புரட்சிகர முனைகளை மழுங்கடித்த காங்கிரஸ்!

1923 ல் பிரிட்டிஷ் அரசின் அதிகாரத்திற்குட்பட்ட மாகாண சட்டசபைகளில் பங்குபெற வேண்டும் எனவும், தேர்தலில் நிற்பது என்றும் காங்கிரஸில் மோதிலால் நேரு, சித்தரஞ்சந்தாஸ் போன்றோர் கருத்து தெரிவித்தனர். பின் தனியாக சுயராஜ்ஜியக் கட்சியையும் ஆரம்பித்தனர்.

 

கம்யூனிஸ்டுகளின் நடவடிக்கைகளால் கோபமடைந்த பிரிட்டிஷார் 1924ல் அவர்கள் மீது கான்பூர் சதிவழக்கு சுமத்தி ஒடுக்கப் பார்த்தனர். ஆங்காங்கே இருந்த கம்யூனிஸக் குழுக்கள் ஒன்று சேர்ந்து 1925ல் சிங்காரவேலுச் செட்டியார் தலைமையில் கான்பூரில் கட்சி மாநாடு நடத்தினர். முஜாபர் அகமது, எஸ்.வி.காட்டே, பாபா சந்தோஷ் சிங், முகமது ஹசன் கலந்து கொண்டனர்.

 

1927ல் சென்னை காங்கிரஸ் மாநாடு ‘முழுசுதந்திரமே தனது லட்சியம்’ என்றது. 1921லிருந்து காங்கிரஸுக்குள் இருந்த கம்யூனிஸ்டுகள் இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். ஒவ்வொருமுறையும் மிதவாதிகளால் தோற்கடிக்கப்பட்டது. சோவியத் யூனியனுக்கும், புருஸ்ஸல்ஸில் நடந்த

nehru

ஏகாதிபத்திய எதிர்ப்பு மாநாட்டிற்கும் சென்று வந்த ஜவர்ஹர்லால் நேரு இந்த முறை ‘முழுசுதந்திரம்’ என்கிற தீர்மானத்தை காங்கிரஸில் முன்மொழிந்தார். கம்யூனிஸ்டுகள் ஆதரிக்க,  தீர்மானம் நிறைவேறியது. இந்த தீர்மானம் முட்டாள்தனமானதும், பக்குவமற்றதுமாகும் என காந்தி எரிச்சலோடு சொன்னார். இதே சென்னை மாநாட்டில் சைமன் கமிஷனை புறக்கணிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

 

‘பிரிட்டிஷாரின் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் ஏற்பாடாகவே சைமன் கமிஷன் அமைக்கப்பட்டது. 1928 பிப்ரவரி 5ம் நாள் சைமன் பம்பாயில் காலடி எடுத்துவைத்த போது இந்தியா முழுவதும் ஹர்த்தால். முஸ்லீம் லீகின் ஒரு பகுதியினரும், இந்து மகாசபையில் (இன்றைய ஆர்.எஸ்.எஸ்) பெரும்பாலோரும் கமிஷனை ஆதரித்தார்கள். சைமன் சென்ற சென்னை, கல்கத்தா, லக்னோ, பாட்னா வழியெங்கும் ‘சைமனே திரும்பிப் போ’ என முழக்கமிட்டு ஊர்வலம் நடத்தினர். போலீஸார் தடியடி

 lala lajpat

லாலா லஜபதிராய்
என் மீது விழும் ஒவ்வொரு அடியும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் கல்லறை மீது அறையப்படும் ஆணியாகும்”

நடத்தினார்கள். லக்னோவில் நேரு தாக்கப்பட்டார். லாகூர் வீதிகளில் பழம்பெரும் தலைவரான லாலா லஜபதிராய் ஆபத்தான முறையில் காயமடைந்து, சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். அதுகுறித்து எந்த விசாரணையும் கிடையாது.

