ஆதலினால் காதல் செய்வீர் - 4ம் அத்தியாயம்


4. பெண் ஒரு கிரகம், ஆண் ஒரு கிரகம்.


"நீங்கள் என்னை வெளியே கூட்டிச் செல்வதே இல்லை"

"என்ன இப்படிச் சொல்கிறாய். போன வாரம் சித்தப்பாப்பொண்ணு கல்யாணத்திற்குச் சென்றோமே"

அவளுக்கு தான் சொன்னதை அவன் புரிந்து கொள்ளவில்லையே என்று ஏக்கம் இன்னும் தொடருகிறது. பெண் தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறாள். ஆண் அதில் உள்ள வார்த்தைகளின் அகராதி அர்த்தம் பற்றியே யோசிக்கிறான். தன்னை பிரத்யேகமாக கவனித்து வெளிகளில் அழைத்துச் செல்ல அவன் முனைப்பில்லாமல் இருக்கிறான் என்பதுதான் அவள் சொல்ல நினைத்தது. இரண்டு பேரும் ஒரே மொழியில் பேசினாலும் அர்த்தம் வேறு வேறாக தொனிக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே அடைபட்டு இருந்தவள் அவள் என்பதையும், வெளியே செல்வதற்கு தாகம் இருக்கும் என்பதும் ஆண்களுக்கு புரிவதில்லை. அவன் சதா காலமும் வெளியில் அலைந்து கொண்டிருந்து விட்டு வீட்டுக்கு வருகிறான். மீண்டும் அவளோடு வெளியே செல்ல சலிப்பு வருகிறது. வீடுகளின் அகமும், புறமுமான இந்த இரு உலகங்களுக்குள் அவர்கள் தனித்தனியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். டீக்கடை பெஞ்சுகளில் ஆண்கள் பேசுகிற விஷயங்களுக்கும், வீட்டுத்திண்ணைகளில் பெண்கள் பேசுகிற விஷயங்களுக்கும் சம்பந்தமே இருப்பதில்லை.

பெண் யாருடனாவது அல்லது தன்னோடாவது பேசிக்கொண்டே இருக்கிறாள். யுகம் யுகமாய் தனிமையில் வெந்து வெந்து போயிருக்கும் அவள் தன்னை வெளிப்படுத்துவதற்கும், உலகத்தை கிரகித்துக் கொள்ளவும் பேசிக் கொண்டே இருக்கிறாள். சோர்வான சமயங்களில் தன்னையே உற்சாகப்படுத்திக் கொள்ள, கூண்டுக்குள் இருக்கும் மிருகங்களும், பறவைகளும் சத்தம் போடுவதைப் போல அவள் பேசிக்கொண்டிருக்கிறாள். ஆண்களுக்கு இந்தப் பேச்சுக்கள் அர்த்தமற்ற தாகவும், எரிச்சலூட்டுவதாகவும் இருக்கின்றன. அவன் மௌனமாக இருக்கிறான். வெளியுலகப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை யோசிக்கவும், தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவும் அவனுக்கு வீட்டிற்குள் மௌனமே தேவைப்படுகிறது. ஆண் தன்னை சக்தி வாய்ந்தவனாகவும், இலட்சியங்கள் கொண்டவனாகவும் எப்போதும் கருதிக் கொள்கிறான். வீட்டைத் தாண்டியே அவன் அறிவு வேலை செய்கிறது. அவன் பெண்களிடம் தன்னுடைய பிரச்சினைகளை எப்போதாவதுதான் கூறுகிறான். பிரச்சினைகளை தன்னால் சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பெண்களுக்கும் அவைகளுக்கும் சம்பந்தமில்லை எனவும், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என சர்வ நிச்சயம் கொள்கிறான். பெண் புத்திமதி சொன்னால் தனக்கு இழுக்கு என்பது ஆண்களில் நரம்புகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

