காங்கிரஸின் கைமீறிய மக்கள் எழுச்சி!

கராச்சியில் காங்கிரஸின் அடுத்த மாநாடு.  கோபமும், அதிருப்தியும் கொண்ட இளைஞர்கள் காந்திக்கு கருப்புக்கொடி காண்பித்தார்கள்.

black flag to gandhi 
காந்திக்கு கருப்புக்கொடி

கடுமையான வருத்தங்களுக்கும், புகைச்சலுக்கும் மத்தியில் காந்தி-இர்வின் ஒப்பந்தத்தை மாநாடு ஏற்றுக்கொண்டது. ஆகஸ்ட் 29ம் தேதி காந்தி, இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டிற்காக இங்கிலாந்து சென்றார். டாக்டர் அம்பேதகாரும் அதில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக கலந்து கொண்டார். மதரீதியான பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டு இந்துமகாசபை, முஸ்லிம்லீகும் கலந்து கொண்டன. பிரதிநிதிகளை மக்கள் தேர்தெடுத்து அனுப்பவில்லை. பிரிட்டிஷ் அரசு தனது திட்டங்களை, மத வேறுபாடுகளை ஆழமாக்குவதற்கு ஏற்றாற்போல் கணிசமான பிரதிநிதிகளை அழைத்திருந்தது. சுயமாக அரசு நடத்துவதற்கு முன்பு, நாட்டில் உள்ள சமூகப் பாகுபாடுகளை சரிசெய்ய வேண்டும் என பிரிட்டிஷ் அரசாங்கம் விவாதம் கிளப்பியது. “அது எங்கள் உள்நாட்டு விவகாரம்” என்றார் காந்தி. “பிரிட்டிஷ் அரசும் தொடர்ந்து அரசில் பங்கு வகிக்க வேண்டும்” என சமஸ்தானத்து மன்னர்கள் வாலாட்டிக் குழைந்தார்கள். இந்துமகாசபையும், முஸ்லிம் லீகும் பிரிட்டிஷாருக்கு ஆதரவாகப் பேசி தங்கள் தேச பக்தியை வெளிச்சம் போட்டுக் காட்டின. சுயராஜ்ஜியம் என்பது இந்திய நாட்டின் வேற்றுமைகளை கைகாட்டித் தள்ளி போடப்பட்டது. 1931 டிசம்பர் 28ல் காந்தி வெறுங்கையோடு இந்தியா திரும்பினார்.

 


இந்தியத் தரையில் கால் வைத்த போது எல்லாம் இங்கு மேலும் இறுக்கமாகிப் போயிருப்பதை காந்தி உணர்ந்தார். புதிய வைசிராய் வெலிங்டன் கடும் நடவடிக்கைகளில் இறங்கியிருந்தான். நேரு, கான் அப்துல் கபார்கான் சிறையில் வைக்கப்பட்டு இருந்தனர். காங்கிரஸ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட இயக்கங்கள் தடைசெய்யப்பட்டிருந்தன. 1932 ஜனவர் 2ம் தேதி தனிநபர் சத்தியாக்கிரகம் மூலம் சட்டமறுப்பு இயக்கத்தை நடத்த காந்தி தீர்மானித்தார். உடனடியாக கைது செய்யப்பட்டார். ஆங்கிலேயரின் வன்முறை கடுமையானதாக இருந்தது. மக்களின் தியாகங்களும், தீரமும் தோல்வியில் முடிந்தன. 1934ல் சட்ட மறுப்பு இயக்கம் கைவிடப்பட்டது. காங்கிரஸ் மீதான் தடை நீக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீடித்தது. தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கை குறித்து காந்தி தனது சிந்தனைகளை செலுத்தினார்.

