கம்யூனிஸ்டுகள் ஏன் ஜெயலலிதாவிடம் போய் நிற்கிறார்கள்? - 2



இதற்கு முன்பு கம்யூனிஸ்டுகள் ஏன்  ஜெயலலிதாவிடம் போய் நிற்கிறார்கள் என்று ஒரு இடுகை எழுதியிருந்தேன். அதன் இறுதியில்  “கம்யூனிஸ்டுகள் யாருக்காக, எதற்காக இப்படிஜெயலலிதாவிடம் போய் நிற்கிறார்கள்?”  இதில் தனிப்பட்ட சுயநல அரசியல் ஏதும் இருக்கிறதா, இல்லை பொதுநலம் சார்ந்த பொறுப்பு இருக்கிறதா? என்று கம்யூனிஸ்டுகளின் நோக்கங்கள் குறித்த கேள்வியோடு  முடித்திருந்தேன்.  வராத பதில்கள், கம்யூனிஸ்டுகள் மீது பழிசுமத்த முடியாமல் இருப்பதையே காட்டுகின்றன. வந்திருந்த பின்னூட்டங்களில் ஆதங்கங்கள் வெளிப்பட்டு இருந்தாலும், கம்யூனிஸ்டுகள் மீதான மரியாதையே தொனிக்கின்றன.  நோக்கங்கள் குறித்து விவாதங்கள் பெரிதாக இல்லை.
 

சரி. இப்போது திரும்பவும் அதே கேள்வியைக் கேட்க வேண்டி இருக்கிறது. ஆனால் இந்தமுறை விளைவுகளிலிருந்து எழும்பியிருக்கும் கேள்வியாக வைத்துப் பார்க்கலாம். கடந்தகால பரிசீலனைகளை கம்யூனிஸ்டுகள் குறித்தே வைத்திருப்பார்கள். பத்து வருடங்களுக்கு முன்பு இந்த ஜெயலலிதாவோடு தொகுதி உடன்பாடு வைத்து, அவர் ஆட்சியில் அமர உதவிகரமாய் இருந்த கம்யூனிஸ்டுகள், அந்த அனுபவங்களை மறந்திருக்க மாட்டர்கள். 


அவைகளின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் என்னவெல்லாம் தெரிகிறது! இலவச மின்சாரம் ரத்து செய்ததிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொன்றாய் முன்வருகின்றன. எலிக்கறிச் சாப்பிட்ட தஞ்சை விவசாயிகளும், மாடுகள் போல கஞ்சித் தொட்டிகள் முன்னால் நின்ற நெசவாளர்களும் தெரிகின்றனர். டிஸ்மிஸ் செய்யப்பட்ட பத்தாயிரம் சாலைப்பணியாளர்களின் அவல வாழ்வு தெரிகிறது.  ஒரே கையெழுத்தில் 1,77,000 அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்த குரூரப் புத்தி தெரிகிறது. பொடா ராஜ்ஜியம் விரிகிறது.  கம்யூனிஸ்டு தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் கைகொட்டிச் சிரிக்கின்றன. இன்னும் இன்னும் எவ்வளவு தெரிகின்றன! தொகுதி உடன்பாடு வைத்துக்கொண்ட அதே கம்யூனிஸ்டுகள், இந்த ஜெயலலிதாவை எதிர்த்து எத்தனை போராட்டங்களை நடத்தினார்கள். அவைகளும் தெரிகின்றன. இந்த  அம்மையாரை அதிகாரத்திலிருந்து அகற்ற,  கம்யூனிஸ்டுகளே அடுத்த தேர்தலில் தி.மு.கவுடன் தொகுதி உடன்பாடு வைத்துக்கொண்டு எவ்வளவு முனைப்புடன் பணியாற்றினார்கள். அவைகளும் தெரிகின்றன.
 

இவ்வளவுக்கும் பிறகு  “கம்யூனிஸ்டுகள் ஏன் ஜெயலலிதாவிடம் போய் நிற்கிறார்கள்?  என்ற எளிமையான, நேரிடையான கேள்விக்கு  பதில்  என்ன சொல்ல முடியும்? தி.மு.க  ஆட்சி மக்களுக்கு விரோதமாய் இருக்கிறது. காங்கிரஸோடு அது வைத்திருக்கும் கூட்டணி நாட்டுக்கே ஊறு விளைவிப்பதாய் இருக்கிறது . இதுதான் ஜெயலலிதாவிடம் போய் கம்யூனிஸ்டுகளை நிறுத்தியிருக்கிறது. சரிதான்.  இதனால் என்ன விளைவுகள் ஏற்படும்?  இங்கே எந்தவிதமான மாற்றங்கள் நிகழ்ந்துவிட முடியும்?


கொள்கை, கோட்பாடு, லட்சியம் என்று எதுவும் மற்றவர்களிடம்  இல்லை. பொய், புரட்டு, சூது, வாது, பித்தலாட்டம், சந்தர்ப்பவாதம் என அத்தனை சமூக அழுக்குகளும் அரங்கேறும் மேடையாக இந்த தேர்தல் முறை ஆகிப் போய்விட்டது. கள்ளப்பணமும், கறுப்புப்பணமும் கோடி கோடியாய் புழங்கும் பிஸினஸ் ஆகிவிட்டது. நாளுக்கு நாள் இந்த தேர்தல் மேலும் மேலும் அழுகி நாற்றமெடுக்க ஆரம்பிக்கிறது. அதிகாரம் ஒன்றே குறியகவும், அதற்காக எதையும் செய்யத் துணிபவர்களாக மற்றவர்கள் இருக்கிறார்கள். தொண்ணூற்று எட்டு சதவீதம் இப்படிப்பட்டவர்களாக நிறைந்திருக்க, அவையோடு  இரண்டு சதவீத நேர்மையானவர்கள் போய் தொகுதி உடன்பாடு வைத்துக்கொண்டால் என்ன ஆகும்? கடலும், பெருங்காயமும்தான் நினைவுக்கு வருகிறது.
 