பெண்கள் அன்பானவர்களாக, பொறுமையானவர்களாக சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். அடுத்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுதான் கடமையாக இருக்கிறது. அதை அவள் செய்து கொண்டே இருக்கிறாள். உணவு என்பது ஆணுக்கு உடல் தேவையாக மட்டுமே இருக்க, பெண்ணுக்கோ அது உறவை பலப்படுத்துவதாகவும், பராமரிப்பதாகவும் இருக்கிறது. தோசைகளை சுட்டுக் கொண்டே இருக்கிறாள். சோறு பொங்கிக் கொண்டே இருக்கிறாள். இத்தனை செய்தாலும் ஆண் தன்னை கவனிப்பதில்லை என்பது அவளது வருத்தமாகவும், வேதனையாகவும் ஒலிக்கிறது. எப்போதும் கொடுத்துக் கொண்டே இருக்கும் தனக்கு எதுவும் தரப்படுவதில்லை என்னும் உணர்வு அவளுக்குள் ஓளிந்திருக்கிறது.

ஆணோ, பெண் தன்னை மாற்ற முயல்கிறாள் என்று குற்றஞ்சாட்டுகிறான். அவனுக்குள் கடந்த காலங்களின் பயம் இன்னும் தொற்றிக்கொண்டு இருக்கிறது. அவள் விஸ்வரூபம் எடுத்து நின்ற போது ஆண் அடையாளமற்று இருந்தது அவனது மரபணுவில் அதிர்ச்சியாய் உறைந்திருக்கிறது. அவள் எதைச் செய்தாலும், சொன்னாலும் அதில் தான் வீழ்த்தப்படும் தந்திரம் இருப்பதாகவே அவனுக்கு அசீரீரி ஒலிக்கிறது.

இதனாலேயே ஆண் தன்னிடம் பெண் நெருங்கி வரும்போது விலகுகிறான். ஆமை ஓட்டுக்குள் மறைவதைப்போல உள் இழுத்துக் கொள்கிறான். பெண் அவளாக எதையும், பாலியல் தேவையாக இருந்தாலும், முன் வைத்தால் ஆண் முகம் சுளிக்கிறான். குடும்பத்தில் பெண்ணுக்கு அந்த சுதந்திரம் இல்லை. ஆண் முன்மொழிபவனாகவும், பெண் வழிமொழிபவளாகவுமே இருக்க முடிகிறது அங்கு.

எல்லா வீடுகளும் ஆண்களின் வீடுகளாகவே இருக்கின்றன. இந்த சமூகத்தில் திருமணம் ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணின் மீது முழு ஆதிக்கம் செலுத்துவதற்கு உரிமையைத் தந்து விடுகிறது. ஆதிக்கம் செலுத்தும் மனதில் அன்புக்கு இடமிருப்பதிலை. தான் என்ன செய்தாலும் அதனை தாங்கிக்கொள்கிறவளாய் அவள் இருக்க வேண்டும் என்று எண்ணம் அவனுக்கு இருக்கிறது. அவளுக்கென்று சுயமான சிந்தனைகளும், செயல்களும் இல்லாமலே இருக்கின்றன. தவறி எதாவது இருந்தாலும் அலட்சியப்படுத்தப்படுகின்றன. காதலின் உணர்வுகளால் உந்தப்பெற்று அவள் எதாவது செய்தால் ரசிக்கப்படுவதில்லை. காதலித்த காலங்களை அவள் நினைவுபடுத்தினாலும் அவனுக்கு சுகமாய் இருப்பதில்லை. அவன் முற்றிலும் வேறொருவனாய் இருக்கிறான். "ஆண் சூரியனிலிருந்து வந்தவன். பெண் பூமியிலிருந்து வந்தவள். இருவரும் காதல் வயப்பட்டு உலவும் இடம் சந்திரனாக இருக்கிறது" என்று அரிஸ்டாட்டிலின் வார்த்தைகளுக்கு இப்போது அர்த்தம் இப்படியாகத்தான் தெரிகிறது. மனிதகுல வரலாறு உருவாக்கி வைத்திருக்கும் இந்த முரண்பாடுகளை அறியாமல், ஆண் பெண் உறவுகளின் சிக்கல்களை புரியாமல், காதலை பேசுவது என்பது அர்த்தமற்றதாகவே இருக்கும். நவீன காலத்தில், காதலின் பிரச்சினைகள் இங்குதான் வேர்கொண்டு இருக்கின்றன.

