2011ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒருநாள் பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் மும்பையின் பத்திரிகையாளர் ஜோதிர்மாய் தே. ’மிட் டே’ பத்திரிகையின் ஆசிரியர். மும்பையின் பயங்கரவாத நிழல் உலக தாதாக்களுக்கும், அரசின் காவல்துறைக்கும் இடையேயான உறவுகளை அம்பலப்படுத்தியவர் அவர்.
இந்தக் கொலை குறித்த விசாரணையில் ஜிக்னா வோரா என்னும் பெண் பத்திரிகையாளர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 2011 நவம்பரில் கைது செய்யப்பட்டவர் 2018ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். எந்தக் குற்றமும் செய்யாமல் ஏழு ஆண்டுகளாக கைதியாக இருந்த ஜிக்னா வோராவுக்கு ஏன் தன்னை இந்தக் கொலையில் சம்பந்தப்படுத்தினார்கள், தன்னைச் சுற்றி என்ன நடந்தது என அறிய முடியவில்லை.
ஜிக்னா வோரா தனது அனுபவங்களை ‘Behind The Bars In Byculla: My Days in Prison ‘ என்னும் புத்தகமாக வெளியிட்டார். அந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து வெளிவந்திருக்கும் வெப் சீரீஸ்தான் Scoop. சுய சரிதத்தின் பெயர்கள் மாற்றப்பட்டு இருக்கின்றன. ஜிக்னா வோரா இங்கு ஜக்ருதி பதக் என்றாகி இருக்கிறார்.
நடக்கும் யாவுக்கும் பின்னணி அரசியலை அழுத்தமாகவும், நுட்பமாகவும் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் ஹர்ஷன் மேத்தா. அதிகார மையங்களின் சிந்தனைகளையும், நகர்வுகளையும் வினைகளிலிருந்து அறியச் செய்யாமல் விளைவுகளிலிருந்து அறிய வைக்கிறது படம். காட்சிகளும், வசனங்களும் அதற்கேற்ப கச்சிதமாக இருக்கின்றன.
பயங்கரவாதத்தின் பின்னால் கிரிமினல்கள் மட்டுமல்ல, அரசும் இருக்கிறது என்பதை பதிவு செய்கிறது. அதிகார பீடங்கள் ஒருபோதும் மக்களுக்காக கவலைப்படுவதில்லை. அவர்களுக்கு மக்கள் ஒரு பொருட்டே அல்ல. எப்படியாவது தங்களை காத்துக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும்தான் அவர்களின் துடிப்பும் வெறியுமாக இருக்கிறது. அதற்காக மக்களில் யாரையும் அவர்கள் பலி கொடுக்கத் தயங்குவதில்லை.
அதிகாரத்தின் இடத்துக்கு வருவதற்கு அல்லது நெருக்கமாய் இருப்பதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என தனி மனிதர்கள் அறம் தவறுகிறார்கள். சமூகம் அவர்களை பலவீனமாக்குகிறது. அதையெல்லாம் கடந்து இழப்பினை சந்தித்தாலும் உண்மையின் பக்கம் நிற்கவும் சிலர் துணிகிறார்கள். அதில் ஒருவர் ஜக்ருதியின் சீனியராக இருக்கும் பத்திரிகையின் ஆசிரியர் இம்ரான்.
பத்திரிகையின் முதல் பக்கச் செய்திக்கு கிடந்து தவிக்கும் ரிப்போர்ட்டர்கள், அதன் மூலம் அவர்கள் அறியப்படுவது, கிரிமினல்களின், அரசின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களின் பார்வையில் படுவது, பழக்கம் கொள்வது, அவர்கள் மூலம் தகவல்கள் பெறுவது, சலுகைகள் கிடப்பது எல்லாம் என்ன என்பதை வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது. பிரமாதமாக ஆடுகிறோம் என நினைத்துக் கொண்டிருக்கும்போது, வெட்டப்பட்டு ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள் அவர்கள்.
கைது செய்யப்படுவதற்கு முன் ஜக்ருதி எப்படி இருந்தார், சிறையை விட்டு வெளியே வரும்போது எப்படி இருந்தார் என்பது முக்கியமானது. சிறையில் மிகுந்த சிரமங்களை அனுபவிக்கிறார். பின்னர் ஒரு இந்து பெண் சாமியார் சிறைக்கு வருகிறார். அவருக்கு சிறையில் பெரும் மரியாதை தரப்படுகிறது. அவரது அருளால் ஜக்ருதிக்கு சிரமங்கள் குறைகின்றன. ஆரம்பத்தில் அதை தயக்கத்துடன் ஏற்றுக்கொள்ளும் ஜக்ருதி பின்னர் நிராகரிக்கிறார். “அதிகார மையங்களின் நெருக்கம் நம்மையும் அதிகாரம் படைத்தவர்களாக உணர வைக்கிறது. நானும் அப்படித்தான் வெளியே இருந்தேன். எதையும் செய்ய முடியும் என கருத வைத்தது. ஆனால் உண்மை அது இல்லை.” என அவர் சொல்வதில் எல்லா அர்த்தங்களும் இருக்கின்றன.
“நான் அந்த ஜர்னலிஸ்டை கொல்லவில்லை, ஆனால் ஜர்னலிசத்தை கொன்றதில் எனக்கும் ஒரு பங்கு இருக்கிறது” என ஜக்ருதி பதக் சொல்லும் வார்த்தைகள்தாம் இந்த வெப் சீரிஸின் ஒற்றை வரிக் கதை.
நெட் ஃபிலிக்ஸில் இருக்கிறது.
அருமை தோழர்.
ReplyDeleteநல்லது தோழர்.பெயரைக் குறிப்பிடலாமே!
Deleteஅதிர வைக்கிறது மாதவ்..
ReplyDeleteநம்மூரில் ஒரு மடாதிபதி ஜெயிலில் எப்படி நடத்தப்பட்டார்.....யாரால் கைது செய்யப்பட்டு, யாருடைய உதவி உள்ளே கிடைக்க எப்படி ஒன்றுமற்று வெளியேறினார் என்பதையெல்லாம் பார்க்கத்தானே செய்தோம்... அதிகார பீடம் பற்றிய விவரிப்பு முக்கியமானது உங்கள் கட்டுரையில்...நன்றி
வேணு
மீண்டும் நாம் இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி தோழர் எஸ்.வி.வி.
Deleteமுடிந்தால் இந்த வெப் சிரீஸ் பாருங்கள்.
வசனங்களும், காட்சிகளும் அதிகார பீடங்களின், அவைகளின் சதிப்பின்னல்களை அம்பலப்படுத்தும்.
Lost என்று வடகிழக்கு இந்தியாவின் படம் ஒன்று வந்தது. அதுவும் இது போன்றுதான்.