மத்தியில் காங்கிரஸை எதிர்ப்பதை குறிவைத்து  வைத்து உருவாக்கப்படும் இந்த தொகுதி உடன்பாடு எந்த வகையில் அர்த்தம் கொண்டது எனவும் தெரியவில்லை. காங்கிரஸுக்கும் தி.மு.கவுக்கும் தொகுதி உடன்பாட்டில் பிரச்சினை வந்தவுடன், காங்கிரஸோடு தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ள ஜெயலலிதா துடித்த காட்சிகளை உலகமே பார்த்தது. தேர்தல் முடிந்த கையோடு காங்கிரஸோடு சேராது என எந்த உத்திரவாதமும் இல்லை. எந்த சந்தேகமும் வேண்டியது இல்லை.  இதுபோன்ற துரோகங்களை எத்தனை முறைதான் திரும்பத் திரும்ப சந்திப்பது? கம்யூனிஸ்டுகள் கொஞ்சமும் தயங்காமல், சளைக்காமல் அப்போதும் தெருவில் நின்று போராடுவார்கள். அதிலும் எந்த சந்தேகமும் வேண்டியது இல்லை.


ஆனால், மக்கள் “நீங்கள்தானே அவர்களைக் கொண்டு வந்தீர்கள்?” எனக் கேட்கும் அல்லது கேட்கப்போகும் கேள்விகளுக்கு  பதில்கள் புத்தகங்களில் நீள நீளமான பத்திகளில் இருக்கக் கூடும்.  பழைய சலூன் கடைகளில் முடி வெட்டுவதற்கு முன்பு தலையில் தண்ணீரை பீய்ச்சி அடிப்பார்கள். அதற்கென்று ஒரு பாட்டில் இருக்கும். அதன் மேல்பாகத்தில் சுருண்டு சுருண்டு நீண்டு ஒரு சிறு குழாய் போன்ற அமைப்பு இருக்கும். சாதாரண மக்களுக்கு கம்யூனிஸ்டுகளின்  ஆழமான அரசியல் மொழியும், தொலைநோக்கு நிலைபாடுகளும் அப்படித்தான் தெரிகின்றன.  ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம்,  தொகுதி உடன்பாடு, கூட்டணி, ஐக்கிய முன்னணித் தந்திரம் என்ற வார்த்தைகளோடு வெளிப்படும் அவை சட்டென்று மக்களுக்கு புரியக்கூடியவையாகவும், நேரடியாகவும் இருப்பதில்லை.


என்ன இருந்தாலும் பேய்க்கு எதிராக பிசாசோடும், பிசாசுக்கு எதிராக பேயோடும் தொகுதி உடன்பாடு வைத்துக்கொள்ளும் இதனை ஐக்கிய முன்னணித் தந்திரத்தின் ஒரு பகுதியாகப் பார்க்க முடியவில்லை. அனுபவங்களிலிருந்து பாடம் கற்று, நிலைமைகளில் முன்னேற்றம் காணக் கையாளும் உத்தியாகவும் தெரியவில்லை.  வாழ்க்கை முழுவதும் வீதிகளில் நின்று மக்களுக்காகப் போராடும் கம்யூனிஸ்டுகள்  மீதிருக்கும் மதிப்பும்,  மரியாதையும் இந்த தேர்தல் வியூகங்களால் தொடர்ந்து தேய்ந்து போவதுதான் நடக்கிறது. அந்தக் கவலையே வாட்டுகிறது. தேர்தல் முடிவுகள் எந்தக் கண்றாவியாகவும் இருந்துவிட்டுப் போகட்டும்.


யோசிக்கவும், விவாதிக்கவும் நிறையவே இருக்கின்றன இன்னும் .....

கருத்துகள்

20 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. வாழ்க்கை முழுவதும் வீதிகளில் நின்று மக்களுக்காகப் போராடும் கம்யூனிஸ்டுகள் மீதிருக்கும் மதிப்பும், மரியாதையும் இந்த தேர்தல் வியூகங்களால் தொடர்ந்து தேய்ந்து போவதுதான் நடக்கிறது. நியாயமான கவலை.
    சீனி மோகன்

