வாஸ்கோடா காமாவிலிருந்து ஆரம்பிப்போம்!

இந்திய சுதந்திரப் பொன்விழாவையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க சாத்தூர் கிளை சார்பில் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை சுருக்கமாகவும், அழுத்தமாகவும் சொல்கிற புத்தகம் வெளியிடுவதென தீர்மானித்தது. ஏற்கனவே இது சம்பந்தமாய் ஏராளமான புத்தகங்கள் படித்து, கடந்த காலத்திற்குள் அலைபாய்ந்து கொண்டு இருந்தவராக இருந்தார் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன். அவரது வாளின் தனிமை சிறுகதைத் தொகுப்பின் பல கதைகள், விடுதலைப் போராட்டக் காலத்தின் நிழல் கொண்டு இருப்பதைப் பார்க்க முடியும். அவர்தான் நிறைய புத்தகங்கள் தந்தார். யோசனைகள் சொன்னார். எழுத்தாளர்கள் உதயசங்கர், காமராஜ் அவ்வப்போது விஷயங்களைப் பரிமாறிக்கொள்ள நான் முழுக்க சில மாதங்கள் கடந்த காலத்திற்குள் நுழைந்து போய்க்கொண்டே இருந்தேன். பள்ளியில் நான் படித்த வரலாறு எல்லாம் சும்மா எனத் தோன்றியது. வரலாற்றின் இருண்ட பகுதிகள் எல்லாம், வாசிக்க வாசிக்க வெளிச்சம் பெற்றபடி இருந்தன.

அதிர்ச்சியும், அதிசயமும் ஒருசேர ஆட்கொண்டு இருக்க, நான் படித்து அறிந்த அந்த இந்திய சுதந்திர வரலாற்றை மிகவும் சுருக்கமாக எழுத ஆரம்பித்தேன். கோவில்பட்டியில் நண்பர் மாரிஸின் கம்ப்யூட்டரில் ஐநூறு ஆண்டு கால இந்தியாவின் வரலாறு 72 பக்கங்களுக்குள் நிரம்பியது. ஒருநாள் அங்கு வந்து தங்கிய எழுத்தாளர். ராமகிருஷ்ணன் ஒரே மூச்சில் படித்துவிட்டு, சுவராஸியமாய் இருப்பதாகவும், சில கூடுதல் தகவல்களையும் சொன்னார். சில நாட்கள் அங்கு தங்கியிருந்த கவிஞர். விக்கிரமாதித்தியன் அவர்கள்தான் இந்த புத்தகத்தில் இருந்த எழுத்துப் பிழைகளை சரிசெய்து தந்தவர்! இப்படி பலரது பங்களிப்பில் வெளிவந்த “வீர சுதந்திரம் வேண்டி...” என்னும் இந்த புத்தகத்தை தமிழ் பத்திரிகை உலகம் வெகுவாக கொண்டாடியது.

”அச்சும் வடிவமைப்பும் சில வெளிநாட்டுப் புத்தகங்களை நினைவு படுத்துகின்றன”- தினமலர்
“வரலாற்றை மிக சுவாராசியமாக தொகுத்திருக்கிறார்கள்” - இந்தியா டுடே
“வழக்கமான வரலாற்று நடையை மீறி படிக்கத் தூண்டும் இயல்பான நடையோட்டம்” -புதிய நந்தன்
“ஏராளாமான படங்களுடன் கூடிய தேர்ந்த தொகுப்பு” - தினமணி
“நெருப்பு விதைகளாய் உண்மைகள் நூல் முழுவதும் பரவிக்கிடக்கின்றன” -கணையாழி
“நுலின் நடை கருத்தோடு இணைந்து உணர்ச்சியும் வீரியமும் மிக்க கவிதைகளாய் பாய்ந்துள்ளன” - தாமரை

பனிரெண்டு வருடங்களுக்குப் பிறகு அந்தப் புத்தகத்தை இதோ வலைப்பக்கங்களுக்கு கொண்டு வருகிறேன். பத்துப் பனிரெண்டு பதிவுகளில், ஆகஸ்ட் 15க்குள் முடித்துவிட உத்தேசம். புத்தகத்திலிருக்கும் புகைப்படங்களைக் கொண்டு வருவதில்தான் சிக்கல்கள் இருக்கின்றன. பார்ப்போம்.

