கல்லூரிப் படிப்பு முடித்த பின்னர் வேனிற்
காலங்களில் வேலையின்றி அலைந்து திரிந்த நாட்கள் அவை. அரசுப் பணியில் அமர்ந்து, எதிர்காலக் கனவுகளைச் சுமந்து கொண்டு, வாழ்வை எப்படியாவது நகர்த்திவிட வேண்டும் என
கனவு கண்ட பொழுதில் தான், என்னையும் பாண்டியன் கிராம வங்கிபின்
பணியாளர்களின் பட்டியலில் இணைத்துக்கொள்ள ஆணை வந்தது. இடதுசாரி சிந்தனையும், தொழிற்சங்க ஈடுபாடும் இயற்கையில் என்னுள் இருந்ததால் பணியிடைச் சூழல் அதனை
நோக்கியே சென்று கொண்டிருந்தது. விளாத்திகுளம் அருகே அரியநாயகிபுரம் கிளையில்
பணியாற்றிய போது, தோழர் ஒருவர் "சோமு, திருச்செந்தூர் அருகே உள்ள செங்குழி
கிராமத்திலிருந்து மாதவராஜ் என்பவர் சாத்தூரில் பணிபுரிகிறார் போய்ப் பார். நல்ல
தோழமை கிடைக்கும்" என்று என்னை உற்சாகப்படுத்தினார்.
மறுநாள் சாத்தூர் நோக்கி பயணமானேன். அங்குதான் மாதவராஜ்
என்ற இளைஞரை முதன்முதலில் சந்தித்தேன். ஒல்லியான உடம்பு, அடர்ந்த கருகருவென முடி, எதையும் தேடித் தெளிவடைய வேண்டும் என்ற கண்கள்.
இவைதாம் நான் அன்று கண்ட மாதவராஜ் என்ற இளைஞர். அன்று கண்டதற்கும் 36 ஆண்டுகள் கழித்து நான் கானும் இன்றைய தோழர் மாதவராஜிக்கும் ஒப்பிட்டால்
"இமாலய வளர்ச்சி ' என்ற ஒற்றை வார்த்தையில் எழுதிவிடலாம். எனக்கும்
அவருக்கும் இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் எத்தனையோ விவாதங்கள், நட்பின் ஆழம், தொழிற்சங்கப் பணியில் இணைந்து பணியாற்றியதால் உயரம் தொட முடியாத அளவுப் பணிகள், அவரின் இலக்கிய வளர்ச்சி என்று கூறிக்கொண்டே போகலாம். ஒரு சில நிகழ்வுகளை
உங்கள் மனதில் விதைக்கும் போது, என் மனதிலும் அவரைப் பற்றிய மதிப்பீடு விரிந்து
கொண்டே செல்கின்றன.
'அக்கினிக்குஞ்சு' என்ற மாத இதழை சங்கம் சார்பாக வெளிக்கொண்டு வந்தோம். பலவித பொருளாதார நெருக்கடிகள், பங்களிப்புகளின் பற்றாக்குறை இவைகளின் காரணமாக இரண்டாம் இதழ் தாமதமாக கொண்டு வரவேண்டிய சூழ்நிலை. மாத இறுதி நாட்களில் எப்படியாவது இதழைக் கொண்டுவர நெருக்கடி கொடுத்தது.
