பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் – 16



வரலாறு என்று அறியப்பட்டிருக்கும் தகவல்களின் மீது எழுதப்படாதவற்றை எழுதிப் பார்த்திட எப்போதும் எழுத்தாளர்கள் பெரும் விருப்பத்துடன்தான் இருக்கிறார்கள். அடையாள அரசியல், விளிம்பின் கதையாடல் எனும் சொற்பதங்கள் விவாதத்துக்குள்ளாகிக் கொண்டிருக்கும் இப்பின்நவீனத்துவ நாட்களில் எழுதப்படுகிற வரலாற்றுப் புனைவிலக்கியப் பிரதிகளின் வினையாற்றலும் அதன் மீதான வாசகக்கவனமும் நிச்சயம் கவனத்திற்குரியதுதான். அப்படியான வரலாற்றுப் பிரதியின் மீது ஊடாடிக் கலைத்து போடப்பட்டிருக்கும் படைப்பே “மரக்கால்” எனும் சோலை சுந்தரபெருமாளின் நாவலாகும்.

நெற்களஞ்சியமென பெருமிதப்படுத்தப்படும் தஞ்சை மண்ணை வளம் கொழித்த நிலமாக உருமாற்றிய விவசாயப் பெருங்குடியின் குலமரபுகளும், வழக்காறுகளும் அவர்களின் வாழ்வியல் சிக்கல்களும் புனைவு வெளியில் பதிவாகியுள்ளதா? என்கிற கேள்வியைக் கேட்டு பதிலளிக்கிறவராக இருப்பவர் சோலை. புத்தகங்களைத் திறந்தால் வேர்வைத் துளிகளும் நெல் அவித்த வாசமும் வீசுகிறதா? தம்புரா சத்தமும், புளித்த தயிரின் வாசமும் தானே வீசுகிறது என்று எரிச்சலுற்று தஞ்சையின் அதிகாரக் கோட்பாடான வர்ணாசிரமத்தினை எதிர்த்த ஆதிக்கலகக் குரலின் வெளிப்பாடாக மரக்காலை அவர் எழுதிப் பார்த்திருக்கிறார்.

பெருமதங்களுக்கும், நிறுவனங்களுக்கும் தன் அதிகாரத்தை நீடித்து நிலைநிறுத்திடத் தேவையான கருவியென கதைகளே இருந்து வருகின்றன. புனிதம், நியாயம், விதி, கர்மவினை என எல்லாவற்றையும் விரும்பி ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தைக் கட்டமைத்திட எத்தனை, எத்தனை கதைகளை விதவிதமாக உருவாக்கியிருக்கிறார்கள்! கதைகளால் எங்களை அடிமைகொள்ள நீங்கள் உருவாக்கிய கதைகளை கலைத்துப் போட்டு புதிய வரலாற்றை உருவாக்குகிறோம் நாங்கள் என்கிறார் சோலை.

ஆதனூர் பிரம்மதேயத்தின் அதிகார எல்லையின் வரலாறே நாவலாக பயணம் கொள்கிறது. நந்தன் எனும் விவசாயக் கூலியை நந்தனராக்கி, திருநாளைப் போவார் எனும் சிவனடியாராக உருமாற்றம் செய்த நரித்தந்திரத்தை நாவல் மிக நுட்பமாக கத யாடிக் கலைத்துப் போட்டிருக்கிறது. ஆதனூரின் மூங்கில் குத்தில் துவங்கி, திருபாங்கூர், சிதம்பரம் என வளரும் நந்தனின் சிவதரிசனங்களுக்கான முயற்சிகள், தவிர்க்க இயலாமல் இதற்கு அனுமதிக்கும் அதிகாரவர்க்கத்துடன் ஏற்பட்ட அந்நாளின் அரசியல், சமய நெருக்கடி ஆகியவற்றை பின்னிப் பின்னித் தொடர்கிறது நாவல்.

ஆதனூர் பண்ணையடிமையான நந்தன் தில்லையம்பலத்தின் நடராஜரை வணங்கிட வேண்டி பெரும் முயற்சி எடுத்தான். சிதம்பரத்தில் மூலதரிசனத்தின் போது ஜோதியில் ஐக்கியமானான் என்கிற சிறு குறிப்பை விரித்து விரித்து சாத்தியமான உரையாடல்களை நிகழ்த்திப் பார்த்திருக்கிறார் சோலை சுந்தரபெருமாள்.

