வைகோவை எதிர்த்து நிற்கும் என் அருமைத் தோழன்!
ரொம்ப நாட்களுக்குப் பிறகு நேற்று தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை போய் நின்று கேட்டேன். விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக நிற்கும் என் அருமைத் தோழன் தோழர்.சாமுவேல்ராஜ் சாத்தூரில் சில இடங்களில் பேசியதால் சென்றேன். மக்களை கவனிக்க வைப்பதாகவும், சிந்திக்க வைப்பதாகவும் இருந்த மிக நெருக்கமான பேச்சு அது. டிவிகளில் காண்பிக்கும் மாபெரும் தலைவர்களின் பேச்சுக்களையும் விடவும் ஆழமான, நேரடியான கருத்துக்களோடு இருந்தது. என் அருமைத் தோழன் எவ்வளவு அர்த்தத்தோடு வளர்ந்திருக்கிறான் என பெருமையாக இருந்தது.
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு அறிவொளி இயக்கக் களப்பணியாளராக இருந்த காலத்திலிருந்து தோழர்.சாமுவேல்ராஜைத் தெரியும். கிராமம் கிராமமாக விருதுநகர் மாவட்டம் முழுவதும் புத்தகங்கள் சுமந்து சென்றவர். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் அண்ணன் தோழர்.ச.வெங்கடாசலம் அப்போது அறிவொளி இயக்கத்தின் சாத்தூர் பொறுப்பாளராய் இருந்தார். இரவுகளில் அவரது அலுவலத்தில் உட்கார்ந்து இலக்கியம், சமூகம்,வரலாறு, அரசியல் என எவ்வளவோ பேசியிருக்கிறோம். சில சமயங்களில் எங்காவது ஒரு கிராமத்திலிருந்து கடைசி பஸ்ஸைப் பிடித்து சாமுவேல்ராஜ் வந்து எங்கள் உரையாடல்களில் சேர்ந்து கொள்வார். விடிகாலை நான்கரை மணிக்கு அருகில் உள்ள டீக்கடையில் (அதற்கு வெங்கடாசலம் மரணவிலாஸ் என பெயர் வைத்திருந்தார்) டீ குடித்து பிரிவோம். கனவுகளும், இலட்சியங்களுமாய் விரிந்த அற்புத காலம் அது.
அறிவொளி இயக்கத்திற்கு பின்னர் சாமுவேல்ராஜ் வாலிபர் சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் கலை இலக்கிய இரவுகள் நடத்திக் கொண்டு இருந்தோம் நாங்கள். எங்கிருந்தாலும் சாமுவேல்ராஜ் தோழர்களோடு வந்து விடுவார். இரவு உரையாடல்கள் தொடர்ந்தன. எபோதாவது சந்தித்துக் கொள்ள முடிந்தாலும், பார்த்த கணத்திலிருந்து அந்தப் பழைய உறவும் நெருக்கமும் அப்படியே பற்றிக்கொள்கிற மனிதராக சாமுவேல்ராஜ் இருந்தார். காதலித்து மணம் புரிந்துகொண்டார். அவரது துணைவியார் தோழர்.சுகந்தியும் அறிவொளி இயக்கம் மூலமாக இயக்கத்திற்கு வந்தவர்தான். (இன்று ஜனநாயக மாதர் சங்கத்தில் மாநிலப் பொறுப்பில் இருக்கிறார்.)
தொழிற்சங்க இயக்கத்தில் இணைத்துக்கொண்டு அதில் நான், காமராஜ் எல்லாம் செயல்பட்ட போது, தோழர் சாமுவேல்ராஜ் கட்சியின் முழுநேர ஊழியராகி இருந்தார். எங்கள் சங்கத்தின் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். பாப்பாக்குடி, உத்தப்புரம் பற்றிய எங்கள் ஆவணப்படங்களுக்கு உதவிகரமாக இருந்தார். சில சமயங்களில் எங்களோடு வந்தும் இருக்கிறார். பின்னர் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளராகி மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொண்டபடி இருந்தார். தீக்கதிர் பத்திரிகைச் செய்திகளில் அவர் எவ்வளவு முக்கியமான சமூகக் கடமையை ஆற்றிக்கொண்டு இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வேன்.
அவர்தான் தொகுதியின் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் என்றவுடன், இயக்கத்தில் தன்னெழுச்சியான உற்சாகமும், ஆர்வமும் உருவானதைப் பார்த்தேன். தங்கள் ரத்த சொந்தம் ஒன்று தேர்தலில் நிற்பதைப்போன்ற உணர்வுடன், தோழர்கள் ஆர்ப்பரிப்போடு பங்காற்றி வருவது தெரிகிறது. தொகுதி முழுக்க தோழர்.சாமுவேல்ராஜ் ம்க்களை சந்திக்க புறப்பட்டார். போன வாரம் ஒருநாள் இரவு பதினொன்றரை மணிக்கு போன் செய்து பேசினேன். “தொந்தரவு இல்லையே..” என்றேன். “இல்ல தோழா... உங்கள் குரலைக் கேட்டால் உற்சாகந்தான் ” என்றார். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருக்கும்போது நான்கைந்து நாட்களில் சாத்தூருக்கு வருவதாகச் சொன்னார். நேற்று வந்தார்.
அஙகங்கு பேசிய சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்ள வேண்டும் போலிருக்கிறது...
”இதோ சாத்தூர் முக்கானாந்தலில் நாங்கள் வந்து நிற்கிறோம். இன்று புதிதாக வந்து நிற்கவில்லை. எத்தனையோ முறை இதோ போல் செங்கொடிகள் ஏந்தி இதே இடத்தில் தெருவின் பிரச்சினையிலிருந்து தேசத்தின் பிரச்சினை வரை கையிலெடுத்து போராட்டம் நடத்தியிருக்கிறோம். உங்களுக்காக உழைத்து இருக்கிறோம். ஊருக்காக உழைத்திருக்கிறோம். அந்த உரிமையில் இப்போது உங்களிடம் வாக்கு கேட்டு வந்திருக்கிறோம்”.
”இங்கு மதிமுக சார்பில் வைகோ அவர்கள் போட்டியிடுகிறார். சிறு வயதில் அவரது பேச்சை கேட்பதற்காகவே கூட்டங்களுக்குச் சென்றவன் நான். தந்தை பெரியாரைப் பற்றி அவர் பேசக் கேட்டு சிலிர்த்திருக்கிறேன். இன்று அவர்தான் கொள்கைகள் எதுவுமில்லாமல் மதவெறி சக்திகளோடு போய் இணைந்திருக்கிறார். தந்தை பெரியாரை செருப்பால் அடிப்பேன் எனச் சொன்ன ஹெச்.ராஜா என்னும் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்கிறார். நிஜமாகவே வருத்தப்படுகிறேன். வைகோ அவர்களே, நீங்கள் காட்டிய பெரியார் எங்களிடம் பத்திரமாக இருக்கிறார். உங்களிடம் இல்லை.”
”திமுக சார்பில் போட்டியிடும் ரத்தினவேலு அவர்கள் மதுரையில் வர்த்தக சங்கத்தின் தலைவராய் இருந்தவர். சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க காங்கிரஸ் அரசு முன்வந்தபோது, அதை ஆதரித்து ரத்தினவேலு நோட்டிஸ் அடித்தவர். இடதுசாரிகள் நாங்களோ, அதனை எதிர்த்து பாராளுமன்றத்தில் போராடிக்கொண்டு இருந்தோம்.”
”இந்த வெங்கடாச்சலபுரத்தில் முதன்முறையாக அருந்ததியர் மாநாட்டிற்கு உங்களை அழைப்பதற்கு வந்தேன். அந்த மாநாடு மிகப் பெரும் வெற்றி பெற்றது. ஒடுக்கப்பட்டவர்களில் ஒடுக்கப்பட்டவர்களான உங்கள் பெயரில் மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடத்தியது. அருந்ததியர் பெயரை உச்சரித்து, தாங்கி, தங்கள் கட்சியின் பெயரோடு இணைத்து மாநாடு நடத்தும் ஒரு அரசியல் கட்சியை முதன்முறையாக தமிழகம் பார்த்தது. தொடர்ந்து சென்னையில் முப்பதாயிரம் பேர் கலந்துகொண்ட மாபெரும் பேரணியில் நாம் பங்கு பெற்றோம். போராட்டங்கள் நடத்தினோம். அதன் விளைவாக இன்று அருந்ததியர் மக்களுக்கு கல்வியில், வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கிடைத்திருக்கிறது. ஆஸ்பத்திரியின் பிணவறைகளிலும், துப்புரவுப் பணிகளிலும் ஈடுபட்ட நம் மக்கள் இன்றைக்கு அதே ஆஸ்பத்திரியில் டாக்டர்களாக வலம் வருவதற்கு வழி கிடைத்திருக்கிறது.”
“கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரையில், எம்எல்ஏ, எம்.பி. என எந்தப் பதவியாக இருந்தாலும் அது மக்களுக்கு சேவையாற்றுவதற்கு மட்டுமே பயன்படுத்துவோம். எளிமையான முறையில் பிரச்சாரம் செய்கிறோம். ஆனால், மற்ற கட்சியினர் எல்லாம் கோடிக்கோடியாக செலவு செய்கிறார்கள். இதை ஒரு முதலீடாகப் பார்க்கிறார்கள். வெற்றிபெற்றவுடன் சம்பாதிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். ஆனால், கம்யூனிஸ்டுகளுக்கோ மக்கள் சேவை மட்டுமே முழுநேரப்பணி. தோழர் சங்கரய்யா, தோழர் உமாநாத்,தோழர் மோகன் எல்லாம் எம்.பி.யாக வெற்றிபெற்றும் சாதாரண வீட்டில் தான் வசித்தனர். எளிமையான வாழ்க்கை வாழ்ந்தனர். மதுரை எம்.பி.யாக பதவி வகித்த தோழர் மோகன், பத்தாண்டுகளாக எம்.பி. பதவியில் இருந்தும் கடைசி வரை அதே எளிமையான வீட்டில் தான் வசித்தார். இந்த எளிமையும் நேர்மையும் தான் கம்யூனிஸ்டுகளின் அடையாளம். அந்தப் பாரம்பரியத்தில் வந்த நானும் அப்படித்தான் பணியாற்றுவேன்”
"2004ல் கம்யூனிஸ்டுகள் நாங்கள் பாராளுமன்றத்தில் 64 பேர் எம்பிக்களாக இருந்தோம். அப்போதுதான் நூறு நாள் வேலைத் திட்டம், தகவல் உரிமைச் சட்டம் எல்லாம் எங்கள் யோசனைப்படி நிறைவேற்றப்பட்டன. பெட்ரோலிய விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தி வைக்க முடிந்தது. 2009ல் எங்கள் எண்ணிக்கை பாராளுமன்றத்தில் குறைந்தது. அதன் விளைவுதான் கடுமையான விலைவாசி உயர்வும், ஊழல்களும். பெட்ரோல் விலை கட்டுப்பாடு இல்லாமல் போனது. பாராளுமன்றத்தில் கம்யூனிஸ்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பது, சாதாரண மக்களுக்கு நல்லது.”
“இடதுசாரிகளிடம் யாரும் கூட்டணி இல்லை என்கிறார்கள். ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் துப்புரவுத் தொழிலாளிகள் சங்கம், சுமை தூக்கும் தொழிலாளிகள் சங்கம், வாகன ஓட்டுனர்கள் சங்கம், அரசு ஊழியர் சங்கம், வங்கி மற்றும் இன்சூரன்சு ஊழியர் சங்கம், ஆசிரியர்கள் சங்கம் என வரிசையாக கணக்கெடுத்தால், இடதுசாரிகளை விட மக்கள் நேசிக்கும் கூட்டணி வேறு யாருக்கு அமையப் போகிறது”
“பரமக்குடியில், தலித் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட கொடூரம் நடந்த போது அங்கு உடனடியாக சென்றது மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி. அந்தப் பகுதியில் மக்களோடு மக்களாய் ஒரு மாத காலத்துக்கும் மேல் தங்கி, அவர்களுக்கு பணி செய்தேன் நான். காவல்துறையின் அந்தக் கொடூர செயலை சிபிஐ விசாரிக்க வேண்டுமென வழக்கினை நான் உட்பட் 9 பேர் தொடர்ந்தோம். மற்றவர்களின் வழக்கை பல்வேறு காரணங்களால் எடுக்கவில்லை. சாமுவேல்ராஜ் என என் பெயரில்தான் வழக்கு நடந்தது. இறுதியில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென கோர்ட் உத்தரவிட்டது. இன்றைக்கும் அந்த மக்களோடு மக்களாய் நாங்கள் நிற்கிறோம். அந்த உரிமையோடு உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். அருவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களியுங்கள்”
“பல கலர்களில் கொடிகளோடு பல கட்சி வேட்பாளர்கள் எல்லாம் இங்கு வந்திருக்கலாம். நீங்களும் பாத்திருப்பீர்கள். அவர்கள் எல்லாருமே ஒரே கட்சிதான். பேர்தான் வேற வேற. ஆனால் எல்லாருமே முதலாளிகளின் கட்சிதான். இந்த சிவப்புக் கலர் கொடியோடு வந்திருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான் உழைப்பாளர்கள் கட்சி. மக்களுக்கான கட்சி. நீங்கள் கஷ்டப்படும்போது, போராடும்போது யார் உங்களோடு இருந்தார்கள். யார் உங்களை எதிர்த்து நின்றார்கள் என யோசியுங்கள். ஒட்டுப் போடுங்கள்”
ஒவ்வொரு பகுதியிலும், அந்த மக்களிடம் என்ன பேச வேண்டுமோ, அவர்களுக்கு எது புரிய வேண்டுமோ அதைப் பேசுகிறார். கேட்கிற மக்களின் முகங்களில் உண்மைகள் படிகின்றன. நம்பிக்கையோடு கை கூப்பி நகர்கிறார் சாமுவேல்ராஜ்.
சின்னதாய் பெட்டிக்கடை வைத்திருக்கிற நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் வேட்பாளரின் வாகனத்தின் பின்னால் சத்தம் எழுப்பிச் செல்கிறார். பார்த்த சாமுவேல்ராஜ் நிறுத்தச் சொல்கிறார். கையை உயர்த்தி ஒரு பத்து ருபாயைக் கொடுக்கிறார். சாமுவேல்ராஜ் குனிந்து வாங்கி, அவரிடம் கை கொடுக்கிறார். வாகனம் செல்கிறது. நான் நின்று அந்த இடத்தின் மக்களை பார்க்கிறேன். அவர்களும் என்னைப் போலவே செங்கொடிகளோடு சென்று கொண்டு இருந்த வாகனத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். பாவெல், சிருகண்டன் என நாங்கள் படித்துப் பேசிய கதாபாத்திரங்கள் ஞாபகத்துக்கு வந்து கொண்டு இருந்தார்கள்.
’என் அருமைத் தோழன் சாமுவேல்ராஜ்!’ என விம்மிப் போகிறேன்.
எந்தப் பக்கம்: ஜெயமோகன், ஞானி, கனிமொழி, வைரமுத்து, மனுஷ்யபுத்திரன் இன்னும்.... ஜோ டி குரூஸ்!
எப்போதும் முற்போக்கு இலக்கிய முகாம் சார்ந்த எழுத்தாளர்களும் கலைஞர்களும் மட்டுமே தேர்தல் காலங்களில் ஒரு நிலைபாடு எடுத்து மக்கள் நலன் சார்ந்து வெளிப்படையாகப் பேச முன்வருவார்கள். இன்னாருக்கு வாக்களியுங்கள் என்று பேசாவிட்டாலும், குறிப்பிட்ட ஒரு தேர்தலில், இன்னாருக்கெல்லாம் வாக்களிப்பது தேச நலனுக்கு நல்லதல்ல என்று வெளிப்படையாகப் பேசுவார்கள். இவர்களை ”இலக்கியக் கால்நனைப்புக் கொண்ட அரசியல்வாதிகள்” என்று கேலி பேசிய மூத்த படைப்பாளிகளும் உண்டு. பாராளுமன்ற அரசியலில் பங்கேற்பதையே அசூயையாகப் பார்க்கும் எழுத்தாளர்களும் அநேகம் பேர் உண்டு..ஆனால் அதெல்லாம் போன மாசத்துக்கணக்கு.இந்த மாசம் கதை வேறேதான்.
இந்தத் தேர்தலில்,நவீன எழுத்தாளர்கள் சிலர் வெளிப்படையாக தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார்கள். எந்தக்கட்சிக்கு ஆதரவாக அவர்கள் பேசினாலும் அவர்கள் இப்படி ஒரு இடத்துக்கு வந்ததே வரவேற்க வேண்டிய மாற்றம்தான். உலகின் மிகப்பெரிய முதலாளித்துவ ஜனநாயக நாட்டின் தேர்தல் திருவிழாவிலிருந்து ஒதுங்கி யாரோ போல நிற்பது எப்படி சரியாகும்?
எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய வலைத்தளத்தில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக எழுதிக்கொண்டிருக்கிறார். வாக்குக் கேட்கிறார். பாரதிய ஜனதாக்கட்சிக்கு வாக்குக் கேட்பார் என எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்க்க, அவர் ஆம் ஆத்மி பக்கம் சாய்ந்திருப்பது ஆறுதல் பெருமூச்சு விட வேண்டிய அம்சம்தான். நம்ம அரசியலை பூடகமாக நம் படைப்புகளுக்குள் வைத்துக்கொள்வோம். வெளியில் வேண்டாம் என்று அவர் கருதியிருக்கலாம்.
எழுத்தாளர்,பத்திரிகையாளர் ஞாநி,ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். உயிர்மை இலக்கிய இதழின் ஆசிரியரும் கவிஞருமான மனுஷ்யபுத்திரன் இந்தத்தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு ஆதரவாக பிரச்சாரமே செய்கிறார். தலைமைக்கழகப் பேச்சாளர்களில் ஒருவராக அவர் வலம் வருகிறார். ஏற்கனவே நவீன இலக்கிய உலகம் சார்ந்த கவிஞர்கள் கனிமொழி,சல்மா,தமிழச்சி,நாவலாசிரியர் இமையம் போன்றார் திமுக குடும்பத்தினராக எப்போதும் களத்தில் இருக்கின்றனர். திமுக அடையாள முத்திரை உள்ள கவிஞர் வைரமுத்து தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவதில்லை.
கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் கோபாலபுரத்துக்கும் போயஸ்கார்டனுக்குமாக அலையாமல் கௌரவமாக தனித்துப் போட்டியிடுங்கள் என்று சதாகாலமும் தர்ம அட்வைஸ் வழங்கிக்கொண்டிருந்த நவீன எழுத்தாளர்கள் பலர் இப்போது கம்யூனிஸ்ட்டுகள் தனித்துப்போட்டியிடுவதால் அப்படி ஒன்றும் வந்து களத்தில் குதித்து விடவும் இல்லை. ஆதரவாக ரெண்டு வார்த்தை பேசிவிடவும் இல்லை. நேர்ப்பேச்சுகளிலும் முற்போக்கு இலக்கியக்கூட்டங்களிலும் வந்து இடதுசாரிக் கருத்துகளை ஆதரிக்கும் நவீன எழுத்தாளர்கள் தேர்தல் நேரத்தில் கம்யூனிஸ்ட்டுகளை ஆதரிக்காமல் வேறு வேறு திசைகளில் செல்வது ஏன் என்று உண்மையிலேயே நமக்குப் புரியவில்லைதான். சுர்ஜித் போன்ற மகத்தான தலைவர்களை யெல்லாம் இப்படி போயஸ் கார்டன் வாசலில் நிறுத்திவிட்டீர்களே என்று கண்கலங்கி நம்மைப் புல்லரிக்க வைத்த எழுத்தாளர்களெல்லாம் இப்போ ஆளையே காணோம்.
அதிமுக கைவிட்டதால்தானே தனியே நிற்கிறீர்கள் என்று சிலர் முகநூலில் நக்கலாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தலித் மக்களின் பிரச்னைகளுக்காக மார்க்சிஸ்ட்டுகள் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தபோது ”இப்ப நீங்க போராடறிங்க..ஆனா போன காலங்களில் போராடலியே.. அதனால இப்ப உங்களை ஆதரிக்க முடியாது” என்று எந்த லாஜிக்கிலும் அடைபடாத சாக்குச் சொன்ன பல தமிழக அறிவாளிகளின் ஞாபகம்தான் இப்போதும் வருகிறது.
கம்யூனிஸ்ட்டுகளை ஆதரிக்காமல் ஏன் திமுகவை ஆதரிக்கிறீர்கள் என்கிற கேள்விக்கு எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் சொன்ன பதில் நம்மைச் சொக்க வைக்கிறது,”கம்யூனிஸ்ட்டுகளின் இந்த முடிவு அதிமுகவுக்குத்தான் உதவியாக அமையும்” என்று சொல்லியிருக்கிறார். அதிமுகவுடன் சமீப ஆண்டுகளில் உடன்பாடு கொண்டிருந்த கம்யூனிஸ்ட்டுகள் இப்போது மகிழ்ச்சியுடன் பிரிந்து நிற்பதால், அவர்களுக்குக் கிடைக்கும் வாக்குகள் அதிமுகவுக்குக் கிடைக்க வேண்டிய வாக்குகள்தானே. கம்யூனிஸ்ட்டுகள் தனித்து நிற்பதால் அதிமுகவுக்குத்தான் நட்டம் என்று நேற்றுப்பிறந்த அரசியல் பார்வையாளர்களுக்குகூடப் புரிகிறது. ஆனால் ’தொலைக்காட்சிப்புயல்’ கருத்து கந்தசாமி என்றெல்லாம் நண்பர்களால் ‘புகழ’ப்படும் சீனியர் ஸ்டேட்ஸ்மேன் மனுஷுக்கு இது ஏன் தலைகீழாகப் புரிகிறது. அதன் தர்க்கம் நமக்குப் புரியவே இல்லை. தவிர, பாஜகவின் இந்துத்துவத் தேர்தல் அறிக்கையும் வந்த பிறகு அவர் 2008இல் பாஜக அமைச்சரவையில் பங்கேற்ற திமுகவுக்கு பிரச்சாரம் செய்யப்போவது வியப்பளிக்கிறது. இதுகாறும் உண்மையான அக்கறையோடும் ஆவேசத்தோடும் பாஜகவுக்கு எதிராக அவர் எழுதிய கட்டுரைகளும் சொன்ன கருத்துக்களும் அவரைப்பார்த்துச் சிரிக்கின்றன. பாஜகவோடு சேரத்துடிப்பது அதிமுக மட்டும்தானா? திமுகவுக்கு அந்த எண்ணமே இல்லையா? ”பாஜக ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல” என்று புனித நீர் தெளித்து அதைத் தோளில் சுமந்து கொண்டு வந்து தமிழகத்தில் இறக்கி வைத்ததே திமுகதான் என்பது மனுஷுக்குத் தெரியாதா? அவரது ஆன்மாவுக்கு நெருக்கமான கம்யூனிஸ்ட்டுகளை ஆதரிக்காமல் (போயும் போயும் )......நிற்க.
தனி ஈழம்,கூடங்குளம் போன்ற சில பிரச்னைகளில் கருத்து வேறுபாடு இருந்தபோதும் தோழர்கள் கொளத்தூர்மணி, விடுதலை ராசேந்திரன் ஆகியோர் தலைமையிலான திராவிட விடுதலைக்கழகம் 18 தொகுதிகளிலும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஆதரவாகக் களம் இறங்கியிருப்பதை இந்த எழுத்தாளர்கள் முன்னுதாரணமாகக் கொள்ளக்கூடாதா?
இவர்களெல்லாம் கூடப்பரவாயில்லை.கொற்கை நாவலுக்காகக் கடந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் தனது முகநூலில் நரேந்திரமோடி என்கிற புரட்சியாளர்தான் அடுத்த பிரதமர் ஆகவேண்டும் என்று ஒரு பக்கத்துக்கு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். எல்லாத்தலைவர்களும் அடுத்த தேர்தலைப்பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போது மோடி ஒருவர்தான் அடுத்த தலைமுறையைப்பற்றிக் கவலைப்படுகிறாராம். ஜோ.ட்.குரூசின் முதல் நாவலான ஆழிசூழ் உலகு வெளிவந்தபோது கிறித்துவ அடிப்படைவாதிகள் அவரை ஒதுக்க முயன்றபோது தாக்கியபோது கம்யூனிஸ்ட்டுகள்தான் அவருக்குப் பக்கபலமாக நின்றோம். மோடி கூட்டத்தார் அல்ல. கொற்கை நாவலுக்கு விருது கிடைத்தபோது முதன்முதலாக அவ்ருக்குப் பாராட்டு விழா நட்த்தியது தமுஎகசதான். அவமானமாக உணர்கிறோம் இப்போது. குறைந்தபட்சப் பகுத்தறிவும் வேலை செய்யவில்லையா தோழர் குரூஸ்? தமிழருவி மணியனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் குரூஸ்?
தவிர, மதச்சார்பின்மை மட்டுமா இந்தத்தேர்தலின் மையப்பிரச்னை? கடந்த 5 ஆண்டுகளில் 33 முறை பெட்ரோல்,டீசல் விலை உயர்வும்,அதன் காரணமாகவும் ஊக வணிகத்தை ஊக்குவித்த்தன் காரணமாகவும் மக்களின் அன்றாட வாழ்வுக்குத் தேவையான உப்பு,புளி,வெங்காயம்,பருப்பு,காய்கறிகள் என அனைத்துப் பொருட்களின் விலை உயர்ந்ததும் அதன் காரணமாக நாமெழுதும் கதைகளின் நாயகர்களான மக்களின் வாழ்வு பெரும் சரிவுக்குள்ளாகியிருப்பதும் ஒரு படைப்பாளிக்கு முக்கியமில்லையா? நமோ நமோ என்று கார்ப்பொரேட் ஊடகங்களின் பீப்பி ஊதல்களின் பின்னணி இசையோடு கொலைவெறி மோடி அலைந்து கொண்டிருக்கும்போது படைப்பாளிகள், இவற்றையெல்லாம் சமரசத்துக்கு இடமின்றி எதிக்கும் இடதுசாரிகள் பக்கம் அணிதிரள வேண்டாமா?
முதலாளித்துவம் வளர்ந்து கொண்டிருந்த 1930களில், நகரங்களாக சந்தைகள் ஊதிப்பெருத்தபோது சென்னைபோன்ற பெருநகரத்தை ‘மகாமசானம்’ என்று பெரும் சுடுகாடு என்று கதை எழுதி முதலாளித்துவத்தின் முகத்தில் அடித்தானே புதுமைப்பித்தன்? க.நா.சுவின் சீடர்களான இலக்கியவாதிகள் எல்லோரும் ஸ்டாலினின் சோவியத்தைத் திட்டித்தீர்த்துக்கொண்டிருந்த அந்த நாட்களில் ஸ்டாலினுக்குத் தெரியும் என்று புதுமைப்பித்தன் புத்தகம் எழுதி மறுக்கவில்லையா?முதலாளித்துவம் இன்று ஏகாதிபத்தியமாகி உலகமய முகமூடியோடு வருகிறபோது புதுமைப்பித்தனின் வழிவந்த தமிழ்ப்படைப்பாளிகள் இந்தப்பொருளாதாரக்கொள்கைகளை மாற்றுக்கொள்கையோடு எதிர்க்கும் இடதுசாரிகளை ஆதரிப்பது காலம் கோரும் கடமை அல்லவா?
இதெல்லாம் கூட ’அரசியல்’ என்று படைப்பாளி ஒதுக்கினாலும் கருத்து சுதந்திரத்துக்கும் கலை வெளிப்பாட்டு சுதந்திரத்துக்கும் எதிராக பாஜகவும் காங்கிரசும் திமுகவும் அதிமுகவும் கடந்த காலங்களில் ஆடிய ஆட்டங்களுமா மறந்து போகும்? வெண்டி டோனிகரின் புத்தகங்கள் அரைத்துக் கூழாக்கப்பட்ட்து இன்றைய உதாரணம் எனில் கொல்லப்பட்ட ஓவியர்கள், எழுத்தாளர்கள், தபோலகர் போன்ற அறிவாளிகளின் பட்டியல் எத்துணை நீண்டது? ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டதற்காக மதுரையில் சம்பந்தமேயில்லாத மூன்று உயிர்களை அநாவசியமாகப் பலிகொண்ட்து திமுகதானே?