 

1929 ஏப்ரல் 8ம் தேதி டெல்லியில் பாராளுமன்றம் நடந்து கொண்டிருந்தது.  பொது விவாதங்களில் பாதுகாப்புச் சட்டம், தொழில்தகராறுச் சட்டம் தோற்கடிக்கப்பட்டன. வைசிராய் தனக்கு இருந்த வானளாவிய அதிகாரத்தை பயன்படுத்தி சட்டங்கள் செல்லுபடியாகும் என அறிவித்தார். அந்த விவாதத்தின் போதுதான் பகத்சிங்கும்,  அவரது தோழர்களும் இரண்டு வெடிகுண்டுகளை யார் மீதும் படாமல் பாதுகாப்பான இடத்தில் பயங்கர சத்தமெழ வீசிவிட்டு அங்கேயே நின்று “புரட்சி ஓங்குக!”, “ஏகாதிபத்தியம் ஒழிக” , “உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்” என கோஷமிட்டார்கள்.  ‘இந்துஸ்தான் சோஷலிச ரிபப்ளிகன் ஆர்மி’ பெயரில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார்கள்.

Bagatsingh  பகத் சிங்

 

பகத்சிங்கும், பட்டுகேஷ்வர்தத்தாவும் சிறையிலடைக்கப்பட்டனர். லாகூர் சதிவழக்கோடு சம்பந்தப்படுத்தி விசாரணை நடைபெற்றது. பல தோழர்கள் கைது செய்யப்பட்டனர். சிறையில் ஜதிந்திரதாஸ் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். கட்டாயமாக குழாய் மூலம் உணவு திணிக்கப்பட்டது. அவரது உடல் ஏற்றுக்கொள்ளவில்லை. 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து நாட்டுக்காக தன் உயிரை அர்ப்பணம் செய்தார். இந்த தியாகம் அதற்குமுன் எந்தக் காலத்திலும் நிகழாத அற்புதமாக மக்களைத் தட்டியெழுப்பியது.  1929 செப்டம்பர் 17ல் கல்கத்தாவில் சுபாஷ் சந்திர போஸ் தலைமையில்

jatin  ஜதிந்திர
   தாஸ்

ஜதிந்திரதாஸின் இறுதி ஊர்வலம் நடந்தது. மக்கள் வெள்ளம் நாட்டில் எவருக்கும் பின்னால் அப்படி ஒரு சோகத்தோடும், கோபத்தோடும் அதற்கு முன்பு திரண்டதில்லை. பகத்சிங்கும், அவரது தோழர்களும் தேசத்தின் மனசாட்சிக்கு உயிர் ஊட்டினார்கள். சிறையில் இருந்த பகத்சிங் மக்கள் மனதில் காந்திக்கு  ஈடான தலைவராய் உருவெடுத்தார்.

 

கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தொழிற்சங்க இயக்கங்கள் எழுச்சியினால் தேச விடுதலைப் போராட்டம் தொழிலாளர்களிடமும் பரவியது. 1928ல் பம்பாயில் நெசவாலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் ஆறு மாதங்கள் நீடித்தது. ரயில்வே உள்பட இதரத் தொழிலாளர்களும் இதற்கு ஆதரவு கொடுத்து பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடினர். இந்த சமயத்தில்தான் முழுசுதந்திரம் என்னும் கோஷம் மக்கள் உணர்வோடு கலந்தது.

 