 

 

ambedkar  அம்பேத்கார்

தீண்டாமைக்கும், ஜாதீய ஒடுக்குமுறைக்கும் எதிரான பிரச்சாரமும், போராட்டமும் இந்த நேரத்தில் ஒருங்கே உருப்பெற்றிருந்தன. டாக்டர் அம்பேதகார் தாழ்த்தப்பட்டவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து, அவர்களின் வாழ்க்கைத்தரம் உயருவதற்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்துக்கொண்டார். சமூகத்தின் அடித்தட்டு மக்களின் உணர்வுகளை வெளிக்கொண்டு வருகிற முயற்சியாகவே இது இருந்தது. அவர்களின் கஷ்டங்கள், அவர்கள் மீது திணிக்கப்பட்ட கொடுமைகளிலிருந்து விடுதலை பெறாமல் நாடு மட்டும் எப்படி விடுதல பெறமுடியும் என்பது அவர் முன் வைத்த கேள்வியாக இருந்தது.

 

 

periyar2  பெரியார்
1937ல் ஹரிஜனப்பெண் விஜயலட்சுமி என்கிற சினிமா வெளியிடப்ப்பட்டது. தொழிர்சாலை இயந்திரங்களினால், கிராமத்து சக்கிலியர் ஒருவரின் வாழ்வு பாதிக்கப்படுவதை காட்டியது அப்படம்.

தமிழகத்தில் ‘பெரியார்’ என அழைக்கப்படும் ஈ.வே.ராமசாமி ‘சுயமரியாதை இயக்கம்’ ஆரம்பித்து சமூகநீதி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தினார். ஆரம்பத்தில் சுயமரியாதை இயக்கத்தில் இருந்த ஜீவா பின்னர் கம்யூனிஸ்ட் ஆனார். கேரளாவில் ஏ.கே.கோபாலன் தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயப்பிரவேசம் செய்யும் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினார். தமிழ்நாட்டிலும் இதுபோல ஆலயப்பிரவேசங்களும், கள்ளுக்கடை மறியல்களும் நடந்தன. காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியிலிருந்து விலகி பிறகு கம்யூனிஸ்டான பி.ராமமூர்த்தி இதுபோன்ற நடவடிக்கைகளில் தீவீரமாக பங்கெடுத்தார். காந்தி தாழ்த்தப்பட்டவர்களை ’ஹரிஜன்’ என பாவித்து ‘ஹரிஜன் சேவா சங்கம்’ இயக்கத்தை ஆரம்பித்தார்.

 


ஊழியர்களுக்கு காங்கிரஸின் செயல்பாடுகளில் அதிருப்தி உண்டாகியிருந்தது. சோஷலிசக் கருத்துக்களின் பால் ஈர்க்கப்பட்டிருந்தனர். 1934 அக்டோபரில் ‘அகில இந்திய காங்கிரஸ் சோஷலிச கட்சி’ ஆரம்பிக்கப்பட்டது. காங்கிரஸுக்குள் இருந்துகொண்டே அவர்கள் செயல்பட்டார்கள். அசோக்மேத்தா, ஜெயப்பிரகாஷ் நாரயண், ராம் மனோகர் லோகியா, இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் ஆகியோர் இந்த அமைப்பில் முக்கியமானவர்கள்.

 


 

பிரிட்டிஷாரின் நேரடியான ஆட்சி இந்தியாவில் இருந்த அதே சமயத்தில் 600க்கும் மேற்பட்ட குட்டி சமஸ்தானங்களும் இந்தியாவில் இருந்தன. அங்கும் பிரிட்டிஷாரின் மறைமுக ஆட்சியே நடந்தது. சமஸ்தானத்து மன்னர்கள் பிரிட்டிஷாரின் கிளிப்பிள்ளைகளாகவும், மக்களைச் சுரண்டுபவர்களாகவும் இருந்தனர். அவர்களுக்கு எதிராகவும் மக்கள் போராட்டங்களை நடத்திக்கொண்டு இருந்தார்கள்.

