உதயசங்கர், கிருஷி, சாரதி, பவா செல்லத்துரை, ஷைலஜா, நான் எல்லோரும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். எழுத்தாளர்கள் சங்க மாநாட்டையொட்டி நிகழ்கிற இதுபோன்ற சந்திப்புகளும், அரட்டைகளும் அழகானவை. கொஞ்சம் மௌனம் நிலவிய ஒரு தருணத்தில் “மாது இதப் படிச்சுட்டு சொல்லுங்களேன்” என்று அப்போதுதான் பிரிண்ட் எடுக்கப்பட்ட தாள்களை என்னிடம் நீட்டினார் பவா செல்லத்துரை. ‘கல்வராயன் மலையிலிருந்து இறங்கி வந்த கல் குதிரை கோணங்கி’ என ஆரம்பித்து அவர் எழுதியிருந்தார். கசகசவென்று அங்குமிங்கும் மனிதர்களின் பேச்சுச் சத்தங்களும், நடமாட்டங்களும் இருந்தன. யாவும் படிக்க ஆரம்பித்த சில வரிகளில் காணாமல் போக பவாவும், நானும் மட்டுமே அங்கு இருந்தோம். பார்த்ததும் சந்தோஷங்களைத் தருகிற, தூரத்து மலைகளை கைகளால் பிடித்திட விழைகிற, இருட்டில் வழியறிந்தவனாய் நடந்து செல்கிற ஒரு பித்த வெளிக்காரனைப் பற்றிய நினைவோட்டங்கள் அவை. அடுத்த சில வரிகளில் நானும், பவாவும் காணாமல் போக கோணங்கி மட்டுமே அங்கு இருந்தார்!
படித்து முடித்து வார்த்தைகளற்று இருந்தேன். பவாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு கசிந்து போனேன். அடுத்து உதயசங்கரை கோணங்கி அள்ளி எடுத்துக்கொண்டார். எல்லோருக்குள்ளும் ஒரே மாதிரியான உணர்வும், நெகிழ்வும், ஒரு மௌனமும் நிறைந்திருந்ததைப் பார்த்தேன்.
பவாவுக்கு ஒரு வணக்கம். பவாவின் எழுத்துக்கு ஒரு வந்தனம்!
*
எஸ். ராமகிருஷ்ணனின் தலைப்பு மறந்து போன ஒரு சிறுகதையில் மார்கழி மாதத்தில் ஏதோ ஒரு இரவின் மூன்றாம் ஜாமத்தில், ஒரு வீட்டின் ஓடுகளைப் பிரித்து களவுக்கு இறங்கும் ஒரு திருடன், அந்தப் பனிபொழியும் நிசப்தத்தில் அவனுக்கு மட்டுமே கேட்கும் ஒரு அபூர்வ ஒலியில் ஒரு நிமிடம் உறைந்து போவான். கொஞ்சம் நிதானித்து அது அந்த வீட்டின் மேல் படர்ந்திருக்கும் பூசணிப்பூ பூக்கும் சப்தம் என்பதை உணர்வான். இந்த அபூர்வங்கள் எப்போதும் எல்லோருக்கும் கிடைக்காது. எப்போதாவது இந்த ஒலி திருடர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் மட்டுமே கேட்கும். கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக, கோணங்கி இப்படி ஏதாவதொரு நள்ளிரவில் பூசணிப்பூ பூக்கும் அபூர்வத்தோடேயே மட்டும்தான் என் வீட்டின் கதவைத் தட்டியிருக்கிறான். ஒவ்வொரு முறையும் அவனுடன் ஒரு எழுத்தாளனோ, கலைஞனோ, வாசகனோ உடன் வருவார்கள். இவன் பாரதி, இவன் கைலாஷ், இவன் ராமகிருஷ்ணன் என மின்னல் மாதிரியான அறிமுகம் போதும் அவர்கள் என் வீட்டில் புழங்க.
அவன் குரல் கேட்டு உடலெங்கும் சந்தோஷம் பொங்கும் உவகையோடு அப்பா விளக்கைப் போடுவார். அப்பாவும், கோணங்கியும் மட்டுமே பேசித் தீர்த்த இரவுகள் உற்சாகமாய் விடிந்திருக்கின்றன.அப்பாவின் தோள்பட்டையில் ‘பட்டப்பன்’ என்ற அவரின் உற்ற நண்பனின் பெயரைப் பச்சைக் குத்தி இருப்பார் என்று அப்பாவின் மரணத்தின் போது கோணங்கி சொல்லி அழ, போர்த்திய துணி விலக்கி பார்த்துக் கதறினேன்.
அவன் எப்போதும் அந்தப் பூசணிப்பூவின் மலரும் ஒலி போல எங்களுக்கு அபூர்வமானவன்தான்.
முப்பது வருட காலத்தை நான்கு A4 பக்கங்களில் அடைத்துவிட முடிய வில்லை. அதில் மார்கழிப்பனி, சித்திரை வெயில், சிபியின் இரத்தம், வம்சியின் பிறப்பு, உரையாடல்களின் கனமென, வாழ்ந்துத் தீர்த்த பாதையெல்லாம் தானியங்கள் கொட்டி இறைந்து கிடக்கிறது. நான் சிட்டுக் குருவியாகக் கொத்தினாலும் நான்கைந்து பருக்கைகளை மட்டுமே கொறிக்க முடிகிறது. கோணங்கியே எப்போதும் சொல்வது போல, “நீ மரமாக மாறாவிட்டால் கிளிகளைப் பிடிக்கமுடியாது”. நான் மரமாக மாற முடியாத ஒரு மரண அவஸ்தை இது.
மதினிமார்கள் கதைகளின் வழியே என்னை வந்தடைந்தவன் கோணங்கி. எப்போதும் தமிழின் ஆகச் சிறந்த கலைஞன் இவன் என என் வாசிப்பில் உணர வைத்த படைப்புகள் அவை. ஆளரவமற்ற சாத்தூர் ரயில் நிலையத்தில் பிரியத்தை மடி நிறையச் சுமந்து கொழுந்தன்கள் கையில் வெள்ளரிப் பிஞ்சுகளைத் திணிக்கும் கைகளை நேரடியாய்ப் பார்க்கும் ஆசை மேலெழுந்த காலமது.
கவிஞர் சச்சிதானந்தன் சொல்வார், என் பாட்டியின் தங்கை முழுப்பைத்தியம், என் சித்தியும் அப்படியே, குடும்பத்தில் பலரும் இந்த மனப்பிறழ்வின் எல்லைகளைத் தொட முயற்சிப்பவர்கள். அவர்களின் விதை நான். நான் மட்டும் எப்படி கோழிக் கொண்டைகளின் சிவப்பைப் பற்றி கவிதை எழுதாமல் இருக்க முடியும்?
மனப்பிறழ்வுக்கும் எழுத்துக்குமான இடைவெளி ஒரு மெல்லிய கோடு மட்டுமே. காலம் முழுக்க இருவருமே இதைக் குறுக்கும் நெடுக்குமாக இரகசியமாகவேனும் கடந்து கொண்டேதான் இருக்கிறார்கள். கோணங்கியின் எழுத்துகளும் அப்படியே. என்ன செய்ய, என்னைப் போல மரமாக மாறமுடியாதவனின் கிளைகளில் ஒரு கிளியும் உட்கார மறுக்கிறது.