இந்தியக் கம்யூனிஸ்டுகளுக்கு உதவிட பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பல்வேறு ஊழியர்கள் இந்தியாவுக்கு வந்தனர். கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு ஏற்படவும், ஆத்திரமடைந்த பிரிட்டிஷார், அக்கட்சியின் முக்கிய 31 தலைவர்கள் மீது பிரிட்டிஷ் அரசைக் கவிழ்க்க பொதுவேலைநிறுத்தம், ஆயுதப்புரட்சி மூலமாக திட்டமிட்டதாக மீரட் சதிவழக்கு தொடுத்தது. இவ்வழக்கில் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த பென்பிரட்லி,  பிலிப்ஸ் ஸ்ப்ராட், ஹட்சின்சன் ஆகியோரும் குற்றவாளிகளாக்கப்பட்டனர். இச்சதிவழக்கு விசாரணை குறித்து ஒவ்வொரு நாளும் வந்த செய்திகளும், குற்றம் சாட்டப்பட்ட கம்யூனிஸ்டுகளின் அறிக்கைகளும் நாடு முழுவதும் பிரபலமாகி, கம்யூனிஸத்தின் பால் ஈர்க்கப்பட்டார்கள் இளைஞர்கள்.

 

1929 டிசம்பர் 31ல் லாகூர் காங்கிரஸ் தேசக்கொடி ஏற்றி முழுசுதந்திரத்திற்காக போராட உறுதி பூண்டது. 1930 ஜனவர் 26ம் தேதியை சுதந்திரதினமாக அனுஷ்டிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சுபாஷ் சந்திரபோஸ் கைது செய்யப்பட்டு ஒருவருட சிறை எனத் தண்டிக்கப்பட்டார். 1930ல் மார்ச் 12ம் தேதி காந்தி தண்டி யாத்திரையை

thandi

துவக்கினார். உப்புச் சட்டத்தை மீறியதாக மே4ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் உப்புச்சத்தியாக்கிரகம், தர்சனாவில் சரோஜினி நாயுடு தலைமையில் யாத்திரை நடந்தது. எவ்வளவு தாக்குதல்கள் நடந்தாலும் அமைதிவழியில் செல்ல வேண்டுமென்பது காந்தியின் போதனை. போலீஸ் காட்டுமிராண்டித்தனமாக தடியடி பிரயோகித்து இரத்த வெள்ளத்தில் அனைவரையும் சாய்த்துவிட்டது.

 

1930 ஏப்ரல் 19ம் தேதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஒரு மணிக்கு சிட்டகாங்கில் இளம்புரட்சி வீரர்கள் திட்டமிட்ட தாக்குதல் நடத்தினார்கள். நகரைக் கைப்பற்றி சுயராஜ்ஜியமாக அறிவித்தனர். செய்தி தொடர்புகளைத்

3282382282_bf526ab48e  கல்பனா தத்

துண்டித்து விட்டனர். இந்தியன் ரிபப்ளிக் ஆர்மியில் சேர இளைஞர்களை அழைத்தார்கள். போராட்ட உணர்வை மீண்டும் எழுப்ப நடந்த புரட்சி இது. சூர்யாசென், நிர்மல்சென், கல்பனாதத், பிரித்திலதா போன்றோர் முக்கியமான தலைவர்கள். பிரிட்டிஷ் படை நகரத்தை முற்றுகையிட்டு- கொடூரமான தாக்குதல் நடத்தி கிளர்ச்சியை அடக்கினார்கள். கல்பனாதத் பின்னாளில் கம்யூனிஸ்ட் ஆனார்.

 

” நான் 
“கார்வாலிகளே! நிறுத்துங்கள்!” என்றேன்.  என் ஆணைக்குட்பட்டு ஆயுதங்களைத் தரையில் வைத்தார்கள்.”ஏன்” என்று ரிக்கெட் கேட்டார். நாங்கள் நிராயுதபாணிகளைத் தாக்க மாட்டோம். இந்த நாட்டைக் காப்பாற்றவும், நாட்டிற்கு சேவை செய்யவுமே நியமிக்கப்பட்டு இருக்கிறோம்.” மேஜர் சுந்தர்சிங் எழுதிய “இல்லை.துப்பாக்கிச் சூடு இல்லை” என்ற கட்டுரையிலிருந்து

