குழந்தை மொழி

குழந்தைகளின் அகவுலகம் எப்போதும் உணர்வு அலைகளில் ததும்பிக்கொண்டே இருக்கிறது. அதிசயங்கள் மொய்த்துக் கிடக்கும் ஒவ்வொரு கணமும் அவர்களுக்கு மட்டுமே சாத்தியமாய் இருக்கிறது. வீட்டில், பள்ளியில், தோட்டத்தில் அவர்களது வார்த்தைகள் தொடர்ந்து பூத்துக்கொண்டேயிருக்கின்றன கவனிப்பாரற்று. குழந்தைகளின் மொழியை உலகம் தவறவிட்டதே மாபெரும் சாபமாய் எல்லோர் மீதும் கவிந்து கிடக்கிறது.

1. ஒரு செடியும், ஒரு பூவும்

அவன் அந்தச் செடியின் இலைகளைப் பறித்துக் கொண்டிருந்தான். செடியின் காம்புகளில் இருந்து பால் போன்ற திரவம் சொட்டிக் கொண்டிருந்தது. அவனது பிஞ்சு விரல்கள் அதைத் தொட்டுப் பார்க்கின்றன. அக்கா அதைப் பார்த்து விடுகிறாள்.

"ஏன் இலைகளைப் பிய்த்துப் போடுகிறாய். இப்படிச் செய்யக் கூடாது என்று எத்தனை தடவை உனக்கு நான் சொல்லியிருக்கிறேன்"

அவன் இலைகளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"பார்...இந்தச் செடி அழுகிறது". பாவம் போல குரலை வைத்துக் கொண்டு அவள் சொன்னாள்.

"செடி அழுகிறதா?"

"ஆமாம். இதுதான் கண்ணீர்"

செடியையே பார்த்துக் கொண்டிருந்தான். கன்னம் சுருங்க ஆரம்பித்தது. அண்ணாந்து அக்காவைப் பர்த்தான். அக்கா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அடிபட்டது போல முகம் துடித்தது. கண்கள் கலங்கின.

"அக்கா, இந்தச் செடியை சிரிக்க வையேன்"

"செடியை நீதான் அழ வைத்தாய். நீயே சிரிக்க வை."

"எனக்கு சிரிக்க வைக்கத் தெரியலயே". அவன் சத்தமாய் அழ ஆரம்பித்தான். "அக்கா, ப்ளீஸ்... செடியை சிரிக்க வையேன்"

"எனக்கும் தெரியலயே"

உதடுகள் பிதுங்க, கண்ணீர் நிறைந்த கண்களுடன் செடியையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"காற்று வீசினால் செடி சிரிக்கும்." அக்கா சொன்னாள்.

அவன் செடியை நோக்கி ஊதிக் கொண்டிருந்தான். "அக்கா செடி சிரிக்கிறதா".

முன்பக்கம்

கருத்துகள்

17 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. குழந்தையின் மொழி புரியவில்லையா, அல்லது எனது மொழி புரியவில்லையா?

    ஆயில்யனும், வால்பையனும் எனது ஈ-மெயிலுக்கு கருத்து எழுதியிருக்கிறார்கள்.

    வால்பையன், நண்பா என்னது இது என்றே கேட்டுவிட்டார்.

    இப்போது, பதில் சொல்லாமல் கடந்து போகிறவர்களை வேடிக்கை பார்க்கிறோம் நானும் எனது குழந்தையும்!

    மதுமிதா, விமலவித்யா, வேணு, தீபா, உஷா, வல்லிசிம்ஹன், கென், ஜ்யோராம் சுந்தர் இன்னும் நீங்களெல்லாம் கடந்து போகவில்லையே?

    பதிலளிநீக்கு
  2. இன்று விடிகாலையில் படித்தேன். வயதானபிறகு அழுவதற்குக் கூச்சமாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  3. குழந்தை மொழிகள் எப்பவுமே அழகுதான் அவர்களுடைய மனசைப்போல:)

    அவர்கள் உலகோ வெகு இனிமையானது. ஒவ்வொரு மனிதரும் இதைக் கடந்தே வந்திருக்கிறோம். இதைத் தக்க வைத்துக்கொண்டால் சிறப்பு. ஒரு காலம் கடக்கையில் இது மாறிவிடுவதுதான் கொடுமை. குழந்தை மனசை முதுமை வரையிலும் மாறாமல் பாதுகாத்துக்கொள்ளும்போது இன்னும் நிறைந்த சாந்தியினை உணர முடியும்.

    இது ந‌ன்றாக வந்திருக்கிற‌து மாத‌வ‌ராஜ். இதையும் தொட‌ர்ந்து எழுதுங்க‌ள்.

    இங்கே ஒரு செடிக்கு அருகில் இரு பூக்க‌ள் இருக்கின்ற‌ன‌வே

    பதிலளிநீக்கு
  4. குழந்தையின் மொழி, உங்கள் மொழி இரண்டும் புரிகிறது மாத‌வ‌ராஜ்.

