க்ளிக் நாவல் குறித்த பார்வைகள் - 7


ஒரு நாவலை வாசித்து முடித்தவுடன், அதை நெருங்கிய உறவுக்கோ, நட்பிற்கோ உடனே பரிந்துரை செய்து வாசிக்க வைக்க வேண்டும் என்று தோன்றினால், அதுவே அந்த நாவலின் குறைந்தபட்ச வெற்றிதானே?

அந்த வகையில் தோழர் மாதவராஜின் 'க்ளிக்' நாவலை வாசித்து முடித்தவுடன், என் மகளிடம் தந்து வாசிக்கச் சொல்ல வேண்டும் என்று உடனே தோன்றியது. உண்மையில், நாவலை வாசித்துக் கொண்டிருக்கும் போதே தோன்றி விட்டது.

*

சில ஆண்டுகள் மட்டுமே வித்தியாசம் இருந்தாலும் கூட முந்தைய தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் இடையே ஒரு நுட்பமான கலாசார வேறுபாடும் உரசலும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

நவீன, இளம் தலைமுறையின் மனதைப் புரிந்து கொள்ள முடியாமல் முந்தைய தலைமுறையினர் எப்போதும் தத்தளிப்பார்கள். "இவன் ஏன் இப்படியெல்லாம் பண்றான்னு தெரியலையே?' என்றெல்லாம் தன்னுடைய மகன் குறித்து குழம்பித் தவிப்பார்கள். இத்தனைக்கும் அவர்களே கடந்து வந்த பாதைதான் அது.

*

தோழர் மாதவராஜால் எப்படி ஒரு நவீன பெண்ணின் மனதின் சிக்கல்களை, குழப்பங்களை, தெளிவுகளை அப்படியே எழுத்தில் கடத்திக் கொண்டு வந்து விட முடிந்தது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இளம் தலைமுறையுடன் நெருங்கிப் பழகாமல், அவர்களை கூர்மையாக கவனிக்காமல் இது சாத்தியம் இல்லை.

*

இத்தனைக்கும் இந்த நாவல் மிக சாதாரணமாகத்தான் துவங்குகிறது. ஒரு நிலையில் சலிப்பாக கூட இருக்கிறது.

ஆனால் ஒரு கட்டத்தில் எடுக்கும் வேகம் இறுதி வரைக்கும் குறையவில்லை.

பூங்குழலி திருமணத்திற்கு சம்மதிப்பாளா, மாட்டாளா என்று இந்த நாவலில் வரும் பெரும்பாலோனோர் அடையும் பதட்டமும் கவலையும் நம்மையும் இயல்பாக தொற்றிக் கொள்கிறது.

ஒரு நோக்கில் பூங்குழலியின் மனவோட்டம் நமக்குத் தெளிவாகப் புரிகிறது. அது நியாயமாகவும் இருக்கிறது. அதே சமயத்தில் அவள் புதிராகவும் இருக்கிறாள். இந்த விநோதமான முரண் உணர்வை தனது எழுத்தின் மூலம் கச்சிதமாக கொண்டு வந்திருக்கிறார், மாதவராஜ்.

*

எதையும் வலிந்து திணித்து 'பார்டா.. நான் எழுத்தாளன்' என்று ஜோடனையெல்லாம் செய்யாமல், சாதாரண வார்த்தைகளில் ஆழமான மனச்சிக்கல்களை பதிவு செய்திருக்கிறார் மாதவராஜ்.

'தங்கள் பெயரைக் கொண்ட எழுத்துக்களைப் பார்த்ததும் அவைகளுக்கு உயிர் வந்து விடுகின்றன' என்பது போன்ற காலண்டர் பொன்மொழி வாக்கியங்கள் ஆங்காங்கே வந்து ஆச்சரியப்படுத்துகின்றன.

*

ஓர் இளம்பெண் அதிகாலையில் ஓடிக் கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்து அதிலிருந்து தூண்டுதல் பெற்று 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' படத்தை இயக்கினாராம் மகேந்திரன். அது போல, ஓர் இளம்பெண் தனது ஊரிலிருந்து பேருந்தில் கிளம்பி, நகரத்தை அடைந்ததும், அதன் முனையிலேயே இறங்கி, ஒரு இளைஞனின் பைக்கில் ஏறிக் கொண்ட காட்சி, இந்த நூலாசிரியரின் மனதில் சித்திரங்களாக விரிந்து நாவலாக உருப்பெற்றிருக்கிறது.

நிச்சயம் வாசிக்க வேண்டிய நாவல். காதலுணர்வு தொடர்பான திரைப்படம் அல்லது குறும்படம் எடுக்க உத்தேசிக்கும் இளம் இயக்குநர்கள் கூட இந்தப் புதினத்தை வாசித்தால் தூண்டுதலை அடைவார்கள் என்று தோன்றுகிறது.

இந்த நல்ல அனுபவத்தை எனக்கு அளித்த தோழர் மாதவராஜிற்கு மனமார்ந்த நன்றி

( க்ளிக் நாவல் குறித்த எழுத்தாளர் சுரேஷ் கண்ணன் அவர்கள் பதிவை  முக்கியமானதாகக் கருதி தீராத பக்கங்களில் பத்திரப்படுத்திக் கொள்கிறேன்.)

You can comment here

Previous Post Next Post