்சிங்!
ghadar_flag2

கொடுமை தாங்காமல் சீக்கியர்கள் ‘காமகாதமாரு’ என்ற கப்பலை வாடகைக்கு எடுத்துக்கொண்ட் கனடாவுக்குச் சென்றனர். கனடா அரசு அவர்களை ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பியது. 1914 செப்டம்பர் 27ல் கல்கத்தாவுக்குத் திரும்பிய அந்தக் கப்பலை ஆங்கிலப்படை தாக்கியது. 18பேர் கொல்லப்பட்டனர். நிறைய பேர் காயமடைந்தார்கள். 29 பேர் காணாமல் போனார்கள். எஞ்சியவர்கள் தப்பி பலகாலம் தலைமறைவாகவே இருந்தனர். பிரிட்டிஷ் அரசாங்கத்தால் சின்னா பின்னாமாக்கப்பட்டாலும், கத்தர் இயக்கத்திற்கு மக்களிடம் ஆதரவு இருந்தது. இனம், மொழி, மத வேறுபாடின்றி மக்களை ஒன்றுபடுத்த முனைந்ததில் கத்தர் இயக்கத்திற்கு பெரும்பங்குண்டு.

 


முதல் உலகப்போரின் போது ‘அனுசிலான் சமிதி’ என்கிற புரட்சிகர அமைப்பு இந்திய இராணுவத்திற்குள் கிளர்ச்சியை ஏற்படுத்த முனைந்தது. யுகாந்தர் கட்சியோ ஜெர்மனியின் உதவியோடு போர் நடத்த முனைந்தது. டாக்டர் செண்பகராமனும் இவர்களோடு இணைந்து செயல்பட்டார்.

 

இந்த இரு அமைப்புகளுக்கிடையில் கூட்டு நடவடிக்கை

செண்பகராமன் ஒரு எஞ்சீனியர். ஜெர்மனியிலிருந்த புரட்சிகரக்குழுவான பெர்லின் கமிட்டியோடு இணைந்து இந்திய விடுதலைக்காக பணியாற்றியவர். சென்னையில் குண்டு போட்ட எம்டன் கப்பலில் செண்பகராமன்  இருந்தார்.

இருந்தது. இதன் தலைவராக பகாஜெட்டின் திகழ்ந்தார். 1857 முதல் சுதந்திரபோரைப் போல ஒரு மாபெரும் எழுச்சிக்கு 1915 பிப்ரவரி 21 ஆம் நாள் திட்டமிட்டனர். பஞ்சாப் தொடங்கி பல மாநிலங்களில் பிரிட்டிஷ் ராணுவத்தில் உள்ள தேசபக்தி கொண்ட இந்திய வீரர்கள் மூலம் ஒரே நேரத்தில் ஆயுதப் புரட்சி நடத்த திட்டமிட்டனர். ஆனால் ஆயுதங்கள் திட்டமிட்டபடி இந்தியாவுக்கு வந்து சேராததால் தோற்றுப் போனது. பகாஜெட்டினும் அவர்களது தோழர்களும் கொல்லப்பட்டனர்.

 

 

ங்கிலேயருக்கு எதிராக துருக்கியில் தோன்றிய இயக்கம்தான் கிலாபத். முதல் உலகப்போரில் பிரிட்டிஷைத் துருக்கி எதிர்த்தது. பிரிட்டிஷ் எதிர்ப்பு என்கிற அடிப்படையில் எழுந்த இயக்கம் இந்தியாவிலும் வேகமாகப் பரவியது. ஜெர்மனியும் துருக்கியும் உதவ இந்திய விடுதலைக்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டன. சில ரகசியக் கடிதங்கள் 1916 ஆகஸ்டில் பிரிட்டிஷாரின் கைகளில் சிக்கியதால் அந்தத் திட்டம் நின்று போனது.

1917ல் ரஷ்யாவில் கொடுங்கோலன் ஜார் மன்னனை எதிர்த்து, கம்யூனிஸ்டுகள் தலைமையில் தொழிலாளர்கள் புரட்சி சோஷலிச அரசு அமைத்தார்கள். இந்தியப் போராளிகளுக்கு இது புதிய திசைகளைக் காட்டியது.

 

 

இந்தியாவில் பெருக்கெடுக்க ஆரம்பித்த புரட்சிகர இயக்கங்களை அழித்தொழிப்பதற்கு நீதிபது ரௌலட் என்பவர் தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. 1918ல் அந்தக் கமிஷன் தனது ரிப்போர்ட்டைக் கொடுத்தது. இஷ்டம்போல எவரையும் கைது செய்ய சட்டம் இயற்றப்பட்டதை எதிர்த்து நாடெங்கும் மக்கள் ஆத்திரத்தோடு கிளர்ச்சி செய்தனர்.