1935ல் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வந்தது. அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு கொடுக்கப்படும் எனச் சொல்லப்பட்டது. பிரிட்டிஷாரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் இவ்வகையான மக்கள் அதிகாரம் என்பது அடிமைத்தனத்தின் புதிய ஏற்பாடாகவே இருந்தது. நாட்டு விடுதலையோடு மக்கள் விடுதலையையும் இணைத்தே பார்த்த கம்யூனிஸ்ட் கட்சி இதனை எதிர்த்தது. ஏழ்மையையோ, சுரண்டலையோ இதன்மூலம் ஒழித்துவிட முடியாது என அவர்கள் தெளிவாக எடுத்துரைத்தார்கள். விதல்பாய் பட்டேல், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரும் இந்த புதிய அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்த்தனர். காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியும் ஏற்றுக்கொள்ளவில்லை. சத்தியமூர்த்தி, ராஜாஜி போன்றவர்கள் வரவேற்றனர். இறுதியில் “நாங்கள் இதையும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கிறோம்” என காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது.

 


1936ம் முக்கிய மூன்று புரட்சிகரமான அமைப்புகள் லக்னோவில் உதயமாயின. அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம், அகில இந்திய மாணவர்கள் சங்கம், அகில இந்திய கிஸான் சபை ஆகியவை இடதுசாரி கருத்துக்களோடு தங்கள் செயல்பாட்டை துவக்கின. வாய்க்கும், வயிற்றுக்கும் பொழுதெல்லாம் போராட்டம் நடத்தும் ஏழை விவசாயிகளின் பிரச்சினைகளின் வழியேதான் அரசியலைப் பார்க்க முடியும் என கிஸான் சபை கருதியது. அரசியல் வழியேதான் பிரச்சினைகளைப் பார்க்கவே முடியும் என்பது காங்கிரஸின் பார்வையாக இருந்தது.

 


1937ல் பிரிட்டிஷ்காரன் நடத்திய தேர்தலில் சொத்துவரி கட்டுவோருக்கு மட்டும்தான் வாக்குரிமை கொடுக்கப்பட்டது. மொத்தமுள்ள 1585 இடங்களில் 657 இடங்கள் பொதுவாகவும், 482 இடங்கள் முஸ்லிம்களுக்கு எனவும், மீதமுள்ள இடங்கள் இதர சமூகத்தினருக்கு என வரையறுக்கப்பட்டு இருந்தது. 1161 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 761 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இந்துமகாசபைக்கு பலத்த அடி. தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் பதவியை வகிப்பதா, பொறுப்புக்களை ஏற்பதா என்று கடுமையான சர்ச்சை காங்கிரஸில் கிளம்பியது. காங்கிரஸுக்குள் இருந்த இடதுசாரிகள் கடுமையாக எதிர்த்த போதும், 1937ல் காங்கிரஸ் கட்சி உ.பி, பீகார், ஒரிஸா, ம.பி, பம்பாய், சென்னை, அசாம் ஆகிய மாகாணங்களில் அமைச்சரவை அமைத்தது. சென்னையின் முதல் அமைச்சராக இருந்த ராஜாஜி, பம்பாய் வருமானவரி அமைச்சர் மொரார்ஜி தேசாய், பீகார் அமைச்சரவையில் இருந்த ஜெகஜீவன்ராம் போன்றோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

 


 

ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வோடு பிரச்சாரங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்திய சென்னை மாணவர்களை ராஜாஜி அரசு அப்போது கைது செய்தது. ஆங்கிலேயருக்கு அடிமையாக இருந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை எதிர்த்துப் போராடிய மாணவர் அமைப்புக்கு தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட் தலைவர் பாலதண்டாயுதம் கைதுசெய்யப்பட்டு மாவட்டத்திலிருந்தே வெளியேற்றப்பட்டார்.