காதலிக்கும்போது தாங்கள் கற்பனை செய்து வைத்திருந்த உருவத்திற்குச் சம்பந்தமில்லாமல் இப்படி முரண்பாடுகளாய் இருப்பதை அறியும்போதுதான் அதிர்ச்சியடைகிறார்கள். பெண்களுக்கு, வில்லை ஒடித்து கை பிடித்த இராமராய் காட்சியளித்த ஆண்களே, திருமணத்திற்குப் பிறகு தூக்கிச் சென்ற இராவணர்களாய் தெரிய ஆரம்பிக்கிறார்கள். ஆண்களுக்கோ சீதைகள் சூர்ப்பனகைகளாய்த் தெரிய மூக்கை அறுத்துக் கொண்டே இருக்கிறார்கள். முன்பெல்லாம் இவை சின்னச் சின்ன எரிச்சல்களாகவும், தற்காலிக இடைவெளியாகவும் வெளிப்பட்டன. இன்று விவாகரத்துக்கு போகுமளவுக்கு வளர்ந்து விடுகிறது. அண்ணல் நோக்கியது, அவள் நோக்கியது எல்லாம் அக்கினிப் பிரவேசத்தில் பொசுங்கிப் போன கதைகளாகின்றன. பெண் தன்னை வெளிப்படுத்த துணிந்து விடுகிறாள். அது கலகமொழியாக வீடுகளிலிருந்து வருகின்றன. கல்லறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் காவியக் காதல்களின் விழி பிதுங்குகின்றன. பிரமைகள் உடைபடுகின்றன.

கடந்த நூற்றாண்டு பெண்கள் தங்கள் அவலத்தை உணர ஆரம்பித்து அதை உடைத்தெறிய ஆரம்பித்த காலமாயிருக்கிறது. பெண்களுக்கு விதிக்கப்பட்ட ஒழுக்கம் ஏன் ஆணுக்கு மட்டும் இல்லை என்று கேள்விகள் எழுப்பப்பட்டு முன்னுக்கு வருகிறது. நவீன தொழில் நுட்பமும், தொழில் மயமாக்கலும் பெண்களை வெளியே வரச் செய்திருக்கின்றன. குடும்பத்தின் உற்பத்திகளில் மட்டுமே ஈடுபட்டிருந்த பெண் இப்போது தானும் சமூக உற்பத்தியில் பங்கு பெறுகிறவளாக அங்கங்கு சில தடைகளை தாண்டியிருக்கிறாள். ஆண்களின் உலகம் இதனை எதிர்கொள்ள முடியாமல் எங்கே தனது காலம் அபகரிக்கப்படுமோ என அச்சம் கொள்கிறது. பெண் களின் உலகமோ எங்கே தனது காலம் இப்படியே கழிந்து விடுமோ என்று மீறலுக்கு தயாராகிறது. அதுதான் காதலிக்கும் போது இனிக்கிற காதல் சேர்ந்து வாழும் திருமணத்திற்குப் பிறகு கசக்க ஆரம்பிக்கிறது.
(அடுத்த பதிவில் முடியும்)

கருத்துகள்

11 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. Love is blind. Marriage is eye opener.