 


திருப்தி அடைந்திருந்த மக்களை சமாளிப்பதற்காக மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்தது. மிண்டோ -மார்லி சீர்திருத்தங்களின் அடுத்தக் கட்டமாக அவை இருந்தன. மாகாண சட்டசபைகளில் தேர்தெடுக்கப்பட்டவர்களால் ஆட்சியை நடத்த அதிகாரம் இல்லை. ஆட்சியில் செல்வாக்கு செலுத்த முடியும் என்று மட்டும் சீர்திருத்த வார்த்தைகள் இருந்தன. காங்கிரஸ் இதனைக் கடுமையாக ஆட்சேபித்தது. இந்தச் சட்டங்களை மறுத்து, சத்தியாக்கிரக யுத்தம் நடத்த காந்தி அறைகூவல் விடுத்து நாடெங்கும் மக்களிடையே பிரச்சாரம் செய்தார்.


 

ஏபரல் 6ம் தேதி அகில இந்திய எதிர்ப்பு தினமாக அறிவிக்கப்பட்டது. டெல்லி, பம்பாயில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் போலீஸாரின் துப்பாக்கிச் சூடுகள். இந்துக்களும் முஸ்லீமகளும் கொல்லப்பட, மக்கள் ஒற்றுமை பலமடைந்தது.


 

நான் சுட்டேன். சுட்டேன். கூட்டம் சிதறிப்போகும் வரை சுட்டுக்கொண்டே இருந்தேன். மக்கள் நெஞ்சிலே எவ்வளவு பயம் ஏற்படுத்த நினைத்தேனோ அந்த அளவிற்கு நான் சுடவில்லயென்றே நினைக்கிறேன்” -ஜெனரல் டயர்
jallianwala-bagh-1

பஞ்சாப் கவர்னர் மைக்கேல் ஓ.டயர் மக்களைக் கடுமையாக அடக்கி ஒடுக்கினான். டாக்டர் கிச்சலு, டாக்டர் சத்தியபால் தலைமையில் அமிர்தசரஸில் 1919 ஏப்ரல் 13 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜாலியன் வாலாபாக் என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் அமைதியாக நடத்தப்ப்பட்டது. நான்கு புறமும் மதிற்சுவரும், ஒரு குறுகிய வழியும் கொண்ட திறந்தவெளி மைதானம் அது. திடுமென ஜெனரல் டயர் த்லைமையில் ஒரு ஆங்கிலேயப்படை உள்ளே நுழைந்து சுட ஆரம்பித்தது. 15 நிமிடங்கள் குண்டுகள் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. பலர் அங்குமிங்கும் ஓடி உள்ளே இருந்த கிணற்றில் விழுந்து இறந்தனர். சில நிமிடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

 


இந்தியாவிலிருந்தே அந்த மாதம் பஞ்சாப் துண்டிக்கப்பட்டிருந்தது. அராஜகங்கள் தலைவிரித்தாடின. ஜாலியன் வாலாபாக் படுகொலையும், அரசின் அடக்குமுறையும் தேசம் முழுவதும் தீயெனப் பரவியது. மக்கள் பிரிட்டிஷ் அரசின் மீது கடுங்கோபத்தில் இருந்தனர்.

 


 

கிலாபத் கிளர்ச்சிகாலத்தில் இந்துக்கள் வெளிப்படையாக முஸ்லீம்கள் கையிலிருந்து தண்ணீர் வாங்கி குடித்தனர். மூஸ்லீம்களும் அவ்வாறே செய்தனர். இந்து முஸ்லிம் ஒற்றுமையே ஊர்வல கோஷமாகவும், கொள்கையாகவும் அறிவிக்கப்பட்டது. மசூதி மேடையிலிருந்து போட்னை செய்ய இந்து தலைவர்கள் அனுமதிக்கப்பட்டனர்” - பிரிட்டிஷ் அரசின் அதிகார பூர்வ ஆண்டறிக்கையில்.. (ரஜினி பாமிதத்தின் ‘இன்றைய இந்தியா’விலிருந்து.
khilafat movement

1920ல் கிலாபத் தலைவர்களும், காந்தியும் ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தனர். காங்கிரஸும், முஸ்லிம் லீகும் இந்த இயக்கத்தை தீவீரப்படுத்தி- தங்கள் மாநாடுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றி மக்களிடையே கொண்டு சென்றன. இயக்கத்தோடு காங்கிரஸ் உறுப்பினர்களைச் சேர்ப்பதிலும், பொதுநிதி ஏற்படுத்துவதிலும் ஈடுபட்டது. காங்கிரஸ் மக்களிடம் செல்வாக்கு பெற ஆரம்பித்தது.