வாஸ்கோடாகாமாவின் வருகையிலிருந்து ஆரம்பிக்கிறது..... ”வீர சுதந்திரம் வேண்டி....’! வாருங்கள் உள் நுழைவோம்!!

*

ழிவழியாய் முன்னோர்களின் சிந்தனையும் வேர்வையும் இந்த மண்ணில்தான் ஆழ வேர் கொண்டு இருக்கிறது. இதன் ஒவ்வொரு மண்துகளிலும் நமக்கு ரத்த சம்பந்தம் இருக்கிறது. மக்களுக்கு எப்போதும் அள்ளி வழங்குவதற்கு இயற்கைச் செல்வங்கள் ஏராளமாய் வைத்திருக்கிற அற்புத சுரபி இது.

பல ஆயிரம் காலம் கொண்ட நமது தாய்கத்தின் வரலாற்றில் மண்ணின் வளங்களையும் அதன் உண்மையான சொந்தக்காரர்களான மக்களையும் சுரண்டித்தின்ற பிசாசுகளின் காலடித்தடங்கள் பெரிதுபெரிதாய் போயிருக்கின்றன. எல்லைகளை விரிவுபடுத்துகிற வெறியில் சாம்ராஜ்ஜியங்கள் எழுவதும் வீழ்வதுமாய் கலைந்திருக்கின்றன. பொழுதெல்லாம் யுத்தங்கள். சாதாரண மக்களின் கனவுகள், கஷ்டங்கள் எல்லாம் சீந்துவாரற்று அவர்களது பேரோடு பேராய் காணாமல் போயிருக்கின்றன.

தரைவழியே நடந்த போட்டிகளுக்கும், போர்களுக்கும் சத்தமில்லாத தாக்குதல் ஒன்று கடல்வழியே வந்தது. “சரித்திரம் மன்னர்களாலும், தலைவர்களாலும் உருவாக்கப்படுவதில்லை. சரித்திரம் படைப்பவர்கள் மக்களே!” என்கிற உண்மை வெளிப்பட வரலாற்று நெருக்கடியாய் விதைபோட்ட நாள் அது. ‘சுதந்திரம்’ என்கிற சொல்லை இந்த மண்ணின் மக்கள் உச்சரிக்க ஏராளமான

வாஸ்கோடா காமா
great-explorers--vasco-da-gama

சோதனைகளைக் கொண்டு வந்த நாள் அது. நமது முன்னோர்கள் பின்னாளில் நடத்திய போராட்டங்கள், சிந்திய ரத்தம், செய்த தியாகம் எல்லாவற்றையும் வேதனைமிக்க துடிப்போடும், நம்பிக்கையோடும் இந்த மண் பார்ப்பதற்கு ஒருவகையில் காரணமான முக்கிய நாள் அது.

1498 மே மாதம் 20ம் தேதி அந்த வெள்ளிக்கிழமை இரவு அரபிக்கடல் வழியே கப்பலில் போர்ச்சுக்கீசிய மாலுமி வாஸ்கோடாகாமா கேரளாவில் உள்ள கோழிக்கோடு வந்து சேர்ந்தான். இந்தியாவின் அளப்பரிய செல்வம் கேள்விப்பட்டு ஐரோப்பியர் இந்தியாவோடு வியாபாரம் செய்யத் துடித்த காலமது. இங்கு தங்கமும், வாசனத்திரவியங்களும் மிகுந்திருப்பதாய்க் கேள்விப்பட்டு கொலம்பஸ் கடல்வழியே 1492-ல் இந்தியாவுக்குப் பதிலாக மேற்கு இந்தியத் தீவுகளையும் அமெரிக்காவையும் கண்டறிந்த நிகழ்வுக்கு, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இது நடந்தது.