நான் மெஞ்ஞானபுரம் கிளையிலும், மாதவராஜ் பூச்சிக்காடு கிளையிலும் காரணமாகப் பணிபுரிந்து கொண்டிருந்தோம். ஒரு Non & Banking Day நாளன்று இருவரும் சந்தித்து எப்படியாவது ஓரிரு நாட்களில் இதழை வெளியிட வேண்டும் என நீண்ட நேரம் விவாதித்துக் கொண்டு இருந்தோம். "நாம் கட்டாயம் ஒன்றாம் தேதி இதழைக் கொண்டு வர்றோம் கவலைப்படாமல் போங்க தோழர்' என்று விடை பெற்ற தோழர் மாதவராஜ் மறுநாள் காலையில் என்னிடம் 'இதோ மலர் தயாராகிவிட்டது ரோனியோ செய்யலாம். என்று கைநிறைய அவர் எழுதிய காகிதங்களை என்னிடம் கொடுத்தார். என்னால் நம்ப முடியவில்ல. தனி ஒருவராக ஒரே இரவில் மலருக்குத் தேவையானவற்றை நீண்ட விவாதங்களில் இருந்து எழுத்தாக்கம் செய்த உழைப்பை அன்றுதான் ண்டேன். ஒரு இலக்கியவாதியாகவும் கடும் உழைப்பாளியாகவும் காலம் இவரை செதுக்கி தம் கையில் கொடுத்துவிட்டதற்கு இன்றைய 'மலர்தான் 'சாட்சி'.
நமது சங்கம் BEFT இணைப்புடன் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. நானும் அவரும் இணைந்து ஊழியர்களின் முன்னேற்றத்திற்கு சங்கம் மூலம் போராடி வெற்றி பெற்ற நிகழ்வுகள் பல உண்டு. அப்போது வங்கியில் தினக்கூலி தொழிலாளர்கள் பலர் பணி நிரந்தரமின்றி வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்தனர். வாழ்வா, சாவா என்ற போராட்டத்தின் காரணமாக பணி நிரந்தரம் என்பது எட்டாக்கனியாக இருந்தது அவர்களுக்கு. எப்படியும் இவர்களை பணியினை நிரந்தரமாக்கிட வேண்டும் என்று சங்க முடிவினை. சட்டப்பூர்வமாகச் செய்தால்தான் இவர்களின் நிரந்தரமாகும் என எண்ணி தூத்துக்குடியைச் சேர்ந்த தோழர் இசக்கிமுத்து (CITU) ஆலோசனையின் மூலம் நீதிமன்றத்தில் தொழிற்தாவா சட்டப்படி வழக்கு பணி தொடர்ந்து வெற்றிகரமாக வழக்கில் வென்று தினக்கூலி பணியாளர்களை நிரந்தரப் பணியாளார்களாக்கிய வரலற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் தோழர் மாதவராஜின் பங்கு எல்லையில்லாதது.
அதுபோல பாண்டியன் கிராம வங்கியில் சிலரின் தூண்டுதலின் காரணமாக வங்கி ஊழியர்கள் மத்தியில் இன்னொரு தொழிற்சங்கம் NCBE ஆதரவுடன் செயல்பட ஆரம்பித்தது. இரண்டு தொழிற்சங்கங்கள் ஊழியர்களின் நடுவே பிரிவையும், சில சமயம் கோபதாபங்களையும் வளர்த்து, ஒரு பிரிவினையை ஏற்படுத்தியிருந்தது. இரண்டு தொழிற்சங்கங்களாய்ப் பிரிந்து இருந்ததால் நிர்வாகத்திற்கு கொண்டாட்டமாக இருந்தது. எப்படியும் ஊழியர்களின் ஒற்றுமை வலுவாவதற்கு இரண்டு தொழிற்சங்கங்களும் முதலில் இணைய வேண்டும் என்ற கருத்தாக்கம் முதலில் மாதவராஜிடம் இருந்து பிறந்து மற்ற தோழர்களின் மத்தியிலும் வலுவான கருத்தாக உருவாகியது. நீண்டகால முயற்சியும், உழைப்பும் செலுத்தியதால் கைமேல் பலன் கிடைத்தது. மாதவராஜ் முன்முயற்சியோடு தோழர்கள் அருண், சங்கர், சங்கரசீனிவசன், மணி போன்ற தோழர்களின் முயற்சியாலும் இருசங்கங்களும் இணைந்து ஊழியர்கள் ஒரே சங்கமாக வலுப்பெற்றது இந்த இணைப்பு விழாவினை முன்னெடுத்து இரு சங்கங்களின் இணைப்புச் செய்தியினை மாதவராஜ் ஒரு நாள் என் வீட்டிற்கு வந்து பகிர்ந்து கொண்ட நாட்களை எண்ணும் போது நட்பையும் சங்கத்தினையும் மாதவராஜ் போற்றிய பொழுதுகள் என மனதில் இன்றும் ஈரமான நினைவுகளாய் நிற்கிறது.