கோணங்கி ஆரம்பத்தில் கூட்டுறவு சொசைட்டியில் செகரட்டரியாக வேலை பார்த்தான். இப்போது நினைத்தால் அதை யாராலும் நினைவின் முற்றத்திற்குச் சிரிப்பில்லாமல் கொண்டுவர முடியாது. விவசாய வாழ்வு, தொடர்ந்து அதன்மீதே கொட்டிய அமில மழை, நேசித்த நிலம் அவனையே காவு கொண்ட கொடூரம் இதையெல்லாம் தமிழில் அவன் ஒருவன் மட்டுமே தன் ‘கைத்தடி கேட்ட நூறு கேள்விகளில்’ படைப்பாக்கி இருக்கிறான். அக்கதை விவசாயியையே பலிகேட்ட விவசாயத்தைப் போலவே அவனுடைய அரசாங்க வேலையை காவு கேட்டது அக்கதை. ராஜினாமா எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வந்து, தன் தோள்ப் பையோடு தேசாந்திரியாக இந்தியாவின் வடக்கும், தெற்குமாக அவன் பயணித்த காலங்களும், தூரங்களும் பட்ட அனுபவமும், பெற்ற வலியும் ஏராளம்.
அப்படி ஒரு பயணத்தினிடையே அதே போலொரு அகாலத்தில் தூக்கக் கலக்கத்தில் கதவைத் திறந்த என் முன் கோணங்கியும் அவன் நண்பன் பாரதியும், மழையில் நனைந்தும், குளிரில் விறைத்தும் நின்றிருந்த காட்சி கேன்வாஸில் வரையப்பட்ட கோட்டோவியம் போல் அப்படியே தெரிகிறது.
கல்வராயன் மலைக்கு ‘கல்குதிரை’ பிடிக்கப் போகிறேன் எனச் சொல்லிவிட்டுப் போனான். கல்வராயன் மலையில் அப்போது போதகராயிருந்த என் நண்பர் கிடியன் தேவநேசனுக்கு அவன் வருகையைச் சொன்னேன். மூன்று இரவுகளுக்குப் பின் ஒரு ஞாபகம் மேலிட்ட மாலையில் அவரை அழைத்து கோணங்கியைப் பற்றி விசாரித்தேன். அவரின் கள்ளச் சிரிப்பொலி தொலைபேசியில் வழிந்தது. சுவாரஸ்யமுற்று நான் ஊடுருவியதில், அவன் முதல்நாளே அவர் தந்த அறையை நிராகரித்து கல்வராயன் மலை பழங்குடிகளோடு இரண்டற கலந்து விட்டார் என்றும், இரண்டாம் நாள் அதிகாலை தன் நடைப்பயிற்சியின்போது இரத்தம் சொட்டச் சொட்ட மூங்கில் கட்டி தூக்கி வந்த காட்டுப் பன்னியைச் சுமந்து வந்த நால்வரில் ஒருவர் உங்கள் நண்பர் கோணங்கி என்றும் சொன்னார்.
அவனுக்கு எப்போதும் தானிய வகைகளும், காட்டுப்பன்னியின் இரத்தக் கவிச்சியும், தீப்பெட்டியில் இரண்டு கொடுக்காப்புளி தழைகளோடு படுத்துக் கிடக்கும் பொன் வண்டுகளும்தான் வேண்டும். நவீனத்தையும் நாம் வசதி எனப் போற்றும் பலதையும் அவன் தன் சுண்டு விரலால் தள்ளிவிட்டு வந்திருக்கிறான்.
வாழ்வின் பேருவகையில் பொங்கும் ஒரு காதலுக்கான இரகசியக் கணம் காதலியின் மடியில் படுத்து சரீரத்தால் அதிகமும், வார்த்தைகளால் கொஞ்சமுமாய் உரையாடின பொழுதுகள்தான். அது அவர்களுக்கு மட்டுமேயானது. அதை உள்ளுக்குள் ஒளித்து வைத்து எல்லாம் வறண்டுபோன ஒரு வெற்றிட காலத்தில் அவர்கள் மட்டுமே எடுத்துப் பருகிக் கொள்ள அவர்களுக்குள்ளேயே ஒரு திறக்கப்படாத ஊற்று மாதிரி பொதிந்து கிடப்பது.
அதை அடைத்து நிற்கும் அச்சிறுகல்லை மெல்ல எடுத்தால் . . . . . . . . ஓ . . . நானும் என் நண்பனும் மட்டும் தாமரைக் குளத்தின் பச்சை நீரில் முட்டிக்கால் வரை நனைய விட்டு நாங்கள் பருகிய எங்கள் காதல் காலங்கள். எனக்குக் காதலியின் மடியில் படுத்துக் கிடந்த நாள் ஞாபகத்தில் இல்லை. கோணங்கியுடன் நீரில் பாதியும், நினைவில் பாதியுமாய்ப் புதையுண்ட அந்த நாளே இவ்வெறுமையைத் துடைத்துக் கொள்ளும் ஒரே ஈரிழைத் துண்டு எனக்கு.
அதன் பிறகான நாட்களில் தமிழ் வாழ்விலிருந்து தன் உடைநடையை ஏழு மலை தாண்டி, ஏழு கடல் தாண்டி, வெகு தூரத்திற்கு அவனே வலிய சுமந்து சென்று மந்திரவாதியின் தலையில் உட்கார்ந்திருக்கும் கிளிக் கழுத்தில் ஒளித்து வைத்துக் கொண்டான். கிளியைக் காப்பாற்ற கோணங்கி விதவிதமான பல புதிரான விடுகதைகளில் வாழ வேண்டியுள்ளது.
இரண்டு வருடத்திற்கு முன் திருவண்ணாமலைக்கருகில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டில் தமிழ் நிலப்பரப்பை முல்லை, மருதம், நெய்தல் என ஒவ்வொன்றாகப் பிரித்து அவன் கண்டராதித்தனுக்கும், ஸ்ரீநேசனுக்கும், பழனிவேலுவுக்கும் சகட்டு மேனிக்கு கொடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். கிளியின் உயிர் இரகசியம் அறிந்தவர்கள் எனச் சொல்லிக் கொள்பவர்களுக்கான, அவனால் முடிந்த எளிய நலத்திட்ட உதவிகள் அது.
ஆனால் இதெல்லாம் இல்லை அவன் மனம் என்பதை நானறிவேன். என் சிபிக்குட்டியை ஒரு விபத்தில் இழந்து, பித்து பிடித்தலைந்து, என் வம்சியின் பிறப்பின் கணத்திலேயே மீண்டும் என்னை மீட்டெடுத்தேன். வம்சியின் வருகைக்காக ஐந்து கிலோ கருப்பட்டி மிட்டாய்களோடு கோவில்பட்டியிலிருந்து புறப்பட்டு வந்து, மருத்துவமனை வாசலில் காத்திருந்த நாட்களில் என் பழைய கோணங்கியைக் கண்டேன்.
போர்ட் கொச்சினுக்கு கதை சொல்லப் போய், மொழி தெரியாத அந்த நண்பர்களின் அன்பில் கரைந்து, அங்கிருந்து கோணங்கியைத் தொலைபேசியில் அழைத்த இரவின் விடியலில் அவன் என்னுடன் இருந்தான். வேண்டுதல்கள் சுமந்த இரு யாத்திரிகர்களைப் போல, நாங்களிருவரும் கொச்சியிலிருந்து புறப்பட்டு கொடுங்கல்லுhரில் போய் கண்ணகிச் சிலையைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு அந்த அதிகாலை மழையினூடே ஒரு கூரைக்கடையில் கள்குடித்து, மீன் தின்ற நாள் எழுதி முடித்த ஒரு உன்னதப் படைப்பிற்கு நிகரானது.