    Read all your four chapters together. Very nice :)

    பதிலளிநீக்கு
  2. //நவீன தொழில் நுட்பமும், தொழில் மயமாக்கலும் பெண்களை வெளியே வரச் செய்திருக்கின்றன. குடும்பத்தின் உற்பத்திகளில் மட்டுமே ஈடுபட்டிருந்த பெண் இப்போது தானும் சமூக உற்பத்தியில் பங்கு பெறுகிறவளாக அங்கங்கு சில தடைகளை தாண்டியிருக்கிறாள். ஆண்களின் உலகம் இதனை எதிர்கொள்ள முடியாமல் எங்கே தனது காலம் அபகரிக்கப்படுமோ என அச்சம் கொள்கிறது. பெண் களின் உலகமோ எங்கே தனது காலம் இப்படியே கழிந்து விடுமோ என்று மீறலுக்கு தயாராகிறது. அதுதான் காதலிக்கும் போது இனிக்கிற காதல் சேர்ந்து வாழும் திருமணத்திற்குப் பிறகு கசக்க ஆரம்பிக்கிறது.
    //


    நிதர்சனமானதொரு கருத்து!

    பதிலளிநீக்கு
  3. //ஆணோ, பெண் தன்னை மாற்ற முயல்கிறாள் என்று குற்றஞ்சாட்டுகிறான். அவனுக்குள் கடந்த காலங்களின் பயம் இன்னும் தொற்றிக்கொண்டு இருக்கிறது. அவள் விஸ்வரூபம் எடுத்து நின்ற போது ஆண் அடையாளமற்று இருந்தது அவனது மரபணுவில் அதிர்ச்சியாய் உறைந்திருக்கிறது. அவள் எதைச் செய்தாலும், சொன்னாலும் அதில் தான் வீழ்த்தப்படும் தந்திரம் இருப்பதாகவே அவனுக்கு அசீரீரி ஒலிக்கிறது.//

    :-) Wow, what a thought! This explains a whole lot of issues. Almost, everything.

    பதிலளிநீக்கு
  4. Such a wonderful article should not be put in the small room.You must send to many magazines/literary issues/womens periodicals/MAGALIR CHINTHANAI ETC--LET THE WORLD READ THIS.Let our men read it..Understanding women's small expectations and feelings are big thing.We should respect it.Understand it.
    --vimalavidya@gmail.com---Namakkal---9442634002

    பதிலளிநீக்கு
  5. இது போன்ற பல நிகழ்வுகளின் தொகுப்பாக, John Gray-ன் "Men are from Mars and Women are from Venus" என்ற புத்தகத்தில் காணலாம்.

    பதிலளிநீக்கு
  6. anonymous

    காதல் குருட்டுத்தனம், திருமணம் கண் திறந்து பார்க்க வைப்பது என்பதை ஒப்புக்கொள்ள முடியவில்லை.
    சரி. கண் திறந்து பார்த்தவர்கள் எப்படி இருக்கிறார்கள்.
    நமது பார்வைகளை ஒட்டு மொத்தமாக சரிசெய்ய வேண்டியது இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. தீபா!

    மனிதகுல வரலாற்றிலிருந்து பார்க்கும்போது இப்படி இருக்குமோ எனத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  8. விமலவித்யா!

    திரும்ப திரும்ப எனக்கு இந்த புத்திமதியை சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்.
    அதற்காக மெனக்கெடும் இயல்பு இல்லாதவனாக எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
    முயற்சி செய்கிறேன் இனிமேல்.

    பதிலளிநீக்கு
  9. சுடர் ஒளி!

    உண்மைதான்.

    அந்தப் புத்தகத்திலிருந்து மட்டுமல்ல, "வரலாற்றில் பெண்கள்", ஏங்கெல்ஸின் "குடும்பம், தனிச்சொத்து' என இன்னும் பல புத்தகங்களை வாசித்துத்தான் இதை எழுதியிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. விமல வித்யா கூறியுள்ள கருத்தை இன்று வீட்டில் ஜோவிடம் சொல்லிக்கொண்டு இருந்தேன். நிச்சயம் உங்கள் எழுத்துக்கள் பெரிய அளவில் மக்களைப் போய்ச் சேர வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் சீக்கிரம் செய்வொம்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!