“நீசப்பறையன் நீயென” தன்னை தனித்தொதுக்கி சிவதரிசனத்தை மறுக்கும் பிரமதேய அதிபர் முத்துச் சாமி தீட்சிதரையோ, அவரை இயக்கும் வர்ணாசிரமத்தையோ நந்தன் அதிர்ச்சிக்குள்ளாக்கவில்லை; தன் பெருந் தெய்வமான தில்லைநாதரை தரிசித்திட விடாப்பிடியாக முயற்சிக்கிறான். அவன் முயற்சிகள் யாவும் சனாதன தர்மத்தினை, சாதிய இறுக்கத்தை மீறாத தன்மையிலானதாகத்தான் இருக்கின்றன. அப்படித்தான் இருந்திருக்க முடியும். அதிபர்கள், சிவாச்சாரிகள், தீட்சிதர்கள் எனும் மத நிறுவன அதிகார மையங்களிடம் தன்னுடைய விருப்பத்தை இரந்தே தெரிவிக்கிறான். ஒரு போதும் எதன் பெயராலும் மீறலை நிகழ்த்தவில்லை நந்தன். “போதும் நிறுத்துங்க ஆண்டை” என்று உரத்துச் சொன்னதைத் தவிர.

நாவலை வாசித்துக் கடக்கையில் வாசகனுக்குள் எழுதப்படாத பகுதிகளும் அலை அலையாக மேலெழுந்து வருகின்றன. மூங்கில் குத்தில் அமர்ந்து கொண்டு நந்தனும், பண்ணையடிமைகளும் பட்டை, பட்டையாக நெற்றியிலும், உடலெங்கும் திருநீற்றைப் பூசிக்கொள்கிறார்கள். மாட்டுக்கறி தின்பதையும், நண்டு, நத்தைக்கறி உண்பதையும் நிறுத்துகிறார்கள். தன்னை மேல்நிலையாக்கிக் கொள்ள முயற்சிக்கிற செயலாகத்தான் இவையாவும் நமக்குள் பதிவாகிறது. அரோகரா, சிவ சிவ என நீசப்பறையர்கள் கூத்தாடுவதை அதிபரின் விசுவாசக் காவல்காரனான ராமு மழவராயன் எனும் இடைநிலைச் சாதிக்காரனால் காணச் சகித்திடவில்லை. தண்டம் தரவும், சாட்டையால் விளாசவும் துடிக்கிற அவனின் மன நிலைக்குள் இன்று வரைக்கும் பிராமணியத்தை நிலத்தில் அமல்படுத்துகிற சாதியத்தின் அடையாளத்தை தெளிவாகக் காண முடிகிறது.

நாவலின் காலம் களப்பிரர் காலத்தின் கடைசித்துளி என்று வைத்துக் கொண்டால் மட்டுமே “போதும் நிறுத் துங்க ஆண்டை" எப்படி சாத்தியமிருந்திருக்கும் என்கிற முடிவிற்கு வர முடியும். இந்த ஆதி எதிர்ப்புக் குரலில் இருந்துதான் சாணிப்பாலுக்கும், சாட் டைக்கும் எதிரான போருக்கு உத்வேகம் பிறந்திருக்கும். நந்தன் தனக்கு மட்டும் சிவதரிசனம் கேட்கவில்லை; தன்னையொத்த பண்ணையடிமைகளுக்கும் வழிபாட்டு உரிமையை எழுப்புகிறான். அதனால்தான் நாவலுக்குள் நந்தனின் பயணமெங்கிலும் ஆச்சர்யத்தோடு அவன் பிற பண்ணை யடிமைகளால் பார்க்கப்படுவதோடு அவனுடைய தில்லையம்பல தரிசனம் நிகழ்ந்தே தீர வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். பிற சாதிக்காரர்கள் சாதியத்திற்கு எதிரான செயலாகவே நந்தனைக் காண்கிறார்கள். பிரமதேயமும், அரசும் ஏன் நந்தனை சிவ வழிபாட்டிற்கு அனுமதிக்கிறார்கள் என எரிச்சலடைகிறார்கள்.