நாம் எழுதும் மொழிக்காக இவர்கள் செய்ததுதான் என்ன? செம்மொழித்தமிழ் மாநாடென்ற பேரில் கோவையில் கூத்தடித்து ஊர் ஊருக்கு தமிழ்வாழ்க என்று பல்பு போட்டதைத்தவிர திமுக என்ன செய்தது? 1967இல் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் தமிழ்நாட்டில் இருந்த ஆங்கில வழிக்கல்வி நிலையங்கள் இரட்டைப்படை எண்ணில்தானே இருந்தது? பல்லாயிரக்கணக்கான ஆங்கிலவழித் தனியார் பள்ளிகள் புற்றீசல்கள் போலப் புறப்பட்டது தமிழுக்காக உயிரைவிடும் திமுக ஆட்சிக்காலத்தில்தானே? திமுகவும் அதிமுகவும் உருவாக்கியுள்ள அரசியல் மேடைகள் அநாகரிகத்தின் உச்சபட்ச அடையாளங்களாக இருக்கின்றன.அவர்களோடு தொகுதி உடன்பாடு கண்டதற்கே கம்யூனிஸ்ட்டுகளைக் கரித்துக்கொட்டிய தமிழ் நவீனப் படைப்பு மனங்கள் அவர்களோடு சங்கமித்து நிற்கக் கூச்சப்படவில்லையே ஏன்?
வீடு தீப்பற்றி எரியும்போது பரிசுத்தமான நடு ஆற்றில் அள்ளிய தெள்ளிய நீர் கொண்டுதான் தீயை அணைப்பேன் எனக் கம்யூனிஸ்ட்டுகள் கைகட்டிக் காத்து நிற்க முடியாது. கிடைப்பது சாக்கடை நீரானாலும் அள்ளி அள்ளி ஊற்றித்தான் ஆகவேண்டும். தீயை அணைப்பதுதான் கம்யூனிஸ்ட்டுகளின் கண்களுக்கு முக்கியமெனப்படும். இதுதான் தேர்தல்கால உடன்பாடுகள் குறித்து கம்யூனிஸ்ட்டுகள் கொள்ளும் அணுகுமுறை. நமக்கே சொந்த பலம் வரும் வரையிலும் கிடைக்கும் முதலாளித்துவக் கட்சியை முடிந்த வரை மக்கள் நலன் காக்கப் பயன்படுத்துவோம். கிடைக்காவிட்டால் தனித்து நின்று போராடுவோம்.
வர்க்கப்போராட்டத்தின் பல்வேறு போராட்டக்களங்களில் மக்களைத்திரட்டித் தனித்து நின்று போராடுகிறவர்கள்தான் கம்யூனிஸ்ட்டுகள். தேர்தல் என்னும் இந்தப் போராட்டத்தில் மட்டும்தான் கூட்டும் உடன்பாடும். மக்கள் போராட்டங்களில் ஆண்டுதோறும் நூறு தோழர்களுக்கு மேலாக உயிர்ப்பலி கொடுக்கும் ஒரே இயக்கம் இன்றைக்கும் கம்யூனிஸ்ட் இயக்கம் மட்டும்தான்.
மக்களின் வாழ்விலிருந்து சாறெடுத்துக் கவியும் கதையும் கலையும் புனையும் படைப்பாளிகள் கம்யூனிஸ்ட்டுகளைத்தவிர வேறு யாரையும் ஆதரிக்க எந்த தர்க்கநீதியும் கிடையாது. தமிழ்ப்படைப்பாளிகள் ஆங்காங்கே நின்று கொண்டிராமல் தங்கள் நிலைபாடுகளை உடனடியாக மாற்றிக் கம்யூனிஸ்ட்டுகளை ஆதரிக்க வேண்டும். இது எங்கள் பணிவான வேண்டுகோள் மட்டுமல்ல. காலம் கலைஞனிடம் கோரும் கடமையுமாகும்.
- எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், தலைவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்.
தேர்தல் 2014: எழுத்தாளர்களையும், கலைஞர்களையும் நாடு அழைக்கிறது!
நாடு ஒரு பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. ‘இந்து தேசீயம்’ என்னும் ஒற்றைப் பண்பாட்டு அடையாளத்தை முன்வைத்து பாசிசக் கும்பல், நாட்டின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற வெறிகொண்டு கிளம்பியிருக்கிறது. யார் குடி முழுகினால் என்ன, தன் முதலுக்கும் லாபத்துக்கும் மட்டும் மோசம் வந்துவிடக் கூடாது என்று தேசப்பற்று அற்ற, மனிதாபிமானமற்ற இந்திய முதலாளிகள் சகல வழிகளிலும் இந்த பாசிசக் குமபலுக்கு குடைபிடிக்க ஆரம்பித்துவிட்டனர். ஊடகங்கள் மாறி மாறி மோடியின் முகத்தையும் அவரைப் பற்றிய செய்திகளையும் வெளியிட்டு, அவர் குறித்த மாய பிம்பங்களை பொதுமக்கள் மனதில் பதிய வைத்துக்கொண்டு, ‘மோடி அலை’, ‘மோடி அலை’ என ஆரவாரமிடுகின்றன.
மக்கள் மீதும், நாட்டின் மீதும் அக்கறை கொண்ட கலைஞர்களும், எழுத்தாளர்களும், அறிவுஜீவிகளும் இந்த ஆபத்தை உணர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன் கர்நாடகாவில் கிரிஷ் கர்னாட், ஞானபீட விருது பெற்ற அனந்தமூர்த்தி, வசுந்தரா பூபதி, மருளாசிதப்பா, ஜி.கே.கோவிந்தராவ் உள்ளிட்ட எழுத்தாளர்களும், கலைஞர்களும் பா.ஜ.க ஆட்சிக்கு வரக்கூடாது என்றும், இது ‘இந்தியப் பன்முகத்தன்மைக்கு விடப்பட்ட சவால்’ என்றும் எச்சரித்து அறிக்கை விடுத்திருக்கின்றனர். இதுபோல டெல்லியில் குமார் ஷஹானி, சயீத் மிஸ்ரா, அர்பணா கௌர், விவன் சுந்தரம், அனுராதா கபூர், பத்ரி ரைனா, இர்பான் ஹபீப், பிரபாத் பட்நாயக், அமியா குமார், பக்ஷி, ஜெயந்தி கோஷ், ஹர்பன்ஸ் முகியா, சி.பி.சந்திரசேகர், சக்திகாக், ஆஷ்லி டெலிஸ், அனில் சடகோபால், டி.என்.ஜா, கே.எம்.ஸ்ரீமலி உள்ளிட்ட 60 கல்வியாளர்களும், திரையுலகினரும் கையெழுத்திட்டு அறிக்கை விடுத்துள்ளனர். ’வகுப்புவாத அமைப்பும், கார்ப்பரேட்களும் கூட்டாக சேர்ந்து ஆட்சியில் அமர முன்வருகின்றனர். சுதந்திர இந்தியா இதுவரை கண்டிராத ஆபத்து இது. பொறுப்பு மிக்க தனிநபர்களும், அமைப்புகளும் நிலைமையை சீர்தூக்கிப் பார்த்து, பா.ஜ.க கூட்டணியை ஆட்சியில் அமர விடாமல் முறியடிக்க வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.
இந்நிலையில் பி.ஜே.பி வந்தால் ஆபத்து, ஆபத்து என்று அறிவுத்துறையினரும், கலைத்துறையினரும் ஏன் திரும்பத் திரும்பச் சொல்கின்றனர்? என்பது ஒரு முக்கியமான கேள்வியாய் முன்வருகிறது. சாதாரண உரையாடல்களில் தெரிந்தவர்களும், நண்பர்களும் இதே கேள்வியை எழுப்புகின்றனர். தேவையற்ற பயம் எனவும் சிலர் கருதுகின்றனர். இந்நிலையில் பேராசிரியர் அருணனின் இந்த பேட்டியில் வெளிப்படும் கருத்துக்கள் இந்தக் கேள்விக்கு பதில் சொல்வதாய் மட்டுமில்லாமல், எழுத்தாளர்களும், கலைஞர்களும் இந்த நேரத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளையும் முன்வைக்கிறது. அவர்களையும் பொதுவெளியில் நின்று உண்மைகளை உரத்துப் பேச அழைக்கிறது. பேட்டி கண்டவர், பத்திரிகையாளர் அ.குமரேசன். இந்த பேட்டி காலத்தின் அவசியம்.