    பதிலளிநீக்கு
  2. இந்த விஷயத்தை இப்படி பார்க்க வேண்டியதில்லை. கட்சி ஒரு அரசியல் நிலைப்பாடு எடுக்கின்றது. காங்கிரஸ் முதல் எதிரி. ஆகவே அதன் கூட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளின் எதிரிகள். இவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்றால், அதற்குத் தேவையான அளவு பலம் இல்லாத நிலையில் அந்த அணிக்கு எதிராக இருக்கும் அணியுடன் கூட்டு சேர்வதுதான் வழி. கம்யூனிஸ்டுகள் அதைதான் செய்கிறார்கள். இதில் ஜெயலலிதாவிடம் போய் நிற்கிரார்கள் என்கிற தொனிக்கு இடம் இல்லை. ஏனெனில் இன்று தமிழ்நாட்டில் அதுதான் பெரிய கட்சி. அதாவது காங்கிரஸ்-திமுக கூட்டாணியை எதிர்க்கும் பெரிய கட்சி. கேரளாவில் மார்க்சிஸ்டுகள் காங்கிரஸ் குட்டணிக்கு எதிரான பெரிய கட்சி. அதிமுக அங்கே அந்த கூடணியில் ஒரு இடத்தில் போட்டியிடுகின்றது. அவர்கள் கம்யூனிஸ்டுகளின் அலுவலகத்திற்குத் தேடித்தான் வந்தார்கள். மேலும், திமுக காங்கிரஸ் எதிர்ப்பு அணியில் இருந்தால் கம்யூனிஸ்டுகள் அவர்களுடன் தான் கூட்டணி பேசியிருப்பார்கள். திமுகவுக்கும் காங்கிரசுக்கும் கூட்டணி முறியுமோ என்கிற நிலை வந்த போது திருமாவளவன் என்ன சொன்னார் என்பது நினைவில் இருக்கும். இபோதுதான் காங்கிரஸ் போகப் போகின்றதே, கம்யூனிஸ்டுகள் எங்கள் அணிக்கு வந்து விடுங்கள் என்று அழைப்பு விடுத்தார். கம்யூனிஸ்டுகள் எந்த அடிப்படையில் கூட்டணி நிலைப்பாடு எடுக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதைக அவர்களே கொச்சைப்படுத்துவதற்குக் காரணம் அவரவர் அரசியல் நிலைப்பாட்டிலிருந்துதான்.இன்னும் ஒரு முக்கிய விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். கருணாநிதியிடம் கூட்டணி சேருகிற சந்தர்ப்பங்களில் இது மாதிரி 'கேவலம்', 'வாசலில் தவம் கிடக்கிறார்கள்' போன்ற பேச்சுக்கள் வருவதில்லை. காரணம் அவர் ஆண். இவர் பெண். இதுதான் பொது புத்தி. (மாதவராஜ் அப்படி பார்வை உள்ளவர் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்).ஆனால் அவரும் இந்த எதிர்ப்பிரச்சாரத்திற்கு பலியாகிவிட்டாரோ என்கிற சந்தேகம் , மற்றவர்களின் கருத்துக்களில் உள்ள தொனி அவரது பதிவிலும் தெரிவதனால், வருகின்றது. ஆதியிலிருந்தே காங்கிரஸ் எதிர்ப்பு நிலையில் கம்யூனிஸ்டுகள் உருதியாக இருப்பது உலகறியும். ஒரேயொரு வொதி விலக்குதான். 2004. அப்போது பாஜக எனும் மிகப்பெரும் அபாயம் சூழ்ந்திருந்த்தது.அதை அகற்ற காங்கிரசை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. காங்கிரஸ் உதவியில்லாமல் பாஜகவை அதிகாரத்திலிருந்து அகற்றியிருக்கவே முடியாது. உண்மையில் கம்யூனிஸ்டுகள் நிலை மாறுவதே இல்லை. மற்றவர்கள்தான், கம்யூனிஸ்டுகளை அப்படிப் பழிப்பவர்கள்தான், பதவிக்காக அப்படி நிலை மாறிக் கொண்டே இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  3. முதல் கமெண்டின் தொடர்ச்சி.அதிமுக, திமுக என மாறி மாறி வருவதனால் என்ன மாற்றம் வந்துவிடப்போகின்றது என்ற கேள்வி உணமை நிலவரம் உணராத கேள்வியாக இருக்கின்றது தோழரே. 2001ல் அதிமுகவை ஆதரித்தோம். அம்மையார் வந்து ஒரு பேயாட்டம் போட்டார். 2004ல் மக்கள் மரண அடி கொடுத்தார்கள். உடனே ஜெயலலிதா என்ன செய்தார்? தன் அரசாங்கத்தின் பல முடிவுகளை திரும்பப் பெற்றுக் கொண்டார். அவற்றில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது சாலைப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தியது. (கருணாநிதி தான் அதைச் செய்ததாகக் கூறிக் கொண்டிருக்கிறார்). ஆனாலும் 2006ல் தோற்றார். எனினும் அது 2004 அளவிற்கு இருக்கவில்லை. கம்யூனிஸ்டுகள் மீது மக்களுக்கு மரியாதை குறைவதாகச் சொல்வதை ஏற்க முடியவில்லை. தங்களது கொள்கை நிலையிலிருந்து அவர்கள் எடுக்கும் முடிவுகளை சிலர் உங்களது பதிவில் உள்ளது போல் விமரிசித்தாலும் மக்கள் என்னவோ தொடர்ந்து வாக்களித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மேலும்,கடெத தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றத்தால் மக்களுக்கு ஒரு நன்மையுமே நடக்கவில்லை என்பது சரியல்ல. கருணாநிதி ஆட்சியில் உள்ள பல்வேறு நலத்திட்டங்கள் (இவற்றில் சில ஜெயலலிதாவாலும் கொண்டுவரப்பட்டவை)புதிதாகக் கொண்டுவரப்படன. சில விரிவுபடுத்தப்பட்டன். மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் கம்யூனிஸ்டுகளின் நிர்ப்பந்த்ததால் கிராமப்புற வேலை உத்தரவாதத் திட்டத்தைக் கொண்டு வந்தது. பாஜக ஆட்சியிலிருந்த பொடாச் சட்டம் ரத்து செய்யப்பட்டது. ஒரு பக்கம் உலகமயக் கொள்ளையும் மறுபக்கம் மக்களுக்கு சில நன்மைகளும் என் மத்திய-மாநில அரசாங்கங்கள் செயல்படுகின்றன.அதற்குக் காரணம் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே என்கிற பயம். கம்யூனிஸ்டுகளின் உத்திகள் மற்றொரு மாபெரும் பலனையும் அளித்துள்ளன. பாஜகவைத் தனிமைப் படுத்தியிருக்கின்றது. ஜெயலலிதா காங்கிரசுடன் போக மாட்டார் என்பதற்கோ, கருணாநிதி பாஜகவுடன் போகமாட்டார் என்பதற்கோ எந்த உத்திரவாதமும் இல்லை. அவர் இப்போது போகவில்லை. அவ்வளவுதான். இந்தப் பேச்சுக்களுக்கு கம்யூனிஸ்டுகளைத் தனிமைப்படுத்தும் ஒரு பரிமாணமும் இருக்கின்றது என்பதை கவனத்தில் கொள்வோம்.

