காந்தி புன்னகைக்கிறார் - 5ம் அத்தியாயம்


அந்த துப்பாக்கி குண்டு வெடித்த போது காற்றுவெளியில் படர்ந்த புகை இன்னமும் அடங்கிடவில்லை. காட்சிகள் தெளிவாகாமலேயே இருக்கின்றன.
சென்ற நூற்றாண்டின் அரிய மனிதரை- மனிதர்களின் இதயங்களோடு மிக நெருக்கமாக பேச முடிந்த மகாத்மாவை- குறி பார்த்த சதியின் திரைகள் இன்னமும் விலக்கப்படாமலேயே இருக்கின்றன.

வழக்கில் 12 பேர் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களில் 3 பேர் காணாமல் போயிருந்தார்கள். திகம்பர பாட்கே அப்ரூவராக மாறினான். நாதுராம் கோட்சே, நாராயண ஆப்தே, விஷ்ணு கார்காரே, மதன்லால் பாவா, கோபால் கோட்சே, சங்கர் கிஸ்டய்யா, இவர்களோடு இந்து மகா சபையின் தலைவாராயிருந்தவரும் இந்துத்துவா அமைப்புகளின் இன்றுவரை ஆதர்ச புருஷராகவும் இருக்கக்கூடிய வீரசவார்க்கரும் கைது செய்யப்பட்டனர்.

ஜனவரி 20ம் தேதி மதன்லால் டெல்லி போலீஸிடம் கக்கிய தகவல்கள், திகம்பர பாட்கே அப்ரூவராகி கொட்டிய உண்மைகள், போலீஸ் சேகரித்த சாட்சியங்கள் சில முக்கிய விஷயங்களை தெரிவிக்கின்றன. ஒரு ஜேப்படிக்காரனைப் பிடிக்கும் தீவிரத்தைக் கூட காவல்துறை காட்டவில்லை. பல முக்கிய கட்டங்களில் உயர் அதிகாரிகளின் நடவடிக்கைகள் மர்மமாக இருந்திருக்கின்றன. எதுவோ ஒன்று அவர்களை அங்கங்கு தடுத்திருப்பதாகவே தெரிகிறது.மதன்லால் மிகத் தெளிவாக யார் யாரெல்லாம் இந்த சதியின் உடந்தை என்று சொல்லி இருக்கிறான். இந்து ராஷ்டிரா பத்திரிக்கை குறித்தும், அதன் ஆசிரியர் கோட்சே குறித்தும் தெளிவாக ஜனவரி 24ம் தேதியே எழுத்து பூர்வமாக கொடுத்துவிட்டான். ஆனால் போலீஸாரால் கோட்சேவைத் தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை. சரி. கோட்சேதான் தலை மறைவாகி விட்டதாகச் சொல்லப்படலாம். அந்த இந்து ராஷ்டிரா பத்திரிக்கை?

ஜனவரி 20ம் தேதி காந்தியின் மீது கொலைமுயற்சி நடந்தபோது "காந்தியின் நடவடிக்கைகளால் ஆத்திரமுற்ற இந்து இளஞர்களின பதில் நடவடிக்கை" என்பதாக செய்தி வெளியிட்டது. காந்தி இறந்த செய்தியைக்கூட ஜனவரி 31ம் தேதி காலையில் வெளியிட்டிருக்கிறது. அதன் ஆசிரியரே கொலைகாரன்!
இந்து ராஷ்டிரா பத்திரிக்கை சீர்குலைவு செய்திகளை வெளியிடுவதாகச் சொல்லி 1947 ஜூலையில் அந்தப் பத்திரிக்கையைத் தடை செய்து உத்தரவிட்ட பூனாவின் ஐ.ஜி. திரு ரணில் பிறகு 1947 நவம்பரில் அந்த தடையுத்தரவை ஏன் ரத்து செய்தார் ?

போலீஸ் தரப்பில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட முக்கியமான ஆவணங்களில் ஒன்று விஷ்ணு கார்காரே ஜனவரி 25ம் தேதி பூனாவில் உள்ள கோட்சேவுக்கும், நாராயண ஆப்தேவுக்கும் உடனே புறப்பட்டு வரச் சொல்லி அனுப்பிய தந்தி. கோட்சேவுக்கும், விஷ்ணு கார்காரேவுக்கும், ஆப்தேவுக்கும் மகாத்மாவின் கொலையில் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துவதாக இந்த ஆவணம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் ஒளிந்திருக்கிறது. ஜனவரி 20ம் தேதி காந்தியை டெல்லியில் கொலை செய்ய முயற்சித்து அது தோல்வியடைந்த பிறகு கோட்சே மீண்டும் பூனாவுக்கே திரும்பி அங்கு பத்திரமாக இருந்திருக்கிறான்.

