உலகின் மிக அழகிய பெண்ணொருத்தி!


இன்று காலையிலிருந்து இந்தக் கவிதை வரிகளே எனக்குள் ஓடிக்கொண்டு இருக்கின்றன.  வார்த்தைகளில் பொங்கும் விடுதலைக்கான வேட்கையும், வெப்பமும் நாடி நரம்புகளுக்குள் துள்ளிக்கொண்டு இருக்கின்றன.

துனிசியாவில் ஒரு காய்கறி விற்கும் அன்றாடங்காய்ச்சியின் உடலில் பற்றிய தீ, அந்த தேசத்தின் வரலாற்றையே இன்று மாற்றியிருக்கிறது.  தங்களின் வேதனைகளுக்கு, ஒரு முடிவெழுத அம்மக்கள் கூடி நின்றார்கள்.  வாட்டி வதைத்த சர்வாதிகாரியின் ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பரித்து எழுந்த மக்களால், காலம் தன்னை புதுப்பித்துக் கொண்டிருக்கிறது.

மகத்தான அந்த தருணங்களில்,  ஒரு பெண்ணின் குரல் மக்களிலிருந்து எழுந்து விடுதலையை இசைத்திருக்கிறது. பெரும் ஜனத்திரளுக்கு நடுவே அது ஆன்மாவின் சுருதியை  மீட்டியிருக்கிறது.  ஏகபோகங்களையும், அதிகார பீடங்களையும்  வீழ்த்தி, பறவைகளை சிறகடிக்க வைத்திருக்கிறது. இன்று காலையில் எஸ்.வி.வேணுகோபாலன் தனது இ-மெயிலில் இச்செய்தியினை பகிர்ந்து கொண்டிருந்தார்.  அவள் பெயர் அமல் மத்லூதி!  தானே எழுதி, தானே ராகம் கொடுத்து, தானே பாடுகிறார். தேச எல்லைகளையெல்லாம் ஒரு பறவையின் சிறகசைப்பாய் அவள் குரலும், வார்த்தைகளும் கடந்து செல்வதைக் கவனியுங்கள்.

000

சுதந்திரமாயும், அச்சமற்றும் இருப்போரின் உருவம் நான் 
இறவா ரகசியங்களின் உருவம் நான்
இறுதிவரை போராடுபவர்களின் குரல் நான்
கூச்சல் குழப்பங்களின் நடுவே ஆழ்ந்த பொருள் நான்


அந்த நாய்கள் எம் மக்களின் உரிமைகளை விற்றார்கள் 
எம்மக்களின் அன்றாட  உணவைப் பறித்தார்கள்
கருத்துரிமையின் முகத்தில் கதவை அறைந்து சாத்தினார்கள்
ஒடுக்கப்பட்ட அந்த  மக்களின் உரிமைதான் நான்


நான் சுதந்திரமானவள், என் வார்த்தைகளும் அப்படியே
நான் சுதந்திரமானவள், என் வார்த்தைகளும் அப்படியே
ஒரு வாய்  உணவுக்கு நாம் கொடுத்த விலையை மறக்காதீர்கள்
நம் துன்ப துயரங்களுக்காண காரணங்கள் எவையென மறக்காதீர்கள்
நாம் உதவி உதவி என்று கதறிய போது
துரோகம் இழைத்து ஓடியவர்களையும் மறக்காதீர்கள்


அந்த சிகப்பு ரோஜாவின் ரகசியங்களும் நானே
வருஷங்கள் காதலித்த  வண்ணம்
நதிகள் தம் மடியில் புதைத்துக்கொண்ட அதன் நறுமணம்
தீப் பிழம்பை இதழ்களாய் பிரசவிக்கும்
சுதந்திரத்தை சுவாசிப்பவர்களை அறைகூவி அழைக்கும்
அந்த சிகப்பு ரோஜாவின் ரகசியங்களும் நானே
இருளில்  ஒளிரும் தாரகையும்  நானே
கொடுங்கோலனின் தொண்டையில் சிக்கிய முள்ளும் நானே
அக்கினியால் விசிறிவிடப்பட்ட காற்றும் நானே
மறக்கப்பட முடியாதவர்களின் ஆன்மாவும் நானே
என்றும் மரிக்கதாவர்களின் குரலும் நானே  நானே

