காற்றுக்கென்ன வேலி


    திகாரத்தை மையப்படுத்தி, அதனைக் கைப்பற்றும் பெருங்கதையாகவே இதுவரையிலான வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. ஒட்டு மொத்த சமூகத்தையும் தீர்மானிக்கும் வல்லமையை அதிகாரம் எடுத்துக்கொள்கிறது. 

    அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் என அனைத்திலும் அதற்கென்று கருத்துக்களை வைத்திருக்கிறது. அதுதான் முழுமையானதென்று நம்பவைக்கிறது. மீறக்கூடது என்று கட்டளைகளை விதித்து, அதையே ஒழுக்கம் என்பதாக அறிவிக்கிறது. புனிதமாக போற்றுகிறது. 

    காலத்தின் மாற்றங்களுக்கேற்ப, அதிகாரத்தின் கைகள் ஒழுக்கத்தின் கோடுகளை அப்படியும் இப்படியுமாக கொஞ்சம் வளைத்தும், நெளித்தும் புதிய உருவாக்கங்களை கற்பிக்கிறது. அதாவது தனது நலன்களையும், செல்வாக்கையும் மேலும் மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான பாதைகளை அவ்வப்போது செம்மைப் படுத்திக் கொள்கிறது.  

    அந்த விதிகளின்படி ஒழுகும் மக்கள் நன்மக்கள் என்றும், மற்றவர்கள் கலகக்காரர்கள் என்றும்  தன்னிச்சையாக கருதும் அளவுக்கு சமூகத்தின் பொது அறிவு புரையோடிப் போய் இருக்கிறது. அறிவியலுக்கு முரணான, ஜனநாயகத்துக்கு விரோதமான கருத்தாக இருந்தாலும் அதுகுறித்து எந்த யோசனையும் செய்ய இயலாமல், பிரமைகளுக்குள்ளும், மயக்கங்களுக்குள்ளும் மனிதர்களை அமிழ்த்திவிடுகிறது. 

    இந்தப் பிடியிலிருந்து உண்மைகளும், சுதந்திர உணர்வுகளும் எப்போதும் திமிறிக்கொண்டே இருக்கின்றன. அவை யார் மூலமாவது, எதாவது ஒரு வடிவத்தில், எதாவது ஒரு காலக் கட்டத்தில் வெளிப்பட்டே விடுகின்றன. அவை அதிகாரத்தின் கூறுகளில் எதாவது ஒன்றை சிராய்த்துவிட்டால் கூட போதும். அதுவரை சிரித்துக் கொண்டிருக்கும் அதிகாரத்தின் முகமும், தோற்றமும் மாறிவிடும். 

    வெளிப்பட்ட அந்த உணர்வுகள் கடுமையான சோதனைக்குள்ளாக்கப்படும். அதன் தாக்கம் சமூகத்தின் மீது மேலும் ஏற்படவிடாமல் தடை செய்யப்படும். அதிகாரம் தன்னை தக்க வைத்துக் கொள்வதற்காக எதை வேண்டுமானாலும் செய்யும்.

    பல சமயங்களில், இப்படிப்பட்ட உண்மைகளை, உணர்வுகளை எழுத்தின் வடிவில் வெளிப்படுத்தி, அதிகாரத்தின் கோபத்திற்கு ஆளானவர்கள் பலர் காலந்தோறும் நிறைந்திருக்கிறார்கள். அவர்களது இலக்கியங்கள் மக்களை நெருங்கவிடாமல் தடை செய்யப்பட்டிருக்கின்றன. 

    ஆனால் அந்த இலக்கியங்கள் அந்த தடைகளை மீறி மக்களை நெருங்கிவிடுவதுதான் சுவராஸ்யம். தொடர்ந்து அதிகார அமைப்புகள் தோற்றுப்போகிற இடமாக இலக்கியமே இருக்கிறது. இலக்கியம், எழுத்து என்பது காற்று போல சுதந்திர தாகம் இயல்பிலேயே கொண்டது. காற்றுக்கு வேலி கட்ட முடியாது. 

    காலவெளியில் எழுத்துக்களின் அப்படிப்பட்ட வெற்றிகளை கொஞ்சம் தொகுத்துப் பார்க்கலாம் எனத் தோன்றியது. முதலாவதாக, ‘காற்றுக்கென்ன வேலி’. அமேசானில் வெளியாகி இருக்கிறது.

    புத்தகத்தைப் படித்த நண்பர்கள் Kindleல் தங்கள் கருத்துக்களை Review ஆக பதிவு செய்ய வேண்டுகிறேன்.

    புத்தகத்தை பெற இனைப்பை கிளிக் செய்திடுங்கள்: காற்றுக்கென்ன வேலி


    



கருத்துகள்

1 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!