வாஸ்கோடாகாமாவோடு கப்பலில் பயணம் செய்த குழுவில் ஒருவன் எழுதிவைத்திருந்த டயரிக்குறிப்பில் அந்தப் பயணத்தின் அதிர்ஷ்டம் குறித்து எழுதப்பட்டு இருக்கிறது. பயணம் செய்த குழு தரை இறங்கி விசாரித்துவிட்டு படகில் கப்பலுக்குத் திரும்பிய போது கொண்டுவிட வந்த கோழிக்கோட்டுக்காரன் “அதிர்ஷ்டமான பயணம்! வைரமும், வைடூரியமுமாய் இருக்கின்றன. இந்த வளமான பூமிக்குக் கொண்டு வந்த சேர்த்ததற்கு தாங்கள் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்” என போர்ச்சுக்கீசிய மொழியிலேயே பேசியது கண்டு பிரமிப்பு அடைந்து போனார்களாம்.

இந்தப் பயணம்தான் ஐரோப்பாவிலிருந்து போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் என இந்தியாவிற்கு வியாபாரம் செய்ய வழி அமைத்துக் கொடுத்தது. இங்கு ஆண்டு கொண்டிருந்த மன்னர்களிடம் மண்டியிட்டு மரியாதை செலுத்தி வியாபாரத்திற்கு அனுமதி பெற்றுக் கொண்டனர். இந்திய மன்னர்கள் தத்தம் ராஜ்ஜியங்களை பெருக்கச் சண்டையிட்டுக் கொண்டு இருந்தபோது ஐரோப்பியர்கள் மெல்ல மெல்ல வியாபாரங்களைப் பெருக்கி இந்தியாவிலிருந்து செல்வங்களை தங்கள் நாடுகளுக்குக் கொண்டு போய்க் கொண்டு இருந்தார்கள்.

ஆரம்பத்தில் போர்த்துக்கீசியர்களே இந்திய வாணிபத்தில் பெரும்பங்கு வகித்தார்கள். கி,பி 1600-ல் பிரிட்டிஷ்

செயிண்ட் ஜார்ஜ் கோட்டை
Fort ST George 1700s
* சென்னையை 1640ல் சென்னப்ப நாயக்கரிடமிருந்து விலைக்கு வாங்கிய கிழக்கிந்தியக் கம்பெனி புனித ஜார்ஜ் கோட்டையை 1641ல் பாதுகாப்பிற்காக கட்டிக்கொண்டது.

* 1661ல் பம்பாயை ஆண்டுக்கு 10 பவுன் வாடகைக்குப் பெற்றுக் கொண்டது

* 1690ல் கல்கத்தாவில் பண்டகசாலை நிறுவ அவுரங்கசீப்பிடம் அனுமதி பெற்றது

மகாராணி எலிசபெத் இந்தியாவில் வாணிபம் செய்யக் கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுமதியளித்தார். 1615ல் மன்னன் ஜஹாங்கீர் அரசவைக்கு கம்பெனியின் ஆட்கள் வந்து சூரத்தில் பண்டகசாலை நிறுவுவதற்கு அனுமதி கேட்டார்கள். அதன்பிறகு நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன.