இலக்கிய கூட்டங்களில் எப்போதும் பேசும் பேச்சாளனல்ல கோணங்கி. இருபது வருடங்களுக்கு முன் நாங்கள் நடத்திய ஒரு இலக்கிய கருத்தரங்கில் திடீரென ஒரு புயல் மாதிரி பிரவேசித்து அவன் ஆற்றிய உரை அதற்கு முன் வேறு எவராலும் எப்போதும் கேட்டறியாதவைகள். அக்கருத்தரங்கில் அதன்பின் பேச வேண்டிய மூன்று முக்கிய இலக்கியவாதிகளும் பேச முடியாமல் அதோடேயே அக்கூட்டத்தை முடிக்க வேண்டியதிருந்தது. இதுதான் ஆத்மாவின் உள்ளிருந்து எழும் ஒரு நிஜப்படைப்பாளியின் ஆவேசக் குரல். அதைக் கேட்ட பாக்கியம் இருமுறை திருவண்ணாமலை வாசகர்களுக்கு வாய்த்திருக்கிறது.
இதோ இப்போதும் மகாராஷ்டிராவின் பெயர் தெரியாத ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து காய்ந்த சுரைக் குடுக்கைகளைச் சேகரித்தவாறு அலையும் இந்த நாடோடிக் கலைஞனின் வருகைக்காக, திக்கித் திக்கி அவன் உதிர்க்கும் ஆதித் தமிழ்ச் சொல்லை அள்ளிப் பருகுவதற்காகக் காத்திருக்கும் ஆளுமைகளை நானறிவேன்.
அவனை ஒரு பேட்டி எடுக்கவோ கதை எழுதி வாங்கவோ பிரபலமான தமிழின் பத்திரிக்கைகள் எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வுயுற்றதையே கோணங்கியின் ஒரு புகைப்படங்களை வேண்டி தவமிருந்த பத்திரிக்கைகளை நானறிவேன். நேர்காணலுக்காக கோவில்பட்டி வரை சென்று பேட்டி எடுக்க முடியாமல் திரும்பிய தமிழ்ச் சேனல்களின் வாடிய முகங்களையும் நான் எதிர் கொண்டிருக்கிறேன். கமலஹாசன் தன் வாழ்வில் சந்திக்க விரும்பும் ஒரே படைப்பாளி கோணங்கி என்று பல நேர்காணல்களில் சொல்லியும், அதை உதறிச் செல்லும் செம்போத்து பறவை அவன்.
அடர்மழை நாளொன்றின் அதிகாலை அது. நான் என் கிணற்று மேட்டில் காவலிருக்க, கிணற்றில் குதித்து நீந்திக் கொண்டே வேலா, ‘என் கோட்டைக் கிணறு கதைச் சொல்லவா?’ என இரு மடங்கு சத்தத்தில் கத்துகிறார். உள்ளேயிருந்து கேட்கும் குரலைக் கரையிலிருந்து அள்ளுகிறேன். கதையின் உக்ரத்தை நீரில் கரையாமல் அப்படியே வைத்து விட்டு.
‘பவா இந்நேரம் கோணங்கி இங்க வந்தா எப்படி இருக்கும்?’ இது வேலா.
ஏதோ ஒரு உள்ளுணர்வு உந்த, மேற்கு திசையில் திரும்பிப் பார்க்கிறேன்.
தோளில் தொங்கும் நீண்ட தோல்பையோடு இரவெல்லாம் விழித்த களைப்பின்றி சட்டைப்பட்டன்களைக் கழட்டியபடியே ஓடி வந்து அந்தக் கிணற்றில் குதித்த கோணங்கியின் அந்நிமிடம், பூசணிப்பூவின் அபூர்வ சத்தம் அருந்தின அத்திருடனுக்கும், எங்களுக்கும் மட்டுமே வாய்த்தவை.
பவாவுக்கு ஒரு வணக்கம். பவாவின் எழுத்துக்கு ஒரு வந்தனம்!
பதிலளிநீக்குஅப்பா..என்னா எழுத்து! பகிர்விற்கு நன்றி மாது!
பதிலளிநீக்குஅன்புள்ள மாது,
பதிலளிநீக்குஒரு விசிறிச்சாமியாரிடமும் பவா இப்படித்தான் உருகுவார். உருகுமே மருகுதே ஒரே பார்வையாலே என்று உள்ளார்ந்து பூசணிப்பூவின் மலரல் சத்தத்தோடு முணகுவார். கோணங்கி மறைந்து எனக்குள் விசிறிச்சாமியாரே தோன்றுகிறார். ஊராரின் உழைப்பையெல்லாம் எழுத்தின் பெயராலும், ஊர்சுற்றி என்கிற உன்னதப் பெயராலும் உறிஞ்சி வாழும் அட்டை வாழ்க்கை வாழ்பவர் கோணங்கி. உன்னதங்களின் கதை கேட்பதற்கு அதி உன்னதமாகத்தான் இருக்கும். எதையும் உருகி உருகி எழுதும் பவா போன்றவர்களின் எழுத்து அப்படித்தான் காட்டும். கோணங்கியின் கல்குதிரை வரிசைகளோடு தன்னையும் தான் சார்ந்த அல்லது தன்னோடு உள்ளார்ந்து உலாவுகிற உலாவிகளையும் பக்கத்துக் கல் குதிரைகளாகக் குவித்து வைக்கிற யத்தனம் தான் தெரிகிறதே ஒழிய, வெறொன்றுமில்லை. அதிலும் கமலஹாசனே அழைத்தும் போகாதவர் கோணங்கி என்பதில் என்ன பெருமிதமோ சிறுமிதமோ இருக்கிறது? அது கல் குதிரைதான். சவாரிக்கும உதவாது. நிஜக்குதிரைகளை உற்பத்தி செய்யவும் உதவாது. ஏன் கொள்ளுத்தின்று சாணி போடக்கூட அதனால் முடியாது. உழைப்பை உதறி எறிந்து விட்டு, பரிவ்ராஜக வேடமிட்டு அலைதலும் சமுதாயச் சுரண்டல் வடிவங்களின் ஒரு வகைதான். இத்தகைய எழுத்துக்களை என்னை ஒரு வறட்டுவாதியாகக் கூட உங்களிடம் காட்டலாம் அல்லது உங்கள் வார்த்தைகளில் வெளிப்படலாம். உண்மையில் உழைப்பிலிருந்து அந்நியப்பட்டு வறண்டு கிடப்பவர்களின் செய்கைகள்தான் கானல் நீர்போல உண்மையில் வறண்டு கிடப்பவை. தோற்றமென்னவோ ஜிலுஜிலுப்பானவைதான். வாழ்க உங்கள் மென்மைசார்ந்த தடித்த உன்னதங்கள்.
Arumai
பதிலளிநீக்குநிறைய தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குVSK!
பதிலளிநீக்குபா.ரா!
ஓலை!
ரத்னவேல்!
உங்கள் ரசனைக்கும், புரிதலுக்கும் நன்றி.
ஸ்ரீரசா!
பதிலளிநீக்குஉங்கள் இலக்கியக் கழிசடைத்தனத்தை கொட்டுவதற்கு வேறு நிறைய பக்கங்கள் இருக்கின்றன. உங்கள் சொந்த பக்கங்கள் கூட காலியாகவே இருக்கின்றன. அங்கு கொண்டு போய் நிரப்புங்கள். வேறு யோசனைகள் எதுவும் உங்களுக்காக இல்லை.
பவாவின் பதிவிலேயே படித்திருந்தாலும் உங்கள் பகிர்தலில் இன்னும் சிறப்பாக இருக்கிறது மாது அண்ணா. குறிப்பாக பித்தவெளிக்காரனை ரொம்பவே ரசித்தேன்.
