-->

முன்பக்கம் � அவளது ஜன்னல்

அவளது ஜன்னல்

அப்போதே வந்து சொல்லி விட்டுப் போய் விட்டார்கள். இன்னுங் கொஞ்சம் நேரத்தில் ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்ல வந்து விடுவார்கள். அவர் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தார். மூத்தவனையும், இளையவனையும் அணைத்துக் கொண்டு அம்மா எதோ சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அவர்களை இருவரும் வீட்டிலேயே இருக்கட்டும் எனச் சொல்லி இருந்தேன். அம்மாவைப் பார்க்க வேண்டும் என அழுது இருக்கிறார்கள்.

ஜன்னலில் ஒரு சிட்டுக்குருவி வந்து உட்கார்ந்து விட்டுச் சென்றது. லதாவின் ஞாபகம் வந்தது. “நான் என் ஜன்னலை மூடியே வைத்திருக்கிறேன். யார் வீட்டுக்கும் போகப் பிடிக்கவில்லை. யாருடனும் பேசப் பிடிக்கவில்லை’என திடுமென இரண்டு வாரத்துக்கு முன்பு வந்த அவளது கடிதம் எனக்குள் பெரும் மௌனத்தை நிரப்பி விட்டிருந்தது. ஹாஸ்டலில் 32ம் அறையைக் காலி செய்யும்போது வேகமாகப் போய் ஆணியால் அலமாரிச் சுவரில் லதா, பிரியா என அவள் எழுதி வைத்தது இந்த ஐந்து வருடங்களில்  அழியாமல் இருக்குமா என்று தெரியவில்லை.

ஸ்டிரெச்சரோடு மூன்று நர்சுகள் வந்து விட்டார்கள். அவர் என்னருகே வந்து கையைப் பிடித்தார். “என்ன.. இது.. அபார்ஷன் தானே செய்யப் போகிறேன்... செல்லங்களா, அம்மா இப்ப வந்துருவேன்” சொல்லி ஸ்டிரெச்சரில் படுத்துக் கொண்டேன்.

மயக்க ஊசி போட்டு நினைவு தப்பிய அந்த வினாடியில் வேண்டினேன். “கடவுளே... இந்தக் குழந்தை இப்படியே என் லதாவின் வயிற்றில் போய் உட்கார்ந்து கொள்ளட்டும்”. கண்களில் இருந்து வழிந்த ஈரக்கசிவை உணர்ந்ததோடு சரி.

 

*

Related Posts with Thumbnails

16 comments:

 1. முன் பின்னற்று,ஒரு நாவலின் அல்லது ஒரு சிறுகதையின்,பகுதியை எடுத்து எழுதியிருப்பதுபோல் எனக்குத் தோன்றும்
  இதன் வடிவம் பற்றிய அறிவு எனக்கு இல்லை.ஆனால், என்னென்னவோ செய்கிறது.மிகப் பிடித்திருக்கிறது.இவ்வடிவத்தை ஒரு உரை நடைக் கவிதை என்று நான் சொல்லிக்கொள்கிறேன்.

  ReplyDelete
 2. எப்படிப்பட்ட மன வலியைத் தரும் செயல் இது. ஆனால் சமுதாய காரணங்களுக்காக செய்ய வேண்டியிருக்கிறது

  ReplyDelete
 3. எதோ ஒரு வெறுமையை நிரப்புகின்றது கதை, என்னவென்று சொல்லத் தெரியவில்லை, அற்புதமாக உள்ளது எழுத்து.

  ReplyDelete
 4. எனக்கு குடும்பக் கட்டுப்பாடு என்பதிலேயே உடன்பாடில்லை, கருக்கலைப்பு இன்னும் வேதனை.

  ReplyDelete
 5. //ஜன்னலில் ஒரு சிட்டுக்குருவி வந்து உட்கார்ந்து விட்டுச் சென்றது.//

  வயிற்றில் கரு உட்கார்ந்து விட்டு சென்றதை சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்களா! :)
  நடை வடிவம் அற்புதம்.

  ReplyDelete
 6. அருமை..அருமை...

  ReplyDelete
 7. படித்துமுடித்தும் ஏதோ ஒரு வலியை விட்டு செல்கிறது...