விடுதலைக்காக போராடி அரசியல் கைதிகளாய் இருந்தவர்கள் அனைவரையும் தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரிகள் விடுதலை செய்வார்கள் என நம்பியிருந்தார்கள். 1937 ஜூலை 25ம் நாள் அந்தமான் சிறையிலிருந்த கைதிகள் விடுதலை கோரி தொடர் உண்ணாவிரதம் இருந்தார்கள். 1938ல் கல்கத்தாவில் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில், அரசியல் கைதிகளின் விடுதலைக்காக மாணவர்கள் ஊர்வலம் நடத்தினார்கள். காங்கிரஸ் அமைச்சர்கள் ஓரளவுக்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்தார்கள். தொழிலாளர்கள், விவசாயிகளின்பால் ஒருவித கரிசனத்தோடு ஆரம்பத்தில் அக்கறை செலுத்தினார்கள். குறுகிய காலத்தில் அவர்களும் அடக்குமுறையைக் கையாண்டனர். ஜமீந்தார் முறையை ஒழிப்பதில் அக்கறை காட்டவில்லை. கூலி உயர்வு பிரச்சினைகளுக்காக நடவடிக்கை எடுக்கவில்லை. வங்காளத்தில் சணல் ஆலைத்தொழிலாளர்கள் 74 நாட்கள் காலவரையறையற்ற வேலைநிறுத்தம் செய்தார்கள். தாகூர் இந்த வேலைநிறுத்தத்தை ஆதரித்து பத்திரிகையில் எழுதினார். பம்பாய், சென்னையிலும் போராட்டங்கள். பீகார், ம.பியிலும் அதே அலை. காங்கிரஸுக்குள் கடும் நெருக்கடி முற்றியது.

 


அமைச்சரவை அமைத்ததன் மூலம் தேச விடுதலைக்கான போராட்டத்திலிருந்து காங்கிரஸ் விலகிச் செல்ல நேரிடும் என இடதுசாரித்தலைவர்கள் கருதினர். சில காங்கிரஸ் தலைவர்கள் பிரிட்டிஷ் அரசோடு சோரம் போய்விட்டதாக சுபாஷ் சந்திரபோஸ் குற்றஞ்சாட்டினார்.

subash

நேரு உட்பட பல தலைவர்கள், சுபாஷ் சந்திரபோஸின் பேச்சைக்கேட்டு அதிருப்தி அடைந்திருந்த போதிலும், மக்களிடம் அவர் பெற்றிருந்த செல்வாக்கு, அவர்களது வாயை அடைத்தது. காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு சுபாஷ் சந்திரபோஸ் போட்டியிட்டு, காந்தியின் ஆதரவு வேட்பாளர் பட்டாபி சீதாராமையாவை தோல்வியுறச் செய்தார். ‘இது தனது தோல்வி’ என்று காந்தி தனது அதிருப்தியை வெளியிட்டார். சுபாஷ் தலைவர் பதவியை ராஜினாமாச் செய்தார். 1939 ஏப்ரல் மாதம் 3ம் தேதி பார்வர்டு பிளாக் கட்சியை ஆரம்பித்தார். காங்கிரஸ் அவரைக் கட்சியிலிருந்து நீக்கியது.

 

உலகச்சந்தை பங்கீடு போட்டி முதல் உலகபோரோடு முடியவில்லை. வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையும், பன்னாட்டு சங்கமும் தோற்றன. ஹிட்லரின் தலைமையில் போலந்தின் மீது படையெடுக்க, 1939 செப்டமபர் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் உலகப்போர் துவங்கியது. காங்கிரஸ் கட்சியையோ, அமைச்சர்களையோ கலந்தாலோசிக்காமல் இந்தியாவும் பிரிட்டனுக்காக போரில் கலந்து கொள்ளும் என பிரிட்டிஷ் அரசு அமைத்தது. இந்தியா தனது மனித சக்தியை இந்தப் போர்களின் மூலம் விரயம் செய்யாது என காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்தது.
பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்டன.