    பதிலளிநீக்கு
  4. மாதவ்ஜி!அசொகன் முத்துச்சாமி அவர்களின் பின்னூட்டம் நன்று . ஆனால் அவர் மாதவரஜ் மீதுசந்தெகம் கொள்ள வெண்டியதில்லை.ராணுவ அணிவகுப்பில் இடது பக்கம் திரும்பும் போது பார்த்தால் தெரியும்.முதல் வரிசையில் வந்திருப்பவர் நகர மாட்டார்.திரும்பி நின்ற இடத்திலேயே "லேப்ட்-ரைட்" பொட்டுக்கோண்டு நீற்பார். இரண்டாம் வரிசைக்காரர் வருவார். இருவரும் நின்று கொண்டே "லெப்ட்-ரைட்" பொட்டுக் கொண்டு இருப்பார்கள்.வரிசையில் கடைசி வீரன் வரும் வரை நிற்பார்கள் அதன் பிறகு கம்பீரமாக் அனிவகுப்பு தொடரும். மேற்கு வங்கம், திரிபுரா, கேரளம் ஆகியவை தமிழகம்,ஆந்திரா, பஞ்சாப், பீஹருக்காக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.வெகு காலமாக.....சோர்வடையாமல்.....----கஸ்யபன்

    பதிலளிநீக்கு
  5. தோழர்களே, எனக்கு மாதவராஜ் மீது சஎதேகம் இல்லை. கம்யூனிஸ்டுகள் சொந்த பலம் பெறாத வரையிலும் இந்த உத்திகள் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும். மேலும், மக்கள் மத்தியில் கம்யூனிஸ்டுகளுக்கு மரியாதை குறைவதாக இருந்தால் அவர்கள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற்றிருக்க முடியாது. எல்லாவற்றிலும் முக்கியமாக உண்மையிலேயே புரட்சிகரமான ஒரு இயக்கம் மக்களிடமிருந்து ஒரேயொரு படிதான் முன்னே இருக்கும்(லெனின்) என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையெனில் மக்களுக்கும் நமக்குமான இடைவெளி அதிகரித்துவிடும்.

    பதிலளிநீக்கு
  6. போராடுவதற்கு கம்யூனிஸ்ட்களைத் தேடும் மக்கள், ஆள்வதற்கு அவர்களை ஏன் தெரிவு செய்வதில்லை?(ஓரிரு மாநிலங்களைத் தவிர)!
    மக்களுக்காக போராடும் உங்களில் ஏன் பல குழுக்கள்!? வலது!.இடது!.தீவிரம் என! - (வோட்டுகள் பெற, இதுவும் ஒரு தடையே!)
    போராட்டம் மட்டுமே கொள்கையானதால், நிதர்சனம் கண்டு, சமரசம் கொண்டு, பிரச்சனைகளின் தீர்வு காண்பது எட்டாக்கனியாகிறது!(சமரசம் என்பது சீட்டுகளைப் பெறுவதில் மட்டுமே இருக்கிறது! முல்லை பெரியாரில் சமரசம்/தீர்வை பெற வழி காணவில்லை - தீர்வு செய்யும் இடத்திலிருந்தும்!)

    தங்கள் கட்டுரையில் சுய பரிதாபமே மேலோங்கியுள்ளது! சுய விமர்சனம் தேவை!

    பதிலளிநீக்கு
  7. @ரம்மி. கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி செய்யும்போதும் இந்தப் பிரச்சனை இருந்தது.இருக்கிறது. தமிழ் நாட்டில் 44 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் ஆட்சியிலிருக்கின்றன.அவை காங்கிரசுடன் கூட்டணியாகவும் இருந்திருக்கின்றன. இருக்கின்றன. அவை இந்தப் பிரச்சனையை தீர்க்கவே இல்லை. ஆனால் அவ்விரு கட்சிகள்தான் சுமார் 65% வாக்குகளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன. முல்லைப் பெரியாறு பிரச்சனையால்தான் கம்யூனிஸ்டுகளுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை என்பது பூனை கண்ணை மூடிக் கொள்வது போலத்தான். அந்தப் பிரச்சனையை பெரிதாக எடுத்துப் போராடிய வைகோவின் நிலைமையை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள் சார்.

    பதிலளிநீக்கு
  8. சீனி மோகன்!

    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. @ தோழர் முத்துச்சாமி!
    1. முதலில் ஒன்றை தெளிவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன். ‘போய்ப் பார்ப்பதை’ நான் விமர்சனம் செய்திருப்பதாக, உள்வாங்கி அதிலிருந்து உங்கள் உரையாடலின் தொனி இருப்பதாக எனக்குப் படுகிறது.

    //கருணாநிதியிடம் கூட்டணி சேருகிற சந்தர்ப்பங்களில் இது மாதிரி 'கேவலம்', 'வாசலில் தவம் கிடக்கிறார்கள்' போன்ற பேச்சுக்கள் வருவதில்லை. காரணம் அவர் ஆண். இவர் பெண். இதுதான் பொது புத்தி. (மாதவராஜ் அப்படி பார்வை உள்ளவர் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்).ஆனால் அவரும் இந்த எதிர்ப்பிரச்சாரத்திற்கு பலியாகிவிட்டாரோ என்கிற சந்தேகம் , மற்றவர்களின் கருத்துக்களில் உள்ள தொனி அவரது பதிவிலும் தெரிவதனால், வருகின்றது. //
    அந்த ‘பொதுப்புத்தி’யிலிருந்து நான் பேசவில்லை. இன்றைக்கிருக்கும் அரசியல் சூழலின் காரணமாகவே ஜெயலலிதா என்று குறிப்பிட்டு இருக்கிறேன். இங்கு ஜெயலலிதா என்பது குறியீடு. அதில் நீங்கள் கருணாநிதியையும் வைத்துப் பார்க்கலாம். ஐந்து வருடங்களுக்கு முன்பு, சென்ற தேர்தலின் போதும் என் தனிப்பட்ட கருத்து இதுவாகத்தான் இருந்தது. இங்கு நான் பேச முயற்சிப்பது கம்யூனிஸ்டுகளின் அரசியல் நிலைபாடுகள் மற்றும் ஐக்கிய முன்னணித் தந்திரம் பற்றியே. ஜெயலலிதாக்களைப் பற்றியோ, கருணாநிதிகளைப் பற்றியோ அல்ல. இதை முதலில் சொல்லியாக வேண்டி இருக்கிறது.