  ReplyDelete
 8. மனது கனக்கின்ற பதிவு

  இது இயற்கை என்று ஒதுக்கிவிடமுடியாது
  குறைகளை போக்க
  ஏகப்பட்ட சிகிச்சைமுறைகள் வந்துவிட்டன
  இந்த சமுதாயத்தின் வெளிப்பாடே
  இருவரும்
  பிரச்னைகள் குறைந்து வாழ்வதற்காக ஒருவரும்
  பிரச்னைகளால் உண்டான மனஉலைச்சல்களின்
  காரணமாகவே எதிர்பார்த்து கொண்டிருக்கிறார் இன்னொருவர்

  ReplyDelete
 9. For whatever reason you do it, unless it is medically justified, it IS A MURDER.
  A small question, if you feel so much for your friend,“கடவுளே... இந்தக் குழந்தை இப்படியே என் லதாவின் வயிற்றில் போய் உட்கார்ந்து கொள்ளட்டும்”. கண்களில் இருந்து வழிந்த ஈரக்கசிவை உணர்ந்ததோடு சரி. * why couldnt you give her the child after it is born?

  ReplyDelete
 10. முத்துவேல!
  மிகச்சுருக்கமாக, வாசகர்களின் கற்பனைக்கு வெளி தந்து இப்படி சொற்சித்திரங்கள் எழுத முடியும் எனத் தோன்றுகிறது. வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

  முரளிக்கண்ணன்!
  சமுதாயக் காரணங்களுக்காகவா...? சொந்தக் காரணங்களுக்காகவா?

  ஆ.முத்துராமலிங்கம்!
  வெறுமையை நிரப்புகிறது என்பது சரியான உணர்வுதான். வருகைக்கு நன்றி.

  யாத்ரா!
  கருக்கலைப்பு யாருக்கு சம்மதம்? அந்தத் தாய்க்குத்தான் அந்த வேதனை தெரியும்.

  எட்வின்!
  புரிதலுக்கு நன்றி.

  வண்னத்துப்பூச்சியார்!
  நன்றி.

  சந்தனமுல்லை!
  ஆமாம். வலி கொண்டதுதான் இந்த அனுபவம்.

  ஜே!
  புரிதலுக்கு மிக்க நன்றி.

  அறிவழகன்!
  மிகுந்த நேர்மையான கோபமும் ஆலோசனையும் உங்களுடையது. லதாவுக்கு என்ன பிரச்சினை நமக்குத் தெரியாது. பிரியாவுக்கு கடிதம் மூலம் கொஞ்சம் தெரிந்திருக்கலாம். பிரியாவுக்கு என்ன பிரச்சினை என்றும் நமக்குத் தெரியாது. அதன் இடையில் தோன்றிய காட்சி இது.

  தீப்பெட்டி!
  நன்றிங்க.

  ReplyDelete
 11. நான் என் ஜன்னலை மூடியே வைத்திருக்கிறேன். யார் வீட்டுக்கும் போகப் பிடிக்கவில்லை. யாருடனும் பேசப் பிடிக்கவில்லை - good good sir

  ReplyDelete
 12. அருமையான வாழ்வியல் கதை.
  எந்தவிதமான முஸ்தீபுகளும் இன்றி கதையை ஆரம்பித்து அதே வகையில் ஆனால் இயல்பாக முடித்தது நன்றாக உள்ளது.

  ReplyDelete
 13. RESHSU !
  தங்கள் வருகையும், கருத்தும் உற்சாகமளிக்கிறது.

  பட்டாம்பூச்சி!
  ரொம்ப நன்றி. இந்த பாராட்டில் அடுத்த கதை எழுதத் தோன்றுகிறது.

  ReplyDelete
 14. இப்படி விட்டுக்கொடுக்க முடிந்தால் எத்தனை தாயார்க்கு கிட்டுமந்த பாக்கியம்... சட்டென முடிந்த அந்த வரிகள் அதிக கனத்தையும் கொஞ்சம் மவுனத்தையும் தருகிறது...

  ReplyDelete
 15. அன்பின் மாதவ்ராஜ்

  துவக்கமும் முடிவும் இல்லாமல் நடுவினில் நடக்கும் செயல்களை வைத்து ஒரு அற்புதமான கதை. ஊகங்களை வாசகர்கள் முடிவு செய்யட்டும். இதுவும் ஒரு உத்திதான்.

  நான் லதா - கதா நாயகியின் தோழி என நினைக்கவே இல்லை. "அவரின்" முன்னாள் காதலியோ என நினைத்தேன்.

  எப்படியாயினும் தங்கஈன் திறமை பளிச்சிடுகிறது.

  நல்வாழ்த்துகள்

  ReplyDelete