    ச‌னி, ஞாயிறு விடுமுறை இல்லையா. அத‌னால் பார்த்து ப‌திலிட‌ முடிந்திருக்காது என‌ புரிந்துகொள்ள‌வேண்டும்:)

    யாரேனும் க‌ட‌ந்து போனால் ர‌சிக்காம‌ல் க‌ட‌ந்துவிட்டார்க‌ள் என‌ நினைக்க‌வேண்டாம்:)

    //ஜ்யோவ்ராம் சுந்தர் said...
    இன்று விடிகாலையில் படித்தேன். வயதானபிறகு அழுவதற்குக் கூச்சமாக இருக்கிறது//

    என்ன‌ அருமையான‌ வ‌ரி 'வயதானபிறகு அழுவதற்குக் கூச்சமாக இருக்கிறது'

    பதிலளிநீக்கு
  5. அருமையான பதிவு. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. //யாரேனும் க‌ட‌ந்து போனால் ர‌சிக்காம‌ல் க‌ட‌ந்துவிட்டார்க‌ள் என‌ நினைக்க‌வேண்டாம்:)//

    மதுமிதா கூறியதை வழிமொழிகிறேன். குழந்தைகளின் அற்புதமான மொழியை பதிவு செய்திருக்கிறீர்கள். சிந்திக்க வைத்தது. எதுவும் பேசத் தோன்றவில்லை.

    மேலும் சென்ற பதிவில் எழுதியிருந்தீர்க‌ளே. "ரினோசெரஸ் ஸ்பெல்லிங் சொல்லு" என்று ஒரு அம்மா அவசரமாகக் கிளம்பும் குழந்தையின் பின் ஓடி வந்தது வேதனை க்லந்த வேடிக்கை.

    பதிலளிநீக்கு
  7. ஜ்யோவ்ராம் சுந்தர்!


    உங்கள் கமெண்ட் வித்தியாசமாகவும், உண்மையாகவும் வெளிப்பட்டிருக்கிறது.அழலாம். தவறே இல்லை.
    இதில் வயதானால் என்ன, வயதாகாவிட்டால் என்ன?
    குழந்தைகளை நாம் அழவைப்பதை விட,
    அவர்கள் நம்மை இப்படி அழவைப்பது ஒன்றும் மோசமானதில்லை.
    உங்களுக்கு அழுகை வந்திருந்தால், உணமையில் இன்னும் குழந்தைத்தனமையை நீங்கள் இழக்கவில்லை என்று அர்த்தம்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. மதுமிதா!

    ஆஹா!
    செடிக்கு அருகில் இரண்டு பூக்கள்.
    அற்புதமாக உணர்ந்திருக்கிறீர்கள்.
    அது என் மகள் பிரீத்துவும், மகன் நிகிலும்தான்.

    பதிலளிநீக்கு
  9. மதுமிதா & தீபா!

    நீங்கள் ரசிக்காமல் போய் விடுவீர்கள் என்று நினைக்கவில்லை.
    நீங்கள் எதாவது சொல்ல வேண்டும் என்று ஒரு செல்ல provoking!
    நானும் ஒரு குழந்தையாகத்தான் இருக்கிறேனோ?

    பதிலளிநீக்கு
  10. தீபா!

    அந்த அம்மா ஸ்பெல்லிங் கேட்டு ஓடி வந்ததை நானும் அம்முவும் பார்த்திருக்கிறோம்.
    சிரித்திருக்கிறோம். வேதனைப்பட்டிருக்கிறோம்.
    இதில் அந்த ரிக்சா வண்டிக்காரர் சொன்னதுதான் இப்போது நினைத்தாலும் சிரிக்கத் தோன்றும்.
    "பாவம்மா..அந்தப் பையன்..ஸ்கூல் போற நேரத்துல பயங்காட்டாதீங்க." என்று சொல்லிவிட்டு அந்த அம்மாவிடம் இருந்து பையனை காப்பாற்றுவதாக வேகமாக சைக்கிளை அழுத்திய காட்சி மறக்க முடியாது.
    இப்போது அந்தப்பையன் ஒரு ஸாஃப்ட்வேர் கம்பெனி ஒன்றில் நல்ல வேலையிலிருக்கிறான்.
    பந்தயக்குதிரை பரிசு வாங்கிவிட்டது.

    பதிலளிநீக்கு
  11. புதுகைத் தென்றல்!

    வாழ்த்துக்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  12. இன்னும் ஒரு செடியும், ஒரு பூவும் குறித்து
    கருத்துக்கள் மேலோட்டமாகத்தான் வந்திருக்கின்றன
    என்பதுதான் என் கருத்து!

    பதிலளிநீக்கு
  13. //நானும் ஒரு குழந்தையாகத்தான் இருக்கிறேனோ?//


    அதில் என்ன சந்தேகம்? நீங்கள் குழந்தை உள்ளம் மாறாமல் இருப்பதனால் தான் உணர்ச்சி முகுந்த படைப்பாளியாகவும் சிந்தனாவாதியாகவும் இருக்கிறீர்கள்.
    :-)

    மேலும் இந்த நிகழ்வை நீங்கள் நேரிலேயே என்னிடம் சொல்லி இருக்கிறீர்கள். அதனால் தான் நான் மௌனமாய் இருந்து உங்களைப் போலவே மற்ற வாசகர்களீன் கருத்துக்களை அறிய ஆவலாக இருந்தேன்; இருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  14. தீபா!

    குழந்தையாய் இருப்பது சந்தோஷம்தானே!
    நேஹாவை விடவும் சந்தோஷமானவர்கள் யார் இருக்க முடியும்?

    பதிலளிநீக்கு
  15. how your thinking and writing like this excellent lines mama. really nice.............

    பதிலளிநீக்கு
  16. கவீஷ்!

    நிகில் சொன்னதை நான் எழுதியிருக்கிறேன். அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!