    // இதில் ஜெயலலிதாவிடம் போய் நிற்கிரார்கள் என்கிற தொனிக்கு இடம் இல்லை. ஏனெனில் இன்று தமிழ்நாட்டில் அதுதான் பெரிய கட்சி. அதாவது காங்கிரஸ்-திமுக கூட்டாணியை எதிர்க்கும் பெரிய கட்சி. கேரளாவில் மார்க்சிஸ்டுகள் காங்கிரஸ் குட்டணிக்கு எதிரான பெரிய கட்சி. அதிமுக அங்கே அந்த கூடணியில் ஒரு இடத்தில் போட்டியிடுகின்றது. அவர்கள் கம்யூனிஸ்டுகளின் அலுவலகத்திற்குத் தேடித்தான் வந்தார்கள்.//
    நான் ‘போய்ப் பார்ப்பதை’ விமர்சனம் செய்தும் என் பதிவில் எங்கும் எழுதவில்லை. இருப்பினும், இதனை ஒரு மரபு சம்பந்தப்பட்ட விஷயமாக பார்ப்பதில் எனக்கு சம்மதமில்லை. இங்கு நேர்மை, கொள்கை, கோட்பாடுகள், இலட்சியங்கள் போன்றவற்றையும் சேர்த்து மதிப்பீடு செய்ய வேண்டும். மக்களின் ஆதரவும் செல்வாக்கும் மட்டுமே தீர்மானிப்பவைகளாக இருக்க முடியாது.

    2. நான் மக்களின் கண்களிலிருந்து கம்யூனிஸ்டுகளைப் பார்க்க விரும்புகிறேன். தாங்கள் மற்ற அரசியல் கட்சிகளின் வார்த்தைகளிலிருந்து கம்யூனிஸ்டுக் கட்சிகள் மீதான கருத்தாக்கத்தை உருவாக்க முயல்கிறீர்கள்.
    //திமுகவுக்கும் காங்கிரசுக்கும் கூட்டணி முறியுமோ என்கிற நிலை வந்த போது திருமாவளவன் என்ன சொன்னார் என்பது நினைவில் இருக்கும். இபோதுதான் காங்கிரஸ் போகப் போகின்றதே, கம்யூனிஸ்டுகள் எங்கள் அணிக்கு வந்து விடுங்கள் என்று அழைப்பு விடுத்தார். கம்யூனிஸ்டுகள் எந்த அடிப்படையில் கூட்டணி நிலைப்பாடு எடுக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதைக அவர்களே கொச்சைப்படுத்துவதற்குக் காரணம் அவரவர் அரசியல் நிலைப்பாட்டிலிருந்துதான்.//
    திருமாவளவன் முதலில் அழைத்ததையே, நான் கொச்சைப்படுத்துவதாகத்தான் பார்க்கிறேன். காங்கிரஸ் எதிர்ப்பு என்று ஒன்று இருந்தால் போதும், கம்யூனிஸ்டுகளை இழுத்துக் கொள்ளலாம் என்கிற அளவுக்கு கம்யூனிஸ்டுகளை புரிந்து வைத்திருப்பது சரியென்று படுகிறதா? நேற்று வரை தி.மு.கவை எதிர்த்துப் போராடி, கடுமையாகப் பிரச்சாரம் செய்து வந்த கம்யூனிஸ்டுகள் ஒரே நாளில், காங்கிரஸை எதிர்க்க தி.மு.கவோடு கூட்டணி அமைக்க, திருமாவளவனை எது பேச வைத்தது? பெரும் பொதுவெளியில் இது நடந்தது. இந்த இடத்தில் நம்மை மக்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்பதுதான் என் கவலை தோழரே!

    பதிலளிநீக்கு
  10. @ தோழர் முத்துச்சாமி!
    3.இதுபோன்ற மாறி, மாறி தொகுதி உடன்பாடு வைத்துக்கொண்டு இருப்பதால் மாற்ரங்கள் நிகழகின்றன எனச் சொல்கிறீர்கள்.
    //அதிமுக, திமுக என மாறி மாறி வருவதனால் என்ன மாற்றம் வந்துவிடப்போகின்றது என்ற கேள்வி உணமை நிலவரம் உணராத கேள்வியாக இருக்கின்றது தோழரே. 2001ல் அதிமுகவை ஆதரித்தோம். அம்மையார் வந்து ஒரு பேயாட்டம் போட்டார். 2004ல் மக்கள் மரண அடி கொடுத்தார்கள். உடனே ஜெயலலிதா என்ன செய்தார்? தன் அரசாங்கத்தின் பல முடிவுகளை திரும்பப் பெற்றுக் கொண்டார். அவற்றில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது சாலைப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தியது.//
    //மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் கம்யூனிஸ்டுகளின் நிர்ப்பந்த்ததால் கிராமப்புற வேலை உத்தரவாதத் திட்டத்தைக் கொண்டு வந்தது. பாஜக ஆட்சியிலிருந்த பொடாச் சட்டம் ரத்து செய்யப்பட்டது. ஒரு பக்கம் உலகமயக் கொள்ளையும் மறுபக்கம் மக்களுக்கு சில நன்மைகளும் என் மத்திய-மாநில அரசாங்கங்கள் செயல்படுகின்றன.அதற்குக் காரணம் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே என்கிற பயம். //

    தோழரே! இவையெல்லாம் தேர்தலை மனதில் வைத்து, தங்கள் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள, இவர்கள் அவ்வப்போது செய்கிற சித்துவேலைகள் அல்லது ஸ்டண்ட்கள். அவ்வளவுதான். இதே காலக்கட்டத்தில்தான் பெரும் முதலாளிகளுக்கு, ஒரு பட்ஜெட்டுக்கு நிகரான அளவுக்கு சலுகைகளும் வழங்கப்பட்டு இருக்கின்றன என்கிற யதார்த்தத்தையும் சேர்த்தேப் பார்க்க வேண்டும். அதிலென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது என்பது குறித்தும் விவாதிக்க வேண்டும். நீங்கள் சொல்வது போல தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து, கிராமப்புற வேலை உத்திரவாத் திட்டம் என பல உரிமைகளையும், சலுகைகளையும் இடதுசாரிகளின் நிர்ப்பந்தங்களினால் கொண்டு வர முடிந்தது என்றாலும், அதனால் அனுகூலமடைந்ததும், அவைகளை வாக்குகளாக அறுவடை செய்ததும் காங்கிரஸ்தானே. கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு மக்கள் மத்தியில் உயர்ந்திருக்கிறதா, அதற்கு இந்த தொகுதி உடன்பாடுகளோ, கூட்டணிகளோ உதவியிருக்கிறதா என்பதே கேள்வி.