நாடு இப்போது சந்திக்கிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, அரசியலையும் பொருளாதாரத்தையும் தாண்டி பண்பாட்டுத்தளத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
பண்பாடு என்றதும் என் மனதில் பளிச்செனத் தோன்றுவது சக மனிதர்களை சமத்துவமாகப் பார்ப்பதும், அதற்கேற்ற வாழ்க்கைமுறைகளை அமைத்துக்கொள்வதும், அதற்கேற்ற பழக்கவழக்கங்களை ஏற்படுத்திக்கொள்வதும்தான். இதற்கே ஆபத்து உருவாகியிருப்பதாக நினைக்கிறேன். உதாரணமாக, தமிழகத்தில் எனக்கு அதிர்வை ஏற்படுத்திய நிகழ்வுப்போக்கு அனைத்து சமூக பேரவை என்ற பெயரில் தலித் மக்களுக்கு எதிரான ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்த பாமக எடுத்த முயற்சி. அத்தகைய பாமக இந்தத் தேர்தலில் பாஜக-வோடு கூட்டுச் சேர்ந்திருக்கிறது. இரு கட்சிகளுக்குமே அதைப் பற்றிய கூச்சம் எதுவும் இல்லை. அவர்கள் வெற்றிபெறப்போவதில்லை என்றாலும் பண்பாட்டுத்தளத்திலே இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். காதல் கூடாது, குறிப்பாகப் பெண்ணின் காதல் கூடாது என்றெல்லாம் தொடங்கி, கடைசியில் இளையவர்களின் திருமண உரிமையையும் பறிப்பது போல் திருமண வயதை உயர்த்த வேண்டும் என்கிற அளவுக்குப் போனார்கள். அப்படியானால் தலித்துகளுக்கும் பெண்களுக்கும் சமத்துவம் இருக்கக்கூடாது என்ற சிந்தனை உள்ள கட்சி பாமக.
பாஜக எப்படிப்பட்டதென்றால் சிறுபான்மையினருக்கு - குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான, கிறிஸ்துவர்களுக்கு எதிரான - கட்சி. பெரும்பான்மை மதத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை ஏற்க மறுக்கிற கட்சி அது. இந்த இரண்டு கட்சிகளும் கூட்டுச் சேர்கின்றன என்றால் தமிழகத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராகவும் சமூகநீதிக்கு எதிராகவும் ஒரு பகுதி மக்களை அணிதிரட்ட முயல்கிறார்கள் என்றுதான் பொருள்.
‘திராவிட’ என்ற சொல்லைத் தங்களது கட்சியின் பெயர்களில் வைத்திருக்கிற மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் சிறிதும் உறுத்தலில்லாமல் இவர்களோடு இணைந்திருக்கின்றன. இது பாஜக-வுக்கும் பாமக-வுக்கும் ஒரு நியாயத்தன்மையை - செலாவணித்தன்மையை - ஏற்படுத்திக்கொடுப்பதாக, அக்கட்சிகளின் இந்தக் கருத்துகளில் தவறு இல்லை என்ற எண்ணத்தைப் பரப்புவதாக இருக்கிறது. இதனால் பண்பாட்டுத்தளத்தில் உடனடியாக மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுவிடும் என்று நான் நினைக்கவில்லை என்றாலும், அதற்கான அச்சாரம் போடப்படுகிறது என்றுதான் நினைக்கிறேன். சிலர் இதை, தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு எதிரான ஒரு மாற்று உருவாகிறது என்பதாக சித்தரிக்கிறார்கள். திராவிட கட்சிகளுக்கு மாற்று உருவாக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அது, ஏற்கெனவே இருப்பதை விடவும் மோசமானதாக, இருப்புச்சட்டியிலிருந்து எகிறி அடுப்புக்குள் விழுகிற கதையாக மாறிவிடக்கூடாது. அந்த வேலையைத்தான் இவர்கள் செய்கிறார்கள். இது நிச்சயமாகப் பண்பாட்டுத் தளத்தில் ஆழமான, விரிவான பாதிப்புகளை உண்டாக்கும் என்பதுதான் என் அச்சம்.
இந்தச் சூழலில் தேர்தல் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறது?
இத்தகைய ஆழமான விரிவான பாதிப்புகள் உருவாகும் என்றால் இந்த சக்திகளை முறியடிக்க வேண்டியதன் தேவையைத் தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். முதலிலேயே குறிப்பிட்டது போல, அனைவரையும் சமமாகக் கருதுவதுதான் உண்மையான பண்பாடு. “பிறப்பொக்கும்” - பிறப்பால் அனைவரும் சமம் என்ற சிந்தனை வருவதற்கே இங்கே நெடுங்காலம் ஆனது, அதற்கொரு பிரெஞ்சுப் புரட்சி தேவைப்பட்டது. அதற்கொரு பாரம்பரியம் இங்கேயும் இருக்கிறது. பிறப்பால் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையுள்ள அனைவரும் இந்த சக்திகளை நிராகரிக்க வேண்டும்.
அதேவேளையில் திமுக - அஇஅதிமுக கட்சிகள் கூட இவர்களை எதிர்த்துப் பேசமாட்டேனென்கிறார்கள். ஏன் பாஜக-வை விமரிசிப்பதில்லை என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கேட்டபிறகும் கூட, நான் ஏன் அதைப் பேச வேண்டும் என்ற தொணியில்தான் அஇஅதிமுக-வின் ‘நமது எம்ஜிஆர்’ பத்திரிகையில் கட்டுரை எழுதப்படுகிறது. அதே போல திமுக தரப்பிலும், பொதுவாக மதவாதத்தை எதிர்ப்பதாகவும் மதச்சார்பற்ற அரசு அமைக்க விரும்புவதாகவும் சொல்லிக்கொள்கிறார்களே தவிர, குறிப்பாக பாமக-வின் சாதிய அரசியலையோ, பாஜக-வின் இந்துத்துவா அரசியலையோ குறிவைத்து அம்பலப்படுத்துகிற, கூர்மையாக விமரிசிக்கிற வேலையைச் செய்வதில்லை. காங்கிரஸ் கட்சியோ, அதன் ஆட்சியில் நடந்த தவறுகள் காரணமாக இதையெல்லாம் எதிர்த்து வலுவான முறையில் எதுவும் சொல்ல முடியாததாக இருக்கிறது.
இந்த நிலைமையில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும்தான் உருவாகிவருகிற ஆபத்தை உணர்ந்து பேசி வருகிறார்கள். ஆகவே, பாஜக அணி, காங்கிரஸ், திமுக அணி, அஇஅதிமுக ஆகியவற்றைத் தோற்கடிப்பதும் கம்யூனிஸ்ட் அணியை வெற்றிபெறச் செய்வதும் எவ்வளவு முக்கியமானது என்பதைப் பண்பாட்டுத் தளத்தில் செயல்படுகிறவர்கள் ஆழ்ந்து உணர வேண்டும், சட்டென்று இதைப் பிடித்துக்கொண்டு முன்னேற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
பொதுவாக இந்தத் தேர்தலில் ஒரு தரப்பினரால் ஊழலும், இன்னொரு தரப்பினரால் மதவெறியும் முக்கியப் பிரச்சனைகளாக முன்வைக்கப்படுகின்றன. இந்த இரண்டில் பிரதானமான எதிரி எது?
நாம் முதலில் விவாதித்த பண்பாட்டுத் தளம் என்பதை எடுத்துக்கொண்டால் பண்பாடு என்பதன் அடிப்படையே ஒழுக்கம்தான். காலத்திற்குக் காலம் ஒழுக்க விதிகள் மாறி வந்திருக்கின்றன என்பது உண்மைதான். தனியுடைமை என்று வருவதற்கு முன்னால், பூமியில் வளங்கள் எல்லோருக்கும் பொதுவானதாக இருந்தவரையில், திருட்டும் இல்லை, திருடக்கூடாது என்ற ஒழுக்க விதியும் இல்லை. என்னுடைய பொருள், என்னுடைய சொத்து என்று வந்த பிறகு, என் அனுமதியில்லாமல் தொடாதே என்பதுதான் திருடாதே என்பதன் பொருள். திருடக்கூடாது என்பது தனியுடைமைச் சமுதாயத்தில் ஒரு ஒழுக்க விதியாக நிலைபெற்றுவிட்டது. இன்று என்னவாகிவிட்டது என்றால், முதலாளித்துவச் சமுதாயம் திருடு ஆனால் மாட்டிக்கொள்ளாதே என்று அந்த விதியைத் திருத்துகிறது. அரசாங்கமே திருடுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கிறது. அரசாங்கச் சொத்துகளை - அதாவது இந்திய மக்களுக்குச் சொந்தமான வளங்களை, கனிமங்களை சிலபேர், தனி முதலாளிகள், பெரிய கார்ப்பரேட்டுகள் திருடலாம், கொள்ளையடிக்கலாம் அதில் தப்பில்லை என்று சொல்கிறது. அதிலேயிருந்து வருவதுதான் ஊழல். இன்றைய தனியார்மயமும் தாராளமயமும் உலகமயமும் ஊழல்களுக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன என்பது உண்மைதான். நான் அதையும் தாண்டி ஆழமாகச் செல்ல விரும்புகிறேன். தனியுடைமைச் சமுதாயம் உருவாக்கிய திருடாதே என்ற ஒழுக்கவிதிக்கு இவர்களே விசுவாசமாக இல்லை. இதற்கென்று சில சட்டவிதிகள் இருக்கின்றன, அதற்குள் புகுந்து திருடு, மாட்டிக்கொள்ளாமல் திருடு என்கிறார்கள்.