இன்றைய மாதவராஜின் வளர்ச்சியை எண்ணும்போது எப்போதும் படிப்பதும், சிந்திப்பதும், எழுதுவதும் உடன்பிறந்த குணங்களாய் இருந்தததல் இந்த வளர்ச்சி சாத்தியமாயிற்று. மாதவராஜிடம் எப்போதும் ஒரு தேடல் இருந்துகொண்டே இருக்கும். தான் மட்டும் ஒரு முடிவை எடுக்காமல், எப்போதும் உற்ற நண்பர்களிடமும் ஆலோசனைகளைக் கேட்டு, அதையும் முறைப்படி செயற்குழுவில் விவாதத்திற்குள்ளாக்கி மேல் நடவடிக்கைகளைத் தொடர்வார்.
மேலும் மற்றவர்கள் மீதும் தான் படித்த, பார்த்த படைப்புகள் மீதும் விமர்சனங்களை வைக்கத்
தயங்காதவர். விமர்சனங்கள் மூலம் தன்னையும் வளர்த்துக் கொண்டு இன்னும் ஒரு படி மேலே
செல்ல வழி சொல்லும் பண்பு என்றும் அவருடன் ஒட்டிப்பிறந்தது. அவருடைய படைப்புத்
திறனும் விமர்சன கண்ணோட்டமும்தான் பல இலக்கிய படைப்புகளையும், ஆவணப் படங்களையும் தமிழ் உலகுக்குக் கொடுக்கக் காரணமாய் அமைந்தன.
அவருடன் பயணித்த 33 ஆண்டுகளில் எத்தனையோ நிகழ்வுகள், உரிமையுடன் பகிர்ந்து கொண்ட மனக்குமுறல்கள், தோழர்களுடன் நெருக்கமான உறவைப் போற்றுதல், தொழிற்சங்கப் பணியின் மீதிருந்த ஈடுபாடு போன்ற பல வகைகளில் இளைய, வருங்கால தோழர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கி வருகிறார்.
அவருடைய பணி நிறைவு நாளில் சிறப்பான மலரைக் கொண்டு வந்து என்னுடைய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள பெருவாய்ப்பளித்த மலர்க்குழு தோழமைகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!
- தோழர் சோமு என்னும் சோம சுந்தரம்
(வங்கிப்பணியிலிருந்து பணி ஓய்வு பெற்ற போது தமிழ்நாடு கிராம வங்கியின் தொழிற்சங்கங்கள் வெளியிட்ட மலரில் இடம் பெற்ற பகிர்வு இது.
தோழர் சோமசுந்தரம் நான் மதிக்கும் அருமையான மனிதர்களில் ஒருவர். இடதுசாரி சிந்தனையோடு வளர்ந்தவர். பாண்டியன் கிராம வங்கியின் தொழிற்சங்கத்தின் தலைவர் முதல் பல்வேறு பொறுப்புகளில் இருந்து முன்னணியாக செயல்பட்டவர். நிதானமான அணுகுமுறையும், உறுதியான நிலைபாடும் கொண்டவர். முகத்துக்கு நேரே விமர்சனம் செய்கிறவர். அதில் காழ்ப்புணர்ச்சியோ, வெறுப்போ இருக்காது. சரிசெய்ய வேண்டும் என்னும் துடிப்பே இருக்கும். தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், தனது கருத்துக்களை வெளிப்படுத்தும் இயல்பு கொண்டவர். அவரிடம் இருந்து பெற்ற இந்த வார்த்தைகள் மிகவும் மதிப்பு மிக்கவையாகக் கருதுகிறேன்.)