    4.//கம்யூனிஸ்டுகளின் உத்திகள் மற்றொரு மாபெரும் பலனையும் அளித்துள்ளன. பாஜகவைத் தனிமைப் படுத்தியிருக்கின்றது. ஜெயலலிதா காங்கிரசுடன் போக மாட்டார் என்பதற்கோ, கருணாநிதி பாஜகவுடன் போகமாட்டார் என்பதற்கோ எந்த உத்திரவாதமும் இல்லை. //

    இதில் கேள்வியும், பதிலும் இருக்கின்றன. அவர்கள் போக மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்திரவதமும் இல்லாத போது, நாம் பா.ஜ.கவை எப்படித் தனிமை படுத்திவிட்டோம் என்று சொல்ல முடியும்.


    5.//தோழர்களே, எனக்கு மாதவராஜ் மீது சஎதேகம் இல்லை.//

    மிக்க நன்றி தோழரே!

    பதிலளிநீக்கு
  11. @தோழர் காஸ்யபன்!

    நமக்குள் தொடரும் இந்த உரையாடல்களை பொதுவெளியில் வைத்துப் பார்ப்போமே என்று தோன்றியது. கம்யூனிஸ்டுகளின் அரசியலை மிக மேம்போக்காக பார்த்திட முடியாது என்பதை முன்வைக்கவே எனது இந்த இடுகைகள்.அது தோழர் அசோகன் முத்துச்சாமியும் புரிந்துகொண்டிருப்பார்.

    பதிலளிநீக்கு
  12. முத்துசாமி அய்யா! முல்லைப் பெரியார், கம்யூனிஸ்ட்களாலும் தீர்வு காணப்பட இயலவில்லை என்பதன் உதாரணமே!

    இயக்கத்திற்கு போராட்டங்களில் உள்ள ஆர்வம், தீர்வு காணப்படுவதில் முனைப்பில்லை எனும் அடிப்படையில் வைக்கப்பட்டதாகும்!

    காங்கிரஸ், திராவிடக் கட்சிகள் தீர்க்கவில்லை!என்பதால் கம்யூனிஸ்ட்களும் அதே வழியில் செல்வது கவலை அளிக்கக் கூடியது!

    பதிலளிநீக்கு
  13. கட்சி சார்பற்ற மக்களுக்கு இடது சாரிகள் மீது என்றுமே ஒரு மரியாதை உண்டு...
    அதனால்தான் அவர்கள் எந்த கூட்டணிக்கு சென்றாலும், அவர்களுக்கு என இருக்கும் வாக்குகள் குறையாமல் இருக்கின்றன..
    எந்த கூட்டணி என்றால் என்ன ... நமக்கு குரல் கொடுக்க சிலராவது சட்டசபைக்கு செல்வது நல்லது என்ற நிலைதான் இங்கு இருக்கிறது...
    எனவே கூட்டணியை குறை சொல்பவர்கள், இடதுசாரிகள் தனித்து ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு மக்களை மாற்ற வேண்டும்...
    கண்டிப்பாக அது முடியாது...
    எனவே இப்போதைய நிலையில் என்ன்ன செய்ய முடியுமோ அதைத்தான் அவர்கள் செய்கிறார்கள்...

    பதிலளிநீக்கு
  14. விஜயகாந்த் தனியாக போட்டியிட்டு தனக்கென ஒரு இடத்தினை வைத்திருப்பது போல் தமிழகத்தில் தோழர்கள் தனியாக ஏன் போட்டியிட தயங்குகிறார்கள்.திமுகவோ அதிமுகவோ அவரவர் சொந்த பலத்தில் வெற்றி பெறட்டுமே.எப்படியோ கூட்டணியில் வெற்றி பெற்றாலும் இவர்களால் ஆட்சியில் பங்கு பெற முடியாது.எனவே மூன்றாவது அணிக்கு ஏன் முயலக்கூடாது?.