அரசுப் பொறுப்பில் இருந்தவர்களே இந்தக் கொள்ளைகளில் ஈடுபட்டார்கள் என்று அரசின் இன்னொரு அங்கமாகிய மத்திய புலனாய்வுத்துறை குற்றம் சாட்டுகிறது. அரசு அமைப்பின் மற்றொரு அங்கமாகிய உச்சநீதிமன்றம் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் நம்புவதற்கில்லை என்று தனது மேற்பார்வையில் அந்த வழக்கை எடுத்து நடத்துகிறது. நீதிமன்றம் தீர்ப்புச் சொல்கிற வரையில் குற்றவாளிகள் அல்ல என்று வாதத்தை முன்வைக்கிறார்கள். ஆனால், தீர்ப்பு வருகிற வரையில், குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தேர்தலில் நிறுத்தாமலிருக்கலாம் அல்லவா? மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி அசோக் தாவனையும், கர்நாடகத்தில் பாஜக எடியூரப்பாவையும், ஸ்ரீராமுலுவையும், தமிழகத்தில் திமுக தயாநிதி மாறனையும், ஆ. ராசாவையும் மறுபடியும் தேர்தலில் நிறுத்துகின்றன. ஒழுக்கம் சார்ந்த அரசியலுக்கு இந்தக் கட்சிகள் தயாராக இல்லை. பொதுவாழ்வின் இந்த ஒழுக்கக்கேடு தனி வாழ்வில் பிரதிபலிக்கிறது. ஒருவன் லஞ்சம் வாங்குவது பற்றி அவனுடைய குடும்பமோ, சொந்தமோ கவலைப்படுவதில்லை, மாட்டிக்கொள்ளாமல் வாங்கு என்றுதான் போதிக்கின்றன. சகமனிதனை சமமாக மதிப்பது என்ற பண்பாட்டோடு தொடர்புள்ளதுதான் பொதுச்சொத்தைக் கொள்ளையடிக்காமல் இருப்பதும். பொதுச் சொத்துகளைக் கொள்ளையடிப்பது என்பது எல்லா சகமனிதர்களையும் கொள்ளையடிப்பதுதான்.
ஊழல் மட்டுமல்ல, விலைவாசி உயர்வும் சக மனிதர்களை சமமாகப் பார்க்க மறுப்பதுதான். “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நூறு நாட்களில் விலைவாசியைக் குறைப்போம்” என்று காங்கிரஸ் சொன்னது. விலைவாசியைக் குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, பல மடங்கு உயர்த்திவிட்டார்களே! பெட்ரோலியப் பொருள்களின் விலையைக் கட்டுப்பாடில்லாமல் உயர்த்த அனுமதிப்பதுதான் மற்ற பொருள்களின் விலைவாசி உயர்வுக்கு அடிப்படைக் காரணம். இதை ஆரம்பித்து வைத்தது முந்தைய பாஜக ஆட்சிதான். அதைத்தான் காங்கிரஸ் ஆட்சி இன்னும் வேகப்படுத்தியது. இப்படி ஏழை, எளிய மக்கள் மீது விலைவாசி உயர்வு என்ற கொடூரமான, ஈவிரக்கமற்ற தாக்குதலை கேவலமான முறையில் தொடுத்திருக்கிறார்கள். இப்போதும் கூச்சமில்லாமல் விலைவாசி கட்டுப்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளித்திருக்கிறார்கள். இது கேலிக்குரியது மட்டுமல்ல, மக்களை ஏமாளிகள் என்று நினைக்கிற அகந்தையும் கூட.
இதில் காங்கிரஸ், பாஜக இரண்டும் ஒன்றுதான். உதாரணமாக, நிலக்கரி ஊழல் தொடர்பாக பிர்லா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்கிறது. உடனே அதை அரசாங்கத்தில் இருக்கிற மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா எதிர்க்கிறார், எதிர்க்கட்சியில் இருக்கிற அருண் ஜேட்லி எதிர்க்கிறார்! இயற்கை எரிவாயு விலையை 4 டாலரிலிருந்து 8 டாலராக உயர்த்தினால் அம்பானிக்கு 80,000 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். இடதுசாரிகளும் கெஜ்ரிவால் போன்றோரும் இதைக் கேள்வி கேட்கிறார்கள், ஆனால் நரேந்திர மோடியோ, பாஜக-வோ இதைப் பற்றிப் பேசுவதில்லையே ஏன் என்று கேட்டால் அவர்களிடமிருந்து பதிலே வருவதில்லை.
பொதுமக்கள் இந்தக் கொள்கைகளின் காரணமாகத் தங்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் வாழ்க்கைப் போராட்டங்களால் ஆவேசடைந்திருக்கிறார்கள். ஆனால், மக்களுடைய அதிருப்தி அந்த கார்ப்பரேட்டுகளுக்கும் அவர்களுக்கு சேவகம் செய்கிற ஆளுங்கட்சிக்கும் அதற்குத் துணை செய்கிற பிரதான எதிர்க்கட்சிக்கும் எதிராகப் பாய்ந்துவிடாமல் தடுப்பதற்காக, பாமர இந்துக்களின் கோபத்தைப் பாமர முஸ்லிம்களுக்கு எதிராகவும், பாமர கிறிஸ்துவர்களுக்கு எதிராகவும் திசைதிருப்புகிற வேலையைச் செய்கிறது இந்துத்துவா கூட்டம்.
ஊழலையும் விலைவாசி உயர்வையும் எதிர்ப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், அந்த இரண்டுக்கும் அடிப்படையான பொருளாதாரக் கொள்கையை எதிர்ப்பதில்லை; அந்தப் பொருளாதாரக் கொள்கை சார்ந்த அரசியல் - கார்ப்பரேட் - அதிகாரவர்க்கக் கூட்டணியை எதிர்ப்பதில்லை. ஆகவே, ஊழல், விலைவாசி உயர்வு, மதவெறி ஆகிய மூன்றுமே மக்களின் எதிரிகள்தான்.
பொதுவாகவே தேர்தல்களின்போது சாதி புகுந்துவிளையாடுவது உண்டு. தற்போதைய தேர்தலில் சாதியத்தின் தாக்கம் எப்படி இருக்கும்?
தமிழகத்தை எடுத்துக்கொண்டால், ஏற்கெனவே சொன்னது போல தலித் மக்களுக்கு எதிராக அனைத்து உயர் சாதி மக்களையும் அரசியல்ரீதியாகத் திரட்டுகிற வேலையில் பாமக ஈடுபட்டது. அடிப்படையில் அதுவே குறிப்பிட்ட சாதிப்பின்னணி உள்ள கட்சிதான் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த மக்களுக்கான சில நியாயமான கோரிக்கைகளோடு சாதி அமைப்பாகத்தான் அது இயங்கிவந்தது. பின்னர் அரசியல் கட்சியாகவும் உருவெடுத்தது. இடையில் சிறிது காலம், தலித் மக்களோடு ஒரு நல்லுறவை அந்தக் கட்சி ஏற்படுத்திக்கொண்டது. ஆனால், பின்னர், தனது அரசியல் நோக்கங்களுக்கு அந்த நல்லுறவு உதவாது என்று நினைத்தோ என்னவோ, அப்பட்டமான முறையில் தலித் மக்களுக்கு எதிராக, உயர்சாதி அமைப்புகளை ஒருங்கிணைக்கிற வேலையில் அக்கட்சியின் தலைவர் ராமதாஸ், அவரது புதல்வர் அன்புமணி இருவரும் இறங்கினார்கள். இந்த ஒருங்கிணைப்பு தலித் மக்களுக்கு எதிரானது, தமிழ்ச் சமுதாயத்திற்குத் துரோகத்தனமானது. இதை பல பெரும் ஊடகங்கள் சொல்வதில்லை. அந்தக் கட்சியோடு பாஜக இணைகிறது என்றால், தலித் விரோத அரசியலை அந்தக் கட்சியும் பயன்படுத்திக்கொள்கிறது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்துத்துவா என்பதே அடிப்படையில் சாதியம்தான். அகில இந்திய அளவில் இந்துத்துவ அமைப்புகள் சாதிய அடிப்படையில் பாஜக-வுக்கு ஆதரவு திரட்ட முயல்கின்றன. தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கிற பாஜக தலைவர்கள், முஸ்லிம்களுக்காக முஸ்லிம் அமைப்புகள் குரல் கொடுப்பதையோ, கிறிஸ்துவர்களுக்காகக் கிறிஸ்துவ அமைப்புகள் குரல் கொடுப்பதையோ மதவாதம் என்று சொல்வதில்லை, இந்துக்களுக்காக இந்து அமைப்புகள் குரல் கொடுப்பதை மட்டும் மதவாதம் என்று கம்யூனிஸ்ட்டுகள் சொல்வது ஏன் என்று கேட்பதுண்டு. அவர்களிடம் நான், “இந்து மக்களுக்காகக் குரல் கொடுத்தால் அதை நாங்கள் எதிர்க்கப்போவதில்லை, ஆனால் நீங்கள் பெரும்பான்மை இந்துக்களுக்காகக் குரல் கொடுப்பதில்லையே,” என்று சொல்வேன். எப்படிச் சொல்கிறீர்கள் என்று அவர்கள் கேட்கிறபோது, “ஆம், தலித் மக்களுக்காக நீங்கள் நிற்பதுண்டா? தீண்டாமைக்கு எதிராகப் போராடுவதுண்டா? பிற்படுத்தப்பட்ட மக்களின் நியாயங்களுக்காக வாதாடியதுண்டா? பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக மண்டல் கமிஷ்ன் அறிக்கையைச் செயல்படுத்த பிரதமர் வி.பி. சிங் நடவடிக்கை எடுத்தபோது அதைக் கெடுப்பதற்கல்லவா முயன்றீர்கள்” என்று கேட்பேன்.
வெறும் தேர்தல் கால உறவாக மட்டும் இதைப் பார்க்கக்கூடாது. சமுதாயத்தில் ஆழமான சீர்குலைவை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான வளர்ச்சிப்போக்காகவே இதைப் பார்க்க வேண்டும். அதைத் தடுப்பதற்கான வாய்ப்பாக இந்தத் தேர்தலைப் பயன்படுத்திக்கொண்டு, மக்கள் ஒற்றுமைக்கு எதிரான இந்த சக்திகளைப் புறக்கணிக்க வேண்டும்.