ஆனால் அதற்கு முன்பே கோட்சே பற்றியும், இந்து ராஷ்டிரம் பத்திரிக்கை குறித்தும் மதன்லால் பாவா போலீஸிடம் தகவல் தெரிவித்துவிட்டான். போலீஸிடம் எப்படி ஒரு அக்கறை கொண்ட மந்தம் இருந்தது.?
மதன்லால் கொடுத்த தகவல்களின் பேரில் நாராயண ஆப்தே மற்றும் விஷ்ணு கார்காரேயின் படங்கள் முன்கூட்டியே போலிஸூக்கு கிடைத்தும் பிர்லா ஹவுஸில் சாதாரண உடையில் காவல் இருந்த காவலாளிகள் கையில் ஏன் அவை கொடுக்கப்படவில்லை? கொடுக்கப்பட்டிருந்தால் ஜனவரி 30ம் தேதி கொலை செய்ய கோட்சேவோடு மீண்டும் வந்த விஷ்ணு கார்காரே மற்றும் நாராயண ஆப்தேவை அடையாளம் கண்டு கைது செய்து இருக்க முடியும்.

நாட்டில் கலவரங்கள் ஏற்படுத்துவதாகவும் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அடையாளம் காணப்பட்டு இந்து மகாசபையும் ஆர்.எஸ்.எஸ்ஸூம் தடை செய்யப்பட்டன. ஆர்.எஸ்.எஸ் தலவர் கோல்வார்கர் கைது செய்யப்பட்டார். காந்தி இறந்ததை அங்கங்கு ஆர்.எஸ்.எஸ் இனிப்புகள் வழங்கி கொண்டாடி இருக்கிறது. இதை அப்போது துணைப் பிரதமாராயிருந்த வல்லபாய்படேல் சொல்கிறார்.

குற்றம சாட்டப்பட்டு, வழக்கு நடந்து, 1949 நவம்பர் 15ம் தேதி காலையில் நாதுராம் கோட்சேவும், நாராயணஆப்தேவும் தூக்கிலடப்பட்டுவிட்டனர்.
விஷ்ணு கார்காரேவும், கோபால் கோட்சேவும், சங்கர் கிஸ்டய்யாவும், மதன்லால் பாவாவும், தத்தரய்யா பர்ச்சூரும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள்.

இந்து மகா சபையின் தலைவரும் இந்துத்துவாவின் பீடங்களில் ஒருவருமான வீர சவார்க்கர் விடுதலை செய்யப்பட்டார். அப்பீலில் கோட்சேவுக்கு குவாலியரில் துப்பாக்கி கொடுத்த டாக்டர் பர்ச்சூர் விடுதலை செய்யப்படுகிறான்!

ஜனவரி 20ம் தேதி குண்டு வெடிப்புக்குப் பிறகு கிடைத்த நம்பத்தகுந்த தகவல்களால் வீர சவார்க்கருக்கும் கொலையாளிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிய வந்ததும் பம்பாயின் உயர் போலீஸ் அதிகாரி நகர்வாலா வீர சவார்க்கரை கைது செய்ய வேண்டும் என அப்போது பம்பாயின் உள்துறை அமைச்சராயிருந்த மொரார்ஜி தேசாயிடம் அனுமதி கேட்டபோது மொர்ஜி தேசாய் மறுத்து விடுகிறார். வழக்கு முடிந்து ரொம்ப காலம் கழித்து இந்த படுகொலை குறித்து ஆராய அமைக்கப்பட்ட கபூர் கமிஷன் 1964ல் அறிக்கையை வெளியிடும்போது காவல்துறையின் செயல்பாடுகளில் பல தவறுகளும், முரண்பாடுகளும் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளது.

கோபால் கோட்சே அக்டோபர் 1964ல் ஆயுள் தண்டனை முடிந்து வெளியே வரும் போது அதனைக் கொண்டாட 1964 நவம்பர் 12ல் பூனாவில் உள்ள உதயம் ஹாலில் 'சத்திய விநாயக பூஜை' ஏற்பாடு செய்யப்படுகிறது. அதில் கலந்து கொண்ட 'தருண் பாரத்' ஆசிரியர் கேட்கர் காந்தி கொலை செய்யப்படுவதற்கு மூன்று மாதத்திற்கு முன்னரே நாதுராம் கோட்சே காந்தியைக் கொலை செய்யப் போவதாக கூறியதாகவும் அதன் விளைவுகள் குறித்து இருவரும் விவாதித்ததையும் கூறியிருக்கிறார். உடனே பக்கத்தில் உட்கார்ந்திருந்த கோபால் கோட்சே இதற்கு மேல் எதுவும் சொல்ல வேண்டாம் என்று முணுமுணுக்க கேட்கர் "இப்போது இதையெல்லாம் நான் சொன்னாலும் அவர்கள் என்னை கைது செய்யப் போவதில்லை" என்று கூறியிருக்கிறார். காந்தியின் உணணாவிரதத்திற்குப் பிறகே அவரைக் கொலை செய்ய முயற்சித்ததாக நடந்த வழக்கிற்கு இது முற்றிலும் வேறான தகவல்.
இப்படி பல மர்மங்கள் முடிச்சுகளாய் விழுந்து கிடக்க, அது கோட்சேவின் நோக்கத்தை எளிதாக நிறைவேற்றிவிடுவதாகவே இருந்திருக்கின்றன.