நாம் இரும்பிலிருந்து களிமண்ணை சமைப்போம்
அதிலிருந்து எழுப்புவோம்
பறவைகளையும், வீட்டையும், தேசத்தையும்
காற்றையும் மழையையும்   
உருவெடுக்கும் ஒரு புத்தம் புது நேயத்தையும்

  
                                                                                    
சுதந்திரத்தை சுவாசிக்கும் பூவுலகின் அனைத்து  மனிதர்களின் ஒற்றை உருவம் நான்
துப்பாக்கித் தோட்டாவுக்கு ஒப்பானவள் நான்
சுதந்திரத்தை சுவாசிக்கும் பூவுலகின் அனைத்து  மனிதர்களின் ஒற்றை உருவம் நான்
துப்பாக்கித் தோட்டாவுக்கு ஒப்பானவள் நான்


000
இன்று அவளது பாடல் உலக மொழிகளில் பெயர்க்கப்பட்டு, மனிதர்களுக்குள் ஊடுருவிக்கொண்டு இருக்கின்றன. தமிழில் இந்த அற்புதமான காரியத்தைச் செய்திருப்பவர்  இக்பால்.  அவருக்கு மிக்க நன்றி.  எஸ்.வி.வேணுகோபாலுக்கும் நன்றி.
 
“சுதந்திரத்தை சுவாசிக்கும் பூவுலகின் அனைத்து  மனிதர்களின் ஒற்றை உருவம் நான் ”
ஆஹா! உலகின் மிக அழகிய பெண்ணொருத்தி இவள்.
(இங்கே அமல் மத்லூதி பாடுவதை பார்க்கலாம்)
தொடர்புடைய இடுகைகள்:

கருத்துகள்

15 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. உண்மையே...!
    சுதந்திரமே அழகு.
    அருமை.

    பதிலளிநீக்கு
  2. //மனிதர்களுக்குள் உடுருவிக்கொண்டு இருக்கின்றன//

    எழுத்துப்பிழை:

    உடுருவிக்கொண்டு?

    ஊடுருவிக்கொண்டு!

    பதிலளிநீக்கு
  3. நன்றி, ராஜ ராஜ நாஜன்!

    நன்றி, தமிழ் ஈட்டி. திருத்தி விட்டேன்.

    பதிலளிநீக்கு
  4. ஒரு பெண்ணின் குரல் மக்களிலிருந்து எழுந்து விடுதலையை இசைத்திருக்கிறது.//

    வாழ்த்துகளும் பாராட்டுகளும் அமல் மத்லூதி!.

    பதிலளிநீக்கு
  5. நான் அனுப்பியிருந்த அற்புதமான ஒரு காட்சியை,
    துனிசியா புரட்சி வெடிப்பின்போது வெடித்த ஒரு
    தன்னெழுச்சியான துணிச்சல் கீதத்தை
    இன்னும் பரந்து விரிந்த தளத்திற்குக் கொண்டு சென்றதற்கு எனது நெகிழ்ச்சியான நன்றியைப் பதிவு செய்கிறேன்.

    அமல் மத்லூதி என்பது அந்த வீராங்கனையின் பெயர்.
    சுதந்திரம் அவளது இசைப்பாடலின் கருப்பொருள்.
    ஆர்ப்பாட்டக்காரர்களை மேலும் கிளர்த்துவதும்,
    இன்னும் வீதிக்கு வராதோரை இழுத்துக் கொண்டுவருவதும், அடக்குமுறை எந்திரத்தின் ஆணிவேரைப் பிடித்து ஆட்டுவதுமான இந்தப் பாடலை
    அமல் அவரே எழுதி,
    அதன் தீரப் பொருளில்
    அவரே உருகிக் கரைந்து உள்ளங்களைப் பற்றி ஓர் உலுக்கு உலுக்குவதைக்
    காணாத கண் என்ன கண்ணே,
    கேளாத செவி என்ன செவியே...