கலை இலக்கியத்தின் அடிப்படையே சுதந்திரமான கருத்து வெளிப்பாடுதான். அதற்கு ஏற்பட்டிருக்கிற அச்சுறுத்தல் குறித்து...?
நான் நினைக்கிற ஒரு கருத்தை வெளிப்படுத்த முடியாது என்பதை விடவும் கொடூரமான ஒடுக்குமுறை எதுவும் கிடையாது. யாரிடமிருந்தும் எப்படிப்பட்ட புதிய கருத்தும் வெளிப்படும் என்பதுதான் மனிதகுலத்தின் அற்புதம். ஆனால், நீ இந்தக் கருத்தைச் சொல்லக்கூடாது, அல்லது இந்தக் கருத்தை இன்னார்தான் சொல்ல வேண்டும் என்று கட்டளையிடுவது கொடுமையானது. உலக வரலாற்றில், மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்கு ஒரு முக்கியக் காரணம், அங்கே சுதந்திரமாக மாற்றுக் கருத்துகளைச் சொல்ல முடிந்ததுதான். கருத்துச் சுதந்திரம் எப்போது முழுமையாகும் என்றால், எது பெரும்பான்மையானதாக இருக்கிறதோ, எது ஆளுமை செலுத்துவதாக இருக்கிறதோ அதை விமரிசிப்பதற்கு, அதை நான் ஏற்கவில்லை என்று சொல்வதற்கு உரிமை இருக்கிறபோதுதான். மேற்கு ஐரோப்பாவில் கிறிஸ்துவ மதத்திற்குள்ளேயே பழைய சிந்தனைகளை எதிர்த்து ஞானிகள் பேசினார்கள். நாங்களும் ஏசுவை நம்புகிறோம் என்று சொல்லிக்கொண்டே, மதத் தலைமைகளின் பிற்போக்குத்தனங்களை எதிர்த்தார்கள். அங்கே நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட்டு, அதை விட முற்போக்கானதாகத் தோன்றிய முதலாளித்துவ சமுதாயம் வளர்ந்ததற்கு இந்தக் கருத்துச் சுதந்திரமும் ஒரு முக்கியக் காரணம்.
இந்தியாவில் பெரும்பான்மையாக இருப்பதும், ஆளுமை செலுத்துவதும் இந்து மதம்தான் என்கிறபோது அதில் உள்ள பிற்போக்குத்தனங்களாக ஒருவர் எதை நினைக்கிறாரோ அதை எதிர்த்துக் கருத்துச் சொல்கிற உரிமை அவருக்கு இருக்க வேண்டும். அதே போல் மற்ற மதங்களில் விமரிசனத்திற்கு உரியவை என்று நினைக்கக்கூடியவற்றை வெளிப்படையாக விமரிசிக்கிற உரிமையும் இருக்க வேண்டும். ஆனால் என்ன நடக்கிறது? ஒரே ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். அமெரிக்க ஆய்வாளர் வெண்டி டோனிகர் எழுதிய ‘தி ஹிண்டூஸ் - அன் ஆல்டர்நேடிவ் ஹிஸ்டரி’ என்ற புத்தகத்திற்கு, ஒரு சிறு இந்து அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றம் செல்கிறது. இந்து மதம் மிகப்பெரிய அளவுக்கு சகிப்புத்தன்மை உள்ள மதம் என்று சொல்லிக்கொள்கிறார்கள். அப்படியில்லை, சகிப்பற்ற தன்மைதான் மிகுதியாக இருக்கிறது என்று டோனிகர் அந்தப் புத்தகத்தில் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது. அதில் விமரிசனத்திற்கு உரிய கருத்துகள் இருக்குமானால் அதை விமரிசிக்கிற சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால், வழக்கில் நீதிமன்றம் தீர்ப்புச் சொல்வதற்கு முன்பே, புத்தகத்தை வெளியிட்ட பெங்குயின் நிறுவனம், இந்தியச் சட்டங்கள் அந்த அமைப்புக்கு சாதகமாகத்தான் இருக்கின்றன என்று கூறி, கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புத்தகப் படிகளைத் திரும்பப்பெற்றுக்கொண்டது, அவற்றை அரைத்துக் கூழாக்கிவிட்டது. இந்துத்துவா கட்சி ஆட்சிக்கு வராமலே இப்படி நடக்கிறது என்றால், தப்பித்தவறி மோடியின் தலைமையில் அடுத்த ஆட்சி அமையுமானால் என்ன ஆகும்? மற்ற சிறுபான்மை மதங்களுக்கும் சாதகமாக நடந்துகொள்வது போல் தோற்றத்தை ஏற்படுத்தி, எந்த மதத்தையும் புண்படுத்த விடமாட்டோம் என்று சொல்லி, மதம் பற்றிய விமரிசனக் கருத்து எதையும் யாரும் வெளிப்படுத்தக் கூடாது என்று சட்டமே கொண்டுவந்துவிடுவார்கள். அறிவியல் கருத்துகள் முடங்கி, நாட்டின் வளர்ச்சி தடைப்பட்டுவிடும்.
தமிழகத்தில் 1940களின் பிற்பகுதி வரையில், புராணக்கதைகளைச் சொல்கிற திரைப்படங்கள் மட்டுமே வந்துகொண்டிருந்தன. திராவிட இயக்கமும் கம்யூனிஸ்ட் இயக்கமும் ஏற்படுத்திய தாக்கங்களால், பகுத்தறிவுக் கருத்துகளும் முற்போக்கான சிந்தனைகளும் திரைப்படங்களில் இடம்பெறத் தொடங்கின. அவை தமிழ்ச்சமூகத்தில் நல்ல விளைவுகளையும் ஏற்படுத்தின. இன்று நவீன நுட்பங்களோடு வருகிற திரைப்படங்களில் எந்த அளவுக்கு இப்படிப்பட்ட விமரிசனங்கள் இடம்பெறுகின்றன? சில பகுத்தறிவுக் கருத்துகளைக் கூறத் தொடங்கினார் நகைச்சுவை நடிகர் விவேக். அவரை, காஞ்சி சங்கராச்சாரி அழைத்துப் பேசினார், அதன்பிறகு அந்த வகையிலான விமரிசனங்களும் குறைந்துவிட்டன. சிறுபான்மை மதங்களை விமரிசித்துப் படங்கள் வருகின்றன, அதற்கு எதிர்ப்புக் கிளம்புகிறது. ஆனால் பெரும்பான்மை மதத்தை விமரிசித்துப் படங்கள் வரவேண்டாமா? பகுத்தறிவுக் கருத்துகள் வர வேண்டாமா?
இன்று ஒரு ஆய்வு நூலுக்கு ஏற்பட்ட இந்த நிலைமை நாளை, கதைகளுக்கும் கவிதைகளுக்கும் இதர கலைப்படைப்புகளுக்கும் ஏற்படும். ஒட்டுமொத்த சுதந்திரமும் ஜனநாயகமும் முடக்கப்பட்டுவிடும். கலை இலக்கியவாதிகள், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பாதுகாக்கிற உணர்வோடு இந்தத் தேர்தலில் இடதுசாரி கட்சிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதும், பாஜக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்வதும் கலை உரிமை சார்ந்த செயல்பாட்டுக் கடமை.
இந்தப் பிரச்சனையோடு தொடர்புள்ளதுதான் மொழி உரிமை. அதற்கு ஏற்பட்டிருக்கிற சவால் என்ன?
ஒரு அனுபவத்தைச் சொல்கிறேன். சமஸ்கிருத மொழியை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அதற்கு எல்லா வகையிலும் நிகரான தமிழ் மொழிக்கு உரிய இடம் அளிக்கப்பட வேண்டும் என்றே வலியுறுத்துகிறோம். மத்தியில் வாஜ்பாய் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, சமஸ்கிருதம் செம்மொழியாக அறிவிக்கப்பட்டிருப்பது போல் தமிழையும் செம்மொழியாக அறிவிக்கக்கோரி தமுஎகச சார்பில் தலைநகர் தில்லியில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். மார்க்சிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினராக இருந்த காலம் சென்ற பி. மோகன், காங்கிரஸ் கட்சியின் சுதர்சன நாச்சியப்பன், மதிமுக தலைவர் வைகோ ஆகியோர் நாங்கள் பிரதமரையும் மனிதவளத் துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷியையும் சந்திக்க உதவினார்கள். எங்கள் கோரிக்கை மனுவை வாங்கிக்கொண்ட வாஜ்பாய் எங்களைப் பார்த்து, “நீங்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருப்பது எனக்குத் தெரியும்,” என்று மட்டும் சொன்னார். வேறு எதுவும் சொல்லவில்லை. முரளி மனோகர் ஜோஷி மனுவைப் பிரித்துக்கூட பார்க்கவில்லை, பக்கத்தில் வைத்துவிட்டார். கோரிக்கையை நிறைவேற்ற அந்த ஆட்சி கடைசிவரையில் எதுவுமே செய்யவில்லை. இந்துத்துவாவைப் பொறுத்தவரையில் சமஸ்கிருதத்திற்குத் தருகிற முக்கியத்துவத்தை, இந்தி உட்பட வேறு எந்த மொழிக்குமே தரமாட்டார்கள். இவர்கள் தமிழுக்காக என்ன செய்துவிடுவார்கள் என்று வைகோ எதிர்பார்க்கிறார் என்பது புரியவில்லை.