 


1920 அக்டோபர் 17ல் இந்தியாவிலிருந்த புரட்சிகரக் குழுக்கள் தாஷ்கண்ட் சென்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினர்.

 


கேரளாவின் மலபார் மாவட்டத்தில் பெரிய நிலப்பிரபுக்கள் இந்துக்களாகவும், கொத்தடிமைகளாக மூஸ்லீம்களாகவும் இருந்தனர். வெகுகாலம் பிரிட்டிஷ் அரசு மாப்ளா மூஸ்லீம்களின் கோபத்தை மதரீதியானதாகவே திருப்பி வைத்திருந்தது. கிலாபத் இயக்கம் அந்த திசையையே மாற்றியது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மாப்ளார்கள் திரண்டனர். 1921 ஆகஸ்ட் மாதம் போலீஸ் 144 தடையுத்தரவு போட்டது. அடக்குமுறை நடவடிக்கைகளைக் கண்டு அஞ்சாமல் மாப்ளார்கள் போலீஸ் நிலையங்களைக் கைப்பற்றினர். அரசு கஜானாவை அபகரித்தனர். லட்சக்கணக்கில் ஈடுபட்ட மக்களின் போராட்டத்தால் மலபார் பிரதேசம் அவர்களது வசம் வந்தது. பிரிட்டிஷ் அரசு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஏராளமானோர் கொல்லப்பட்டனர். கடும் சித்திரவதைக்குள்ளானார்கள். அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர். சரக்கு ரயில் வண்டியில் நிற்கக்கூட இடமில்லாமல் போராளிகளை உள்ளே அடைத்து ரயிலை அதிவேகமாக ஓட்டினர். கோயம்புத்தூரில் வண்டி நின்றபோது, புழுக்களாய் செத்து விழுந்தனர். போராளிகள். 1857க்குப் பிறகு வரலாற்றில் அதிக அளவில் மக்கள் கொல்லப்பட்டது இந்தப் போராட்டத்தில்தான்.


 

பிரிட்டிஷ் இளவரசர் வேல்ஸ் 1921 டிசம்பரில் பம்பாய் வந்தான். அவனுக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கடையடைப்பு நடத்தியது காங்கிரஸ். பம்பாயில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், போலீசுக்கும் மோதல் நடந்தது. மக்களின் ரத்தச் சகதியில் பம்பாய் வெளிறிப்போனது. டிசம்பர் 24ல் கல்கத்தா வீதிகளிலும் போலீஸ் அட்டகாசங்கள். நாடு முழுவதும் மிகப் பெருமளவில் கைதுகள் நடந்தன.

 

 
ரஷ்யப் புரட்சியின் வெற்றியும்- அங்கு அமைந்த தொழிலாலர் நல அமைப்பும் இந்தியத் தொழிலாளர்களிடையே புதிய விழிப்பையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தி இருந்தன. 1920 அக்டோபர் 30ம் தேதி ஏ.ஐ.டி.யூ.சி பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது. லாலா ரஜபதி ராய் தலைமை தாங்கினார். 1921ல் அகமதாபாத்திலும், 1922ல் கயாவிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடுகள் நடத்தப்பட்டன.

அசாம் தேயிலைத் தோட்டத்தில்- நிலப்பிரபுக்களின் அட்டகாசங்களை எதிர்த்துத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். கூர்க்கா சிப்பாய்களால் அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அசாம் மற்றும் வங்காளத்தில் உள்ள ரெயில்வே தொழிலாளர்களும், துறைமுகத் தொழிலாளர்களும் வேலைநிறுத்தம் செய்தனர். காந்தி அகிம்சை வழிப் போராட்டமே நமது வழியாக இருக்க வேண்டும் என அறிவித்தார்.

 


போலீஸ் கொடூரமான முறையில் தாக்கும்போதும் சித்திரவதை செய்யும்போதும் மக்கள் அநீதிக்கு எதிரான இயல்பான ஆவேசத்தோடு கடுமையான போர் செய்தார்கள். இதை உ.பி மாநிலத்தின் சௌரி-சௌரா சம்பவம் உணர்த்தியது. 1922 பிப்ரவரி மாதம் 5ம் தேதி சௌரி-சௌராவில்

கொல்லப்பட்ட 22 போலீஸ்காரர்களுக்கும் பிரிட்டிஷ் அரசு சௌரி-சௌராவில் நினைவு மண்டபம் எழுப்பியது.
இந்திய சுதந்திரம் பெற்ற பின்பும் சௌரி-சௌரா சம்பவத்தில் பிரிட்டிஷாரால் கொல்லப்பட்ட 19 தியாகிகளுக்கு எந்தவித மரியாதையும் செய்யப்படவில்லை. சுதந்திரதின வெள்ளிவிழாவின்போது சௌரி-சௌரா மக்களே அந்த தியாகிகளுக்கு நினைவுத்தூண் எழுப்பினர். அதற்குப்பின் 10 ஆண்டுகளுக்குப் பின்பே இந்திய அரசு நினைவு மண்டபம் எழுப்பியது.

