-->

முன்பக்கம் � � தடை செய்யப்பட்ட எழுத்துக்கள்!

தடை செய்யப்பட்ட எழுத்துக்கள்!

அதிகாரத்தை மையப்படுத்தி, அதனைக் கைப்பற்றும் பெருங்கதையாகவே இதுவரையிலான வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. ஒட்டு மொத்த சமூகத்தையும் தீர்மானிக்கும் வல்லமையை அதிகாரம் எடுத்துக்கொள்கிறது. அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் என அனைத்திலும் அதற்கென்று கருத்துக்களை வைத்திருக்கிறது. அதுதான் முழுமையானதென்று நம்பவைக்கிறது. மீறக்கூடது என்று கட்டளைகளை விதித்து, அதையே ஒழுக்கம் என்பதாக அறிவிக்கிறது. புனிதமாக போற்றுகிறது. காலத்தின் மாற்றங்களுக்கேற்ப, அதிகாரத்தின் கைகள் ஒழுக்கத்தின் கோடுகளை அப்படியும் இப்படியுமாக கொஞ்சம் வளைத்தும், நெளித்தும் புதிய உருவாக்கங்களை கற்பிக்கிறது. அதாவது தனது நலன்களையும், செல்வாக்கையும் மேலும் மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான பாதைகளை அவ்வப்போது செம்மைப் படுத்திக் கொள்கிறது.

அந்த விதிகளின்படி ஒழுகும் மக்கள் நன்மக்கள் என்றும், மற்றவர்கள் கலகக்காரர்கள் என்றும் தன்னிச்சையாக கருதும் அளவுக்கு சமூகத்தின் பொது அறிவு புரையோடிப் போய் இருக்கிறது. அறிவியலுக்கு முரணான, பெரும்பான்மை மக்களுக்கு விரோதமான கருத்தாக இருந்தாலும் அதுகுறித்து எந்த யோசனையும் செய்ய இயலாமல், பிரமைகளுக்குள்ளும், மயக்கங்களுக்குள்ளும் மனிதர்களை அமிழ்த்திவிடுகிறது. இந்தப் பிடியிலிருந்து உண்மைகளும், சுதந்திர உணர்வுகளும் எப்போதும் திமிறிக்கொண்டே இருக்கின்றன. அவை யார் மூலமாவது, எதாவது ஒரு வடிவத்தில், எதாவது ஒரு காலக் கட்டத்தில் வெளிப்பட்டே விடுகின்றன. அவை அதிகாரத்தின் கூறுகளில் எதாவது ஒன்றை சிராய்த்துவிட்டால் கூட போதும். அதுவரை சிரித்துக் கொண்டிருக்கும் அதிகாரத்தின் முகமும், தோற்றமும் மாறிவிடும். வெளிப்பட்ட அந்த உணர்வுகள் கடுமையான சோதனைக்குள்ளாக்கப்படும். அதன் தாக்கம் சமூகத்தின் மீது மேலும் ஏற்படவிடாமல் தடை செய்யப்படும். அதிகாரம் தன்னை தக்க வைத்துக் கொள்வதற்காக எதை வேண்டுமானாலும் செய்யும்.

பல சமயங்களில், இப்படிப்பட்ட உண்மைகளை, உணர்வுகளை எழுத்தின் வடிவில் வெளிப்படுத்தி, அதிகாரத்தின் கோபத்திற்கு ஆளானவர்கள் பலர் காலந்தோறும் நிறைந்திருக்கிறார்கள். அவர்களது இலக்கியங்கள் மக்களை நெருங்கவிடாமல் தடை செய்யப்பட்டிருக்கின்றன. சில நேரங்களில் மக்களின் அதிகாரம் பற்றி உண்மையிலேயே பேசிய அமைப்புகளும் பெரும்பான்மையான மக்களுக்கு விரோதமாக இலக்கியங்களை தடை செய்திருக்கின்றன. எல்லாம் அதிகாரத்தின் பேரிலேயே நடந்திருக்கின்றன என்பதுதான் உண்மை. ஆனால் இந்த இலக்கியங்கள் அந்த தடைகளை மீறி மக்களை நெருங்கிவிடுவதுதான் சுவராஸ்யம். தொடர்ந்து அதிகார அமைப்புகள் தோற்றுப்போகிற இடமாக இலக்கியமே இருக்கிறது. இலக்கியம், எழுத்து என்பது காற்று போல சுதந்திர தாகம் இயல்பிலேயே கொண்டது. காற்றுக்கு வேலி கட்ட முடியாது.

காலவெளியில் எழுத்துக்களின் அப்படிப்பட்ட வெற்றிகளை கொஞ்சம் தொகுத்துப் பார்த்திருக்கிறேன். பதிவுலகில் காலடி எடுத்து வைத்த பொழுதில், தனித்தனியாக எழுதியவைகளையெல்லாம் இங்கு தொகுத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும்பொழுதில் மெல்ல மெல்ல நீங்கள் படித்துக் கொள்வதற்காக இந்த பதிவு. மேலும் சில தடை செய்யப்பட்ட புத்தகங்களைப் பற்றி இப்போது எழுத ஆரம்பித்திருக்கிறேன். விரைவில் அவை புதிய பதிவுகளாக வரும்.  

1. மேற்குமுனையில் எல்லாம் அமைதியாக இருக்கிறது
2. ஹக்கிள்ஃபெரி பின்னின் தீரச்செயல்கள்
3.அக்னி திராட்சைகள்
4. பரிசுத்தமானவன்
5.யாருக்காக மணி அடிக்கிறது
6. மனிதர்களின் பூமி

 

*

Related Posts with Thumbnails

Tags:

4 comments:

  1. ரொம்ப நாளாக இதை எதிர்பார்த்திருந்தேன். ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. மிக நல்லச் செயல். நீங்கள் சுட்டிக் கொடுத்திருக்கும் பகுதிகளை முன்னர் பட்டக்கவில்லை.. நிச்சயம் எல்லாவற்றையும் படிக்கவேண்டும்.

    படிக்கின்றேன்.
    இச்செயலுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. இதனால் உங்களுக்குப் பாதிப்பில்லையெனில் எழுதுங்கள்!!!

    ReplyDelete
  4. தீபா!

    ஆ.முத்துராமலிங்கம்!

    ஆதவா!

    வருகைக்கும், ஆதரவு தெரிவித்தமைக்கும் நன்றி.

    ReplyDelete