    பதிலளிநீக்கு
  15. இப்போ புரட்சிகாரர்கள் விஜய்காந்த் அலுவலக்த்தில் மண்டியிட்டு காத்திருக்கிறார்கள்...நேத்து வந்த விஜயகாந்தை தலமை ஏற்க அழைக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  16. 1.விஜயகாந்த் தனியாகப் போட்டியிட்டார்.ஆனால் அவர் எடுத்த அரசியல் நிலைப்பாடு எதுவும் ஈடேறவில்லை. 2006லும்,2009லும் திமுக கூட்டணிதான் வெற்றி பெற்றது. 2.காங்கிரஸ்-திமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்பது அரசியல் நிலைப்பாடு. அதற்கு யார் யார் உதவுவார்களோ அவர்களைச் சேர்த்துக் கொள்வதுதான் கொண்ட நிலையில் வெற்றிக்கு முயற்சிப்பதற்கான வ்ழி. 3.நாட்டில் கம்யூனிஸ்டு கட்சிகளைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவக் கட்சிகளே. இதில் மார்க்சிஸ்டுகளுக்கு எந்த மயக்கமும் இல்லை. ஒரு பழைய உதாரணத்தை மீண்டும் சொல்லலாம்.வீட்டிற்குள் தேள் வந்துவிட்டால் கையில் எது கிடைக்கிறதோ-செருப்போ அல்லது விளக்குமாறோ அல்லது கட்டையோ-அதை வைத்து தேளை அடிப்பதுதான் மனித இயல்பு.புனிதமாக ஏதாவது கிடைக்குமா என்று தேடி தேள் கடி வாங்க முடியாது. 4. மக்களுக்கு ஐக்கிய முன்னணி என்கிற வார்த்தை தெரியாதே தவிர எதிரியின் எதிரி நண்பனாவான் என்பது தெரியும்.5. ஆட்சிகள் மாறினால் என்ன பலன் என்கிற கேள்விக்கு ஆள்வோர் செய்கிற சில சில்லறை நற்பணிகளைச் சுட்டிக் காட்டினேன். சில தவறுகள் திருத்தப்படுவதைச் சுட்டிக் காட்டினேன். ஒரு வேளை திமுக இப்போது மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்த நலத்திட்டங்களில் எத்தனை தொடரும் என்பதற்கு உத்திரவாதமில்லை. ஆனால், அராஜகங்களும் ஊழலும் தலைவிரித்தாடும் என்பதில் சந்தேகம் இல்லை.மக்களின் எதிர்ப்பை ஒருமுனைப்படுத்த கூட்டணி தேவை.மேலும், ஒன்றுமே இல்லாமல் வாடும் மக்களுக்கு ஏதேனும் கிடைப்பதை சாதாரணமாக ஒதுக்கித் தள்ள முடியாது.2006ல் மீண்டும் ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் ஒரு ரூபாய் அரிசி கிடைத்திருக்குமா? 7. பாஜக இந்த தேர்தலில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த விவாதம் நடந்து கொண்டிருக்கையிலேயே அரசியல் சூழலில் குழப்பங்கள் உண்டாகியிருக்கின்றன. ஒரு வேளை இடதுசாரிகள் அதிமுக கூட்டணியில் இல்லை என்றால் அதிமுக பாஜகவுடன் சேர வாய்ப்புகள் உணடாகும். 8. முதலாளிகளுக்கு இந்த அரசுகள் வாரி வழங்குவது கம்யூனிஸ்டு தோழர்களுக்கு நன்றாகவே தெரியுமே?ஆனால் தனித்து நின்று மாற்றத்திற்கு தடையாக ஆனால் முதலாளிகளுக்கு வாரி வழங்குவது மட்டும் தொடரும்.நலத்திட்டங்களின் கதி அதோ கதிதான்.9.எல்ல கட்சிகளுக்கும் ஒரே கொள்கை இருந்தால் அவை தனித்தனி கட்சிகளாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை. என்வே கொள்கை வேறுபாடுகள் இருக்கும். எந்தெந்தப் புள்ளிகளில் ஒன்று சேரும் வாய்ப்பு இருக்கிறது என்றுதான் பார்க்க முடியும். 10.கம்யூனிஸ்டுகள் அவர்கள்து காங்கிரஸ் எதிர்ப்பு நிலையில் இருதியாக ஒரே இடத்தில் இருக்கிறார்கள்.மற்ற கட்சிகள்தான் தேர்தலுக்குத் தேர்தல் மாறிக் கொண்டே இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  17. 1) கம்யூனிஸ்டுக்களின் அல்லது இடதுசாரிகளின் 'நாடாளுமன்றத் தேர்தல் முறையில் போட்டியிடுவது' என்பது இந்த வாக்கெடுப்பு ஜனநாயக முறையை அல்லது மேடையை பயன்படுத்திக் கொண்டே மக்கள் சக்தியை தமது நீண்ட கால திட்டங்களுக்காக தம் பக்கம் வென்றெடுப்பது என்று சுருக்கமாக புரிந்து கொள்ளலாம். அதாவது வெகு மக்கள் தங்கள் வேட்பாளரை தேர்வு செய்யும்முறை. இந்த முறையில் மிக அடிப்படையான ஒரு ஜனநாயம் உள்ளது என்று நம்புவோம் (அல்லது நம்பினோம்): மக்கள் தம் விருப்பத்துக்குரிய வேட்பாளரையாவது தேர்ந்தெடுக்கும் உரிமை.
    2) இந்த வகையில் அல்லது வழியில் 1947 தொடங்கி என்று வைத்துக்கொண்டாலும் 63 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் இந்த 'வேட்பாளரை' தேர்ந்தெடுக்கும் முறை அல்லது தேர்ந்தெடுக்க படும் 'வேட்பாளர்கள்' இன்று எந்த நிலைக்கு சென்றுள்ளது/சென்றுள்ளார்கள் என்பதை பரிசீலனை செய்தே ஆக வேண்டும்:
    3) விக்கிலீக்சில் வந்துள்ள செய்திகளின் அடிப்படையில்:
    3.1. மக்கள் தேர்ந்தெடுக்கும் இந்திய MP MLA க்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிமைகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின், அமெரிக்க ஐரோப்பிய பெரும் சர்வதேச கார்போறேட்டுக்களின் அஜெண்டாவை இந்திய நாடாளுமன்றத்தில் அல்லது சட்ட மன்றங்களில் நிறைவேற்றிக் கொடுக்கும் அமெரிக்க அடிமைகளாக மாறி விட்டார்கள்.
    3.2. இதில் (இடதுசாரிகள தவிர) காங்கிரஸ், பிஜேபி, சமாஜ்வாடி, அ.இ.அதிமுக, திமுக மற்றும் பிற கட்சிகளின் MP MLA க்கள் அனைவருமே அடங்குவர்.
    3.3. அதாவது குறைந்த பட்ச மக்களின் உரிமையான வாக்குரிமை, 63 வருடங்களுக்கு பின்இந்திய நாடாளுமன்றத்தை அமெரிக்காவின் கொல்லைப்புற நாடாளுமன்றமாக மாற்றவே பயன்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்படும் MP MLA க்கள் அமெரிக்காவின் நலன் காக்கும் அடிமைகளாக மட்டுமே இருப்பார்கள். விக்கிலீக்ஸ் இதை தெளிவாக நிரூபித்து விட்டது.
    3.4. இந்த நிலையில் தொடர்ந்து இந்த வாக்கெடுப்பு ஜனநாயக முறை இனிமேலும் நம்பிக்கைக்கு உரியதா என்று பரிசீலிக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக நான் நம்புகின்றேன். இதையே வேறு வார்த்தைகளில் சொன்னால் இடதுசாரி, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொண்டர்கள் திமுகவோ அதிமுகவோ, யாருடன் கூட்டு சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டாலும் ஒரு அமெரிக்க அடிமையை நாடாளுமன்றத்துக்கோ சட்டமன்றத்துக்கோ அனுப்ப தமது உடல், பொருள், ஆவி அத்தனையும் விரயம் செய்கின்றார்கள். தம்மை தாமே ஏமாற்றிக் கொள்கின்றார்கள். இதன் மூலம் அமெரிக்க நலன்களுக்கு தமது கடும் உழைப்பை வீணாக பலி கொடுக்கின்றார்கள். இடதுசாரிகளின் கம்யூனிஸ்டுக்களின் 'வாக்கெடுப்பு ஜனநாயக முறையை அல்லது மேடையை பயன்படுத்திக் கொள்வது' என்ற தந்திரம் அமெரிக்காவின் நலன்களுக்கு ஏற்ற தந்திரமாக எதிர்த்திசையில் வளர்ந்து நிற்கின்றது, இந்த தந்திரத்தை அமெரிக்கா பயன்படுத்துகின்றது. அந்த வகையில் இந்த தந்திரம் தோல்வி கண்டு விட்டதாக நான் நம்புகின்றேன். அமெரிக்க நலன் காக்கும் இந்த தந்திரத்தை அல்லது வழியை தொடர்ந்து கடைப்பிடிக்க போகின்றோமா?
    தொடரும்...