‘எல்லை காந்தி’  என அழைக்கப்படும் கான் அப்துல்கபார்கான் அறைகூவலை ஏற்று 1930 ஏப்ரல் 23ல் அந்நியத்துணிகளை புறக்கணித்தனர் மக்கள். போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்த,  கொதித்து எழுந்த மக்கள் பீரங்கிகளுக்கு தீ வைத்தனர். பிரிட்டிஷார் கார்வாலி ராணுவ வீரர்களை அழைத்துச் சுடுமாறு ஆணை பிறப்பித்தார்கள். ராணுவ வீரர்கள் இந்துக்களாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் முஸ்லிம்களாகவும் இருந்தனர். ஆனாலும் ராணுவம் தன் சொந்தச் சகோதரர்களைச் சுடவில்லை. ராணுவத்திற்கு தலைமை தாங்கிய தாகூர் சந்திரசிங்கிற்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது. கடும் யுத்தத்திற்குப் பிறகு பேஷ்வார் பிரிட்டிஷ் வசமானது.  ஷோலாப்பூரில் தொழிலாளர்களும், கஞ்சில் விவசாயிகளும் நடத்திய கிளர்ச்சிகள் துப்பாக்கிகளால் வேட்டையாடப்பட்டன.

 

”நமது தலைவரால் இது நடந்திருக்கிறது. நாம் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் அவரை நாம் என்ன செய்ய முடியும்? அவரைத் தூக்கி எறியலாமா? அவரிடமிருந்து பிரியலாமா? அல்லது என் அதிருப்தியைத் தெரிவிக்கலாமா? எது நடந்தாலும் ஒரு தனிமனிதனாய் எனக்கு திருப்தி ஏற்படலாம். ஆனால் முடிவில் ஒரு மாற்றமும் ஏற்படப் போவதில்லையே. சட்டமறுப்பு இயக்கம் தற்காலிகமாக வாபஸ் வாங்கப்பட்டுவிட்டது. இதற்காகத்தான் கடந்த ஒரு வருடமாக மக்கள் போராடினார்களா?” ஜவஹர்லால் நேருவின் சுயசரிதையிலிருந்து.

வரிகொடா இயக்கம் போர்க்குணத்தோடும், தீவீரத்தோடும் எங்கும் நடைபெற்றது. கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிராவில் காடுகள் குறித்த சட்டங்கள் மறுக்கப்பட்டன. 92000 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர். பிரிட்டிஷ் அரசு  வட்ட மேஜை மாநாட்டில் காங்கிரஸை பங்குகொள்ள வைத்து நிலைமைகளைக் கட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டது. ஆனால் மக்கள் லட்சக்கணக்கில் இந்த வரிகொடா இயக்கத்தில் தீவீரமாக ஈடுபட்டிருந்த நிலையில், காங்கிரஸுக்கு தொடர்ந்து இயக்கத்தை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. பல தலைவர்கள் சிறையிலிருந்தார்கள். வட்டமேஜை மாநாட்டில் பங்குகொண்டால் தலைவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என பேச்சுவார்த்தை நடந்தது. இருப்பினும் மார்ச் 5ம் தேதி காந்திக்கும், வைசிராய் இர்வினுக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன் பிரகாரம் காங்கிரஸ் இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில் பங்கு பெறுவது எனவும், சட்டமறுப்பு இயக்கத்தை நிறுத்துவது எனவும் வன்முறையில் ஈடுபடாத அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வது எனவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

 

பகத்சிங்கின் தோழரான சந்திரசேகர ஆசாத்தை போலீஸ் தெடிக்கொண்டு இருந்தது. அவரை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வருபவர்களுக்கு 30000 ருபாய் சன்மானம் கொடுப்பதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. 1931

ChandrashekharAzad-large   சந்திரசேகர     ஆசாத்

பிப்ரவரி 27ம் தேதி அலகாபாத் ஆல்பிரட் பூங்காவில் போலீஸ் ஆசாத்தை சுற்றி வளைத்துச் சுட்டுக் கொன்றது. குண்டுகளிடமிருந்து தப்பிக்க,  ஆசாத் ஒளிந்திருந்த மரத்தைப் பார்க்க தினசரி மக்கள் கூட்டம் கூட்டமாய் திரண்டு வந்தனர். பிரிட்டிஷ் அரசுக்கு அந்த மரமும் பயத்தை ஏற்படுத்தியது. அதை வேரோடு பிடுங்கி எறிந்தது.