    மின்னஞ்சலில் இந்தப் பாடலைக் கண்டும் கேட்டும் தம்மைப் பறிகொடுத்த வடசென்னை
    த மு எ க ச தோழர் இக்பால், அரேபிய கீதத்தின் ஆங்கில வடிவத்திலிருந்து அற்புதமாக அதைத் தமிழாக்கி எல்லையற்ற வாசிப்பு இன்பத்தையும், உணர்ச்சிப் பெருக்கையும் ஊட்டி இருக்கிறார்.....
    தமிழ் நெஞ்சங்களும் கிளர்ந்து பொங்கட்டும்...
    நன்றி மாதவ்...
    மகத்தான நன்றி....

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
  6. அண்ணா ,
    ரொம்பவும் சக்தி வாய்ந்த வார்த்தைகள்


    அன்புடன் கிச்சான்

    பதிலளிநீக்கு
  7. \\சுதந்திரத்தை சுவாசிக்கும் பூவுலகின் அனைத்து மனிதர்களின் ஒற்றை உருவம் நான் \\

    :-)))

    பதிலளிநீக்கு
  8. மொழிபெயர்க்கப்பட்ட கவிதையினை தமிழில் வாசித்துவிட்டு, காணொளியை காணும்போது அவளின் குரல் ஏதோ செய்கிறது...

    பதிலளிநீக்கு
  9. @பயணமும் எண்ணங்களும்!
    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    @எஸ்.வி.வி!
    உங்களுக்கும், இக்பாலுக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும்.இதுபோன்ற நிகழ்வுகள் வாழ்வை நேசிக்கவும், அர்த்தமுள்ளதாகவும் எதிர்நோக்க வைக்கின்றன.


    @கிச்சான்!
    ஆமாம், தம்பி. தங்கள் வலைப்பக்கத்தில் மீண்டும், தொடர்ந்து எழுதுவீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துக்கள்.


    @அம்பிகா!
    எவ்வளவு அழகு, இல்லையா?


    @இ.பா.சிந்தன்!
    நானும் அப்படியே உணர்ந்தேன் தோழர்.

    பதிலளிநீக்கு
  10. மாதவ் ஜி! இரண்டு நாட்களுக்கு முன் அந்தக் காணொளியைப் பார்த்த போதே இதனை தமிழாக்க முடியுமா? என்று நிணத்தேன். உங்கள் இடுகையைப் பார்த்ததும் இக்பால் அவர்களைதொடர்பு கோண்டு நன்றியயும் வாழ்த்துக்களையும் தெரிவித்தேன்.இசை அமைத்து தமிழில் காணொளி வெளியட முடியுமா? பாருங்கள். .எஸ்.வி.விக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள்---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  11. இந்தப்பதிவுக்குக்கூட மைனஸ் ஓட்டுப்போட்டவரின் அறியாமையை எண்ணி வியக்கிறேன்

    பதிலளிநீக்கு
  12. இவர்களை பார்கையில் பெருமையாக இருக்கிறது .

    தங்கள் ஒரு பதிவில் பெண்களின் பிங்க் சாடி போராட்டம் குறித்து பதிவு எழுதி் இருந்தீர்கள்.
    அதற்கு ஒரு வகையில் இந்த பதிவினை பதிலாக சொல்லலாம் என்று தோன்றுகிறது.
    பெண்ணியத்திற்கு போராடும் குணம், நினைத்ததை திடமாக ஆற்றும் குணம் இருக்கவே செய்கிறது .

    பதிலளிநீக்கு
  13. நாம் இரும்பிலிருந்து களிமண்ணை சமைப்போம்
    அதிலிருந்து எழுப்புவோம்
    பறவைகளையும், வீட்டையும், தேசத்தையும்
    காற்றையும் மழையையும்
    உருவெடுக்கும் ஒரு புத்தம் புது நேயத்தையும்
    ...

    வாழ்த்துக்கள்..!