    பதிலளிநீக்கு
  18. 3.5. இடதுசாரி, கம்யூனிஸ்ட் கட்சிகள் என்னதான் தமது ஐக்கிய முன்னணி தந்திரங்களால் ஒரு 'மக்கள் நலனுக்கு' ஏற்ற கூட்டணியை கட்டினாலும், அந்தக் கூட்டணியில் வென்று செல்கின்ற MP MLA க்களை அமெரிக்க அடிமைகளாக மாற்றுவதில் அமெரிக்க ஏகாதிபத்தியம் வென்று விடுகின்றது என்பதை தொடர்ந்து மத்தியிலும் தமிழ் மாநிலத்திலும் அமைகின்ற அரசுகள் நிரூபித்துக் கொண்டே வந்துள்ளன.
    3.6. தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் (NREGA), சந்தேகம் இல்லை, இடதுசாரிகளின் சாதனைதான், ஆனால் congress என்ன செய்தது? தந்திரமாக காந்தியின் பெயரை போட்டு அத்திட்டத்தை 'காங்கிரஸ்' மயமாக மாற்றியது. சரி போகட்டும், இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற்ற எத்தனை பேரை இடதுசாரி கம்யூனிஸ்டுக்கள் தம் பக்கம் வென்றெடுக்க முடிந்துள்ளது? ஏதாவது புள்ளிவிவரம் உள்ளதா?
    இவற்றைப் பரிசீலனை செய்யாமல் கம்யூனிஸ்டுக்கள் அறிவாலயத்தில் போய் நிற்பதா போயஸ் கார்டனில் போய் நிற்பதா என்று வாதம் செய்துகொண்டே இருப்பது பிரயோசனம் இல்லாத வாதம்.
    3.7. இறுதியாக ஒரு சாமானியனின் நிலையில் நின்று இரண்டு கேள்விகள்: குடவாசல் மார்க்சிஸ்ட் தோழர் தங்கையனை கொன்ற கொலைகாரன் ராஜேந்திரன் திருவாரூரில் அதிமுக வேட்பாளராம்! இந்த கருத்தை type செய்யும்போது வரையிலும் அதிமுக கூட்டணி முடிவாகவில்லை. ஒருவேளை அதிமுகவுடன்தான் கூட்டு என்றால் மார்க்சிஸ்ட் தோழர்கள் கொலைகாரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் கொடுநிலை ஏற்படுமோ? (திமுக வேட்பாளரும் அதேபோல் ஒரு ஆள்தான்).
    3.8. அரசு வருமானத்தில் 90 சதவீதத்துக்கும் மேல் அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக போய் விடுகின்றது என்ற ஜெயலலிதாவின் பொய் பிரச்சாரத்தை, கருத்தை அவர் வாபஸ் வாங்கிக்கொள்ளவில்லை. எனவே அவர் மீண்டும் பதவியில் அமர்வாறே ஆனால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களும் அவர் தம் குடும்பத்தாரும் சோற்றுப் பானையில் மண் விழும் நாளை எதிர்பார்க்க வேண்டும் என்பதை வேதனையுடன் பதிவு செய்கின்றேன். அன்றைக்கு மீண்டும் கம்யூனிஸ்டுக்கள் வீதியில் இறங்கி.... போதும்...போதும்
    இக்பால்

    பதிலளிநீக்கு
  19. // அசோகன் முத்துசாமி ஒரு பழைய உதாரணத்தை மீண்டும் சொல்லலாம்.வீட்டிற்குள் தேள் வந்துவிட்டால் கையில் எது கிடைக்கிறதோ-செருப்போ அல்லது விளக்குமாறோ அல்லது கட்டையோ-அதை வைத்து தேளை அடிப்பதுதான் மனித இயல்பு.புனிதமாக ஏதாவது கிடைக்குமா என்று தேடி தேள் கடி வாங்க முடியாது.//
    நியாயமான வாதம் ஐயா.

    செருப்பாலோ , விளக்குமாற்றாலோ தேளையடித்தப் பின் சேர்க்கை பயனாக கை நாறும் அபாயம் இருக்கிறது , சுத்த படுத்த வேண்டும் என்ற கவலையே தோழர் மாதவ்ராஜ் பதிவில் காண்கிறேன்.

    இது என் புரிதல் மட்டுமே.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!