(அடுத்த அத்தியாயம் நாளை)

கருத்துகள்

3 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. கண்டிப்பாக மகாத்மா படுகொலையில் மட்டுமல்ல பல பிரபல தலைவர்களின் விசயத்திலும் சரியான உண்மை வருவதில்லை..

    காலம் ஒன்றே பதில்....

    வாழ்த்துக்கள் தோழரே

    தோழமையுடன்

    முகமது பாருக்

    * நான்காம் அத்தியாத்தில் கேட்ட கேள்விக்கு பதிலுக்கு காத்திருக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  2. தம்பி பாருக்!

    பதில் போட்டு விட்டேன்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி தோழரே

    இன்றைக்கும் மும்பையில் பயங்கரவாதிகளின் செயலால் விலைமதிக்க முடியாத நமது உயிர்களையும் வெளிநாட்டு உயிர்களையும் இழந்து இன்னும் முடியாமல் சண்டை நடந்து கொண்டுருப்பதாக தெரிகிறது...இது மீண்டும் என்னைப் போல பாமர மக்களை இந்தியாவில் உளவு துறை என்ற ஒன்று உள்ளதா என கேள்விக் கேட்க வைக்கிறது..இந்த செயலுடன் மூன்றாவது பயங்கர கோரச் செயல் மும்பையில் அரங்கேறி உள்ளது..இது முழுக்க முழுக்க அரசியில் பின்னணி என்று நினைக்க தோணுகிறது இல்லை சில வல்லரசு நாடுகளின் உளவுத் துறையின் வேலையா?..வெளில இப்ப கேட்டால் கோமாளி என்று கூறுவார்கள்..காலத்தின் கட்டாயங்கள்..... கட்சி பாகுபாடின்றி ஒரே குரலில் நாட்டின் பாதுகாப்புக்கு என்ன வேண்டுமோ அதை செய்தால் நன்றாக இருக்கும்..இல்லை இதயே வைத்து வோட்டு மலம் தின்பார்கள் என்றால் ஒன்றும் சொல்வதற்கில்லை..

    வெறும் வாயை மெல்லும் தொலைக்காட்சிக்கு இன்றைக்கு அவல் கிடைத்த மாதிரி ஆகிருக்கு..

    இதெல்லாம் மீறி தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர், மும்பை துணை கமிசனர் மற்றும் உயர் காவல் துறை அதிகாரி இவர்களின் உயிர்....

    இந்த சம்பவத்தின் வேகம் குறைந்த பிறகே இவர்களின் மரணம் குறித்து இதே தொலைக்காட்சி செய்திகளில் வரும் என நினைக்கிறேன்..

    நமது நாட்டில் எந்த ஒரு பிரச்சினை ஆளும் அரசாங்கத்திற்கோ இல்லை பிரதான எதிர்கட்சிகோ வரும்போது மட்டுமே இந்த கோரச் சம்பங்களின் அணிவகுப்பு நடக்கும்.

    சமீபத்தில் நடந்த குண்டு வெடுப்புகள்

    நாடளுமன்றத்தில் பணத்தைக் கொட்டிநாட்டின் மானத்தை வாங்கிக்கொண்டு இருந்தார்கள் அனைத்து தொலைக்காட்சியிலும் இதே செய்திதான்... இருதருப்புக்கும் நல்ல பெயர் இல்லை அந்த சமயத்தில் குஜராத் மற்றும் பெங்களூரு..

    அடுத்து கஷ்மீர் கலவரம்

    மீண்டும் குண்டுவெடிப்பு

    மகாராஷ்டிரா இனவெறி பிகார் மற்றும் உத்தர் பிரதேச மக்களுக்கு எதிராக

    இப்போது மலகோன் குண்டுவெடுப்பு சம்மந்தமாக காவிகளின் கைது.

    இரண்டு நாட்களுக்கு முன்னால் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவின் தொகடியா பெயரும் சேர்க்கப் பட்டது..

    மும்பையில் கோரச் சம்பவம் மூன்று முக்கிய அதிகாரிகளின் கொலை. இதில் முக்கியமானவர் தீவிரவாத தடுப்பு பிரிவுத் தலைவர் ஹேமந்த் கர்கரே..இன்னும் இரண்டு மூன்று வாரத்திற்கு பிறகு வரும் இவரின் கொலைக்கான காரணம்..


    இது தவறான ஒப்பிடாக கூட இருக்கலாம்..ஆனால் நாட்டுக்காக உயிரை இழந்த அதிகாரிகளின் மரணம் கேள்விக்குறியே??..

    அவர்களின் வீரசெயலுக்கு அவர்களின் கால்பணிந்து வணங்குகிறேன் மற்றும் பலியான அனைத்து மனிதர்களின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்...

    மீண்டு எழுவதில் மும்பைக்கு நிகர் மும்பையே விரைவில் எழும்

    என்றும் தோழமையுடன் தம்பி

    முகமது பாருக்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!