பதிலளிநீக்குநண்பர் நேசமித்ரன் மூலமாக கோணங்கி அவர்களுடன் தொலைபேசியில் உரையாடும் வாய்ப்பு சில மாதங்களுக்கு முன்பாக வாய்த்தது. அற்புதமானதொரு தருணம் அண்ணா அது. மிகச்சில வார்த்தைகளே பேசினோம். ”இவ்வளவு பக்கத்துல இருந்துக்கிட்டு இன்னும் கோவில்பட்டிக்கு வராம இருக்கீங்களே, லீவ்ல வரும்போது நேரா நம்ம வீட்டுக்கு வந்துடுங்க” என்றார். நான் அப்போது உங்களைத்தான் நினைத்துக்கொண்டேன் மாது அண்ணா.
அடுத்த முறை சாத்தூரில் மழைத்தூறல்களுக்கு மத்தியில் நம் சந்திப்பு நிகழும்போது அப்படியே வண்டியை ஒரு அழுத்து அழுத்தி கோவில்பட்டி பக்கமாக விடலாம். சரிதானே மாது அண்ணா.
அன்புள்ள ஸ்ரீரசா
பதிலளிநீக்குகோணங்கி தன் சொகுசான வேலையை உதறித் தள்ளி தன்னையொரு நாடோடியாக்கிக் கொண்டு திருமணமும் செய்யாமல் தமிழ் இலக்கியத்திற்காக தன்னை வருத்திக் கொள்ளுமொரு ஆளுமை. இதையெல்லாம் மேற்கத்தைய எழுத்தாளர்கள் என்றால் வாயைப் பிளபீர்களோ என்னமோ. பித்து மன நிலையில் மட்டுமே ஒரு கலைப்படைப்பு முழுமை அடைய முடியும். இதைத் தான் கோணங்கி பற்றிய கட்டுரையில் கோணங்கியின் மனனிலையை அழகாக கோணங்கியின் நடவடிக்கைகளோடு நகர்த்திச் செல்வார் பவா. கிம் கி டக் பாரிஸ் நகரில் ஓவியங்கள் வரைந்து திருந்த நாடோடி.. வின்செண்ட் வான்கா பித்து பிடித்த வாழ்வோடு ஒவியங்கள் வரைந்தவன், பாரதியைப் பற்றி உங்களுக்குச் சொல்லத் தேவையில்ல. இவர்கள் போன்றோர்கள் உங்களுக்கு சமூகத்தை சுரண்டியர்களா தெரிகிறார்களா?. என்னவொரு கண்டுபிடிப்பு ஸ்ரீரசா. உங்கள மாதிரி மாமியார் வீட்டு சாப்பாடு சாப்பிடுகிறவர்கள் தான் உண்மையில் சுரண்டல் நாயகர்கள். கோணங்கி என்னும் கல் குதிரை சவாரிக்கு உதவ வேண்டியதில்லை. கோணங்கி என்னும் கல்குதிரை உங்களைப் போல் கொள்ளு தின்று சாணிப் போடத்தேவையில்லை.(உங்களுக்கு வர்றதுக்கு பேர் சாணியா பாஸ்). கோணங்கி என்னும் கல்குதிரை நிஜக் குதிரைகளை உருவாக்கத் தேவையில்லை.
கோணங்கி என்னும் கல்குதிரை தன்னை ஒரு இலகுவான எளிய மனிதனாக வைத்திருக்கிறது. கோணங்கி என்னும் கல்குதிரை தன் சுயநலம் பாராமல் தன்னிடம் பணம் கிடைக்கும் போதெல்லாம் கல்குதிரை என்னும் இதழை கொண்டு வரச் செய்கிறது. கோணங்கி என்னும் கல்குதிரை தமிழ் இலக்கியத்திற்கு இன்னும் தின்று செரிக்காத மாயக் கதைகளைக் கைவசம் வைத்திருக்கிறது. கோணங்கி என்னும் கல்குதிரை தன்னை யாரும் விலைபேச இயலாத செருக்கோடு திரிந்து கொண்டிக்கிறது.
----லிவி
முதல் புத்தகம் வருவதற்கு முன்பே சிறந்த இலக்கியவாதியாகவும் சிந்தனையாளராகவும் பவா ஏன் போற்றப்பட்டார் என்று என்னைப்போன்று வியக்கும் பலருக்கும் பதில் இந்த ஒரு கட்டுரையே போதும். கோணங்கியைப் படிப்பதை விட கோணங்கி பற்றிப் படிப்பது எப்போதுமே சுவாரசியமானது. எஸ். ரா தான் பேசும் எந்தக்கூட்டமாக இருந்தாலும் கோணங்கி பற்றி நாமறியாத ஏதாவது ஒரு புதிய தகவல் சொல்வார். இந்தப் பதிவைப் படித்த இரவு தூக்கம் இழ்ந்தேன். அதற்குக் காரணம் கோணங்கி பற்றிய பழைய நினைவுகளை மீட்டெடுக்கவும் அசை போடவும் பதிவு தூண்டியது.
பதிலளிநீக்குஅவ்வப்போது வந்து போகும் மின்சாரத்தினூடே போராடிக் கொண்டு நினைவலைகளை அசை போடுகிறேன். 30 ஆண்டுகளுக்கு முன்பு தோழர் இராசேந்திரசோழன் ஏற்பாட்டில் கோணங்கியுடன் ஒரு நாள் முழுதும் சிதம்பரம் நகரில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி. அப்போது நான் மு எ ச வின் நகர செயலாளர். அது வரை பரஸ்பர பகிர்தலின்றி பொதுக்கூட்டம் போலவே எல்லா நிகழ்ச்சிகளும் நடத்திக் கொண்டிருந்தோம். நிகழ்ச்சி அரங்கினுள் ஜோல்னா பையுடன் வந்த கோணங்கி உள்ளே நுழைந்ததும் மைக்கை எடுக்கச் சொன்னார். மேடை போன்ற அமைப்பு இருந்தது. நேராக நாங்கள் அமர்ந்திருந்த ஜமக்காளத்திலேயே அமர்ந்து கொண்டார். கூட்டத்திற்கு கை தட்டும் கட்சித் தொண்டர்களைப் போல் உட்கார்ந்திருந்த எங்களை அரை வட்ட வடிவில் உட்காரச் சொன்னார். நான் வந்திருப்பது இங்கே பிரசங்கம் செய்வதற்காகவோ உங்களுக்கு தெரியாத எதையோ சொல்வதற்காகவோ அல்ல என்று தொடங்கினார். எழுத்து எப்படி இருக்க வேண்டும் என்று உதாரணம் சொன்னார். கருவாடு பற்றியும் மீன் பற்றியும் எழுதும் போது கவிச்சி வாசம் அடிக்க வேண்டும். மருத்துவமனை பற்றி எழுதும் போது மருந்து நாற்றம் அடிக்க வேண்டும் என்று சொன்னவர் அமர்ந்திருந்த சுமார் 35 பேரைப் பார்த்து செகாவ் -இன் ஆறாவது வார்டு படிக்காதவர்கள் எழுந்து வெளியே போங்கள் என்று ஆவேசமாக கத்தினார். ஒருவ்ரும் படிக்கவில்லை என்ற உண்மை எனக்குத் தெரியும் என்பதால் வெளியே போய் விடுவார்களோ என்று எனக்கு பயம் வந்துவிட்டது. ஆனால் யாருமே படிக்காதவ்ர் போல் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தோம். தன்னுடைய ரசமட்டம் சிறுகதை குறித்து ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசினார். என்னுடைய 22 வயதில் எனக்கு ஏற்பட்ட நிஜமான இலக்கிய அனுபவம் அது தான். அந்த நாள் என்னில் ஏற்படுத்திய தாக்கம் வாழ்நாள் முழுக்க கூட வ்ரும்.