    பதிலளிநீக்கு
  14. 1) அன்புத்தோழர் மாதவ்,
    வணக்கம். தோழர் எஸ்விவி! நமது பதில் வருகின்றதோ இல்லையோ, தன் மனம் கவர்ந்த விசயங்களை மின்னஞ்சலில் நம்மோடு பகிர்ந்து கொண்டே இருப்பார். அப்படியான ஒரு தொடர்பில் இந்தக் கவிதை வந்தது, உணர்ச்சிவசப்பட்ட நான் உடனடியாக அதை மொழிபெயர்த்து எஸ் விவிக்கு அனுப்ப, அவர் அதை தன் கைவண்ணத்தில் மேலும் அற்புதமாக செதுக்க, நீங்கள் பெருந்தன்மையோடு அதை தீராத பக்கங்களில் ஏற்றம் இட நமக்கு கிடைத்ததோ உணர்ச்சிகரமான ஒரு பாலைவனப்புயலின் சங்கீதம்! உங்களிடமிருந்து ஐந்தாம் தேதி காலை எனக்குக் கிடைத்ததோ மன மடை திறந்த வாழ்த்து மடல்! தொலைபேசியில் மீண்டும் மூத்த தோழர் காஷ்யபன் அவர்களிடமிருந்து மனம் திறந்த வாழ்த்துக்கள்! உங்கள மூவருக்கும் பின்னூட்டத்தில் பாராட்டிய அனைவருக்கும் என் நன்றிகள் பலப்பல!
    2) 1908 இல் ஈரானில் (முதல் முதலாக அரபு பிராந்தியத்தில்) எண்ணெய் வளம் கண்டு பிடிக்கப்பட்டது முதலே அமெரிக்க, ஐரோப்பிய அரசுகளின், கார்போறேடுகளின் அழுகிப்போன வியாபார யுக்தி வேலை செய்ய தொடங்கியது. இதன் விளைவுதான் அரபு பிராந்தியம் முழுமையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காலடியின் கீழ் வந்த நீண்ட வரலாறு.... மிக நீண்ட வரலாறு. அரபு மன்னர்கள் அமெரிக்க அடிமைகளாக இருக்க, அரபு மக்களோ அமல் மத்லூதி போன்ற சுதந்திர தாகம் அடங்காதவர்கலாகவே இருக்கின்றார்கள் என்பதை வரலாறு தெளிவாக காட்டி விட்டது. அமெரிக்க அடிமைகளாக இருக்கும் வரை அரபு நாட்டு மன்னராட்சிகளை அமெரிக்க பாதுகாத்து வளர்ப்பதும் அங்கேயே மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் போது அவற்றை ஒடுக்க நசுக்க தனது ஐரோப்பிய NATO ஆயுத பரிவாரங்களுடன் ஆக்கிரமஈபு யுத்தம் நடத்துவதும் ரத்த சாட்சியாக நம் கண் முன்னே ஒரு நூறு வருடமாக அரங்கேறும்் கேவலமான காட்சி அன்றோ! இந்த உலகில்தான் நாம் ஜனநாயகம் பேசி நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றோமா? ஆனால் துனீசிய, எகிப்து மக்களும் இன்று லிபிய மக்களும் அமெரிக்காவின் மூக்கை உடைத்து பாடம் கற்றுக் கொடுத்துள்ளார்கள்! 'அமெரிக்க ஏகாதிபத்தியமே! உள்ளே வராதே! எங்கள் வாழ்க்கையை நாங்களே தீர்மானிப்போம்!' ஆஹா! அற்புதம்! அவர்களை கட்டித்தழுவி வாழ்த்துவோம்! ஆனால்... சாமானிய அமெரிக்க மக்கள் வீறு கொண்டெழுந்து காபிட்டால் வெள்ளை மாளிகை என்னும் கறுப்பு குகை முன் திரண்டு அதை மீண்டும் ஒரு தஹ்ரீர் சதுக்கமாக மாற்றும் அந்த நாள், அது உலக சமுதாயம் மட்டும் அல்ல, அமெரிக்க மக்களும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து மீளும் நாள்.... ஒரு அமெரிக்க அமல் மத்லூதி வெள்ளை மாளிகையின் முன் விடுதலை கீதம் இசைக்கும் அந்த நாளையே நான் எதிர்பார்க்கின்றேன்!அந்நாள் எந்நாளோ!
    இக்பால்

    பதிலளிநீக்கு
  15. இந்த அற்புத மொழியாக்கம்
    வண்ணக்கதிரிலும்
    Bank Workers Unity பத்திரிகையின் மார்ச் இதழிலும்
    அருமையாக இடம் பெற்றுள்ளது...
    ஆனால் உடனே பதிவு செய்த மாதவின் உற்சாகமும்
    உத்வேகமும் மறக்க முடியாதவை.

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!