 

காந்தி-இர்வின்
ஒப்பந்தம் காங்கிரஸ் மகாசைபையில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு பகத்சிங்கின் வழக்கும்
அதன் தீர்ப்பும் தடையாகிவிடும் என்ற நிலைமை இருந்தது.
“அந்தப்பையன்களை தூக்கிலிட
வேண்டுமென்றால் கராச்சி காங்கிரஸ் கூடுவதற்கு முன்பே தூக்கிலிடுவது நல்லது” என
பிரிட்டிஷாரிடம் காந்தி சொன்னதாக, காந்தியின் வலதுகரமாக் விளங்கிய பட்டாபி சீத்தாராமையா எழுதிய காங்கிரஸ்
மகாசபை சரித்திரத்திலிருந்து...

பகத்சிங்கும் அவரது தோழர்களும் பாராளுமன்றத்தில் வெடிகுண்டை வீசியதற்காக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருந்தார்கள். லாகூர் சதிவழக்கில் சாண்டிரஸை கொன்றதற்காக, பிறகு தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது. 17.01.1930 தூக்கிலிடப்பட வேண்டிய நாள். தேதி தள்ளிப் போய்க் கொண்டு இருந்தது. பகத்சிஙகி தூக்கிலிடக்கூடாது என தேசமெங்கும் குரல் வீசியது. காங்கிரஸ் ஊழியர்கள் மனோநிலையில் வேகம் கூடியிருந்தது.

 

23.3.1931 திங்கள் இரவு 7.33 மணிக்கு பகத்சிங் தூக்கிலிடப்பட்டார். அவரது மரணம் தேசத்தையே உலுக்கியது. அந்த இளம் வயதில், இந்த தேசத்திற்காக அவர் செய்த தியாகம், கம்பீரமான வீரம் எங்கும் உணர்ச்சிகரமாக பேசப்பட்டது. சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் வங்காளத்தில் மிகப்பெரிய ஊர்வலம் நடந்தது.  ‘பகத்சிங்’ என்னும் பேரே ஒரு சக்தி பிறக்கும் மந்திரச் சொல்லாக இந்த மண்ணில் நிலைத்து நின்றது.

 

இந்த மண்ணின் வீரப்புதல்வர்கள் பகத்சிங்கும் அவரது தோழர்களும் வெறுமனே மறைந்து போகவில்லை.  மக்களைத் திரட்டிப் போர்க்களத்தில் நிறுத்தியிருந்தார்கள். தங்களையே ஆயுதமாக அவர்களிடத்தில் கொடுத்திருந்தார்கள். இந்தப் புதிய எழுச்சி மாணவர்களாய், இளைஞர்களாய், தொழிலாளர்களாய் உருவம் பெற்றது. வரலாற்றின் மாறியக் காட்சிகளில் ஒன்றிலிருந்து ஒராயிரம் போராளிகள் தோன்றிக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு மரணமில்லை.  விடுதலை என்னும் வேட்கை வற்றாத ஊற்றாய் இந்த மண்ணில் இருந்துகொண்டுதான் இருக்கும். அந்த ஊற்றுக்கண்ணை துப்பாக்கிகளாலும்,  தூக்குக் கயிறுகளாலும்  அடைத்துவிட முடியாது. நமது புரட்சிகர இளைஞர்கள் அந்த ஊற்றுக் கண்ணாக முளைத்திருந்தார்கள். அதிலிருந்து மெல்ல மெல்ல பெருகிய வெள்ளம்  இந்த மண்ணில் பரவிக்கொண்டு இருந்தது.