விவசாயிகள் தங்கள் எதிர்ப்புக்குரலை ஆர்ப்பாட்டங்கள் நடத்தித் தெரிவித்தார்கள். போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். தாக்குண்ட மக்கள் காலம் காலமாய் உறைந்து போன கோபத்தின் வெளிப்பாடாய் போலீஸ் ஸ்டேஷனுக்கு தீ வைத்து 22 போலீஸ்காரர்களைக் கொன்றார்கள்.

மக்களின் இந்தத் தன்னெழுச்சியைக் காட்டுமிராண்டித்தனம் என காந்தி கண்டித்தார். போராட்டம் வன்முறையாகிவிட்டது என்று ஒத்துழையாமை இயக்கத்தை வாபஸ் வாங்கினார். ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட பல தலைவர்களும், மக்களும் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் எந்த காங்கிரஸ்தலைவரும் பாதிக்கப்பட்ட சௌரி-சௌரா மக்களுக்கு ஆதரவாக வாயத் திறக்கவில்லை. நடந்த வன்முறைக்காக மார்ச் 10ம் தேதி காந்தி கைது செய்யப்பட்டார். ஆறு வருட சிறைத்தணடனை வழங்கப்பட்டது. தோற்றத்தில் பிளவு இல்லையென்றாலும், அணுகுமுறையில் இரண்டு குழுக்களாக பிரிந்தது காங்கிரஸ். அடுத்த 5 வருடங்களுக்கு பெரிய அளவில் மக்கள் போராட்டம் ஒன்றும் நடத்தப்படவில்லை. அணைக்கப்பட்ட விளக்கின் திரி கருகிய நாற்றம் தேசமெங்கும் சூழ்ந்தது.

 

முந்தைய பகுதிகள்:

வீர சுதந்திரம் வேண்டி - முதல் பகுதி

வீர சுதந்திரம் வேண்டி - இரண்டாம் பகுதி

வீர சுதந்திரம் வேண்டி - மூன்றாம் பகுதி

வீர சுதந்திரம் வேண்டி - நான்காம் பகுதி

 

*

கருத்துகள்

5 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. உங்களது இந்த தொடர் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. மிக அருமையான தொடர் மாதவராஜ். எல்லாவற்றிற்கும் பின்னூட்டம் போடாவிட்டாலும் விடாமல் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கின்றோம். :)

    பதிலளிநீக்கு
  3. ரௌலட் புரட்சியிலிருந்து ஞாபகம் இருக்கு.

    ஜெனரல் டயரை ஒரு பஞ்சாபி இளைஞன் பாரிஸ் நகரத்தில் கொன்றதாக படித்த ஞாபகம் (.

    மிக அருமையான தொடர் சார். நல்லாயிருக்கு

    பதிலளிநீக்கு
  4. செண்பகராமனை செண்பகராமனாக மாத்திரம் தான் இதுவரை பலர் எழுதி வந்திருக்கிறார்கள்.இப்போது எதற்கு
    அந்த பிள்ளை என்கிற சாதிய பெயர் அவசியமாகிறது? வீரன் செண்பகராமன் என்றாலே பலருக்குத் தெரிந்து விடுகிறது. இது போன்ற சாதியப் பேர்க்குறிகள் தேவையில்லை!

    பதிலளிநீக்கு
  5. அண்டோ!
    நன்றி.

    நந்தா!
    எப்படியிருக்கீங்க. உங்கள் வலைப்பக்கத்தில் பதிவுகள் எழுதி நாளாகிவிட்டதே! நீங்கள் படித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்பது உற்சாகமளிக்கிறது,.


    நாஞ்சில்நாதம்!
    ஆமாம். அந்த இளைஞன் பெயர் உத்தம்சிங். இருபத்தொரு வருடங்கள் காத்திருந்து 1949 மார்ச் 13ம் தேதி டயரைச் சுட்டுக்கொன்றார்.

    அனானி!
    உங்கள் கருத்தை முழுமையாக ஏற்கிறேன். Refer செய்த புத்தகத்தில் இருந்த வாசகங்களை வைத்து எழுதியது. எடுத்திருக்க வேண்டும். இப்போது எடுத்து விடுகிறேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!