பிரமதேயம் திருப்பாங்கூர் செல்ல அனுமதித்ததும், தில்லை நடராஜரை வணங்கிட வழிவகை செய்ததும், சிவாச்சாரிகளும் சிதம்பர தீட்சிதர்களும் இதற்கு ஒத்துக் கொண்டதற்கும் பின்னுள்ள புறச்சூழலை நாவல் அழுத்தமாக விரித்துச் சொல்கிறது. பிறவியில் பேதம் காணும் வேதாகமத்திற்கு எதிராக சமணர்கள் செய்து வருகிற பிரச்சாரத்தையும் அதன் மீதான உழைக்கும் மக்களின் ஈர்ப்பையும் அதிபரும், அவருடைய காரியக் கணக்காயரும் கவனிக்கிறார்கள். வர்ணாசிரமக் கோட்டிற்குள் இவர்களை அடைத்து வைப்பது மதமாற்றத்திற்கே வழி வகுக்கும். நீசப்பறையர்கள் வேதமதத்திற்குள் இருந்து சாதியத்தை ஏற்றுக் கொண்டு உழைத்து பிரமதேயத்தின் அடிமைகளாக நீடித்திருக்க வேண்டும் என்றால் தற்காலிகமாக வழிபட உரிமை அளிப்பதில் தவறில்லை என்ற முடிவிற்கு வருகிறார்கள். அதி லும் கவனமாக அடிமைகளின் புழங்கும் வெளி ஆலயத்திற்கு வெளியேதான் என்பதில் உறுதியிலும் உறுதியாக இருக்கிறார்கள்.

பிரமதேய அதிபர் இடைச்சாதியினரின் எரிச்சலைக் கணக்கில் கொள்ளாமல் திருப்பாங்கூருக்கு தரிசனம் காண அனுப்பியதற்கு சமணமதத் தலையீட்டைத் தாண்டிய மற்றொரு காரணமும் இருக்கிறது என்கிற புனைவும் நாவலில் தென்படுகிறது. பிரமதேயங்களும், பட்டமங்கலங்களும் தேவதாசி முறையினை நீடித்திருக்கச் செய்கின்றன என்பது மட்டுமல்ல; அதற்காக சகலவிதமான குரோதங்களையும், தந்திரங்களையும் நிகழ்த்திக் கொண்டுதான் இருந்திருக்கின்றன. நாகபட்டினம் நவமணி எனும் தேவதாசியை ஏலம் எடுப்பதில் தங்களுக்குள் நிகழ்ந்த சச்சரவைக் கணக்கில் கொண்டே ஆதனூர் பிரமதேய அதிபர் முத்துச்சாமி தீட்சிதர் திருப்பாங்கூருக்கு நந்தனை அனுப்பச் சம்மதிக்கிறார்.

வரலாற்று நிகழ்வுகளையோ அல்லது ஒருமுறை எழுதி இறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளுக்குள் இப்படி நுண்ணிய சிறு மொழிபுகளைக் கட்டமைத்துப் பார்க்கிறார்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் தன்னுடைய பாலியல் இச்சைக்காக எந்த பலிகளையும், குளறுபடிகளையும் நிகழ்த்துவார்கள் என்பதை எழுதிடத்தான் வேண்டும். இப்படியான குறுமொழிபுகள் புனைவாக பெருகிக் கொண்டேயிருக்கிறது நாவலெங்கும். அவற்றிற்குள் இருந்து அக்காலத்திய தொன்மங்கள் அழகியலாக வெளிப்படுகின்றன.

சிதம்பரம் செல்லும் பயணத்தில் வழித்துணையென மருதன் வந்தமைந்ததும் கூட சிவனின் பெரும் செயல் என்றே நம்புகிறான். மருதன் எப்போதும் நந்தனின் செயலில் அதிருப்தியுறுகிறான். ஆயினும் தன் மக்களின் குரலை அதிகாரத்திற்கு எதிராக முழங்கிய தன்னைப் போன்றவன் என்றே அவனின் வழித்துணையாகி றான். விதிக்கப்படுகிற தண்டத்தை எதிர்த்துக் குரல் தந்திட வேண்டிய அவசியத்தை மருதனுக்கு உணர்த்தியவர் சித்தர் என்கிற குறிப்பு மிக முக்கியமானது. சனாதனத்திற்கு எதிரான குரலை தமிழ்ப்பரப்பில் முழக்கிய சித்தர்களின் வழியாகத்தான் சாணிப்பாலுக்கும், சாட்டையடிக்கும் எதிரான குரலை உயர்த்தி எதிர்க்கலகம் நிகழ்த் திய இடதுசாரிகளையும், சீனிவாசராவையும் நாம் புரிந்து கொள்கிறோம். பண்ணையடிமைகளுக்கு எதிராக நிறுவப்பட்டிருந்த அதிகாரத் தூண்களை தஞ்சை நிலத்தில் உடைத்தெறியும் வல்லமை மிக்கதாக உருவான இடதுசாரி இயக்கத்தின் ஆதிப்புள்ளியாகத்தான் வாசகனுக்குள் மருதனின் சித்திரம் பதிவாகிறது.