கிழக்கிந்தியக் கம்பெனி நூறு சதவீதத்திற்கும் மேலாக லாபம் வைத்து வியாபாரம் செய்தன என்று ஜேம்ஸ் மில் ‘பிரிட்டிஷ் இந்தியாவின் வரலாறு’ நூலில் எழுதியிருக்கிறார். இந்திய மன்னர்களுக்குள்ளேயே பகைமையை மேலும் வளர்த்து ஆயுதங்களையும் விற்றனர். அவற்றைப் பெற விரும்பிய மன்னர்கள் அதிக சலுகை காட்டினர். சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய மையங்களில் கம்பெனியின் வியாபாரம் விரிந்தது. போர்த்துக்கீசியர் செல்வாக்கு கோவா, டையூ, டாமனில் மட்டுமாய் சுருங்கிப் போனது. பிரிட்டிஷ்காரர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்குமிடையில் பலத்த வியாபாரப் போட்டி. இது இந்திய அரசியலிலும் எதிரொலிக்க ஆரம்பித்தது. நொறுங்கிக் கொண்டு இருந்த ராஜ்ஜியங்களில் அரசாண்ட மன்னர்கள் தங்கள் வாரிசுரிமையை நிலைநாட்டுவதற்கு வேற்று நாட்டவர்களைப் பயன்படுத்த, அந்த அன்னியர்கள் மன்னர்களை பயன்படுத்த ஒரே யுத்தங்களாய் இருந்தன. ஒரு நூறு ஆண்டுகள் இப்படியே கழிந்தன.

(சுவடுகள் நீள்கின்றன...)

*

கருத்துகள்

9 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. பரிட்சைக்குன்னு படிச்சப்போ வரலாறு கொஞ்சம் bore-தான்! :-) ஆனா இப்போ படிக்கும்போது சுவாரசியமா இருக்கு!பகிர்வுக்கு நன்றி!!

    பதிலளிநீக்கு
  2. SCAN PANNI PDF LA POTRALAAME, EDUKKU PAAVAM KAI VALIKKA YOU ARE TYPING IN 15 POSTS.

    SCAN PANNI PDF LINK TAANGA, PADIKKA AAVALAI IRUKKEN

    பதிலளிநீக்கு
  3. Toggle between English and Tamil using Ctrl + g
    அன்புள்ள தோழருக்கு

    வணக்கம் . சரியான வரலாற்றை இன்றைய தலைமுறை யினருக்கு கொண்டு செல்ல வேண்டிய முக்கியமான கடமை உங்களை போன்ற இயக்கங்களுக்கு உண்டு. நாம் அடிமை ஆன கதயை நாமே நினைவு படுத்தி கொள்ளும் அவலம் நமது தேசத்தில் உள்ளது வருந்தத்தக்கது. பெப்சி மற்றும் கோக் குடிப்பதே தேசிய அடையாளம் ஆகி போன நாட்டில், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை பற்றி எப்படி பேசுவது என்பதே தெரியவில்லை. அந்நிய கம்பெனி களுக்கு நாட்டையே விற்க துடிக்கும் அரசியல் வாதிகளின் கோர முகத்தை எப்படி தெரியபடுத்துவது?

    உங்கள் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை தெரியப்படுத்துங்கள்...

    நன்றி.

    பவித்ரா

    பதிலளிநீக்கு
  4. வரலாறு படிக்க எனக்கு எப்பவுமே ஆர்வமுண்டு. அதுவும் நம்மண்ணை பற்றி. தொடர்ந்து படிக்க ஆவல் பணிசுமை அற்ற நேரங்களில் படிப்பேன்.

    பதிலளிநீக்கு
  5. வேகம் தெரிகிறது....காபி மட்டும்தான் புல் மீல்ஸ் கிடையாது..

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் நன்றி. குப்பன் யாஹூ அவர்கள் இந்தப் பதிவை வெளியிட, சிரமப்ப டவேண்டி இருக்குமே என்று ஆதங்கத்தில் கருத்து சொல்லியிருக்கிறார். எனக்கொன்றும் சிரமமில்லை. படிப்பவர்கள் சிரமப்படாமல் இருக்க வேண்டுமே என்பதுதான் என் கவலை.
    பவித்ரா அவர்கள் இந்தப் புத்தகம் எங்கு கிடைக்குமென்று கேட்டிருக்கிறார். என்னிடம்தான் கிடைக்கும். மொத்தம் 40 புத்தகங்களே இருக்கின்றன. வேண்டுமென்றால் எனது இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

    August 4, 2009 9:36 PM

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!