பதிலளிநீக்குநீங்களெல்லாம் ரொம்ப ஒசத்தியானவுங்க மாது அண்ணா, நாங்கள் கழிசடை இலக்கியவாதிகள்தான். கழிசடைகள் இல்லையென்றால் உங்கள் வாழ்க்கை நாறிப்போகுமண்ணா.. உங்கள் மென்மைப் பூனைக்குட்டிகளின் வன்மம் மிக்க நகங்கள் என்ன அருமையாய் வெளிப்படுகின்றன. அதோடு மட்டுமில்லாமல் லிவின் அனுசுயன் என்றொரு அதிமேதாவி வேறு. காலமெல்லாம் தனக்காகவும் தன் குடும்பத்துக்காகவும், தன் எழுத்துக்காகவும், தேசத்துக்காகவும் உழைத்து வாழ்ந்த பாரதியின் வரிசையில் கோணங்கியையும் கோணங்கித்தனமாக நிறுத்தி வைக்கிறார். தன்னிடம் பணம் கிடைக்கும் போதெல்லாம் என்கிற பச்சாதாபம் வேறு. பணம் எவ்வாறு கிடைக்கிறது என்பதில்தான் அவரது வாழ்வியலின் தத்துவம் அடங்கியுள்ளது. லிவின் போல மாமியார் வீட்டில் வாழ்ந்து பழக்கப்பட்டவனில்லை நான். என் உழைப்பில் வருகிறதைக் கொண்டு வாழ்ந்தால் போதுமானது என்று வாழ்கிறவன். ஒரு ஊசிக்குத்தலுக்கே இறங்கிப்போகிற பலூன் இலக்கியங்கள்தான் பம்மாத்துக்கள் தான் உங்களவைகள். உங்கள் வியாக்கியானங்களின்றி, உங்களைப் போன்ற உரைகாரர்களின்றி ஒரு நொடியும்உயிர்வாழாது உங்களின் பம்மாத்து இலக்கிய வகைகள். திரும்பவும் வாழ்த்துகிறேன். வாழ்க உங்கள் மென்மை போர்த்திய தடித்த தோல்களும், சொரிந்து சொரிந்தே தீராத பக்கங்களும்.
பதிலளிநீக்குஅப்புறம் லிவின் அனுசுயனுக்கு இன்னொன்று, நாடோடிகளையும் கேவலப்படுத்தாதீர்கள். நாடோடிகள் எவரும் பிறர் உழைப்பில் வாழ்ந்து பிழைப்பதில்லை.
பதிலளிநீக்குசெ.சரவணக்குமார்!
பதிலளிநீக்குஆமாம் தம்பி. அப்படியே கோவில்பட்டிக்கும் போகலாம்! மழையும் வந்து கொண்டு இருக்கிறது!!
லிவின் அனுசுயன்!
வருகைக்கும், பகிர்விற்கும் நன்றி. கோணங்கி என்னும் சமகால எழுத்தாளன் மீது தங்களுக்கு இருக்கும் மரியாதையும் அன்பும் புரிகிறது.
சீனிமோகன்!
அழகாகவும், அழுத்தமாகவும் சொல்லி இருக்கிறீர்கள்.
பாலாஜி என்னும் நண்பர்,பின்ன்னூட்டமிட முடியவில்லை என என் மெயிலுக்கு அனுப்பி வைத்திருந்தது இது:
பதிலளிநீக்கு-----------------------------
bala ji vananeeli@gmail.com to me
show details 8:32 PM (45 minutes ago)
தோழர் மாதவராஜ் அவர்களுக்கு வணக்கம்... எழுத்தாளர் பவாசெல்லதுரை எழுதிய
எழுத்தாளர் கோணங்கி பற்றிய கட்டுரை குறித்து வக்கிரத்துடன் ஸ்ரீரசா
எழுதியிருக்கும் பின்னூட்டத்திற்கு ஒரு எதிர்வினை...
மலைகளைப் பார்த்து வெறிகொண்டு ஊளையிடும்…
வரலாற்றில் பல இடங்களில் ஒரு இயக்கத்தின் வரலாறோ அல்லது ஒரு நாட்டின்
வரலாறோ ஒரு ஸ்தாபனத்தின் வரலாறோ எழுதப்படும் போது அது தவிர்க்க
முடியாமல் தனிமனிதர்களின் வரலாறாகவும் இருந்துவிடுகிறது. அதற்கு
முக்கியமான காரணம் அந்த தனிமனித ஆளுமைகளின் பங்களிப்பு.அப்படி இங்கே
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் என்ற ஸ்தாபனத்தின் வரலாற்றை
எழுதினால் அதில் பவாசெல்லதுரைக்கு என தனியாக சில பக்கங்கள் கண்டிப்பாக
இருக்கும். இதை யாராலும் மறுத்துவிட முடியாது.
சமீபத்தில் பவா எழுதிய எழுத்தாளர் கோணங்கி பற்றியான கல்வராயன்
மலையிலிருந்து இறங்கிவந்த கல்குதிரை கட்டுரை குறித்து அதற்கு வக்கிரமான
ஒரு பின்னூட்டமிட்டிருக்கும் ஸ்ரீரசாவுக்கு ஒரு விரிவான அறத்தின்பாற்பட்ட
எதிர்வினையை இங்கு நான் பதிவு செய்கிறேன்…
பவாவின் எழுத்துகள் எத்தன்மையானவை பவா தனது வாழ்க்கைக்கும் எழுத்துக்கும்
எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார் என்ற எந்த அறிதலும் புரிதலும்
இல்லாமல் விஷத்தை உமிழ்ந்திருக்கிறார் ஸ்ரீரசா.
எனது வாசிப்பில் இந்த நூற்றாண்டின் இருபது தமிழ்ச் சிறுகதைகளை
பட்டியலிட்டால் நிச்சயமாக பவாவின் ஏழுமலை ஜமா, சத்ரு, என்ற இரண்டு
சிறுகதைகளைத் தைரியமாகச் சொல்வேன். இருபது தலித்திய சிறுகதைகளைப்
பட்டியலிட்டாலும் பவாவின் சிங்காரக்குளம் சிறுகதை இருக்கும். பவாவின்
எழுத்தை மட்டுமல்ல யாருடைய எழுத்தையும் புத்தகத்தையும் படிக்காமல் வெறும்
புத்தகங்களின் தலைப்புகளை மட்டும் மேய்ந்துவிட்டு கன்னா பின்னாவென உளரும்
அரைவேக்காட்டு ஆசாமிதான் ஸ்ரீரசா.
பவா தன்னுடைய 19 டி.எம். சாரோனிலிருந்து என்ற புத்தகத்தில் எந்த
இடத்திலும் யோகிராம் சுரத்குமாரை மகானென்றோ, கடவுள் என்றோ, எனக்கு குரு
என்றோ சொல்லவில்லை. சிவப்பு சித்தாந்த கனவுகளோடு திரியும் ஒரு மார்க்சிய
இளைஞனுக்கு ஆங்கிலத்தில் வாசிக்கவும் புத்தகங்கள் படிக்கவும் செய்கிற
மேலும் மக்களால் விசிறிசாமியார் என்று வணங்கப்படுகிற ஒருவரை அதுவும்
கருத்தியல் ரீதியாக முரண்படுகிற யோகிராம் சுரத்குமாரோடு எப்படி நட்பு
கொள்ள நேர்ந்தது. சாத்தியமே இல்லாத எங்களின் நட்பு எந்த அளவிலானது என்பதை
Impossible friend என்ற கட்டுரைகளில் எனது நண்பர் என்றே
எழுதியிருக்கிறார். விசிறிச்சாமியாரைப்பற்றி புகழவோ உருகவோ பாராட்டவோ
வழிபடவோ இல்லை. தமிழின் முக்கிய கவிஞரான பிரமிள், ஞானி, பாலகுமாரன்,
ஜெயமோகன் போண்ற ஆளுமைகளும் விசிறிசாமியாரைப் பற்றியும் அவருடனான தங்களின்
சந்திப்பையும் நட்பையும் எழுதினார்கள்.