முந்தைய பகுதிகள்:

வீர சுதந்திரம் வேண்டி - முதல் பகுதி

வீர சுதந்திரம் வேண்டி - இரண்டாம் பகுதி

வீர சுதந்திரம் வேண்டி - மூன்றாம் பகுதி

வீர சுதந்திரம் வேண்டி - நான்காம் பகுதி

வீர சுதந்திரம் வேண்டி - ஐந்தாம் பகுதி

 

*

கருத்துகள்

6 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. நிறைய அரிய தகவ்ல்கள். நன்றி மாதவராஜ்.

  சுப.வீ எழுதிய “பகத்சிங்க்கும் இந்திய அரசியலும்” புத்தகத்தில் இன்னும் நிறைய சொல்லியிருப்பார்.

  பதிவுகள் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 2. உண்மைதான்.சுதந்திரத்திற்கு பின்னும் ஆட்சிக்கு வந்தவர்கள் அவர்களுக்கு ஏற்றவாறு வரலாற்றை திரித்து பள்ளிகளில் பாடமாக்கி விட்டனர்.

  பலபுரட்சி வீரர்கள் பற்றி பலரும் அறியமுடியாமல் போயிற்று.

  பல அரிய தகவல்கள்,படங்களோடு தந்தததற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. அன்புச் சகோதரர் அவர்களுக்கு,
  சரித்திரத்தை இதுவரை பதிந்தவர்கள் செய்த அயோக்கியத்தனத்தாலும், கோழைத்தனத்தாலும் பல பதிவுகளை நாம் இழந்துவிட்டோம். நாம் படித்த சரித்திர பாடம் முழுக்க முழுக்க பொய்யும் புரட்டும் நிறைந்த திட்டமிட்ட சதி என்பதை உங்கள் வார்த்தைகள் சொல்வதை வரவேற்கிறேன். வாழ்த்துக்கள்

  உலகச் சரித்திரத்தில் இல்லாத கொடுமை பகத்சிங்கிற்கு நடத்தப்பட்டது. அதிகாலை நேரங்களிலேயே நடத்தப்பட வேண்டிய தூக்குதண்டனை யாருக்கும் தெரிவிக்கப்படாமல், திருட்டுத்தனமாக இரவு 7மணியளவில் நடந்தது....
  அடுத்த வரும் நாள்களில் காங்கிரஸ் மாநாடு நடக்கபோகிறது என்பதற்காக
  அதுமட்டுமா, தேர்தலுக்காக, கொலைத்திட்டத்தை தள்ளிப் போட்டு திட்டமிட்டு நடத்தியவர்கள் ஆயிற்றே.

  பதிலளிநீக்கு
 4. வாசித்தவர்களுக்கு, கருத்துச் சொன்னவர்களுக்கும் நன்றி.

  வண்ணத்துப் பூச்சியார்..!
  பகத்சிங் குறித்து இன்னும் நிறையச் சொல்லலாம். இந்திய சுதந்திர இயக்கத்தின் ஓட்டத்தில், மிகச் சுருக்கமாக பதிவு செய்திருக்கிறேன்.

  துபாய் ராஜா, நாஞ்சில் நாதம், மங்களூர் சிவா!
  இன்னும் நிறைய அரிய தகவல்கள் இருக்கின்றன. இது சுருக்கமே. இதிலிருந்து தேடிப் படிக்க, இந்த பதிவு உந்தும் என்பதே என் நோக்கமும், ஆசையும்.

  ஆரூரன் விசுவநாதன்!

  உங்கள் கோபம் வரலாற்றைப் புரிந்தவர்களுக்கு எவ்வளவு உண்மையானது என புரியும்.

  பதிலளிநீக்கு
 5. well done>you have brought and remembered the past history of Bhagat Singh .Kidly write a separate article about "Gandhi's Role " in Bhagat Singh's death sentence.Then only your article can be come to an end.Best things you have done--vimalavidya-Chalakkudy

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!