அடுத்து, இந்தி அல்லது ஆங்கிலம் என்பதுதான் காங்கிரஸ்சின் கேவலமான மொழிக்கொள்கை. தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளை வளரவிடாமல் தடுப்பதற்கு இந்த மொழிக்கொள்கைதான் தோது. ஆகவே இதை பாஜக எதிர்ப்பதில்லை. தமிழகத்திலும் எங்கும் ஆங்கில ஆதிக்கத்தைப் பார்க்கிறோம். போகிற போக்கைப் பார்த்தால் நாடு முழுவதும், இந்தியைக் கூட கீழே தள்ளி ஆங்கிலம் மட்டும்தான் என்ற நிலைமை வந்துவிடுமோ என்று கவலையாக இருக்கிறது. அதிலும், இன்றைய உலகமய கட்டத்தில் - உலகமயம் என்று கூட சொல்லக்கூடாது, அமெரிக்கமயம் என்றுதான் சொல்ல வேண்டும் - அவர்களுடைய சந்தை ஆக்கிரமிப்புக்கு இந்தியாவில் ஆங்கிலம் மேலோங்குவதுதான் வசதி. தமிழ்நாட்டில் எடுத்துக்கொண்டால், பள்ளிக்கல்வியில் தமிழ் என்ன நிலைமையில் இருக்கிறது என்பது மிகுந்த வேதனை ஏற்படுகிறது. அகில இந்திய அளவில் இப்படி ஆங்கிலம் திணிக்கப்படுகிறபோது, மத்திய அரசின் மற்ற விசயங்களை எதிர்த்துப் பேசுகிற முதலமைச்சர் ஜெயலலிதா, அதன் மொழிக்கொள்கையை எதிர்க்காமல், அதற்கேற்ப இங்கேயும் ஆங்கில வழி கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிற அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது. ஆங்கிலம் ஒரு துணை மொழியாக இருப்பதை எதிர்ப்பதற்கில்லை. ஆனால், அதுதான் பிரதான மொழியாக இருக்கும் என்ற நிலை வருவது, இந்திய மொழிகளுக்கும் நல்லதல்ல, மக்களுக்கும் நல்லதல்ல.
தமிழ், இந்தி உள்பட, எட்டாவது அட்டவனையில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் மத்தியில் சமமான இடம் தர வேண்டும் என்ற உடையவை இடதுசாரி கட்சிகள் மட்டும்தான். ஆகவே, தமிழ் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்கள் கம்யூனிஸ்ட்டுகளை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து தேர்தலைச் சந்திப்பது பற்றி...?
இன்றைய தேர்தல் முறையில், ஒரு கட்சிக்குக் கிடைக்கக்கூடிய வாக்குகளை நாடாளுமன்றத்தில் இடங்களாக மாற்றுவதற்குத் தொகுதி உடன்பாடு தேவைப்படுகிறது. ஆகவேதான் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அஇஅதிமுக-வோடு தொகுதி உடன்பாடு காண முயன்றன. அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் தனது கட்சி இடதுசாரிகளோடு நிற்கிறது என்று அறிவித்து, பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். பிறகு அவராகவே உறவை முறித்துக்கொண்டார். அதற்குப் பிறகு ஒரு தவறான அரசியல் முடிவு எடுத்து, தனது பிரச்சாரங்களில் பாஜக-வை விமரிசிப்பதில்லை. இது அவரது உள்நோக்கம் பற்றிய கேள்வியை எழுப்புகிறது. தேர்தலுக்குப் பிறகு பாஜக-வோடு சேர்வதற்கான திட்டம் ஏதேனும் இருக்கும் போலப் படுகிறது. ஜெயலலிதா அவர்கள் அப்படிச் செய்வார்களானால், ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ள 11 கட்சி பிரகடனத்திற்குச் செய்கிற மிகப்பெரும் துரோகமாக இருக்கும். கூடவே, பெரியாரும் அண்ணாவும் உயர்த்திப்பிடித்த மதச்சார்பற்ற கொள்கைக்கும் துரோகம் இழைப்பதாக அது முடியும்.
இந்தப் பின்னணியில், இரண்டு கம்யூனிஸ்ட்டுகள் மட்டும் சேர்ந்து மக்களவைத் தேர்தலைச் சந்திக்கிற சூழல் தமிழகத்தில் 1964ல் கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்த பிறகு முதல் முறையாக உருவாகியிருக்கிறது. தடைக்கற்கள் எதிர்ப்படுகிறபோது அவற்றைப் படிக்கற்களாக மாற்றுவதுதான் சரியான அணுகுமுறை. அந்த வகையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுத்த முடிவு சரியானதே. ஐந்துமுனைப் போட்டி உருவாகியுள்ள நிலையில், வெற்றிபெறக்கூடிய எவரும் குறைந்த வாக்குகள் வேறுபாட்டில்தான் வெற்றிபெற முடியும். ஆகவே, தங்களுக்கு விரிவான மக்கள் தளம் இருக்கிறது என்று கருதுகிற இடங்களைத் தேர்ந்தெடுத்து இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிருகின்றன. தங்களுடைய கொள்கைகளை மக்களிடம் விரிவாகக் கொண்டுசெல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறடது. தங்களுடைய ஆற்றல் அனைத்தையும் ஒருமுகப்படுத்திச் செயல்படுகிற நிலையில், பல இடங்களில் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் வெற்றிபெற முடியும் என்றே நான் நினைக்கிறேன்.
எழுத்தாளர்கள், கலைஞர்கள் உள்பட பண்பாட்டுத்தளத்தில் செயல்படுவோருக்கும் பொதுமக்களுக்கும் உங்கள் வேண்டுகோள்...?
படைப்பாளிகளுடைய அடிப்படையான செயல்பாடு என்பது கலை இலக்கியப் படைப்புகளை உருவாக்குவதுதான். என்றாலும், சுற்றி நடக்கிற நிகழ்ச்சிப்போக்குகளிலிருந்து அவர்கள் தங்களைத் துண்டித்துக்கொள்ள முடியாது. சொல்லப்போனால், அந்த அரசியல் - சமூக - பண்பாட்டு நிகழ்வுகள்தான் அவர்களுடைய கலை-இலக்கிய ஆக்கங்களையே உருவாக்க முடியும். இன்று இந்தியாவில் ஒரு முக்கியமான அரசியல் நிகழ்வு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதை நுணுக்கமாகக் கவனித்து, தங்களுடைய பங்கைச் செலுத்துவது கலை-இலக்கியவாதிகளுடைய முக்கியமான சமூகக் கடமை என்று நான் கருதுகிறேன். இரண்டு வகைகளில் அவர்கள் பங்காற்ற முடியும். ஒன்று - வாக்காளர்களாக, மாற்றுக் கொள்கைகளை முன்வைக்கிறவர்கள் யார் என்று சரியாகத் தேர்வு செய்து அவர்களுக்கு ஆதரவளிப்பது. இரண்டு, அந்த சரியான அரசியல் சக்திகளுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிற வகையில் தங்களது கலைத்திறன்களையும் இலக்கிய ஆற்றல்களையும் பயன்படுத்துவது. இந்தக் கடமையை நிறைவேற்றி தமிழகத்தில் ஒரு மாற்றம் நிகழத் தோள் கொடுக்குமாறு சக எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
இலக்கியத்தில் அரசியல் பிரச்சாரம் செய்யலாமா என்று சில அறிவுஜீவிகள் கேட்கக்கூடும். ஆனால், இப்படிக் கேட்பதன் மூலமாகவும் காலங்காலமாக அதுதான் நடந்து வந்திருக்கிறது. அரிஸ்டாட்டில் சொன்னது போல, மனிதா நீ ஒரு அரசியல் விலங்கு என்பதை உணர்ந்துகொண்டாக வேண்டும். பொதுமக்களில் ஒவ்வொருவரும் இதை உணர்ந்து செயல்பட வேண்டும். கலை இலக்கியவாதிகளைப் பொறுத்தவரையில் ஏற்கெனவே அவர்களுக்கு ஒரு அரசியல் புரிதல் இருக்கும். மக்களை அலைக்கழிக்கிற நாசகரமான பொருளாதரக் கொள்கைகளையும், மக்களைக் கூறுபோடுகிற கொடூரமான மதவெறி அரசியலையும் வீழ்த்துவதற்கு இடதுசாரிகள் வெற்றிபெறுவது ஒரு கட்டாயத் தேவை என்ற புரிதலோடு அவர்கள் பங்காற்ற வேண்டும்.
தமிழக மக்கள் எப்போதுமே அரசியலில் அக்கறையோடு ஈடுபட்டு வந்திருப்பவர்கள். தற்போது ஐந்துமுனைப் போட்டி என்பது, ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு ஒரு அருமையான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. சரியான பொருளாதாரக் கொள்கைகளுக்காக மட்டுமல்ல, மதச்சார்பின்மையை நிலைநாட்டுவதற்காக மட்டுமல்ல, பொதுவாழ்வில் நேர்மையும் தூய்மையும் வேரூன்ற வேண்டும் என்பதையும் நினைத்துப்பாருங்கள், மற்ற எல்லோரும் உங்கள் எண்ணத்தில் மறைந்துவிடுவார்கள், கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே கம்பீரமாக நிற்பார்கள். அவர்களுக்குப் பேராதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி: ‘தீக்கதிர்’ நாளேடு (6-4-2014 ஞாயிறு இதழ் ‘வண்ணக்கதிர்’ இணை.ப்பு)