யோகிராம் சுரத்குமாரும் தன்னை சாமியார் என்றோ நான் மகான் என்றோ தன்னை
மக்கள் வழிபட வேண்டுமென்றோ விரும்பவில்லை. அவர் தன்னை எப்போதும்
பிச்சைக்காரன் என்றே சொல்லிக்கொண்டார். ஆனால் அவரையும் மீறி அல்லது அவர்
விருப்பத்திற்கு மாறாக மணிமண்டபம் ஆளுயர வெங்கலச்சிலை என்று
சிம்மாசனத்தில் ஒரு நிறுவனமாகிவிட்ட சாமியாராக மாறிவிட்ட சிறை வாழ்க்கையை
நினைத்து வருந்தவே செய்திருக்கிறார். இதற்காக விசிறிசாமியார் தனது நண்பர்
என்பதற்காக பவா அவருக்காக அந்த புத்தகத்தில் வருத்தத்தையும்
சொல்லியிருக்கிறார்.
விசிறிசாமியாருடனான பவாவின் கடைசி சந்திப்பு தனதுமகன் சிபியின்
மறைவிற்குப்பின் நிகழ்கிறது. சந்தித்துவிட்டு வெளியே வரும்போது மனதுக்கு
ஏதாவது ஆறுதல் கிடைத்ததா என்று ஷைலஜாவிடம் கேட்கும்போது ”பவா இரத்தம்
கசியும் எனது இதயத்தின் வலியை யோகிராம் சுரத்குமாரால் நெருங்கக்கூட
முடியவில்லை” என்றுதான் சொல்கிறார். பவாவும் அப்படியே உணர்கிறார்.
விசிறிசாமியார் போன்றவர்களின் நட்பால் தடுமாறி ஆன்மீகத்திற்குள் விழாமல்,
எப்போதும் தன்னை ஒரு மார்க்ஸியவாதியாகவே இங்கே உரக்கச் சொல்கிறார்.
பாலாஜியின் பின்னூட்டத் தொடர்ச்சி....
பதிலளிநீக்கு----------------
பவா எப்போதும் படைப்புகளின் வழியாகவே படைப்பாளிகளைக் கண்டடையும்
படைப்பாளி. கோணங்கியையும் அப்படியே கண்டடைகிறார். கோணங்கியைப் பற்றி
ஸ்ரீரசாவுக்கு என்ன அறுகதை இருக்கிறது. அப்படி என்ன பெரியதாக
புடுங்கிவிட்டீர்கள் உலகமகா புடுங்கி ஸ்ரீரசா அவர்களே. கைத்தடி கேட்ட
நூறுகேள்விகள் என்ற கதையை படித்திருக்கீறாயா ஸ்ரீரசா அல்லது
பார்த்திருக்கிறீர்களா? உங்களைபோண்ற அயோக்கியர்களாலும்
சுரண்டல்காரர்களாலும் ஏமாற்றுக்காரர்களாலும் வக்கிரக்காரர்களாலும்,
ஒருபோதும் எழுதமுடியாது ஸ்ரீரசா. மீண்டும் ஆண்டாளின் தெருக்களில் என்னைக்
கைப்பிடித்து அழைத்துச் சென்ற கலைஞன் கோணங்கி. கோணங்கியின் எழுத்து
அதுஒரு மாய உலகம் அங்கே கோணங்கியாக மாறி கோணங்கியாக வாழ்ந்தால் மட்டுமே
புரிந்துகொள்ள முடியும். ஸ்ரீரசாவை கமலஹாசன் பார்க்க வேண்டுமென மனதில்
நினைக்கிறாரென்றால் அந்த நொடியே ஓடிச்சென்று கமலஹாசனின் காலில் விழவும்
தயங்காத அல்லக்கை ஸ்ரீரசா.
இந்த மாதிரி ஒரு ஆளுமையைப் பற்றிய சிறப்பான கட்டுரைகள் வெளிவரும்போது
பெருமழை பெய்தபின் ஸ்ரீரசா போன்ற தவளகளின் சத்தம் கேட்கவெ செய்யும். இதை
பொருட்படுத்தாமல் செல்வோமாக தவளைகள் இரவெல்லாம் கத்தி தொண்டை வீங்கீ
வயிறு உப்பி விடியலில் இறந்து தண்ணீரில் மிதக்கும். இவர்கள் காலத்தில்
காணமல்போவார்கள்…
அந்த கட்டுரையில் பவா அப்படியொன்றும் கோணங்கியை தலைமேல் தூக்கிவைத்துக்
கொண்டாடவில்லை சொல்லப்போனால் கோணங்கியை நியாயமான முறையில் கடுமையாக
விமர்சனம் செய்திருக்கிறார். இதையெல்லாம் நிதானமாக படித்து
புரிந்துகொள்ளாத தற்குறி ஸ்ரீரசா அரைவேக்காட்டுத்தனமாய்
பின்னூட்டமிட்டிருக்கிறார்.
இருட்டில் பார்வை மங்கி திரியும் சீரசத்துக்கு மலைகளின் பிரமாண்டமும்
ஆகிருதியும் பயமூட்டுகின்றன அதனால் மலைகளைப் பார்த்து வெறிகொண்டு
குறைத்து ஊளையிடுகின்றார்…
அப்பாடா, மாதவராஜின் வக்கிரக் கைத்தடிகள் கேட்கும் நூறு கேள்விகள் முடிந்து விட்டனவோ வடிந்து விட்டனவோ தெரியவில்லை. நானொன்றும் பெரிய புடுங்கியென்றும் என்னைச் சொல்லிக் கொள்ளவுமில்லை. நீங்களெல்லாம் பெரிய புடுங்கிகள் என்று உங்களின் உள்ளங்களில் உங்களைப் பற்றி வளர்த்துள்ள பிம்பங்களையும், உங்கள் இலன் அனுசுயன், பாலாஜி போன்ற கைத்தடிகளின் வழியாகச் சுமந்து திரியும் பிம்பங்களையும் சுமந்து திரிகின்ற புடுங்கிகள் என்பது உங்கள் வக்கிரங்களின் வழியாகவே வெளிப்படுகின்றது. பவாவின் எழுத்துக்களை, அவரது சிறுகதைகளைப் பற்றியோ நான் எப்போதும் மதிப்பு வைத்திருப்பவன். அதையெல்லாம் காட்டிப் பாலாஜியிடம் சான்றிதழ் பெற வேண்டிய அவசியமில்லை. பிரச்சனை கோணங்கியைப் பற்றிய பவாவின் எழுத்தின் வழியாக வெளிப்படும் கோணங்கியைப் பற்றிய சித்திரம் பற்றியதுதான்.கோணங்கியின் எழுத்துப் பற்றி நேர்மையாக விவாதிக்கத் தயாரா? அவரது மதினிமார்கள் கதை, கைத்தடி கேட்ட நூறு கேள்விகளையெல்லாம் பற்றிய எனது கருத்துக்களை நான் உங்களிடம் சொல்லவே இல்லை. நான் எழுத்தையும் தாண்டிக் கோணங்கியைப் பற்றிக் கட்டமைக்கப்படும் பிம்பத்தைத்தான் கேள்வி கேட்க விரும்புகிறேன். அது பற்றித்தான் எனது கருத்தை முன் வைத்தேன். அதைக்கூடத் தாங்கிக் கொள்ள முடியாத உங்களின் வக்கிரங்கள், அரை வேக்காட்டுத்தனங்கள் அட, என்னமாய் வெளிப்படுகின்றன!
