புறாக்கள் உதறும் சுதந்திரம்

கவிதை: எஸ்.வி.வி.வேணுகோபாலன்

 

பேருந்தின் மகளிர் இருக்கையில்
அமர்ந்ததும்
குழந்தையைப் போல்
மடியில் கிடத்திக் கொள்கிறாய்
உன் கைப்பையை.
அதன் மேல்
அமர்ந்து விளையாடத் துவங்குகின்றன
உன் கைகளிரண்டும்.
இடது ஆள் காட்டி விரலை
மூங்கிலாய் வளைத்தது வலது ஆள்காட்டி.


பிறகு புறாக்களாய்
உருவெடுத்துக் கொண்டன கைகள்
ஒன்றின் கழுத்தில்
அடுத்ததின் முத்தம்.
பேசிக் கொண்டிருந்தன
சிறிது நேரம் சாவகாசமாய்.
ஒரு கணம்
சோர்ந்து சாய்ந்த
தனது பேடையை
வலத்திருந்த ஆண்துணை
அலகால் தடவிப் புத்துயிரூட்டி
நிமிர்த்தவும்
அணைந்து கொண்டன இன்பமாய்

நடத்துனரின் விசில் சத்தத்தில்
அஞ்சி அலறும் பறவைகள் போல்
துடித்த கைகள்
சுதந்திரம் உதறி
ஒன்றிணைந்து எழுப்பின
இறுக்கமானதொரு வீட்டை.


நிறுத்தத்தில் இறங்கி நடக்கிறாய் நீ
உன் வீடு நோக்கி
மௌனமாய்.......

*

கருத்துகள்

13 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. மதுரை வந்திங்களாமே!
    சந்திக்க முடியாம போச்சு!

    பதிலளிநீக்கு
  2. மிகவும் அருமையான கவிதை! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. சூபர்ரா இருக்குது கவிதை...!!! நல்ல மென்மைத்துவத்தை உணர்ந்தேன்..!!!!! வாழ்த்துக்கள்...!!!!!!

    பதிலளிநீக்கு
  4. எஸ்.வி.வி!
    ஆச்சரியமாய் இருந்தது இந்தக் கவிதை எனக்கு. ஏராளமான வேலைகளோடு, மூளையத் தின்னும் அவசரங்களோடு ஓடிக்கொண்டு இருக்கும் உங்கள் கைகளிலிருந்து வந்திருக்கும் இந்தக் கவிதை, அதிசயம் போல ஒரு பூவின் வாசமாய் இன்னும் வாடாமல் எனக்குள் நிரைந்திருக்கிறது. வாழ்வின் மென்மையான பகுதிகள் எவ்வளவு வசீகரமானவை!

    பதிலளிநீக்கு
  5. வால்பையன்!
    ஆமாம்... முத்துவேலும், யாத்ராவும் உங்களைப்பற்றியும், தாங்கள் என்னைச் சந்திக்க விரும்பியதையும் சொன்னார்கள். ஞாயிறு மாலை மிகத் தாமதமாகவே மதுரைக்கு வந்த்தாலும், உடனடியாக சென்னைக்கு புறப்பட வேண்டியிருந்ததாலும் தங்களைச் சந்திக்க முடியவில்லை. அதில் எனக்கும் வருத்தமே. ஆனால் நிச்சயம் உங்களை ஒருநாள் பார்த்துப் பேசுவோம் என ஆவல் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. பதிவை சிலாகித்துள்ள அன்பர்கள் அனைவருக்கும் எனது நேயமிக்க நன்றி! சும்மாவே தலை கிறுகிறுத்துப் போகும் ஒருவனுக்கு தீராத பக்கங்களில் மாதவராஜ் "இப்பமே போட்ருதேன் தோழா..." என்று உரிமையோடு என் கைப்பற்றிச் சொல்வது மாதிரி எனது படைப்புகளைச் சேர்ப்பதும், அதற்கு இப்படி வாசகர்களின் உள்ளக் கிளர்ச்சிமிக்க பின்னூட்டங்கள் கிடைக்கப் பெறுவதும் என்னென்ன செய்யும் என்று தெரியவில்லை. நன்றி மீண்டும் எல்லோருக்கும்.

    என்னவோ வானத்தை வில்லாகவோ, மணலைக் கயிறாகவோ திரித்துக் கொண்டிருக்கவில்லை, மாதவ், நான்! சாதாரண சராசரி சென்னை வாசி. அன்றாட நெருக்கடிகள், துரத்தல்கள், கெடுபிடிகள் இவை பிறரைக் காட்டிலும் எனக்கு மிகக் குறைவே. உண்மையில் அவை அதிகமென்றால் என்னால் இன்னும் கூட அதிகமாகப் பதிவு செய்ய முடியும் என்றே படுகிறது. சிறப்பு நன்றி உங்கள் அன்புக்கு, மாதவ்!

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
  7. மென்மையுரசும் கவிதை(மயில் தோகைக்கினையான)
    விசாலமான பகிர்வு...
    அற்புதமான
    எஸ் வி வி யின் பின்னூட்ட பதில்.
    உலகம்தான் எவ்வளவு அழகாய் விரிகிறது-
    குழந்தையின் வளர்ச்சிக்கேற்ப அம்மாவின்
    கர்ப்ப பை போல...
    வாழ்த்துக்கள் தோழர்களே!

    பதிலளிநீக்கு
  8. படிக்க படிக்க காட்சிகள் கண் முன்.

    அருமை

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!