baombay strike

1939 பம்பாய் வேலைநிறுத்தம்

பத்திரிகைகளுக்கு கொஞ்ச நஞ்சமிருந்த சுதந்திரமும் பறிக்கப்பட்டது. 1939 அக்டோபர் 2ம் தேதி பம்பாய் தொழிலாளர்களின் அரசின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்தனர். காங்கிரஸ் அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இந்துமகாசபை ஆங்கிலேயருக்கு ஆதரவு கொடுத்தது. முழுச்சக்தியையும் திரட்டி சட்டமறுப்பு இயக்கம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் எழுந்தது. போராட்டத்தை இறுதிப்படுத்துகிற பொறுப்பை காந்தியிடம் ஒப்படைத்தது. “போரில் உதவினால், இறுதியில் இந்தியாவை முழு சுதந்திர நாடாக அறிவிப்பீர்களா?” என பிரிட்டிஷாரிடம் காங்கிரஸ் கேட்டுப் பார்த்தது. பிரிட்டிஷ் அரசு சம்மதிக்கவில்லை. ஒரு நெருக்கடியான நேரத்தில் அரசுக்கு மேலும் நெருக்கடி கொடுக்க விரும்பாத காந்தி ‘தனிநபர் சத்தியாக்கிரகம்’ அறிவித்தார். 1940 அக்டோபர் 17ம் தேதி முதல் சத்தியாக்கிரகியாய் வினோபா பாவே போருக்கு எதிரான பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

 


ஒரு அடையாளமாக மட்டுமே ஆரம்பிக்கப்பட்ட தனிநபர் சத்தியாக்கிரகம், தேசம் தழுவிய இயக்கமாக வளர்ந்தது. மக்களின் குமுறலும், போராட்ட உணர்வுகளும் தலைவர்கள் எதிர்பார்த்திராத வகையில் வெளிப்பட்டன. 1941 ஜனவரியில் சுபாஷ் சந்திர போஸ் தலைமறைவாகி பிரிட்டிஷாரை எதிர்ப்பதற்கான திட்டத்துடன் ஜெர்மனி சென்றார்.

 


 

gibbs

மிக உக்கிரமான உலகப்போர். ஜெர்மானியப் படைகள் ரஷ்யாவை ஊடுருவின. மலேயா, சிங்கப்பூர், பர்மா, அந்தமான் ஆகிய இடங்களை ஜப்பான் பிடித்துக்கொண்டது. இந்த வேளையில் 1942 மார்ச் 23ம் தேதி பிரிட்டிஷ் அரசின் யுத்தக்குழு உறுப்பினரான கிரிப்ஸ் தலைமையில் ஒரு தூதுக்குழு இந்தியத் தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆங்கிலேயர் எந்தவிதமான அதிகாரத்தையும் கொடுக்கப்போவதில்லை என்பது அந்தப் பேச்சுவார்த்தையில் அப்பட்டமாய் வெளிப்பட்டது. காங்கிரஸ் கிரிப்ஸ் தூதுக்குழுவை நிராகரித்தது.

 


ஜப்பானிய படைகள் இந்திய எல்லையைத் தாக்க ஆரம்பித்தன. “பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினால் ஜப்பான் தன் எதிரியில்லாத நாட்டை விட்டுவிடக்கூடும்” என காந்தி எண்ணினார். போர் அபாயத்தை தடுக்கும் ஒரு தந்திரமாக 1942 ஆகஸ்ட் 8ம் தேதி பம்பாயில் கூடிய காங்கிரஸ் கமிட்டி “வெள்ளையனே வெளியேறு” தீர்மானத்தை நிறைவேற்றி- போராட்ட அறைகூவல் விடும் அதிகாரத்தை காந்திக்குத் தந்தது. ஆனால் ஆகஸ்ட் 9ம் தேதி காலையிலேயே காந்தி, நேரு உட்பட அனைத்துத் தலைவர்களும் கைதுசெய்யப்பட்டனர். காங்கிரஸ் கட்சி தடை செய்யப்பட்டது. நாடெங்கும் போராட்டங்களும், கிளர்ச்சிகளும் தாமாக வெடித்தன. 1942 ஆகஸ்ட் 31ம் தேதி ஜெர்மனியிலிருந்து வானொலியில் “இந்திய மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடி பிரிட்டிஷ்காரர்களை அகற்ற வேண்டும்” என சுபாஷ் சந்திரபோஸ் பேச்சு ஒலிபரப்பப்பட்டது.