பதிலளிநீக்குகோணங்கியின் வாழ்நிலை பற்றிய நிறைய இரகசியங்கள் எனக்கும் தெரியும்தான். எல்லாம் அவரின் அத்யந்த நண்பர்கள் சொல்லியவைதான். ஆனால் அவற்றையெல்லாம் புனிதமென்று சொல்லியோ புனிதமற்றவை என்று சொல்லியோ என்னால் எழுதிக் கொண்டிருக்க முடியாது. தேவையுமில்லை. அதுபோலவே பவாவின் வாழ்க்கைக்கும் எழுத்துக்குமான அறிதலும் புரிதலும் பற்றி நண்பர் பாலாஜியைவிட எங்களுக்கும் நிறையவே தெரியும். அவரொன்றும் பவாவுக்குச் சான்றிதழ் தர வேண்டியதில்லை. பவாவை பாலாஜியை விட உயர்த்திச் சொல்ல எனக்கும் தெரியும். அதே நேரம் விமர்சனம் சொல்லவும் பவாவிடம் கொட்டிக்கிடக்கும் ஆயிரங்களையும் தெரியும். நானொன்றும் லாவணி பாட வரவில்லை. பவாவிட, கோணங்கியைவிட இவற்றில் வெளிப்பட்டதென்னவோ, மாதவராஜின் மற்றும் அவரது கைத்தடிகளின் வக்கிரங்ளே. மென்மை போர்த்திய வன்மங்களே. போலி வேடங்களே. நானொன்றும் இலக்கியப் பீடத்திற்குத் தவம் கிடக்கவில்லை. எனக்குத் தோன்றுவதை, என்னால் முடிந்ததை எழுதுவேன். ஆனால் நிச்சயமாக என் எழுத்தைப் பற்றிய ஒளி வட்டத்தை நானே எழுப்பமாட்டேன். எவர் எழுப்பவும் விடவும் மாட்டேன்.
பதிலளிநீக்குஎன் எழுத்து எத்தனையை நண்பர் பாலாஜி படித்திருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. கோணங்கியை பவாவை உயர்த்துவதற்காக அருகிலிருக்கும் கோடுகளை அழிக்கிற வேலையை நான் செய்ய மாட்டேன். அவர்களை நானும்தான் படித்திருக்கிறேன். படித்து வருகிறேன். எனது கேள்விகளெல்லாம் கட்டியெழுப்பப்படும் பிம்பங்கள் பற்றியவைதானேயொழிய வேறில்லை.எனக்கொன்றும் மலைகளின் ஆகிருதியைப் பற்றிய பயமில்லை. அவைகள் மலைகள்தானா, மலைகள் போல் போடப்பட்ட செட்டுகளா என்பதில்தான் எனக்குக் கேள்விகள். பாலாஜி போன்ற சுயமழிந்த சிற்றெறும்புகளுக்குச் சிறு கற்களும் மலைகளைப்போன்ற ஆகிருதி மிக்கவைகள்தான். உங்களைப் போன்றவர்கள் வேண்டுமானால் அதன் அடிவாரத்தில் நின்று ஊளையிடலாம். உங்களால் முடிந்ததை நீங்கள் செய்யுங்கள். நான் எழுப்பிய கேள்விகளுக்கு ஏன் உங்களால் பதிலளிக்க முடியவில்லை? மலையென நினைத்துச் சிறு கற்களின் அடிவாரத்தில் இருந்து ஊளையிடுவது நீங்களா? நானா? நானா இலக்கியத் தாசில்தார் வேலை பார்க்கிறேன்? அதுவும்,பிரமிள், பாலகுமாரன், ஜெயமோகன்களுக்கும் சேர்த்துச் சான்றிதழ் வழங்குகிறார் பாலாஜி. அவரது ஆளுமைகளின் பட்டியல் பார்த்தாலே தெரிகிறது அவரது முக விலாசம். கார்ப்பரேட் விசிறிச் சாமியாருக்கும் சேர்த்து வக்காலத்து வாங்குகிறார். அவரென்னவோ எதுவுமே பிடிக்காமல் சிறைப்பட்ட ஞானி என்பதுபோல. நிச்சயமாய் எனக்கந்த ஞானமில்லை. ஆனால் உண்மையான ஞானங்களைப்பற்றிய ஞானம் உண்டு. எனக்கொன்றும் தமிழின் இருபது சிறுகதைகள், பத்துச் சிறுகதைகள் என்று பட்டியலிட்டு, பிராணத்துவ வெறியோடு தமிழின் இலக்கியப் பரப்பை மேல் கீழாய் அடுக்கி அசிங்கப்படுத்தும் தேவையுமில்லை. பாலாஜி படித்தவரை என்று அவரே அதற்கொரு எல்லையிட்டிருப்பது ஆறுதல். எல்லாம் அவரவர் கைமணல்தான். உலகம் ரொம்பப் பரந்தது. உங்கள் மலைகள் மலைகளென்றால் இருந்துவிட்டுப் போகட்டும். மலைகள் மட்டும் உலகமில்லை. உயரங்கள் மட்டுமே உலகமில்லை. எல்லாம் ஒரு சார்பியல் அர்த்தத்தில் விளங்கிக் கொள்ளப்படுபவைதான். ஒரு விமானத்தின் மேலேறிக்கூட மலைகளின் உயரத்தை மிக எளிதாகக் கடந்து சென்று விட முடியும். மலைகளின் மீது அனாயசமாக சின்னஞ்சிறு ஆட்டுக் குட்டிகள் கூடத் தமது சின்னஞ்சிறு கால்களால் அவற்றின் உயரங்களை வெற்றி கொள்வதுண்டு. எழுத்தாளர்களும் சாதாரண மனிதர்கள்தான். இவர் எழுதத் தெரிந்த சாதாரண மனிதர், மற்றவர் எழுதத் தெரியாத சாதாரண மனிதர். என் எழுத்து மட்டும் புனிதம், என் வாழ்க்கை மட்டுமே புனிதம் என்பது இநத் நாட்டில் பிராமணத்துவம் கட்டமைத்த ஒரு உளவியல் வெறி. மலையடிவாரங்களில வெறி கொண்டலையும் பாலாஜி போன்றவர்களைப் பார்த்து வெறிகள் பற்றிய சித்திரம் வேண்டுமானால் வரையலாம் அல்லது எழுதலாம்.
பதிலளிநீக்குபலே பலே... ஸ்ரீரசா ரொம்ப நல்லாவே பல்டி அடிக்கிறிங்க... இப்படி ஒரு பல்டி அடிறா ராமா... அப்படி ஒரு பல்டி அடிறா ராமா... ரொம்ப நல்லாவே முயற்சி செய்றீங்க ஸ்ரீரசா... ஏதாவது புசா முயற்சி செய்யுங்களேன்...
பதிலளிநீக்குஉங்கள் பின்னூட்டத்தை படிப்பவர்களுக்கு தெரியும் நீங்கள் பல்டி அடிக்கும் சாகசம்...
இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலப்பா...
தோழர் மாதவராஜ் உங்களுக்கு நன்றி... இனியும் உங்கள் வலைப்பக்கங்களை ஆக்கிரமிப்பது நாகரிகமாக இருக்காது. நன்றி..
அண்ணா !!
பதிலளிநீக்குஏதோ ஒரு பெரிய சண்டை நடந்து முடிஞ்சுருக்குன்னு மட்டும் தெரியுது
மழை வெரிச்ச பிறகு பத்தி போடா வந்து இருக்கேன் அண்ணா
I am very sad after reading the whole comments..The words used in the comments are crossed the limits and "INTELLECTUAL HONESTY"...My request is to REMOVE ALL THE COMMENTS from the blog..It is possible when it is possible in the ASSEMBLY AND PARLIAMENT proceedings..
பதிலளிநீக்குIn future I am expecting good comments and arguments only...Mahav!you could have edited or deleted "some words and paras" of the "some"comments..
அன்பு மாது..
பதிலளிநீக்குகோணங்கியின் கூடப்பிறந்த அண்ணன் என்கிற முறையில் ஓரிரு வரிகளை மட்டும் இங்கே பதிவிட விரும்புகிறேன்.கோணங்கி எங்களோடுதான் வாழ்கிறார்.எங்கள் உழைப்பை அவர் உறிஞ்சுவதாக எங்கள் வீட்டில் யாரும் நினைப்பதில்லை.அவருக்கு உதவிய நண்பர்கள் யாரும் அப்படி நினைப்பதாக இன்றுவரை நாங்கள் கருதியதில்லை.அன்பினாலும் இலக்கிய ஈடுபாட்டினாலுமே அவர்கள் உதவுகிறார்கள்.அவருடைய உழைப்பு காசுக்காக இல்லை என்பதில் எங்கள் வீட்டில் யாருக்கும் வருத்தமில்லை.எழுத்துக்காக அவர் அளவுக்குக் கடுமையாக உழைக்கிற படைப்பாளிகள் தமிழில் மிகக்குறைவு.அந்த உழைப்பை எங்கள் குடும்பம் மதிக்கிறது.நண்பர் குறிப்பிடுவது போல கோணங்கி தன்னிடம் உறிஞ்சிவிட்டார் என யாரேனும் கருதினால் அது எத்தனை லட்சமாக இருந்தாலும் அதனைத் திருப்பித் தர நாங்கள் தயாராக இருக்கிறோம்.
மதவ் ஜி அவர்களுக்கு! கோணங்கியின் கதைகளைஆரம்பகாலத்தில்படித்திருக்கிறேன்.பின்னர் அவருடைய படைப்புகளை புரிந்து கொள்ளமுடியமல் போயிற்று . தனக்கென்று எழுதும் முறையை உருவாக்கிக்கொண்டார்.அது சரிதானா என்று பரிசீலிப்பதற்குக் கூட எவரும் வரவில்லை. அவரை ஆதரிக்கும் நண்பர்கள் சிலர் கூடுதலாக படம் பொடுகிறர்களோ என்றுதான் தோன்றுகிறது.தன்னுடைய ஆக்கபூர்வமான திறமையை விரயம் செய்துவிட்டாரோ என்று படுகிறது. கிராமம் கிராமமாக சென்று இலக்கிய வம்பளப்பு செய்வது வேறு. நவீன தமிழ் இலக்கியத்திற்கு சேவை செய்வது வேறு .அன்புடன் .காஸ்யபன்
பதிலளிநீக்குஅன்பு மிக்க நண்பருக்கு,
பதிலளிநீக்குவணக்கம்
ஒருவர் பற்றிய ஒருவரது அபிப்ராயத்தை சொல்ல யாருக்கும் உரிமை இருக்கிறது.அதற்கு வயதோ வாசிப்போ தடையில்லை.கோணங்கி என் தலைமுறையின் மகத்தான கலைஞன். அவன் கல்குதிஅரௌ\இக்கு கரும்பு கொடுத்தானா கல்குதிரை கொணடு வருகிறானா என்பதல்ல விஷயம்.அருகம்புல்லோடிக் கிடக்கும் நிலத்தை உழ ஏரோட்டுபவன் படூம் திண்டாட்டத்தை அவன் எழுத்தில் படிக்க முடியாதவர்கள் தங்கள் முடியாமையைக்காக காத்திருக்கலாம்.
தமிழ்ச் செல்வன் சொல்லியிருப்பது போல யாரேனும் தங்கள் உழைப்பை கோணங்கி உறிஞ்சுக் கொண்டிருப்பதாக எண்ணுவதானால் என் சேமிப்பின் கணிசமான பகுதிய தர நான் தயாராயிருக்கிறேன்.-கலாப்ரியா
ஒரு வாதத்திற்காக கோணங்கிக்கு மிகையான பிம்பம் கட்டமைக்கப்படுகிறது என்றே வைத்துக்கொண்டாலும், அதனால் யாருக்கு என்ன கேடு?! எப்படியெனினும் அவர் படைப்பாளி. ஆக்கங்கெட்ட கூவைகளும், கழிசடைகளும், பாதி வெந்தவைகளும் கொண்டாடப்படும் தேசத்தில் ஓர் எழுத்தாளன் கொண்டாடப்பட்டால் யாருக்கு என்ன பிரச்சனை?! பொதுவெளியில் இப்படி கொந்தளித்து அவரை அசிங்கப்படுத்துவதன் உள்நோக்கமென்ன?! யார் சோற்றில் அவர் மண்ணள்ளிப்போட்டார்?! ஆதாரம் இருப்பின் தன் கைப்பணத்தை தந்து கணக்கை நேர் செய்கிறேன் என்கிறார் கலாப்ரியா. லட்சமெனினும் கொடுக்கிறேன் என்கிறார் தமிழ்செல்வன். எவரையும் அசிங்கப்படுத்தி விட்டு, அணக்கம் காட்டாமல் இருந்து விட இணையம்தான் எத்தனை எளிதான் ஊடகம்?!
பதிலளிநீக்குகோணங்கியை இத்தோடு விட்டு விடலாம்.அவர் இதுபற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.அவர் எந்த கிராமத்துக்கும் போய் வம்பளப்பதும் இல்லை.’இலக்கிய சேவை ’ ஆற்றுவதும் இல்லை.அவருக்குப் பின்னால் ஒளி வட்டமும் இல்லை.கலாப்ரியாவைப்போல,பவாவைப்போல நூறு நூறு அண்ணன் தம்பிகளின் அன்பை மட்டுமே நம்பி வாழும் ஓர் எளிய /அற்ப ஜீவன்தான். கோணங்கியை விடுங்கள்.
பதிலளிநீக்குஎவரையும் இப்படித்தான் எழுத வேண்டும் என்று சொல்ல யாருக்கு அதிகாரம் இருக்கிறது? எவர் பற்றியும் தீர்ப்பெழுத காலம் யாரை நியமித்திருக்கிறது.புரியவில்லை என்பது எப்போதும் ஒருதரப்பானதல்ல.அது எழுத்தின் மீதான விமர்சனமாகவும் வாசிப்பவனின் போதாமை மீதான விமர்சனமாகவும் ஒரே நேரத்தில் இருக்கிறது.கோணங்கியை என்னாலும் முழுதாக உள்வாங்க முடியவில்லை.அதற்காக இப்படி எழுது அப்படி எழுது என்று கடந்த 30 ஆண்டுகளில் ஒருபோதும் சொன்னதில்லை.அவர் நம்பும் பாதை அவருக்கு.நான் நம்பும் வழி எனக்கு.