சிதம்பரம் தீட்சிதர்களின் சூழ்ச்சி ஆயிரம் ஆண்டுகளாக நீடித்து வருவதையும் வரலாற்றின் பக்கங்கள் நமக்கு ஞாபகமூட்டிக் கொண்டேயிருக்கின்றன. மக்களாட்சி பிறந்திருக்கிற நவீனத்துவ காலத்திலும், எல்லாவற்றையும் கலைத்துப் போட்டு மனிதர்களை குழுக்களாக அன்றி ஒவ்வொரு தனி மனிதனாக உருமாற்றியிருக்கிற பின் நவீனத்துவக் காலத்திலும் கூட அவர்களுடைய அதிகாரம் கேள்விக்கப்பாற்பட்டதாக நீடித்துக் கொண்டிருப்பதை நாம் அறிந்து தான் வைத்திருக்கிறோம். தமிழ்க் கடவுள் என்ற அடையாளம் பெற்ற சிவனை தமிழ்மொழியால் துதித்திடல் கூடாது. தேவபாஷை தவிர்த்து நீசபாஷை யினை கருவறைக்குள் அனுமதியோம் என்கிற தீட்சிதர்களின் வன்மத்தை தோலுரித்திடும் கருவியாகவும் மரக்கால் நாவலை நாம் வாசித்திடச்  சாத்தியமிருக்கிறது. நந்தனை தீக்கிரையாக்கிய நரித்தந்திரத்தை இப்படித்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வரலாற்றை மீள்பார்வைக்கு உட்படுத்திப் பார்த்திட வேண்டிய அவசியம் இருக்கிறது. அப்போதுதான் வரலாற்றின் பக்கங்களில் ஒற்றைப் புள்ளியளவிலான இடம் கூட அற்று புறந்தள்ளப்பட்டிருக்கும் அடித்தளமக்களின் வரலாற்றை உருவாக்கிப் பார்க்க முடியும். அடித்தள மக்களின் வரலாறுகளை காலம் காலமாக வார்த்தைகளால் உருவாக்கி அடுத்த, அடுத்த தலைமுறைகளுக்குள் கடத்திக் கொண்டேயிருக்கிறார்கள். இந்தக் தொடர்ச்சியின் கண்ணியை அறுத்திடும் சூழ்ச்சியை நவீனத்துவம் முன்வைத்த போது, கதை சொல்லிகள் புதிய கதைகளின் மூலமாக சமூகத்தின் வரலாற்றைக் கட்டிப் போட்டு பார்த்திருக்கிறார்கள். எனவே தான் பாட்டிகளின் வாய்மொழிக் கதையாடல்களுக்குள் சமூகத்தின் மனசாட்சியை நம்மால் கண்டுணர முடிகிறது.

தமிழ்ச் சமூகத்தின் இரண்டாயிரம் ஆண்டுகால தொன்ம வரலாற்றை வாய்மொழி வழக்காறுகளின் ஊடே கூர்ந்துதான் கண்டறிய முடியும். ஆதிக்க வர்க்கம் தில்லைநாதனைத் தரிசிக்க களத்திலும் நிலத்திலும் செய்து முடிக்க வேண்டியவை என நந்தனுக்கு மலையினும் பெரிதாக பணியை நிர்ப்பந்திக்கிறது. அதனால் செய்து முடித்திட சிவனே முன் வந்தார் என்கிற தஞ்சைப் பகுதி விவசாயிகளின் வாய்மொழிக்கதையே மரக்காலை உருவாக்கியிருக்கிறது. சோலை சுந்தரபெருமாளின் ஆச்சரியமான கண்டுபிடிப்புகளான தர்மவர்த்தினியும், மருதனும் தமிழ் புனைவு வெளியில் நீண்ட நாட்கள் வாழ்வார்கள். அப்படித்தான் புனைகதையாளன் புதிய, புதிய வரலாற்றை தன் கதைகளின் வழியே கட்டமைப்பான். அதற்காகத்தான் நாவலெனும் பெரும் விரிவைத் தேர்வு செய்கிறான்.
-ம.மணிமாறன்

கருத்துகள்

0 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!