 


 

kanagalatha  வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பலியான பள்ளி மானவி கனகலதா
instruments during 1942 
தலைமறைவு காலத்தின் ரகசிய ஒளிபரப்பு மையம்

teargas bomay 
பம்பாயில் கிளர்ச்சியாளர்களை கலைத்திட கண்ணீர்ப் புகை குண்டு வீசப்படுகிறது

60000க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர். 10000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். தேச விடுதலைக்கான இயக்கம் குக்கிராமங்களையும் தொட்டது. இதில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி, முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சி பெரும் பங்காற்றின. ஜெயப்பிரகாஷ் நாராயனன் ஒரு தலைவராக உருவெடுத்தார். மிக அதிக அளவில் மாணவர்கள் கைதுசெய்யப்பட்டதும், தியாகங்கள் புரிந்ததும் இந்த வெள்ளியனே வெளியேறு இயக்கத்தில்தான். தலைவர்கள் தலைமறைவாகி சட்ட விரோதம் என அறிவிக்கப்பட்ட வானொலி அலைவரிசைகள் மூலமாகவும், பத்திரிகைகள் மூலமாகவும் மக்களைச் சந்தித்தனர். நேபாளம் அருகே வெடிகுண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலை இளைஞர் குழு ஒன்றால் அமைக்கப்பட்டது. 208 போலீஸ் ஸ்டேஷன்கள், 332 ரெயில் நிலையங்கள், 945 தபால் நிலையங்கள் ஆகியவை மக்களின் ஆக்ரோஷத்திற்கு இரையாயின. பீகார், வங்காளம், ஒரிசா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாகாணங்களில் பல இடங்களில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான தேசீய அரசாங்கங்கள் அமைக்கப்பட்டன. அகிம்சா போராட்டங்கள் மீறப்பட்டது குறித்து காங்கிரஸும், காந்தியும் வருத்தப்பட்ட போதிலும்,- பிரிட்டிஷ் அரசின் ரத்தவாடை வீசும் அடக்குமுறைகளை எதிர்கொள்ள மக்களின் ஆவேசம் தன்னெழுச்சியாய் உருவாவதை மௌனமாய் ஏற்றுக்கொண்டார்கள்.

 

முந்தைய பகுதிகள்:

வீர சுதந்திரம் வேண்டி - முதல் பகுதி

வீர சுதந்திரம் வேண்டி - இரண்டாம் பகுதி

வீர சுதந்திரம் வேண்டி - மூன்றாம் பகுதி

வீர சுதந்திரம் வேண்டி - நான்காம் பகுதி

வீர சுதந்திரம் வேண்டி - ஐந்தாம் பகுதி

வீர சுதந்திரம் வேண்டி - ஆறாம் பகுதி

 

*

கருத்துகள்

2 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. உங்கள் ப்ளாகில் Add-தமிழ் விட்ஜெட் சேருங்கள், தமிழின் அனைத்து திரடிகளிலும் உங்கள் பக்கத்தை இணைப்பது மிகவும் சுலபம் ! Add-தமிழ் விட்ஜெட் பெற www.findindia.net

    பதிலளிநீக்கு
  2. வாசித்தவர்களுக்கும், வாசித்துக் கொண்டு இருப்பவர்களுக்கும் நன்றி.

    நன்றி ராம்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!